Thursday, March 12, 2015

ஒரு நாள்...

சமைத்துப் பரிமாறும் நானல்ல நிஜ நான்
வாசல் வந்தவரை உபசரித்தனுப்பும் நான் நானல்ல‌
நட்புகளில் சிரித்துக் களிக்கும் நானும் நானல்ல‌

இந்தக் கட்டத்திலிருந்து அந்தக் கட்டத்திற்கு
லாவகமாக தாண்டியும் நழுவியும் செல்லும்
நுண்கலையை இயல்பாகக் கொண்டிருக்கிறேன்
என்பதாலே நீ காணும் நான் நானல்ல‌

எனக்காக திறக்கும் சிறு வெளிகளை
நானே என் கவசங்களைக் கழற்றி
அடைத்தழித்துக் கொண்டே
நடமாடுகிறேன்

ஒரு புள்ளி ஒரு கணம் ஒரு சொல்
யாரோவின் இயல்பானதோர் செயலால்
உத்வேகம் கொள்ளும் நான்
சிதைத்தழிப்பேன் இச்சுற்றுச் சுவரை

நிற்காமல் ஓடிக் கொண்டிருக்கிருக்கும்
கடிகார முட்கள்
அந்த கணம் நின்று
எனக்காக நான் சொல்லும் வேகத்தில்
துடிக்கத் தொடங்கும்

நான் என் பயணத்தை தொடங்கியிருப்பேன்.

No comments: