Monday, March 14, 2005

இந்த விசுவை(க்களை) என்ன செய்ய?

நேற்று(ஞாயிறு) மத்யானம் கணவர்கிட்டயிருந்து வலுக்கட்டாயமாக ரிமோட்டை வாங்கி சேனல் மேயும் போது சன் டிவியில் அரட்டை அரங்கம். எப்போ நடந்த நிகழ்ச்சி என்றெல்லாம் தெரியாது.

ஒரு பத்து பனிரெண்டு வயது சிறுவன் சொன்னது " ஆண்கள் தண்ணியைப் போன்றவர்கள். அதில் ஒரு கல் விழுந்தால் கொஞ்சம் அலை அடித்து ஓய்ந்து விடும். ஆனால் பெண்கள் கண்ணாடி போன்றவர்கள். அதில் ஒரு கல் விழுந்தால் உடைந்து விடும். அப்புறம் அவர்களை வாழ்நாள் பூராவும் ஒட்டவைக்க முடியாது". வார்த்தைகள் மாறி இருக்கலாம். சொன்னது என்னவோ இது தான்.

சொல்லி முடித்து அந்த சிறுவன் கைத்தட்டல்களை வாங்கிக் கொண்டு உட்கார்ந்து கொள்ள விசு பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஒரு சின்னப் பெண்ணைப் பார்த்து, " பார்த்தியாம்மா, நீங்கல்லாம் அம்மா இது செய்யாதே அது செய்யாதேன்னு சொன்னால் பேசாமல் கேட்டுக்கணும். நீங்கல்லாம் கண்ணாடி மாதிரி", என்று சொல்ல அந்த சின்னப் பெண் எழுந்து ஏதோ சொல்ல வர்றதுக்குள்ள நிகழ்ச்சி ஒளிபரப்பு முடிந்து விட்டது.

இது எதுவும் அந்தக் குழந்தைகள் தானே யோசித்து சொன்ன மாதிரி தெரியவில்லை. கைத்தட்டலுக்காக யாரோ சொல்லிக் கொடுத்ததை சொன்ன மாதிரி இருந்தது. ஆனால் இனிமேல் இப்படி யோசிக்கத் தொடங்கும். அந்தப் பெண் குழந்தை வீட்டுக்குப் போய் என்ன யோசித்திருக்கும்? நான் கண்ணாடியா? நான் உடைந்தால் ஒட்டவே முடியாதா என்றா? அந்த சிறுவன் என்ன யோசித்திருப்பான்? என் வாழ்கையின் சலனங்களால் பெரிய பாதிப்பெல்லாம் வரப் போவதில்லை என்றா?

முன்னெல்லாம் இப்படிக் கேட்டால் ரொம்ப கோபம் வரும். அப்புறம் கொஞ்ச நாளா இதையெல்லாம் புறங்கையால் ஒதுக்க முடிந்தது. இன்றைக்கு ஏனோ இதைக் கேட்ட பிறகு பழைய கோபம் சுறுசுறுன்னு ஏறியது தான் மிச்சம்.

பாதி ஞாயிற்றுக் கிழமையை வீணாக்கிய புண்ணியம் விசுவுக்கு.

2 comments:

Anonymous said...

this is for test

posted by: KVR

Anonymous said...

சோதனை

posted by: