Thursday, April 27, 2017

ஒரு முகமூடியின் ஒப்புதல் வாக்குமூலம் - யுகியோ மிஷிமா. தமிழில் கார்த்திகைப் பாண்டியன்

சமீபகாலத்தில் இரண்டே நாட்களில் வாசித்து முடித்தது இந்தப் புத்தகத்தைத்தான். புதினங்கள் மெல்ல அதன் சுவாரசியத்தை இழக்க நிஜங்களைச் சொல்லும் எழுத்துகள் அந்த இடத்தை நிரப்பிக் கொள்ளத் தொடங்கிவிட்டது. சுய சரிதை என்பதுதான் முதல் கொக்கி. பிறழ்ந்த காமம் இரண்டாவது. அதிர்ச்சியோ முன்முடிவுகளோ இல்லாமல் வாசிக்க முடியும் என்பதில் சந்தேகமில்லாததால்தான் ஆரம்பித்திருந்தேன். தெரிந்த விஷயங்களும் என் எல்லைகளை மீறிச் சென்றவைகளையும் வாசிப்பதில் இருந்த ஆர்வம் உள்ளே இழுத்துக் கொண்டது.

1930களில் பிறழ்ந்த காமம் எந்த சமுதாயத்திற்குமே ஜீரணிக்க முடிந்திருக்காது. தானே அதை புரிந்து கொள்ள முயற்சித்ததும் உறுதி செய்து கொண்டதுமான போராட்டம்தான் இந்த புத்தகம். எல்லோருமே ஒன்றின் மேலொன்றாக முகமூடிகளோடிருக்க தான் மட்டும் ஒரு அசாதாரண, கூடுதல் முகமூடி அணிந்து கொள்ள வேண்டி வந்தது பெரிய உறுத்தலாகிறது. சுற்றியுள்ள மொத்த உலகமும் ஒரு ஒழுக்கில் ஓடிக் கொண்டிருக்க தான் மட்டும் வேறு. அதை யாரிடமும் சொல்ல முடியாத போது இப்படியாகத்தான் பதிந்து வைக்க வேண்டியிருந்திருக்கும். அதை ஒரு வெறித்தனத்தோடு கொஞ்சமும் பாசாங்கில்லாமல் மேசையிலிட்டு கிழித்து பரப்பி வைப்பதில் ஒரு சுயவதை, ஒரு திருப்தி. அத்தனை கால தனிமையையும் துயரத்தையும் இப்படி அல்லாமல் வேறெப்படியும் வெல்ல இயலாதுதான்.

ஆரோக்கியம் குன்றிய உடல், தனிமைப் படுத்தப்பட்ட நாட்கள், வாசிப்பு, தன்னை அறிதல் என்று நீளும் புத்தகத்திற்கு இரண்டு மொழிகள். எளிமையாக சொல்லிக் கொண்டே போகும் மொழி அங்கங்கே மடங்கி மடங்கி முடிவில்லாமல் நீள்கிறது. முடியாத வரிகளில் தொலைந்து போகும் போது வருவது நிச்சயமாக ஆர்வம் அல்ல, பெரும் சலிப்பு. அது மூல நூலின் மொழியா, மொழிபெயர்ப்பாளருடையதா தெரியவில்லை. மூல நூலுடையதாக இருக்கும் பட்சத்திலும் வாக்கியங்களை சுருக்கும் சலுகை மொழிபெயர்ப்பாளருக்கு இருக்கும் என்றே நினைக்கிறேன். ஏழெட்டு வரிகளுக்கு நீளூம் வாக்கியங்களும் வார்த்தைகளின் நேரடி மொழிபெயர்ப்புகளும் பெரிய குறை.


 //ஒருவிசயத்தை அதன் மொத்தமும் தவறானது என்று தீர்மாணிப்பது அதன் எந்தப் பகுதி உண்மையானது அல்லது எது பொய்யானது போன்ற சந்தேகங்களால் என்னைச் சித்திரவதை செய்வதை விடச் சற்றே வலி குறைந்தது என்பதைக் கண்டறிந்து விட்டதால், நிதானமாக முகமூடிகளைக் களைவதன் மூலம் என் பொய்மையை எனக்குணர்ந்திய இந்த வழிமுறைக்கு ஏற்கனவே நான் மெல்ல மெல்ல பழகியிருந்தேன்//

//தொண தொணக்கும் பெட்டி//

// மேலும் ஒழுங்கீனம்தான் என்னுடைய இயல்பின் அடிப்படையாகவும் முழுமுதற் கொள்கையாகவும் இருந்ததால், ஒரு பெண்ணுடனான குற்றம் சொல்லவியலாத உறவில், எனது நன்மதிப்புக்குரிய நடத்தையில், மேலும் உயரிய கொள்கைகளையுடைய மனிதனாக நம்பப்படுவதில், நல்லொழுக்கம் நிரம்பிய தீவிர உணர்வை நான் கண்டுபிடித்தேன்.//


ஆனாலும் இரண்டே நாட்களில் வாசித்து முடித்தேன்.

2 comments:

கார்த்திகைப் பாண்டியன் said...

உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. மொழிபெயர்ப்பில் எனக்கென சில வரைமுறைகளை வைத்திருக்கிறேன். எக்காரணம் கொண்டும் மூல மொழியில் உள்ள வாக்கியங்களை மாற்றக்கூடாது, அவற்றின் அதே சாரத்தோடு மொழிபெயர்க்க வேண்டும் என்றே நம்புகிறேன். முடிந்தமட்டும் மிஷிமாவுக்கு நியாயம் செய்திருப்பதாகவும் நம்புகிறேன். இந்த நாவலின் முதல் இரண்டு அத்தியாயங்களில் உடல் மற்றும் நினைவுகள் சார்ந்து தன்னுடைய பிரச்சினைகளைக் கடுமையான மொழியில் பேசும் மிஷிமா காதல் வயப்படும் மூன்றாம் அத்தியாயம் தொடங்கி மொழியை இலகுவாக்கி விடுகிறார். மொழிபெயர்ப்பிலும் அந்த பாணியைத்தான் கடைபிடித்துள்ளேன். இது என்னை நியாயப்படுத்தும் வார்த்தைகளல்ல, மாறாக, மொழிபெயர்ப்பின் அந்தக்கூறுகளை நீங்கள் கண்டுபிடித்திருப்பதால் உண்டாகும் மகிழ்ச்சியினை உங்களோடு பகிர்ந்து கொள்ளவே. வாசிப்பிற்கும் பகிர்தலுக்கும் நன்றி.

பிரியமுடன்,
கார்த்திகைப் பாண்டியன்

Nirmala. said...

நன்றி கார்த்திகைப் பாண்டியன். பிரயாணத்தில் இருந்த போது பார்த்தது, திரும்பி வந்த பின் மறந்தே போயிருக்கிறேன்.

/எக்காரணம் கொண்டும் மூல மொழியில் உள்ள வாக்கியங்களை மாற்றக்கூடாது, அவற்றின் அதே சாரத்தோடு மொழிபெயர்க்க வேண்டும் என்றே நம்புகிறேன். முடிந்தமட்டும் மிஷிமாவுக்கு நியாயம் செய்திருப்பதாகவும் நம்புகிறேன்./

இதற்கு மேல் நான் சொல்ல எதுவும் இல்லை. வாசிப்பதில் உணர்ந்ததை பகிர்ந்திருந்தேன். மிஷிமாவிற்கே இரண்டு வடிவங்களில் எழுத வேண்டிய அவசியம் இருந்திருக்கலாம். புரிந்து கொள்ள முடிகிறது.

நன்றி.

நிர்மலா.