Tuesday, January 31, 2006

சுருக்குப்பை(யிலிருந்து) - 1

அகிலாண்டம்மாள் சுருக்குப்பையில் காசு தேடும் போது... கொஞ்சம் சில்லரை, ஆறாய் மடித்த ஒன்று, இரண்டு ரூபாய் நோட்டுகள், வெட்டுப் பாக்கு, சட்டை பட்டன், இரும்பு வளையம்(?!)... என்னவெல்லாமோ கண்ணில் படும். இரண்டு புத்தகங்கள், ஒரு பயணம், கொஞ்சம் சினிமா... என்று தலைப்பு வைத்து எழுதத் தொடங்கிய இந்தப் பதிவை (ஏறக்குறைய)முடிக்கும் போது ஏனோ பாட்டியின் சுருக்குப்பை ஞாபகம் வந்ததில் தலைப்பு மாறி விட்டது.

முதலில் பயணத்தோடு தொடங்குகிறேன், மற்றவை அங்கங்கே சேர்ந்து கொள்ளும்!

மாலை ஆறு மணிக்குக் கிளம்பியிருக்க வேண்டும். ஆனால் கிளம்பப் போகும் அறிகுறி ஒன்றும் எட்டு மணி வரை காணவில்லைதான். இதோ இதோ என்று சொல்லி இரவு ஒன்பதரைக்கு கிளம்பியது. காத்திருந்த நேரத்தில் எட்டிப் பார்க்கத் தொடங்கிய அலுப்பை விரட்டியடிக்க சொல்லிக் கொண்டது, 'சேரும் இடத்தை விட சேர்ந்து செல்லும் இந்தப் பயணத்தை அனுபவியேன்' என்பது தான்.

ஆனால் Spicejet முதலாளிக்கு என்னோடு சேர்த்து அந்த இருநூற்றுச் சொச்சம் பயணிகளை சும்மாவாச்சும் கொல்கத்தாவிலிருந்து லக்னோ வரைக்கும் கூட்டிப் போய் திரும்பக் கூட்டி வர ஏதோ நேர்த்திக் கடன் போலிருக்கிறது. அதை அந்த டிசம்பர் மாத குளிர் ராத்திரியில் வெற்றிகரமாக நிறைவேற்றி விட்டார்.

விமானத்தின் உள்ளே நுழைந்ததும் ஒரு டம்ளர் தண்ணீர். அடுத்து நிறைய காற்றும் கொஞ்சம் வேர்க்கடலையும் அடைத்த ஒரு பொட்டலம். லக்னோ வரைக்கும் போனதும் கேப்டன் அழைத்து 'தில்லி நேற்றெல்லாம் காலை நாலு மணி வரை கூட நல்லாத்தான் இருந்தது, இன்னைக்கு இதோ பதினோரு மணிக்கே மசமசத்து விட்டது. எனக்கு வேற எங்கேயும் இறக்க அனுமதியில்லை, அதனால் திரும்ப கொல்கத்தாவிற்கே போகிறோம்' என்று அறிவித்த போது... தாஜ்மகால், நைனிதால், முசோரி, குளிர், அதில் சூடாக இறங்கும் தேநீர், வாயைத் திறந்தால் வரும் புகை, அதற்காகவே சும்மா சும்மா திறந்து பார்க்கும் கிறுக்குத்தனம், Radisson கபாப் (இதைப் பற்றி பேசிப் பேசி வெறியேற்றி வைத்திருந்த கணவர், எப்படியாச்சும் நேரம் ஒதுக்கி அங்கே போயே ஆகணும்னு போட்டிருந்த ப்ளான்) எல்லாம் லக்னோ வானில் பொசுக்கென்று கரைந்து போனது!

இறங்கினதும் அந்த அர்த்த ராத்திரியில் அது ஒரு பட்ஜெட் சர்வீஸ் என்பதையும் மறந்து, சாப்பாடு குடுக்க மாட்டியா? தங்க ஏற்பாடு பண்ண மாட்டியா? என்று ஒரு கும்பல் கிளம்ப, வீட்டுக்குப் போய்விடலாம் என்று யோசிக்காமல் முடிவு செய்தோம். இதே விமானம் காலை பதினொரு மணிக்கு கண்டிப்பாகக் கிளம்பிவிடும் என்று உறுதி(?!)யாகச் சொல்லிக் கொண்டிருந்த ஒரு Spicejet சிப்பந்தியிடம், 'நாங்க இங்கேயே உட்கார்ந்திருக்கோம். காலையில மறந்துடாம சொல்லுங்க' என்று சொல்லிக் கொண்டிருந்த ஒரு பெரியவருடைய பொறுமையைப் பார்த்து பொறாமையாயிருந்தது.

இந்தப் பயணத்தில் தான் அந்த இரண்டு புத்தகங்களில் ஒன்றான கரிச்சான் குஞ்சு எழுதிய 'பசித்த மானுடம்' வாசிக்க ஆரம்பித்தது. ரொம்ப சுவாரசியம் என்று சொல்ல முடியாவிட்டாலும் நேரம் கிடைத்த போதெல்லாம் வாசிக்கத் தூண்டியது. ஏகப்பட்ட பாத்திரங்கள், ஆனாலும் அதிகம் குழப்பாமல் போனது. பட்டும் படாமலும் சொன்னாதென்றாலும் அந்தக் காலத்திலேயே ஓரினச்சேர்க்கை பற்றி எழுதியிருக்கும் ஆச்சர்யம் இன்னும் மிச்சம் இருக்கிறது. கணேசன் பாத்திரம் சுவாதீனமாக அங்கங்கே சேர்த்துக் கொள்ளும் உறவுகள் அந்த நாட்களில் சாத்தியமா?!

எந்தப் படைப்புமே கற்பனைச் சேர்க்கையின்றி வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் என்பதற்கு உத்திரவாதம் இல்லை என்பதால் அந்தக் கோணத்தில் அதிகம் யோசிக்க வேண்டியதில்லைதான்.

தொடர்கிறது...

6 comments:

Jayaprakash Sampath said...

நிர்மலா, 'அங்கங்கே சேர்த்துக் கொள்ளும்' உறவுகள், எந்தக் காலத்திலும் இருந்தது. ஆனால், அவை சொல்லப்படவில்லை. ஒரு விஷயத்தை எழுத்திலே பதிவு செய்கிற பழக்கமே, ( பண்டிதர்கள் தவிர்த்து ) நூறாண்டுகளாகத்தானே இருக்கிறது. செவி வழிப் பாடல்களும், நாட்டுப்புறக் கலைகளும், நம் முந்தைய தலைமுறைகளைப் பற்றி ஆயிரம் கதை சொல்லும்.

ரொம்ப போரடிச்சுப் போயிருந்த சமயத்திலே சில்லென்று ஒரு பதிவு . நன்றி. தொடருங்கள்.

சரி.. அந்த இன்னொரு புஸ்தகம் என்ன?

சிறில் அலெக்ஸ் said...

உங்கள் கதைகள் சில படித்தேன். ரெம்ப நல்ல கதைகள். தொடருங்கள்.

Nirmala. said...

நன்றி பிரகாஷ். புத்தகத்தை வாசிக்கும் போது ஏழெட்டு தரமாவது பின் அட்டையில் இருக்கும் அந்த பெரியவர் படத்தைப் பார்த்திருப்பேன்... இவரா எழுதினார் என்ற ஆச்சர்யத்தில் தான். கூடவே சந்தோஷமும். அவர் கை குலுக்கி ஒரு சின்ன hug... மானசீகமாத்தான்!

ஆனா பதிந்து வைக்காததாலேயே அப்படியெல்லாம் இருந்திருக்க வாய்ப்பில்லை என்ற ஒரு பிரமை உருவாகித் தானே இருக்கு? அதைச் செய்திருந்தால் இன்னைக்கு தொட்டதுக்கெல்லாம் இத்தனை fuss இருக்காதுன்னு தோணுது.

அந்த இரண்டாவது புத்தகம் குஷ்வந்த் சிங்கின் Obituaries - death at my doorstep.

நன்றி அலெக்ஸ். 'வருகிறேன் நிலாக்குட்டி' யுடனேயே என்னுடைய கதை எழுதும் ஆர்வம் முடிந்து போய்விட்டது. அதற்குப் பிறகு முயன்றதில் அத்தனை திருப்தி இல்லாததால் முயற்சி செய்யவில்லை!

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

//ரொம்ப போரடிச்சுப் போயிருந்த சமயத்திலே சில்லென்று ஒரு பதிவு . நன்றி. தொடருங்கள். //

Nirmala, I second Prakash. eagerly waiting for the next part. and also for the new kolkata thodar.

kalakkunga!

-Mathy

ramachandranusha(உஷா) said...

நிம்மி, ப.மா படித்தப்போ எனக்கு வயது பதினைந்து. சாதாரண உறவே தெரியாத நிலையில் அரைகுறையாய் புரிந்து
பயந்துப் போயிருக்கிறேன். சில வரிகள் இன்னும் ஞாபகம் இருக்கு. அப்படியே ஏசு வந்திருந்தார் கிடைச்சா படிச்சிப் பாருங்க.
க.நா.சு என்ற பெயரே தெரியாத நிலையில் படித்தவை, ஆனால் பிறகு கிளப்பில் பேசும்பொழுது அட என்று ஞாபகம் வந்தது.
பேஸ் த்ரீ பார்த்தப்பொழுதும், இப்படி சின்னபிள்ளைகளை தங்கள் வேட்கைக்கு பயன் படுத்துவது பணக்காரர்களின் திமிர் என்று
தானே?
நல்லா சல்லுன்னு போகுது நடை. ஆனா ஆடிக்கு ஒரு நாள் அமாவாசைக்கு ஒரு நாள் கொள்கையை இன்னும் கடைபிடிக்கும்
உத்தேசமா :-))

Nirmala. said...

நன்றி மதி. அடுத்தது இன்னும் ரெண்டு நாள்ல. கொல்கத்தா தொடர்... ம்ம்ம்... அதுக்கு கொஞ்சம் தயார் செய்ய வேண்டியிருக்கிறது. சீக்கிரம் ஆரம்பிக்கிறேன்.

நன்றி உஷா. நான் பதினைந்து வயதில் 'பசித்த மானுடம்' வாசித்திருந்தால் என்ன செய்திருப்பேன்னு யோசிக்க வைச்சுட்டீங்க! கௌரியும்(Gauri) நானுமா அலசிக் காயப் போட்டிருப்போம்! :-)

'ஏசு வந்திருந்தார்' குறிச்சுட்டேன். கொஞ்ச நாளா பெங்காலி சினிமாவும், வாசிப்புமா இருந்துட்டேன். அதனால எழுத ஆரம்பிச்சதெல்லாம் அரைகுறையா கிடக்கிறது. அந்த பேஜ்த்ரீ சமாச்சாரம்... அதை ரொம்ப அடிமட்ட ஆட்கள்ல கூட பார்த்திருக்கேன். வெறும் வலிமை மட்டும் தான் அதை செலுத்துகிறது... உடல், பணம், இல்ல இச்சையின் வலிமை.