Friday, March 15, 2013

காசி - 2

முதல் நாள் ஆட்டோ ட்ரைவரோடு பேசிக் கொண்டிருந்த போது கேதார் காட் - டில் இறங்கினால் இவ்வளவு நடக்க வேண்டியதில்லை. மேலும் அங்கிருந்து போட் பிடித்தால் ஒரு முழு சுற்று சுற்றி வரலாம் என்று தெரிந்தது. (எங்கிருந்து தொடங்கினாலும் அது சாத்தியம் தான். எல்லா காட் - டிலும் போட் இருக்கிறது!) இரண்டாவது நாள் நன்றாக தூங்கி மெதுவாக  எழுந்திருக்கலாம் என்று உத்தேசித்திருந்தேன். ஐந்தரை மணிக்கே விழிப்பு வந்து விட்டது. விழித்தவுடன் கங்கைக் கரையைப் பார்க்க வேண்டுமென்றிருந்தது. ஜன்னல் திரை விலக்கினால் கங்கை தெரிய வேண்டும் போல. பத்து நிமிஷத்தில் கீழே வந்தாலும் கொஞ்ச நேரம் வரை ஒரு காலி ஆட்டோவும் சிக்கவில்லை. மறுபடியும் ரிக்ஷாவில் ஏறத் தயக்கமாயிருந்தது. நின்ற ஒரு ஆட்டோவில் புத்தகக் கட்டோடு ஒரு கல்லூரி மாணவர். நான் தனியா போக ஏறினேனே, இவங்களை எதுக்கு என்றவரை சமாதானப்படுத்தி ஏற வேண்டியிருந்தது. என் ஏதேதோ கேள்விகளுக்கு ஒற்றை வார்த்தை பதில்கள். நான் ஆண்ட்டியா மேடமா என்று ஒவ்வொரு பதிலிலும் குழம்பி கடைசியில் இறங்கும் போது பரிட்சை நல்லா எழுது என்று சொன்ன‌ போது சரி மேடம் என்று சொல்லி ஒரு சிரிப்போடு கிளம்பினார். அத்தனை காலையில் நிறைய பேசும் மனநினையில் நான் இருந்தது போல அவர் இருந்திருக்கவில்லையாயிருக்கும்!

ஆறு மணிக்கெல்லாம் கேதார் காட் - டில் நல்ல வெளிச்சம், நல்ல கூட்டம். பத்து நிமிஷ பேரத்திற்குப் பின் போட் ஏறியானது.  வலது எல்லையில் ஹரிஷ்சந்திர காட் தொடங்கி, திரும்பி மணிகர்னிகா காட் வரை போய் மறுபடியும் கேதார் காட் வரை கொண்டு வந்து விடுவதாக ஏற்பாடு. ஏறக்குறைய எல்லா காட்- டிலும் சின்னதாகவோ பெரிய‌தாகவோ ஒரு கோவில் இருக்கிறது. அந்த காலை நேரத்தில் காட்- களில் இருக்கும் காவி வண்ணம், அது சாமியார்களின் உடுப்பாயிருக்கட்டும், தொங்கும் படுதாக்களாயிருக்கட்டும், சுவற்று நிறமாயிருக்கட்டும், வெயில் பட்டு மொத்த இடத்தையும் சிவப்பாக்கியிருந்த‌து.


காலை நேரத்தில் முக்கியமான காட்- களில் மட்டும் வெளியாட்கள். மற்ற இடங்களில் உள்ளூர்காரர்கள் அதிகம். வண்ணார்கள், மீன் பிடிப்பவர்கள், காந்தத்தை கயிற்றில் கட்டி காசு தேடும் சிறுவர்கள், போட்-டில் பூ விற்கும் சிறுமி, கோதுமை மாவை பிசைந்து கொண்டு வந்து துளித்துளியாய் கிள்ளி மீனுக்கு போடும் இஸ்லாமியர், கொழுகொழு குண்டு சாமியார் எல்லாரையும் கடந்து ஹரிஷ்சந்திர காட் போய் சேர்ந்தோம். அங்கெயும் ஒன்றிரண்டு பிணம் எரிந்து கொண்டிருந்தது.


 நிர்வாண சாமியார்கள் குளித்து திருநீறு குழைத்து உடம்பெல்லாம் பூசிக் கொள்கிறார்கள். அது காய்ந்து பரவும் வெள்ளைதான் நாள் பூராவுக்குமான உடை. தோளில் பையும் பருத்த தொப்பையுமாய் இன்னொரு பாபா நின்ற வாக்கில் ஆசிர்வாதம் செய்து கொண்டிருந்தார், சாம்பல் உடை கூட இல்லாமல்.




ரெண்டு மணி நேர போட் பயணம் முடிந்தது. போட் ஓட்டி வந்த வயதானவருக்கு எதுவும் பேசும் உத்தேசமிருக்கவில்லை. பாம்பு கடித்தவர்கள், தொழுநோயாளிகள், குழந்தைகள் மற்றும் சாமியார்களை எரிப்பதில்லை. கல்லைக் கட்டி ஆற்றில் போட்டு விடுவதாக ஏற்கனவே அறிந்திருந்த தகவலை மட்டும் சொன்னார்.

திரும்ப அறை, குட்டித் தூக்கம் முடிந்து கோவிலை பார்க்க கிளம்பிய போதே சிவராத்திரி களை கட்ட ஆரம்பித்து விட்டது. வழியெல்லாம் கழி அடித்து போட்டிருந்த வரிசையில் ஜனங்கள் காத்திருக்க தொடங்கி விட்டிருந்தனர்.  அதே தசாஸ்வமேத் காட். முதல்நாள் என்னை விரட்டியடித்த நாகா பாபாவிடம் பத்து பதினைந்து மார்வாடி பெண்மணிகள் கூடியிருந்தனர். அவர் பக்கத்திலிருந்த த‌ட்டில் பத்து ரூபாய் போட்டு சம்மணமிட்டு அமர்ந்திருந்த அவர் காலை ஒவ்வொருவராக தொட்டு வணங்கினர். பத்தே நிமிஷத்தில் இருநூறு ரூபாய் சேர்ந்து விட்டது. தட்டு நிறைய நிறைய பின்னால் அனுப்புவதும் பங்கு போடலும் நடந்து கொண்டிருந்தது. முக்காடு போட்ட பெண்கள், எதுவுமே போடாத சாமியார்கள்!

இன்றைக்கும் மணிகர்னிகா காட். முன்னால் போய்க் கொண்டிருந்த ஒரு கொரிய கூட்டத்தோடு அங்கிருந்த யாரோ என்னையும் மேலே போக சொன்னார்.  ஒரு பாதம் கூட கொள்ளாத அங்கங்கே உடைந்த அந்த சிறிய‌ படிக்கட்டுகள் ஏறி மேலே போனால் காலியான, கைவிடப்பட்ட ஒரு கட்டிடம். அதன் பால்கனியில் நின்றால் மொத்த மணிகர்னிகா காட் - டையும் பார்க்கலாம்.

பிணங்கள் தலையோடு கால் வரை மூடி வருகிறது. சில நேரம் ஆற்று வழியாக போட்- டில் கூட. ஆண்களை வெள்ளைத் துணியிலும் பெண்களை சிவப்புத் துணியிலும் சுற்றி வருகிறார்கள். ஐந்து நிமிடத்தில் மரக்கட்டைகளை அடுக்கி, சுற்றி வரக்கூட இடமில்லாமல் பக்கத்திலேயே இன்னொன்று எரிந்து கொண்டிருக்க, மொட்டை அடித்திருப்பவர் கையில் நீண்ட புல் போன்ற ஒன்றில் கற்பூரம் வைத்து எரியூட்டச் செய்கிறார்கள். அந்த கடைசி நிமிஷத்தை நின்று உணர யாருக்கும் நேரமிருப்பதில்லை. அவசர அவசரமாக தொடங்கி வைத்து விட்டு சாவகாசமாக காத்திருக்கிறார்கள்.

பெரும்பாலும் எல்லா காட்-களிலிருந்தும் ஊருக்குள் போகும் வழிகள் கல் பதித்த சிறு சந்துகள் தான். மணிகர்னிகா காட்டிலிருந்தும் அதே போல் போகும் ஒரு சிறு சந்துக்குள் நடக்கத் தொடங்கினேன். வழி கேட்ட ஒன்றிருவர் சௌக் போய் ஆட்டோ பிடிக்கச் சொல்லியிருந்தார்கள். ஒரு பத்து நிமிஷ நடையில் பிரதான வீதி வந்து விடுகிறது. அதற்குள் இரண்டு பிணங்களை எதிர் கொள்ள வேண்டியிருந்தது. அந்த குறுகலான சந்தில் வழிவிட்டு ஒதுங்கி நின்ற போது ஒரு கதவில் எட்டிப் பார்த்து போட்டோ எடுக்க வேண்டுமா என்று ஒருவர் கேட்டார். பிணம் தூக்கி வந்தவர்கள் அவரை சட்டை செய்யவில்லை. அவரும் பேசாமல் உள்ளே போய் விட்டார்.




அந்த குறுகலான‌ வழியிலும் டீக்கடை, சாப்பாட்டுக்கடை, பான், கோவில், துணிக்கடை, மளிகைக்கடை எல்லாமும் இருக்கிறது. ரோட்டோரக் கடைகளில் நல்ல மசாலா டீ கிடைக்கிறது. இர‌ண்டாவதாக ஒன்று உடனே குடிக்க சொல்லும் சுவையில். மொய்க்கும் ஈக்களை சகித்துக் கொள்ள முடியுமானால் ஜீராவில் முங்கிய மாவில் செய்த இனிப்புகள் நிறைய கிடைக்கிறது. நல்ல சாப்பாடு ஹோட்டல்கள் சுத்தக்குறைவான‌ இருட்டுச் சந்துகளில் இருப்பதாக வழி காட்டுகிறார்கள்.

அன்று சௌக்கில் ஆட்டோவே கிடைத்தது. இரண்டாம் நாள் சுற்று முடிந்தது.

6 comments:

கோமதி அரசு said...

இரண்டாம் நாள் காசிபயணமும் நன்றாக இருக்கிறது.

மதுமிதா said...

பெண் நிர்வாண சாமியார்களை எங்குமே காண முடியாது என்னும் உண்மை உண்மைதானே மேடம் :) ச்ச்சும்மா நிர்மலா அந்தப் பையன் சொன்னதுபோல் மேடம் என்று சொல்லிப் பார்த்தேன் :)

ரெண்டு மணி நேர போட் பயணம் என்றால் வெயில் இருக்காதா. அவ்வளவு தொலைவு படகில் சுற்றி வரும் அளவுக்கு நீர் இருக்கின்றதா.

பிணங்கள் இல்லாத கங்கையைக் காண முடியாதோ:(

யாத்ரீகன் said...

பிணங்கள் எரியூட்டப்படுவதற்குமுன் போர்த்தப்படும் பட்டு உடையை திருடிச்சென்ல்லும் சிறுவரகளை கண்டீங்களா ?

காசிக்கு செல்லும் எல்லோரும் எதையாவதொன்றை விட்டொழித்து வரவேணும்னு சொல்லுவாங்க, நீங்க என்ன செய்யப்போறீங்க ? :-)

Nirmala. said...

நன்றி கோமதி அரசு.

இல்லை மது. பெண் நிர்வாண சாமியார்கள் யாரையும் பார்க்கவில்லை. பெரிய ஒரு தொப்பியும் கூலிங் க்ளாஸும் போட்டுத்தான் போயிருந்தேன். காலைலயே நல்ல வெயில் இருந்தது. கங்கையில இல்லாத தண்ணியா?! Facebook ல நிறைய போட்டோக்கள் போட்டிருக்கேன். அதிலே தெரியும் எத்தனை தண்ணின்னு! பிணம் இல்லாத காசியா? கஷ்டம்! இன்னும் பத்து இருபது வருஷம் போனா நடக்கலாம்! ஆனா ஏன் நடக்கணும்? அதெல்லாம் தானே அந்த ஊரோட அடையாளம்!

யாத்ரீகன்... அந்த பளப்பளா பட்டுத்துணிகளை திருட வேண்டிய அவசியம் இப்போ இல்லை போலிருக்கிறது. ஒவ்வொரு பிணம் வரும் போது அதற்கான பையன் போய் அவனே எடுத்துக் கொண்டு போகிறான். எல்லாம் சிஸ்டமேடிக் ஆகிவிட்டது போலிருக்கிறது!

காசிதான் என்னை விட மாட்டேங்கிறது! :-) இது மூன்றாவது முறை!

வல்லிசிம்ஹன் said...

வெகு சுவாரஸ்யம். இரண்டாவது பதிவு வந்தது தெரியாமல் படிக்காமல் இருக்கேனே நொந்து கொள்கிறேன். சுற்றியும் காவி. நிர்வாண சாமியும் கால்களும் காவி!!!மூன்றாந்தடவை காசியா. பெயருக்கேற்ற தேடல்தான் மேடம்.

Nirmala. said...

நன்றி வல்லிம்மா. :-)