செவ்வாய் கிழமை மாலை பாரத் கலாச்சார்- ல் ஓ.எஸ். அருண் கச்சேரி. முல்லைவாசல் ஜி . சந்திரமௌளலி வயலின். ஜே. வைத்தியநாதன் மிருதங்கம். ஸ்ரீரங்கம் கண்ணன் மோர்சிங்.
நல்ல உயரம். ஏதோ ஸ்டூல் போட்டு உட்கார்ந்திருக்கிறாரோ என்று தோன்ற வைக்கும் அளவுக்கு. அனுபவித்துப் பாடிய 'இந்த்த தாமஸமா?' வும் 'அகிலாண்டேஸ்வரி'யை துணைக்கழைத்தும் ரசிகர்களைக் கட்டிப் போட செய்த முயற்சிகள். நான்கு மணி கச்சேரிக்கு பெரிய கூட்டம் எதிர்பார்க்க முடியாதென்றாலும் இருந்தவர்களாவது நல்ல ரசிகர்களாக இருந்திருக்கலாம்! ஐந்தாவது வரிசையில் ஆழ்ந்த தூக்கத்தில் ஒரு ரசிகை(?!), வாசலில் விநியோகிக்கப்பட்ட செய்திக்குறிப்புக்காக ஓவ்வொருவராய் எழுந்து போவதும், வந்து வாசிப்பதுமாயிருக்க... ஸ்வர சஞ்சாரத்தில் ம நி தா... ம த ம நி தா... நி தா நி... ச தா நி... ( மனிதா... மதமனிதா... நிதானி... சதா நீ) என்றென்னால்லாம் ஜாடையாகச் சொன்னதெல்லாம் கேட்காத ரசிகர்களுக்கு கச்சேரிக்கு நடுவில் வேண்டுகோள் வைக்க வேண்டியதாயிற்று. திருமதி ஒய்.ஜி.பி மன்னிப்பு கேட்டு பஜன் பாடச் சொல்லிக் கேட்டுக் கொண்டதும் ஆசிரியர் வந்து ஒரு சத்தம் போட்டதும் சொன்ன பேச்சு கேட்கும் பிள்ளைகள் போல ரசிகர்களில் கொஞ்சம் மாற்றம். 'யமுனை நதியே கண்ணனைக் கண்டாயோ?', 'ஆஜ் ஆயோ ஷ்யாம் மோஹனா'... இரண்டும் மெய்மறக்க வைத்தது.
நிகழ்ச்சி முடிந்து ரிலாக்ஸாக வெளியே வந்த அருணுக்கான கேள்வி... 'பாடுவது கச்சேரிக்காவா? ரசிகர்களுக்காகவா?' பதில் சொல்வதை சாமர்த்தியமாக தவிர்த்து ' நீங்களே சொல்லுங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று?' என்று எதிர்கேள்வி கேட்பதாக நினைத்துக் கொண்டாலும் ஆழ்ந்து ரசிக்காத ரசிகர்களுக்கு பாட நேரும் அவஸ்தை அவரது வார்த்தைகளில் புரிந்தது.
ஏழரை மணிக்கு அதே அரங்கில் மதுவந்தி அருண் வழங்கிய நாட்டியம். மறைந்த சாவித்திரி கணேசனுக்கான நினைவஞ்சலி. மெல்ல நிறமும் களையும் மாறும் அரங்கத்தை காண சுவையாயிருந்தது. மத்யான கச்சேரிக்கான எளிமையான அரங்கம் மாறி பட்டும் பளபளப்புமாக மாறிக் கொண்டிருந்தது. பத்மா சுப்ரமணியம், வைஜெயந்திமாலா பாலி, சௌகார் ஜானகி, கமலா செல்வராஜ்... நிகழ்ச்சிக்கு வந்திருந்த பிரபலங்களில் சிலர். 'கர்த்தவ்யம்' என்ற கருப்பொருள் கொண்ட நாட்டியத்தில் சீதையாகவும், ஊர்மிளையாகவும், ராமனாகவும், கிருஷ்ணனாகவும் மதுவந்தி. எளிய உடைமாற்றத்தில் வித்தியாசம் காட்டியது சிறப்பு. வாலியாகவும் சுக்ரீவனாகவும் வந்த இளைஞர்களின் வேகமும் ஈடுபாடும் குறிப்பிடாமல் போக முடியாது.
மதுவந்தியின் சற்றே பருமனான உடம்பு கொஞ்சம் உறுத்தல். இத்தனை கேரக்டகளாக மாறும் போது அடிப்படையாக எல்லா பாத்திரங்களுக்கு இருப்பதாக நாம் உணர்ந்திருக்கும் சாத்வீக பாவம் மிஸ்ஸிங்.
சத்தமில்லாமல் வந்தமர்ந்த பானுப்ரியாவைப் பார்த்த போது ஒரு கலைஞராக இவர் எப்படி ரசிப்பார் என்ற கேள்வி வந்தது. 'உங்களை அந்த முக்கிய பாத்திரத்தில் வைக்காமல் வெறும் ரசிகராக உங்களால் ரசிக்க முடியுமா?' என்ற கேள்விக்கு ஒரு சின்ன யோசனைக்குப் பிறகு, 'இப்போ அப்படித்தான் ரசிக்கிறேன். வீட்டுக்குப் போய் நிதானமாக யோசிக்கும்போது அப்படித் தோணலாம்.' என்றார்.
பத்து நிமிடத்திற்கொருமுறை செல்பேசியையை ஒளிர்வித்து அதிலிருந்த மகளின் புகைப்படத்தை பார்த்துப் பார்த்து மூடும் பானுப்ரியாவிற்கு வீட்டுக்கு போன பிறகு இதையெல்லாம் யோசிக்க நேரம் இருக்குமா?!
27 ம் தேதி மாலை ம்யூஸிக் அகடமியின் நான்கு மணி பாம்பே ஜெயஸ்ரீக்காக. மைசூர் ஸ்ரீகாந்த் வயலின். பூங்குளம் சுப்ரமணியம் மிருதங்கம். திருவனந்தபுரம் ராஜகோபால் கஞ்சிரா. நான்கு மணிவாக்கில் சாதாரணமாக இருந்த கூட்டம் அரைமணியில் திருவிழா கூட்டமானது. திரை உயரும் போது மேடையிலோ அரங்கிலோ எங்கும் இடமில்லை.
சிகப்புப் புடவை, மஞ்சள் ஜாக்கெட்டில் எளிய அலங்காரத்துடன் ஜெயஸ்ரீ. ஆற்றோட்டம் போன்ற குரல். அதிகம் வேகம் கொள்ளாமல் அமைதியாக ஓடுகிறது. இதமாக கால்களை நனைத்துக் கொண்டு. வெளியே வர மனசே வருவதில்லை. ஆஹிரியையும் பைரவியையும் ரசித்துப் பாடினார். வயலின் அழகாக ஜோடி சேர்ந்து கொண்டது. ராகம் தானம் பல்லவிக்குப் பிறகு வெளியேறி விட்ட சுத்த சங்கீதக் காதுகள் 'வண்ணச்சிறு தொட்டில்' இட்டு கண்ணனுக்கு பாடிய தாலாட்டை தவறவிட்டார்கள். தாலாட்டுக் கேட்டு கண்ணன் தூங்கினானோ இல்லையோ கேட்டவர்கள் கரைந்து போனார்கள். நிகழ்ச்சி முடிந்த போது எழுந்து நின்று கைத்தட்டிய கூட்டத்தின் திருப்தியை உணர முடிந்தது.
4 comments:
அருமையான பதிவு நிர்மலா. தமிழ்மணத்தில் ஏன் சேர்க்கவில்லை.
தமிழ்மணம் குறித்த உங்கள் கருத்தை ஜெசிலா வாயிலாக தெரிந்துகொண்டேன்.
நீங்கள் எழுதுவது பதிவு. இதை யார் எங்கே எப்படி திரட்டினால் என்ன? கவலைப்படாமல் உங்கள் எழுத்து பலரையும் சேரவேண்டும் எனும் எண்ணத்தில் பதிவுகளை தயவுசெய்து தமிழ்மணத்தில் சேருங்கள்.
அங்கே கூத்தடிக்கிறவங்க அடிக்கட்டும். உலக அளவில் வலைப்பதிவுகள் இப்படித்தான் இயங்குகின்றன.
சிலர் சீரியசான விஷயங்களை எழுதுவதுண்டு சிலர் வெட்டியாய், சிலர் கேவலமாய் என பல ரகம்.
நிறையபேர் உங்களப் போல எழுதுறதப் பாத்து சிலர் மனம் மாறி நல்ல பதிவுகளைத் தர முன்வரலாம்.
சரி ஒரு சின்ன கேள்வி
ஜெசிலா குறிப்பிட்ட நிர்மலா நீங்கதானே?
நன்றி அலெக்ஸ். தமிழ்மணத்தில் சேர்த்திருக்கிறேனே! வருகிறதா இல்லையா என்று கவனிக்கவில்லை!
ம்ம்ம்... ஜெஸீலாவுடன் பகிர்ந்து கொண்டது நிஜமான ஆதங்கம்... அதற்காக தமிழ்மணத்திலிருந்து விலகல் என்றெதுவும் இல்லை. தங்கள் அக்கறைக்கு நன்றி.
ஜெஸிலா குறிப்பிட்ட நிர்மலா நானே.
அருமையா ரசிச்சு, கவனிச்சுப் பார்த்து எழுதுன விமரிசனம்.
ரொம்பப் பிடிச்சிருக்கு நிர்மலா.
இன்னிக்குத்தான் இதைத் தமிழ்மணத்தில் பார்த்தேன்.
அப்புறம்.........
நலமா?
( இன்னிக்குப் பொழுது விடிஞ்சதும் உங்க ஞாபகம் வந்தது. இங்கே வந்து பார்த்தா
உங்க பதிவு தெரியுது. என்ன நமபமுடியலையா? )
நன்றி துளசி. நலம். ஆமா, பொழுது விடிஞ்சதும் என் ஞாபகம் எதுக்கு வந்துச்சு?! அதைச் சொல்லலையே?!
Post a Comment