Wednesday, February 09, 2005

Black

அல்ஸைமரால் பாதிக்கப்பட்ட ஆசிரியருக்கு அவருடைய கண் தெரியாத, காது கேட்காத நாற்பது வயது மாணவி வார்த்தைகளையும் அதன் அர்த்தங்களையும் நினைவுக்குக் கொண்டு வரும் படம்.

நீட்டிய கைகள்... விரித்த விரல்களில் உலகத்தை உணர்ந்து கொள்ள முடியாத... அந்த இயலாமையெல்லாம் மூர்க்கமாய் வெளிப்படுத்தும் எட்டு வயது குழந்தை. கடைசி முயற்சியாக வரவழைக்கப்படும் ஆசிரியராக அமிதாப். முதல் நாளே ஆசிரியரை அப்பாவுக்கு பிடிக்காமல் போய் விட, அம்மா ரகசியமாக கொடுக்கும் இருபது நாள் கெடுவின் கடைசி நாளில் அந்தக் குழந்தை முதல் முறையாக வார்த்தைக்கும் அதன் அர்த்தத்திற்கும் இருக்கும் தொடர்பை புரிந்து கொள்கிறது. பாட்டே இல்லாத இந்த படத்திற்கு இடைவேளை கூட இல்லாமல் இருந்திருக்கலாம்.

தங்கையின் திருமணத்தின் போது உதட்டு முத்தம் தெரிந்து கொள்ளும் ராணி... அதை ஆசிரியர்கிட்டயே கேட்பதும்... அவளுக்காக அதையும் தந்து அவளிடமிருந்து பிரியும் அமிதாப்... ரொம்ப அழகு.

அமிதாப்பிற்கும் ராணிக்கும் குறைவில்லாமல் அந்தக் குழந்தையின் நடிப்பும். படம் பார்க்கும் போது அந்த வாழ்க்கை பயப்படுத்தத்தான் செய்கிறது. அமிதாப்பை படத்தில் மேஜிஷியன் என்று சொல்லும் ராணி முகர்ஜி... நிஜமான மேஜிஷியன் சஞ்சய் லீலா பன்சாலி தான், அங்கங்கே கொஞ்சம் சறுக்கிய போதும்.

நேற்று இரவு பனிரெண்டரை மணிக்கே இதை எழுத தோன்றிய அவசரத்தை நிறுத்து வைத்தது, அப்போது எழுதியிருந்தால் வெறும் உணர்ச்சிக் குவியலா இருந்திருக்கும் என்று தான். ஆனால் இப்போதும் அப்படியில்லாமல் எழுத முடியவில்லை. இந்தப் படத்தை ஒரு தரம் பார்த்தால் போறாது என்று ஏனோ ஒரு தோணல். நிச்சயமா இப்படியெல்லாம் ஒரு வாழ்கை வாழப் போறதில்லை, அட்லீஸ்ட் அந்த இரண்டு மணி நேரமாவது அதை அனுபவிக்க ஆசை, வேறொன்றுமில்லை.

படம் முடிந்து வெளியே வரும் போது இரண்டு பேர் பேசக் கேட்டது.

'படம் எப்படி?'

'No ....'

பதில் தெளிவில்லாததால் முதலாமவர் மறுபடியும் கேட்க, எல்லோரும் கவனிக்கிறார்கள் என்றோ என்னவோ இரண்டாமவர் சொன்னது,

'No comments'

எனக்கென்னவோ அவர் முதலில் சொன்னது No words என்று தான் தோன்றியது. என்னைக் கேட்டிருந்தால் அப்படித்தான் சொல்லியிருப்பேன்.

off the topic: 1. Black Friday பாட்டு இன்னும் கேட்கலை. 2. நேற்று மேக்ஸ் ம்யுல்லர் பவனில் குந்தர் கிராஸ் ஓவியங்கள் கொஞ்சம் பார்த்துட்டு வந்தேன்.

1 comment:

பிச்சைப்பாத்திரம் said...

யாராவது எழுதுவார்களா என்று நான் எதிர்பார்க்கிற விஷயங்களை 'டக்'கென்று நீங்கள் எழுதிவீடுகிறீர்கள். நன்றி.