1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?
ஆரம்பித்தது நினைவில்லை. நினைவிலிருப்பது - பத்ரகாளி. கோவை ராயல் அல்லது இருதயா தியேட்டரில்.
சரோஜா.
3. கடைசியாக அரங்கிலன்றி பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
வேறெங்கேயும் தமிழ் படம் முழுதாகப் பார்ப்பது ரொம்ப குறைவு.
4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா
மகாநதி. டீவியில் எப்போதாவது பார்க்க கிடைத்தால் பார்க்கவும் முடியாமல், விடவும் முடியாமல் ஒரு அலைமோதல் இருக்கும்.
5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
தாக்கியது எதுவும் இல்லை. இதிலெல்லாம் தாக்கம் வர அனுமதிப்பதில்லை. குஷ்பு விஷயத்தில் கொஞ்சம் கடுப்பானதுண்டு.
தொழில்நுட்ப விஷயங்களை ரசிப்பதோடு சரி.
6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
ரொம்ப மேலோட்டமாக. சிற்றிதழ்கள் கிழிப்பதை சிரிப்போடு சில நேரங்களில். சாருவின் கட்டுரைகளையும் சேர்த்தி. :-)
7.தமிழ்ச்சினிமா இசை பற்றி?
எப்போதும் ரசித்தது. அந்தந்த காலகட்டங்களில் எம்.எஸ்.வி, இளையராஜா, ரஹ்மான், ஹாரிஸ்... எல்லாருமே. சினிமா இசை இல்லாமலிருந்திருந்தால் என்னுடைய மன அழுத்த நேரங்களில் என்ன செய்திருப்பேன்?
8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
எல்லா படங்களும் பார்ப்பதுண்டு. அங்க்லேஷ்வரில் வீட்டுக்கு ரொம்ப பக்கத்தில் இருந்த ஒரு வீடியோ காஸட் லைப்ரரியில் இருந்த எல்லாப் படங்களும் பார்த்து முடித்திருந்தேன். அப்போது நிறைய மலையாளப் படங்களும். கொல்கத்தா போன பிறகு பெங்காலி படங்கள். தற்போது இணையத்திலிருந்து உலகப் படங்கள்.
நினைவிலிருந்து கொண்டு ஒன்றிரண்டு நாட்கள் தொந்தரவு செய்த படங்கள் நிறைய. சட்டென்று நினைவுக்கு வருவது மாத்ருபூமி, ஷக்தி, அந்தர்ஜலி யாத்ரா(பெங்காலி)...
9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
இல்லை.
10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
நிறைய தூரம் போக வேண்டும்.
பெரிதாக எந்த பாதிப்பும் இருக்காது. தமிழர்கள் தவித்துப் போவார்கள்.
இந்தப் பதிவு எழுத ஆரம்பித்தபோது நிறைய விஷயங்கள் நினைவுக்கு வந்தது. சினிமாவும் புத்தகங்களும் எல்லா நேரங்களிலும் கூடவே இருந்திருக்கிறது. எப்படியாவது வாரத்தில் மூன்று நான்கு படங்கள் பார்த்து விடுகிறேன். சொந்த கலெக்ஷனில் உள்ளது, டீவி, நண்பர்கள், மகள் கொண்டு வந்து சேர்ப்பது. ஒரு சுவாரசியமான திரைப்படம் பார்க்கும் போது மெல்ல உள்ளே இழுத்து, எதாவது ஒரு விஷயத்தோடு தொடர்பு ஏற்பட்டு, அந்த இரண்டு மணி நேரம் வேறொரு உலகத்திற்கு போய் விட வைக்கிறது. சில நேரங்களில் திரும்பி வரப் பிடிக்காமல்.
இவ்வளவு சினிமா பார்க்க என் அம்மா முதல் காரணம். அம்மாவுக்கு அந்த நாட்களில் எல்லாப் படமும் பார்க்க பிடிக்கும். நான், கௌரி, அம்மா மூன்று பேரும் தான் சினிமாவுக்குப் போவோம். வீட்டிலிருந்து பெரும்பாலான தியேட்டர்கள் நடந்து போய்விடக் கூடிய தூரம் தான். டிக்கெட், இடைவேளையில் ஒரு கோன் ஐஸ்கிரீம்... ஒரு ஆளுக்கு நாலு ரூபாய். வாரத்திற்கு ஒன்றாவது பார்த்திருந்தோம்.
கல்லூரிக்கு போன பிறகும் கூட எங்களுடைய ஆறு பேர் க்ரூப்பில் யார் வீட்டிலும் சினிமா பார்க்க அனுமதியில்லை. மூன்றாவது செமஸ்டர் ஹோலி பண்டிகைக்காக முதல் முதலாக கட் அடித்து பார்த்த முந்தானை முடிச்சில் ஆரம்பித்து மீதி ஒன்றரை வருடத்தில் பார்த்தது எல்லாம் வீட்டில் அம்மாவோடு ஒருதரம், காலேஜில் கட்டடித்து ஒரு தரம். நாற்பத்தி ஏழு படங்கள் பார்த்ததாக ஒரு லிஸ்ட் போட்டதும், கடைசி செமஸ்டரில் அட்டெண்டென்ஸ் போதாததும் நினைக்கும் போது சின்னதாக ஒரு சிரிப்பு வருகிறது.
டிக் டிக் டிக் பார்த்து வீட்டுக்கு வரும்போது காதல் கடிதம் அப்பாவிடம் மாட்டிக் கொண்டு டோஸ் வாங்கினது, ரிலீஸ் ஆன சமயத்தில் வயது போதாது என்று என்னை கழட்டி விட்டுப் போன தப்புத்தாளங்களை எப்போதுமே பார்க்க முடியாமல் போனது, கட் அடித்துப் பார்த்த நாற்பத்தி ஏழு படங்களின் போதும் இன்னைக்கு மாட்டிக்கப் போறேன் என்று பயந்திருந்த மாதிரி ஒரு தடவை கூட ஆகாதது, ஒரு ஞாயிறு மதியம் முதல் மரியாதை பார்த்துக் கொண்டு இருக்கும் போது கரெண்ட் போய்விட எதிர் வீட்டில் மீதிப் படத்தை முடித்து வீட்டுப் படி ஏறும் போதே 'எனக்கு உள்ளே போரடிக்கிறது' என்று அலார்ம் அடித்ததில் குறைப் பிரசவத்தில் மகளைப் பெற்றெடுத்தது... மறக்க முடியாதது.
வட இந்திய வாழ்க்கையில் அறிமுகமான ராஜ்கபூர், தேவ் ஆனந்த், வைஜயந்தி மாலா படங்களைத் தேடித் தேடி பார்த்தது... எங்கே கலைப்படங்களுக்கு தடம் மாறினேன் என்று நினைவில்லை. அவற்றோடு அதிகம் தொடர்பு கொள்ள முடிந்தது. பிறகு பெங்காலி படங்கள். அதிலே தெரிந்த ரியாலிட்டி, வித்தியாசமான முயற்சிகள், சென்னை நண்பர்கள் அறிமுகப் படுத்திய உலகப்படங்கள்... இத்தனை வருஷங்களில் எத்தனை படங்கள்! சினிமா ஒரு எஸ்கேபிஸம். அம்மாவுக்கும் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும்.
18 comments:
கேள்வி பதிலைப் பார்க்கிலும், அதைத் தொடர்ந்து வந்தது சூப்பர்..
கல்லூரிக்குக் கட்டடித்துவிட்டு 47 படங்கள்? யப்பாஆஆஆஆ
ஆமாம் பிரகாஷ்... கேள்விகள்ல அவ்ளோ 'தம்' இல்லை... அதுக்காக நான் சொல்ல நினைச்சதை சொல்லாம போவேனா?
யா 47! :-)
ஆமாம் பிரகாஷ்... கேள்விகள்ல அவ்ளோ 'தம்' இல்லை... அதுக்காக நான் சொல்ல நினைச்சதை சொல்லாம போவேனா?
//அதுதானே :-)
உஷா... :-)
ஹைய்ய்ய்ய். சூப்பராச் சினிமா பார்த்தாச்சு. அதென்ன நாப்பத்தேழு??
ஐம்பதா முடிச்சிருக்கலாமே.
மகள் சுலபமாகப் பிறந்தாளா. நீ தானா அந்தக் குயில்னு பாட்டுப் படிச்சீங்களா.:)
நிர்மலா,
உங்க எழுத்தை முதல் தடவையாப் பார்க்கறேன். நன்றிங்கோவ்.
வெல்கம் ரேவா... வருஷம் முடிஞ்சு போச்சு... டிகிரியை குடுத்து வீட்டுக்கு அனுப்பிட்டாங்க... இன்சினியரிங் டிகிரியா இருந்திருந்தா சென்சுரி அடிச்சிருப்போம். :-)
ம்ம்ம்... அதெல்லாம் சுகமா பிறந்தாள். எலிக்குஞ்சு மாதிரித்தானே இருந்தாள்!
1. குந்தவி, கௌரி - இவிங்கல்லாம் யாரு? தோழிகளா?
2. லவ் லெட்டரில் என்ன எழுதியிருந்தது என்று சொல்லவேயில்லையே. :-)
3. லவ் லெட்டர் கொடுத்தது யாரு?
4. கல்லூரியில் உங்கள் குருப்பில் இருந்த ஆறு பேர் யார்?
5. "கட்"டடித்துவிட்டுப் பார்த்த 47 படங்களின் பெயர்கள் என்ன?
- ஆகிய முக்கியமான தகவல்கள் மிஸ்ஸிங்-ஆக இருப்பதால் இந்தப் பதிவு போரடித்தாலும், (அந்த முக்கியமான தகவல்களைத் தந்து உதவ முடியுமா? :-) )
"சினிமா ஒரு எஸ்கேபிஸம். அம்மாவுக்கும் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும்" என்ற வரிகள் பதிவைத் தூக்கி நிறுத்துகின்றன.
இன்னொரு கேள்வி பதிலா?! இதோ பதில்கள்...
1.குந்தவி பள்ளித் தோழி. கௌரி பக்கத்து வீடு.
2.எனக்கே மறந்து போச்சு! வழக்கமான bla bla வாகத்தான் இருந்தது.
3. ஒரு பையன். :-)
4. இது அவங்க ப்ரைவசியும் கூட இல்லியா.. அதனால பெயர்கள் மறைக்கப் பட்டுள்ளது.
5. ரொம்ப கஷ்டம்... மெனக்கெட்டால் ஒரு பத்து படம் சொல்லலாம்.
நன்றி பிகேஎஸ். :-)
தாமதமா வந்ததுக்கு சாரிக்கா! மெக்சிகோ சுத்தப் போயிட்டேன் அலுவலக சுத்தலாய்! :)
கல்லூரிக்குக் கட்டடித்து விட்டு 47 படங்கள் தானா? ஒரு அரைச் சதம் கூட இல்லியா? ஐயகோ! நீங்க ரொம்ப நல்லவங்க! :))
//மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா
மகாநதி//
நீங்களுமா?
//சாருவின் கட்டுரைகளையும் சேர்த்தி. :-)//
ஹா ஹா ஹா!
சாருவின் தலையை நீங்களும் உருட்ட ஆரம்பிச்சுட்டீங்க!
//டிக் டிக் டிக் பார்த்து வீட்டுக்கு வரும்போது காதல் கடிதம் அப்பாவிடம் மாட்டிக் கொண்டு டோஸ் வாங்கினது//
இதைத் தனிப் பதிவாகப் போடுங்களேன் ப்ளீஸ் - நே.வி
//சினிமா ஒரு எஸ்கேபிஸம். அம்மாவுக்கும் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும்//
எஸ்கேபிஸித்தில் இருந்து எஸ்கேப்பிஸதுக்குத் தான் எஸ்கேப் ஆக முடியும்! இது இந்தக் கண்ணனின் புதிய கீதை :)
ஸோ, எஸ்கேபிஸம் இஸ் வெல்கம்! :)
கேயாரெஸ்.. இங்க ஒருத்தர் 47க்கு யப்பாங்கறாரு... நீங்க அவ்ளோதானாங்கறீங்க! ரொம்ப ஜாஸ்திப்பா.
மகாநதி... நிறைய பதிவுகள்ல வாசிச்சதால சட்டுன்னு நினைவுக்கு வந்தது. நேரமெடுத்து யோசிச்சா இன்னும் நிறைய மாட்டியிருக்கும். கூட மகாநதியும் தான்.
நே.வி நேரில் :-)
பத்ரகாளியில் 'கண்ணனொரு கை குழந்தை' பாடல் நன்றாக இருக்கும்.
அதே போல 'கேட்டேளே அங்கே அதைப் பார்த்தேளா இங்கே' பாடல் அப்போது ஹிட்.
அந்த வசனம் திருப்பித் திருப்பி பேசப்படும்.
///சினிமா ஒரு எஸ்கேபிஸம். அம்மாவுக்கும் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும். ///
படிப்பது, வேறு ஏதேனும் வேலை செய்வது.... இதுபோன்ற எல்லாவற்றையும் கடந்து, இசையும், சினிமாவும் எல்லோருக்குமே அப்படித்தான் சிறந்த எஸ்கேப்பிஸமாக இருக்கும்.
அப்படி (கலைதாகம்) ரத்தத்துடன் ஒன்றிப்போன விஷயமாகி விட்டது:)
அதென்ன சரியாக 47 சினிமா கணக்கு நிர்மலா.
முன்னே பின்னே 1, 2 கூட குறைய இருக்கப் போகிறது:)
///நே.வி ///
நே.வி என்றால் என்ன?????
மது... கணக்கில்லாத வெட்டி அரட்டைகள்ல இந்த கணக்கும் போடற வெட்டி அரட்டையும் நடத்தியதில் 47 வந்தது. :-)
பத்ரகாளி பார்த்து பயந்து போனதால அது ஞாபகம் இருக்கு. நம்ம சினிமா ரிப்பன் கட்டிங்கெல்லாம் அதுக்கு முன்னாலெப்பவோ ஆயிருக்கும்.
நே.வி - நேயர் விருப்பம் :-)
Nice way of writing i like it very much.
I had added your blog into my favorites keep post more...
dats nice friend :-)
Post a Comment