Monday, May 11, 2015

ஜப்பான் பயணம் - 2

 
இரண்டாவது நாள் காலை அஸாகுஸா கோவிலுக்கு போயிருந்தோம். புராதனமான புத்தக் கோவில். ஞாயிற்றுக்கிழமையானதால் நல்ல கூட்டம். உள்ளூர் ஆட்கள் குடும்பத்தோடு வந்திருந்தார்கள். காகித‌த்தாலோ அல்லது மெல்லிய துணியாலோ செய்த லேண்ட்ர்ண்கள் எல்லா இடங்களிலும் தொங்கவிடப் பட்டிருக்கிறது. இரண்டு பெரிய கழிகளை நிறுத்தி அதில் வெள்ளையில் கறுப்பு ஜப்பானிய எழுத்துகள் பொறித்து தொங்க விடப்பட்டிருந்த லேண்டர்ண்கள் வேண்டுதலுக்காக என்று சியோமி சொல்லித் தெரிந்தது. வழி நெடுக கோவில் வாசல் திருவிழாக்கடைகள், தெருவோர உணவகங்கள், சாவனியர்கள்...




கோவிலுக்கு உள்ளே அரையிருட்டில் தங்கமும் சிவப்பும் மினுமினுக்க இருந்தது புத்தரா என்று தெரியவில்லை. வெளியே இரண்டு புறமும் நம்ம ஊர் போலவே ஜப்பானிய துவாரபாலகர்கள். வாசல் நடுவில் போர்வீரன் போல ஒருவன் வாளோடு நின்றிருக்க அவன் கால்களைச் சுற்றி ட்ராகன்கள் வாயிலிருந்து தண்ணீர் வழிகிறது. சுற்றிலும் வைத்திருந்த நீண்ட கைப்பிடி கொண்ட அலுமினிய கிண்ணத்தில் தண்ணீர் மொண்டு குடிக்கிறார்கள். தீர்த்தம் போல.




அதை முடித்து இம்பீரியல் பேலஸ். ஜப்பானிய ராஜ குடும்பத்தின் தங்குமிடம். உயரமான நவீன கட்டிடங்களுக்கு நடுவில் பழமை மாறாத கோட்டையின் ஒரு புறம் மட்டும் தெரிகிறது. சுற்றிலும் ஆறு போல அகழி. ராஜா குடும்பம் பழைய முறைப்படியான வாழ்க்கைதான் இன்றும் வாழ்கிறார்கள். நோ சினிமா, நோ இன்டர்நெட். குறிப்பிட்ட நாட்களில் நெருங்கிய நண்பர்களோடு தேநீர் விருந்து மட்டும் உண்டு. அயர்ச்சியூட்டும் ஆண் வாரிசு முக்கியத்துவ‌ங்கள்... பெண் குழந்தைகளுக்கு அரசுரிமையில்லை என்று ராஜகுல வழக்கங்களை சியோமி சொல்லிக் கொண்டு போனதெல்லாம் கேட்கும் போது சலிப்பாக இருந்தது.




ஜப்பானின் உயரமான ஸ்கைட்ரீ டவர் வாசல் வரைக்கும் போய் நேரப் பற்றாக்குறையால் மேலே ஏற முடியவில்லை. அதற்கு பதிலாக டோக்கியோ டவரில் ஏறி சுற்றிலும் பார்த்தாகிவிட்டது. பெரும் உயரமான கட்டிடங்களுக்கு நடுவில் ஜப்பானிய ட்ரெடிஷனல் அழகான க‌ட்டிடங்களும் அங்கங்கே.

 

சாயந்திரம் கின்ஸா (Ginza) ஷாப்பிங் ஏரியா, லண்டனின் ஆக்ஸ்போர்ட் ஸ்ட்ரீட்டை ஞாபகப் படுத்தியது. கால் சலிக்க நடக்கலாம்.  பிறகு அகிஹபாரா என்ற எலக்ட்ரானிக் கடல். ஒரு கட்டிடத்தின் ஒரு தளத்தின் ஒரு பகுதியை பார்ப்பதற்க்குள் சியோமி கொடுத்த முக்கால் மணி நேர கெடு முடிந்து விட்டது. எங்கே என்ன இருக்கிறது என்று பிடிபடவே கொஞ்சம் சமயமாகிறது. பேருக்கு அங்கங்கே கொஞ்சம் ஆங்கிலம். மற்றது பூரா பூராவும் பிழிந்து விட்ட ஜப்பானிய எழுத்துகள்.  அரைகுறை ஷாப்பிங். டோக்கியோ முடிந்தது.

அடுத்த நாள் காலை மவுண்ட் ப்யூஜிக்கு. டோக்கியோவிலிருந்து இரண்டரை மணி நேர பயணம். ஐந்தாவது ஸ்டேஷன் வரை பஸ் போகும். அதிர்ஷ்டம் இருந்தால் பார்க்க முடியும். அதற்கு மேலே வெயில் காலங்களில் நடந்து போக ஐந்தரை மணி நேர ட்ரெக்கிங் பயணங்கள் உண்டு என்றெல்லாம் சொல்லியிருந்தார்கள். வழியில் இளைப்பாற‌ நின்ற இடத்தில் பதினாறு பேரும் வரிசையாக ரயில் பெட்டி போல நின்று போட்டோ எடுத்துக் கொண்டோம். கூட வந்த தென்னிந்திய குழுவும் கூட சேர்ந்து கொண்டார்கள். ஒரு கன்னடியர் எங்களுக்கு சென்னை எக்ஸ்ப்ரஸ் என்று நாமகரணம் சூட்டி சந்தோஷப் பட்டுக் கொண்டார்.

வழியிலேயே மேகமூட்டம் எதுவுமில்லாமல் மவுண்ட் ப்யூஜியைப் பார்க்க முடிந்தது. தன்னந்தனியாக ஒற்றை பனிமலையாக நிற்கிறது. பனி மூடிய மலைகளைப் பார்க்கும் போதே வரும் ஒரு பரவசம் அப்போதும்.  பேஸ் ஸ்டேஷனில் ஒரு பத்து நிமிட வீடியோ மவுண்ட் ப்யூஜியை பற்றி. பக்கம் பக்கமாக வெவ்வேறு சமயங்களில் உண்டான நான்கு சிறிய எரிமலைகள் ஒன்று சேர்ந்து இந்த பிரம்மாண்டமான மவுண்ட் ப்யூஜியாகியிருக்கிறது. நாங்கள் பார்க்கும் போது பாதிவரை பனியால் மூடியிருந்தது. அதற்கு மேல் பார்க்க விடாமல் பஸ் கிளம்பி விட்டதால் யூ ட்யூபில் தேடிக் கொள்ளலாமென்று கிளம்பி விட்டோம். சியோமி கொடுத்திருந்த நேரத்தில் பாதியை ஷாப்பிங்கில் செலவாக்கியிருந்தோம். அங்கிருந்த குறிப்பு புத்தகத்தில் தமிழில் எழுதிக் கையெழுத்திட்டு வந்திருக்கிறேன்.



கீழிருந்து மேலே ஏற ஏற ப்யூஜி நெருங்கி வந்து ஐந்தாவது ஸ்டேஷனில் கடைகளும் மற்ற கட்டிடங்களிலும் மறைந்து பிரம்மாண்டத்தை இழந்து விட்டது போலிருந்தது. அங்கே ஒரு சின்ன பழங்கால கோவிலொன்றும் இருந்தது. சுருள்முடியோடு சிங்கங்கள் ரெண்டு வாசலில் உட்கார்ந்திருந்தது. இரைச்சலிலும் கூட்டத்திலும் மவுண்ட் ப்யூஜி காணாமல் போயிருந்தது. ஏரிக்கரையில் நிழல் விழும் ப்யூஜியை படங்களில் மட்டும் தான் பார்க்க முடியும் போல.


அங்கிருந்து கிளம்பி இன்னும் புகைந்து கொண்டிருக்கும் எரிமலையை பார்க்கக் கிளம்பினோம்.  ஓவாகுதானி என்ற அந்த‌ இடத்தில் கிடைக்கும் தண்ணீரில் சல்ஃபர் அதிகமாக உள்ளதால் அந்த தண்ணீரில் வேக வைக்கப் படும் முட்டை கறுப்பு நிறமாக மாறிவிடுகிறது. வெளி ஓடு மட்டும் முழு கறுப்பாக. உள்ளே வழக்கம் போல. அந்த முட்டையை சாப்பிட்டால் ஏழு வருடம் கூடுதலாக உயிர் வாழலாம் என்பது ஜப்பானியர்களின் நம்பிக்கை. வேகவைத்து உரித்து இரண்டாக அறுத்து வைத்திருந்த முட்டையை சாப்பிட தைரியம் வரவில்லை. எகஸ்ட்ரா ஏழுவருஷம் டெம்ப்டேஷன் கூட பலனளிக்கவில்லை. மலையில் அங்கங்கே புகைந்து கொண்டிருக்கிறது. நான்கைந்து கடைகள், சாவனியர்கள், கறுப்பு முட்டை, மலைகளும் வெட்ட வெளியும்.



அங்கேயிருந்த ஒரு கன்வர்ட்டிபிள் காரில் வந்திருந்த இரண்டு இளைஞர்களிடம், ' நீங்க கார்ல இருந்து இறங்கிக் கோங்க. நான் உங்க கார்ல உட்கார்ந்து ஒரு போட்டோ எடுக்கணும்' என்று குஜராத்திக்காரர் நச்சிக் கொண்டிருந்தார். கடைசியில் காரின் வலப்பக்கம் ஒன்று இடப்பக்கம் ஒன்று என்று புதிய வானம் புதிய பூமி ஸ்டைலில் ரெண்டு போட்டோ எடுத்துக் கொண்டார்.  நாங்கள் நகர்ந்த பின்னரும் கெஞ்சிக் கொண்டிருந்தார்.

2 comments:

துளசி கோபால் said...

// அங்கிருந்த குறிப்பு புத்தகத்தில் தமிழில் எழுதிக் கையெழுத்திட்டு வந்திருக்கிறேன்.//

இதைத்தான் பல வருசங்களாக நான் பயணம் போகும் இடங்களில் விஸிட்டர்ஸ் புக் இருந்தால் கட்டாயம் அதில் தமிழில் எழுதிட்டு வர்றேன்:-)

முட்டை தின்னா 7 வருசமா!!!!

Nirmala. said...

ரெண்டு முட்டை சாப்பிட்டா 14 வருஷமான்னு கேக்க நெனச்சேன்.... யாரக் கேக்க?! :-)