Saturday, March 16, 2013

காசி - 4

கும்பமேளா தந்த ஏமாற்றத்தில் அன்றைக்கு வேறெங்கும் போகப் போவதில்லை, அறையிலேயே இருக்கப் போகிறேன் என்று இருந்தேன். ஒரு மணி நேரத்திற்கு மேல் இருப்பு கொள்ளவில்லை. ஏற்கனவே மணி ஐந்தாகிவிட்டிருந்தது. தெருவெல்லாம் நிறைத்துக் கொண்டு வாகனங்கள். மொபைல் எண் கொடுத்திருந்த இரண்டு ஆட்டோ ட்ரைவர்களும் எங்கேயோ மாட்டிக் கொண்டிருப்பதாக சொல்லிவிட்டார்கள். அந்தக் கூட்டத்தில் ரிக்ஷாவில் ஏற என்னால் ஆகாது என்றிருந்தது. ஆனால் அதில் உட்கார்ந்து போகும் போது நல்ல உயரத்தில், தேரில் போவது போல இருந்தது என்பது நிஜம்! ஊரின் மொத்த ஜனமும் ரிஷாவில் தான் போகிறார்கள். அந்தக் குட்டி சீட்டில் அப்பா, அம்மா, அப்பா மடியில் ஒரு பதினெட்டு வயது பெண்... இப்படியெல்லாம் ஆச்சரியப்படுத்தினாலும், வேறு வழியே இல்லாதவரை, நானில்லை!

ஆக கேதார் காட் போய் நீளமாக நடக்கலாம் என்றிருந்தது முடியாமல் போனது. சிவராத்திரியை முன்னிட்டு ஆட்டோக்களை இன்னும் தூரத்திலேயே நிறுத்தி விட்டார்கள். அதற்கு கொஞ்சம் தள்ளி ரிக்ஷாக்களும். வேறு வழியில்லாமல் ஒரு ஆட்டோ, பின் ஒரு ரிக்ஷா மறுபடியும் தசாஸ்வமேத் காட். இன்றைக்கு கோவிக்கு போகும் வரிசை இன்னும் நீளமாய், ஏகப்பட்ட அடிதடிகளுமாய். தெருவெல்லாம் அடைத்துக் கொண்டு போகும் மக்கள். காட் ஆறு மணிக்கே ஆரத்திக்கு தயாராகி விட்டது. எங்கேயும் நிற்கக் கூட இடமில்லை. நீளத்திற்கு பிச்சைக்காரர்கள் துணி விரித்து காத்திருந்தார்கள். ஒரு பை நிறைய அரிசி கொண்டு வந்து ஒரொரு கையாக போகிற போக்கில் அந்த துணி விரிப்பில் கொட்டிப் போகிறார்கள். ஒரு இடத்தில் அன்னதானத்திற்கு ஒரு பெரிய வரிசை. இந்த பிச்சைக்காரர்கள் யாரும் ஏனோ அந்த வரிசைக்கு போகவில்லை!

அந்த இடம் கொஞ்சம் கொஞ்சமாக மக்களால் நிர‌ம்புவதை உணர முடிந்தது. மெல்ல நகர்ந்து அதே மணிகர்னிகா காட், அதே குறுகல் சந்து, அதே சௌக். வழியெல்லாம் கூட்டம் கூட்டமாக எல்லா விதமான வாகன‌ங்களிலும் மக்கள் வந்து சேர்ந்து கொண்டே இருந்தனர். அத்தனை கூட்டத்தை அந்த நெரிசலான ஊரில்... யோசிக்க பயமாக இருந்ததில் மிகுந்த சிரமப்பட்டு அறைக்குத் திரும்பினேன்.

மறுநாள் காலையில் விழிப்பு வந்த போது நேற்றய கூட்டம் தந்த அனுபவத்தில் இனி எங்கேயும் போகப் போவதில்லை. மத்யானம் ஊருக்கு கிளம்பும் வரை வேறெந்த சிந்தனையும் வரக்கூடாது என்றிருந்தேன். எட்டு மணிக்கு  ஜன்னல் திரை விலக்கிப் பார்த்த போது நேற்றய களேபரத்தின் சுவடு கூட இல்லை! சொல்லப் போனால் வழக்கமாக அந்த நேரத்தில் இருக்கும் சலசலப்பு கூட இல்லை. இப்படிக் கிளம்பி இங்கே போகலாமா, இல்லை அப்படிக் கிளம்பி அங்கே போகலாமா, one last time to ghat என்று ஓடின சிந்தனைகளை அடக்குவது சிரமமாக இருந்தது. ஆனாலும் போகவில்லை!

அந்த நேரத்தில் கவனத்தை மாற்ற உட்கார்ந்து பயணக்குறிப்புகள் எழுதிக் கொண்டிருந்த போது லோக்கல் டீவியில் சிவராத்திரி நிகழ்ச்சிகளை தொகுத்திருந்தார்கள்.

ராத்திரி அலஹாபாத்தில் பெரும் கூட்டமாக கங்கையில் மூழ்கியிருக்கிறார்கள். ஒரு இளம் வயது நிர்வாண சாமியார் சிலம்பு சுற்றிக் கொண்டிருந்தார். ஒருவர் கையில் வைத்திருந்த பேப்பரைப் பார்த்து மந்திரம் சொல்லிக் கொண்டே இன்னொரு கையால் கங்கை பூஜை செய்து கொண்டிருந்தார். சிரத்தையாக வழிபாடு செய்து முழுக்கு போட்டுக் கொண்டிருந்த வயதான தம்பதி, ஒரு கட்டத்தில் அவர் அந்த அம்மாள் மேல் தண்ணீர் வீசி விளையாட அந்த அம்மாள் அவருடைய முதுகைத் தடவித் தடவிக் குளிப்பாட்ட... Bliss!

இந்த பயணத்தில் செய்யாமல் விட்டது... முதல் நாளே முயற்சி செய்திருக்க வேண்டும், விட்டதால் காசி விஸ்வநாதரை இந்த முறை பார்க்க முடியவில்லை. கங்கையில் முழுக்கு போடவில்லை. சங்கமத்திலும். வேறெந்த கோவிலுக்கும் போகவில்லை. எந்த நாகா பாபாவையும் கும்பிடவில்லை. இது ஆன்மீகப் பயணமில்லை. என்னைத் திரும்பத் திரும்ப இழுத்தது கங்கைக் கரைதான். தனியாக போனதில் பெரிய சௌகரியமாக அதை உணர்ந்தேன். யாருக்காகவும் எதையும் செய்ய வேண்டியிருக்கவில்லை. பாஷையும் கொஞ்சம் ஊர் அறிமுகமும் இருந்ததால் எந்த சிரமமும் இருக்கவில்லை. அத்தனை கூட்டத்திலும் என்னுடைய பையிலிருந்து ஒரு பத்து ரூபாய் நோட்டு கூட காணாமல் போகவில்லை. வழிப்பறி, சீண்டல் எதுவுமில்லை. சிவராத்திரி கூட்டத்தில் தவறுதலாக மேலே இடித்ததற்கு ' மாஃப் கரோ மாயி' என்று சொன்னவரின் முகத்தைக் கூட கவனிக்க முடியவில்லை. முதல் முறை என்பதால் காலை நாலு மணிக்கு கங்கையைப் பார்க்க வேண்டும் என்று நினைத்ததையும் அந்த சிவராத்திரி முழு ராத்திரியும் கங்கை கரையிலேயே இருக்க வேண்டும் என்று நினைத்ததையும் செய்ய முடியவில்லை.  I had to survive, to tell this tale! அடுத்த முறை இந்த வசதிகளையெல்லாம் பொருட்படுத்தாமல் கங்கைக்கரையிலேயே இருக்கும் தங்கும் விடுதிகளில் தங்க வேண்டும். காலையில் எழுந்து ஜன்னல் திரையை விலக்கினால் கங்கை தெரிய வேண்டும்!

 

4 comments:

Chandra said...

the experineces are inspiring Nirmala, thanks. may be some day, i will also set out on my journey

Nirmala. said...

This gives me immense happiness Chandra. The reason behind my this detailed write up after such a long time is to say... it is possible! and we should give a try :-) best wishes!

வல்லிசிம்ஹன் said...

ராத்திரி அலஹாபாத்தில் பெரும் கூட்டமாக கங்கையில் மூழ்கியிருக்கிறார்கள். ஒரு இளம் வயது நிர்வாண சாமியார் சிலம்பு சுற்றிக் கொண்டிருந்தார். ஒருவர் கையில் வைத்திருந்த பேப்பரைப் பார்த்து மந்திரம் சொல்லிக் கொண்டே இன்னொரு கையால் கங்கை பூஜை செய்து கொண்டிருந்தார். சிரத்தையாக வழிபாடு செய்து முழுக்கு போட்டுக் கொண்டிருந்த வயதான தம்பதி, ஒரு கட்டத்தில் அவர் அந்த அம்மாள் மேல் தண்ணீர் வீசி விளையாட அந்த அம்மாள் அவருடைய முதுகைத் தடவித் தடவிக் குளிப்பாட்ட... Bliss!//

ஹ்ம்ம்ம்.கொடுத்துவைத்திருக்கணும்.
நிர்மலா நினைத்து நினைத்துப் பார்த்து சோகிக்கிறேன். என்னால் முடியவில்லையெ என்று.
இளமையில் கல் என்பது போல இளமையில் பயணி என்ற முதுமொழி இருக்கக் கூடாதா.

செய்யாதது பற்றிக் கவலை இல்லை. கங்கை ஒன்றே போதும்.

Nirmala. said...

/நிர்மலா நினைத்து நினைத்துப் பார்த்து சோகிக்கிறேன். என்னால் முடியவில்லையெ என்று./ :-(