Tuesday, December 09, 2008

ஒரு முத்தம்

சென்னை மழையும், வீட்டு விசேஷமுமாய் சேர்ந்து ஒரு பத்து நாட்கள் நிறைய பேரோடு இருக்க நேர்ந்தது. பொதுவாகவே தனிமை விரும்பி, ஒரு நாளின் சில மணிநேரங்களாவது தனியாக இருக்காது போகும் போது தோன்றும் அசௌகரியமும் மெல்ல பரவும் சிடுசிடுப்பையும் எப்போதும் உணர்ந்திருக்கிறேன். அதனாலேயே இது போன்ற நாள் பூராவும், தொடர்ந்தும் உறவினர்களோடு கழிக்க நேரிடும் சமயங்களுக்காக முன் கூட்டியே என்னை தயார் செய்து கொள்ள வேண்டியிருந்திருக்கிறது.

இந்த சில நாட்களில் கவனித்தது...

ஐந்து வயதுக்குக் கீழான ஒரு குழந்தை கூட இருக்கவில்லை. குழந்தையின் சிரிப்பிலும் மழலைப் பேச்சிலும் பரவியிருக்கக் கூடிய மென்மை அறவே இல்லை. எல்லாரும் எல்லா நேரமும் பெரியவர்களாகவே இருந்தோம்.

அறுபது ப்ளஸ் ஆண்கள் கூடுதல் சிடுசிடுப்பாக இருந்தார்கள். அவர்களில் ஒருவருக்கும் ஒருவரோடும் ஒத்துப் போகவேயில்லை. மாமனார் - மருமகன், அண்ணன் - தம்பி... எந்த உறவும் விதிவிலக்கில்லை.

ஆண்கள் கையில் டீவி ரிமோட் கிடைத்தால் தவறியும் கீழே வைக்காமல் இருந்தார்கள். பத்து பதினைந்து பேர் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருக்கும் போதும் கூச்சமில்லாமல் சேனல் மாற்றிக் கொண்டே இருந்தார்கள். பெண்கள் சீரியல் பார்க்கத் தொடங்கும் போது பகல் சீரியலுக்கு அலுத்துக் கொண்டவர்கள், ப்ரைம் டைம் சீரியல்களுக்கு சத்தமில்லாமல் ஜோடி சேர்ந்து கொண்டார்கள்.

தான் வாங்கி வந்திருந்த ஒரு விசிடி ரொம்ப பிடித்திருந்ததால் வந்திருந்த எல்லாரோடும் மூன்று நாட்களில் நான்காவது முறையாக ஒரே படத்தை ஓடவிட்ட அப்பாவைப் பார்க்க பயமாகவும் கவலையாகவும் இருந்தது.

பெண்கள் சிக்கனத்திற்கும் கஞ்சத்தனத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் அதை சாமர்த்தியமாக நினைத்து தங்களை இன்னும் சாமர்த்தியசாலிகளாக்கும் முயற்சிகளில் இருந்தார்கள். அதில் ஒருவருக்கொருவர் போட்டி வேறு.

கணவரை ஊரில் விட்டுவிட்டு தனியாக வந்த பெண்கள் சுதந்திரமாக இருந்தார்கள். நாளுக்கு ஒரு முறை செல்போனில் பேசும் போது வழக்கமில்லாத பிரியமாய் பேசினார்கள். வறட்சியான குடும்ப வாழ்க்கைக்காக சலித்துக் கொண்டவர்கள் மக்கள் கல்யாணத்தைப் பற்றி கவலைப் பட்டார்கள்.

அரட்டை, விளையாட்டுகள், கேலிகளுக்கு குறைவில்லை.

கடைசி நாள் கிளம்புவதற்கு முன் சாப்பாட்டு மேசையில் யாரோடோ பேசிக் கொண்டிருக்கும் போது 'கிளம்பறோம்மா' என்று சொல்லி வலது நெற்றியில் அப்பா கொடுத்த அவசர முத்தத்தில் அதுவரை தளும்பிக் கொண்டிருந்ததெல்லாம் நிலை கொண்டது.

9 comments:

ramachandranusha(உஷா) said...

சொந்த பந்தம் யாரும் படிக்க மாட்டாங்க என்ற தைரியம் தான் :-)

பிச்சைப்பாத்திரம் said...

//ஒரு நாளின் சில மணிநேரங்களாவது தனியாக இருக்காது போகும் போது தோன்றும் அசௌகரியமும்//

நானும் இவ்வாறே உணர்கிறேன்.


//தளும்பிக் கொண்டிருந்ததெல்லாம் நிலை கொண்டது. //

mmm.... good.

உறவினர்களை அந்த நிலையைத் தாண்டி நன்றாக அவதானித்து இருக்கிறீர்கள்.

அது சரி. உங்க பிளாக்கை உங்க சொந்தக்காரங்கள்லாம் படிப்பாங்களா? :-)

Nirmala. said...

உஷா, சுரேஷ்... சொந்தகாரங்க யாரும் படிக்க மாட்டாங்க.:-) ஆனா right sense ல இதை படிக்கணும்ங்கற ஆசை இருக்கு. சிறிதும் பெரிதுமா இழப்பதை உணராமல் இருப்பதை பார்த்த வருத்தம் தான் வேறென்ன?

ஆயில்யன் said...

//சிறிதும் பெரிதுமா இழப்பதை உணராமல் இருப்பதை பார்த்த வருத்தம் தான் வேறென்ன?
//

கரெக்டா சொல்லியிருக்கீங்க!

ஆயில்யன் said...

//தனியாக இருக்காது போகும் போது தோன்றும் அசௌகரியமும் மெல்ல பரவும் சிடுசிடுப்பையும் எப்போதும் உணர்ந்திருக்கிறேன். //

ரொம்ப நாள் அது மாதிரி இருந்ததால கொஞ்சம் கொஞ்சமா பழகிடுச்சு !

ஆரம்பத்தில இருந்த கடுப்பு எல்லாம் இப்ப போயே போச்! :))

Nirmala. said...

------
ரொம்ப நாள் அது மாதிரி இருந்ததால கொஞ்சம் கொஞ்சமா பழகிடுச்சு !
------

சில விஷயங்களுக்கு பழகிக்க கூடாதென்ற பிடிவாதமெனக்கு :-)

நன்றி ஆயில்யன்.

Unknown said...

அன்புடையீர்,

நாங்கள் ஆழி பதிப்பகத்திலிருந்து தொடர்புகொள்கிறோம். அமரர் சுஜாதா நினைவு அறிவியல் புனைகதை போட்டி தொடர்பாக உங்களுக்கு ஒரு மடல் அனுப்பவேண்டும். தங்கள் மின்னஞ்சல் முகவரியை sujatha.scifi@gmail.com க்கு அனுப்புங்கள். தொடர்புகொள்கிறோம்.

நன்றி

Sri said...

எல்லோறும் ஒரு முரையாவது இவ்வாறு எண்ணி இருப்பார்கள்! அழகாக இந்த சூழ்நிலையை பற்றி எழுதி இருக்கிரீர்கள். :-)

Nirmala. said...

thank you Sri.