Tuesday, April 03, 2007

The Namesake - Mira Nair


சுமார் ஒன்றரை வருடம் முன்பு இந்தப் படம் எடுப்பதற்காக மீரா நாயர் கொல்கத்தா வந்திருந்ததும் ஸ்டார் காஸ்டிங்கிற்காக நடந்த அமளிகளும் வாசித்த நினைவிருக்கிறது. வந்த ஒரு வாரமாய் ஒரு நல்ல பெங்காலி படம் பார்க்கக் கிடைக்காதா என்ற ஒரு அதிக முனைப்பில்லாத தேடலுக்கு பின் பெங்காலி சாயல் அடிக்கும் இந்தப் படம் வாய்த்தது. வழக்கம் போல இப்பவும் இது போல படங்கள் பார்க்க வரும்... எப்படிச் சொல்ல?!... கொஞ்சம் புத்திசாலி களை, வயது வித்தியாசமில்லாமல்...ம்ம்ம்... ஒரு sophisticated crowd. அங்கங்கே இளசுகளின் கெக்கேபிக்கே சிரிப்புகள் மெல்ல தலைகாட்டி, அதிலேயே ஷ்ஷ்ஷ்ஷ்... சொல்லி அடக்கிய குரலைத் தொடர்ந்து, அமைதியான சூழல். சென்னையில் சமீபகாலங்களில் பார்க்க நேர்ந்த படங்கள் எல்லாமே... ஏன் Water படத்தில் கூட அனாவசிய சத்தம் செய்து கொண்டிருந்த மக்களை நினைத்து ஏமாற்றமாயிருந்தது. நாம் இன்னும் நிறைய தூரம் போக வேண்டியிருக்கிறது!
ஜும்பா லாஹிரியின் நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது. இர்பான் கான், தபு கச்சிதமாக பாத்திரத்துடன் பொருந்திப் போகிறார்கள். அச்சுஅசலான கொல்கத்தா, அந்த மனுஷங்கள், 'ஏ' ந்னு இழுத்து பேசும் பேச்சு... தபு சொல்லும் போது ஒரிஜினல் பெங்காலி தோற்றுப் போகணும்! கொல்கத்தாவிற்கும் அமெரிக்காவுக்கும் மாறி மாறி பயணிக்கும் கதை... இது போல கலாச்சாரங்களுக்கிடையே நடக்கும் கதைகளை நிறைய பார்த்தாகிவிட்டதென்றாலும் இது கொல்கத்தா என்பதால் நெருக்கமாக உணர முடிந்தது.
பெரும்பாலான படங்களில் பார்க்கும் புத்தகம் வாசிப்பில் அதிக ஆர்வமுள்ள ஒரு கேரக்டர் இங்கேயும், அப்பாவாக. எத்தனை வருடங்கள் ஆனபோதும் வேர்களை விடாத, பெங்காலி ஜனங்களோடு அதிகம் புழங்கும் டிபிகல் அம்மா கேரக்டர், கலாச்சாரங்களுக்கு நடுவே திண்டாடும் பிள்ளைகள்... எழுபதுகளில் நடக்கும் கதையென்று சொல்வதால் நிறைய கேள்விகள் முடங்கிப் போகின்றன. Gogol என்ற பெயரைச் சுற்றி நிகழும் விஷயங்கள்... எல்லாமே உணர்வுபூர்வமாக.
மற்றபடி புதிதாக ஒன்றும் இல்லை. வலிய திணித்த ஆக்ராவைத் தவிர்த்தால், இன்னும் கொஞ்சம் என்று ஆர்வத்தைத் துண்டும் கொல்கத்தா, அதன் நிறம், கூச்சல், நெரிசல், சங்கீதம்... எல்லாமே. 'யதார்த்தமாய்' என்பதில் வரும் படுக்கை அறைக்காட்சிகள்... உறுத்தியதா என்றால், இல்லையென்றுதான் சொல்ல வேண்டும்.
மொத்தத்தில் படம் எனக்குப் பிடித்திருந்தது!

10 comments:

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

Namesake நாவல் அவ்வளவாக ஒத்துக்கொள்ளாததால் இந்தப் படம் பார்க்கவேண்டும் என்ற ஆர்வம் வரவில்லை. எங்களூர் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. நீங்க நல்லாருக்குன்னு சொல்றதால பார்க்கலாமோன்னு நினைப்பு வருது. டிவிடி வந்ததுக்கப்புறம் பார்க்கலாம்னு இருக்கேன்.

கொல்கத்தா பத்தி வந்ததால பிடிச்சுப்போச்சுன்னு சொல்லியிருக்கீங்க. எனக்கும் அதே எண்ணம் வந்தது. சியாம் செல்வதுரையோட நாவல்களை சோறு தண்ணியில்லாமப் படிக்க வச்சதுக்குக் காரணம் எனக்கு லேசான நினைவிருக்கிற பரிச்சயமான கொழும்பையும் அந்தவூர் மனுஷங்களையும் காமிச்சதினால மட்டுமா அல்லது திறமையும் காரணமான்னு அப்பப்ப யோசிப்பேன்..

-மதி

Nirmala. said...

ஆமாம் மதி. நாவல் பலமுறை கண்ணில் பட்ட போதும் வாசித்ததில்லை. கொல்கத்தா இல்லாமல் வேறு எங்காவது நடக்கும் கதையாகச் சொல்லியிருந்தால் இவ்வளவு ஈர்த்திருக்குமா என்பது சந்தேகம்!

மீரா நாயர் படங்கள் ஏனோ பெரிய பாதிப்பு ஏற்படுத்துவதில்லை. Water உட்பட.

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

மீரா நாயரையும் தீபா மேத்தாவையும் குழப்பிட்டீங்களோ. மீரா நாயரோடு ஒப்பிடுகையில் தீபா மேத்தா எவ்வளவோ மேல் என்று நினைக்கிறேன்.

தீபா மேத்தாவின் Water படத்தைப் படம் வந்து நிறையக்காலம் சென்றபிறகுதான் பார்த்தேன். படம் பிடிக்காதுபோகும் என்று நினைத்த எனக்கு அப்படி நடக்கவில்லை. வாட்டர், பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தவில்லையென்றாலும் கவனத்தைத் தக்கவைத்துக்கொண்டது. நடித்த நடிகர்களையும் பிடித்திருந்தது. :)

மீராவின் படங்கள் அப்படியல்ல. மிசிசிப்பி மசாலா, காம சூத்ரா, மான்சூன் வெட்டிங் என்று எதுவும் குறிப்பிட்டுச்சொல்லும்படி தாக்கத்தை உண்டுபண்ணவில்லை.

-மதி

Nirmala. said...

God! சரியான குழறுபடி! இப்பவும் ரெண்டு பேரையும் நினைவுபடுத்தும் போது இவரா அவரா என்ற குழப்பம் வருகிறது... எனக்கு ரெண்டு பேரிலும் நிறைய விஷயங்களில் ஒற்றுமை இருப்பது போல தோன்றுவதாலாயிருக்கும்!

Water... ஏன் திரும்பத் திரும்ப இது போல படங்களைப் பார்க்கிறேன்னு யோசிக்க வைத்தது நிஜம். காசியாயிருந்திருக்கும் பட்சத்தில் இது போலவே எங்கேயாவது தொட்டிருக்கும்.

பிச்சைப்பாத்திரம் said...

Thanks for the intro.

ஆனா உங்க கிட்ட இருக்கற பிரச்சினையே இதான். எப்பவும் டிரைனையோ, பிளைட்டையோ பிடிக்கற அவசரத்துலயே எழுதி முடிச்சடறீங்க. கொஞ்சம் நிதானமா, விரிவா எழுதினா நல்லா இருக்கும்னு தோணுது.

Nirmala. said...

நன்றி சுரேஷ். நேத்து படம் பார்த்துட்டு வந்த சூட்டொட எழுதினது. அவசரமா முடிச்சுக்கறதுக்கு ஒரு காரணம்... எங்கே விலாவரியா சொல்லப் போனா கதையையோ, படத்தோட சிறப்பம்சத்தையோ என்னோட பார்வைல in detail சொல்லிடுவேனோங்கற பயம் தான். அதுக்கப்பறம் யாரும் பார்க்கும் போது இந்த அனுமானத்தோட போயிடக்கூடாதுன்னு!

ஆனாலும் உங்கள் கருத்தைக் குறித்துக் கொண்டேன். அடுத்த தரம் நிதானமா எழுத முயற்சி செய்கிறேன். :-)

G.Ragavan said...

வாங்க நிர்மலா வாங்க. கொல்கொத்தா பத்தி எழுதுறதுக்கு நீங்கதான் இருந்தீங்க. திரும்பவும் கொல்கொத்தா காதை தொடருதுன்னு நெனைக்கும் போது சந்தோஷமா இருக்கு. கொல்கொத்தா பத்தி நெறையச் சொல்லுங்க.

நீங்க விமர்சித்துள்ள படத்த இன்னமும் பாக்கலை. பார்க்கலாம்னு ஒங்க விமர்சனம் சொல்லுது.

நீங்க சொன்ன ஒரு விஷயம் உண்மை. ரசிப்புத்தன்மை...அதிலயும் அடுத்தவரைத் தொந்தரவு செய்யாம ரசிக்கும் தன்மை நம்மவங்களுக்கு இன்னும் வரனும். அளவுக்கு மீறிய ஒலி நம்மவர்களுக்குப் பிடிக்கிறது. ஏனென்று தெரியவில்லை.

Jazeela said...

உங்க பதிவை வச்சி படம் பார்க்கணும்னு உந்துதல் வரலை. காரணம் விமர்சனம் விரிவாயில்லை. எதையுமே ஒழுங்கா புரிஞ்சிக்க முடியலை. ஏதோ எல்லோரும் சேர்ந்து உட்கார்ந்து பார்த்த படம் தானே புரிந்துவிடும் என்று விவரிக்காமலிருப்பது போலிருக்கு. ;-)ஒருவேளை படம் பார்த்து புரிஞ்சிக்கோங்க என்று விட்டுவிட்டீர்களோ!?

Ayyanar Viswanath said...

துபாய் பிலிம் பெஸ்டிவல் ல இந்த படம் ரிலீஸ் பண்ணாங்க மீரா மேல அவ்வளவு அபிப்பராயம் இல்லாதால பாக்குல
தீபா வோட டிரையாலஜி நல்லாருக்கும்
:)

Nirmala. said...

இல்ல ராகவன்... கொல்கத்தாவுக்கு இப்போ வெறும் விசிட்டராத்தான் வந்திருக்கேன்... காதை இல்லைன்னாலும் வந்ததுக்கு எதாவது இருக்கும், எழுதாம இருக்க முடியாது! படம்... உங்களுக்கு கொல்கத்தா பிடிக்கும்னா படமும் பிடிக்கும். :-)

ஜெஸிலா... சுரேஷ்க்கு சொன்னது தான்... நீங்க கேள்வியில முடித்தது தான் பதிலும்! ஆனாலும் இன்னும் சுவாரசியமா சொல்ல முயற்சிக்கிறேன்!

அய்யனார்... பெரிய அபிப்ராயம் இல்லன்னாலும் இவர்களை தவற விட முடியறதில்லை... அது ஒரு வியாதி! தீபாவோட ட்ரையாலஜி... ம்ம்ம்... முதல் இரண்டும் பார்த்தப்போ இருந்ததை விட இப்போ பார்த்தா வேற மாதிரி இருக்கும்னு தோணுது. will try.