ஒரு பட்டியல்:
சின்ன பரபரப்போடு கடைக்குப் போய் புத்தகம் வாங்கி அங்கேயே நின்று அச்சில் வந்திருக்கும் எழுத்தை முதல் முதலாக வாசிக்கும் சந்தோஷம்... அது சொல்லியும் கேட்டுமே ரொம்ப பெரிய விஷயம் போல ஆகிப் போனதால் அதை கர்ம சிரத்தையாக செய்தேன்... அந்த ப்ளுஸ்டார் பஸ் ஸ்டாப் கடை... அதை எப்போது கடந்தாலும் அந்த ஞாபகம் வருகிறது. சீக்கிரம் மறக்க வேண்டும்!
ரசனை தொழிலாகக் கூடாது! இது கற்றுக் கொண்ட பாடம். விட்டேத்தியா ரசிக்க விடாம... இதைக் குறிச்சுக்கணுமோ அதைக் கவனிக்கணுமோ... சதா ஒரு குடைச்சல்.
அடங்கு அடங்குன்னு அடக்கி வைத்திருந்த கொம்பை செல்லமாக வளர விட ஒரு சந்தர்ப்பம். ரிப்போர்ட்டருக்கான முதல் குணாதிசயம் எங்கேயும் யார்கிட்டயும் எதுக்கும் தயங்காம தடாலடியா இருக்கச் சொன்ன குங்குமம் சப் எடிட்டர் ஜி.கௌதம்.
எந்த கச்சேரியை கவர் பண்ண வேண்டும் என்ற சுதந்திரத்தை எனக்கே தந்து விட்ட கௌதம், மற்றும் அவருக்கு பின் பொறுப்பேற்ற திரு. வள்ளிதாசன். யார் யாரையெல்லாம் கேட்க வேண்டும் பார்க்க வேண்டும் என்று நினைத்தேனோ அவர்களை ரிப்போர்ட்டர் என்ற ஹோதாவோடு சந்திக்க முடிந்தது. ரிப்போர்ட்டர்... அந்த வார்த்தைக்கு இருக்கும் வெயிட்டேஜ்... அதை முழுக்க அனுபவித்தேன்.
கர்நாடக சங்கீதம்... மிரட்டியது. தியானம் பழகுகிறவர்கள் அதிலிருந்து நழுவிப்போவது போல எப்போது கவனம் மாறுகிறது என்பது தெரியாமல் ஏதோ யோசனைக்குப் போய் திரும்பி வந்ததை நிறைய தடவை வேடிக்கை பார்த்தேன்.
வயலின் மேல் தீராத காதல் வந்தது. கலா ராம்நாத் தொடங்கி யார் வாசித்தாலும் பிடித்திருந்தது.
கவர் பண்ணாத ஒரு சஞ்சய் சுப்ரமணியம் கச்சேரியில் அந்த குரல் இழுப்பதை உணர முடிந்தது. அந்த அளவுக்கு எண்ணம் குவிவதை தாங்க முடியாமல் பாதி கச்சேரிக்கு மேல் முகத்தைத் வேறு பக்கம் திருப்பிக் கொண்டு உட்கார்ந்தது கிறுக்குத்தனம்!
ராகங்கள் அதன் ஆழம், அளவு இதெல்லாம் தெரிந்து கொண்டு ரசிக்கும் உங்கள் ரசனைக்கு என் ரசனை சளைத்ததில்லை என்று நண்பர் சக்கரபாணியோடான விவாதம்... என் முன்னால நீ பூஜ்யம்மா... வேறு சமயமாயிருந்தால் இதை வேற யாராவது சொல்லியிருந்தால் என்ன கோபம் வந்திருக்குமோ... இப்பவும் சொல்கிறேன் என் ரசனை சளைத்ததில்லை! எதுவுமே புரியாமல் கேட்கும் போதும் நான் விரும்பும் சந்தோஷம் எனக்கு வாய்க்கிறது... அது போதும்!
மூன்று மணி நேர கச்சேரி... முடிந்ததும் வீடு, சமையல்... அத்தனை சீக்கிரம் ஒரு மனநிலையிலிருந்து இன்னொன்றுக்கு மாறும் போது வெறுப்பாக இருந்தது. கச்சேரி முடிந்து கொஞ்சம் நேரம் தனிமை வாய்த்திருக்கக் கூடாதா?
பார்த்தவரை கேட்டவரை போதும் என்றிருந்தது. அதற்கு மேல் திகட்டியிருக்கும்.
ஏறக்குறைய சீஸன் முடிந்த போது ம்யூஸிக் அகடமியின் ஒரு வார நாட்டிய விழா... மறுபடியும் அதே சீஸன் டிக்கெட்... முன் வரிசை பந்தா... ஆடுபவர்களின் பெயர்கள் தந்த டெம்ப்டேஷன் எல்லாம் நேரப் பற்றாக்குறையால் தவிர்க்க வேண்டியதாயிற்று. அடுத்த வருஷம் 'கண்டிப்பாக' லிஸ்டில் அடிக்கோடிட்டு சிவப்பு மையில் எழுதி வைத்தாகிவிட்டது.
கேட்க முடியாமல் தவற விட்டவர்கள்... சிக்கில் குருசரண், ரஞ்சனி - காயத்ரி.
சந்தர்ப்பம் கிடைத்தும் கேட்காமல் விட்ட சில பெரிய தலைகளை ஏன் தவிர்த்தேன் என்ற கேள்விக்கு பதில் தேடிக் கொண்டிருக்கிறேன்!
4 comments:
அழகான சீசன் குறிப்புகள் நிர்மலா. எங்களுடன் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி!
//கச்சேரி முடிந்து கொஞ்சம் நேரம் தனிமை வாய்த்திருக்கக் கூடாதா?// சில போதுகளில் இப்படித் தோன்றுகிறதில்லையா? என்ன செய்வது சில சமயம் வாய்க்கும். அப்படிக் கிடைக்காத சந்தர்ப்பங்களில் முடிந்தளவு எனக்குள் போகப் பார்க்கிறேன்.
-மதி
குறிப்புகள் அருமையாக இருந்தது.
ஒருமனநிலையிலிருந்து மற்றொன்றுக்கு உடனே மாறுவது என்பதே எனக்கும் இப்பதிவில் படித்ததும் ஒட்டிக்கொண்ட வரிகள்.அனுபவித்தவர்களுக்கு தானே தெரியும்.
அலைச்சலோ அசதியோ,
சந்தோஷமோ துக்கமோ,
வாசலில் செருப்போடு-
விட்டுவிட்டேன்.
அடுக்களை அழைக்கிறது.:-)
நன்றி மதி. முடியும் சந்தர்ப்பங்கள் வாய்க்கட்டும்!
நன்றி லட்சுமி. ரொம்ப சரி...!
அடுக்களைக்கு வேற வேலை என்ன?
எப்பப் பார்த்தாலும் கூப்பாடுதான்:-)
அடுத்தவருஷம் எதையும் விட்டுறாதீங்க நிர்மலா.
Post a Comment