Wednesday, August 17, 2016

காசி - 2016



முதல்முறையாக காசி வந்த போது அழுக்கும் கசகசக்கும் கூட்டத்தையும் தாண்டி ஒரு படகுப் பயணத்தில் தான் அதன் புராதனம் தீண்டியது. ஒரு போதியைப் போல நின்று, நானா அழுக்கு! உன்னை மாதிரி எத்தனை பேரைப் பார்த்திருப்பேன் என்று கேட்ட போது அந்த எத்தனையில் இருந்த பிரமிப்புதான் முதல் கண்ணி. அதற்குப் பிறகு என்ன தேடுகிறேன் என்றே தெரியாமல் ஒவ்வொரு தடவையும் வந்ததும் ஒவ்வொரு தடவையும் எதையாவது புதிதாகப் பார்த்து அதையே இன்னும் விஸ்தாரணமாக பார்க்க இன்னொரு முறையென்று... என்னையும் என் காசி பயணங்களையும் தெரிந்தவர்களுக்கு ஒரு மெல்லிய சலிப்பு தொனிப்பது நன்றாகவே தெரிந்த போதும் நான் வந்து கொண்டுதான் இருக்கிறேன்.

சென்ற முறை வந்து சென்ற போது அடுத்த காசி பயணம் என்பது படித்துறையில் நேரம் காலமில்லாமல் உட்கார்ந்திருப்பதும் சலிக்காமல் கங்கையைப் பார்த்திருப்பதுமாய் இருந்தது. ஒன்றரை வருடங்களுக்கு முன்பே கங்கைக் கரையில் ஒரு இடம் பார்த்து வைத்து கிளம்பத் தோதுவான சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தேன். ரெண்டு ஜன்னல் வைத்து படுக்கையிருந்து பார்த்தாலே கங்கை தெரிவது போல. ஒரு மாலையில் வந்து சேர்ந்த போது அந்த இடம் நான் யோசித்த மாதிரியே இருந்தது. கங்கை மட்டும் தான் நான் இதுவரை பார்த்ததெல்லாம் எதுவுமே இல்லை என்பது போல இந்தக் கரை அறை சுவர் வரைக்கும், ஆழத்தில். எதிர்க்கரை எங்கேயோ தொலைதூரத்தில். பெருக்கெடுத்து ஓடும் நதியைக் கேள்விப்பட்டிருக்கிறேன். கங்கையை கடலாகப் பார்ப்பேன் என்று கொஞ்சமும் நினைக்கவில்லை. 
 
 
விடுதிக்காரர் சொன்னது, நீங்க கேட்டது முன்னூறு வருடப் பழமையான அறையென்று. இருக்கும் தான். எண் கோணத்தில் கருங்கல்லால் கட்டப் பட்டு மேலே ஒரு டோம் வைத்து, ரெண்டு ஜன்னல்களும் திறக்காமல் இறுகிப் போயிருந்தது. பால்கனி கதவைத் திறந்தால் ஒற்றைப் படிக்கட்டும் ஒன்றரை அடி வராந்தாவும் அதே ஒன்றரை அடி உயரத்தில் ஒரு சுற்றுச் சுவரும். அறையின் தரையிலிருந்து சற்றே நீட்டினால் காலை அந்தச் சுற்றுச் சுவரில் வைத்து விடலாம். வைத்து ஒரே தாண்டாகத் தாண்டி குதிக்க வேண்டுமென்ற ஆவலும் வராமலிருக்கவில்லை. கண்ணுக்கெட்டின தூரம் வரையில் தண்ணீராய், சிறு வேகத்தில் நகர்ந்து கொண்டேயிருக்கும் நதியைப் பார்க்கும் போது ஒவ்வொரு சமயமும் ஒவ்வொன்றாய் தோண்றியது. ஒருவகையில் இது சுய தரிசனம். சில நேரங்களில் அதில் மூழ்கிப் போவோமென்று. சில நேரங்களில் அதன் ஒழுக்கிலே மிதந்து போகலாமென்று. நீச்சல் தெரியாத போதும்! சில நேரம் பரவசமாய். இருள் பிரியாத ஒரு காலை நேரத்தில் மழையும் சேர்ந்து கொள்ள பயமூட்டுவதாய். 

அறையிலேயே பெரும்பாலான நேரத்தை கழித்திருந்தேன். எதை செய்து கொண்டிருந்தாலும் கொஞ்ச நேரத்திற்கொரு முறை எழுந்து கதவைத் திறந்து நின்று கொண்டிருக்கச் சொன்னது. முதல் நாள் மதியம் அந்த கதவைப் பார்த்து படுத்துக் கொண்டே புத்தகம் வாசித்துக் கொண்டிருக்க இடைக்கொரு முறை வெளிச்சம் மாறும் போது புத்தகத்திலிருந்து கண்ணெடுத்து வெளியே பார்க்கப் பார்க்க தீராதிருந்தது. அடுத்த நாள் குரங்கு மிரட்டினதில் கதவைச் சாத்தி வைக்க வேண்டியதாகப் போயிற்று. 

நாய் வளர்க்கிறவர்களிடம் அதைப் பற்றிப் பேசும் போது அவர்கள் அவன்/ள் என்று பெயர் சொல்லிப் பேசிப் போக நாம் நாய் என்று சொல்லி அதிலிருந்து சுதாரிக்க முயன்று, முடியாமல் தோற்று... அதே போல நான் நதிக்கரையில், ரிவர் ஃபேசிங் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்க இங்கிருப்பவர்களுக்கெல்லாம் அவள் கங்கா மய்யா அல்லது கங்காஜி. வியாபாரமாகவே இருந்த போதும் பக்தி போலியில்லாமல் இருக்கிறது.

சென்ற முறை வந்திருந்த போது ஊருக்குள்ளே அறை எடுத்து தங்கியிருந்தேன். ஒருநாள் காலை அஸ்ஸி காட்- டில் வந்திறங்கி படித்துறையிலேயே நடக்க ஆரம்பித்து மணிகர்னிகா வரை வந்திருந்தேன். அதற்குப் பிறகு கல்பாளச் சந்துகளில் நடக்க ஆரம்பித்த போதுதான் பெட்டி படுக்கைகளோடு அந்த சந்துகளில் இருந்த விடுதிகளைத் தேடி வெளிநாட்டவர்கள் தங்கப் போய்க் கொண்டிருந்ததை பார்த்திருந்தேன். பாஷை தெரியாத ஊர் தெரியாத இவர்களெல்லாம் தங்கும் போது நமக்கென்ன பயமென்று தான் இப்படி ஒரு இடத்தைத் தேர்வு செய்திருந்தேன். காலையில் எழுந்து கண் விழித்து ஜன்னல் கதவைத் திறந்தால் கங்கை தெரிய வேண்டும் என்று. இந்த முறை தெரிந்ததெல்லாம் கங்கை, கங்கையைத் தவிர வேறில்லை. எந்த காட்-டும் ஒற்றைப் படி மிச்சமில்லாமல் நீராழத்தில் மூழ்கி. 
 
இரண்டாம் நாள் மணிகர்ணிகா போக காட்-டில் வழி இல்லாததால் ரோட்டிலே போக வழி கேட்ட போது ஒரு குறுகலான சந்தைக் காட்டி, துணைக்கு வரணுமா என்று கேட்டவரை தவிர்த்து நடக்க ஆரம்பித்தது நல்லதாயிற்று. போக வேண்டிய இடத்தை மனதில் கொண்டு பாதையை தேர்வு செய்வது அவ்வளவு சிரமமில்லை. தட்டுத் தடுமாறியாவது போய்விட முடிந்தது. GPS ம் கூகிள் மேப்பும் இல்லாத காலங்களில் எத்தனை பயணங்கள் காரிலே போயிருந்தோம். இப்போது ஒவ்வொரு சந்து திரும்பும் போதும் மேப்பை வழி கேட்கிறோம்! வழியிலே எதேச்சையாக கேட் எண் -2 வந்ததும் கோவிலுக்குள் நுழைந்து விட்டேன். கோவில் பூராவும் வெள்ளை பளிங்கு கற்கள் பதித்த புண்ணியவான் யாரோ! அநியாயத்திற்கு வழுக்குகிறது. முதல் முதலாக பார்த்த காசி கோவில் இது மாதிரி இருந்ததாக நினைவில்லை. திரும்பின பக்கமெல்லாம் சிவலிங்கங்கள். கங்கையிலிருந்து நீர் கொண்டு வந்து நாமே லிங்கங்களில் ஊற்றும் வசதியிருக்கிறது என்பதால் எல்லா இடங்களும் தண்ணீர் கொட்டி, அதனாலே எல்லா இடமும் வழுக்குகிறது.
 
நகரத்தாரின் விசாலாட்சியைப் பார்க்கச் சொல்லி துளசி சொல்ல, வராஹியை பார்க்கச் சொல்லி ராஜி சொல்ல, கேட் நம்பர் ரெண்டுக்குப் பக்கத்தில் எங்கேயோ என்று மேப் சொல்ல அதைத் தேடி மூன்றாவது நாள். விசாலாட்சி கோவில் வாசலில் செருப்புகளை கழட்டி மாட்ட வசதியாக போட்டிருந்த ஸ்டீல் பெஞ்சில் வெள்ளைச் சட்டை வேட்டி கட்டி விபூதி பூசி பழுத்த பழம் போல் இருந்த பெரியவர், உக்காந்துக்கோ என்ற உடல் மொழியோடிருந்தார். திரும்பி வந்த போதும் அதே இணக்கம். எண்பது வயசுக்கு மேல் எண்ண மறந்து விட்டாராயிருக்கும். அவர் சொன்ன எண்பது வயதையெல்லாம் எப்போதோ கடந்திருப்பார். மனைவி இல்லை. வீட்டிலே மருமகள் இருக்கிறாள் என்றார். அவரோடு ஒரு செல்ஃபி எடுக்க நினைத்து வேண்டாமென்று விட்டு விட்டேன். காண்பதெல்லாம் போட்டோவாகக் கூடாது. சில விஷயங்கள் வெறும் ஞாபகங்களாய் மட்டுமிருக்க வேண்டுமென்பதில் அவரை வைத்திருக்கிறேன்.  

 வராஹி வேறொரு சந்தில் இருந்தாள். காலை மட்டும் தான் தரிசனமாம். கோவில் மூடியிருக்கும் என்று வழி கேட்டவரெல்லாம் சொன்ன போதும் வாசல் வரை போய் வந்தேன். இடையில் இருப்பது ஒரு கதவுதானே!

மூன்று ஆள் அகலம்தான் இருக்கிறது ஒவ்வொரு சந்தும். அதிலே தவறாமல் ஒரு மாடு நிற்கிறது. பயந்து ஒதுங்கி செல்லும் உள்ளூர்வாசிகள் எல்லா நேரமும் இவை இத்தனை சாதுவாயிருக்காது என்று உணர்த்திப் போகிறார்கள். சாணமும் வீட்டுக் குப்பைகளும் வழியெல்லாம் இறைந்து கிடக்கிறது. அதில் விசேஷம் என்னவென்றால் எல்லாம் அன்றைய வெங்காயத் தோலும் வேண்டாமென்று வீசின சாப்பாட்டு பொருட்களும் தான். ஒவ்வொரு நாளும் புதிதாக குப்பை சேர்க்கிறார்கள். குப்பை ப்ரெஷ்ஷாக இருக்கிறது. ஊரையும் நிர்வாகத்தையும் குறை சொல்லிப் பிரயோஜமில்லை. வேறெங்காவதென்றால் இதையெல்லாம் சகித்திருப்பேனா என்றால் சந்தேகம் தான். இங்கே சலிக்காமல் சுத்த முடிந்தது. நாலு வயதுப் பெண் குழந்தைக்கு வேண்டிய காலுறை போட்டு ஒரு வெளிநாட்டு தம்பதி அந்த அழுக்குத் தெருவுக்குள் இயல்பாக நடத்திக் கூட்டிக் கொண்டு போனதை ஆச்சர்யத்தோடு பார்த்திருந்தேன். இந்த ஊரில் என்ன இருக்கிறதென்று இத்தனை நாள் இருக்க வந்திருக்கிறாய்/இத்தனை தடவை வருகிறாய் என்று கேட்ட சொந்தக்காரரிடம் பெரிதாக விளக்கம் அளிக்கவில்லை.

தங்கியிருந்த அறையிலிருந்து நூறு மீட்டர் தூரத்தில் இதே போல் நதிக்கு கொஞ்சம் மூக்கைத் துருத்திக் கொண்டிருக்கும் அறையில் ஒரு வயதான தம்பதிகளின் குடித்தனம். தினமும் காலை எட்டரை ஒன்பது மணிக்கு இரண்டாக மடங்கிய ஒரு அம்மணி குளித்து துவைத்த துணிகளோடு என் அறை போலவே இருக்கும் பால்கனியில் வரிசையாக காயப் போடுகிறார். மற்ற நேரங்களில் நிழல் நடமாட்டம் கூட இல்லை. இவர்களுக்கெல்லாம் கங்கை சலித்திருக்குமென்று நினைத்த என்னை ஏமாற்றி ஒரு மதிய நேரம் வெறுமனே கங்கையை பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறார்.

ஊர் இந்த மழை நாட்களில் பசுமை சாம்ராஜ்யம். புழங்காத கட்டிடங்களின் புழங்காத தன்மைக்கேற்ப பச்சை பூத்திருக்கிறது. சுவர் இடுக்கு, சந்து பொந்தெல்லாம் செடிகளும் கொடிகளும். காட்டுக் கொடிகளின் வளமையைப் பார்க்கும் போது டார்த்தீனிய காடுகளாய் கட்டிடங்களை மூடிவிடும் போலிருக்கிறது. இண்டு இடுக்கிலெல்லாம் மரம் தளைத்து நிற்கிறது. நான் தங்கியிருந்த அறையின் வெளிச்சுவரில் பதினைந்து இலைகளோடு ஒரு அரச விழுது.

அடுத்த கட்டிடத்தில் என்னவோ இருக்கிறது. தினமும் காலையில் ஐந்து சிவப்பு மூக்கு கிளிகள் ஆஜராகிவிடும். நாள் பூராவும் பறப்பதும் அந்த ஜன்னலைப் பார்த்து உட்கார்ந்திருப்பதும் சாயந்தரமானால் கிளம்பிப் போவதும். நாலு நாளும் காலை கண் விழிப்பதே கிளிப்பாட்டு கேட்டுத்தான். அதைத் தவிர நாளெல்லாம் பெரிய வேறு சத்தமேதுமில்லாமல் நிசப்தமாய்.

பிரம்ம முஹூர்த்த சாதுக்கள் நடமாட்டம்... வாய்க்கவில்லை. காட்- டில் உட்கார்ந்து மனிதர்களை வேடிக்கை பார்க்க நினைத்தது நடக்கவில்லை. ஏழு நாள் தனியாக, வேண்டிய மட்டும் பார்த்துத் தீர்க்கப் போகிறேன், என்று நினைத்ததற்காகவே எந்த காட்-டையும் கண்ணில் கூடக் காட்டவில்லை. ஆனால் காசியில் இறங்கி அறைக்கு வந்த நிமிஷத்திலிருந்து நான், இங்கே இந்த கணம் என்பது மட்டுமே நினைவிலிருந்தது. அலைக்கழிக்கும் யோசனைகளோ இலக்கில்லாத சிந்தனைகளோ அறவேயில்லை. உடலளவில் மனதளவில் நேற்று வரையிலான உலகத்திலிருந்து வலியில்லாத துண்டிப்பாயிருந்தது. பனிரெண்டு வருஷம் முன்னால் எழுதின கவிதை முதல்முறையாக முழுக்க நிஜமானது. நாலுநாளும் அதை துளி சிந்தாமல் அனுபவித்தேன். ஐந்தாம் நாள் கொட்டித் தீர்த்த மழையும் உயர்ந்து கொண்டே இருந்த நீர் மட்டமும் பயமுறுத்த வேறு இடத்திற்குக் கிளம்பிப் போய்விட்டேன். இனிமேலும் இது போன்ற பயணங்களுக்காக இதை பத்திரமாக முடிக்க வேண்டிய கட்டாயம்.

இன்னமும் தெரியாத இடங்களுக்குப் போகும் துணிச்சல் வரவில்லை. அதிக தொலைவிலில்லாத, எதாவது மனதிற்குப் பிடித்த இடத்திற்கு ரெண்டு நாளாவது யாருமில்லாத தனிமைப் பயணத்தை சர்வ நிச்சயமாக பரிந்துரைக்கிறேன். நீங்கள் தனிமை விரும்பியாக இருந்தால் யோசிக்கவே வேண்டாம்.

எட்டாவது நாள் நான், மீண்டும் வட்டத்தில். அடுத்த ஏழுநாள் எனக்கே எனக்காய்.. எங்கே எப்போது...

ஏழு நாள் எனக்கே எனக்காய்

ரெண்டு மாற்றுத்துணி

செலவுக்கு உரைக்க

சின்னதாய் ஒரு அட்டை

ஒரு புத்தகம் ஒரு வாக்மேன்

கஸலாய் ஹரிஹரன்
துள்ளூம் ரஹ்மான்

முதுகில் தொங்கும் சிறு பையில்
 
வீசி நடக்க வேண்டும் எனக்கு.


வெயில் உரைக்காத
துளிர் மழை நாளில்
ஆளில்லாத ரயிலில்
இரண்டாம் வகுப்பில்


ஆச்சா ஆச்சாவெனும்
கணவன்
அலுத்துக் கொள்ளும்
குழந்தைகளின்றி

தனியாய் நான்
அடையாளங்கள்
அத்தனையும் துறந்து


ராத்திரி கறிக்கு
உருளையா அவரையா
பால்காரன் வேலைக்காரி
எல்லாம் மறந்து


வருஷத்திற்கொன்றாய்


லடாக் தஞ்சாவூர்
ஹரித்வார் கோனார்க்
மதுரா காசி மானசரோவர்
நீளும் என் பட்டியல்


எட்டாம் நாள் மறுபடியும்
வட்டத்தில் இருப்பேன்.

2 comments:

வல்லிசிம்ஹன் said...

எட்டாம் நாள் வட்டத்தில் இருப்பேன். அது நாமா. வெளியே போனது நாமா நிம்மா.
கங்கையின் ஒரு துளி அமிர்தமாக இனிக்கிறது. இன்னும் ஆழமாக மூழ்கினால்
இன்னும் புரிய வரலாம்.எனக்குக் கங்கைக் கரையின் ஓர நிழலை விட ,காசி வாசிகளுக்கிடையில் குறுக்கு சந்துகளுள் ஒரு இடம் கிடைத்து தினம் கங்கைக்கு நடக்க ஆசை.

இத்தனை சுருக்காக முடியக் கூடாது காசி புராணம் இன்னும் தொடரும் என்று ஆசைப் படுகிறேன். அருமையான விடுதலைக் கதை.

Nirmala. said...

நேற்றிருந்த நானே இன்றைக்கு இல்லை. அதனால போன நான் வேற. திரும்பி வந்த நானும் வேற.

விரும்பியதெல்லாம் நடக்கட்டும் ரேவா! :-)