Thursday, November 24, 2005

காஷ் மே...

'சமுதாயம் வரிக்கும் திருமணம், குடும்பம், பொறுப்பு, அதன் தொடர்பான கடமைகள் என்ற கோடுகளுக்குள் அதிகம் கேள்விகள் இல்லாமல், இருந்தாலும் பெரிய போராட்டங்களில்லாமல், சின்ன முணுமுணுப்பு, கொஞ்சம் சலசப்பு காட்டி வாழும் பெரும்பான்மை. மீறினாலும் மதிப்பாக ஆன்மிகம், துறவு, (போலிச் சாமியார்களும்
சேர்த்தே) ஒரு சிறுபான்மை. அதிலும் சேராமல் இதிலும் சேர்த்தியில்லாமல் இன்னொரு சிறுபான்மை. இவர்களை குறுகுறுப்பான ஓரக்கண் பார்வையில் பார்த்துக் கொண்டு அவசரமாக விலகிக் போன காலங்கள் போய், பொருட்படுத்தாமல் இருக்கப் பழகி, பரிதாபப் பட்டு... எல்லாம் தாண்டி அவர்களை அவர்களாகப் புரிந்து கொள்ள முடியும் என்ற நிலைப்பாடு வந்திருக்கிறது.'

இப்படி ஒரு முன்னுரை மனதில் எழுதி வைத்து அந்த சந்திப்புக்கான முனைப்பு தொடங்கியது நட்சத்திர வாரத்திற்கான அழைப்பு வந்த போது. எப்படியாவது அதற்கு முன் சந்தித்து விடவும் அந்த சமயத்தில் கட்டாயம் அவர்களைப் பற்றி ஒரு பதிவு இடவும் ஒரு வேகம் இருந்தது. பழக்கமில்லாத ஊர், அதிகம் நண்பர்களும் இல்லை. யார் இதற்கு உதவி செய்வார் என்ற யோசனையில், எண்ணத்தில் தட்டுப் பட்டது ரேணுபாலா மொஹந்தி. மாதாந்திர லேடீஸ் க்ளப் கூட்டத்தில் வெட்டி அரட்டை நேரத்திலும் எதாவது செய்ய வேண்டும் என்ற முனைப்புடன் இருப்பது அவர் மட்டுமே. அவரிடம் அந்த சந்திப்பு நோக்கத்தைச் சொல்லி யாரையாவது தெரியுமா என்று கேட்டதற்கு விசாரித்துச் சொல்வதாகச் சொன்னார். சரியாக இரண்டாம் நாள் ஒன்றிரண்டு NGO க்களைப் பற்றிச் சொல்லி தொலைபேசி எண்ணும் தந்தார்.

முதலாவதாகக் கொடுத்திருந்த எண் தான் எனக்குத் தேவையானதாய் இருந்தது. தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது யார், என்ன, எதற்காக என்ற விபரம் கேட்டுக் கொண்டு யாரிடமிருந்தாவது அறிமுகக் கடிதம் தேவையிருக்கும், ஆனாலும் நீங்கள் விரும்பும்வது போல இந்த வாரத்தில் முடியாது, அடுத்த வாரம் பார்க்கலாம் என்று சொல்லி விட்டார். என்னுடைய நட்சத்திர வார அவசரமோ, ஆர்வமோ அவருக்கு அவசியமில்லாமல் இருந்தது.

அடுத்த படையெடுப்பு கணவரிடம். வேறென்ன அந்த அறிமுக கடிதத்திற்காகத்தான். ஏற்கனவே இதைப் பற்றிப் பேசியிருந்தாலும் 'அவசியம் போகணுமா' என்ற கேள்வியோடு வாங்கித் தந்தார். நாலுவரி அறிமுகக் கடிதத்தில் குட்டியாய் ஒரு கையெழுத்தும் மங்கலாய் ஒரு ரப்பர் ஸ்டாம்புமாய். வேறு வழியிருக்கவில்லை. அதைக் கொண்டு வர அந்த NGO அமைப்பிடம் அனுமதி கேட்டு, வரச் சொன்ன நாள் போன போது அமைப்பின் தலைவி அலுவலகத்தில் இல்லை. காத்திருந்த நேரத்தில் அவர்களுடைய சேவைகள் பற்றிய பட்டியலும் புகைப்படங்களும் சுவரெல்லாம் தொங்க, பார்க்கக் கிடைத்தது. அவருடைய காரியதரிசியிடம் விபரம் சொல்லி கொடுத்து விட்டு வந்தாலும் அவர் அதைக் காண்பிப்பாரா என்ற சந்தேகம் இருந்தது. இப்போதும் வேறு வழியிருக்கவில்லை.

அதற்குப் பின் தொடர்ந்த தொலைபேசி விசாரிப்புகளில் எப்போதும் இல்லாதிருந்தது தலைவியும், குறைவில்லாமல் இருந்தது சலிப்பும். ஒரு கட்டத்தில் 'எங்களுக்கு உங்களைப் போன்ற ஆட்களுக்கு செலவிட நேரமில்லை. நீ யாரென்று தெரியாது. எதிலோ எழுதுகிறாய் என்கிறாய்... என்ன எழுதப் போகிறாயோ, அதனால் எங்களுக்கு தொல்லை வரலாம், நீ புகைப்படம் எடுக்க வேண்டும் என்பாய், அந்த இடத்தைப் பற்றித் தெரியுமா உனக்கு? உன்னை அங்கே அழைத்துப் போகும் அவசியம் எங்களுக்கு என்ன? ' என்று சொல்லி என் தொடர் தொலைபேசி கோரிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப் பட்டது.

NGO க்களின் துணை என்ற பாதுகாப்போடு போக நினைத்தது முடியாமல் போய்விட்டது. அப்போது எழுத நினைத்த பதிவும் எழுத முடியவில்லை. இனியும் போக முடியும் என்று தோன்றவில்லை. சோனார்காச்சியும் அவர்கள் வாழ்க்கையும் இனிமேலும் அவ்வப்போது கண்ணில் படும் ஊடகங்கள் வாயிலாகத்தான்.

காஷ் மே...

12 comments:

Jayaprakash Sampath said...

சோனார்காச்சிக்கி எல்லாம் ஜஸ்ட் லைக் தட் போய்ட்டு வரமுடியாதுன்னு நினைக்கிறேன். இருந்தாலும் உங்க முயற்சிக்குப் பாராட்டுக்கள். நான் கல்கத்தாவிலே தங்கியிருந்தப்போ, அந்த ஓட்டலோட மேனேஜர், ஒரு தமிழ்க்காரர், அவர் நிறைய கதை சொல்லி இருக்கார். அதுல எத்தனை அளவுக்கு உண்மை இருக்குன்னு தெரியாததால, பொதுவிலே எழுதியதில்லை. அன்னை தெரசா இறந்தாங்க இல்லையா, அப்ப நான் அங்கே தான் இருந்தேன். அந்த சமயத்தில, ஸ்டேட்ஸ்மென் பத்திரிக்கை சப்ளிமெண்ட்டிலே, சோனார்கச்சி பத்தி ஒரு விரிவான வெய்தித் தொகுப்பை படிச்சேன். வருஷம் நினைவில்லை. கேள்விப்பட்டது, படித்தது எல்லாம் நிஜமாக இருக்கிற பட்சத்தில், நாமெல்லாம் என்ன மாதிரியான தேசத்துல வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்றே நினைக்கத் தோன்றுகிறது... பெருநகரங்கள் எல்லாமே பிளவாளுமைத் தன்மை கொண்டது... சென்னை ராதா கிருஷ்ணன் சாலை கட்டடங்களின் குளிரூட்டப்பட்ட எஸ்கலேட்டர்களுக்கும், காசிமேடு குப்பத்துக்கும் எந்தத் தொடர்புமில்லை. தாராவிக்கும் நாரிமன் பாய்ண்ட்டுக்கும் என்ன தொடர்பு.? ஒரு பக்கக் காளிகாட், ரொபீந்தர சங்கீத், ஜொல்புஷ்ப், இன்னொரு பக்கம் ஆறு வயசிலும் எட்டுவயசிலுமாக... ம்ம்ம் என்ன சொல்றது..

இருந்தாலும் வாய்ப்பு கிடைச்சால் போய்ட்டு வந்து எழுதுங்க...அருமையான டாகுமெண்டேஷனாக அமையும்.

Anonymous said...

நிம்மி, போகாத வரை பிழைச்சீங்க.
அதையெல்லாம் பார்த்துவிட்டு, நிம்மதியா தூங்க முடியுமா? என்னால முடியாதுபா!

posted by: ramachandranusha

Mookku Sundar said...

உங்க ஐடியா எல்லாம் வித்தியாசமா இருக்கு. மாமி சொன்னா மாதிரி, நல்லா தூங்குங்க :-). இதெல்லாம் எதுக்கு :-)

posted by: மூக்கு சுந்தர்

Anonymous said...

நிர்மலா: நீங்கள் வித்தியாசமானவர் என்று நண்பர்களிடம் சொன்னதை மறுபடியும் பதிவின்மூலம் நிரூபித்துவிட்டீர்கள்.

போக முடியுமா என்று தெரியவில்லை என்று சொன்னீர்கள். போய் வந்து நிம்மதியாக இருக்கமுடியுமாவென்றும் தெரியவில்லை. ஆனால், போக வேண்டும் என்று நினைத்து கடும் முயற்சியும் செய்தீர்களே! அதற்குப் பாராட்டுகள் நிர்மலா. போய் வந்தால், அந்த சூழ்நிலையைப்பற்றி எங்கள் மனதில் தங்கும்படி ஒரு தொடர் எழுதக் கூடியவர் நீங்கள். தமிழில் அப்படிப்பட்ட எழுத்துகள் வரவேண்டும். நம்மவர்களுக்கு இம்மாதிரியான விதயங்கள் தெரியவேண்டும்(ஒரு மகாநதி போதாது என்று நினைப்பவள் நான்.)

வாழ்த்துகளோடு,
மதி

posted by: Mathy Kandasamy

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

நிர்மலா: நீங்கள் வித்தியாசமானவர் என்று நண்பர்களிடம் சொன்னதை மறுபடியும் பதிவின்மூலம் நிரூபித்துவிட்டீர்கள்.

போக முடியுமா என்று தெரியவில்லை என்று சொன்னீர்கள். போய் வந்து நிம்மதியாக இருக்கமுடியுமாவென்றும் தெரியவில்லை. ஆனால், போக வேண்டும் என்று நினைத்து கடும் முயற்சியும் செய்தீர்களே! அதற்குப் பாராட்டுகள் நிர்மலா. போய் வந்தால், அந்த சூழ்நிலையைப்பற்றி எங்கள் மனதில் தங்கும்படி ஒரு தொடர் எழுதக் கூடியவர் நீங்கள். தமிழில் அப்படிப்பட்ட எழுத்துகள் வரவேண்டும். நம்மவர்களுக்கு இம்மாதிரியான விதயங்கள் தெரியவேண்டும்(ஒரு மகாநதி போதாது என்று நினைப்பவள் நான்.)

வாழ்த்துகளோடு,
மதி

Anonymous said...

------
ஒரு பக்கக் காளிகாட், ரொபீந்தர சங்கீத், ஜொல்புஷ்ப், இன்னொரு பக்கம் ஆறு வயசிலும் எட்டுவயசிலுமாக... ம்ம்ம் என்ன சொல்றது..
------
ம்ம்ம்.. அதே தான்...

உஷா, அது சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னதாவே எடுத்துக்கறேன்.

சுந்தர், அதைத்தாங்க செய்யறேன். முட்டற வரைக்கும் முட்டிப் பார்த்துட்டு, 'கரம் மசாலா' பாட்டுக் கேட்டுட்டு பேசாம தூங்கிப் போயிடறேன் :-) ஓம் ஷாந்தி ஓம் :-)

மதி, அந்த சமயத்துல அதிகம் பேரை போய்ச் சேரும் என்று தான் அத்தனை முயற்சியும். பாழாய்ப் போன ஈகோவை தலையில் தட்டி ஆன முட்டும் கெஞ்சிப் பார்த்தும்...

இன்னும் கொஞ்சம் மிச்சம் இருக்கு, பார்க்கலாம்.

posted by: nirmala

Anonymous said...

நிர்மலா
என்னமா எழுதியிருக்கீங்க
///சின்ன முணுமுணுப்பு, கொஞ்சம் சலசப்பு காட்டி வாழும் பெரும்பான்மை. ///

சலசலப்பா?
சால்ஜாப்பா?
இன்னும் நிறைய கேடகரி இருக்கு.

///'அவசியம் போகணுமா' என்ற கேள்வியோடு வாங்கித் தந்தார். ///
இது தான் உண்மை நிர்மலா
பாதுகாப்பு உணர்வு முக்கியமில்லியா?

நம்மைப்போல எல்லோரையும் நினைக்கிறோம்.
உலகம் வேறு வேறா இருக்கு.

நிர்மலா மனமிருந்தால் மார்க்கமுண்டு.
அது ஆறு வருடத்திற்கு மேலானாலும்.
இதே மனநிலையில் தூக்கமின்றியும் தூக்கத்துடனும் கழித்த நாட்கள் இல்லை வருடங்கள் எத்தனை தெரியுமா?

கொஞ்சம் களைப்பாறுங்கள்.
ஆனால் இதே நினைவுடன்.
தானாகவே சந்தர்ப்பம் உங்களைத் தேடி வரும்.
எழுதி ஒரு விடியல் தரப்போறீங்க பாருங்க.
இப்ப சொல்றேன் எழுதி வச்சுக்கோங்க நிர்மலா.



உங்களுக்கா ஈகோவா
சரி சரி
இருக்குன்னு சொன்னா தெரிஞ்சுக்கிறோம்.

posted by:

மதுமிதா said...

அய்யோ கடவுளே
மேலே இது எழுதியது நான் நிர்மலா

அன்புடன்
மதுமிதா

Voice on Wings said...

யாராவது பத்திரிகையாளர்களின் உதவியோடு உங்கள் முயற்சியைத் தொடரலாம் என்று நினைக்கிறேன்.

Anonymous said...

நன்றி மது. எட்டக் கூடிய, முடியும் இலக்குகளுக்கு மட்டுமே ஆசைப்படறேன்.

ஈகோவா... அது இருக்கு கன்னாபின்னான்னு! :-)

எனக்கு பத்திரிகையாளர்கள் யாரையும் தெரியாது Voice on Wings.

posted by: nirmala

Anonymous said...

நிர்மலா,

அது சோனார் காச்சி இல்லை. சோனார்கஞ்ச். அங்குதான் சிறு குழந்தைகளுக்கு பெரும்பாலும் திறப்பு விழா. 8,9,10 வயது சிறுமிகளைக்கூட பிளேடு வைத்து கிழித்து தொழிலில் ஈடுபடுத்துவார்கள் என கேள்விப் பட்டு மனம் நொந்தேன். கருணை என்பது துளியும் இல்லாத கொடுமைக்காரர்கள் நிறைத இடமாமே?

இன்னுமொரு காந்தி வேண்டும் பெண்களுக்கு சுதந்திரம் வாங்க!

குஸ்பு பற்றிய உங்கள் கருத்தினை எங்கோ படித்தேன். எனக்கு அதில் உடன்பாடு இல்லை. நாகரீகம் என்ற பெயரில் கல்யாணத்துக்கு முன்பு பாதுகாப்போடு உறவு கொள்வதை நான் வன்மையாகக் கண்டனம் செய்கிறேன்.

posted by: மண்ணாங்கட்டி

Anonymous said...

வணக்கம் மண்ணாங்கட்டி(!). 'சோனார்காச்சி' பேச்சு வழக்கென்று நினைக்கிறேன். போஸ்ட் செய்வதற்கு முன் Google ல் ஒரு முறை சரிபார்த்துக் கொண்டு தான் போட்டேன். அது sonagachi, sonargachi என்றெல்லாம் தகவல் கொடுத்திருந்தது. உங்கள் தகவலுக்கு நன்றி.

///8,9,10 வயது சிறுமிகளைக்கூட பிளேடு வைத்து கிழித்து தொழிலில் ஈடுபடுத்துவார்கள் என கேள்விப் பட்டு மனம் நொந்தேன். கருணை என்பது துளியும் இல்லாத கொடுமைக்காரர்கள் நிறைத இடமாமே?

இன்னுமொரு காந்தி வேண்டும் பெண்களுக்கு சுதந்திரம் வாங்க!
///

வரட்டும். மெதுவா வரட்டும்.

///நாகரீகம் என்ற பெயரில் கல்யாணத்துக்கு முன்பு பாதுகாப்போடு உறவு கொள்வதை நான் வன்மையாகக் கண்டனம் செய்கிறேன்.///

நீங்கள் எங்கேயோ(?!) என் கருத்தைத் தெரிந்து கொண்டது போல நான் இங்கே உங்கள் கருத்தைத் தெரிந்து கொண்டேன். நன்றி.

posted by: nirmala