Thursday, February 02, 2006

சுருக்குப்பை(யிலிருந்து) - 2

'இவ்வளவு பக்கத்தில நான் இருக்கேன். பெருசா டெல்லி கிளம்பிட்டீங்க. சரி சரி கட்டின பொட்டிய பிரிப்பானேன். இங்க வந்துட்டு போங்க'... ஒற்றைக் கொம்பால் காதில் கிச்சுகிச்சு மூட்டிக் கொண்டே முனங்கிய காஸிரங்கா காண்டாமிருகத்தின் குரல் கேட்டு... 'நாம அஸ்ஸாம் போறோம்' என்று முடிவானது.

கௌஹாத்தி, மாநிலத் தலைநகருக்கான லட்சணங்களைப் பற்றியெல்லாம் அதிகம் கவலைப்படாமல் தன் போக்கில் இருந்தது. புதிதாக முளைத்திருந்த மால்கள் சூழலோடு ஒட்டாமல் தனியாகத் தெரிந்தது. விமான நிலையத்திலிருந்து தங்கும் இடத்திற்குப் போகும் வழியில் குறுக்கிட்ட இரண்டு கிலோமீட்டர் மார்க்கெட்டைக் கடக்க இரண்டு மணிநேரம் ஆனது. எல்லாம் அந்த மஞ்சள் கோடு மீறல் தான். காத்திருந்த இரண்டு மணி நேரத்தில் ஒரு ட்ராபிக் போலிஸ்காரர் கண்ணில் படவில்லை.

கௌஹாத்தியில் 'கட்டாயம் பார்க்க' என்று பயணப் புத்தகம் சொன்னதில் மூன்று கோவில்களை மட்டும் பார்த்த எங்கள் மக்கள்ஸ்க்கு சரியான சலிப்பு. தீர்த்த யாத்திரையா வந்திருக்கோம் என்று குதிக்க ஆரம்பித்தவர்களை சமாதானப் படுத்தி, முதலில் போனது காமாக்யா மந்திர். அமிதாப்பச்சனுக்காக ரெண்டு எருமைகளை பலி கொடுத்த கதையெல்லாம் திரும்ப வந்து ஆ.வி படித்துத் தான் தெரிந்தது. கோவிலுக்கு உள்ளே நுழையும் போது சிலிர்த்துக் கொண்டு வந்த கடாக்குட்டிகளெல்லாம் அதுக்குத்தானா?!

நீளமான க்யூ இருக்கும், குறைந்தது ரெண்டு மணிநேரமாவது ஆகும் என்று பயமுறுத்திய கதையையெல்லாம் பின்னால் ஒரு ஐம்பது பேராவது நின்று, திரும்பிப் போக வழியில்லாமல் போன சமயத்தில் கணவர் மெதுவாக எடுத்து விட்ட தகவல். வளைந்து வளைந்து செல்லும் க்யூவில் ஆறேமுக்காலாவது திருப்பத்தில் கண்ணில் பட்ட ஸ்வாமிதான் நாங்கள் பார்க்க வந்த காமாக்யாவோ என்று நினைத்தால், 'இதைக் கும்பிட்டுக்கோங்க இன்னும் உள்ள போகணும்' என்று சொன்ன 'உள்ளே' ரொம்ப இருட்டாய் இருந்தது.

அதிகம் வெளிச்சமில்லாத ஒரு திருப்பத்தில் ஒழுங்கில்லாத நான்கைந்து படிகள். இறங்கினால், வரிசையாய் உட்கார்ந்திருந்த பூசாரிகளைத் தவிர வேறேதும் தெரியவில்லை. வட்டமாய் ஒரு தாழ்வான மேடை, அந்த வட்டத்திலேயே பிரம்மாண்டமான ஒரு இருட்டு கோபுரம். உள்ளே போன வழியிலேயே திரும்பி வர வேண்டும். மண்டியிட்டு கீழே சுரக்கும் சுனை நீரைத் தொட்டுப் பார்க்கச் சொன்னபடி செய்து விட்டு வெளியே வர, அது 'ஜஹான் ஸே ஹம் ஆயே, வோ ஸ்தான் ஹை' ( நாம் எங்கிருந்து வந்தோமோ அந்த இடம்) என்று சொன்னதை 'கருப்பை' என்று சொன்னதாக நான் புரிந்து கொண்டேன். சரியா தவறா தெரியவில்லை. அதைச் சொல்லவே அவருக்கு ஏனோ அவ்வளவு தர்மசங்கடம். மேலும் கேள்வி கேட்டு குடையும் ஆர்வம் வரவில்லை.

சாதாரண நாட்களிலேயே இவ்வளவு அசௌகரியமான வழியாயிருக்கும் அந்த இடம் விசேஷங்களில் எப்படி இருக்கும்? எப்படி கூட்டத்தை சமாளிப்பார்கள் என்று கவலையாயிருந்தது. ஒரு ஆள் சறுக்கினாலும் பதட்டமும் கலவரமும் தவிர்ப்பது சிரமமாயிருக்கும். எங்கே போனாலும் இது மாதிரி யோசனை தான் வருகிறது. பக்தி?!

அதை முடித்து அடுத்ததாய் போன பாலாஜி கோவில் அச்சு அசலான தமிழ்நாட்டுக் கோவில். புளியோதரையும் சுண்டலும் தான் மிஸ்ஸிங். சர்ச்சைக்குள்ளான காஞ்சி பெரியவர்கள் சுவர்களில் சிரித்துக் கொண்டிருந்தார்கள். மூன்றாவது கோவிலை தவிர்த்து அன்றைய சுற்றலை முடித்துக் கொண்டோம். தூரத்தில் ஓடிக் கொண்டிருந்த பிரம்மபுத்திராவை காரிலிருந்து பார்த்துக் கொண்டதோடு சரி.

மறுநாள் காலை ஷில்லாங் போக கார் வந்திருந்தது. முதலில் சிரபுஞ்சி பார்த்து விடலாம் என்பது ஓட்டுனர் ஆலோசனை. 'அதிக மழை' பட்டத்தை பக்கத்து ஊருக்கு தாரை வார்த்துக் கொடுத்து விட்டதாய் மகன் தகவல் சொல்ல, 'அச்சச்சோ அப்படியா?!' என்றோம். சொன்ன மாதிரியே நாங்கள் போயிருந்த போது மழையொன்றும் காணோம். திடீரென்று மேகம் திரண்டு சடசட வென்று பெய்யும் என்று சொல்லியிருந்தது நாங்கள் இருந்த மூன்று நான்கு மணி நேரம் வரை நடக்கவில்லை.

தூரப் பார்வைக்குத் தெரியும் ஒன்றிரண்டு அருவிகள், அழகாய் ஒரு குகை... இது சிரபுஞ்சி. அருவியைப் பார்த்தோம் என்று போனில் சொன்னதும் அம்மா கேட்டது, 'குளிச்சீங்களா?' என்பது தான். குளிக்க முடியாத அருவியெல்லாம் வேஸ்ட் என்பது அவருடைய அபிப்ராயம். தண்ணீர், அது ஆறோ குளமோ... இறங்கி அளைய முடியணுமாம். சரிதான்.

'ஐநூறு மீட்டர் நீள குகைக்குள்ளே நுழைந்து வருவது சிரமம். ஆம்பிள்ளைகள் நீங்க ரெண்டு பேர் வேணா போகலாம், பொம்பளைங்களுக்கு கஷ்டம்' என்று அந்த ஓட்டுனர் சொல்லாமல் இருந்தால் அதில் நுழைந்தே தீரும் பிடிவாதம் வந்திருக்காது தான்! தண்ணீராலா, இல்லை நடந்து நடந்தே அப்படி ஆனதா என்று தெரியவில்லை, துடைத்து வைத்தது போல மொழுமொழு பாறைகள். இருட்டுக் குகைகளும் இணைக்கும் சிறு துவாரங்களுமாய்... எப்போ வழுக்கி விழப்போறேனோ, விழுந்தால் எப்படி இங்கிருந்து வெளியே போவது, உனக்கெதுக்கு இந்த வேலையெல்லாம்னு இவர் ஆரம்பிச்சுடுவாரே... இதெல்லாம் தான் உள்ளே ஓடிக் கொண்டிருந்தது. இன்னும் கொஞ்சம் நிதானமாய் பார்த்திருக்கலாமோ என்று இப்போது தோன்றுகிறது. அப்போதென்னவோ அதை கடந்து முடிக்கும் வேகம் தான் இருந்தது.

வழியில் உமியம்(Umiam) ஏரியை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே ஷில்லாங் போய் சேர்ந்தோம். இரவு தங்கல் அங்கேதான் ஏற்பாடாகியிருந்தது. சாப்பிடப் போகும் போது குளிர் அதிகமாயிருந்ததில் என்னதான் அப்போது டெம்பரேச்சர் இருக்கும் என்ற ஆர்வத்தை மார்க்கெட் பகுதி மணிக்கூண்டு தீர்த்து வைத்தது. எட்டு டிகிரி என்று சொன்னதை நம்ப சிரமமாயிருந்ததது. சாப்பாடெல்லாம் முடித்து ஏழுமணி சுமாருக்குத் (ஏழு மணிக்கெல்லாம் ஊர் அடங்க ஆரம்பித்துவிடும் என்று ஓட்டுனர் முன்னாலேயே சொல்லியிருந்தார்) திரும்பி வரும் போது மணிக்கூண்டு வெப்பம் காட்டி மூன்று என்றது. வெப்பம் காட்டி தவறாக வேலை செய்கிறது என்றுதான் தோன்றியது. அறைக்குள் ஹீட்டரைப் போட்டு கம்பளியையும் போர்த்தி படுத்ததில் எதுவும் தெரியவில்லை.

தொடர்கிறது...

3 comments:

ramachandranusha(உஷா) said...

//'ஜஹான் ஸே ஹம் ஆயே, வோ ஸ்தான் ஹை' ( நாம் எங்கிருந்து வந்தோமோ அந்த இடம்) என்று சொன்னதை 'கருப்பை' என்று சொன்னதாக நான் புரிந்து கொண்டேன். சரியா தவறா தெரியவில்லை. அதைச் சொல்லவே அவருக்கு ஏனோ அவ்வளவு தர்மசங்கடம்//

நிம்மி ஒரு இடத்துக்குப் போவதற்கு முன்பு நல்லா விசாரிச்சிக்க வேண்டாமா :-)))))
காமக்யா கோவில் சக்தி பீடங்களில் ஒன்று. நீங்க பார்த்தது சக்தியின் யோனி விழுந்த இடம், நல்லவேளை பூசாரி விலாவாரியாய்
சொல்ல ஆரம்பித்திருந்தா உங்க பிள்ளைகளிடம் நல்லா வாங்கிக் கட்டிக் கொண்டு இருப்பீர்கள் :-)
சிந்தூர் என்ற குங்குமம் என்று சொல்லப்படுகின்ற சிவப்பு சாயம் அந்த தண்ணீரில் இருந்ததா? இருந்தா அன்றைக்கு அம்மனுக்கு .......
வேண்டாங்க நா சொல்லலை? என்னத்தான் நம்பிக்கை என்று சொன்னாலும், சில விஷயங்களை அப்படியே ஏற்றுக் கொள்ள
முடிவதில்லை.

பிச்சைப்பாத்திரம் said...

எப்படியோ தவறவிட்டுவிட்ட உங்கள் பதிவுகளை சேர்த்து வைத்து இன்றுதான் படித்தேன். கொல்கத்தாவின் புதிதான திரைப்படங்களையும், படித்த நூல்களையும் மெலிதான நகைச்சுவையுடன் ஆனால் சொல்ல வருவதை தெளிவாகவும் மென்மையாகவும் சொல்லி விடுகிற உங்களின் எழுத்து நடை என்னை வசீகரித்தது. தொடர்ந்து எழுதுங்கள் நிர்மலா. வாழ்த்துக்கள்!

Nirmala. said...

உஷா, அங்கே போற வரைக்கும் அப்படி ஒரு கோவில் இருக்குன்னே தெரியாது. ஆமா, இப்படி பாதி சொல்லிட்டு விட்டுட்டா எப்படி? தனிமயிலாச்சும் அனுப்புங்க.

btw, அந்த பூசாரி சொல்லியிருந்தாலும் as a fact கேட்டுட்டு போயிருக்கலாம். ஆனா சொல்ல மாட்டாங்க. எதுக்கு இவ்ளோ கேள்வி கேக்கறே? கோவிலுக்கு வந்தியா சாமி கும்பிட்டியான்னு இரேன்னு ஒரு பார்வை!

நன்றி சுரேஷ். அதற்குப் பிறகு ஒரே பெங்காலி படங்கள் படையெடுப்பு தான்.