
ஒரு கோடை விடுமுறைக்கு வறண்ட ஒரிஸ்ஸா சிறையிலிருந்து தப்பி கேங்டாக் போன போது 'ஹா' என்றிருந்தது. மே மாச ராத்திரி கம்பளியைத் தாண்டித் தீண்டும் குளிர், நிறைய பச்சை, கன்னங்களும் மூக்கு நுனியும் சிவந்தேயிருக்கும் குழந்தைகள், தொட்டுப் பார்க்கச் சொல்லும் கேசமும், மென்தோலும்... இந்த ஆரம்ப ஆச்சரியங்களுக்குப் பின் மிஞ்சியது சலிக்காமல் பார்த்த புத்த மடாலயங்கள். ஐந்தாறு வயதிலிருந்து கிழவர் வரை எல்லா வயதிலும் கண்ட புத்த துறவிகள். கையில்லாத மஞ்சள் சட்டையும் கணக்கில்லாத அடுக்குகளில் ஆழ்சிவப்பு மேலங்கியுமாய்... பொது மக்கள் பார்வைக்கு உள்ளது தவிர்த்த இவர்களுடைய தனி வழிபாட்டு கூடங்கள்... குட்டை மேசைகளில் விரித்த ஏடுகள், ஒத்திசைவில்லாத உச்சாடனங்கள், அதிரும் மேளங்கள், ஒரு ஜாடியில் சூடான திரவம் ஒன்றை ஓறிருவர் சிரத்தையாய் பரிமாறிச் செல்ல, ஒரு ஒழுங்கோ பக்தியோ தெரியாத... வெளியிருந்து பார்க்க இது என்னமாதிரி துறவு என்று தோன்றியிருக்கிறது. எட்டிப் பார்க்க விரும்பும் எத்தனை உலகங்களில் இதுவும் ஒன்றாகக் கூடியிருந்தது.
'ஸம்ஸாரா' - ஒரு புத்த துறவி பற்றிய திபெத்திய படம். இயக்கம் Pan Nalin. இளம் வயது, நீண்ட தனிமைத்தவம், பட்டம், தடுமாறும் மனம், காமம், ஈர்ப்பு, துறவிலிருந்து வெளியேற்றம், குடும்பம், அடல்ட்ரி, மீண்டும் துறவை நோக்கிய பயணம்... படம் ஒரு விஷுவல் ட்ரீட். ஒளிப்பதிவும் பிண்ணனி இசையும் மொத்தத்தையும் மறக்கடித்து லடாக்கிற்கே கொண்டு போய் விடுகிறது. ஆரம்பித்த ஐந்தாவது நிமிடம் ஒரு அமைதி பரவுவதை உணர செய்யுமளவிற்கு. விரிந்து கிடக்கும் நிலப்பரப்பும் மலைக் குடைவு வசிக்குமிடங்களும் தூரத்து பனிமலைகளும் நிறைந்த நிசப்தமும்.
இடையில் கொஞ்சமே நுழையும் நகர வாழ்க்கை அனாவசியமான கவனக் கலைப்பு. அதிக வசனமில்லாமல் அழகாய் தொடர முடிந்த படத்தின் கடைசிக்காட்சி நீண்ட வசனம் புரியாததில் இழப்பில்லை. திரும்பத்திரும்ப வரும் 'யசோதரா- ராகுல்' உணர்த்தியதே போதுமாயிருந்தது.
கதாநாயகியின் உதடுகள், குட்டித் துறவி, சுஜாதா பாத்திர பெண், கவனமாக கோர்க்கப் பட்ட சின்னச் சின்ன சப்தங்கள், காண்பித்த உலகம்... ரசித்தவை. லடாக் போயே தீர வேண்டும் என்ற ஆசை வந்திருக்கிறது. கவிதை போலவும் கண்ணைக் கட்டிப் போடுவதுமாய் உடலுறவுக் காட்சிகள் யதார்த்தம்(!).
இரண்டு தடவை பார்க்கலாம். :-)