சில நாட்களுக்கு முன் ஒரு மாலை சமைக்க ஆரம்பிக்கும் போது ஐபாடிலிருந்து தேடிக் கேட்க ஆரம்பித்தது Ada. ரஹ்மானின் சமீபத்திய ஹிந்தி மூவி ஆல்பம். Ishq Ada Hai என்று தொடங்கும் பாடல் ஆண் குரலில் ஒன்றும் பெண் குரலில் ஒன்றுமாய். இரண்டும் முற்றிலும் வேறு வேறு அனுபவம். ஆண் குரல் கனமாக, அதுவே ஹஸ்கியாக, ஒரு பெரிய மேடையில் தன்னந்தனியாக நின்று கொண்டு hey look at me, i am singing என்று இழுத்துக் கட்டிப் போடும் குரல். அதிர அதிர நிறைக்கிறது. கேட்டுக் கொண்டிருக்கும் போதே முன்னால் இருக்கும் காய்கறி, சமையலறை எல்லாம் மறைந்து போய் வெறும் அந்தக் குரலும் நானும் மட்டும். இது தான் தேடுவதும், சில சமயங்களில் வாய்ப்பதும். தொடர்ந்த பாடல்களில் சோனு நிகம் குரலும், ரஹ்மானுமாய் ஓடிய சிந்தனையை துரத்திய போது...
ரங்கீலா, தால், ரோஜா... ரஹ்மான் - ஹரிஹரன் ஜோடி, ரஹ்மான - சோனு நிகம், காந்திதாமில் ராத்திரி நேர ட்ரைவ் முடித்து காலியாய் கிடக்கும் சாலையின் ஓரத்தில் காரை நிறுத்திக் கேட்ட ஏதேதோ பாடல்கள்... தில் ஸே படத்தின் 'ஏ அஜ்னபி'யில் மட்டும் தான் கேட்கவே விரும்பாத உதித் நாரயணை ரசிக்க முடிந்தது.... fiza படத்தின் 'து ஹவா ஹை' சோனு நிகம்... ஏதோ ஒரு ஆல்பத்தின் இரண்டு பக்கமும் வரும் ஒரு அருமையான பாடலுக்காக திரும்பத் திரும்பக் கேட்டதும், வேறு வழியில்லாமல் காரில் அடைபட்டு எங்களோடு கேட்க நேர்ந்ததில் தமிழ், ஹிந்தி பாடல்களே பிடிக்காமல் போனதாக பின்னெப்போதோ மகன் சொன்னது... இப்போதும் மிச்சம் இருப்பது அந்த மோன நிலையும் அது தந்த சந்தோஷமும் மட்டும்....
கௌரி... வாலிப வயதில் நாங்கள் ரெண்டு பேரும் சேர்ந்திருந்தது ரெண்டு பேருக்குமே பெரிய கொடுப்பினை. எல்லாவற்றிலும் எதிர் எதிரான எங்களை இணைத்திருந்தவை கமல்ஹாசன், பாலகுமாரன். முப்பது பைசா பாட்டு புத்தகம் ஐநூறு அறநூறு வைத்திருந்தாள். எண் போட்டு எதோ ஒரு வரிசையில். காலையில் எட்டு இருபதுக்கு கோவை வானொலியில் பாட்டு போடத் தொடங்கும் போது ஜன்னல் பக்கத்தில் புத்தகக் கட்டோடு தயாராக நின்று கொண்டிருப்பாள். முதல் பாட்டு பேர் சொல்லி ஆரம்பிக்கும் போது புத்தகத்தை தேடி எடுத்து பாட்டோடு சேர்ந்து பாட ஆரம்பித்தால் சுற்றி நான்கைந்து வீடும் அவள் பாட்டையும் சேர்த்து கேட்கும். சரியாக எட்டே முக்காலுக்கு புத்தகத்தை மூடி வைத்து விட்டு ஸ்கூலுக்கு கிளம்பியாயிருக்கும். அவளுடைய குரலுக்கு முன்னால என் குரலெல்லாம் எழும்பவே நினைத்ததில்லை! கல்யாணமாகி பாஷை தெரியாத ஊருக்கு போய் கணவரும் கிளம்பிப் போன யாருமில்லாத வீட்டில் தான் அந்த குரல் வெளியே வர துணிந்தது. ஆசைக்காகவாவது கொஞ்சம் பாடிக் கொள்ள.
கௌரியிலிருந்து... மூன்று மாதம் பாட்டு சொல்லிக் கொடுத்த பூர்வர்ஷா... உனக்கு சங்கீதமே தெரியாதும்மா, ஆனா ரசிக்கத் தெரிஞ்சு வச்சிருக்கே என்று கொட்டி தட்டிக் கொடுத்த நண்பர் சக்ரபாணி, எண்பதுகளின் இளையராஜா, ஹரிஹரனை முதல் முதலாக கஜல்களில் அறிமுகம் செய்து கொண்டது, அஹமதாபாத் தெருக்களில் தேடி அலைந்து வாங்கிய லதாவின் மீரா பஜன், எண்பத்தி எட்டில் தூர்தர்ஷனில் தவறாமல் பார்த்த 'சாதனா'... அப்பாவுக்கு ரொம்ப பிடித்த அபூர்வ ராகங்கள்... திரும்பத் திரும்ப கேட்க வைத்து உள்ளே இழுத்துப் போட்டது.... வீட்டில் முதல் முதலாக வாங்கியிருந்த ஸ்டீரியோவில் ஸ்டீரியோ இபெக்ட் புரிய வைக்க முயன்றது... புரியாத போதும் அவருக்காக மையமாக தலை ஆட்டியது... இன்னும் முன்னால்... மத்யாண நேரம் காற்றுக்காக கதவுக்கு பக்கம் படுத்து தூங்கும் போது பக்கத்தில் படுக்கப் போட்டு அம்மா மெல்லிய குரலில் எதாவது தாலாட்டு பாடியிருக்கலாம்...
Ishq Ada Hai ... பெண் குரல் பாட்டு யோசனையை நிறுத்தி மறுபடியும் ஆல்பத்திற்குள் இழுத்து வந்தது. ஆண் குரலைப் போல ஆளுமையெல்லாம் இல்லாமல் அமைதியாகத் தொடங்குகிறது. குரலிலும் பெரிய வசீகரமில்லை. மெல்ல ஒரு வேகம் கொண்டு ஒரு சூபினஸுடன் போதையூட்டி கிறங்க வைக்கிறது. மீண்டும் மீண்டும் தேடச் சொல்லும் போதை. வேறேதும் தேவையிருக்கவில்லை...
2 comments:
இனிமையான நினைவுகள்!!
ஆம் Ishq Ada Hai அருமையான பாடல். இதே ஆல்பத்தில் "ஹவா சுன் ஹவா' என்ற பாடலும் அருமையாக இருக்கிறது. ஆழ்ந்து யோசித்ததில், இப்பாடல் காதல் வைரஸ் படத்தில் வரும் "எந்தன் வானின் காதல் நிலவே" பாடலை ஒத்திருப்பதை உணர முடிந்தது.
ஆமாம் பரத். சொல்லப் போனால் அந்த 'ஹவா சுன் ஹவா' சோனு நிகம் குரலில் இருந்து தான் இந்த யோசனை ஓட்டமே தொடங்கியது. :-)
நன்றி.
Post a Comment