Tuesday, February 07, 2006

கொல்கத்தா புத்தக கண்காட்சி

31 வது கொல்கத்தா புத்தக கண்காட்சி ஞாயிற்றுக் கிழமை முடிந்தது. இந்த வருட தீம் ஸ்பெய்ன். 578 ஸ்டால்களில், ஒரு நாள் மூன்று மணி நேரத்தில் கால் பங்கு கூட பார்த்து முடிக்க முடியவில்லை. இன்னொரு தரம் பார்த்து விட்டு சேர்த்து எழுதலாம் என்ற இருக்க, முடிந்தே போய் விட்டது.

'மைதான்' நாசம் ஆகிவிட்டது, சுத்தம் செய்து முடிக்க ஒரு மாதமாவது ஆகும் என்ற புலம்பல்களும், புத்தக கண்காட்சியில் உணவகங்களையும் மற்ற விற்பனைகளையும் அனுமதிக்கலாமா கூடாதா என்ற விவாதங்களுமாய் இருக்கிறது. 'ஆடியோ விஷ¤வல் சரக்குகள் கூட வாசிக்கும் பழக்கத்தைக் குறைத்து விடும். தள்ளிப் போய் வித்துக்கோ' ன்னு ஒரு கூக்குரல்.

புத்தகம், ம்யூஸிக், சாப்பாடு... இதில் கொல்கத்தாவாசிகளை அடிச்சுக்க முடியாது தான். விடவும் மாட்டார்கள். ஜிப்பா ஜோல்னா பை சகிதமாயும், கோட்டு சூட்டுமாயும் பங்காலிபாபுகள், வயதானவர்கள், குழந்தைகள், இளைஞர்கள், காட்டன் சேலைப் பெண்கள்... கலந்தடித்த கூட்டம்.

'குல்லம் குல்லா லிக்கா ஹை கியா(வெட்ட வெளிச்சமா எழுதியிருக்கா)'?... ஜீன்ஸ் சுந்தரிகளும் சுந்தரன்களுமாய் இருந்த கூட்டத்தில் இருந்து வந்த குரல். அவர்கள் தேடிக் கொண்டிருந்தது essays & letter writing section ல்! இராமகிருஷ்ணரும், விவேகானந்தரும், குருதேவும் நிறைந்திருக்கிறார்கள். 'கோட்டோவியங்களில் கல்கத்தா' இதற்கென்றே ஒரு ஸ்டால். sculptor workshop... ஒரு ஸ்டாலில்.

சாகித்ய அகாடமி ஸ்டாலின் ஒரு சின்ன அலமாரியில் பத்து பதினைந்து தமிழ் புத்தகம் கண்ணில் பட்டது. தமிழ் சங்கம் இருக்கிறது. தியாகராஜர் ஹாலில் கச்சேரி செய்ய சுதாவும், சௌம்யாவும் வந்து போகிறார்கள். கவி பாரதி பெயரில் ஒரு தெரு இருக்கிறது. சாயந்திர நேரத்தில் அந்த தெருவில் கொஞ்சம் நடந்துட்டு வந்தால் ஊருக்கே போயிட்டு வந்த மாதிரி இருக்கிறது. தமிழ் புத்தகத்துக்கு மட்டும் ஏன் தேவை இல்லை?!

நான் வாங்கியது:

செம்மீன் - தகழி சிவசங்கரப் பிள்ளை - தமிழாக்கம்: சுந்தர ராமசாமி.

Binodini - Rabindranath Tagore

The Sandal Trees - Kamala Das

May you be the mother of a hundred sons - Elisabeth Bumiller.

8 comments:

Boston Bala said...

---தமிழ் சங்கம் இருக்கிறது. தியாகராஜர் ஹாலில் கச்சேரி செய்ய ---

மெட்ராஸ் மிக்சர் என்று தமிழ்நாடு அயிட்டங்கள் எல்லாம் விற்கிறார்கள். டிவியும் தமிழில் கிடைக்கிறது. ஆனால், வார இதழ்கள்/புத்தகங்கள் மட்டும்தான் கொண்டு வருவதில்லை!

Nirmala. said...

அதே தான். வார இதழ்கள் கிடைக்கிறது. ஒரு நாள் லேட்டா ஹிண்டு கூட கிடைக்கிறது. அதுவல்லாமல் வேற எந்த புத்தகமும் யாரும் கேட்கிறதில்லை போலிருக்கு!

Jayaprakash Sampath said...

வார இறுதியில், கணேஷ் சந்திர அவினியூவிலே ஒரு கேரளாக் காரர் கடையிலே வார மாத இதழ்கள் வாங்குவது வழக்கம்..அங்கே மணிமேகலை பிரசுர புஸ்தகங்களை எல்லாம் பார்த்த நினைவிருக்கிறது..கையேந்தி பவனிலே, chicken chowmein தின்று கொண்டே, கவர்ஸ்ஸ்டோரியாக வந்த காதல் கோட்டை விமர்சனம் நினைவிருக்கிறது.. ஓ கல்கத்தா.... நிர்மலா ரொம்ப வெறுப்பேத்தறீங்க... திடுதிப்புன்னு லீவ் போட்டுட்டு கொல்கத்தா வரப்போறேன்..பாத்துகினே இருங்க... :-)

Nirmala. said...

ப்ரகாஷ், நமக்கு லேக் மார்க்கெட்தான். சால்ட் லேக்ல இருந்து சும்மா ஒரு பதினைஞ்சு இருபது கிலோமீட்டர் போய் ஒத்த விகடன் வாங்கற பிரகஸ்பதி நானாத்தான் இருப்பேன்! அப்பப்ப திருட்டு விசிடி போனஸ¤ம் கிடைக்கும். இந்த கணேஷ் சந்திர அவென்யூ எங்க இருக்கு? சரி சரி இனி எதுக்கு அதெல்லாம்!

-----------
ஓ கல்கத்தா.... நிர்மலா ரொம்ப வெறுப்பேத்தறீங்க... திடுதிப்புன்னு லீவ் போட்டுட்டு கொல்கத்தா வரப்போறேன்..பாத்துகினே இருங்க... :-)
-----------

இதைச் சொல்லி நீங்க தான் வெறுப்பேத்தறீங்க... நானே கொல்கத்தாவைப் பிரியற சோகத்திலெ இருக்கேன்! மாசக்கடைசி அடுத்த பேக்கிங் :-(

யாத்ரீகன் said...

அஹா.. கல்கத்தா நியாபகத்தை கிளற மற்றொரு பதிவா :-) , என்னங்க.. கோமள்விலாஸ் அருகிலேயே ஒரு வீடியோ லைப்ரரி உண்டே, கேஸட்,சிடி,டிவிடினு எல்லாமே கிடைக்கும்.. அதே மாதிரி எஸ்ப்ளனேட்லயும், மெட்ரோ ஸ்டேஷன் வாசல் அருகில் ஒரு சந்து உண்டு, அங்கே ஒரு மலையாள சேச்சன் கடையில முறுக்கும் உண்டு, நேந்திர சிப்ஸும் உண்டு, எல்லா வார இதழ்களும் உண்டு... அதே மாதிரி லேக் மார்கெட்டும் சூப்பர் ஏரியா , அஹா.. ஞாயாபகம் வருதே ஞாயாபகம் வருதே :-(

Nirmala. said...

இந்த கோமள்விலாஸ் பேரு கேள்விப்பட்டதோட சரி... இன்னும் போனதில்லை! நம்ம பேமிலி 'இங்க வந்தும் இட்லி தோசையா'ன்னு சலிச்சுக்கும்.

எஸ்ப்ளனேட் சந்து தான் முதல் முதல்ல தேடிப் போனது. அது ரொம்ப தூரமாச்சே... அதான் லேக் மார்க்கெட்.

G.Ragavan said...

நீங்க பாட்டுக்கு இப்பிடி ஒரு பதிவு எழுதி என்னோட நினைவலைகளைக் கிளறி விட்டுட்டீங்க...

நான் போயிருந்த பொழுது தீம் கியூபா.....சொல்லவும் வேண்டுமா....

முதலில் டிக்கெட் கொடுப்பதில் தாமதமானது. இத்தனை மணிக்குத் தொடங்கும் என்று சொல்லி விட்டு டிக்கெட் குடுக்காமல் இருந்தது வரிசையில் இருப்பவர்களை ஆத்திரத்தைக் கிளறியது. அவர்கள் டமடமவென தட்டிகளைத் தட்டினார்கள். ஒரு பக்கம் லேசாகச் சாய்ந்து போனது. நல்ல வேளை டிக்கெட் கொடுப்பவர்கள் உள்ளே இல்லை. பிறகு வந்து டிக்கெட் கொடுத்தார்கள்.

உள்ளே வங்காள மொழிப் புத்தகங்கள் மட்டுமே என்று கிடைக்கும் என்று போனால் நாம் ஏமாற வேண்டியதுதான். ஆங்கிலப் புத்தகங்களும் எக்கச் சக்கமாக கிடைக்கின்றன. நான் ஒரு பெரிய பை நிறைய அள்ளிக் கொண்டு வந்தேன். அந்தப் புத்தகங்களை வேறு ஏதேனும் கடையில் தேடி வாங்குவது மிகக் கடினம். அல்லது முடியாது.

படிக்கும் பழக்கத்தை அவர்கள் எவ்வளவு நேசிக்கிறார்கள் என்று அங்கு போனால் தெரிந்து விடும். ஒவ்வொரு புத்தகம் பற்றியும் அந்த ஆசிரியர் பற்றியும் முடிந்த வரை தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

உள்ளே பென்ஃபிஷ் அங்காடியில் சிறந்த மீன் பொரியல் கிடைக்கும். அப்படியே தோசையும் கிடைக்கும் கடைகளும் உண்டு. சாம்பார் சகிக்காது. சட்டினி தித்திப்பாக நன்றாக இருக்கும்.

கண்காட்சி இல்லாத சமயங்களில் மைதானின் பிரம்மாண்டம் நம்மைப் பிரமிக்க வைக்கும். அந்த மைதானில் கண்காட்சி என்றால்...நடப்பதற்குத் தெம்பு இல்லாதவர்கள் போக வேண்டாம்.

Nirmala. said...

ராகவன்... கொல்கத்தாவாசிகளுக்கு புத்தக கண்காட்சி என்னவோ கோவில் திருவிழா போல. அதில இருக்கிற பிடிப்பும் ஆர்வமும்... வர்ற கூட்டமும் கலந்துகட்டித்தான். ஆனால் யார் எது வாசிப்பார்கள் என்று அனுமானிக்க முடியாது.

பழைய பதிவெல்லாம் புரட்டிக் கொண்டிருக்கிறீர்கள் போல?!