Tuesday, November 08, 2005

புத்தகமும் கையுமாக...

கடந்த ஒரு மாதமாக புத்தகமும் கையுமாக கழிந்தது. நான்கு புத்தகங்கள். அதுவும் ஆறாம் வகுப்பு வாண்டு வாசிக்கும் பாட புத்தகம் அளவில். அதைப் படித்து ஒரு பரிட்சை. ஊதித் தள்ளி விடலாம் என்ற நினைப்பெல்லாம் படிக்க ஆரம்பித்த முதல் வாரத்திலேயே காணாமல் போய் விட்டது. படிக்கும் போது புரிகிறது. சுவாரசியமாகத்தான் இருக்கிறது. அதைப் பற்றி ஆயிரத்து இருநூறு வார்த்தைகளில் எழுது என்றால் என்ன எழுதுவது என்ற கலக்கம் வந்ததென்னவோ நிஜம். ஆனால் எழுதப் போனபோது அத்தனை சிரமமாயிருக்கவில்லை. ஏதோ ஒரு நுனியை
பிடித்துக் கொண்டு இழுக்க சில நேரம் மலையே வந்தது. சிலநேரம் கண்ணாமூச்சி காட்டிப் போனது. மொத்தத்தில் சுவாரசியமாயிருந்தது.

வாசித்த விஷயங்களோடு நிறைய விஷயங்களை தொடர்பு படுத்திக் கொள்ள முடிந்தது. ப்ராய்டுடனான காதல் கொஞ்சம் தீவிரமாகியிருக்கிறது. புத்தகஅலமாரியில் கவனிக்காமல் கிடக்கும் அவருடைய புத்தகங்களை படிக்கும் ஆர்வம் தலை தூக்கியிருக்கிறது. சாய்வு நாற்காலியில் சாய்ந்து மேலோட்டமாய் படிக்காமல் கவனமாக படிக்க வேண்டியதன் அவசியம் புரிந்திருக்கிறது. இன்னும் கொஞ்சம் ஆழமாகப் போகும் ஆர்வம் வந்திருக்கிறது. பரிட்சை முடிந்த கடைசி நாள் அப்பாவுடனான தொலைபேசி உரையாடல் ஒரு மறக்க முடியாத, சொல்ல முடியாத ஒரு உணர்வை தந்திருக்கிறது...

'அப்பா, நரேன் சென்னைக்கு பத்ரமா போய் சேந்துட்டான்'

'அப்டியா... வழியில எதாச்சும் சாப்டானா?'

'தெரியலையே... நான் பேசலை. அவர்தான் பேசியிருக்கார்'

'ஏன்? நீ எங்க போன?'

'எனக்கு மத்யானம் பரிட்சை இருந்துதுப்பா'

'அப்டியா... நல்லா எழுதுனியா?'

'மொதல் மூனும் நல்லா எழுதினேன். இன்னைக்கு அவ்வளவு சரியா எழுதல'

'ஒழுங்கா படிச்சாதான ஆகும். எப்பப்பாரு டீவியும் கம்ப்யூட்டருமா இருந்தா...'

பள்ளிக்கூடம் போற மகளை கண்டிக்கிற தொனியில் அப்பா செல்லமாக திட்டிக் கொண்டே போக, ஒரு கணத்தில் இரண்டு பேரும் சிரிக்க தொடங்க...

8 comments:

Anonymous said...

ப்ராய்டிஸம் நம்மை ஈர்ப்பதற்குக் காரணம், அது வாழ்க்கையின் நிதர்சன உண்மைகளை அலசுவதாலும் கூட.

posted by: தாணு

பாலராஜன்கீதா said...

// கடந்த ஒரு மாதமாக புத்தகமும் கையுமாக கழிந்தது. நான்கு புத்தகங்கள். அதுவும் ஆறாம் வகுப்பு வாண்டு வாசிக்கும் பாட புத்தகம் அளவில். அதைப் படித்து ஒரு பரிட்சை. ஊதித் தள்ளி விடலாம் என்ற நினைப்பெல்லாம் படிக்க ஆரம்பித்த முதல் வாரத்திலேயே காணாமல் போய் விட்டது. //

டீச்சர்,
அதற்கெல்லாம் கோனார் விளக்க உரை இல்லையா? :-))

Anonymous said...

// அதுவும் ஆறாம் வகுப்பு வாண்டு வாசிக்கும் பாட புத்தகம் அளவில். அதைப் படித்து ஒரு பரிட்சை. ஊதித் தள்ளி விடலாம் என்ற நினைப்பெல்லாம் படிக்க ஆரம்பித்த முதல் வாரத்திலேயே காணாமல் போய் விட்டது //

டீச்சர்,
அதற்கெல்லாம் கோனர் விளக்க உரை இல்லையா?
:-)


posted by: பாலராஜன்கீதா

Anonymous said...

நம் பெற்றோர்களுக்கு நாம் எப்பொழுதுமே குழந்தைதான் ;-))

posted by: பாலா சுப்ரா

Anonymous said...

அப்படித்தான் இருக்க வேண்டும் தாணு. சில விஷயங்களை மறுக்க முடியவில்லை.

பாலராஜன்... அதைவிட பெரிய ஜோக்... ரெகுலர் வகுப்பில் படிக்கும் ஒருவர் ட்யூஷன் எடுக்கட்டுமா என்று வேறொருவரிடம் கேட்டிருக்கிறார். அதுக்கென்ன சொல்றீங்க?!

பாலா... உண்மையில அவருக்கு கொஞ்ச நாளா நான் அம்மாவாட்டம் நடந்துக்கறேன்னு ஒரு நினைப்பு. அந்த நேரம் ரெண்டு பேருக்கும் பழைய நாட்களுக்கு போன திருப்தி.

posted by: nirmala

ramachandranusha said...

நிம்மி,என்னோட பெற்றோர்கள்
உங்களுக்கு ஞாபகம்
வரவில்லையா:-)
காரணம் ஒற்றை பிள்ளையாய் பிறந்ததால் இருக்குமோ? ஆனால்
அப்படி நம்மை சிறுபிள்ளையாய்
நடத்தும்பொழுது, பாவமாய் இருக்கும்.
உஷா

posted by: ramachandranusha

Anonymous said...

ஆகா... போன்லயே கை பிடிச்சு கூட்டிட்டு வந்த உங்கப்பாவை மறக்க முடியுமா?! ஆனா அதெல்லாம் நமக்குத்தான். நம்ம பிள்ளைகளுக்கெல்லாம் எல்லாம் தெரியுமாம்! என்னத்த சொல்ல!

posted by: nirmala

சுரேஷ் கண்ணன் said...

//பள்ளிக்கூடம் போற மகளை கண்டிக்கிற தொனியில் அப்பா செல்லமாக திட்டிக் கொண்டே போக, ஒரு கணத்தில் இரண்டு பேரும் சிரிக்க தொடங்க...//

:-) Nice