Monday, February 19, 2007

சீஸன் குறிப்புகள் - 3

நந்தனார் சரித்திரம் - விஷாகா ஹரி - கார்த்திக் பைன் ஆர்ட்ஸ் வழங்கியது. ஆத்துக்காரருக்கு காபி கலந்து கொடுத்த கையோடு காலட்சேப நோட்டுப் புத்தகத்தைத் தூக்கிக் கொண்டு வந்து விட்டாரோ என்று ஆச்சர்யப்பட வைக்கும் எளிமை... அது விஷாகா ஹரி. எளிமை வெறும் தோற்றத்தில் மட்டுமே. அம்மணி உருவாக்கி வைத்திருக்கும் இமேஜ் காலட்சேபம் தொடங்குவதற்கு முன்பே காதில் விழுந்தது. சின்ன குழந்தைக்கும் புரிவது போல சொல்லும் திறமை பரவலாகப் பேசப்பட்டது. கோபால கிருஷ்ண பாரதியால் தமிழில் சுமார் இருநூறு வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட நந்தனார் சரித்திரத்தைச் சொன்ன காலட்சேபத்தில் கச்சேரி விகிதாச்சாரம் அதிகம். சொன்ன குரல் தேன்... கொஞ்சம் காத்திரமான தேன்.

நந்தனார் சரித்திரத்தை கண் முன்னே ஓட விட்டது குரலா, மொழி எளிமையா அல்லது அவரால் நிறைக்கப்பட்ட உணர்வா என்றால்... எல்லாம் தான். பாடுவதிலிருந்து கதை சொல்லத் தொடங்குவதும், கதையிலிருந்து பாடத் தொடங்குவதுமாய் இயல்பான ஃப்ளோ. ஆரம்பத்தில் கொஞ்சம் மெதுவாகப் போகிறதோ என்று தோன்றி பின்பாதியில் வேகமெடுத்தது. வழக்கமான தெலுங்கு கீர்த்தனைகள் கேட்கும் காதுகளுக்கு தமிழ் கீர்த்தனைகள் கேட்பதன் இதம் புரிந்தது. சுத்தமான உச்சரிப்பு. ஒன்றிரண்டு முறை ஒரே விஷயத்தை ஒரே வார்த்தைகளில் குறைந்த இடைவெளியில் இரண்டாவது முறை கேட்டது கொஞ்சம் நிரடியது. நர்த்தனமாடும் நடராஜர் என்று அரங்கில் மாட்டியிருக்கும் படத்தைக் கண்ணால் காட்டிப் பேச அத்தனை கூட்டமும் திரும்பி அந்த நடராஜரைப் பார்த்தது ரசிகர்கள் குறையா, காலட்சேபம் செய்பவர் குறையா? வர்ணிப்பில் அவரவர் மனதில் நடராஜரின் பிம்பத்தை உருவாக்க வேண்டாமா?

நிகழ்ச்சி முடிந்து மனநிறைவோடு செல்பவர்களைத்தான் வழக்கமாக பார்க்க முடியும்... இங்கே உரிமையோடு முத்தமிட்டு வாழ்த்தும் திருஷ்டி கழிக்கும் ரசிகர்களைப் பார்க்க முடிந்தது. வழக்கமான கச்சேரிகளுக்கு நடுவில் காலட்சேபம் என்று 'மாத்தி யோசி'த்த விஷாகா ஹரிக்கு வாழ்த்துகள்.

வெள்ளிக் கிழமை மாலை ஏழரை மணிக்கு பாரத் கலாச்சாரில் ஷோபனா குழுவினரின் நாட்டியம். ஷோபனா குழுவை ஒரு வார்த்தையில் வர்ணிப்பது என்றால்... 'நளினம்'. நடனமாடுபவர்களை ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால்... 'மயில்கள்'. உறுத்தாத அலங்காரம். தீர்க்கமான முத்திரைகள். ஷோபனாவின் ஸோலோவில் அவருடைய பாணியும் அது எப்படி அவரது மாணவிகளில் பிரதிபலிக்கிறது என்பதும் துல்லியமாகத் தெரிகிறது. கலைடாஸ்கோப் போல் மாறும் முகபாவங்கள். நாக்கை ஒருபக்கம் அதக்கி குறும்புத்தனம் காட்டுவதில் மயங்காதவர்கள் இருந்திருக்க முடியாது. 'அடங்கா கங்கையும் அடங்கும் உன் சடையில்' பதத்திற்கான அபிநயம் க்ளாஸ். ஒரு கண்ணை மூடி லேசாகப் பற்களைக் கடித்துக் காட்டும் குரோதத்திலும் நளினம் காட்டியது கற்பனைக்கு அப்பாற்பட்டது. வள்ளிக் குறத்தியும், கண்ணப்பனார் குறிப்பும்... எதைச் சொல்ல எதைவிட?!

குழுவினரோடு இணைந்து வழங்கிய கிருஷ்ண கோபியர் கொண்டாட்டம் அருமையான முத்தாய்ப்பு. கிருஷ்ணராக நடனமாடிய சிறுமிக்கு தனிப்பட்ட பாராட்டுகள். செல்லக் குறும்பும் சேட்டைகளுமாய்...! ஒரு குழுவாக இணைந்து நிகழ்த்தும் ஒரு நிகழ்ச்சிக்கு எவ்வளவு ஒருங்கிசைவு தேவை என்பது அழகாகத் தெரிந்தது. சுருக்கமாக, ஒரு விஷுவல் ட்ரீட்.... ஒரு மாலையை நிறைவு செய்ய... ஒரு நாளைப் பூர்த்தியாக்க... ஏகாந்தத்தில் நினைத்து அசைபோட.

4 comments:

துளசி கோபால் said...

போகணுமுன்னு நினைச்சு நான் மிஸ் பண்ணதுலே விசாகா ஹரியும் இருந்தாங்க(-:

Nirmala. said...

துளசி, அடுத்த தடவை மிஸ் பண்ணீடாதீங்க. சரியான இடத்தில சரியான ரசிகர்கள் கூட கேட்டுப் பார்க்கனும். அதோட சுகமே தனி.

பிச்சைப்பாத்திரம் said...

//ஆத்துக்காரருக்கு காபி கலந்து கொடுத்த கையோடு காலட்சேப நோட்டுப் புத்தகத்தைத் தூக்கிக் கொண்டு வந்து விட்டாரோ என்று ஆச்சர்யப்பட வைக்கும் எளிமை... //

இதுதான் எளிமையின் இலக்கணமா? :-)

Nirmala. said...

சுரேஷ், கச்சேரி செய்யும் பெண் கலைஞர்கள் நிறைய மேக்கப், காது கை எல்லாம் மேட்சிங் நகை, புது டிசைன் பட்டுப் புடவை... பாவம் இப்படி நிறைய விஷயங்களை கவனிக்க வேண்டியிருக்கிறது. இந்த அம்மணி அதில் அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை... அந்த எளிமை தான் அது. அதெல்லாம் பெரிய அக்கப்போர் தெரியுமா?! :-)