போன மாதம் ஒரு கொல்கத்தா பயணம் இருந்தது. போகும் போதே சரியில்லாத உடம்பு அங்கே போய் அதிகமாகப் படுத்தியதும், கொல்கத்தா கொஞ்சம் என்னை மறந்து போனதாய் உணர்ந்ததும் பெரிய விஷயமில்லை. வழக்கம் போல காளிகாட் போனதும் வழக்கமில்லாமல் ஒன்றைப் பார்த்ததும் தான் விஷயம்.
பத்து நிமிடத்தில் காளியைப் பார்த்து முடிந்தாலும் அங்கேயிருந்து கிளம்ப முடியாமல் வெறுமனே சுற்றிக் கொண்டிருந்ததும், என்ன தான் தேடுகிறேன் என்று தெரியாமல் அலைமோதியதும்... வழக்கம் போல அந்த பலிபீடத்தைப் பார்த்துக் கொண்டே நின்றதும்... ஒன்றிரண்டு வெற்றுச் சுற்று முடித்து கிளம்பப் போகும் போது... இழுத்துக் கொண்டு வந்த கறுப்பு ஆடுகள்... யோசனையே இல்லாமல் பின்னால் போனது... மறுபடியும் அந்த பலிபீடத்திற்கே வந்து சேர்ந்தது... ஏதோ கேள்விகள்... எவ்வளவு என்ன என்று விசாரணைகள்... முடித்து அங்கே ஒரு மேசை போட்டு உட்கார்ந்திருந்தவரிடம் போய் தகவல் சொல்கிறார்கள்... கீழே ஒரு குழாயைத் திறந்து அவசரமாக தலையை மட்டும் பேருக்கு நனைத்தார்கள்... இழுத்துக் கொண்டு வர கழுத்தில் போட்டு வந்த கயறு கழட்டப்பட்டது... அதுவரை பேசாமல் தான் இருந்தது... முன்னங்கால்களை பின்பக்கமாக வளைத்துப் பிடித்த போது தான் அந்த சத்தம் கேட்கத் தொடங்கியது... அதற்குப் பின் அதிக நேரம் எடுக்கவில்லை... அதுவரை போவோரும் வருவோரும் தொட்டுக் கும்பிட்டுப் போன அந்த மரச் சட்டத்தில் தலை வைக்கப் பட்டது... அசையாமல் இருக்க ஒரு இரும்புக் கழியால் நிறுத்தப் பட்டது... உயர்ந்த அந்த அரிவாள் எந்த நொடியில் கழுத்தைக் கடந்தது என்று கவனிக்க முடியவில்லை... துடித்துக் கொண்டிருந்த உடம்பை ஒரு புறமாகத் தள்ளி விட்டு தலையைத் தூக்கிக் கொண்டு வருகிறார்... வழியும் ரத்தத்தில் அவர்கள் குடும்பத்தவருக்கு பொட்டு வைத்து விடுகிறார்... முடிய முடிய அடுத்தது தயாராகிறது... பக்தியும் இல்லாமல் பதைப்பும் இல்லாமல் வெறுமனே தான் பார்த்துக் கொண்டிருந்தேன். முன்று நான்கு வயது சின்னப் பையன் எதற்கு என்று தெரியாமல் கையில் சுமந்து கொண்டு, வரும் போது பேசிக் கொண்டே, அந்த குட்டி ஆட்டைப் பார்த்ததும் அங்கே நிற்க முடியவில்லை. வெளியே வரும் போது கொஞ்சம் வெறுமையாக இருந்தது. யார்கிட்டயாவது சொல்லியே ஆகணும் என்று மண்டை வெடிக்க, கூப்பிட்ட இரண்டு பேரும், 'உன்னை யார் அதையெல்லாம் பார்க்கச் சொன்னது?' என்றும் 'கொஞ்சம் கூட இரக்கமே இல்லையா?' என்று கோவித்ததும்... அதைப் பற்றிப் பேசவே தோணவில்லை.
நேற்று தொலைக்காட்சியில் கை பின்னால் கட்டி கழுத்தில் கருப்பு துணி சுற்றி...
11 comments:
நிம்மி, இதன் கூட அரசியல் தண்டனையை ஒப்பிட முடியாது. அரசியல் சரித்திரத்தைப்புரட்டினால் அனைத்து தலைவர்கள் கைகளிலும் ரத்தக்கறைகள் இருக்கும். அளவுகள் கூட குறைவு அவ்வளவே. ஆனால் இங்கோ மதத்தின் பெயரால், இறைவனுக்கு அர்பணிக்க்க பலியிடப்படும் விலங்குகள். இது மனிதனின் முட்டாள் தனம் என்றால் முதலாவது சட்டத்தின் பெயரால்
நடக்கும் அராஜகம். எந்த உயிரையும் எடுக்கும் உரிமை மனிதனுக்கு இல்லை என்பதை நாம் வெகு சுலபமாய் மறந்துவிடுகிறோம்.
ஆமாம் நீங்கள் சைவமா?
அசைவமா :-)
உஷா... அரசியலெல்லாம் பேசவேயில்லை. நாலு ஆடுகள் சேர்ந்து இருபது ஆடுகளை சாட்சியாக வைத்து இன்னொரு ஆட்டைக் கொல்லுமா? ஒரு ஆட்டைக் கொல்றது மாதிரி மனுஷனைக் கொல்லலாமா?
btw, மத்யானம் சிக்கன் பிரியாணி. அசைவர்களுக்கெல்லாம் மனிதாபிமானம் கிடையாதா? அரைக்கிலோ அவரை, செடியிலேயே விட்டிருந்தால் சில நூறு அவரைச் செடியாயிருந்திருக்கும், மத்யானம் பொரியல் பண்ணி சாப்பிடுட்டோம்! செடியில இருந்து பறிக்கும் போது அதுக்கு உயிர் இருக்கலையா? உணவுப் பழக்கத்தையும் இதையும் குழப்பிக்கக் கூடாது.
'//உன்னை யார் அதையெல்லாம் பார்க்கச் சொன்னது?' என்றும் 'கொஞ்சம் கூட இரக்கமே இல்லையா?' என்று கோவித்ததும்... அதைப் பற்றிப் பேசவே தோணவில்லை.//
//நாலு ஆடுகள் சேர்ந்து இருபது ஆடுகளை சாட்சியாக வைத்து இன்னொரு ஆட்டைக் கொல்லுமா//
ம்ம்ம்ம் :-)))) கொஞ்சம் முன்னுக்கு பின் முரணாய் இருக்கே. ஆட்டை கோவிலில் வெட்டியப்பொழுது ஏன் உங்களுக்கு வருத்தம் வந்தது?
//நேற்று தொலைக்காட்சியில் கை பின்னால் கட்டி கழுத்தில் கருப்பு துணி சுற்றி... //
மிக மிக மிக யோசிக்க வைத்த வரிகள்.
நேற்று தண்டணை நிறைவேறியதை டீவியில் பார்த்த கணத்திலிருந்து மனசு கிடந்து துடித்துக் கொண்டிருக்கிற்றது. அந்தாளை மூணு வருஷம் சும்மா விட்டிருந்தா தானாவே செத்துப் போயிருப்பார். இதெல்லாம் ரொம்ப அநியாயம். அவர் ஆயிரம்தான் பண்ணி இருக்கட்டும். இந்த மாதிரி தள்ளாத வயசுல, செத்த பாம்பை அடிக்கிர மாதிரி கூட்டிக் கொண்டுபோய், ஆக்கீரமிப்பு நாட்டோட அழுத்தத்தில் கொல்றது, அதையும் படம்ம் புடிச்சு ஆளாளுக்கு காமிக்கிறது அரக்கத்தனத்தோட உச்சக்கட்டம். "என் மூஞ்சுக்கு முக்காடு போட வேண்டாம். நான் இப்படியே மாட்டிக்கிறேன்" என்று அந்தக் கிழவர் முன்வந்ததற்காக இன்னம் எத்தனை ஆயிரம் ஜிஹாதிகள் மலரப் போகிறார்களோ...!! புஷ்....??!!!!புஸ்....ஸ்....ஸ்!!!!!!!
இல்ல உஷா... அங்கே /பக்தியும் இல்லாமல் பதைப்பும் இல்லாமல் வெறுமனே தான் பார்த்துக் கொண்டிருந்தேன்/... வெறுமையாய் இருந்தது... இன்னமும் மிச்சம் இருக்கும் cruelty யைப் பார்த்து. பொது இடத்தில குழந்தைகளையும் கூட வைத்துக் கொண்டு...
ஆமாம் சுந்தர்... இது என்னவாகவெல்லாம் வெளிப்படப்போகுதோ?
புத்தாண்டு வாழ்த்துகள்!
என்று தணியுமிந்த கண்மூடித்தனங்கள்?
இறுக்கமான பதிவுகள் இருக்கட்டும் சகோதரி!
முன்பு பிறமொழிப்படங்களைப் பார்த்துவிட்டு அசத்தலாய் விமர்சனம் எழுதுவீர்களே?
எங்கே அதெல்லாம் ஒனறையும் காணோம்?
நன்றி சிவஞானம்ஜி. புத்தாண்டு வாழ்த்துகள்.
திரு. சுப்பையா... cool now! :-) தற்போது சென்னைவாசி. கவனம் கொஞ்சம் மாறி விட்டதால் திரைப்படங்களுக்கு தற்காலிக விடுப்பு!
வருகைப் பதிவு..
வருகைக்கு நன்றி ராம்கி.
Post a Comment