ஜக்ஜித் சிங்கை கவனித்துக் கேட்க ஆரம்பித்தது கடந்த பத்து வருடங்களாகத்தான். அவரும் சித்ரா சிங்கும் இணைந்து வழங்கிய ஒரு சிடி மூலமாகத்தான் அறிமுகமானார். இதமான குரலோடு அவருக்கான சில நேரங்களை எனக்குக் கொடுத்துப் போயிருக்கிறார்.
சனிக்கிழமை மாலை Science City அரங்கத்தில் அவருடைய இசை நிகழ்ச்சி. ஆறு மணிக்கு மேல் என்று அழைப்பிதழ் சொன்னது. சக வாத்தியகாரர்கள் எல்லோரும் வெள்ளையில் இருக்க, நடுவில் முழு கறுப்பில் ஹார்மோனியத்துடன் ஜக்ஜித் சிங் அமர்ந்திருக்க, திரை விலகும் போது மணி ஆறேமுக்கால். ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்தும் போது அவர்கள் அவரவர் வாத்தியத்தை வாசிக்க கூடவே ஒலிபெருக்கி அளவைக் கூட்டவும் குறைக்கவும் சொல்லிக் கொண்டிருந்தார். அவ்வளவு சீக்கிரத்தில் திருப்தி வரவில்லை. இதை இன்னும் கூடச் சேர்த்து, அதைக் கொஞ்சம் குறை... ஒரு வழியாக ஏழுமணிக்கு முதல் கஸல்.
ஆலாபனையோடு தொடங்கிய குரல் பக்கத்தில் வந்து ஹலோ சொல்லிப் போனது. முதல் கஸல் முடிந்து இரண்டாவது தொடங்கும் போது வசியம் பண்ண ஆரம்பித்திருந்தது. மெல்ல அந்தக் குரல் தன்பக்கம் இழுப்பது போலவும், அதை நோக்கிப் போவதைப் போலவுமிருந்தது. அரங்கத்திலிருந்தவர்கள், வாத்தியக்காரர்கள் விலகிப் போக அந்தக் குரலும் நானும் மட்டும் ஒரு வட்டத்திற்குள் என்று உணரத் தொடங்கும் போது வயலினின் ஒலிப்பெருக்கியை சரி செய்யச் சொல்லி வட்டத்தைச் சிதைத்தார். மறுபடியும் குரல் வசீகரிக்க ஆரம்பிப்பதும், எதாவது பேசி வட்டத்தைக் கலைப்பதுமாயிருந்தார்.
தண்ணீர் குடிக்க டம்ளர் வேண்டும் என்பதை ஒலிப்பெருக்கியில் பாட்டுக்கு இடையில் சொன்ன போது 'இது சரியா ஜக்ஜித்ஜி?' என்றிருந்தது. ஆரம்பித்த ஒரு மணி நேரத்தில் 'ஐந்து நிமிட இடைவேளை... பத்து பதினைந்து நிமிடத்திற்குப் பிறகு சந்திக்கலாம்' என்று ஜோக்கடித்த போது சிரிப்பு வரவில்லை.
நாற்பது நிமிடத்திற்குப் பிறகு மறுபடியும் பாட ஆரம்பித்த போது 'நான் ஒன்னும் அதிக நேரம் கேட்கப் போவதில்லை. ஒன்றிரண்டு கேட்டு விட்டு போய் விடப் போறேன்' என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டு தான் கேட்க ஆரம்பித்தேன். முதல் பாதியில் ஏமாற்றியதை இரண்டாம் பாதியில் ஈடுகட்டினார் என்று தான் சொல்ல வேண்டும். தேர்ந்தெடுத்த பாடல்கள், கொஞ்சலும் குழைவுமாய்... குரல் அவர் சொன்ன படி கேட்டது. சிரமமே இல்லாமல், சுவாசிப்பது போலத்தான் பாடவும் செய்கிறார் என்று நினைக்க வைத்தார். 'உன் வசியத்திற்கெல்லாம் மயங்க மாட்டேன்' என்று பிடிவாதமாய் அமர்ந்திருந்தவளை தாளம் போட வைத்ததில் அந்தக் குரலுக்கு ஒரு சந்தோஷம்.
பாதிப் பாட்டில் எழுந்து போக வேண்டாம் என்று முடியக் காத்திருக்க, போக விடாமல் நாற்பது நிமிடம் தொடர் சங்கீதம். ஒரு பாட்டு முடிய முடிய அடுத்தது தொடங்க... எழுந்திருக்க மனமில்லைதான். ஒன்பரை மணிக்கு கச்சேரி முடிந்தது. இசையென்னும் இன்ப வெள்ளத்தில் மூழ்க ஓடோடி வந்த என்னை கொஞ்சம் ஏமாற்றித்தான் விட்டார். வெறும் கால் மட்டும் தான் நனைந்தது போலிருந்தது.
ஆனாலும் தான் என்ன... ஆற்றங்கரையில் குட்டைப்பாறை மேல் உட்கார்ந்து காலாட்டிக் கொண்டு நனையும் சுகத்தைக் குறை சொல்ல முடியுமா?!
9 comments:
கஸல் கேட்பதிலே தனி சுகம் தான், அனுபவித்து எழுதி இருக்கிறீர்கள்!
posted by: ்ஜ்ஜ்ஜ்ஜீJeeva
நன்றி ஜ்ஜ்ஜ்ஜ்ஜீJeeva :-)
posted by: nirmala
அன்பு நிர்மலா,
இவரோட குரலுக்கு ஒரு வசீகரம் இருக்கறது உண்மைதான்.
11 வருஷத்துக்கு முன்னே டெல்லியிலே ஒரு ம்யூசிக் கடையிலே போய்
'செளதினிகி...'ன்னு பாட்டை ஹம் செஞ்சு காமிச்சு கேஸட் வாங்கியது நினைவுக்கு வந்தது!!!
நல்ல அனுபவம்!!!!
posted by:
ஆமாம். கொஞ்சம் ரசிகர்களை கவனத்தில் வைத்துக் கொண்டு பாடியிருந்தாரென்றால் அது ஒரு அருமையான கச்சேரியாயிருந்திருக்கும். அதைச் செய்யலையே என்ற ஆதங்கம் தான்.
btw, நீங்க யாருன்னு தெரியலையே!
posted by: nirmala
அன்பு நிர்மலா,
அந்தப் பின்னூட்டம் போட்டது நாந்தான்!
துளசி
posted by:
சர்ஃபரோஷ் படத்தில் அவர் பாடிய"ஹோஷுவாலோன் கோ கபர் க்யா" என்றொரு பாட்டு அருமையாக இருக்கும். அதை இணைய நண்பர்களுக்கு (யாஹூ தூதுவன் வழியாக) பாடி பல வடக்கிந்திய ரசிகைகளை சம்பாதித்த அனுபவமுண்டு ;-)
posted by: Voice on Wings
நீங்கதானா துளசி அது. நன்றி.
Voice on Wings(!)... அன்றைக்கு அவர் திரைப்பட பாடல்கள் எதுவும் பாடவில்லை. ஆனாலும் இரண்டாவது பாதியில் ஒவ்வொரு பாட்டு தொடங்கும் போதும் 'ஓ... இதுவா என்ற சந்தோஷம் எல்லாருக்கும் இருந்தது' நன்றி.
posted by: nirmala
அன்பு நிர்மலா,
இன்று தான் முதன் முதலாக ஓர் blogger படிக்கின்றேன்.
அது உங்களுடையது.
உங்கள் எழுததுக்கு ஓர் வசீகரம் இருக்கிறது.
சுஜாதா ஒரு முறை சொன்னார். ஒரு நல்ல ரசிகன் எழுத்தாளரை சந்திக்க தொடர்பு கொள்ள ஆசைபபட மாட்டான் என்று.
அல்லது தேவையில்லை என்றா?
ஆனால் உங்களை தொடர்பு கொள்ளும் ஆவலை தவிர்க்க இயலவில்லை.
நான் உங்களுக்கு எழுதினால் பதில் மெயில் எழுதுவீர்களா?
ந.மகேந்திரன்
துபாய்
mail2magee@gmail.com
வணக்கம் மகேந்திரன். நன்றி. அவசியம் எழுதுகிறேன்.
Post a Comment