Friday, June 22, 2007

என்னுடைய எட்டு!

பள்ளிக்கூட நாட்களில் இருக்கும் இடம் தெரியாது... எந்த அளவு என்றால், ஆறாவது வகுப்பு பெற்றோர் சந்திப்பில் அம்மா, 'பொண்ணு எப்படிங்க?' என்று கேட்க, டீச்சர் இந்தப் பொண்ணு யாருன்னு ஒரு நிமிஷம் யோசிச்சு, நீ எந்த இடத்திலே உட்காருவே? ன்னு கேட்டும் நான் யாருன்னு தெரியாத அளவுக்கு! அப்புறமும் என்னோட இருப்பை நிலைநாட்ட எந்த முயற்சியும் எடுத்ததில்லை... இல்லைன்னு சொல்றதை விட என்ன செய்யனும்னு தெரியலை. கூட்டுக் குடும்பம்... ரொம்ப சாதாரணமான படிப்பு, பாஸானாலே சந்தோஷப்பட்டுட்டு இருந்த அக்காக்களுக்கு நடுவில் ஒன்பதாவது வகுப்பு வரை அப்படியே ஓடி... லீவ் வேகன்ஸிக்கு வந்த ஒரு இளம் ஆசிரியையின் சுவாரசியமாக படிக்க வைக்கும் சாமர்த்தியத்தில் எதிர்பார்க்காத மார்க்குகள் வாங்க ஆரம்பித்தது... அந்த போதையிலே மயங்கி படிக்கத் தொடங்கியது... பத்தாவது வகுப்பில் 443 வாங்கினது, மாநிலத்தில் முப்பத்தி ஒன்றாவது இடம், ஸ்காலர்ஷிப்பிற்கு தகுதியிருந்தால் விண்ணப்பிக்கவும் என்ற சர்டிபிகேட்டை ஊரெல்லாம் காட்டி சந்தோஷப்பட்ட அப்பா... முதல் பெரிய சந்தோஷம்.

வீம்புக்காக சேர்ந்த கம்ப்யூட்டர் கோர்ஸ்... படிப்பை விட்டு பதினோரு வருடம் ஆகிவிட்டிருந்தது... முதல் இரண்டு மாதம் சிஸ்டம் தடவின கதையெல்லாம் வெளியே சொல்ல முடியாது! தொண்ணூறு சதவிகிதம் கல்லூரி மாணவர்கள் கொண்ட இரண்டு பேட்ச், நூற்றைம்பது பேரில் முதலாவதாக வந்தது... சிடுசிடு மேனேஜர் மார்க்கெட்டில் பார்த்து சிரித்துக் கொண்டு சொன்ன போது... வாவ்!

இரண்டு வருட ஆசிரியர் பணி... எனக்கு என்னவெல்லாம் முடியும் என்று என்னை எனக்கே அடையாளம் காட்டின நாட்கள்.

யாருடைய குறுக்கீடும் இல்லாமல் வளர்த்தின பிள்ளைகள்... ஒரு கட்டத்திற்கு மேல் என்னை திணிக்காமல் வளர்த்தியது... நிறைய மாற்று கருத்துகள் எதிர்கொண்ட போதும், இன்னைக்கு ஐயாம் ஹாப்பி!

எந்த இலக்கும் வைத்துக் கொள்ளாமல் என் திருப்திக்காக மட்டும் எழுதப்படும் என் எழுத்து.

இரண்டு தரம் டிரைவிங் ஸ்கூலில் பயிற்சி பெற்றும் கார் ஓட்ட டிமிக்கி கொடுத்துக் கொண்டே இருப்பது, சமீப காலத்தில் புதிதாக ரெஸிபி எதுவும் கற்றுக் கொள்ளாமல் மசாலா பிராண்ட் மாற்றி, தக்காளியைக் கூட்டி குறைத்து என்னவோ புதுசா சமைச்சிருக்கற மாதிரி ஒரு பில்டப் கொடுப்பது, பேசியே காரியத்தை சாதிப்பது.

கட்டாயம் தர்ம மாத்து விழும்... ஆள் நகர்ந்ததும் கேலி செய்து சிரிக்கப் போகிறார்கள்... இப்படி பிழைக்கத் தெரியாம இருக்கியே... இது போன்ற சந்தர்ப்பங்களில் செய்ய நினைத்ததை மறு யோசனை இல்லாமல் செய்தது.

கல்யாணம் முடித்து டிரெயின் ஏறின எனக்கும் இன்றைய நானுக்கும் இருக்கும் வித்தியாசம்... தன்னம்பிக்கை, மினிமம் டிபெண்டன்ஸி, இளமையாக்கி வைத்திருக்கும் மனது, என் ரசனைகள், என் தேடல்கள்... எனக்கு என்னை ரொம்ப பிடித்திருக்கிறது.

எழுத உட்காரும் போது கூச்சமாக இருந்தாலும், ஆரம்பித்த பின் எட்டு மட்டும் என்பதால் நிறைய வெட்ட வேண்டி வந்தது. மொத்த நாளையும் ரீவைண்ட் பண்ணி அதிலே எல்லா நல்லதையும் பொறுக்கி எடுக்கும் போது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. சந்தோஷத்தைக் கொடுத்த பத்மாவுக்கு நன்றி. யாரெல்லாம் ஏற்கனவே அழைக்கப் பட்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை! என் சாய்ஸ்...

துளசி
ஓசை செல்லா
தமிழ் நதி
ஜி.ராகவன்
சந்திரவதனா
ஆசிப்
மதுமிதா
அய்யனார்

விளையாட்டின் விதிகள்:

1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும் (Players start with 8 random facts about themselves.), அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.

2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.

3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்

22 comments:

துளசி கோபால் said...

ஆஹா.........நிர்மலா!

எப்படி இருக்கீங்க?

எட்டில் ஒன்றா?

நாலைஞ்சு நாள் நேரம் எடுத்துக்கவா?

எதாவது இருக்கான்னு பண்டோரா பாக்ஸ் திறந்து பார்க்கணும்:-)

icarus prakash said...

//ஆரம்பித்த பின் எட்டு மட்டும் என்பதால் நிறைய வெட்ட வேண்டி வந்தது.//

எட்டோட நிறுத்திக்கணும்னு ரூல் போட்டவங்கள ஆச தீர நல்லா வெய்யணும் போல இருக்கு

Nirmala said...

ஜோரா இருக்கேன் துளசி... உங்களுக்கு இல்லாத நேரமா?! சௌகரியம் போல எழுதுங்க.

ப்ரகாஷ்... நிறுத்தச் சொல்லலைன்னா தாங்குமா?! :-)

பத்மா அர்விந்த் said...

நன்றி நிர்மலா.

G.Ragavan said...

அழைப்பிற்கு நன்றி நிர்மலா. கண்டிப்பாக எழுதுகிறேன்.

எட்டு எட்டா எடுத்து வெச்சிருக்கீங்க. சூப்பரு.

Nirmala said...

உங்களுக்கு தான் நன்றி சொல்லனும் பத்மா. இந்த இரண்டு நாளா எத்தனை விஷயங்களை யோசிக்க கிடைத்தது!

எழுதுங்க ஜி.ரா. நன்றி.

ஜெஸிலா said...

எப்படி மொத்தத்தையும் எட்டுக்குள்ள சுருக்க முடியுது? அந்த சமையலை பற்றி எழுதியிருந்த திட்டம் கலக்கல் ;-)

Nirmala said...

ஜெஸிலா, அதை ஏன் கேக்கறீங்க... அது பாட்டுக்கு ஓடிட்டே இருந்துச்சு... எல்லாம் முடிச்சு தயவு தாட்சண்யம் இல்லாம் வெட்ட வேண்டியதாயிடுச்சு!

G.Ragavan said...

நீங்க சொன்ன மாதிரி எட்டு பதிவு போட்டாச்சு.

http://gragavan.blogspot.com/2007/06/blog-post_23.html

Nirmala said...

நன்றி ஜி.ரா.

Chandravathanaa said...

நன்றி நிர்மலா.
சொல்லிக் கொள்ளும் படியாக எதையும் நான் சாதிக்கவில்லை.
அதனால் என்ன எழுதுவதென்றும் தெரியவில்லை.
எழுத முடியுமா எனப் பார்க்கிறேன்.

Nirmala said...

அங்கங்கே இப்படி ஒரு புரிதல் கண்ணில் பட்டது சந்திரவதனா... எனக்கென்னவோ இதை சாதனை என்று நினைப்பதை விட... நமக்கு நம்மைப் பற்றி திருப்தி அளித்த நிகழ்வுகள்... அது நமக்கு பெரிய விஷயம் இல்லையா?!

முதல் முதலாக ப்ரகாஷ் பதிவு படித்த போது, யாராலும் அழைக்கப்படும் முன்னமே நான் எனக்காக மனசுக்குள் அசை போடத் தொடங்கிவிட்டேன்... அதுவே சந்தோஷமாக இருந்தது.

ரொம்ப நீளமா லெக்சராட்டம் போயிடுச்சு! :-)

மதுமிதா said...

எட்டு போட்டு லைசன்ஸ் வாங்கிட்டீங்க நிர்மலா

மாட்ட வெச்சிட்டீங்களே எப்போ லைசன்ஸ் வாங்கப்போறேனோ தெரியலயே

கொஞ்சம் தாமதமானா பரவாயில்லையா

Nirmala said...

ஹேய் மது... ஊர்லதான் இருக்கீங்களா?! பார்க்கவே இல்லையோன்னு நினைச்சேன்! நம்ம இஷ்டம்ப்பா... எப்போ வேணாலும் எட்டுப் போடலாம்! லைசன்ஸ் வாங்கிக்கலாம்!

Chandravathanaa said...

உங்கள் அழைப்புக்கு இணங்க எனக்கு எட்டிய எட்டுக்கள்.

மதுமிதா said...

8 போட்டாச்சு நிர்மலா:-)

காரூரன் said...

உங்க ஊர்ல எட்டு போறது கேள்விபட்டிருக்கின்றேன். இணையத்திலுமா?, எங்கள் நினைவுகளையும் அசை போட வைக்கும் ஒரு முயற்சி. நானும் என் பட்டப் படிப்பை தமிழ்நாட்டிலை தான் முடித்தேன். எனது புலொக் இன் முகப்பு படம் நான் படித்த கல்லூரி. உஙகள் ஒவ்வொருவருடைய எட்டுக்களையும் ஒவ்வொன்றாக வாசிக்கின்றேன்.

Nirmala said...

nice to know friend... cudnt read ur comment properly n ur name too! accessing in net cafe... tks... hope to read ur comment properly soon n visit ur blog too.

OSAI Chella said...

ha ha இது என்ன கலாட்டா. ஜூன் மாசம் கூப்பிட்ட பதிவு இன்னைக்கு தமிழ்மணத்திலே! தோழியரே ஒன்னுமே புரியலே! நீங்க கூப்பிட்டதும் எனக்கு இன்னைக்குதான் தெரியும்! கட்டாயம்எட்டு போடணுமா இப்ப?! இல்லை இது தமிழ்மண சிறு கோளாறா? தெரிவித்தால் நலம்!

அன்புடன்
ஓசை செல்லா

Nirmala said...

இவ்வளவு மறதியா?! போனாப் போட்டும்... விட்டுடுங்க செல்லா! :-)

ஜோதிபாரதி said...

நல்ல பதிவு. தனது வாழ்க்கை பயணத்தின் சேமிப்பு.


அன்புடன் ஜோதிபாரதி

Nirmala said...

நன்றி ஜோதிபாரதி.