Tuesday, February 06, 2007

சீஸன் குறிப்புகள் - 1

ம்யூஸிக் அகடமியில் என்ன கிடைக்கும்? நல்ல சங்கீதம்? செவியோடு சேர்ந்து நாவு கம் வயிற்றுக்கும் விருந்து? நண்பர் கூட கிடைப்பார் தெரியுமா? கொஞ்சம் கூடுதல் அதிர்ஷ்டம் இருந்தால், எழுபது சொச்சம் வயதின் பெரும்பகுதியை சங்கீதம் ரசிக்கவே கழித்த, வித்வான்களுக்கும் தனக்கும் உள்ள தூரத்தை விஷய ஞானத்தில் கடக்கக் கூடிய, சுவாரசியமான நினைவுகளுக்குச் சொந்தக்கார... எக்ஸட்ரா எக்ஸட்ராகளோடு கூடிய நண்பரும் கூடக் கிடைப்பார்!

ஆச்சாரமாக, பக்தியோடு தொடங்கும் டிசம்பர் கச்சேரிகளுக்கு முன்னால் கொஞ்சம் ஜனரஞ்சகமாகக் கலக்கிய ஹிந்து ம்யூஸிக் பெஸ்ட்-ல் ஸ்டார் ஹோட்டல் பு·பேக்கு நடுவில் நானும் இருக்கேன்னு உரத்துச் சொல்லும் எண்ணெய் கத்தரிக்காய் குழம்பும் தயிர்சாதமும் போல கஸல்களுக்கும் மோஸார்ட்க்கும் நடுவில் கர்நாடக சங்கீதம் கலக்கிவிட்டுப் போன நாட்களில் அறிமுகமானார். இலக்கணவிதிகளுக்கு கட்டுப்பட்ட மரபுக் கவிதை, எந்த விதிகளாலும் பிணைக்கப்படாத புதுக்கவிதை... இரண்டு துருவங்களையும் இணைக்கும் அடிநாதம் கவிதை. இப்படி இரண்டு பேர் கச்சேரி கேட்கப் போனால் எப்படி இருக்கும்?!

டிசம்பர் 12-ம் தேதி ராமகிருஷ்ணா மிஷன் பள்ளி அரங்கத்தில் முத்ராவின் 12-வது பைன் ஆர்ட்ஸ் பெஸ்டிவல் வழங்கிய சஞ்சய் சுப்ரமணியம் கச்சேரி. வயலின் எஸ்.வரதராஜன், மிருதங்கம் குருவாயூர் துரை, கடம் திருப்புணித்துர ராதாகிருஷ்ணன். வாசலில் டென்ஷனாக முத்ரா பாஸ்கர், அவரை காம்பன்ஸேட் செய்ய வாயெல்லாம் வெள்ளையாய் ராதா பாஸ்கர். ஓரளவு பெரிய ஹாலில் ஏறக்குறைய ஐநூறு ஜோடி காதுகள். ஆர்ப்பாட்டமில்லாத ரசிகர் கூட்டம். வேஷ்டியும் வெள்ளைச் சட்டையும் சாயமேற்றிய கேசமுமாய், கர்நாடக சங்கீத விதவானுக்கான பிரத்யேக அடையாளங்கள் எதுவும் இல்லாமல் கச்சேரி முடித்து வேஷ்டியைக் களைந்து ஜீன்ஸ¤க்கு மாறினால் சத்யம் தியேட்டர் வாசல் கும்பலில் வித்தியாசமில்லாமல் கலந்துவிடக் கூடியவராய்... சஞ்சய் சுப்ரமணியம்.

சரியாக ஆறேகாலுக்கு தொடங்கிய கச்சேரி ஆரம்பம் முதலே ஜில்லென்ற வேகம் தான். வயலினும் வாய்ப்பாட்டும் இரண்டு சின்ன பசங்களைப் போல கைகோர்த்து உல்லாச ஓட்டம். இணையாயும், கொஞ்சம் நீ முந்தியா நான் முந்தியா என்றும். குரல் சொன்னபடி கேட்கும் போது சந்தோஷம் முகத்தில் தெரிகிறது. அந்த சந்தோஷத்தில் இன்னும் துள்ளலாய். முகமோ, அதன் பாவனையோ பற்றிக் கொஞ்சமும் கவலையில்லாமல் தளையில்லாத வேகம்.

சஞ்சயிடம் கேட்க குறித்து வைத்திருந்த கேள்வி... சபாக்களில் வாசிக்கும் போது எக்ஸ்டஸிக்கல் பாயிண்ட் ( ஒரு கணத்தில் எல்லாம் மறந்து போகும் நிலை) தொடுவதுண்டா? என்று. அவர் தொட்டாரா இல்லையா என்பது தெரிவதற்கு முன்பே மத்யமாவதியில் என்னைத் தொட வைத்தார். அதற்குப் பிறகு கொஞ்ச நேரத்திற்கு சங்கீதமென்ன எதுவுமே நினைவிருக்கவில்லை. 'கந்தனடி...' பாடி மறுபடியும் இழுத்து வந்தார். பாரதியின் 'திக்குத் தெரியாத காட்டில்...' க்கு ஒரு சபாஷ்.

'நல்லா பாடறார். பெரிய மனசு. முடிச்சுக்கட்டுமா பாஸ்கர்-ன்னு கேட்டுட்டு முடிச்சார் பாத்தியா? மத்யமாவதிலதான் கொஞ்சம் சுருதி பேதம்' - இது மரபுக்கவிதையின் கமெண்ட்.கடைசியில் அந்தக் கேள்வியை கேட்டு வைக்க நேரம் வாய்த்து, கேட்டதில்... ' என்ன? இன்னொரு முறை கேளுங்கள் என்று கேட்டு விட்டு... ', 'இல்லை. அப்படி எந்த இடத்தையும் தொடுவதில்லை. தனிமையில் பாடும் போது கூட'... ஆச்சரியம் தான்! கேள்வி சரியாக புரிந்து கொள்ளப் படவில்லையோ என்ற சந்தேகம் மட்டும் இன்னும் மிச்சம் இருக்கிறது!

மறுநாள் அதே இடத்தில் சுதா ரகுநாதன் நிகழ்ச்சிக்கு முன்னால் ராம்ஜியின் இசை மழலைகள் சத்யநாராயணா - கீ போர்ட், விக்னேஷ் - வாய்ப்பாட்டு... நல்லி குப்புசாமி ஏ.நடராஜன் ஜோடி தலைமையில் சுதாவுடன் சேர்ந்து போகோ சேனல் பரிசு பெற்றதற்கு ஒரு சிறிய பாராட்டு விழா. பெரியவர்கள் ஒரு பக்கம் பாராட்டிக் கொண்டிருக்க வாண்டு வித்வான்கள் சிறுபிள்ளைச் சிரிப்புகளுடன்.

மாறி மாறிப் பொழிந்த பாராட்டு மழை ஓய்ந்ததும் கச்சேரி தொடங்கியது. எம். ஆர். கோபிநாத் வயலின். திருவாரூர் வைத்தியநாதன் மிருதங்கம். ராமன் மோர்சிங். நீலப்புடவையும் தோதான ஆபரணங்களுமாய் சுதா. பெண் கலைஞர்களுக்கு பாடவோ வாசிக்கவோ தயார் செய்வதோடு இந்த அலங்கார மெனக்கெடல்கள் சந்தோஷமா? சுமையா? எனக்கென்னவோ ஒரு கட்டத்திற்கு மேல் சுமையாகத்தான் போய்விடும் என்று தோன்றுகிறது.

பைரவியில் வர்ணம் பாடி தொடங்கிய கச்சேரியில், குரல் ராகங்களின் ஆழங்களை அநாயசமாகத் தொட்டு மேதாவிலாசம் சொன்னது. கோவில் மணி ஓசை எவ்வளவு நேரம் கேட்க முடியும்? சுதாவின் குரலில் மூன்று மணிநேரம் சலிக்காமல் கேட்கலாம். சுதாவின் லதாங்கியும் ஆபேரியும் மரபுக்கவிதையை முழுசாக உள்ளே இழுத்துக் கொண்டது. அங்கே இங்கே அசையாமல் கச்சேரியில் ஆழ்ந்து போனது.வெளியே வரும் போது, ' ஆழ்ந்த இசை ஞானமுள்ள என் போன்ற ரசிகர்களை சபாக்கள் சரியாகப் புரிந்து நடத்துவதில்லை' என்ற வருத்தத்தை சொல்லி விட்டுப் போனது.

மொத்தத்தில் கர்மசிரத்தையான கச்சேரி.

4 comments:

இலவசக்கொத்தனார் said...

வணக்கம். உங்கள் பதிவை இப்பொழுதுதான் பார்த்தேன். வரிசையாகப் படித்துக் கொண்டிருக்கிறேன்.

நீங்கள் சஞ்சயிடம் கேட்ட கேள்வி என் மனதில் இருந்த கேள்வி. ரசிகர்கள் கண்ணீர் விடுமளவுக்கு பாடும் இவர்கள் அப்படி உணர்ச்சிவயப்படுவது உண்டா என்று.

சமீபத்தில் ஒரு கச்சேரியில் டி.எம்.கிருஷ்ணா அவர்கள் அப்படி தன்னிலை மறந்து ஒரு நிமிடம் பாடுவதை நிறுத்திவிட்டு, சுதாரித்துக் கொண்டு பின் தொடர்ந்து பாடியதாகக் கேள்விப்பட்டேன். நான் நேரடியாக பார்க்கவில்லை. ஆனால் மிகவும் நெருங்கிய நபர் ஒருவர் தந்த தகவல் இது.

பகிர்ந்து கொள்ளத் தோன்றியது, அதான் எழுதினேன். நன்றி.

Nirmala. said...

நன்றி இலவசக்கொத்தனார்.

--------------
சமீபத்தில் ஒரு கச்சேரியில் டி.எம்.கிருஷ்ணா அவர்கள் அப்படி தன்னிலை மறந்து ஒரு நிமிடம் பாடுவதை நிறுத்திவிட்டு, சுதாரித்துக் கொண்டு பின் தொடர்ந்து பாடியதாகக் கேள்விப்பட்டேன்.
---------------
ரொம்ப சந்தோஷம். சஞ்சய், இல்லை என்று சொன்ன போது ரொம்ப வருத்தமாக இருந்தது. கூட வந்திருந்த நண்பர் உன்னுடைய வார்த்தை பிரயோகம் தவறாகப் பட்டிருக்கலாம் என்று சொன்னார். தெரியவில்லை!

Mookku Sundar said...

//கேட்டதில்... ' என்ன? இன்னொரு முறை கேளுங்கள் என்று கேட்டு விட்டு... ', 'இல்லை. அப்படி எந்த இடத்தையும் தொடுவதில்லை. தனிமையில் பாடும் போது கூட'... ஆச்சரியம் தான்! கேள்வி சரியாக புரிந்து கொள்ளப் படவில்லையோ என்ற சந்தேகம் மட்டும் இன்னும் மிச்சம் இருக்கிறது//

அதே சந்தேகம்தான் இங்கும்.

கமலிடம் ஒருமுறை மகாநதியின் அந்த உச்சக்கட்ட சோகக் கட்சியைப் பற்றி கேட்கும்ப்பொது, நடிக்கும்போது ரொம்ப உணர்ச்சிவசப்பட்டீர்கள என்று கேட்க, இல்லை...Acting It is just a craft for me என்றாராம். கோபம் கோபமாக வந்தது. பாக்கிறவர்களையெல்லாம் கதறடிக்க கூடிய மாதிரி நடித்துவிட்டு, இது என்ன பதில் என்று.

உணர்ச்சிவசப்படுவேன் என்று சொல்லிக் கொள்வதில் கலைஞர்கள் கூட அவமானமாக உணர ஆரம்பித்து விட்டார்கள் போல....

இவர்களை நம்பாதீர்கள்....!!!!!!!!!

மற்றபடிக்கு ரிப்போர்ட்டிங் செய்வது குறித்து ரொம்ப சந்தோஷம்.கவுதமியிடம் பேட்டி எடுக்க முடியுமா என்று பாருங்கள். கமலை இதுவரைக்கும் குறை சொல்லாஹ ஒரே ஸ்நேகிதி அவர்;-)

Nirmala. said...

ஆமாம் சுந்தர்... இப்பவும் நம்பத்தான் முடியலை! அவர் ஒத்துக் கொள்ளாத போதும்.

அப்புறம், அந்த ரிப்போட்டிங் எல்லாம் சீஸனோட போச்சு! :-)