Saturday, May 09, 2015

ஜப்பான் பயணம் - 1


ஒரு மாலை டோக்கியோ, நாரிட்டா விமான நிலையத்தில் தொடங்கியது எங்களுடைய ஏழு நாள் ஜப்பான் பயணம். 2003ல் ஒரு கவிதை எழுதியிருந்தேன்.

ஏழு நாள் எனக்கே எனக்காய்

ரெண்டு மாற்றுத்துணி
செலவுக்கு உரைக்க
சின்னதாய் ஒரு அட்டை
ஒரு புத்தகம் ஒரு வாக்மேன்
கஜலாய் ஹரிஹரன்
துள்ளும் ரஹ்மான்
முதுகில் தொங்கும் சிறு பையில்

வீசி நடக்க வேண்டும் எனக்கு.

வெயில் உரைக்காத
துளிர் மழை நாளில்
ஆளில்லாத ரயிலில்
இரண்டாம் வகுப்பில்

ஆச்சா ஆச்சாவெனும்
கணவன்
அலுத்துக் கொள்ளும்
குழந்தைகளின்றி

தனியாய் நான்
அடையாளங்கள்
அத்தனையும் துறந்து

ராத்திரி கறிக்கு
உருளையா அவரையா
பால்காரன் வேலைக்காரி
எல்லாம் மறந்து

வருஷத்திற்கொன்றாய்

லடாக் தஞ்சாவூர்
ஹரித்வார் கோனார்க்
மதுரா காசி மானசரோவர்
நீளும் என் பட்டியல்

எட்டாம் நாள் மறுபடியும்
வட்டத்தில் இருப்பேன்.


இது ஏறக்குறைய அதே போல ஒரு பயணம். அடையாளங்களை மட்டும் துறக்க முடியவில்லை. அதற்கான முயற்சியில் முதலில் இது நடந்திருக்கிறது என்று வேண்டுமானால் சொல்லலாம். பதினாறு பெண்கள் குழு அது. எங்கள் கணவர்கள் வேலை செய்யும்/செய்த இடம் ஒன்று. நாங்கள் இணைந்து ஒரு சமூகசேவை மையம் ஒன்று நடத்துகிறோம்.

ஒரு மணி நேர பயணத்தில் தங்குமிடத்தை அடைந்தோம். இந்தியாவிலிருந்து ஒரு டூர் கைடும் ஜப்பானிலிருந்து சியோமியும்.  அதிகம் நெரிசலில்லாத நீண்ட ரசிக்கக் கூடிய பாதை. ரசிக்க வேண்டாமென்ற இடங்களில் இரண்டு புறமும் மறைத்திருக்கிறது. நல்ல ஆரம்பம்.

ஜப்பானில் முதலில் திகைக்க/பரவசப்படுத்தியது ஜப்பானிய டாய்லெட்கள். இளம் வெதுவெதுப்பான இருக்கை, பக்கத்திலேயே நான்கைந்து பொத்தான்கள். அமுக்கினால் ஒவ்வொரு தேவைக்கும் ஏற்ப தேவையான வேகத்தில் தேவையான இடத்தில் இளம் சூடான நீர் பீச்சியடிக்கிறது. ஓவ்வொரு முறையும் ரெஸ்ட் ரூமிற்கு போகும் போதும் மனமும் உடலும் அதற்காக தயாரானது ஒரு அனுபவம்.

எங்களோடு தென்னிந்தியாவின் வெவ்வேறு இடங்களில் இருந்து வேறொரு குழுவும் வந்திருந்தது. எல்லா இடங்களிலும் எங்களோடே வேறொரு பேருந்தில் வந்து கொண்டிருந்தார்கள்.  கொஞ்சம் பேருக்கு எங்களைப் பார்த்து ஆச்சர்யம். கொஞ்சம் பேருக்கு ஜீரணிக்க முடியாத அசௌகர்யம். குஜராத்திலிருந்து தனியாக வந்திருந்த ஒருவர் தாங்க முடியாமல் கேட்டேவிட்டார். வழி பூராவும் அவருடைய கோமாளித்தனங்கள் சுவாரசியம்.

அதே குழுவில் முதல் நாளே கவனத்தை கவர்ந்தது சென்னை மைலாப்பூரிலிருந்து வந்திருந்த செல்வி. கல் வைத்த தோடும் கணுக்காலுக்கு மேலே உயர்த்திக் கட்டின புடவையுமாக டிப்பிக்கல் சென்னைவாசி. காலையில் ப்ரேக்பாஸ்ட் சம‌யங்களில் தட்டுகளை நிறைத்துக் கொண்டு தள்ளி முட்டி மோதி சாப்பிட்டுக் கொண்டிருந்தார். ஒரு சின்ன ப்ளாஸ்க்கில் காப்பியும் பாட்டிலில் ஜூஸும் நிறைத்துக் கொண்டு, யார் கவனிக்கிறார்கள் என்று கவலைப் படாமல், கொஞ்சம் தள்ளி நின்றுதான் பார்த்துக் கொண்டிருந்தோம். மூன்றாவது நாள் தெரிந்து கொண்ட செல்வி நிச்சயம் வேறாயிருந்தார்.

செல்வி உலகநாடுகள் எல்லாவற்றையும் பார்த்தாகி விட்டது. யூரப் டூர் முடிந்தது. சைனா முடிந்தது. அந்தமான் நிக்கோபார்தான் முதலில் பார்த்ததாம். மகள் அமெரிக்காவில் இருக்கிறார். அப்போது போன போது முழுதாக பார்க்க முடியாததால் தனியாக தலைக்கு நான்கு லட்சம் செலவு செய்து அமெரிக்கா பார்த்தாகிவிட்டது. ஆஸ்திரேலியா நியூசி முடிந்தது. கால்பந்தாட்டம் விளையாடுவாங்களே அந்த ஊர்தான் இன்னும் பாக்கலை... தென்னமெரிக்கவை சொல்கிறார். வீட்டுக்காரர் ரிட்டயர்ட் ஆகி விட்டார். பென்ஷன் வருகிறது. வீடு வாடகைக்கு விட்டிருக்கிறார்களாம்.  பணம் போதாத போது நகையை அடமானம் வைத்து பயணிப்பதும் பிறகு பணம் வரும் போது நகையை மீட்டுக் கொள்வதுமாம். மொத்தமும் டிப்பிக்கல் சென்னை பாஷையில் எதிரில் இருந்த இரு மலையாள தம்பதிகளுக்கும் பக்கத்து டேபிளில் இருந்த எங்களோடும் பகிர்ந்து கொண்ட போது சிரிப்பும் ஆச்சர்யமுமாய் கேட்டுக் கொண்டிருந்தோம். lady with the real attitude!  

No comments: