Wednesday, May 16, 2007

ஓ! கொல்கத்தா!

'இன்னொரு' என்று சொல்ல முடியாமல், கடைசி என்று சொல்ல வைக்கும் கொல்கத்தா பயணம். போன தடவையே கடைசியாயிருக்க வேண்டியது! எங்களுக்குள்ளே இன்னும் கொஞ்சம் மிச்சம் மீதி இருக்கிறது போலிருக்கிறது.

ஒவ்வொரு தரமும் கொல்கத்தா வரும் போது விழித்துக் கொள்ளும் எல்லா விஷயங்களும் சென்ற முறையும், ஒரே மாத இடைவெளியில் இந்த முறையும் தவறாமல் நடந்து கொண்டிருக்கிறது. இந்த விழித்துக் கொள்ளும் சமாச்சாரங்களால் வரும் அவஸ்தைகளும். சென்னையில் ஏதோ யோசனையோட போகும் பயணங்களும் இங்கே வரும் போது கவனத்தில் வரும் சின்னச் சின்ன விஷயங்களுமாய்... மரங்களும் மனிதர்களும் கூடுதல் கவனம் பெறுவதும்... சாத்தியமேயில்லை என்று மறந்தே போயிருந்த சங்கதிகளை மறுபடியும் முயற்சி செய்வோமா என்ற உந்துதல்களும்... பத்து நாளைக்கு முன்னால் வாசித்த புத்தகங்களும், பார்த்த சினிமாக்களும், வெறும் பொழுதுகளில் ஓடும் யோசனைகளும் மெதுவாக மாறி வேறு நிறமாவதை ஒவ்வொரு முறை போல இந்த முறையும் அதே ஆச்சர்யத்தோடு கவனிக்கிறேன். இந்த ஊர் என்னவோ செய்கிறது!

மிச்சம் மீதி கொல்கத்தா ஞாபகங்கள்...

மூன்று வருஷம் முன்னால், கொல்கத்தா வந்து நான்கைந்து நாட்கள் தான் ஆகியிருந்தது... ஒரு விண்ணப்பத்திற்கான போட்டோவிற்காக ஸ்டூடியோ தேடி, தெரியாத தெருக்களில் இலக்கில்லாமல் அலைந்தது... யாரோ வழி சொல்லி நுழைந்த தியேட்டர் ரோடு 'Samir dass' ஸ்டூடியோ... சுவரெல்லாம் கறுப்பு வெள்ளை க்§ளாஸப் புகைப்படங்கள்... கொஞ்சம் ஆர்வமும் நிறைய தயக்கமுமாய் குரல் கொடுத்தது... யாரும் வராததால் வேறெங்கோ போய் அப்போதைக்கு காரியத்தை முடித்து விட்டாலும், இப்போதும் அந்தப் பக்கம் போகும் போது அதே ஆர்வம் தலைதூக்குகிறது. எப்போதும் போனதில்லை. ஒருவேளை இனிமேலும்!

'பரினீதா' படம் பார்த்த ஜோரில் அந்த ஓலையில் மூடிய படகுகளைத் தேடியது... விசாரித்தபோது 'அதெல்லாம் இப்போ கிடையாது, சினிமாவுக்காக செய்திருப்பாங்க' என்று சொல்லி ய¡ரோ நம்ப வைத்ததும்.. மறந்தே போய் விட்ட ஒரு நாள் அசந்தர்ப்பமான வேளையில் எங்கோ போய்க் கொண்டிருந்த போது திடீரென கண்ணில் பட்ட அந்த நினைவு மண்டபம்... ஜேம்ஸ் ப்ரின்ஸெப்... கொல்கத்தாவிலும் காசியிலும் ஊர் நிர்மாணத்தில் முக்கியமானவராய் இருந்தவர் நினைவாக அந்த நாளைய கொல்கத்தாவாசிகளால் கட்டப் பட்டது... படத்தில் சை·ப் பிய¡னோ வாசிக்க, வித்யா பாலன் பாடும் அதே மண்டபம்... பகல் நேரத்தில் ஒரு அழகு, ராத்திரி நேரத்தில் வேற மாதிரி... அங்கிருந்து காலாற நடந்தால் படகுத்துறை... அதே பரினீதா படகுகள்... ராத்திரி நேரத்தில் ஒற்றை லாந்தர் எரிய, கங்கையில் படகு சவாரி... சொர்க்கம்! கூட வருகிறவருக்கு கெரசின் வாசம் அலர்ஜி இல்லாம பார்த்துக் கொள்வது அவசியம்!:-)

காளிகாட்டில் இந்த முறை...

கணக்கில்லாத பலிகள்... ரத்தம் சொட்டும் அந்த பீடத்தில், பலிகளுக்கு நடுவில் தன்னுடைய தலையையும் அதே போஸில் வைத்து பக்திப் பரவசமாகும் மக்கள்.

கோவில் காம்பவுண்டிலேயே ஒரு ஓரத்தில் அமைதியாக ஒளிந்திருக்கும் ஏசு புகழ் பாடும் 'நிர்மல் ஹிருதய்' மதர் தெரஸா ஆசிரமம்... கடைசி நாட்களை எண்ணிக் கொண்டிருப்போரும், நடமாட முடியாதவர்களுமாய்... வெள்ளைத் தோல் இளம் வயது வாலண்டியர்கள்... அங்கிருந்த ஒரு கால் மணி நேரத்தில் பார்த்தது... மலஜலம் கழிப்பித்தல், ஷேவிங், உடுப்பு மாற்றல், குடிக்கக் கொடுப்பது... எல்லா வேலைகளையும் சிரித்த முகத்தோடு செய்பவர்களைப் பார்க்கும் போது... எப்போதும் போல 'நான் வேஸ்ட்' என்ற யோசனை... நன்கொடை சமாளிப்புகளில் உறுத்தல்கள் தான் மிச்சம்.

காலை பத்து மணிக்கு வேர்வை கசகசப்பில் சலித்துக் கொள்ளும் மார்க்கெட், வெயிலில் காயும் காய்கறிகள், கன்னா பின்னா நெரிசல்... இதற்கெல்லாம் சம்பந்தமே இல்லாமல் உறுத்தும் மேக்கப்பில் குடை நிழலில் காத்திருக்கும் பாலியல் தொழிலாளர்கள்... காளிகாட், சோனார்காச்சியின் சிஸ்டர் கன்சர்ன்... காலை நேரத்திலேயே சுறுசுறுப்பாயிருக்கிறது. கொள்வாரிருப்பதால் கடை!

ஒவ்வொரு தரம் காளிகாட் போகும் போதும் அந்த இடம் unfold ஆகி எதையாவது புதிதாகக் காட்டுகிறது... இது எல்லா இடங்களிலும் நடப்பதில்லை... அதனாலேயே திரும்பத் திரும்பப் போக வேண்டும் என்ற உந்துதல்.

கை நிறைய பெங்காலி படங்களாய் அள்ளிக் கொண்டு வந்து கிடக்கிறது. 'மெதுவா பார்த்துட்டு குடுங்க' என்று கடைக்காரர் மனமுவந்து கொடுத்ததில் மூச்சு திணறாமல் பார்க்க முடிகிறது. நேற்று பார்த்த முதல் படம் ஊத்திக் கொண்டது. இரண்டாவது படம்... Parama... பிடித்திருந்தது.


தொடரும் உத்தேசமிருக்கிறது....

15 comments:

Boston Bala said...

mmm :)

Nirmala. said...

பாலா.. :-)

G.Ragavan said...

கொல்கொத்தா...ஒரு ஆச்சர்ய நகரம்...ஆமாம். அங்கு செல்கின்றவர்களுக்கு அது கண்டிப்பாக புரியும். குறைந்தது ஒரு வாரமாவது தங்கியிருக்க வேண்டும். அப்பொழுதுதான் அங்கு பொதிந்திருக்கும் வியப்புகள் புரியும். சுவாசிக்கச் சுவாசிக்க நேசிக்கத் தொடங்கி விடுவீர்கள். உங்களுடைய அந்த நேசிப்பு புரிகிறது.

எனக்குக் காளிகாட்டை விட தொக்கினேஷ்வர் பிடிக்கும். காளிகாட் நம்மூர் கோவில்களைப் போல காசுவியாபாரிகள் நிறைந்திருக்கிறது.

Nirmala. said...

ஆமாம் ராகவன்... எத்தனை பார்த்தாலும் சலிக்கறதேயில்லை! கடைசியா அங்கே ஒருதரம் போகனும், இங்கே போகனும்னு லிஸ்ட் நீண்டுட்டேயிருக்கு.

------------------
எனக்குக் காளிகாட்டை விட தொக்கினேஷ்வர் பிடிக்கும்.
------------------
உள்ளூர்காரங்களே இப்படி சொல்றதைக் கேட்டிருக்கேன். ஆனாலும் எனக்கு காளிகாட் தான். 'தொக்கினேஷ்வர்'... டிபிகல் பெங்காலி உச்சரிப்பு...!

ரவி said...

Ami....

Good Post, Keep Writing...

Nirmala. said...

நன்றி ரவி.

Ayyanar Viswanath said...

கொல்கத்தா போனதில்லைனாலும் city of joy படம் அங்கயே வாழ்ந்த ஒரு உணர்வை தந்தது.

/'பரினீதா' படம் பார்த்த ஜோரில் அந்த ஓலையில் மூடிய படகுகளைத் தேடியது... விசாரித்தபோது 'அதெல்லாம் இப்போ கிடையாது, சினிமாவுக்காக செய்திருப்பாங்க/

ஆஹா :)

Nirmala. said...

அய்யனார்... 'city of joy' புத்தகம் வாங்கி வாசிக்காமல் இருக்கிறது! படம் பற்றி கேள்விப்பட்டதில்லை :(

இங்கே கனெக்ஷன் படுத்துவதால் படம் எதும் லோட் பண்ண முடியவில்லை!

Ayyanar Viswanath said...

city of joy 1992 ல வந்தது.ஓம்பூரி ஷபானா ஆஸ்மி எல்லாம் நடிச்ச ஆங்கில படம்.ஒரு அமெரிக்க டாக்டர் கல்கத்தா வில சந்திக்க நேரிடுற அனுபவங்கள்தான் இந்த படம்.மனித நேயத்தை ரொம்ப அற்புதமா பதிவிச்சிருப்பாங்க.டிவிடி கிடைக்கும்.கண்டிப்பா பாருங்க.மழையும் கலகத்தா நகர வீதிகளும் வறுமையும்,நோயும் கலங்கடிக்கும்.

Nirmala. said...

தகவலுக்கு நன்றி அய்யனார். தேடிப் பாக்கறேன்.

பாரதிய நவீன இளவரசன் said...

So, வங்காள சினிமா விமர்சனங்களை உங்களிடம் வெகு விரைவில் எதிர்பார்க்கலாம் :)

அப்படியே, இரண்டு மூன்று கொல்கத்தா நகர photosசையும் போட்டிருக்கலாம்.. :)

G.Ragavan said...

// Nirmala zei...
ஆமாம் ராகவன்... எத்தனை பார்த்தாலும் சலிக்கறதேயில்லை! கடைசியா அங்கே ஒருதரம் போகனும், இங்கே போகனும்னு லிஸ்ட் நீண்டுட்டேயிருக்கு. //

உண்மைதான். அப்படி இப்பிடீன்னு கடந்த நாலு வருசத்துல நான் ஏழு வாட்டி போய்ட்டு வந்துட்டேன். :)

// //எனக்குக் காளிகாட்டை விட தொக்கினேஷ்வர் பிடிக்கும்.
------------------
உள்ளூர்காரங்களே இப்படி சொல்றதைக் கேட்டிருக்கேன். ஆனாலும் எனக்கு காளிகாட் தான். 'தொக்கினேஷ்வர்'... டிபிகல் பெங்காலி உச்சரிப்பு...! //

அப்படியா..இருக்கலாம். அப்படியானால் மற்றவர்கள் எப்படி உச்சரிப்பார்கள்? எனக்கு தொக்கினேஷ்வர் என்றே அறிமுகம் செய்யப்பட்டது..நானும் அப்படியே சொல்லிக் கொண்டிருக்கிறேன். தொக்கினேஷ்வர் பொச்சொந்தோ கோரி. :)

Nirmala. said...

BMP... பிடித்த படங்களைப் பற்றி அவசியம் எழுதுவேன்.

இங்கே dial up கனெக்ஷனில் படங்கள் லோட் பண்ண முடியவில்லை! பார்க்கிறேன்.

ராகவன் நீங்களும் நம்ம செட் தானா?! நான் கூட இதுவரை எத்தனை தடவை கடைசி சொல்லியாச்சு... எதாவது சந்தர்பம் கிடைத்தால் இனிமேலும் வருவேன்!

நானெல்லாம் தக்ஷினேஷ்வர் என்று தான் சொல்கிறேன்... ஆங்கிலத்தில் உள்ளதை அப்படியே தமிழில்!

Santhosh said...

கல்கத்தா அழுக்கான நகரமாக இருந்தாலும் என்னவோ தெரியலை ஒருமுறை சென்ற எனக்கு ரொம்ப பிடித்து இருந்தது. அதுவும் அந்த tram, மக்கள் கூட்டம், காளிகட் நல்லாவே இருந்தது..

Nirmala. said...

ம்ம்ம்... சில ஊர்களுக்கு அப்படி ஒரு ஈர்ப்பு இருக்கத்தான் செய்கிறது சந்தோஷ்!