Monday, April 24, 2006

கொல்கத்தா சங்கதிகள் - 2

கொல்கத்தாவிலிருந்த போது பெங்காலி படங்களோடு தொடர்பு கொள்ள ஒரு சந்தர்ப்பம் ரே திரைப்பட விழா என்று அறிவித்த INOX கொடுத்தது. சத்யஜித் ரேயா? ஆளைவிடு என்று எல்லோரும் விலகிக் கொள்ள, அப்போது விடுவதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை. அது தனியாக சினிமா பார்க்கத் தொடங்கியிருக்காத நாட்கள். அதனாலென்ன, சொந்த கலெக்ஷனுக்காகட்டும் என்று வாங்கி வந்த பதேர் பாஞ்சாலியும் அதன் தொடர் பட வரிசையும் ஜீரணிக்க முரண்டு பிடித்ததில் பெங்காலி சினிமாவிலிருந்து தற்காலிகமாக விலகியிருந்தாலும் 'இது பிடிச்சிருக்க பாரேன்' என்று இழுத்து வந்தது ரிதுபர்ணோ கோஷ்.

சோக்கேர் பாலியில் தொடங்கியது... அவருடைய படங்கள், அது சொல்ல வருவதும் எதுவோ எங்கேயோ சகட்டுமேனிக்கு இழுக்க எந்த புள்ளியில் சந்திக்கப் போகிறோம் என்ற ஆவலும் அதைத் தேடும் முயற்சியுமாய் பார்த்த ரிதுபர்ணோவின் ஆரம்ப காலப் படங்கள்... கொஞ்சம் கமர்ஷியல், கொஞ்சம் துப்பறியும் கதை சொல்லும் முயற்சி... subhomuhurat... படத்தில் நந்திதா தாஸ் சொன்ன ஒரு வரி வசனத்தில் அந்தப் புள்ளியைக் கண்டு பிடித்த போது ஒரு உற்சாக ஹே!

தொடர்ந்து முயற்சித்த அபர்ணா சென் இயக்கிய படங்கள்... முழுக்க முழுக்க பெங்காலி, சப் டைட்டில் இல்லாத கண்ணாமூச்சியோடு பார்த்தவைகள் சொல்ல வந்தது என்னவோ ரொம்ப ஆழமானது, ஆனால் எனக்கு சரியாகப் புரியவில்லை என்ற சமரசத்தோடு மறுபடியும் பெங்காலிப் படங்களுக்கு தற்காலிக விடைபெறுதல்.

'அந்தர்மஹால்' குறுக்கீடும், மூட்டை கட்டும் நேரமாச்சு என்ற அறிவிப்புமாய் மறுபடியும் ஒரு பெங்காலி அலை. அடையாளம் காட்டும் வேலை செய்தது PlanetM. படங்களை பொதிந்து வைத்திருக்கும் அட்டைப் படமே சொல்லும் இது தான் நீ பார்க்க வேண்டியது என்று. முதுகில் எழுதியிருக்கும் ஆங்கிலப் பெயரைக் குறித்துக் கொள்வதும், கொச்சையான பெங்காலி உச்சரிப்பில் அதை வீடியோ கடைக்காரரிடம் ஒப்பிப்பதுமாய் பார்த்த பெங்காலிப் படங்கள் 'ஒரு வருஷத்தை வீணடிச்சுட்டே. பேசாம பெங்காலி கத்திருக்கலாம்' என்று லேட்டாக ஒரு ஞானோதயம் கொடுத்தது, ஒரு பத்து முப்பது படம் பார்த்ததில் பாஷை புரிய
ஆரம்பித்ததுதானென்றாலும்.

வழக்கமான பெங்காலி சினிமாவில் பாலிவுட் பாதிப்பில் கமர்ஷியல் கூத்துகளுக்கு குறைவில்லை என்றாலும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் இந்த வேறு நிறப் படங்களும். நாவல்களை மூலமாகக் கொண்டு என்று எடுக்கும் படங்கள் என்று பார்த்த மாத்திரத்திலேயே தெரிகிறது. சாதாரணமாக பார்க்கக் கிடைக்காத, குறைந்தபட்சம் நான் பார்த்திருக்காத கதைக்கரு... அதைச் சொல்லியிருக்கும் நேர்த்தி... உள்ளுக்குள்ளே இழுத்துக் கொள்ளக் கூடியதாய். சொல்லாமல் போக முடியாது என்ற ஒன்றிரண்டைப் பற்றி எழுதவில்லை என்றால் உறுத்தல் தாங்க முடியாது
என்பதால் கொஞ்சம்...

Nishi Japon ( after the night... dawn)... மலையும் காடுமாய்... அதில் ஒரு வீடு, வயதான அப்பா, விடுமுறைக்கு வந்திருக்கும் மகன்கள், மருமகள், அவளுடைய தங்கை, அப்பாவின் நண்பர்... தொலைக்காட்சி இல்லாத, செல்பேசி தொடர்பில்லாத ஏகாந்தத்தில்... சந்தோஷமான குடும்பம்... ஒரு ராத்திரி அடர்மழையும் நிலச்சரிவும்... தொடர்புக்கு இருந்த ஒரே தொங்குபாலமும் பிய்த்துக் கொண்டு போய் விட, சாப்பாடு தண்ணீர் இல்லாத மூன்று நாட்கள்... பசி மாற்றிப் போன குடும்பத்து ஆட்கள்... வெளியேறும் முயற்சிகளும் தொடரும் போராட்டங்களுமாய்... அந்த வீடும் லொக்கேஷனும்... அங்கேயே இழுத்துப் போன ஒளிப்பதிவும்... சந்திப் ரேயின் க்ளீன் மூவி.

Dahan... ஒரு ராத்திரி கடைத்தெருவிலிருந்து திரும்பி வரும் இளம் தம்பதியை வம்பிழுக்கும் ரவுடிக் கும்பல்... மொத்த ஜனமும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க நடுரோட்டில் நடக்கும் இந்த ரகளையை சிக்னலுக்காக காத்திருக்கும் நேரத்தில் கண்ணில் பட இறங்கிவந்து உதவி செய்யும் இன்னொரு பெண்... போலிஸ் கேஸ்,
வசதியான வீட்டுப் பிள்ளைகள், புகாரைத் திரும்ப பெற வைக்கும் முயற்சிகள் எல்லாம் வழக்கமானவைகள் என்றாலும்... பாதிக்கப்பட்ட பெண்ணின் மனநிலை... உதவி செய்த பெண்ணின் மனநிலை... இருவரையும் சந்திக்க அனுமதிக்காத வீட்டு மனிதர்கள்... இந்த திடீர் புகழை உபயோகப் படுத்திக் கொள்ள முயலும் காதலன்...
இதெல்லாம் நிச்சயம் புதுசு.

shunyo e'bukey (empty canvas)... ஓவியமும் சிற்பமும் நாட்டுப்புறபாடலுமாய் நிறைந்திருக்கும் நான்கு நண்பர்களின் கஜுராஹோ விஜயம்... அங்கே சந்திக்கும் ஒரு பெண், உணர்வுப் பூர்வமாய் நேசம் நிறைந்தவன் அவளைக் காதலிக்க, பக்கா ப்ராக்டிகல் கொஞ்சம் வெடுக்கென்ற பேச்சு நண்பன் இது சரிவராது என்று மறுக்க... கொல்கத்தாவில் தொடரும் அந்த காதல் கதை திருமணத்தில் முடிகிறது. முதல் இரவில், சரியான வளர்ச்சியடையாத அவள் மார்பகங்களைப் பார்த்து அதிர்ச்சியில் விலகும் கணவன்... ஏன் முதல்லயே சொல்லலை என்ற கேள்வியும்... என்னன்னு சொல்லியிருக்கணும் என்ற தயக்கம் நிறைந்த பதிலும்... நிறைய யோசிக்க வைத்த படம்.

Antarjali yatra... தொண்ணூறு பளஸ் வயதுகாரர்... கடைசி சுவாசத்தைத் தேடி நதிக்கரை கம் மயானத்திற்கே வந்து விட்டவருக்கு ஜோசியரின் அறிவுரைப்படி சிட்டுப் போல ஒரு பெண்ணோடு திருமணம்... திருமணம் முடிந்த பிறகும் அங்கேயே தொடரும் குடித்தனம்... நாலு மூங்கில் கம்பும் அதில் வெயில் மறைக்கக் கட்டிய ஒரு துணி கொஞ்சம் சமையல் பாத்திரங்களோடு யாருமில்லாத வெட்டவெளியில் குடுகுடு கிழவரோடு... தூரத்தில் ஒரு முரட்டு வெட்டியான்... கல்யாணம் கட்டிக் கொண்ட ஜோரில் உடல்நிலை தேறி, நடுங்கும் கைகளால் கன்னத்தை தடவத் தேடும் அந்த ப்ரேம் 'கொடுமைடா சாமி'! அந்த மூன்று பேருக்குள் ஓடும் உணர்வுகள்... படம் முழுதாகப் புரிந்ததா என்று தெரியவில்லை... ஆனால் பாதித்தது.

ரித்விக் காடக்கின் Meghey dhaka tara, 'அரங்கேற்றம்' 'அவள் ஒரு தொடர்கதை' பாலச்சந்தருக்கு முந்தியதா பிந்தியதா தெரியவில்லை. நான் முதலில் பார்த்தது பாலச்சந்தரைத்தான். மின்னலடித்துக் கொண்டே படம் காட்டிய அந்த மோட்டார் கார் படம் (பெயர் நினைவில்லை)... அதில் யாரும் நடித்த மாதிரி தெரியவில்லை... ஒரு காட்சியில் மாடிப்படியிலிருந்து இறங்கி வரும் சிறுவனின் எந்த அசைவும் அவனை எங்கிருந்தோ ஒரு காமிரா படம் பிடித்துக் கொண்டிருக்கிறது என்ற உணர்வு கொண்டிருக்கவில்லை... சிறுவனுக்கே இது என்றால் மற்றவர்களை யூகித்துக் கொள்ளலாம். யாராவது ஒரு பழைய சினிமா ரசிகரோடு இன்னொரு முறை பார்க்க வேண்டும் என்று யோசிக்க வைத்த படம்... மத்தியான நேரத்தில் தனியே பார்க்கும் போது நழுவிப் போவதை தவிர்க்க முடிவதில்லை.

கடைசியில் மறுபடியும் ரே... அபராஜிதா... சமீபத்திய காசி விஜயத்திற்குப் பிறகு கூடுதல் சுவாரசியத்தோடு ரசிக்க வைத்தது. அந்த நாள் காசிக்கும் இன்றைய காசிக்கும் இன்னும் மிச்சம் இருக்கும் தொடர்பு... ஆனாலும் ரே உங்களை முழுதாக ரசிக்க இன்னும் சில படிகள் ஏற வேண்டும். ஒருவேளை இன்னும் கொஞ்சம் வருஷம் கழிச்சு.

10 comments:

Boston Bala said...

classic post :-)

Nirmala. said...

thanks balaji.

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

the kind of post i was expecting from you, when i learnt that you would be moving to Calcutta. Am glad that you r doing it now, atleast after leaving Calcutta. :)

Thanks for the post Nirmala.

-Mathy

rajkumar said...

வித்தியாசமான கதைக் கலன்கள். படங்களை பார்க்க வேண்டும் என ஆவல் எழுகிறது. சென்னையில் வங்க மொழிப் படங்கள் எங்காவது கிடைக்குமா?

அன்புடன்

ராஜ்குமார்

கார்திக்வேலு said...

That was a good post.
watching a movie Without knowing the language or any prior exposure to the director is a "rush" in itself .

watched Ray's "Jalsaghar" some time back on a local channel with excellent subtitles.The habit of making movies out of novels seems to be very prevalent in Bengal and it seems to work pretty good too.

துளசி கோபால் said...

நிர்மலா, எங்கெங்கேயோ சுத்துன நானு இப்படிக் கல்கத்தாவைக் கோட்டை விட்டேனே(-:
இத்தனைக்கும் அப்ப கோபாலோட ஹெட் ஆஃபீஸ் அங்கேதான் இருந்தது. அவரும் அடிக்கடி போய்வருவார்.
ஆனா எனக்கு? போணுமுன்னு தோணலை பாருங்க.

விடறதில்லை. ஒருக்கா போயே தீரணும்.

இன்னும் என்னென்ன சினிமா? எடுத்து விடுங்க.

ramachandranusha(உஷா) said...

Antarjali yatra... - இந்த படம் பார்த்திருக்கிறேன். கொஞ்சம் நினைவு வந்ததும், அந்த கிழட்டு கைகள்,
அந்த சிறு பெண்ணின் மார்ப்பைப் பிடிக்கும். எத்தனை வயதானாலும் ஆண்... அதிர்ந்துப் போனது
மனம்.
ஹிந்தியில் பெங்காலி டைரக்டர்கள் ரிஷிகேஷ் முகர்ஜி இன்னொரு முகர்ஜி, அவரோட மகனா தெரியவில்லை நிறைய சூப்பர் காமடி படங்கள். வங்காள பின்னணியில் நடிகர் உத்தம்குமார், ஷர்மீளா டாகூர், சச்சின் (கிரிகெட் பிளேயர் இல்லை), ஜெயா பச்சன் படங்கள் பெயரெல்லாம் தெரியாது, பார்த்தது மட்டுமே நினைவில் நிழலாடுகிறது.

பிச்சைப்பாத்திரம் said...

நல்ல பதிவு. இன்னும் கூட நிதானமாக ஒவ்வொரு படத்தினையும் விவரமாக எழுதியிருக்கலாம் என்று தோன்றுகிறது. படத்தின் பிரதான நடிகர்களையும், பின்னணியில் இயங்கிய தொழில்நுட்பர்களின் பெயர்களையும் குறிப்பிட்டிருக்கலாம்.

//ரே உங்களை முழுதாக ரசிக்க இன்னும் சில படிகள் ஏற வேண்டும். ஒருவேளை இன்னும் கொஞ்சம் வருஷம் கழிச்சு. //

நீங்கள் பார்க்கும் படங்களையும் அதை விவரிக்கும் உங்கள் ரசனையையும் வைத்துப் பார்க்கும் போது "ரே" வை ரசிக்க இன்னும் பல படிகள் ஏறவேண்டியதில்லை என்றே தோன்றுகிறது.

Nirmala. said...

மதி, பெங்காலி படங்களோடு மூன்று முறை முட்டின பிறகு இந்த ரசிக்கும் சூழ்நிலை அமைந்தது. அதனாலதான் இது இவ்வளவு லேட்டாக!

ராஜ்குமார், சென்னையில் கிடைப்பது சந்தேகம் தான்.

கார்திக்வேலு, நாவல் சினிமாவாவதற்கு அவர்கள் புத்தக வாசிப்பு ஈடுபாடும் காரணமாயிருக்கும். 'சினிமா ஒரு விஷ¤வல் மீடியா'... 'ஆழமான கூர்மையான வசனங்கள்' இது ரெண்டுக்கும் நடுவில் புரிய முடியாமல் போன சில படங்களைப் பற்றி எழுதவில்லை!

துளசி, நான் இருக்கும் போதாச்சும் வந்திருக்கலாம்!

உஷா, உத்பல் தத், ஜெயாபச்சன்... 'மிலி'ன்னு நினைக்கிறேன். அப்புறம் 'தில்லுமுல்லு' ஹிந்தியிலும் உத்பல் தத் காமெடிதான்.

சுரேஷ், படங்களெல்லாம் சும்மா ஒரு ஐடியா கொடுத்தது மட்டும் தான். அதிகம் பரிச்சயமில்லாத பாஷை படங்கள்... அதன் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் விவரங்கள்... கொஞ்சம் கண்ணைக்கட்டி காட்டில் விட்ட மாதிரி இருக்கும் என்றுதான் எழுதவில்லை. ஆனால் ஓவ்வொரு படமும் தனித்தனியாக எழுதும் அளவுக்கு விஷயமும் இருந்தது, உருகி உருகிப் பார்த்தும் இருந்தேன்!

ரே சாப்... பார்க்கலாம்!

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

//ஆனால் ஓவ்வொரு படமும் தனித்தனியாக எழுதும் அளவுக்கு விஷயமும் இருந்தது, உருகி உருகிப் பார்த்தும் இருந்தேன்!//

அப்ப எழுதுங்களேன் நிர்மலா. நான், நீங்க குறிப்பிட்டிருக்கும் படங்கள் கிடைக்குமா என்ற முயற்சியில் இறங்கியிருக்கிறேன்.. :)