காட்டூர் வீட்டில் ஒரு அட்டாலி இருந்தது. மாமாங்கத்திற்கு ஒரு முறை யாராவது
ஏறி எதையாவது தேடுவார்கள். பெரும்பாலும் என் அக்காக்கள் அல்லது எங்கள்
தாத்தா. எனக்கு ஏணி என்றால் பயம். ஏறும் போது படிகளுக்கு நடுவில் கால்
விட்டு கீழே விழுந்து விடுவேன் என்று சர்வ நிச்சயமாக நம்பினேன். அதனால்
யாராவது ஏறும் போது கீழே காத்திருக்கும் கூட்டத்தில் தான் எப்போதும்
இருப்பேன். எதைத் தேடச் சொல்லி அனுப்பினார்களோ, அது பெரும்பாலும்
பாட்டியாகத்தான் இருக்கும், இன்ன இடத்தில் இதுக்குள்ளே இருக்கும் என்று
உரக்கச் சொல்ல மேலே இருப்பவர்கள் அதை தேடு தேடென்று தேடுவது எப்போதும்
நடக்கும். ஏறியதே இல்லையாததால் அட்டாலி எப்போதும் எனக்கு ஒரு மனச் சித்திரம் தான்.
அந்த அட்டாலி ஒரு முறை மொத்தமாக காலியாகி ஒரு ஆறு மாத இடைவெளியில் மறுபடியும் நிறப்பப் பட்டது. வீட்டை காலி செய்து விட்டு குடியிருந்த வீட்டையே சொந்தமாக்கிக் கொண்டு திரும்பியிருந்தோம். அன்றைக்கு அம்மாவுக்காகவா அல்லது சும்மாவாச்சும் பார்க்கலாமென்றோ கௌரி அட்டாலியில் ஏற முடிவு செய்தாள்.
கௌரி என் பதின்ம வயது தோழி. வீட்டின் பின் போர்ஷனில் குடியிருந்தார்கள். ஒரே வயது. எதிர் எதிர் ரசனைகள், சுபாவக்காரர்கள். கமலஹாசனும் பாலகுமாரனும் இல்லையென்றால் விரோதிகளாயிருப்போம். ஆனாலும் ஒரு கட்டத்திற்கு மேல் எண்ணங்களாலும் செயல்களாலும் ஒன்றாகிவிட்டிருந்தோம். எனக்கு எஸ்பிபி, அவளுக்கு ஜேசுதாஸ். நான் சகலத்திற்கும் பயப்படுவேன். அவளுக்கு பயமே கிடையாது. கடைக்கோ கல்யாணத்துக்கோ போக வேண்டி வந்தால் அப்பா அம்மா பக்கத்து வீட்டில் சொல்லி விட்டுப் போவார்கள், பொண்ணு வீட்ல தனியா இருக்கா, கொஞ்சம் பாத்துக்கோங்க, என்று. அவள் அம்மாவும் அண்ணனும் இலங்கைக்கு இரண்டு மாதம் போயிருந்த போது தானே சமைத்து சாப்பிட்டுக் கொண்டு அவர்களுடைய போர்ஷனில் தனியாக இருந்தாள். இதுவெல்லாம் 82- 83ல் என் யோசனையிலேயே உதித்திருக்காது. எல்லா விஷயத்திலும் தெளிவாக உறுதியா இருப்பாள். எதையாவது செய்ய வேண்டும் என்று நினைத்தால் எப்படியும் நடத்தி விடுவாள். அன்றைக்கு அவளுக்கு அட்டாலியைப் பார்க்க வேண்டும் என்று இருந்தது. அதுவும் தான் மட்டுமல்ல, நானும் வர வேண்டும் என்று. என்னுடைய எந்த சமாதானங்களும் செல்லவில்லை. நான் பார்த்துக் கொள்கிறேன், நீ ஏறித்தான் ஆக வேண்டுமென்று பிடிவாதம் பிடித்தாள். எப்போதும் போல அப்போதும் அவள் சொன்னதுதான் நடந்தது. ஒவ்வொரு படிக்கும் வீல் வீலென்று அலறி ஒரு வழியாக மேலே ஏறிவிட்டோம். படபடப்பு அடங்கவே எனக்கு கொஞ்ச நேரமானது.
அதற்குப் பிறகு ஆரம்பித்தோம் எங்கள் தேடல் வேட்டையை. எங்கள் தாத்தா காலகாலமாக சேர்த்தி வைத்திருந்த பைப்புகள், சைக்கிள் டயர்கள், அடைசல்கள், பாட்டியின் அண்டா குண்டாவெல்லாம் விலக்கிய போது அது கிடைத்தது. மரத்தில் செய்து கறுப்பு வண்ணம் பூசி நான்கு பக்கமும் குமிழ் வைத்த ஒரு அடி நீளமும் அதற்கும் குறைவான அகலமும் உள்ள ஒரு தொட்டில். கோவில்களில் ஊஞ்சல் சேவைக்கு உபயோகப் படுத்துவது. அது எப்படி அங்கே என்று யாருக்கும் தெரியவில்லை. அதற்குள் ஒரு புத்தகம். மலர்மஞ்சம் என்றிருந்தது. பழுத்து மஞ்சள் நிறமாகி லேசாக மொடமொடக்கத் தொடங்கியிருந்தது. முதல் பக்கத்தில் தாத்தாவின் பெயரும் ஏதோ தேதியும் இருந்ததாக ஞாபகம்.
அப்போதெல்லாம் ரெண்டு பேருக்கும் பாலகுமாரன் பித்து பிடித்திருந்தது என்றாலும் புத்தகமென்று எது கிடைத்தாலும் வாசித்திருந்தோம். ஆசிரியர் யாரென்றெல்லாம் பார்க்கவில்லை. வாசிப்போமென்று கொண்டு வந்தோம். நாலைந்து நாட்களுக்குள் ரெண்டு பேரும் வாசித்து விட்டோம். கௌரிக்கு எப்படி இருந்தது என்று நினைவில்லை. நான் பாலியாகி மஞ்சக் கொல்லையில் குடித்தனம் நடத்த ஆரம்பித்து விட்டிருந்தேன். ராமையா அப்பா கையை பிடித்துக் கொண்டு ஊர் சுற்றினேன். தஞ்சாவூருக்கு ரயில் ஏறினோம். தூக்கனாங்குருவி கூட்டை ரசித்ததும், டாக்டர் மாமா, அவர் பேரன், நாட்டியமாடியதுமாய் கதையோடு வாழத் தொடங்கியிருந்தேன். கதையில் அவள் சென்னைக்குப் போன பிறகு பாலியும் நானும் வேறாகியிருந்தோம். ஆனாலும் அவளுடைய ஆசைகளும் அலைக்கழிப்புகளும் எனதாயிருந்தது. அவளுடைய காதலையும் தடுமாற்றங்களையும் நானும் சுமந்திருந்தேன். டாக்டர் மாமா பேரன் ரோஜா மாலையைப் போட்ட போது என் கழுத்தில் குறுகுறுத்தது.
முப்பத்திச் சொச்சம் வருடங்கள் கழித்து இப்போது நினைக்கும் போதும் அதை லேசாக உணர முடிகிறது. கொண்டாடித் தீர்த்திருந்தேன். பின்னாளில் அது திஜாவின் புத்தகம் என்றும் மோகமுள்ளென்று அவருடைய மாஸ்டர் பீஸொன்று இருப்பதைக் கேள்விப் பட்டதும் அதிலும் தலைகுப்புற வீழ்ந்து மூழ்கினேன்றாலும் மலர்மஞ்சம் முதல் காதல் போல மறக்க முடியாதது.
கௌரி சொல்லச் சொல்ல கேட்காமல் அதை யாருக்கோ வாசிக்கக் கொடுத்து அதை அவள் தாள் தாளாகப் பறக்க விட்டதற்கான முழு பொறுப்பும் என்னைச் சேர்ந்தது. என் தாத்தாவுடைய பெரிய பொக்கிஷத்தை தொலைத்திருக்கிறேன். பின்னாளில் என் சேகரிப்பிற்காக இன்னொரு புத்தகம் வாங்கிவிட்ட போதும் என் ஞாபகத்தில் மலர்மஞ்சமென்றால் அது மட்டும் தான் இருக்கிறது.
பி.கு: ராயர் காபி க்ளப்பில் மலர்மஞ்சம் பற்றி முதல் முதலாக எழுதியிருந்தேன். என்ன செய்தும் அதன் எழுத்துரு மாற்ற முடியவில்லை. இன்றைக்கு திஜாவும் கௌரியும் எதற்கோ காலையிலிருந்து தொந்தரவு செய்ததால் மனசிலிருந்து வந்த மீள் பதிவு. இப்போது அந்த மலர்மஞ்சத்தில் என்ன எழுதினேன் என்று வாசிக்க ஆவலாயிருக்கிறது.

1 comment:
பரணில் இருந்து ,மனசில் மஞ்சம் போட்டவரா
தி.ஜா.
மிக அருமை நிம்மா. மலர்மஞ்சம் யாருக்குக் கொடுத்தேன் என்று
நினைவில்லை. இப்போது படிக்க புத்தகங்கள் தீரும்
நேரம் அந்த நினைவு வருகிறது.
உணர்ச்சிகள் நிறைந்த, நிகழ்ச்சிகளும் நிறைந்த புத்தகம். எனக்குப் பிடித்தது அன்பே ஆரமுதே தான்.
Post a Comment