Friday, May 30, 2008

இன்னொரு பயணம்...

இறங்க வேண்டிய நிறுத்தம்
நெருங்கிக் கொண்டிருக்கையில்
வழிமறித்து பக்கத்திருக்கையில் வந்தமர்ந்தாய்
தாண்டிச் செல்வது
கணநேரத்தில் சாத்தியமென்றாலும்
நகராமல் கட்டிக் கிடக்கிறேன்

நித்தமும் பழகிய பாதையில்
கண்ணிற்கு நழுவிய காட்சிகளை
பக்கத்திலிருந்து காட்டுகிறாய்

மறந்து விட்ட கனவுகளை
ஒவ்வொன்றாய்
விரல்களை ஊசியாக்கி
பொறுக்கியெடுத்து கோர்க்கிறாய்
வாசனை பரவுகிறது

உள்ளோடும் இசையை
உணர்ந்திருந்தேனென்றாலும்
நானேயொரு வாத்தியமென்று
தெரிந்திருக்கவில்லை
உன் விரல் தீண்டும் வரை

கட்டுகள் தளர்த்தி
களியாட்டமாகிறது
பின்பாயும் காலத்தின் வேகம்
பரவசம் நிறைக்கிறது
விலக்கிக் கொள்ளாமல் தடுமாறுகிறேன்

மோனத்திற்கும் நிஜத்திற்குமாய்
வீசியாடும் ஊஞ்சல்
மோனத்திலே நிலை கொள்ள துடிக்கயில்

தவிர்த்திருக்க முடியாத திருப்பத்தில்
சிறியதோர் குலுக்கலுடன்
முடிவுக்கு வரும் பயணம்
கனவுகளைக் கலைத்ததா
கலைந்ததற்கான ஆட்சேபனையா
யோசிப்பதில் ஆர்வமில்லாதிருக்கிறது

தேர்வு செய்யவோர் வாய்ப்பு
கொடுப்பது போல் கொடுத்து
தெரிவாக்க மறுக்கப் பட்ட
சந்தர்ப்பம் நீ

சந்தோஷித்தேனா துக்கம் கொண்டேனா
புரியாததோர் வெளியில்
மிதந்து செல்கிறேன்
கால் பாவும் போது
வெடித்து வடியப் போகும்
எரிமலையை சுமந்து கொண்டு.

நன்றி : வார்த்தை.

8 comments:

Venkata Ramanan S said...

nalla thervu :)

Nirmala. said...

யாருடையது ரமணன்?!

ஜெபா said...

நல்ல கவிதை.....

நன்றி....

லேகா said...

அன்புள்ள தோழிக்கு,
உங்கள் வலைத்தளம் ஒரு புதிய வாசிப்பு அனுபவத்தை தந்தது... தமிழில் எழுதும் பெண்வலைஞர்கள் குழுவில் இணைய எனக்கு பெரும் ஆர்வம்..அதற்கான வழிமுறைகளை கூறவும்.
எனது மின்னஞ்சல் முகவரி : yalisairl@gmail.காம்
எனது வலைதள முகவரி : http://yalisai.blogspot.com/

Nirmala. said...

நன்றி ஜெபா...

Nirmala. said...

நன்றி தமிழ் பையன்.

யாரோ said...

//
உள்ளோடும் இசையை
உணர்ந்திருந்தேனென்றாலும்
நானேயொரு வாத்தியமென்று
தெரிந்திருக்கவில்லை
உன் விரல் தீண்டும் வரை//

அழகு அழகு உணர்வு வெளிப்பாடு அழகு..தொடர்ந்து எழுதுங்கள் ...
நானும் ஒரு வலைபூ வளர்க்கிறேன் பாருங்களேன் ...
valaikkulmazhai.blogspot.com
- கார்த்தி

Nirmala. said...

நன்றி கார்த்தி.