Thursday, January 06, 2005

சோக்கர் பாலி - A Passion Play

சோக்கர் பாலி என்ற பெயர், ரபீந்திரநாத் டாகூர், ரிதுபர்னோ கோஷ், விதவைக் கோல ஐஸ்வர்யா... இதில் எதாவது அல்லது எல்லாமோ தான் காரணமாயிருக்க வேண்டும்... சேர்ந்தார் போல நான்கு வார்த்தை பெங்காலி புரியாத போதும் அந்த சிடியை வாங்கியதற்கு.

டாகூர் எழுதிய நூறு வருஷத்திற்கு முந்தின காலக்கட்ட கதை. பினோதினி (ஐஸ்வர்யா), இளம் விதவை. விதவையாவதற்கு முன்னால் திருமணம் செய்ய வாய்ப்பு வந்த போது மறுத்துவிட்டு வெகுளிப் பெண் ஆஷாலதாவைத் (ரெய்மா சென்) திருமணம் செய்து கொள்ளும் மஹேந்திர (ப்ரொசென்ஜித்), அவருடைய நண்பர் பிஹாரி... இவர்கள் நால்வருக்கும் இடையில் நடக்கும் கதை.

முதல் சீனிலேயே படம் சட்டென்று மனதில் ஒட்டிக் கொள்கிறது. படம் சுமந்து வரும் நிறம் ஒரு காரணம். ஒரு சினிமா பார்க்கும் உணர்வே இல்லாமல்... கிராமமும் பழைய காலத்து கல்கத்தாவும்... அதில் நானும் இருப்பது போல உணர்வு. படம் 2003 - ன் சிறந்த வங்காளப் படமாக நேஷனல் அவார்ட் வாங்கியிருக்கிறது. ஆர்ட் டைரக்ஷனுக்கும் காஸ்ட்யூமுக்கும் கூட. பீரியட் பிலிம் என்பதால் ஐஸ்வர்யாவும் ரெய்மா சென்னும் (மூன்மூன் சென்னின் இரண்டாவது மகள்), பாதிப் படத்திற்கு மேல் ஜாக்கெட் இல்லாமல். ஆனால் ஒரு காட்சியில் கூட கொஞ்சமும் விரசமில்லாமல். கடைசியில் ஜாக்கெட்டுக்கு மாறிவிட்ட காரணம் புரியவில்லை!

புத்திசாலிப் பெண்ணாக, விதவைத்தனத்தை ஏற்றுக் கொள்ள மறுக்கும் கேரக்டரில் ஐஸ்வர்யா வெளுத்து வாங்குகிறார். திருமணத்தின் போது கண்களில் ஒரு நொடி தெரிந்து மறையும் மிரட்சிக்கான கிரெடிட் டைரக்டருக்குப் போகணுமோ?! அந்தக் காலத்திலேயே இப்படி ஒரு கேரக்டரை படைத்த டாகூர் ஆச்சர்யப் படுத்துகிறார். முடிவில் அவரும் பெரிய புரட்சி செய்யவில்லைதான். கிராமமும், பணக்கார கல்கத்தா வீடும், காசியும்... பார்த்துப் பார்த்து செதுக்கிய டைரக்டரின் உழைப்பு தெரிகிறது. நீள நீளமாய் வசனம் அதிகம் இல்லாததால் பெரும்பாலும் ஒன்றிப் போக முடிகிறது.

இங்கிருந்து போவதற்குள் பேச முடியாவிட்டால் கூடப் பரவாயில்லை, இந்தப் படத்தை முழுதாகப் புரிந்து கொள்ளும் அளவுக்காவது பெங்காலி கற்றுக் கொள்ள வேண்டும்.

5 comments:

Mookku Sundar said...

நேற்றுத்தான் என் நண்பர் ஒருவர் இந்தப் படம் பார்த்தேன் என்று கதை சொன்னார். எனக்குக் கூட ஆச்சரியமாக இருந்தது.தாகூர் இவ்வளவு வித்தியாசமாக கதை எழுதி இருக்கிறாரா என்று...??

ஆனால், இதெல்லாம் இப்ப சாத்தியமா டீச்சர்..?? ( அதாவது, பெண்கள் தன் மனதில் நுழைந்த முதல ஆணை அவ்வளவு சீக்கிரம மறப்பதில்லை என்று..?!!!)

நானும் படம் பார்க்கிறேன்.

Nirmala said...

நம்புவீங்களா? நேத்து இதோட ஹிந்தி வர்ஷன் எதேச்சையா ஒரு பெங்காலி மூவி சேனலில் பார்க்கக் கிடைத்தது. ஒரு அரை மணி நேரம் படம் போய் விட்டிருந்தது.

அப்போதான் தெரிந்தது நான் புரிந்ததை விட அந்த கேரக்டர் இன்னும் ஆழமானது என்று. நானும் என் மகளும் சேர்ந்து பார்த்தோம். அந்தக் கேரக்டரின் தவிப்போடும் குழப்பங்களோடும் நான் சேர்ந்து பயணிக்கும் போது இது ஒரு vendictive character என்பது மகளுடைய கருத்து!

பெங்காலியில் பார்க்கும் போது அந்த முடிவில் புரட்சி இல்லாதது போல தோன்றினாலும் நேற்று புரிந்து பார்த்த போது அதுவும் ஒரு புரட்சிதான் என்பதை மறுக்க முடியவில்லை.

அப்புறம்... மனசுக்குள் நுழைந்த முதல்... ஏன் யாரையுமே மறப்பதில்லை! அது ஆணுக்கும் சரி பெண்ணுக்கும் சரி. இல்லையா?

icarus prakash said...

ரெய்ன் கோட் பார்த்தீங்களா?

Nirmala said...

இன்னும் இல்ல ப்ரகாஷ். ஒரு வேளை நாளைக்கு!

Mookku Sundar said...

உணர்வுகள் பொது என்று புரிகிறது. ஆனா, இன்றைய வேக உலகத்தில், இந்த மாதிரி மெல்லிய உணர்வுகளுக்கெல்லாம் இன்னமும் உயிர் இருக்கிறதா என்று..??

ச்சே..ஐ வாஸ் ஃபூலிஷ் தோஸ் டேஸ் ன்னு எல்லோரும் சொல்லுவாங்கன்னு ஒரு சம்சயம். அதான் கேட்டேன்.

இன்னமும் நல்லபடியா நியாபகம் வச்சிருந்தா சரிதான்.