Monday, June 15, 2009

32 பதில்களில் கொஞ்சம் நான்.


ஆறுமாசமா இங்கே எதுவுமே எழுதவில்லை. ஏனோ தோணவில்லை. இப்போது வாசித்துக் கொண்டிருக்கும் 'பல நேரங்களில் பல மனிதர்கள்' தான் என்னுடைய ரீ எண்ட்ரியாக இருக்கும்ன்னு நினைத்திருந்தேன்.

எப்பவுமே இந்த மாதிரி கேள்விகள் உடனே எழுத வைக்கும். நம்மளைப் பத்தி நாம நினைக்க மறந்து போன விஷயங்களையெல்லாம் கிளறிக் கிளறி வெளியே கொண்டு வர்றதால. சும்மாவே நான் எதையாச்சும் யோசிச்சிட்டே இருக்கற ஆளு. அதையெல்லாம் சொல்லுன்னு வேற சொன்னா நம்மளை கட்டி நிறுத்த முடியாது தான். கேள்விகள் கொடுத்து என் நீண்ட நிசப்தம் கலைத்த( நிசப்தம் கலையும் நேரங்கள் - நம்ம டேக்லைன்!) சுரேஷ் கண்ணனுக்கு நன்றி.


1) உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர்
பிடிக்குமா?


அப்பா வைத்த பெயர். வீட்டிலே ஒரு பெரிய தாத்தா எங்க குடும்பத்து பொண் குழந்தைகளுக்கெல்லாம் பெயர் வைத்துக் கொண்டிருந்தார். மங்கையர்கரசி, மலர்விழி, பூங்குழலி, தேன்மொழி, எழிலரசி... அவளோட அவர் சிவலோக ப்ராப்தி அடைந்துவிட்டதால நமக்கு பேர் வைக்கற சான்ஸ் அப்பாக்கு கிடைத்தது. இல்லைன்னாலும் அதை அவரோட பெரியப்பாவுக்கு விட்டிருப்பாரான்னு சந்தேகம் தான். அந்த வரிசையிலே நான் நிர்மலா தேவி. வாலை வெட்டி விடற கைங்கர்யம் நமது. ஸோ வெறும் நிர்மலா.

சின்ன வயசில அது வழக்கமான பேரா இல்லாம இருந்ததால பிடிக்கும். அர்த்தம் உணர்ந்தப்போ இன்னும் அதிகமா. இப்போ அது வெறும் அடையாளம் மட்டுமே. ஆனாலும் வித்யாசமான பெயர்களைக் கேட்கும் போது கண் விரித்து அர்த்தம் கேட்டு சந்தோஷப்படறது நிஜம்.

2) கடைசியா அழுதது எப்போது?

முந்தாநாள் சாயந்திரம் பால்கனில உட்கார்ந்து கொண்டு. ஒரு பைசா பெறாத காரணத்தை ஹார்மோன்கள் தூண்டி விட்டதில் கொஞ்சம் கண்ணீர் மழை பெய்து துடைத்து விட வேண்டியதாயிற்று.

3) உங்களுக்கு உங்க கையெழுத்து பிடிக்குமா?

பிடிக்கும்.

ஐந்தாவது வரை கையெழுத்து சகிக்காது. எனக்குத் தெரிந்த ஒரு அக்கா நான் படிக்கிற பள்ளிக் கூடத்திலேயே எனக்கு வகுப்பாசிரியராக சேர்ந்ததும் உன் நோட் புக் குடு பார்க்கலாம்னு கேட்டப்போ நான் தயங்கினது இப்பவும் நினைவிருக்கிறது. அவசரமா அதை எப்படியாச்சும் சரி செய்ய முடியுமான்னு போராடி எதுவும் பண்ண முடியாம அப்படியே கொடுத்தேன். ஒரே நாள்ல திருப்பிக் கொடுத்துட்டாங்க. ஆறாவது போனதும் க்ரேஸி மிஸ் தினமும் கையெழுத்து பழகச் சொன்னதை சரியாக பயன்படுத்திக் கொண்டதில் படித்து முடிக்கும் வரை அழகான கையெழுத்தாயிருந்தது. இப்பவும் கொஞ்சம் எழுதிப் பழகினால் அதே அழகோட எழுத முடியும்.


4) பிடித்த மதிய உணவு?

சந்தோஷமாக நான் சமைக்கும் எதுவும். ஞாயிற்றுக் கிழமை மட்டும் பிரியாணி.

5) நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா ?


நிச்சயமாக. வருஷக்கணக்கில் பார்க்காத நட்பை இன்னைக்கு பார்க்கும் போதும் விட்ட இடத்திலிருந்து அதே எக்ஸைட்மெண்டோடு தொடர முடிந்திருக்கிறது. எதிராளிதான் பெரும்பாலான நேரங்களில் ஹேய் என்னாச்சு உனக்குன்னு ஒரு பார்வை பார்க்க, அதுக்கப்பறம் அடக்கி வாசிக்க பழகியிருக்கேன்!

6) கடல்ல குளிக்கப் பிடிக்குமா? அருவியில் குளிக்கப் பிடிக்குமா?

அருவியிலென்று நினைக்கிறேன். இதிலெல்லாம் குளித்து வருஷமாகிறது.

7) ஒருவரைப் பார்க்கும்போது முதலில் எதைக் கவனிப்பீர்கள்?

பேசற ஸ்டைல், மேனரிஸம்... கொல்கத்தா காபி டேயில் பழியாய் கிடந்து வருகிறவர்களையும் போகிறவர்களையும் வேடிக்கை பார்த்தது ஞாபகம் வருகிறது.

8) உங்க கிட்ட உங்களுக்குப் பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத வி
ஷயம் என்ன?


வயதே நினைவிருப்பதில்லை - பிடித்ததும் பிடிக்காததும்.


9)உங்கள் துணைவர்/துணைவி கிட்டே உங்களுக்குப் பிடிச்ச/பிடிக்காத விஷயம்?


அசாத்திய பொறுமை - பிடித்ததும் பிடிக்காததும்.

10) இப்போ யார் பக்கத்துல இல்லாம போனதுக்கு வருந்துகிறீர்கள்?

அது அந்த நேரத்து மனநிலையை பொறுத்து. ஆனால் யாருமில்லாமல் இருப்பது போல சுகம் வேறில்லை.

11) இதை எழுதும்போது என்ன நிறத்தில் ஆடை அணிந்துள்ளீர்கள்?

மெரூன் சல்வார், பச்சை நிற கமீஸ்.

12) என்ன பார்த்து/கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்?

NDTV Profit டீவியில் ஓடிக்கொண்டிருக்கிறது.

13) வர்ணப் பேனாவாக உங்களை மாற்றினால், என்ன நிறப் பேனாவாக மாற ஆசை?

நீலம்.

14) பிடித்த மணம்?


நாலைந்து மாதக் குழந்தையிடம் தாய்ப்பாலும், ஜான்ஸன்ஸ் பேபி சோப்பும் கலந்து வரும் மணம், பசிக்கும் நேரத்தில் பிரியாணி வாசனை, கொஞ்சம் வருஷம் முன்னால் உபயோகித்திருந்த nina ricci mild, பச்சை நிறத்தில் கொஞ்சம் தடிப்பான மடல்களோடு சின்ன வயதில் எங்கேயோ முகர்ந்து பார்த்திருந்த பெயர் தெரியாத ஒரு பூ வாசனை, மருதாணிப்பூ, அப்பாவின் கோகுல் சாண்டல், சிகரெட், பெட்ரோல்...

15) நீங்கள் அழைக்கப்போகும் பதிவரிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம்? அவரை நீங்கள் அழைக்கக் காரணம் என்ன?

அவருடைய எழுத்து தான். அவர் இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் எழுதினால்( எப்படியும் எழுதப்போறதில்லை!) எப்படி இருக்கும் என்ற க்யூரியாஸிட்டிதான்.

16)உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு?

கொஞ்சம் சினிமா, கொஞ்சம் புத்தகங்கள்.

17) பிடித்த விளையாட்டு?

வேகமாக நடந்தாலே பொம்பளைப் புள்ளைங்க அதிர அதிர நடக்காதீங்கன்னு அகிலாண்டம்மாள்(பாட்டி) சொல்லிச் சொல்லி வளர்ந்ததில் எந்த விளையாட்டையும் விளையாடியதில்லை.

18) கண்ணாடி அணிபவரா?

இல்லை.

19) எந்த மாதிரியான திரைப்படம் பிடிக்கும்?


படத்தின் எதாவது ஒரு அம்சத்தோடு என்னைத் தொடர்பு படுத்திக் கொள்ள முடியும் எந்தப் படமும் பிடிக்கும்.


20) கடைசியாகப் பார்த்த படம்?

dosar - the companion - rituparno ghosh (பெங்காலி)

21) பிடித்த பருவ காலம் எது?


குளிர்காலம். சென்னை வந்த பிறகு அப்படி ஒரு சீஸனே இல்லாமல் போனது!

22) என்ன புத்தகம் படித்துக்கொண்டு இருக்கிறீர்கள்?

பல நேரங்களில் பல மனிதர்கள் - பாரதி மணி.

23) உங்கள் டெஸ்க்டாப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒருமுறை மாற்றுவீர்கள்?

நான் செலக்ட் செய்வதும் இல்லை, மாற்றுவதும் இல்லை.

24) பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?

பிடித்தது - வாய்விட்டு சிரிக்கும் சிரிப்பு, மனதிற்கு நெருக்கமான சில குரல்கள், தண்ணீரின் சலசலப்பு, மழை, wind chimes...

பிடிக்காதது - சீரியல் கத்தல்கள்.

25) வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக தொலைவு?


கோயம்புத்தூரிலிருந்து இரண்டு ராத்திரி இரண்டு பகல்கள் ட்ரெயினில் காந்திதாம் போகும் போதுதான் போய்க் கொண்டே இருப்பது போலிருக்கும்.

26) உங்களிடம் ஏதாவது தனித்திறமை இருக்கிறதா?

இருக்க வேண்டும். எனக்குத் தெரியவில்லை.

27) உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம்?

அப்படி எதையும் நினைப்பதில்லை. என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதற்காக எதுவும் நின்று போகப் போவதில்லை!


28) உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

என்னுடைய யோசனை, ஞாபகங்கள்.

29) உங்களுக்குப் பிடித்த சுற்றுலாத் தலம்?

டார்ஜிலிங்.

30) எப்படி இருக்கணும்னு ஆசை?

இப்படியே.

31) கணவர்/மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்?

தூரமா முன்னே பின்னே தெரியாத ஊருக்கெல்லாம் பிரயாணம்.

32) வாழ்வு பற்றி ஒரு வரியில் சொல்லுங்க

புரியாமயே இருக்கட்டுமே அதனால என்ன?!

6 comments:

பிச்சைப்பாத்திரம் said...

nice one. thanks.

Boston Bala said...

நல்லாருக்கு :)

Chithran Raghunath said...

well answered. Good.

Nirmala. said...

thanks friends.

பிச்சைப்பாத்திரம் said...

//அவருடைய எழுத்து தான்.//

ஒரு கேள்விக்கு கூட ஒரு புத்தகம் அளவிற்கு பதில்சொல்லக்கூடியவர்தான் அவர். இல்லையென்று சொல்லவில்லை.
(அதான். மரத்தடியில் பார்த்திருக்கிறோமே?)
ஆனால் இது போன்ற மொக்கை கேள்விகளை அவரிடம் கேட்கலாம் என்று யோசித்திருக்கிறீர்களே?
உங்களுக்கே ஒவரா இல்லை? :-)

Nirmala. said...

கொஞ்சம் கூட ஓவர் இல்லை சுரேஷ்! சீரியஸாவே யோசிச்சிட்டு இருக்கற அவருக்கு ஒரு mood change வேண்டாமா?! :-) ( அதான் எழுதப் போறதில்லைன்னு மொதல்லியே சொல்லிட்டேனே... சும்மா விஷுவலைஸ் பண்ணக்கூட விட மாட்டீங்கறீங்களே!)