Thursday, November 24, 2005

காஷ் மே...

'சமுதாயம் வரிக்கும் திருமணம், குடும்பம், பொறுப்பு, அதன் தொடர்பான கடமைகள் என்ற கோடுகளுக்குள் அதிகம் கேள்விகள் இல்லாமல், இருந்தாலும் பெரிய போராட்டங்களில்லாமல், சின்ன முணுமுணுப்பு, கொஞ்சம் சலசப்பு காட்டி வாழும் பெரும்பான்மை. மீறினாலும் மதிப்பாக ஆன்மிகம், துறவு, (போலிச் சாமியார்களும்
சேர்த்தே) ஒரு சிறுபான்மை. அதிலும் சேராமல் இதிலும் சேர்த்தியில்லாமல் இன்னொரு சிறுபான்மை. இவர்களை குறுகுறுப்பான ஓரக்கண் பார்வையில் பார்த்துக் கொண்டு அவசரமாக விலகிக் போன காலங்கள் போய், பொருட்படுத்தாமல் இருக்கப் பழகி, பரிதாபப் பட்டு... எல்லாம் தாண்டி அவர்களை அவர்களாகப் புரிந்து கொள்ள முடியும் என்ற நிலைப்பாடு வந்திருக்கிறது.'

இப்படி ஒரு முன்னுரை மனதில் எழுதி வைத்து அந்த சந்திப்புக்கான முனைப்பு தொடங்கியது நட்சத்திர வாரத்திற்கான அழைப்பு வந்த போது. எப்படியாவது அதற்கு முன் சந்தித்து விடவும் அந்த சமயத்தில் கட்டாயம் அவர்களைப் பற்றி ஒரு பதிவு இடவும் ஒரு வேகம் இருந்தது. பழக்கமில்லாத ஊர், அதிகம் நண்பர்களும் இல்லை. யார் இதற்கு உதவி செய்வார் என்ற யோசனையில், எண்ணத்தில் தட்டுப் பட்டது ரேணுபாலா மொஹந்தி. மாதாந்திர லேடீஸ் க்ளப் கூட்டத்தில் வெட்டி அரட்டை நேரத்திலும் எதாவது செய்ய வேண்டும் என்ற முனைப்புடன் இருப்பது அவர் மட்டுமே. அவரிடம் அந்த சந்திப்பு நோக்கத்தைச் சொல்லி யாரையாவது தெரியுமா என்று கேட்டதற்கு விசாரித்துச் சொல்வதாகச் சொன்னார். சரியாக இரண்டாம் நாள் ஒன்றிரண்டு NGO க்களைப் பற்றிச் சொல்லி தொலைபேசி எண்ணும் தந்தார்.

முதலாவதாகக் கொடுத்திருந்த எண் தான் எனக்குத் தேவையானதாய் இருந்தது. தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது யார், என்ன, எதற்காக என்ற விபரம் கேட்டுக் கொண்டு யாரிடமிருந்தாவது அறிமுகக் கடிதம் தேவையிருக்கும், ஆனாலும் நீங்கள் விரும்பும்வது போல இந்த வாரத்தில் முடியாது, அடுத்த வாரம் பார்க்கலாம் என்று சொல்லி விட்டார். என்னுடைய நட்சத்திர வார அவசரமோ, ஆர்வமோ அவருக்கு அவசியமில்லாமல் இருந்தது.

அடுத்த படையெடுப்பு கணவரிடம். வேறென்ன அந்த அறிமுக கடிதத்திற்காகத்தான். ஏற்கனவே இதைப் பற்றிப் பேசியிருந்தாலும் 'அவசியம் போகணுமா' என்ற கேள்வியோடு வாங்கித் தந்தார். நாலுவரி அறிமுகக் கடிதத்தில் குட்டியாய் ஒரு கையெழுத்தும் மங்கலாய் ஒரு ரப்பர் ஸ்டாம்புமாய். வேறு வழியிருக்கவில்லை. அதைக் கொண்டு வர அந்த NGO அமைப்பிடம் அனுமதி கேட்டு, வரச் சொன்ன நாள் போன போது அமைப்பின் தலைவி அலுவலகத்தில் இல்லை. காத்திருந்த நேரத்தில் அவர்களுடைய சேவைகள் பற்றிய பட்டியலும் புகைப்படங்களும் சுவரெல்லாம் தொங்க, பார்க்கக் கிடைத்தது. அவருடைய காரியதரிசியிடம் விபரம் சொல்லி கொடுத்து விட்டு வந்தாலும் அவர் அதைக் காண்பிப்பாரா என்ற சந்தேகம் இருந்தது. இப்போதும் வேறு வழியிருக்கவில்லை.

அதற்குப் பின் தொடர்ந்த தொலைபேசி விசாரிப்புகளில் எப்போதும் இல்லாதிருந்தது தலைவியும், குறைவில்லாமல் இருந்தது சலிப்பும். ஒரு கட்டத்தில் 'எங்களுக்கு உங்களைப் போன்ற ஆட்களுக்கு செலவிட நேரமில்லை. நீ யாரென்று தெரியாது. எதிலோ எழுதுகிறாய் என்கிறாய்... என்ன எழுதப் போகிறாயோ, அதனால் எங்களுக்கு தொல்லை வரலாம், நீ புகைப்படம் எடுக்க வேண்டும் என்பாய், அந்த இடத்தைப் பற்றித் தெரியுமா உனக்கு? உன்னை அங்கே அழைத்துப் போகும் அவசியம் எங்களுக்கு என்ன? ' என்று சொல்லி என் தொடர் தொலைபேசி கோரிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப் பட்டது.

NGO க்களின் துணை என்ற பாதுகாப்போடு போக நினைத்தது முடியாமல் போய்விட்டது. அப்போது எழுத நினைத்த பதிவும் எழுத முடியவில்லை. இனியும் போக முடியும் என்று தோன்றவில்லை. சோனார்காச்சியும் அவர்கள் வாழ்க்கையும் இனிமேலும் அவ்வப்போது கண்ணில் படும் ஊடகங்கள் வாயிலாகத்தான்.

காஷ் மே...

Saturday, November 19, 2005

குஷ்வந்த் சிங் என்றொரு குழந்தை

வழக்கமாக பத்து பதினைந்து நிமிடங்களில் முடிந்து விடும் செய்தித்தாள் வாசிப்பு சனிக்கிழமைகளில் மட்டும் கொஞ்சம் எதிர்பார்ப்போடு இன்னும் சில நிமிடங்கள் நீடிக்க குஷ்வந்த் சிங் தான் காரணமாயிருப்பார். பெரும்பாலும் சவசவன்னு போகும் அவருடைய அந்த வாராந்திர பத்தியை ஏனோ விட மனசு வந்ததில்லை. எப்போதாவது ஒரு சின்ன சிரிப்பு... சில தகவல்கள், கொஞ்சம் அரசியல், பழைய நண்பர்கள்... எல்லாமுமாயிருக்கும்.

இன்றைக்கு மார்க்வெஸ்ஸின் My Melancholy Whores பற்றி கொஞ்சம் விலாவரியாக கதை சொல்லி கடைசியில் இப்படி முடிக்கிறார்...

I am unable to fathom reasons which induced Marquez to write this novella almost entirely confined to prostitutes. The urge to write about my own fantasies came to me when i was in my 80s. I churned out 'The Company of Women'. I wrote a short prefatory note admitting that when a man ages, his sexual desires travel from his middle to his head. And all that I have written were imaginary sex-escapades of an octogenarian. Needless to say it was panned by most critics, and predictably also went into several editions. Marquez's latest will make it to the top world's best-seller list and earn him another fortune. It does not shake me. My consolation is that I did a better job than he even if the world does not agree with me.

இந்த 'The Company of Women' புத்தகம் கைக்கு கிடைத்தது ரொம்ப எதேச்சையாக. எதையோ தேடி விசாரிக்க, அது சேரன் டவர்ஸ்ல தான் கிடைக்கும் என்று யாரோ வழிகாட்ட, அந்த சேரன் டவர்ஸையே தேட வேண்டியிருந்தது. கடைசியில் தேடிப் போன சாமான் கிடைக்கவில்லை, ஓடாத புத்தகக் கடையை முடிவிடும் முடிவிலிருந்த ஒரு புத்தகக் கடைக்காரர் கிடைத்தார். மனசில் தோன்றிய விலைக்கு புத்தகங்களை தள்ளி விடும் உத்தேசத்திலிருந்தார். அப்போது வாங்கிய மற்ற புத்தகங்கள் நினைவில்லை. ஆனால் இந்த புத்தகம் வெறும் எழுபத்தி ஐந்து ரூபாய்க்குக் கொடுத்தார். அது தான் முதல் குஷ்வந்த் சிங் எழுத்து அறிமுகம். அந்த புத்தகம் வாசித்த அந்த ஆறேழு நாட்களும் இருந்த உணர்வை எப்படிச் சொல்ல என்று தெரியவில்லை. ஆனால் சில விஷயங்களை சொல்லி விட்டுப் போயிருக்கிறது. அந்த வாசிப்பு மயக்கம் தான் இன்னும் குஷ்வந்த் சிங் எழுத்துகளை எங்கே பார்த்தாலும் விட முடியாமல் விரட்டுகிறது.

ஆனாலும் இன்றைக்கு ஏனோ அவரைப் பார்க்கும் போது தொண்ணூறு வயதுக் குழந்தை (ஆச்சுதானே குஷ்வந்த் சிங்ஜி?) போலிருக்கிறார். என் பொம்மை தான் உசத்தி என்று சொல்லும் குழந்தை!

Wednesday, November 09, 2005

ANTARMAHAL: Views of the Inner Chamber

Image hosted by Photobucket.com

படம் விரட்டின விரட்டில் தேடிப் போய் பாஷை புரிய வைக்கும் இடத்தில் பார்த்துவிட்டு வந்தாயிற்று. 'அப்படியாயிருக்குமோ? சேச்சே அதுவாயிருக்காது' என்று நினைத்ததெல்லாம் அப்படியேதான் அதேதான் என்று சொல்லிவிட்டது. பாஷை சரியாகப் புரியாமல் அரைகுறையாய் புரிந்து எதையாச்சும் சொல்லிவிட வேண்டாம் என்று தான் அப்படி ஒரு மொட்டை பதிவு. என்ன செய்ய? படம் பார்த்து விட்டு வந்ததும் அதைப் பற்றி எழுதாமல் இருக்க முடியவில்லை.

ரிதுபர்னோ கோஷின் இன்னொரு பீரியட் படம். ஜமீந்தாரை படம் வரைய வந்த வெள்ளைக்காரர் தான் கதை சொல்லி. 1858 நடக்கும் கதை. சல்லாபி ஜமீந்தாருக்கு(ஜாக்கி ஷெராப்) ராணி விக்டோரியாவிடமிருந்து ராய் பகதூர் பட்டம் வேண்டும். ஆண் வாரிசு ஒன்று கட்டாயம் வேண்டும். இது இரண்டும் தான் பெரிய தலைவலி. முதல் மனைவியாக ரூபா கங்கூலி. புதிதாக வந்த இளம் மனைவியாக சோஹா அலி கான். தலைவலியைத் தீர்க்க எதையும் செய்ய தயாராகிறார் ஜமீந்தார். அந்த 'எதையும்'ல், வரபோகும் துர்கா பூஜைக்கு துர்காவின் உடலில் ராணியின் முகத்தை வைத்து சிலை செய்ய உத்தரவிடுவதும், புரோகிதர் வேதம் வாசிக்க, கேட்டுக் கொண்டே புணர்வதும் அடங்கும். ராணி முகச்சாயலில் சிலை செய்ய வருபவராக அபிஷேக்பச்சன். இந்த பாத்திரங்கள், அதன் இயலாமைகள், தவிப்பு, உணர்வு உரசல்கள்... இதில் ஓடும் கதை.

புரோகிதரை வைத்துக் கொண்டு புணர மறுக்கும் இளம் மனைவிக்காக முதல் மனைவி கட்டிலுக்கும் வாசிப்பவருக்கும் நடுவில் திரை போடச் சொல்கிறார். திரைக்கு அந்தப் பக்கம் ஜமீந்தாரும் இளம் மனைவியும். இந்தப் பக்கம் வாசிப்பவரைச் சீண்ட அவர் முன்னே அமர்ந்து கொஞ்சமாய்(?!) துகிலுரிகிறார். 'பிள்ளை பெற்றுக் கொள்ள நீ செய்வது தவறில்லை என்றால், நான் செய்வதும் தவறில்லை'.

மோப்பம் கண்ட புரோகிதர் கடைசியில் ஜமீந்தாரை வைத்தே பரிகாரம் என்ற பேரில் முதல் மனைவியோடு தன்னையும் சேர்த்து ஐந்து புரோகிதர்கள் புணர அனுமதி வாங்கிக் கொள்கிறார்! ராணியின் முகச்சாயல் துர்கா, பெரிய குற்றம், பரிகாரம், அஸ்வமேத யாகம், குதிரை, அது ஊரெல்லாம் சுற்றி வந்ததில் தீட்டு, அதைப் போக்க வீட்டு பெரிய மருமகள் குதிரையோடு புணர்ந்து சுத்தம் செய்ய வேண்டும், ஆனால் இப்போது அப்படியெல்லாம் செய்ய வேண்டாம் அதற்குப் பதில் இந்த ஐந்து புரோகிதர் சமாச்சாரம்! ஆக்ரோஷமாய் மறுக்கும் முதல் மனைவி பிறகு 'இதையே சாதகமாக்கிக் கொண்டு ஒரு பிள்ளையைப் பெற்றுக் கொண்டு உன் இடத்தைக் காப்பாற்றிக் கொள்' என்ற சேடி பெண்ணின் ஆலோசனையையும் ஏற்றுக் கெள்கிறார். அவசியம் வந்தால் எதுவும் மாறும்... எப்படியும் மாறும்!

கடைசியில் துர்காவை இளம் மனைவியின் முகச்சாயலில் செய்து விட்டு சிலை செய்தவர் தலைமறைவாகிறார். அதை அவமானமாக நினைத்து இளம் மனைவி தற்கொலை செய்து கொள்கிறார். புரோகிதர்களோடு புணரக் குறித்த நாளில் முதல் மனைவி விலக்காகிக் போகிறார்!

விலக்கானது தெரிந்தும் 'அமி ஜாபோ(நான் போவேன்/கிறேன்?!)... அமி ஜாபோ' என்று திரும்பத் திரும்பச் சொல்லி உடைந்து அழும் போது... அந்த பாத்திரத்தை அதன் அவஸ்தையை இதைவிட வேறெப்படியும் சொல்ல முடியாது. விரிந்த அந்தக் கண்களில் மாறி மாறி வெளிப்படும் கோபமும் இயலாமையும்... ரூபா கங்கூலியின்
பாதிப்பு இன்னும் கொஞ்ச நாளுக்கு இருக்கும். இப்படி ஒரு பாத்திரம் செய்த பிறகு என்ன மாதிரி உணர்வார் என்று ஒரு கேள்வி வருகிறது. ஆனால் அம்மையாருக்கு இதொன்றும் புதிதல்ல என்றே தோன்றுகிறது.

சோஹா அலி கான் சின்ன பூனைக்குட்டி போலிருக்கிறார். மெல்லிய குரலும், உயராத விழிகளும்... அந்தக் காலத்துப் பெண்கள் இப்படித்தான் இருந்திருப்பார்களானால் ரொம்ப பரிதாபம் தான். அபிஷேக் பெங்காலி பேசினால் எப்படி இருக்கும் என்ற கற்பனை பலூனுக்கு பரிதாபமாய் காற்று போய் விட்டது. ஹிந்தி பேசும் பிஹாரியாக தப்பித்துக் கொண்டார். முரட்டு ஜமீந்தாருக்கு ஜாக்கி(அய்யோ இப்படி எழுதவே பிடிக்கலை!) அழகாய் பொருந்துகிறார். மனுஷன் பாதிப் படம் புணரும் போஸிலேயே முடித்து விட்டார்! இத்தனை விலாவரியாக இவ்வளவு முறை அதைக் காண்பித்திருக்க வேண்டாம் தான். படம் ஆரம்பிப்பதே அந்த போஸில் தான். மழை இல்லாததால் புழுக்கமாயிருப்பதையும், வியாபாரிகள் நல்ல பணம் சம்பாரித்துக் கொண்டதையும் பற்றி சலித்துக் கொண்டு, கூட ஒரு ஏப்பமும் விட்டு... கோழிக்குஞ்சு போல் ஒடுங்கிக் கொண்டிருக்கும் இளம் மனைவியோடு தொடங்கும் முதல் காட்சி!

ஆள் உயரத்துக்கு வெள்ளையாய் புல் பூத்திருக்கும் நதிக்கரையை எங்கே பிடித்தார்களோ! அழகான ஒளிப்பதிவு. இழைத்து இழைத்து படம் எடுத்தது தெரிகிறது. மை தீட்டிய கண்களும், ரவிக்கையில்லாத தோள்களில் நிறைந்து கிடக்கும் நகைகளும்... அரங்கத்திற்குள் இருந்த நேரத்தை magical moments ஆக்கும் வித்தை பிடித்திருந்தது. படம் முடியும் போது ஒரு சின்ன அதிர்வை எல்லோருக்குள்ளும் தந்ததை இரண்டு நாளும் உணர முடிந்தது. ஒரு ஆழ்ந்த நிசப்தத்திற்கு பின் கலைந்து செல்லும் திரையரங்கம்... என்னவோ செய்தது.

Tuesday, November 08, 2005

புத்தகமும் கையுமாக...

கடந்த ஒரு மாதமாக புத்தகமும் கையுமாக கழிந்தது. நான்கு புத்தகங்கள். அதுவும் ஆறாம் வகுப்பு வாண்டு வாசிக்கும் பாட புத்தகம் அளவில். அதைப் படித்து ஒரு பரிட்சை. ஊதித் தள்ளி விடலாம் என்ற நினைப்பெல்லாம் படிக்க ஆரம்பித்த முதல் வாரத்திலேயே காணாமல் போய் விட்டது. படிக்கும் போது புரிகிறது. சுவாரசியமாகத்தான் இருக்கிறது. அதைப் பற்றி ஆயிரத்து இருநூறு வார்த்தைகளில் எழுது என்றால் என்ன எழுதுவது என்ற கலக்கம் வந்ததென்னவோ நிஜம். ஆனால் எழுதப் போனபோது அத்தனை சிரமமாயிருக்கவில்லை. ஏதோ ஒரு நுனியை
பிடித்துக் கொண்டு இழுக்க சில நேரம் மலையே வந்தது. சிலநேரம் கண்ணாமூச்சி காட்டிப் போனது. மொத்தத்தில் சுவாரசியமாயிருந்தது.

வாசித்த விஷயங்களோடு நிறைய விஷயங்களை தொடர்பு படுத்திக் கொள்ள முடிந்தது. ப்ராய்டுடனான காதல் கொஞ்சம் தீவிரமாகியிருக்கிறது. புத்தகஅலமாரியில் கவனிக்காமல் கிடக்கும் அவருடைய புத்தகங்களை படிக்கும் ஆர்வம் தலை தூக்கியிருக்கிறது. சாய்வு நாற்காலியில் சாய்ந்து மேலோட்டமாய் படிக்காமல் கவனமாக படிக்க வேண்டியதன் அவசியம் புரிந்திருக்கிறது. இன்னும் கொஞ்சம் ஆழமாகப் போகும் ஆர்வம் வந்திருக்கிறது. பரிட்சை முடிந்த கடைசி நாள் அப்பாவுடனான தொலைபேசி உரையாடல் ஒரு மறக்க முடியாத, சொல்ல முடியாத ஒரு உணர்வை தந்திருக்கிறது...

'அப்பா, நரேன் சென்னைக்கு பத்ரமா போய் சேந்துட்டான்'

'அப்டியா... வழியில எதாச்சும் சாப்டானா?'

'தெரியலையே... நான் பேசலை. அவர்தான் பேசியிருக்கார்'

'ஏன்? நீ எங்க போன?'

'எனக்கு மத்யானம் பரிட்சை இருந்துதுப்பா'

'அப்டியா... நல்லா எழுதுனியா?'

'மொதல் மூனும் நல்லா எழுதினேன். இன்னைக்கு அவ்வளவு சரியா எழுதல'

'ஒழுங்கா படிச்சாதான ஆகும். எப்பப்பாரு டீவியும் கம்ப்யூட்டருமா இருந்தா...'

பள்ளிக்கூடம் போற மகளை கண்டிக்கிற தொனியில் அப்பா செல்லமாக திட்டிக் கொண்டே போக, ஒரு கணத்தில் இரண்டு பேரும் சிரிக்க தொடங்க...

ANTARMAHAL - ஒரு பாஷை தெரியாத பார்வையில்.

நான் பார்த்த ரிதுபர்னோ கோஷின் இரண்டாவது படம். சோக்கர் பாலியின் சாயலோடு கொஞ்சம் எதிர்பார்ப்பை தூண்டியதாயிருந்தது.

பாஷை தெரியாமல் படம் பார்க்கும் desperation என்னவென்று இன்றைக்கு புரிந்தது. ஹாஸ்ய படமாயிருக்கும் பட்சத்தில் பேசுவது புரியாவிட்டாலும் செய்கைகள் சில நேரம் சிரிப்பை வர வைக்கும். இவ்வளவு உணர்ச்சி கொப்பளிக்க என்னதான் சொல்றாங்க என்று தவிப்போட பார்க்க வைத்த படம். தியேட்டர் வாசலில்
வைத்திருந்த விளம்பர அட்டையில் with english sub-titles என்று போட்டிருந்ததை பற்றி அதிகம் அக்கறையில்லாமல் தான் பார்க்கப் போயிருந்தேன். படிப்பதில் கவனம் போனால் படத்தை ரசிக்க முடியாது என்று தான். sub-titles என்னவோ வரவில்லை. ஆனால் ஏன் போடலைன்னு திரும்பி வர்றப்ப டிக்கெட் கொடுத்த மகராசனை கேள்வி கேட்டுட்டு தான் வந்தேன்.

வீட்டுக்கு வந்து போன வார பேப்பரில் அதோட விமர்சனம் வந்திருந்ததே அதையாவது பார்த்து படத்தைப் பற்றி இன்னும் கொஞ்சம் தெரிஞ்சுக்கலாம் என்ற முயற்சியும் வீணானது. விமர்சனம் எழுதிய புண்ணியவானும் கதையைச் சொல்லாமல் விட்டிருக்கிறார். என்னைப் போல!

ஆனால் வேறொரு தியேட்டரில் sub-titles உடன் வருவதாக சொல்லியிருக்கிறார். இன்னொரு தரம் பார்த்தே ஆக வேண்டும். அதுவரை அந்த கேரக்டர்கள் எல்லாம் என்னதான் பேசியிருக்கும் என்ற க்யூரியாசிட்டியோடு நான் இருக்கப் போகிறேன். பார்த்து விட்டு வந்து கொஞ்சம் போல சொல்கிறேன்.

Wednesday, October 05, 2005

Maine Gandhi Ko Nahin Maara

Image hosted by Photobucket.com

ஹிம்மத் கர்னே வாலோங்கி ஹார் நஹி ஹோத்தி (தைரியத்தோடு செயல் படுபவர்களுக்கு தோல்வி வருவதில்லை)- இந்த கவிதை வரிகளோடு தொடங்குகிறது படம்.

ஒரு பழைய காலத்து மும்பய் நகர வீடு, வீட்டு மேசை நாற்காலியெல்லாமும் அதே பழைய நாட்களை சொல்லிக் கொண்டு. மேசையில் ஒரு மார்க்வெஸ் புத்தகம் கூட கண்ணில் பட்டது. ஹிந்தி புரோபஸர் உத்தம் சௌத்ரியாக அனுபம் கேர், மகள் ட்ரிஷாவாக ஊர்மிளா, இன்னும் தேடித் தேடி தேர்ந்தெடுத்த கலைஞர்கள். வயது காரணமாக வேகமாக நினைவாற்றலை இழந்து கொண்டிருக்கும் தகப்பனை கரிசனத்தோடு கவனித்துக் கொள்ளும் மகள். கேருக்கும் ஊர்மிளாவுக்கும் பாத்திரமாகவே மாற இன்னொரு சந்தர்ப்பம். மறதியோடு போராடும் அப்பாவுக்காக
வாழ்க்கையோடு சமரசங்களும், அந்த சமரசங்களின் அழுத்தம் தாங்காமல் வெடிப்பதுமாய்... அம்மணிக்கு கண், உதடு, கழுத்து நரம்பு எல்லாம் பேசுகிறது. ஊர்மிளாவின் பாத்திரத்தோடு சட்டென்று நெருங்கிக் கொள்ள முடிந்தது.

இடைவேளைக்கு சில நிமிடங்களுக்கு முன்னால் கேர், 'நான் காந்தியை வேணும்னு கொல்லவில்லை' என்று முதல் முறையாக சொல்லும் வரை இந்தப் படத்தில் காந்தி எங்கே வருகிறார் என்ற யோசனை வந்தது நிஜம். மனநல மருத்துவர், அவருடைய சோதனைகள், அவர் முயற்சிக்கும் தீர்வு... எல்லா இடங்களிலும் கேரின் ஆக்ரமிப்பு. விரல் நடுக்கங்களும், காதோர சிலும்பல்களை தடவி தடவி பதட்டத்தை மறைப்பதும்... முதலில் வீட்டிலிருக்கும் வயதானவர்களையும், நாளைக்கு நமக்கும் தான் என்றும் நினைக்க வைப்பதே அந்த நடிப்புக்கு வெற்றி.

பொம்மன் இரானி, கேஸட்டில் நான்கு கலந்தடித்தவைகளுக்கு நடுவில் ஒரே ஒரு பாட்டு பாடினாலும் உருக்கிப் போகும் ஹரிஹரன் மாதிரி, கொஞ்சமே வந்து காட்டுக் கத்து கத்திட்டு போகிறார். உயிரோட்டமுள்ள கத்தல்! கொஞ்சம் வஹிதா ரெஹ்மானும். தலைப்பில் காந்தியைப் போட்டதில் ரெண்டு வகை ரியாக்ஷனும் இருக்க வாய்ப்பிருக்கிறது. முழுக்க முழுக்க காந்தியோடு தொடர்பு படுத்த முடியாமலும், இல்லவே இல்லை என்று விலக்க முடியாமலும் போகலாம். தலைப்பைப் பார்த்து, 'நான் வரலையே'ன்னு சொன்ன மகனும் ஒரு பதம்.

ஆனால், முதுமையையும் மன நோய்களையும் பற்றி இவ்வளவு ஆழமாக இதுவரை இந்தியப் படங்களில் பார்த்ததில்லை. சுஜாதா சொன்னது போல இனிமேல் இந்த மனநோய்கள் அதிகம் அலைக்கழிக்கும். நீண்ட ஆயுளும் தீராத மன அழுத்தங்களுமாய்.

Friday, September 09, 2005

',' வர வேண்டிய இடத்தில் '.'

'ஆமா உனக்கு '... சிங்' ஞாபகம் இருக்கா?

'யாரு?'

'சூரத்ல இருந்தார்'

'ராஜுலால குள்ளமா குண்டா ஒரு சர்தார்ஜி வைப் இருந்தாங்களே அவங்களா?'

'இல்ல, அவங்க இல்ல'

'அந்த நெட்டையா ஒரு அம்மா, எல்லா பார்ட்டிலயும் சண்டை போடுவாங்களே அவங்களா?'

'சேச்சே, அவங்களும் இல்ல. சூரத்ல அவங்க பொண்ணு கூட யாரையோ கல்யாணம் பண்ணிட்டு போயிடுச்சே?'

'ம்ம்ம்... விபரம் ஞாபகம் இருக்கு. ஆள் யாருன்னு தெரியலை. என்ன அவருக்கு?'

'அவர் இறந்துட்டாரு'

'ஐயோ! என்னாச்சு?'

'ஆக்ஸிடெண்ட்'

'எங்கே? எப்பிடி?'

'சைட்ல. இன்னைக்கு சாயந்தரம். ஒரு டவர் விழுந்துடுச்சாம்'

கட்டுமானப் பணி இடத்தில் உயிர்சேதம் தவிர்க்க எல்லா முயற்சிகளும் செய்கிறார்கள் தான், ஆனாலும். முதல் சாவு எப்போது கேள்விப்பட்டேன்? நைட் ஷிப்டில் குளிருக்கு போர்த்தியிருந்த ஷால் நுனி ஏதோ மிஷினின் ·பேனில் மாட்டி தூக்கி அடிக்கபட்டு உயிர் இழந்த ஒருவருடையது தான். கால் தவறி விழுந்தது, தலைக்கவசம் அணியாதது, கொஞ்சமே கொஞ்சம் போதை, கவனக்குறைவு... அகால நேரத்தில் மணி அடித்து தகவல் சொன்ன சாவுகள்.

ஆரம்பத்தில் கேட்கும் போதே பயமாயிருக்கும். சில நேரங்களில் கிடைக்கும் தகவல்கள், இவ்வளவுதானா என்றிருக்கும். கடைநிலைப் பணியாளரான கணவர் இறந்ததில் கிடைத்த பணத்தை வாங்கிய கையோடு வேறொருவரோடு வாழத் தொடங்கி விட்ட மனைவி... அவ்வளவு பணத்தை மொத்தமாகப் பார்த்ததில் புத்திர சோகம் மங்கிப் போன பெற்றோர்கள்... விமரிசிக்க என்ன இருக்கிறது? அவரவர் வாழ்கை... அவரவர் நியாயங்கள்.

கடைநிலை தவிர்த்த மற்ற கட்டுமானப் பணியாளர்கள் வாழ்க்கையிருக்கிறதே, அதில் இரண்டே இரண்டு ஜாதி. ஒன்று 'என்னால இப்படி ஊர் ஊரா பொட்டி தூக்க முடியாது' என்று ஆரம்பத்திலேயே ஊர்பக்கம் மனைவிமார்கள் செட்டிலாகிவிடுவது. இன்னொன்று நேரம் காலமில்லாமல் வரும் மாற்றல்களில் இழுத்தடித்துக் கொண்டு ஊர் ஊராக சுற்றுவது.

முன்னதில்... பிள்ளைகள் படிப்பு, வீட்டு நிர்வாகம், வரவு செலவு எல்லாம் வீட்டம்மா தலையில். படிக்காத, சொல் பேச்சு கேட்காத குழந்தைகள் படுத்தும் போது சலித்துச் சாய தோள் இல்லாத ஏக்கத்தோடே கழிக்க வேண்டியிருக்கும். வருஷத்திற்கு ஒரு தரமோ இரண்டு தரமோ வாரம் பத்து நாள் விடுமுறையில் மொத்த வருட வாழ்க்கையையும் வாழ்ந்து விட வேண்டும். ஊடல், கூடல் எல்லாமும் தான். குழந்தைகள் வளர்வதை கற்பனையில் மட்டும் பார்க்க முடிந்த அப்பாக்கள். தனியாக இருப்பதால் குடி, சிகரெட் இன்னபிற பழக்கங்களில் தனிமையைத் தொலைக்கும் முயற்சிகள். அதே தனிமை விரட்டலும் உடல் தேவையும் சில நேரங்களில் திருமணம் தாண்டிய உறவுகளைத் தேட வைப்பது... இரண்டு பக்கங்களிலும் இருக்கலாம். தனித்தனியே வாழ்வதால் காலப் போக்கில் அவரவருக்கான வட்டம், வாழ்க்கை என்றாகி, சேர்ந்து வாழ சந்தர்ப்பம் கிடைத்த போது மூச்சுத் திணறும் ஜோடிகளும் கண்ணில் படாமலில்லை.

இரண்டாமதில்... ஒன்றாக இருந்தாலும் நேரம் காலமில்லாத வேலை, வீட்டுக்குள் நுழையும் போதே தினமுமா லேட்டா வருவீங்க என்று சண்டை தொடங்கும் மனைவியும், ஆபிஸ் கடுப்பில் பெண்டாட்டியை வையும் கணவரும் சர்வ சாதாரணம். வீட்டுக்கு வந்த பிறகும் தொலைபேசியிலோ செல்பேசியிலோ, அதைத் தூக்கிட்டியா? இதை இறக்கிட்டியா? அந்த கான்கிரீட் ஏன் இன்னும் ஆகலை? என்று ஆபிஸ் நிர்வாகம் தூள் பறக்கும். பண்டி இந்த தரம் மேக்ஸில் பத்து மார்க்கு, பூஜா வரவர சொன்ன பேச்சே கேட்பதில்லை என்று தொடங்கும் தினசரி புலம்பல்கள் காதில் விழ ஆரம்பிப்பதற்கு முன்பே கணவர் தூங்கிப் போய் விட்டது தெரியாமல் பேசிக் கொண்டிருக்கும் மனைவிகள், இதையெல்லாம் தன்னைப் போன்ற இன்னொரு ஜீவனுடன் மாலை நேர தொலைபேசி அரட்டையில் போலிச் சிரிப்பில் தொலைத்துக் கொள்ள வேண்டியது தான். அது பெரும்பாலும் பரஸ்பர பரிமாற்றமாகத்தான் இருக்கும். முன்னெல்லாம் நிறைய பாட்டு கேட்பேன், நிறைய சினிமா பார்ப்பேன்... இப்பல்லாம் வீட்டுக்கு வந்தால் நேரமேயில்லை என்று சலிக்கும் ஆண்கள் பாடும் கொஞ்சமில்லை.

இதோ இதை எழுத வைத்தவர்... அவரை முகம் நினைவில்லாத போதும், பேராகவாவது தெரியும். பத்தாவது படித்துக் கொண்டிருந்த மகள் காதல் திருமணம் செய்து கொண்டதில் கொஞ்சம் பித்தாகிப் போன அவர் மனைவியைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அங்கே இருக்கவே பிடிக்காமல் மாற்றல் கேட்டு எங்கேயோ உ.பி பக்கம் போனது தெரியும்.

அந்த சர்தார்ஜியும் நினைத்திருக்கலாம்... இன்னும் நாலு வருஷம். சர்வீஸ் முடிந்ததும் ஊரைப் பார்க்கப் போய் விட வேண்டும். சர்சோங் கா சாக் - ம் மக்காய் கி ரொட்டியும் சொந்த வயலில் உட்கார்ந்து சாப்பிட... பழைய தோஸ்துகளோட கும்மாளம் போட... பிள்ளைகளோடு கொஞ்சம் நேரம் செலவிட... ம்ம்ம் பொண்டாட்டி கூடவும் தான்... இப்படி நிறைய இருந்திருக்கலாம். அன்றைக்கு காலையில் கிளம்பிப் போகும் போது 'இந்த நாலு ரொட்டியைக் கட்டிக் கொடுக்க தினமும் லேட் பண்ணறே' என்று சலித்துக் கொண்டு கிளம்பினாரா? இல்லை... 'உன்னை ரொம்ப விரட்டரேனோடி?' என்று கேட்க நினைத்து... சரி சரி அப்புறமா, ராத்திரிக்குப் பார்த்துக்கலாம் என்று அவசரமாய் கிளம்பிப் போனாரா?

சில நேரங்களில் அந்த அப்புறம் எல்லாருக்கும் வாய்ப்பதில்லை தான்.

Saturday, August 20, 2005

அவ்வளவே.

ஸோ... வணக்கம் சொல்ற நேரம் வந்து விட்டது. ஒரு வார ஒளிவட்டம் தந்ததற்கு தமிழ்மணத்திற்கு என் நன்றி.

மினி மாரத்தான் ஓடியது போலிருக்கிறது. முடித்ததில் நிறைவாகவும் இருக்கிறது. வாசித்த, கருத்து சொன்ன நண்பர்களுக்கு நன்றி.

ஐயோ... சுத்தமா என்னால இதுக்கு மேல எதுவும் எழுத முடியலை. அதனால் இத்தோட முடிச்சுக்கறேன். அடுத்த வார இறுதியில் 27-30 வரை சென்னையில் இருக்கிறேன். தயிர்வடையோடு உட்லாண்ஸோ, சிக்கன் டிக்காவோடு பியர் பாரோ( நீங்க அடிங்கப்பா!) எதுவானாலும் சரி... ஒரு குரல் கொடுங்க. நம்ம பசங்க கிட்ட ஒரு மாலை லீவு சொல்லிட்டு வரேன். ரோமிங்கில் இருக்கும் போது கால் போட்டு தாளிச்சாலும் சரின்னு நம்பர் குடுக்கறேன். நண்பர்களுக்கு இல்லாததா?! ஒன்பது எட்டு மூன்று ஒன்று ஏழு எட்டு பூஜ்யம் மூன்று ஒன்று ஆறு (ப்ரகாஷ் குசும்பு!) பளிச்சுன்னு நம்பர் போடறதுக்கு இது தேவலை!

மெயில் அனுப்பினாலும் சரியே. nivedha_1 at yahoo dot com.

அவ்வளவே. நன்றி. வணக்கம்.

Friday, August 19, 2005

அது வேற உலகம்.

ஒரு கறுப்பு நிற Shopper's Stop கவரில் பொதிந்து வைக்கப் பட்டிருக்கும். புத்தக அலமாரியில் சட்டென்று கண்ணில் படாத இடத்தில், அதே சமயம் வேண்டுமென்றால் அதிகம் தேட வைக்காமல் கையில் கிடைப்பதாய். சில நேரம் சந்தோஷத்தைக் கொடுக்கக் கூடியது. சில நேரம் நான் எவ்வளவு மிஸ் பண்ணறேன் என்பதை உணர வைப்பது. அதைப் பிரித்ததில்....

ஒரு பெரிய வெள்ளை நிற சார்ட் பேப்பரை மடித்து செய்தது. முன் பக்கம் ஒரு விளக்கு வரைந்து கலர் செய்யப் பட்டிருக்கிறது. அவள் வயது குழந்தை வரைந்தது என்று நம்ப சிரமமான நேர்த்தியோடு. உள்ளே Happy Diwali & Prosperous New Year என்று எழுதி to Nirmala teacher, From Khyati.

ஒரு வாழ்த்து அட்டை. கடையில் வாங்கியது. மேலே Dear Nirmala teacher. கீழே Siddhanjay Godre, roll no 14!

வளைத்து வளைத்து ஒரு கையெழுத்து. ஸ்டைலாம். You are my best teacher and my best friend. you are good teacher. you teach that song running over, do you love my jesus, and if i, if i that song is very good. you are so good. i cant believe it. please take it. பக்கத்தில் கப்பல் மாதிரி ஒரு கேக் படம் வரைந்திருக்கிறது. பின் பக்கம் From Kanak S. agarwal, vibhusha (பெயர் எழுதி அடிக்கப் பட்டிருக்கிறது. card செய்து கொடுப்பதற்குள் சண்டையாயிடுச்சோ?!) and Avdhi Kabra.

நோட்டு புத்தகத்தின் ஒரு பக்கத்தைக் கிழித்து அவசரமாகச் செய்தது. ஒரு பக்கம் நீல க்ரேயான் பூசி, இன்னொரு பக்கம் பச்சை க்ரேயான். நீல க்ரேயான் மீது ஊதா நிறத்தில் when i close my eyes, i hear the cries, they echo in my mind. he must die to cricify from people so unkind and in my life in every strife, to u i will now .....??? கடைசி வார்த்தை படிக்க முடியவில்லை. கீழே teacher wish you happy diwali.

ட்ராயிங் நோட்டு பக்கம். இரண்டாக மடித்து முன் பக்கம் சிவப்புக் கலர் ஸ்ப்ரே செய்திருக்கிறது. அதில் எட்டு இதயங்கள்! love, joiness, enjoyness, happiness, gifts, sometimes sadness, sometimes full of ஒரு சிரிக்கும் வாய், sometimes of இரண்டு இதயங்கள். உள்ளே... this card brings exclusive wisches to an expecdational fiend like teacher. from Shubham.

எங்கிருந்தோ வெட்டி எடுத்த ஒரு பூ, ஒரு பழக்கூடை, ஒரு ஜன்னல், ஒரு நுரை ததும்பும் கோப்பை, ஒரு நாய்க்குட்டி, ஒரு சிரிக்கும் பெண் குழந்தை கார்ட்டூன், இரண்டு நீள பட்டியில் நட்சத்திரங்கள்... எல்லாவற்றையும் ஒரு பேப்பரில் ஒட்டி, மடித்து, பசை காய்வதற்குள் மடித்ததில் பேப்பரும் ஒட்டிப் போய், அதை
கவனமாக பிய்த்து எடுத்து... கிறுக்கலான கையெழுத்தில் தீபாவளி வாழ்த்து Apoorva Mehtaவிடமிருந்து.

தொடரும் வாழ்த்து அட்டைகள். பெரும்பாலும் அவர்களே செய்தது. முறுவலிக்க வைக்கும் எழுத்துப் பிழைகளோடு. தப்பே இல்லாத அட்டைகளை விட, வெகுளித்தனமான இவை அதிகம் சந்தோஷம் தருகிறது. ஒரு அட்டையில் பெரிய அழகான பார்பி ஸ்டிக்கர். நிச்சயம் அது அவளுக்கு ரொம்ப பிடித்ததாய் இருந்திருக்க வேண்டும். ஆனாலும் அது அவளுடைய டீச்சருக்கு. ஒரே வாசகம் இரண்டு அட்டையில். அதை கொடுக்கும் போது அவர்களுக்குள் சண்டை வந்ததும், ஒருத்தி 'என்னைப் பார்த்து அவள் காப்பி அடித்தாள்' என்று சொன்னதும் தெளிவில்லாமல் நினைவில். முழு சூரியன், இரண்டு மரம், இரண்டு மேகம், பறந்து
கொண்டிருக்கும் நாயின் வாயில் ஒரு இதயம், அதில் happy diwali! தெளிவில்லாமல் ஒரு படம் வரைந்து(மாடர்ன் ஆர்ட்?!), கலர் பூசி கொடுக்கப்பட்ட ஒன்று பெயரில்லாமல். ப்ரோபஷனல் டச்சோடு யாரிடமோ கொடுத்து வரைந்து கீழே கிறுக்கல் கையெழுத்தோடு ஒன்று.

அடிக்கும் நிறத்தில் பாசி மணிகளைக் கோர்த்து ஒரு வளையல், ஒரு மோதிரம், ஒரு கழுத்துச் செய்ன்...பிக்னிக் போயிருந்த போது எல்லாம் என் அளவெடுத்து செய்தது, பையின் அடியில். அடுத்த நாள் 'நீங்க அதை இன்னைக்கு ஸ்கூலுக்கு போட்டுட்டு வருவீங்கன்னு நினைச்சோம்' என்று இடைவேளையில் ஏமாற்றத்தோடு சொன்ன போது சமாதானப் படுத்தியது நன்றாக நினைவிருக்கிறது. தேவைப்படும் என்று எழுதி வைத்திருந்த நான்காம் வகுப்பின் ஐம்பத்தியோரு பேரின் பெயர், தொலைபேசி எண்ணுடன் ஒரு காகிதம். வரிசையாகப் படித்துக் கொண்டே வரும் போது வகுப்பில் அட்டெண்டென்ஸ் எடுத்த நினைவு. ஒன்றிரண்டு பெயருக்கான முகங்கள் நினைவுக்கு வராத போது... இவ்வளவு சீக்கிரம் மறந்துட்டயா? என்ற குற்ற உணர்வு.

சின்ன சின்னதாய் சில வருத்தங்கள், கோபங்கள், இயலாமைகள் இருந்தாலும் தினம் தினமும் என்னை புதிதாய் பிறக்க வைத்த நாட்கள். தரையிலிருந்து இரண்டு இன்ச் உயரத்தில் நடந்து கொண்டிருந்த நாட்கள். எல்லாம் ஒரு கணத்தில் காற்றாய் கறைந்து விட்டது. வேண்டி விரும்பிக் கேட்டாலும் இனி வராது. இவ்வளவு தானா... இன்னும் எதாவது நடந்திருக்குமே... யோசிச்சு பாரு... என்று தேடிப் பார்க்கிறேன். எதாவது செய்து கொண்டிருக்கும் போது சட்டென்று சிலது நினைவுக்கு வருகிறது. இதோ இந்த சந்தனா(chandana) மாதிரி.

ஒரு மாலை பள்ளிக்கூடம் முடிந்து ஹிந்தி ஆசிரியரோடு பேசிக் கொண்டே நடந்து கொண்டிருக்கிறேன். காலியான வராந்தாவின் எதிர்ப்புறத்தில் இருந்து வேகமாக வந்து கொண்டிருக்கிறாள். என்னுடைய முந்தைய வருடத்து மாணவி. எங்களுக்கு நாலடிக்கு முன்னாலிருக்கும் போது ரொம்ப இயல்பாக 'கேஸே ஹோ?' (எப்படியிருக்கே?). அவ்வளவே. பதிலைக்கூட எதிர்பார்க்காமல் கடந்து போய் விட்டாள். கூட வந்து கொண்டிருந்த ஆசிரியருக்கு ஆச்சர்யம் தாங்க முடியவில்லை. கொஞ்சம் எனக்கும். இந்தப் பிள்ளைகள் எப்படி இருக்கிறார்கள் என்று தொடங்கிய அவர் குரல் புலம்பலாகத் தொடர, யோசிக்கும் போது... வரவழைத்துக் கொண்ட மரியாதை, உதட்டிலிருந்து வரும் மாலை வணக்கம்... இதெல்லாம் ஒரு ஆசிரியருக்குச் செய்வது. இது வேற மாதிரி வெளிப்பாடு. இயல்பாக. நட்பாக. அந்தக் குட்டி, அந்த மாலை, அந்த வராந்தா, அந்த கேஸே ஹோ? ... ஒரு நிரந்தர பிம்பமாக்கிக் கொடுத்துப் போயிருக்கிறாள்.

எல்லாருக்குமே நல்லதே என்றும் சொல்ல முடியாது. எப்போதும் கோபமாக, என்ன சொன்னாலும் கேட்க மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கும் பரேஷ் மனதில் என் பிம்பம் என்னவாயிருக்கும் என்று யூகிக்க முடிகிறது. சிரிப்பே இல்லாமல் ஆராயும் கண்களோடு இருக்கும் பள்ளி முதல்வரின் மகள் அவளுடைய எந்த வட்டத்திற்குள்ளும் என்னை அனுமதித்ததில்லை. பாதி கேள்விகளுக்காவது விடை தெரிந்தும் எந்தப் பரிட்சையிலும் நாலு வரிக்கு மேல் எழுத மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்த அபூர்வாவை கடைசி வரை என்னால் எழுத வைக்க முடியவில்லை. வகுப்பில் பரிட்சை எழுதிக் கொண்டிருக்கும் போது, அவசரமோ, பயமோ... உள்ளாடையில் மலம் கழித்ததும், அதைச் சொல்ல இன்னும் அதிகமாக பயந்த நவாஸ¤க்கு நான் சிம்ம
சொப்பனமா தெரியாது. அன்றைக்கு என்னை 'நீ ஒன்னும் எல்லாருக்கும் Pet டீச்சர் இல்லை' என்று சொல்லாமல் சொல்லிப் போனான். வீட்டுக்கு போன் போட்டு, அவன் அம்மா மாற்று ஆடையோடு வந்த போது எனக்கு என்னை பிடிக்கவில்லை.

அவ்வளவுதான். மறுபடியும் எல்லாவற்றையும் கவரிலேயே போட்டு அதே இடத்தில் வைத்தாகிவிட்டது.

'சந்தோஷமா?'

'ரொம்ப'

'சங்கடமொன்னும் இல்லியே?'

'அதும் தான்'

Thursday, August 18, 2005

இறுக்கமாகவேதான் இருக்கப் போகிறோமா?

அவர் எனக்கு அதிகம் பழக்கம் இல்லாத, நெருங்கின உறவினர். அந்த முறை ஊருக்குப் போயிருந்த போது உடல்நலம் சரியில்லாத அவரைப் பார்க்கப் போயிருந்தோம். ஆஸ்பத்திரி அறையைத் தேடிப் போன போது கட்டிலில் உட்கார்ந்திருந்தார். அசப்பில் 'மணல்கயிறு' கிட்டுமணியின் மாமனாரைப் போல இருப்பார். நல்ல உயரம். வயசு காலத்தில் நல்ல சிவப்பாயிருந்திருக்க வேண்டும். அப்போது கொஞ்சம் சோகையாயிருந்தார். அவரை இதற்கு முன் பார்த்த சந்தர்ப்பங்களில் 'வணக்கம், சௌக்கியமா இருக்கீங்களா?' விற்கு மேல் போனதில்லை. அப்போதும் அதையே அசட்டுத்தனமாகக் கேட்டு, அதற்கு அவர் உடம்பிற்கு என்ன என்று விபரமாகச் சொல்லிக் கொண்டிருந்தார். மெல்லிய குரலில் சினேகமாக சொல்லிக் கொண்டு போக, கேட்க ஆசையாயிருந்தது.

அப்போது உள்ளே நுழைந்த அவர் மகள் 'இவளுக்கு புஸ்தகம் வாசிக்கறதுல ரொம்ப ஆர்வம்' என்று அவரிடம் சொல்லி விட்டு, என் பக்கம் திரும்பி 'அய்யா கூட நிறைய வாசிச்சிருக்கார்' என்று சொன்ன பிறகு பேச்சில் ஸ்ருதி சேர ஆரம்பித்தது.

நான், கணவர், அவர், அம்மா (அவர் மனைவி), அவர் மகள் எல்லோரும் சேர, பொன்னியின் செல்வனில் ஆரம்பித்தது. பொன்னியின் செல்வனில் இருந்து அலையோசைக்குப் போன போது கணவரும், அம்மாவும் கழண்டிருந்தனர். அலையோசை நாயகி கடைசியில் ஏரியில் படகு சவாரி போகும் போது அவளுக்குக் கேட்பதாக வரும் அலை சத்தத்தைக் குறிப்பிட்டு 'வாசிக்கும் போது காதுல அலை சத்தம் கேட்டுதுப்பா' என்று அவர் சொன்ன போது 'அட! இப்படி வாசிப்பவரா நீங்க!' என்றிருந்தது.

கல்கியிலிருந்து கொஞ்சம் அங்கே இங்கே என்று அலைந்து பாலகுமாரனுக்கு வரும் போது அவர் மகளும் ஜகா வாங்கி விட்டார். மகளுக்கு அந்தக் கால பாலகுமாரன் பிடிக்காது. சமீபத்திய பாலகுமாரன் எழுத்துகளோடு எனக்கு நெருக்கமில்லை. பெரியவருக்கும் பழைய பாலகுமாரன் எழுத்துகள் மேல் ஒரு மோகம் இருந்தது. நான் நினைவு கூர்ந்ததும் அவர் நினைவு கூர்ந்ததுமாய்... ஒரு நீண்ட சுற்றுக்குப் பிறகு தி.ஜா. முதல் முதலாய் எனக்கு தி.ஜா அறிமுகமானதை நான் சொல்ல, மலர்மஞ்சம், மோக முள், அம்மா வந்தாள்... போதும் என்று நர்ஸ் விரட்டாமல் இருந்திருந்தால் இன்னும் ஓடியிருக்கும்.

இரண்டு மணி நேரத்துக்கு மேல் பேசியிருக்கிறோம். இன்னும் பேச வேண்டியது பாக்கியிருப்பது போல இருந்தது. பேசிய வரையில் திருப்தியாகவும் இருந்தது. விடை பெறும் நேரம், அவரைச் சந்தித்ததில் எவ்வளவு சந்தோஷம் என்பதை உணர்த்த ஸ்வாதீனமாகத் தோண்றியது அழுத்தமான ஒரு கை குலுக்கல் தான். நான் கை நீட்ட, அவர் கண்களில் ஒரு தயக்கம் காட்டி, வணக்கம் சொல்லி அனுப்பிய போது... ஆச்சர்யமாயிருந்தது.

அவரை விட்டு விடலாம். வயதானவர். அந்தக் கால மனிதர். ஆனால் அந்த சந்திப்பு சில கேள்விகளைத் தந்தது. ஒரு ஆண் இன்னொரு ஆணை சந்திக்கும் முதல் சந்திப்பே பெரும்பாலும் கை குலுக்கலில் தான் தொடங்குகிறது. ஆனால் ஒரு பெண் இன்னொரு பெண்ணைச் சந்திக்கும் போது கூட ஒரு தலையசைப்பு... ஒரு ஹலோ அல்லது வணக்கம் மட்டும் ஏன்? முதல் சந்திப்பிலேயே இயல்பாக பெண்களோடு கை குலுக்கும் ஆண்கள் இல்லையென்றும் சொல்ல முடியாது. ஒருவரைப் பார்க்கும் போது இயல்பாக அப்படி எக்ஸ்பிரஸ் செய்யச் செய்வது எது? அவர்கள் உருவமா? உடை தரும் அனுமானமா? இல்லை வைப்ரேஷன்ஸா? சில நேரங்களில் எவ்வளவு பழகினாலும் விலகியே நிற்கச் செய்வது எது? மரியாதை? கலாச்சாரம்? என்னன்னாலும் நீ பெண்(ஆண்), நான் ஆண்(பெண்)?

ஒருவேளை இப்படி மறுக்கப் படலாம் என்பது தான் முக்கியமான காரணமாயிருக்க வேண்டும். ஆனால் இதெல்லாம் அதிகம் 30+ களுக்குத்தான். 30+ களோடுதான். அதற்குக் குறைந்த வயதுக்காரர்கள் இவ்வளவு இறுக்கமில்லை என்று தோண்றுகிறது.

இறுக்கமாகவேதான் இருக்கப் போகிறோமா?

Wednesday, August 17, 2005

விஷ¤ கூப்பிடறார் - 2

ஒரு மணிக்கெல்லாம் வந்து விடுங்கள். ஒன்றரைக்குக் கிளம்பினால் எட்டு மணிக்குள் சிட்டி டூரை முடித்து விடலாம் என்று மேனேஜர் சொல்லியிருந்தார். நாங்கள் திரும்பி வரும் போதே இரண்டாகியிருந்தது. அவசர அவசரமாக சாப்பிட்டு விட்டு கிளம்பினோம். நமக்கு இந்த சிட்டி டூரெல்லாம் சரிப்படாது. ஆனால் முன்னே பின்னே தெரியாத ஊரில் அதுதான் தேவலை. ரொம்ப விலாவரியாக இல்லாமல் சுவாரசியமாக இருந்த இரண்டை மட்டும் சொல்கிறேன்.

முதலாவது காலபைரவர் கோவில். நீண்ட சந்துக்குள் சின்னதாய் ஒரு கோவில். உருட்டின கண்களும் முறுக்கின மீசையுமாய் பைரவர். ஆனாலும் உதட்டில் சிரிப்பிருந்ததாக எனக்கு ஒரு தோணல். சன்னிதியைச் சுற்றி நாலடிக்கு ஒரு நடை. அதில் நல்ல கருப்பில் ஒரு பயமூட்டும் மாடு. உருவத்திற்கு கொஞ்சமும்
பொருத்தமில்லாமல் சாதுவாய் சுற்றிச் சுற்றி வருகிறது. ஜனங்களும் தங்கள் பாட்டுக்கு. நடையை ஒட்டி உயரமாய் ஒரு திண்ணை. திண்ணையில் வரிசையாய் கையில் மயிலிறகும், வாயில் மந்திரமுமாய்... திருஷ்டி கழிக்கிறார்கள் போலிருந்தது. இளைஞர்கள், ஒரு இளம் பெண், ஒரு குடுகுடுக்கிழவர் என்ற அந்த வரிசையின் சுவாரசியம், ஒரு ஏழெட்டு வயது சிறுவன். குழந்தைத்தனமே இன்னும் மாறவில்லை... அது திருஷ்டி கழிக்கப் போகிறதாம்! அந்த வாண்டு கன்னத்தைக் கிள்ள வேண்டும் போலிருந்தது. அவரோ 'நான் ஆன் ட்யூட்டி' ன்னு ரொம்ப சீரியஸாய் இருந்ததில் அந்த முயற்சியைக் கைவிட வேண்டியதாயிற்று.

அடுத்தது சாரநாத். காசியிலிருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தூரமிருக்கும். வண்டியை விட்டு இறங்கினதுமே வந்து சேர்ந்த கைடைப் பார்த்ததுமே எனக்கு சந்தோஷம். சொந்த சரக்கை அள்ளித் தெளிப்பார்கள் என்றாலும் கைடு இல்லாமல் பார்க்கும் எந்த இடமும் திருப்தியே தருவதில்லை. சாரநாத், காசிக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாமல் படு சுத்தமாக இருக்கிறது. கோவிலுக்கு அருகில் சாரநாத் ஸ்தூபி பிரம்மாண்டமாய் நிற்கிறது. இரண்டாயிரத்து இருநூற்றி எழுபது ஆண்டு பழமையானது. புத்தர் தனது முதல் உரையை இங்கே நிகழ்த்தியதற்கு அடையாளமாக நிர்மாணிக்கப் பட்டிருக்கிறது.

கோவிலுக்கு மற்றொரு பக்கம் அழகான வேலைப்பாடுகளோடு ஒரு மணி. மணியில் ஏதோ ஸ்கிரிப்டில் எழுதியிருக்கிறது. அதிகம் எடையில்லை... வெறும் மூவாயிரம் கிலோதான். ஜெர்மனியிலிருந்து செய்து வரப்பட்டதாம். ஒரிஜினல் போதி மரத்துக் கிளை இலங்கையில் நடப்பட்டு அங்கிருந்து கொண்டு வந்த கிளையில் முளைத்த போதி மரமொன்று இங்கே பரவி நிற்கிறது. அதற்கடியில் புத்தரையும், அவருடைய ஐந்து சீடர்களையும் இரண்டாள் உயர சிலைகளாக செய்து வைத்திருக்கிறார்கள். சிலைகளில் வேலைப்பாடு எதுவும் இல்லாமல் சிமெண்ட் சிலைகள் போலிருந்தது உறுத்தியது. கோவிலின் உள்ளே தங்க முலாம் பூசின புத்தர். சுவரெல்லாம் அழகான ஓவியங்கள். புகைப்படம் எடுக்கக் கூடாது என்ற கெடிபிடியெல்லாம் கிடையாது. உண்டியலில் ஐந்து ரூபாய் போட்டு ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம்.

மற்றபடி, பரந்து கிடக்கும் பனாரஸ் ஹிந்து யுனிவர்சிடி, அதற்குள்ளே ஒரு பிர்லா மந்திர், மந்திர் வாசலில் திருத்தமாக அமைந்த மதன் மோஹன் மாளவியா சிலை, அழகான, விலை மலிவான டெரகோட்டா சிற்பங்கள், மரங்கள் அணைகட்டிய அகலமான ரோடுகள்... வெளியே வந்து ஊருக்குள் நுழைந்தால் அதே சேறும் சகதியும். பராமரிப்பில்லாத குறுகலான சாலைகள். ஒழுங்கில்லாத போக்குவரத்து.

இது தவிரவும் இன்னும் சில கோவில்கள், நேரமாகிப் போனதால் கதவடைந்து போன அருங்காட்சியகம்... ஒரு நாளுக்கு இத்தனை எனக்கு ஓவர் டோஸ். அதனால் பெரிதாக கவனத்தைக் கவரவில்லை.

அன்றைக்கு ராத்திரியே விஸ்வநாதரை(நம்ம விஷ¤) தரிசிக்க சத்திர மேனேஜர் விரட்டினதில் ஒன்பதரை மணிக்கு கோவிலுக்குப் போய்ச் சேர்ந்தோம். அயோத்தியா குண்டு வெடிப்பு தந்த சூட்டில் கோவிலுக்குள் பக்தர்களை விட காக்கிச் சட்டைகள் அதிகம். செல்பேசி உள்ளே அனுமதிக்க மறுத்ததால் நான் மட்டும் வெளியே. கணவர் சமத்தாய் அறையிலேயே வைத்து வந்திருக்கிறார்.

காத்திருந்த நேரத்தில் கவனித்தது... சுமாரான ரேங்கில் இருக்கும் ஒரு அதிகாரி சில பெண் காக்கிச் சட்டைகளை சொந்த பிரதாபங்களைச் சொல்லி கடுப்படித்துக் கொண்டிருந்தார். அவர்களும் ஓரக்கண்ணில் கிண்டலோடு, ரசிப்பது போல பாவ்லா காட்டிக் கொண்டிருந்தார்கள். கொஞ்சம் தள்ளி தனியாக உட்கார்ந்திருந்த ஒரு காக்கிச் சட்டை 'இதுக்காக இப்படி தனியா கொட்டுக் கொட்டுன்னு உட்காந்திருக்கியா? என்கிட்ட கொடுத்துட்டு போயேன்'னு ஜாடை மாடையாக சொல்லிப் பார்த்தார். எனக்கொன்னும் பிரச்னையில்லை என்ற என் பதிலை
கொஞ்சமும் ரசிக்கவில்லை. எல்லோரும் கோவிலைப் பூட்டும் பதினொரு மணிக்காக சலிப்போடு காத்திருந்தார்கள்.

கணவர் வந்ததும் செல்பேசியை அவரிடம் ஒப்படைத்து விட்டு ஒரு வழியாக உள்ளே போக முடிந்தது. இருட்டில் கோவிலின் பிரம்மாண்டம் பயம் தந்தது. எந்த பராமரிப்பும் எங்கேயும் நடப்பது போல தெரியவில்லை. கோவிலுக்கு உள்ளேயும் நிறைய காக்கிச் சட்டைகள். சிலர் படுத்துக் கொண்டு. சிலர் உலாவிக் கொண்டு. யூனிபார்மில் பத்மாசனம் போட்டு மந்திரம் சொல்லிக் கொண்டிருந்த பெண் போலீஸ் திரும்பிப் பார்க்க வைத்தார்.

பத்து மணி வாக்கிலும் கூட்டத்திற்குக் குறைவில்லை. விஸ்வநாதருக்கு அபிஷேகம் முடிந்து அலங்காரம் நடந்து கொண்டிருந்தது. கூடை கூடையாய் பூக்கள் வந்து குவிந்து கொண்டிருக்க, நேர்த்தியான அலங்காரம். நான்கு பக்கமும் வாசல். நான்கிலும் சரியான நெரிசல். வியர்வையும், தலை எண்ணைச் சிக்கும் போட்டி போட்டுத் தாக்கியதில் சீக்கிரமே விலக வேண்டியதாயிற்று. ஒருபக்கச் சுவரில் வெள்ளைப் பளிங்கில் மீசை முறுக்கி இருந்த சிற்பமும், சுற்றிலும் இருந்த மற்றவைகளையும் சரியாக கவனிக்க முடியாமல் போன குறையிருக்கிறது.

வெளியே ஒரு பார்வதி சன்னதி. பக்கத்தில் போய் நின்றதுமே கர்ம சிரத்தையாய் மந்திரம் ஓதி பத்து ரூபாய் வசூல். என்ன ஓதினார், யாருக்கு... எதுவும் தெரியாது. அன்னபூரணி எங்கே என்றதற்கு இதோ என்று கைகாட்டிய இடத்தில் பார்த்த அன்னபூரணி சுவற்றோடு சேர்ந்த விக்ரஹம். கையில் இருக்கும் அன்ன கிண்ணம்
எங்கே என்ற கேள்விக்கு 'அதெல்லாம் புடவைக்கு உள்ளே இருக்கிறது' என்ற கறாரான பதில். ஐந்து ரூபாய் தட்டில் போட்டதும் புடவையை விலகி கிண்ணம் காட்டினார். கரண்டியைக் காட்ட இன்னொரு ஐந்து ரூபாய். நமட்டுச் சிரிப்போடு நானும், இதெல்லாம் சகஜம்ப்பா சிரிப்போடு அவரும் விடை பெற்றோம்!

மழை, கூட்டம், காக்கிச் சட்டை கெடுபிடி, அர்ச்சகர் இடையூறு... இதெல்லாம் இல்லாத இன்னொரு நாளில்(அப்படி ஒரு நாள் இருக்கிறதா என்ன?) சந்திப்போம் என்று விஸ்வநாதரிடம் சொல்லி விட்டு வந்திருக்கிறேன். கங்கைக் கரையில் எதிர்பார்த்திருந்த சாதுக்களையும் சந்யாசிகளையும் நாங்கள் போன மொட்டை
வெயிலில் பார்க்க முடியவில்லை. மாலை ஏழு மணிக்கு நடக்கும் கங்கை பூஜை போட்டில் இருந்து பார்க்க ரொம்ப அழகாயிருக்கும் என்று போட்காரர் வேறு தூபம் போட்டிருந்தார். வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் காசியிலிருந்து போட்டிலேயே கொல்கத்தா வரை செல்கிறார்களாம். ஒரு வாரம் பிடிக்கும் அந்தப் பயணங்களை
நாம் தான் அனுபவிப்பதில்லை.

மந்திரமும் முழுக்குமாய் சாதுக்கள் நிறைந்த 'காட்'களின் சித்திரம் ஒன்று எண்ணத்தில் ஓடுகிறது. ஹரித்துவார் கங்கா பூஜாவை அனுபவித்து எழுதியிருந்த ஒரு நாவல் தந்த சித்திரமும் கூட. தனியாக ஒருதரம் காசிக்கு போகப் போறேன் என்று இப்போதே கணவரை அரிக்க ஆரம்பித்திருக்கிறேன். தாங்க முடியாமல் தலையாட்டி விடுவார் என்று நினைக்கிறேன். பார்க்கலாம்.

Tuesday, August 16, 2005

வாங்க, விஷ¤ கூப்பிடறார்!

ஐந்து வருடங்களுக்கு முன்னால் ஒரிஸ்ஸாவில் இருந்த போது 'அங்கயிருந்து பக்கமாமே? போயிட்டு வரலாமா?' என்று ஒரு கேள்வி வந்தது. அப்போது 'எங்களுக்கு இப்போ வேண்டாமே' என்று சுலபமாக ஒதுக்க முடிந்தது. நாட்களின் வேகத்தை விட வீட்டுப் பெரியவர்களின் தளர்ச்சியின் வேகம் அதிகமாகப் போவது உணர்ந்ததில் இப்போது மறுக்க முடியவில்லை தான். ஐந்து வருடத்தில் நானும் தான் வளர்ந்திருக்கிறேனே! இடையில் படித்த பாலகுமாரனின் 'புருஷவதம்' கூட மறுக்காததற்கு ஒரு காரணம். இரவல் வாங்கி இரண்டு நாளில் கிடைத்த நேரத்தில் படித்த அந்த புத்தகம் சொன்னதே... அது காசி யாத்திரை. இன்றைக்கு ரயில் பெட்டியின் ஏஸி இதத்தில் செல்லும் இதெல்லாம் வெறும் இன்னொரு பயணம் மட்டுமே.

இப்போது புரிந்திருக்கும். யார் விஷ¤... எங்கே கூப்பிடறார் என்று. காசி யாத்திரைன்னு தலைப்பு போட்டு ஆரம்பித்திருந்தால், அம்மா தாயே... ஆளை விடு! ன்னு தலைப்போடவே ஓடிப் போயிருப்பீங்களே? இனி, தொடருவதும் இங்கேயே பை பை சொல்லிட்டு போவதும் உங்கள் விருப்பம்.

கொல்கத்தாவிற்கு வந்து சிரம பரிகாரம் செய்து கொண்ட வீட்டுப் பெரியவர்களோடு ஒரு சனிக்கிழமை இரவு தொடங்கிய பயணம். நேர் வண்டியில் இடம் கிடைக்காததால் முகல்சராய் - ல் இறங்கிப் போனோம். ரயில் நிலையத்தில் புதிதாக வந்து இறங்குபவர்களை சூழ்ந்து வதம் செய்யும் கும்பல் இங்கேயும் தன் கைவரிசையைக் காட்டியது. ஒரு வழியாக ஒரு சுமோவைப் பேசி முடித்த பின்னும் விடாது விரட்டிய கும்பலின் கடைசிக் குரல் 'வேலையில்லாத் திண்டாட்டம் தான் வேறென்ன?'.

மழை சகதி, அழுக்கு ஆடைகள், பக்கா கிராமத்தனம்... இதை ரசிக்கப் போறேனா, விலகி ஒதுங்கப் போறேனா என்று நானே கேட்டுக் கொண்டேன். முகல்சராயிலிருந்து பதினெட்டு கிலோமீட்டர் பயணத்தில் காசி எப்படி இருக்கப் போகிறது என்று ஒரு கணிப்பு வந்திருந்தது. வழியெல்லாம் தேங்கிக் கிடக்கும் குப்பைக் குவியல், மழை புண்ணியத்தில் மணம் பரப்பிக் கொண்டிருந்தது. கதவும் ஜன்னலும் பிடுங்கி எடுக்கப் பட்டிருந்த ஒரு அறை குப்பையால் நிரம்பி உச்சக்கட்ட நாற்றமெடுத்துக் கொண்டிருக்க, அதற்குள்ளே உட்கார்ந்து எதையோ தேடிக் கொண்டிருந்த இரண்டு உருவங்களை சுமோ இன்னும் கொஞ்சம் வேகமாகப் போயிருந்தால் நான் பார்க்காமலே கடந்திருக்கலாம்.

அரைமணி நேரத்தில் ஊருக்குள் நுழைந்து விட்டிருந்தோம். கோயம்பத்தூரிலிருந்து கொண்டு வந்திருந்த சிபாரிசு கடிதம் சொன்ன சத்திரத்தில் தான் நம்ம ஊர் சாப்பாடு கிடைக்கும் என்று ஆரம்பத்திலிருந்து வற்புறுத்தியதால் அதைத் தேட இன்னொரு அரைமணி நேரம் போனது. சத்திரத்திற்குள் நுழைந்ததுமே தமிழ்நாட்டுக்கு வந்து விட்ட உணர்வு. நானும் கணவரும் சூழ்நிலைக்குப் பழக முயற்சிக்க, வீட்டுப் பெரியவர்களுக்கு ஆஹா! என்ற ஆசுவாசம். குறைந்த வாடகை, குறைந்த பராமரிப்பு... மோசமில்லை.

வேண்டுமா வேண்டாமா என்று யோசிப்பதற்குள் சத்திர மேனேஜரே நம்முடைய ப்ரோக்ராம்களை முடிவு செய்து விடுகிறார். 'நாளைக்கு காலையில கிளம்பிடுவீங்களா? இப்ப போட்டில் போய் கங்கையில் குளித்துவிட்டு வந்து விடுங்கள், மத்யானம் சாப்பிட்டு விட்டு சிட்டி டூரில் இந்த லிஸ்டில் இருக்கும் இடங்களைப் பார்த்து விடுங்கள். திரும்பி வந்ததும் ஸ்வாமி தரிசனம். காலையில் நீங்கள் கிளம்பிடலாம்'. இப்படி ஒரு பக்கா ப்ளான், அதுவும் ஜெட் வேகத்தில் கவர் செய்வதாகச் சொல்லும் போது, அத்தனை தலைகளும் ஆடியது, என்னுடயதைத் தவிர. இங்கேயுமா இந்த சிட்டி டூர் என்ற அலுப்பு. வேறு வழியிருக்கவில்லை.

சுவற்றோரமா ஒரு அடி அகலத்தில் நீளமாக ஒரு பந்தி ஜமக்காளம். அதில் காலை மடக்கி உட்கார்ந்து, இலையில் இட்லியோடு கோவித்துக் கொண்டு ஓடும் சாம்பாரைக் காப்பாற்றிச் சாப்பிட கொஞ்சம் சிரமமாக இருந்தது. உடம்பைக் குறைன்னு உள்ளேயிருந்து ஒரு குரல். கீழே உட்கார்றது பிரச்னையில்லை... வீட்ல தட்டை கையிலே ஏந்தியே சாப்பிட்டுப் பழகிப் போனதில்...! என்று இழுத்ததையும், தெரியும் தெரியும் என்று குரல் தலையாட்டியதையும் நீங்கள் கவனிக்கவில்லைதானே?

டிபன் முடிச்சு வெளியே வந்ததும், குளியலெல்லாம் கங்கையில் பார்த்துக்கோங்கன்னு மேனேஜர் ஆலோசனை சொல்லி ஒரு போன் போட, போட் ஓட்டுபவர் பத்து நிமிடத்தில் சத்திரத்தில் ஆஜர். நெட்வொர்க் எல்லாம் ஜோர்தான். மாற்றுத் துணியோடு('எங்கே மாற்ற?... அதுக்கெல்லாம் அங்கே இடம் இருக்கு மேடம்...' கடைசி வரை அப்படி ஒரு இடம் கண்ணில் படவே இல்லை!) கிளம்பினோம். இதோ இங்கேதான் என்று நடந்து கொண்டேஏஏஏ இருந்தார். ராத்திரி மழையின் சேறு வழியெல்லாம். கணவர் முன்னால், நம்ம மக்கள் நடுவில், கடைசியில் நான் என்று ஊர்வலம் ஒரு வழியாக கங்கைக் கரையை அடைந்தது. கசமுசாவென்று நிற்கும் படகுகளையெல்லாம் ஏறிக் கடந்து முன்னால் நிற்கும் படகுக்கு போய்ச் சேரும் வரை கொஞ்சம் டென்ஷன். ஆறு பேரையும் பேலன்ஸ் செய்து உட்கார வைத்து விட்டு, படகை எடுக்கும் முன்னால் நாங்கள் நான்கு பேர் இருக்கிறோம், பயப்படாதீர்கள் என்று சொல்லி, ஓ! பயப்பட வேண்டுமோ என்று யோசிக்க வைத்தார்.

ஒரு மாதிரி நிதானப் படுத்திக் கொண்டு கங்கையைப் பார்த்த போது, செக்கச் செவேலென்று மழை புண்ணியத்தில் குழம்பாட்டம் ஓடிக் கொண்டிருந்தது. நல்ல அகலம்... தெரிந்தது. ஆழம் யூகிக்க முடிந்தது. சுழித்துக் கொண்டு ஓடுவது என்றால் என்ன என்று இப்போது தான் பார்க்கக் கிடைத்தது. கிளம்பும் போது தண்ணீர் ஓட்டத்திற்கு எதிர் பயணம். நான்கு பேர் எதற்கு என்று அப்போது புரிந்தது. படகு பாட்டுக்கு தன் இஷ்டத்திற்கு திரும்ப எத்தனிக்கிறது. ஒவ்வொரு முறையும் அதன் பாதைக்குத் திருப்ப அவர்கள் பாடு, பார்க்க கஷ்டம். கூடவே பயம்.

வழியெல்லாம் படித்துறைகள். ghat என்று சொல்கிறார்கள். ஒவ்வொன்றிற்கும் ஒரு பெயர். கரையை ஒட்டி வரிசையாக ஒவ்வொரு மாநில ராஜாக்கள் கட்டிய மெஹல்களின் மிச்சங்கள். அவர்கள் காலத்தில் அங்கே தங்கி கங்கா ஸ்நானம் செய்திருக்க வேண்டும். இப்போது பெரும்பாலும் பராமரிப்பில்லாமல் கிடக்கிறது. சிலது சாதுக்களால் உபயோகப் படுத்தப் படுகிறது. ஏதோ ஒரு ராஜாவின் மெஹலில், இரண்டாவது மாடியிலிருந்து கீழே வந்து குளித்து விட்டுப் போக ஆட்களால் இழுக்கப் பட்ட 'லிப்ட்' இருந்ததற்கான தடயம் மட்டும் மிஞ்சியிருக்கிறது.

ஒவ்வொரு காட்(ghat)டிலும் சிறப்பம்சம் சொல்லி, தண்ணீரை தலையில் தெளித்துக் கொள்ளச் சொல்கிறார். ஒரு மாதிரி இழுத்துக் கொண்டு போகும் யுபி ஹிந்தியில் பாதி புரிகிறது, பாதி நாமே யூகித்துக் கொள்ள வேண்டியது தான். எல்லா 'காட்'டிலும் குளியல் ஆனந்தமாக நடக்கிறது. லோக்கல் மன்மத ராஜாக்கள் தைத்த கோவணம் உடுத்தி, பெண்கள் கடந்து போகும் போது மேலே வந்து கட்டுடலைக் காட்டிப் போனார்கள். அந்தக் கோவணம், உடுத்தினால் இப்படித்தான் இருக்குமா என்று தெரிந்து கொண்டேன்!!!

கொஞ்ச தூரம் போனதும் ஒரு படகிற்குப் பக்கத்தில் ஒரு துணி மூட்டை மிதந்து கொண்டிருந்தது. அது என்ன என்று கேட்டதற்கு, 'யாராவது சாதுவின் பிணமாயிருக்கும். இங்கே சாதுக்கள் இறந்தால் புதைப்பதோ எரிப்பதோ இல்லை. ஒரு கல்லோடு கட்டி கங்கையில் போட்டு விடுவார்கள். கட்டின கயறு மீன் அரித்து கழண்டு போனால் இப்படித்தான் மிதக்கும்' என்றார். அதற்குப் பிறகு அந்தப் பக்கம் திரும்பவேயில்லை.

ஹரிச்சந்திர காட் - டில் வரிசையாக பிணங்கள் எரிந்து கொண்டிருந்தது. அதற்கு முந்தைய காட்- டில் குளிக்க இறங்கிக் கொள்ளச் சொன்னார். இந்தத் தண்ணீரிலா? இதுவா கங்கா ஸ்நானம்! என்ற கேள்வியெல்லாம் தண்ணீருக்குள் இறங்கும் வரைக்கும் தான். உள்ளே இறங்கினதும் ஆற்றுக்கே உள்ள குதூகலம் தொற்றிக் கொள்கிறது. சில்லென்று நூறு கைகளால் அணைத்துக் கொள்ளும் தண்ணீரை விட்டு விலகவே மனசில்லை, போட்காரர் அடுத்த சவாரி பார்க்கணும் என்று விரட்ட ஆரம்பிக்கும் வரை. தர்ப்பனம் என்ற பெயரில் புரியாமல் திரும்பத் திரும்பச் சொன்ன நான்கு மந்திரங்களோடு கங்கா ஸ்நானம் முடிந்தது.

ஆனால் பயணம் தொடர்கிறது. விஷ¤வைப் பார்க்க வேண்டாமா?

பி.கு: ஆமா இப்படியா கவுப்பாங்க?! போன பதிவு கேள்விக்கு ஒரே ஒரு முயற்சி! தேவையா உனக்குன்னு என்னையே கேட்டுட்டு பதில் சொல்லறேன். அதைச் சொன்னது பாலகுமாரனின் 'மெர்க்குரிப் பூக்கள்' சியாமளி.

எத்தனை முறை காதல் கொண்டேன்?

கவிதை வரிகளால்
காதல் விதைத்தவனிடம்

இறகாய் குரலால்
தீண்டிச் சென்றவனிடம்

தனித்த வேளையில்
துணையாய் நின்றவனிடம்

தவித்த பொழுதில்
தூணாய் சுமந்தவனிடம்

சிறகை விரித்துப்
பறக்கச் செய்தவனிடம்

சிந்தனைச் சிதறலில்
சிலிர்க்க வைத்தவனிடம்

அழுத கணங்களில்
அமைதி காத்தவனிடம்

அத்தனையும் மெல்ல
மறந்திட செய்தவனிடம்....

துளிகளாய் நனைத்ததெல்லாம்
தேடலைத்தான் தூண்டியது!

மொத்தமாய் நனைய வேண்டும்
அருவியாய் ஒருவன் வேண்டும்.

இந்தக் கவிதை 'புத்தகப் புழு'வில் பாரா வைத்த காதல் கவிதைப் போட்டியில் எழுதியது. செல்வராகவன் 'காதல் கொண்டேன்' படத் தலைப்பை இந்த கவிதையில் இன்ஸ்பயர் ஆகித்தான் வைத்திருப்பாரோ என்று எனக்கு ஒரு சந்தேகம்! (நெனைப்புத்தான்).

ஆனா இந்தக் கவிதைக்கு இன்ஸ்பிரேஷன் யார் தெரியுமா?

'... ஓட்டைச் செம்புல குளிக்கிற மாதிரி இவரோட குடித்தனம் பண்றேன். தடேர்னு விழற அருவி மாதிரி நீ கிடைச்சப்போ அருவியை விட்டுட்டு வெளியே வர முடியலை....'

யார் சொன்னது? கண்டு புடிங்க பாக்கலாம். க்ளு தேவையிருக்குமா என்ன?

Monday, August 15, 2005

நீ என்ன கலர்?

அவன்... வயது பத்தொன்பது. அந்த வயதிற்கே உரிய பெண்கள், காதல், சினிமா, ம்யூஸிக்... இவற்றிலிருந்து விலகி இருப்பவன். ப்ராணிக் ஹீலிங் கற்றுக் கொள்கிறேன். மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். ஆர்ட் ஆப் லிவிங் சேர்ந்திருக்கேன். நான் டான்ஸ் ஆடினேன் என்றால் நம்புவீர்களா? இன்றைக்கு ஆடினேன். சந்தோஷமாக இருக்கிறேன். நான் எல்லோரையும் போல குடும்பம், மனைவி என்று வாழப் படைக்கப் பட்டவன் இல்லை என்பவன்.

எனக்கு பிராண்டட் சட்டைகள் தான் பிடித்திருக்கிறது. எம்டிவி, விடிவி ஸோ குட், என்ன சொல்றீங்க? என்று கேட்பவன். இந்திய கிரிக்கெட் டீம் பிடிக்காது. இந்தியாவில் நிறைய மாற்றம் வர வேண்டும் என்பவன். ஆனால் அதில் நம்பிக்கை அதிகம் இல்லாதவன். பகத் சிங் பட கடைசிக் காட்சியில் கண்ணீரை அடக்க முடியாமல் தவித்தவன். காந்தி அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தால் பகத் சிங்கை தூக்கில் போட்டிருக்க மாட்டார்களா? என்று வேதனைப் பட்டவன். ஸ்வதேஷ் ஒரு நல்ல படம். பார்த்ததில் எனக்குள் பாதிப்பு இருக்கிறது என்பவன். வயது பதினாறு.

வயது இருபத்தி ஐந்து. பிஸியோ தெரபிஸ்ட். அதுவும் இன்னும் ஆறு மாதங்களுக்குத்தான். அதற்குப் பிறகு முழுநேர மக்கள் சேவை என்று நண்பர்கள் தினத்தன்று தொலைபேசியில் அறிமுகமானவன் சொல்லிப் போகிறான்.

பொய் சொல்லப் போவதில்லை, ஏமாற்றப் போவதில்லை. நான் சொல்வதை கவனமாக யோசித்துப் பார். வேண்டாம் என்றால் என்னை கன்வின்ஸ் செய். கேட்டுக் கொள்கிறேன் என்கிறாள். கலாச்சார கோடுகள்... தாண்டுவதில் தப்பில்லை என்கிறாள். எல்லாம் மாறும், மாறத்தான் போகிறது என்கிறாள்.

என் வாழ்க்கை. நான் வாழ்கிறேன். எனக்கு என் தொப்புளில் வளையம் போடப் பிடித்திருக்கிறது. அதற்கு யாரிடம் அனுமதி கேட்க வேண்டும் என்கிறாள். கல்லூரி விடுதி வாழ்க்கை என் வாழ்க்கை. நான் விரும்பிய வண்ணம் வாழ்கிறேன். ஊருக்குப் போகும் போது அவர்கள் விரும்பும் மகளாக இருக்கிறேன். ஆமாம் எனக்கு இரண்டு முகம் தான். என்ன தப்பு? என்று கேட்கிறாள்.

ஒரிஸ்ஸாவிலிருந்து பெங்களூருக்குப் படிக்க வந்தவன். கால் சென்டரில் பகுதி நேர வேலை. என்னுடைய செலவை நான் பார்த்துக் கொள்கிறேன். வயது பதினெட்டாகிவிட்டது, இன்னுமா அப்பாவை எதிர்பார்த்திருப்பது என்கிறான்.

படிய வாரிய தலைமுடி. கொஞ்சமாய் பூ. பாந்தமாக உடுத்திய சல்வாரோடு தான் வீட்டிலிருந்து கிளம்புகிறாள். half sex தப்பில்லை என்கிறாள். அதென்ன half sex என்பதை உங்கள் யூகத்திற்கு விட்டு விடுகிறேன்.

வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டை. பத்து பேர். ஒரு கார், நான்கு பைக்கில் அணிவகுத்துப் போகிறார்கள், நண்பர்கள் தினத்தன்று 'காப்பி டே'க்கு.

கல்லூரிக்குள் நுழைகிறார்கள். ஏழெட்டு பேர்களாக. நடுவிலிருப்பவன் தாதா போல நினைத்துக் கொள்கிறான். அங்கே இருக்கும் ஒரு பெண்ணை முத்தமிட்டு களேபரத்தில் நழுவி விடுகிறான். கொல்கத்தா செய்தித்தாள் மூல அறிமுகம் ஆனவன்.

நான்கு கல்லூரி மாணவர்கள். ஷாப்பிங் மாலில் கண்ணில் பட்ட பெங்காலி நடிகையை கேலி செய்து, காரில் துரத்தி, வழிமறித்து மிரட்டி விட்டுப் போகிறார்கள். எல்லோரும் பனிரெண்டாவது வகுப்பு மாணவர்கள்.

என் பிள்ளைகள் மற்றும் செய்தித்தாள் மூலம் அறிமுகமாகும் அடுத்த தலைமுறை சாம்பிள்கள். சிவப்பு, பச்சை, மஞ்சள், நீலம், கறுப்பு, வெள்ளை என்ற ஆறே வண்ண கலர் பென்சில்கள். நான் படிக்க ஆரம்பித்த போது பனிரெண்டு கலர் பாக்ஸ். இப்போது விரிந்து கிடக்கும் கலர் பேலட்... பார்க்க ஆச்சர்யம், கொஞ்சம் பெருமை, அதிர்ச்சி, பயம், சந்தோஷம்... எல்லாமும் தான்.

ஆதவனுக்கு...

'தழுவல்களும், முத்தமிடல்களும் இரு மனிதர்களுக்கிடையே ஏற்படும் மன உறவின், உணர்ச்சி சங்கமத்தின், புரிந்து கொள்ளலின், ஒரு குறிப்பிட்ட பரிணாம கட்டத்தில் யதேச்சையாக நிகழ்கின்றன. அந்த கணத்தில் அவர்கள் ஒருவருக்கொருவர் உண்மையாக இருந்தால், பாசாங்கு செய்யாமலிருந்தால், அது ஒரு தூய நிகழ்ச்சி. இல்லாவிட்டால், அது வக்கிரமானது, ஆபாசமானது; சம்பந்தப்பட்டவர்கள் மணமானவர்களானாலும் சரி, மணமாகாதவகளானலும் சரி....'

நான் வாசித்த ஆதவனின் மூன்றாவது புத்தகம் 'காகித மலர்கள்'. ஆதவன் என்ற பெயரையே ஆர்கேகேயில் ப்ரகாஷ் மூலமாகத்தான் கேட்டது. கேட்ட பிறகு ஊருக்குப் போன போதெல்லாம் தேடியும், எனக்கு முந்தின வாசிப்பாளர்கள் வட்டத்தில் கேட்டும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இரண்டு வருடங்களுக்கு பிறகு கையில் கிடைத்த முதல் ஆதவன் நாவல் 'என் பெயர் ராமசேஷன்'. கொஞ்ச நாட்களாகவே வாசிப்பது எதுவும் மனதில் பதியாமல் போவதற்கு, வாசிப்பதில் முன்பிருந்த கவனம் இல்லாததுதான் என்று எனக்கே தெரிந்திருந்ததில் புத்தங்கங்களை குறை சொல்வதில்லை. ராமசேஷனையும், 'இரவுக்கு முன்பு வருவது மாலை' யையும் அப்படித்தான் வாசித்து விட்டுப் போயிருந்தேன்.

அப்படியே காகித மலர்களையும் வாசிக்க ஆரம்பிக்க, தோள்களைப் பிடித்து உலுக்கியது இந்த வரிகள். முடிப்பதற்குள் நிறைய தடவை உலுக்கியது. பத்மினி ப்யூட்டிபுல் என்று சொன்ன ஒரு இடத்தில் அவளோடு சேர்ந்து நானும் தான் சொன்னேன். அதுவும் இந்தப் பக்கத்தில் ஹே! என்று சொல்ல வைத்து எதிர்பக்கத்தில் முற்றிலும் மாறாக வேறொரு வெளிப்பட்டைக் கொண்டு வந்தது. எந்தப் பக்கங்கள், அதில் எனக்கு என்ன தோன்றியது என்று சொல்லி என் புரிதல்களை ஏன் திணிக்க வேண்டும்? வாசித்துப் பாருங்கள்.

முழு புத்தகமும் ஒரே மூச்சில் படித்திருக்க வேண்டும். மூன்று நாட்களாக படித்ததில்... 77 ல் இப்படி எழுதினாரா? இப்ப அவரைப் பார்க்கணுமே? முடியாது. சரி, அதற்காக சொல்ல நினைத்ததை சொல்லாமல் போய்விட முடியுமா? சொல்லிடறேன் ஆதவன். நாவல் சொன்ன சில விஷயங்களை நானும் அப்படியே யோசிக்கிறேன். இல்லை இல்லையென்று மூடி மூடி மறைக்கும் விஷயங்களை ரொம்ப சாதாரணமாகச் சொல்லிப் போனது பிடித்திருந்தது. தினமும் பார்க்கும் மனிதர்களின் இயல்பான பேச்சில் அவர்களை அறியாமல் வெளிப்படுத்தும் உள்மன நிறங்களை நான் புரிந்து கொள்கிறேன். அப்படி நான் புரிந்து கொண்டதெல்லாம் விபரீத கற்பனை என்று கேலி செய்யப் பட்டதே, அது அப்படியில்லை என்று எனக்கு ஆசுவாசம் சொன்னது உங்கள் எழுத்து.

ஆதவன்... உங்கள் விஸ்வத்தைப் பிடித்திருக்கிறது. செல்லப்பாவைத் தெரியும். கணேசனை புரிந்து கொள்ள முடிகிறது. ம்ம்ம்... கடைசியில் மிஸஸ். பசுபதியை உங்களாலும் கொல்லாமல் இருக்க முடியவில்லைதான் இல்லையா? அது என்ன தண்டனையா? அதற்கு மெனக்கெட்டு விளக்கம் சொன்ன போதும். ஆனாலும் இந்த வாசிப்பு அனுபவத்திற்கு நன்றி ஆதவன்.

Sunday, August 14, 2005

நட்சத்திரம் வாழ்த்து சொல்கிறது.

சுதந்திர தின வாழ்த்துகள்.

சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு என் வணக்கங்கள். அறியப்படாமல் போன ஜீவன்களுக்கு இன்னும் கொஞ்சம் கூட குனிந்து ஸ்பெஷல் வணக்கங்கள். சுதந்திரம், சுதந்திர தினம் என்றெல்லாம் தொடங்கப் போவதில்லை. எல்லோருக்குள்ளும் அந்த உணர்வு இருக்கிறது, வெளிப்படுத்திக் கொள்வதில்லை, அவ்வளவே.

இந்த வார நட்சத்திரமாக்கிய தமிழ்மணத்திற்கு நன்றி. நன்றி கடைசியில் தானே? இப்பவே என்ன என்று யோசிக்க வேண்டாம். இந்த ஒரு வாரத்தில் என்னென்ன எதிர்பார்க்கலாம், எதெல்லாம் கிடைக்காது என்று சொல்ல வேண்டாமா? புத்தகம், சந்திப்பு, சங்கீதம், சினிமா, பயணம் (அதானே... அதில்லாமல் எப்படி?!), கொல்கத்தா ரவுண்ட் இதில் எதெல்லாம் தேறுதோ அதெல்லாம்.

இந்த வாரத்தில் தொழில் நுட்ப முயற்சிகள் எதுவும் இருக்காது. வலைப்பதிவில் எழுதுவதைத் தவிர எனக்குத் தெரிந்த ரெண்டே விஷயம்...படம் போடுவது, லிங்க் கொடுப்பது! அதுவே சமீபத்தில் கற்றுக் கொண்டது தான். ஸோ, உள்ள ஒரே ஆயுதமான எழுத்தைக் கையிலெடுக்க தீர்மாணித்திருக்கிறேன். அப்டின்னா எழுதியே கொல்லப் போறே!ன்னு மனசுக்குள்ள நினைச்சீங்கதானே? நக்கல், நகைச்சுவை இதெல்லாம் இல்லாமல் கொஞ்சம் சீரியஸான வாரமாக இருக்கப் போகிறது என்று முன்னமே சொல்லி வைத்து விடுகிறேன். நமக்கு எழுத்தில் அதெல்லாம் வராது. அது இதற்குள் புரிந்திருக்கும்! ஆனால் கிச்சுக்கிச்சு மூட்டும் வரிகளுக்கு பரம ரசிகை. இணையத்தில் சிரிக்க வைத்துக் கொண்டிருந்தவர்களெல்லாம் ஏனோ சீரியஸாகி விட்டார்கள். எனக்கு ரொம்ப சோகம்.

அப்புறம், அங்கங்கே கொஞ்சம் கவிதைப் பூக்களும் பூக்கும். பின்னே.. என் எழுத்துலகப் பயணம்(!) தொடங்கியது கவிதையில் தானே! ஆனாலும் நினைத்த எதையும் எழுதி ஒரு பதிவு என்று போடுவது போல் ஒரு கவிதை எழுதிப் போட முடிவதில்லை. இதைக் கவிதையில் சொல்ல வேண்டும் என்று எதாவது ரொம்ப இம்சை செய்ய வேண்டும். அதை எழுத வார்த்தைகளுக்கு அலைபாய வைக்க வேண்டும். முடிக்கும் வரை அதே யோசனையாயிருக்கச் செய்ய வேண்டும்... அப்படியும் திருப்தியில்லாமல் கைவிடப் பட்டவைகளும் உண்டு. கைவிடப் பட்டவைகளில் எதையாவது சரி செய்ய முடிந்தால் போடுகிறேன். இல்லாவிட்டால் எனக்குப் பிடித்த எதாவது.

சுகமோ, சோகமோ... இந்த வாரத்தை என்னோடு கழிக்க நண்பர்களை வரவேற்கிறேன். ரொம்ப போரடித்தேனென்றால் மதியை தனிமடலில் திட்டலாம். அடுத்த ஏழு நாட்களுக்கு தமிழ்மணத்தின் நட்சத்திரப் பகுதியை தவறியும் எட்டிப் பார்க்காதிருக்கலாம்.

சரி...போறதுக்கு முன்னால் ஒரு ஜோக்.

கஸ்டமர்: அண்டர்வேர் காமிங்க.
கடைக்காரர்: ஹிஹி... இன்னைக்கு போட்டுட்டு வரலைங்க.

ஜோக் உபயம்: குஷ்வந்த் சிங்.

Tuesday, August 02, 2005

மாத்ருபூமி - ஒரு தொடர் பதிவு.

ஒரு படத்தைப் பற்றி எழுதும் போது கதை சொல்லி விடாமல் இருந்தால் பார்க்கிறவர்கள் எந்த முன் அனுமானங்களும் இல்லாமல் பார்க்கலாம்... பார்க்கவும் வேண்டும். அந்த எண்ணத்தில் எழுதின முந்தைய பதிவு அதன் உண்மையான பாதிப்பை ஏற்படுத்தவில்லையோ என்று தோண்றியதால் இந்தத் தொடர் பதிவு.

படத்தில் பாதிப்பை ஏற்படுத்திய காட்சிகளில் ஒன்றிரண்டைச் சொல்லிவிட்டுப் போகலாம் என்று. பாதிப்பில் அதிர வைத்ததும், நமட்டுச் சிரிப்பு சிரிக்க ஆரம்பித்து கடவுளே என்று நோக வைத்ததும் அடங்கும்.


கிராமத்தில் ஒரு கல்யாணம். கஷ்டப்பட்டு தேடிப் பிடித்து கொண்டு வந்த பதினாலு வயதுப் பெண்ணுக்கும், முப்பது சில்லரை வயது ஆளுக்கும். கல்யாணம் செய்து வைக்கும் புரோகிதர் கம் திருமண புரோக்கருக்கு எங்கிருந்தடா எனக்குத் தெரியாமல் இவனுக்கு பெண் கிடைத்தது என்று சந்தேகம். கடைசி நேரத்தில் ஒருவர் புரோகிதர் காதில் ஏதோ சொல்லிப் போகிறார். மணமக்கள் அக்னியை வலம் வருவதற்கு முன்னால் பெண்ணின் அப்பா இரண்டு இலட்சம் பணத்தையும் இரண்டு மாடுகளையும் கண்டிப்பாகக் கேட்டு வாங்கிக் கொண்டு நைசாக நழுவி விடுகிறார். கடைசி சுற்று வரும் வரை கறுவிக் கொண்டு இருக்கும் புரோகிதர் வெடுக்கென்று மணமகளின் பாவாடையை இழுத்து அவிழ்க்க... அம்மணமாய் நிற்கும் சின்னப் பையன், 'பிதாஜி...' என்று அழத் தொடங்க... மாப்பிள்ளையும், அவருடைய அப்பாவும் அதிர்ந்து நிற்க... கல்யாண மண்டபமே வழித்துக் கொண்டு சிரிக்கிறது.கதாநாயகி கால்கியை கல்யாணம் செய்து கொண்டு வந்த ஐந்து சகோதரர்களுக்கும் மூத்தவன் நாள் பகிர்ந்து கொடுக்கிறான். ஆளுக்கு ஒரு நாள் ஒதுக்கினதும்,

(அவர்கள் டயலாக் தமிழில்)

'மிச்சம் இரண்டு நாள் இருக்கே? இவ்வளவு பணம் கொடுத்து கட்டிக்கிட்டு வந்து அவளை சும்மாவா படுக்க விடுவது?

'நீங்கதானே பெரிய அண்ணன், அதனால உங்களுக்கு எக்ஸ்ட்ரா ரெண்டு நாளு'

'ஏன்டா, என்னங்கடா நினைச்சீங்க? உங்களுக்காக இவ்வளவு பணம் கொடுத்தது யாரு? உங்கப்பாவை மறந்துட்டீங்களே? உங்கம்மா செத்து போய் இவ்வளவு வருஷமா நான் கஷ்டப் படறது உங்க கண்ணுக்கு தெரியலையா?'

பேசி முடித்து முதலிரவு அறைக்குள் நுழையும் மாமனார்.


மாட்டுக் கொட்டகையில் ஒரு கால் சங்கிலியில் கட்டப்பட்டிருக்க, ஈ மொய்க்க கிடக்கும் கால்கி. வரிசையாக மாறி மாறி வந்து போகும் சகோதர்கள். அவர்களில் ஒருவன் வந்து நிற்கிறான். தொண்டையைக் கனைத்துக் கொண்டு வந்திருப்பதை அறிவிக்கிறான். அரைமயக்கத்தில் கிடக்கும் கால்கி, உடையை விலக்கி தயாராகிறாள்.

இவ்வளவு போதும்.

Monday, August 01, 2005

மா(!)த்ருபூமி

அது ஒரு நியூஸ் சேனல் செய்தித் தொகுப்பு. ஆஜ் தக் அல்லது என்டிடிவி... சரியாக நினைவில்லை. ஒரு மாலைநேர டீயோடு சேனல் மேய்ச்சலில் இருந்த போது கண்ணில் பட்டது. குத்த வைத்து அடுப்பில் ஏதோ சமைத்துக் கொண்டிருக்கும் ஒரு இளம் வயது பஞ்சாபி பெண். முகம் மறைத்து முக்காடு போட்டிருந்தது. பக்கத்தில் ஒன்றிரண்டு குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்ததாக நினைவு. அந்தப் பெண்ணை விட்டு அடுத்து கேமிரா நகர்ந்தது இரண்டு ஆண்களை நோக்கி. இரண்டு பேரும் கண்கள் மட்டும் தெரியுமாறு முகத்தை மூடியிருந்தார்கள். அவர்களில் ஒருவர் சொன்னதிலிருந்து...

' எங்களுக்கு நாலு ஏக்கர் நிலம் தான் இருக்கிறது. நான் தான் பெரியவன். தம்பிக்கு கல்யாணம் செய்து இன்னொரு பெண் வந்து எங்கள் நிலத்தைப் பங்கு போடுவதில் எங்களுக்கு விருப்பம் இல்லை. அதனால் என் மனைவியே என் தம்பிக்கும் மனைவி '

'ஹே! என்ன சொல்றீங்க?' என்று கவனிக்க ஆரம்பித்தேன். இதே போல இன்னும் சில குடும்பங்களைக் காட்டி, பஞ்சாபில் நிலம் துண்டு படுவதைத் தவிர்க்க இப்படி ஒரு வழக்கமாகிக் கொண்டிருக்கிறது என்று சொல்லிக் கொண்டு போனார் நிருபர். இது ஒன்றும் புது கதையல்ல என்று இருபத்தி ஏழு வருடங்களாக மூன்று சகோதரர்களுக்கு மனைவியாயிருக்கும் ஒரு பெண்மணி ஆச்சர்யம் தந்தார். இந்த ஏற்பாட்டிற்கு ஒத்துக் கொள்ளா¾தால் எழுபத்து சொச்சம் வயதிலும் திருமணமாகாத இரண்டு ஆண்களோடு ஒரு குடும்பமும் செய்தியில் தலை காட்டியது.

தேவைகள்... அதற்கேற்றார் போல மாறும் கோட்பாடுகள். ஆச்சர்யமாகத்தான் இருந்தது. நிறைய யோசிக்க வைத்தது. கொஞ்சம் சிரிப்பும் வந்தது. சிரிப்பு... இன்றைக்கு இறுக்கி இறுக்கி பிடித்துக் கொண்டிருப்பதெல்லாம் ஒரு நாள் பிடியை உதறிவிட்டுப் போகத்தான் போகிறது என்பதை நினைத்தாயிருக்கும். அன்றைக்கே அதை எழுத முடியாமல் போய் விட்டது.

இன்று காலை கொஞ்ச நாளாக நேரம் வாய்க்காமல் தள்ளிப் போய்க் கொண்டிருந்த 'மாத்ருபூமி' படம் பார்க்கப் போகும் போது, அது இதைத்தான் சொல்லப் போகிறது என்று நிச்சயம் நினைக்கவில்லை. போனிகபூரை இப்படி ஒரு படம் எடுக்க சம்மதிக்க வைத்த டைரக்டரை பாராட்ட வேண்டும்.

Image hosted by Photobucket.com

தழும்ப தழும்ப பால் நிறைத்த ஒரு அண்டாவில் அப்பாவால் மூழ்கடித்துக் கொல்லப்படும் ஒரு பெண் சிசுவோடு படம் தொடங்குகிறது. பெண்களே இல்லாமல் போகும் ஒரு சமூகத்தில் ஆண்களின் தவிப்பு, வெளிப்படும் மூர்க்கம், தேடும் வடிகால்கள்... எவ்வளவு தூரம் இது கொண்டு போகும் என்று சொன்னது எதுவும் மிகையாகத் தெரியவில்லை. ஐந்து மகன்கள், அப்பா, ஒரு சமையல்காரச் சிறுவன் இந்தக் குடும்பத்திலிருந்து கதை தொடங்குகிறது. ஆரம்பத்தில் சொன்ன செய்திக் குறிப்பு தான் படம். அத்தனை அவலங்களையும் சொல்லிப் போகிறது. சேச்சே இவ்வளவு மோசமாகவெல்லாம் ஒன்னும் ஆகாது என்று மறுக்க முடியவில்லை. இன்றைக்கும் இப்படி கிராமங்கள் இருக்கத்தான் செய்கிறது. இனிமேலும்.

ஏன் இந்தப் படம் பற்றி சத்தமேயில்லை? முகத்தைத் திருப்பிக் கொண்டு கண்களை மூடிக் கொள்வது உத்தமமாக பட்டதோ?!

Sunday, July 03, 2005

Mira & the Mahatma by Sudhir Kakar

Image hosted by Photobucket.com

இந்த புத்தகத்தைப் பற்றி மூக்கு சுந்தரின் வலைப்பதிவிலும்(ஸாரி... எந்த பதிவென்று நினைவில்லாததால் சுட்டி கொடுக்க முடியவில்லை), டெலிகிரா·ப் புக் ரிவ்யூவிலும் பார்த்தது. புத்தகக் கடையில் இதைப் பார்த்த போது வாங்கத் தூண்டியது எது? காந்தியின் சராசரி மனித பக்கத்தைப் பார்க்கும் க்யூரியாசிட்டியா? யாரிந்த மீரா? அவர்களுக்குள் இருந்த நேசம் பற்றி என்ன சொல்கிறது என்ற கேள்விகளோடுதான் புத்தகம் வந்தது.

காந்தியின் அஹமதாபாத் ஆசிரம வாழ்க்கை, வசதியான குடும்பத்தில் பிறந்து காந்தியைப் பற்றி அறிந்து எல்லாவற்றையும் துறந்து இந்தியா வரும் Madeline(மீராபென்), இவர்களைப் பற்றி சொல்லிக் கொண்டு போகும் கதை சொல்லி, கடைசியில் வந்து சேரும் ப்ருத்வி என்ற பாத்திரம்...

நிச்சயமாக இதை ஒரு நாவலாக நினைத்து வாசிக்க ஆரம்பிக்கவில்லை. ஒரு வாழ்க்கை குறிப்பு. ஆசிரியர் இதை சேகரித்துச் சொல்கிறார். அதை நான் தெரிந்து கொள்ளப் போகிறேன். இப்படித்தான் வாசிக்க கையில் எடுத்தேன். முன்னுரையில் இதில் எது கதை எது நிஜம் என்று சொன்னதை நான் முழுதாக புரிந்து கொண்டேனா என்று தெரியவில்லை. மீராபென் நிஜம். காந்தி நிஜம். அவர்கள் கழித்த காலம் நிஜம். இணைத்த நிகழ்வுகளில் கொஞ்சம் கற்பனை. என்றால் இப்படி கற்பனை செய்து எழுதுவது சரிதானா? அப்படியென்றால் மாய்ந்து மாய்ந்து படித்த பொன்னியின் செல்வனும் மற்ற சரித்திர நாவல்களும் என்னவாம்? இதைப் படித்த பின் எனக்கு வரும் அனுமானங்கள் எவ்வளவு சரி? கேள்விகள். குழப்பம்.

ஒரு புத்தகத்தை வாசிக்கும் போது அதில் எதாவது ஒரு பாத்திரத்தின் ஒரு சின்ன விஷயம், அந்த பாத்திரத்திற்கு பிடித்தது, அந்தப் பாத்திரம் யோசிப்பது... இப்படி எதாவதோடு வாசிப்பவர் தொடர்பு படுத்திக் கொள்ள முடிவது அந்த புத்தகத்தோடு நெருங்கி வர அவசியம் என்று நினைக்கிறேன். 'நான் கூட...' என்று நினைக்க வைக்க வேண்டும். இந்த 'நான் கூட...' கூடக்கூட இன்னும் இன்னும் என்று புத்தகத்துடன் நெருக்கமாகிறோம். Mr. Perfect மகாத்மா, வசதிகளை துறந்து இத்தனை சிரமங்களை தாங்கிக் கொள்ளும் மீராபென்... யாருடனும் என்னை எங்கேயும் தொடர்பு படுத்திக் கொள்ள முடியாமல் போனது துரதிஷ்டம் தான். எல்லாமே தலைக்கு மேலே ஓடுகிறது. கடைசி இருபத்து சொச்சம் பக்கங்கள் பாக்கியிருக்கிறது. ஏனோ முடிக்கத் தோணவில்லை!

ஒன்று புனைக்கதையாக இருக்க வேண்டும். இல்லை நிஜம் சொல்வதாக. இது...


இப்படி எழுதி முடித்த இந்தப் பதிவு ஏனோ அனுப்ப மனமில்லாமல் இத்தனை நாளாகக் கிடந்தது. நேற்று அந்த மீதிப் பக்கங்களைப் படித்து முடித்ததும் என்ன கஷ்டம்டா இது என்று தான் இருந்தது. கடைசி பக்கங்கள் மீரா ப்ருத்வி மேல் கொண்ட காதலைச் சொல்லிப் போகிறது. காந்தி மேல் ஆழ்ந்த பக்தி, அவரால் ஒவ்வொரு முறையும் வலுக்கட்டாயமாக விலக்கப்பட்டது, ப்ருத்வி மேல் நேசம் கொண்டு அதுவும் மறுக்கப் பட்டு... மன்றாடிப் பார்த்ததும்... கொஞ்ச வருஷம் முன்னால் இதைப் படித்திருந்தால் என்ன ஒரு பெண்! என்று மாய்ந்திருக்கலாம்.

மீராபென் காந்திக்கு எழுதியது, காந்தி மீராபென்க்கு எழுதியது, மீராபென் ப்ருத்விக்கு எழுதியது என்று... இந்தக் கடிதங்களை இப்படி வெளியிடுவது சரியா? இந்தக் கடிதங்கள் எல்லாம் ம்யூஸியத்திற்கு எப்படிப் போனது? இவையெல்லாம் இப்படி அச்சில் வருவதில் யாருக்கும் ஆட்சேபனை இல்லையா? வாசிக்கும் போது கொஞ்சம் கூச்சமாக இருந்தது.

எப்போதாவது எதிலாவது கரைந்து போக வேண்டும் என்று தோன்றும் போது மறுபடியும் ஒரு முறை இதை வாசிக்கும் தூண்டல் வர வேண்டும். அப்போது இது வேறு மாதிரி வாசிப்பு அனுபவம் கொடுக்கலாம்! கொடுக்க வேண்டும்.

Wednesday, June 08, 2005

Book Meme - தொடர்கிறது

அழைப்பு விடுத்ததற்கு நன்றி ப்ரகாஷ்.

என்னிடம் இருக்கும் புத்தகங்கள் - 150+ (ஒரு முப்பது புத்தகங்களாவது இன்னும் வாசிக்கப் படாமல் இருக்கிறது)

கடைசியாக வாங்கியது:

தமிழில்:

அசோகமித்திரன் கட்டுரைத் தொகுப்பு (இரண்டும்)
இரண்டாம் ஜாமங்களின் கதை - சல்மா
இரவுக்கு முன்பு வருவது மாலை - ஆதவன்
என் வீட்டின் வரைபடம் - ஜே. பி. சாணக்யா
ஜீரோ டிகிரி, கோணல் பக்கங்கள்(இரண்டாவது தொகுதி) - சாரு நிவேதிதா

ஆங்கிலத்தில்:

UNHOLY WARS Afghanistan, America and International Terrorism - John K. Cooley
One Hundred Years of Solitude - Gabrial Garcia Marquez
Mira & the Mahatma - Sudhir Kakar
Jawaharlal Nehru - an autobiography

கடைசியாக வாசித்தது - Memoirs of a Geisha - Arthur Golden

வாசித்துக் கொண்டிருப்பது - Mira & the Mahatma - Sudhir Kakar

ரொம்ப பிடித்த புத்தகங்கள்:

தமிழில்:

மோகமுள், மலர்மஞ்சம் - தி.ஜானகிராமன்
இரும்புக்குதிரைகள், மெர்க்குரிப்பூக்கள் - பாலகுமாரன்
காடு - ஜெயமோகன்

ஆங்கிலத்தில்:

The Company of Women - Kushwant Singh
Timepass - Protima Bedi
Fountainhead - Ayn Rand
Long Road Home - Danielle Steel

சென்ற முறை Oxford ல் கைகளை துறுதுறுக்க வைத்தவை:

a space of her own - ?!
Ten Thousand miles without a Cloud - ?!
Kasthurba _ a life - Arun Gandhi
Death at my doorstep - Kushwant Singh

நான் அழைப்பு விடுக்கும் ஐந்து பேர்

சித்ரன்
ஆசிப்
பிரசன்னா
ஜெயந்தி சங்கர்
உஷா

Sunday, May 29, 2005

இது சரியா ஜக்ஜித்ஜி?

ஜக்ஜித் சிங்கை கவனித்துக் கேட்க ஆரம்பித்தது கடந்த பத்து வருடங்களாகத்தான். அவரும் சித்ரா சிங்கும் இணைந்து வழங்கிய ஒரு சிடி மூலமாகத்தான் அறிமுகமானார். இதமான குரலோடு அவருக்கான சில நேரங்களை எனக்குக் கொடுத்துப் போயிருக்கிறார்.

சனிக்கிழமை மாலை Science City அரங்கத்தில் அவருடைய இசை நிகழ்ச்சி. ஆறு மணிக்கு மேல் என்று அழைப்பிதழ் சொன்னது. சக வாத்தியகாரர்கள் எல்லோரும் வெள்ளையில் இருக்க, நடுவில் முழு கறுப்பில் ஹார்மோனியத்துடன் ஜக்ஜித் சிங் அமர்ந்திருக்க, திரை விலகும் போது மணி ஆறேமுக்கால். ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்தும் போது அவர்கள் அவரவர் வாத்தியத்தை வாசிக்க கூடவே ஒலிபெருக்கி அளவைக் கூட்டவும் குறைக்கவும் சொல்லிக் கொண்டிருந்தார். அவ்வளவு சீக்கிரத்தில் திருப்தி வரவில்லை. இதை இன்னும் கூடச் சேர்த்து, அதைக் கொஞ்சம் குறை... ஒரு வழியாக ஏழுமணிக்கு முதல் கஸல்.

ஆலாபனையோடு தொடங்கிய குரல் பக்கத்தில் வந்து ஹலோ சொல்லிப் போனது. முதல் கஸல் முடிந்து இரண்டாவது தொடங்கும் போது வசியம் பண்ண ஆரம்பித்திருந்தது. மெல்ல அந்தக் குரல் தன்பக்கம் இழுப்பது போலவும், அதை நோக்கிப் போவதைப் போலவுமிருந்தது. அரங்கத்திலிருந்தவர்கள், வாத்தியக்காரர்கள் விலகிப் போக அந்தக் குரலும் நானும் மட்டும் ஒரு வட்டத்திற்குள் என்று உணரத் தொடங்கும் போது வயலினின் ஒலிப்பெருக்கியை சரி செய்யச் சொல்லி வட்டத்தைச் சிதைத்தார். மறுபடியும் குரல் வசீகரிக்க ஆரம்பிப்பதும், எதாவது பேசி வட்டத்தைக் கலைப்பதுமாயிருந்தார்.

தண்ணீர் குடிக்க டம்ளர் வேண்டும் என்பதை ஒலிப்பெருக்கியில் பாட்டுக்கு இடையில் சொன்ன போது 'இது சரியா ஜக்ஜித்ஜி?' என்றிருந்தது. ஆரம்பித்த ஒரு மணி நேரத்தில் 'ஐந்து நிமிட இடைவேளை... பத்து பதினைந்து நிமிடத்திற்குப் பிறகு சந்திக்கலாம்' என்று ஜோக்கடித்த போது சிரிப்பு வரவில்லை.

நாற்பது நிமிடத்திற்குப் பிறகு மறுபடியும் பாட ஆரம்பித்த போது 'நான் ஒன்னும் அதிக நேரம் கேட்கப் போவதில்லை. ஒன்றிரண்டு கேட்டு விட்டு போய் விடப் போறேன்' என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டு தான் கேட்க ஆரம்பித்தேன். முதல் பாதியில் ஏமாற்றியதை இரண்டாம் பாதியில் ஈடுகட்டினார் என்று தான் சொல்ல வேண்டும். தேர்ந்தெடுத்த பாடல்கள், கொஞ்சலும் குழைவுமாய்... குரல் அவர் சொன்ன படி கேட்டது. சிரமமே இல்லாமல், சுவாசிப்பது போலத்தான் பாடவும் செய்கிறார் என்று நினைக்க வைத்தார். 'உன் வசியத்திற்கெல்லாம் மயங்க மாட்டேன்' என்று பிடிவாதமாய் அமர்ந்திருந்தவளை தாளம் போட வைத்ததில் அந்தக் குரலுக்கு ஒரு சந்தோஷம்.

பாதிப் பாட்டில் எழுந்து போக வேண்டாம் என்று முடியக் காத்திருக்க, போக விடாமல் நாற்பது நிமிடம் தொடர் சங்கீதம். ஒரு பாட்டு முடிய முடிய அடுத்தது தொடங்க... எழுந்திருக்க மனமில்லைதான். ஒன்பரை மணிக்கு கச்சேரி முடிந்தது. இசையென்னும் இன்ப வெள்ளத்தில் மூழ்க ஓடோடி வந்த என்னை கொஞ்சம் ஏமாற்றித்தான் விட்டார். வெறும் கால் மட்டும் தான் நனைந்தது போலிருந்தது.

ஆனாலும் தான் என்ன... ஆற்றங்கரையில் குட்டைப்பாறை மேல் உட்கார்ந்து காலாட்டிக் கொண்டு நனையும் சுகத்தைக் குறை சொல்ல முடியுமா?!

Saturday, May 21, 2005

ஒரு பயணம்... 36 லிருந்து 3க்கு. (புகைப்படங்கள்)

Image hosted by Photobucket.com

மாலில் இருந்து டார்ஜிலிங்.

Image hosted by Photobucket.com

டார்ஜிலிங் தேயிலைத் தோட்டம்.

Image hosted by Photobucket.com

டீஸ்டா நதி (மேலிருந்து).

Image hosted by Photobucket.com

வழியில் பார்த்த சிறிய நீர்வீழ்ச்சி.

Image hosted by Photobucket.com

முதல் முதலாக கண்ணில் பட்ட பனிமலை.

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com

சாங்கோ ஏரி.

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com

ஏரிக்கரையில் யாக்.

ஒரு பயணம்... 36 லிருந்து 3க்கு.(3)

மூன்றாவது நாள் பார்த்த பாறைப் பூங்கா(Rock garden)வும், கங்கா மையா பார்க்கும் சுற்றுலா பயணிகளுக்காவே நிர்மாணிக்கப் பட்டது. வலிந்து திணித்த அழகோடு, பெரிதாக ஒட்டவில்லை. மூன்று நாள் டார்ஜிலிங்கில் இருந்ததில் கவனித்தது... எல்லாக் குழந்தைகளும் அழகுதான். ஆனால் இங்கே இன்னும் கொஞ்சம் கூட. பனியில் இயற்கையாகவே கன்னத்து மேட்டில் பூத்திருக்கும் சிவப்பு தான் காரணமாயிருக்கும்.

இளைஞர்கள் நீளமாக முடி வளர்க்கிறார்கள். மலைப்பாதையில் நடந்து நடந்து முறுக்கேறிய உடம்பும், செதுக்கின முகமும், பட்டுப் போன்ற முடியுமாய்... உயரம் மட்டும் கூடுதலாய் இருந்தால் மாடலிங் உலகில் இவர்களை அடிக்க ஆளிருக்காது. பெண்களுக்கு முகப்பரு, bad hair days தொல்லைகள் பற்றியெல்லாம் தெரிந்தே இருக்காது என்றிருந்தது. பாரம்பரிய உடை அணிந்த பெண்கள் அடிக்கடி கண்ணில் படுகிறார்கள். காலர் வைத்த முழுக்கை பெண்கள் சட்டை, அதன் மேல் ஒரு முழு நீள அங்கி, பின் பக்கம் இழுத்துக் கட்டி... அழகாகத்தான் இருக்கிறது. போன தடவையே தேடியது, இந்த முறை ஒன்று வாங்கி விட்டேன். நைட்டியாகவாவது உபயோகப் படுத்தலாம் என்று தான். அப்படிச் சொன்னதற்காக கடைக்காரப் பெண் கோபித்துக் கொண்டார். எங்கள் உடை உங்களுக்கு நைட்டியா என்று. பெரும்பாலானோர் நேப்பாளி பாஷை பேசுகிறார்கள். ரோடுகள் தாறுமாறாய் வளைந்து, ஏறி இறங்குகிறது. சொந்த வண்டி எடுத்துக் கொண்டு போகும் யோசனை இருந்தால் மறந்து விடுவது நல்லது.

டார்ஜிலிங் டீ திடம் குறைவாக, லேசான கசப்பு சுவையோடு. ஆசை தீர அங்கே குடித்துக் கொள்ள மட்டும் செய்யலாம். ஊருக்கு வாங்கிக் கொண்டு போகாமலிருப்பது உத்தமம். அந்தத் தண்ணீருக்கும் அந்த குளிருக்கும் தான் அது நன்றாக இருக்கிறது. சென்ற முறை வாங்கி வந்து கடுப்படித்ததில் அந்த வேலைக்கே போகவில்லை. மோமோ எனப்படும் சிற்றுண்டி விசேஷம். மைதா மாவில் சின்ன பூரிகளாக தேய்த்து உள்ளே காய்கறி(பெரும்பாலும் முட்டைக்கோஸ்) அல்லது இறைச்சி அடைத்து ஆவியில் வேக வைத்துக் கொடுக்கிறார்கள். கொல்கத்தாவில் பெரிய சைனீஸ் உணவகங்களில் கிடைக்கும் மோமோ எதுவும் அந்த ரோட்டோரக்கடையில் விற்பதற்கு ஈடாகாது. அந்த குளிருக்கு காரமாக ஒரு சிவப்புச் சட்னியோடு சாப்பிட... ஆஹா!

ஷாப்பிங் செய்ய ஏகப்பட்ட curio shop கள். கலைப் பொருட்களில் ஆர்வம் இருப்பவர்கள் அள்ளிக் கொண்டு வரலாம். எங்களுடைய கோட்டா சென்ற முறையே முடிந்து விட்டதால் இந்த முறை எதுவும் தேவையிருக்கவில்லை. சிவப்புப் பட்டில் சுவற்றில் தொங்கவிடும் புத்தரை வாங்காமல் வந்தது தான் ஒரே குறை. தஞ்சாவூர் சித்திரங்களைப் போல தங்கம் உபயோகித்து, ஆனால் மிகுந்த நுணுக்கமான வேலைப்பாடுகளோடு 'தாங்கா' ஓவியங்கள் யானை விலை, குதிரை விலையில். இந்த முறையும் தடவிப் பார்த்துவிட்டு வந்துவிட்டேன்.

மறுநாள் காலையில் கேங்டாக் (Gangtok) கிற்குக் கிளம்பும் போது லேசாக மழை பெய்து கொண்டிருந்தது. அதே மலைகளும் பள்ளத்தாக்குகளும் பனி மூட்டமும்... கூடுதலாக ஒரு மணி நேரப் பயணத்திற்குப் பின் சேர்ந்து கொள்ளும் டீஸ்டா(Teesta) நதி. ஆரம்பத்தில் அதலபாதாளத்தில் ஆழ அகலமாய் ஓடிக் கொண்டு பயமுறுத்துகிறது. ஆனால் எங்கேயிருந்து பார்த்தாலும் அழகாயும். அடுத்த ஒரு மணி நேரத்தில், பத்தடி இறங்கினால் கைகளை அளைய விடலாம் என்ற தூரத்தில்.

டார்ஜிலிங்கில் இருந்து கேங்டாக் மூன்று மணி நேர பிரயாணம். கேங்டாக்கில் தங்கும் விடுதிக்குப் போய்ச் சேர்ந்த போது அவர்கள் எங்களை அவ்வளவு சீக்கிரம் எதிர்பார்த்திருக்கவில்லை. மறுநாள் காலையில் தான் உங்களுடைய ஊர் சுற்றிப் பார்க்கும் படலம். அதுவரை ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டியது தான் என்றார். மாலையில் நடக்க ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில் தெருக்களெல்லாம் நினைவு வந்து விட்டது. ஒரு பெரிய மார்க்கெட், நீள நடந்தால் ஒரு பேருந்து நிறுத்தம், தங்கும் விடுதிகள், சௌமின்(chowmein) என்று பெயர் மாற்றிக் கொண்ட நூடுல்ஸ்... தலைநகருக்கு இதெல்லாம் ரொம்ப குறைச்சல்!

டார்ஜிலிங்கை விட அதிக எண்ணிக்கையில் சிகப்பு வஸ்திரம் தரித்த பிக்குகள். எல்லா வயதிலும். டவேரா விளம்பரத்தில் வரும் குழந்தைகள் வயதில் கூட. இவ்வளவு சின்ன குழந்தைகளை எதற்காக இப்படி அனுப்புகிறார்கள்? குடும்பத்தில் யாராவது ஒருவர் அப்படி ஆக வேண்டும் என்பது கட்டாயமா? கூம் மொனஸ்ட்ரியில் பார்த்த போது அது ஏதோ கட்டாயத்திற்காகத் தான் என்பது போல ஏன் எனக்குத் தோண்றியது? எத்தனை வருடம் அங்கேயே இருக்க வேண்டும்? முடிந்த பின் அவர்கள் என்ன செய்வார்கள்? நிறைய கேள்விகள். யாரிடம் கேட்டால் பதில் கிடைக்கும் என்று தெரியவில்லை. என்ன தெரிந்து கொள்ள வேண்டும், கேளுங்கள் சொல்கிறேன் என்ற சிநேகபாவம் யார் முகத்திலும் தெரியவில்லை. ஒருவேளை வெளிமனிதர்களோடு அவசியமில்லாமல் உரையாடுவதற்கு அனுமதியில்லாமலிருக்கலாம்!

மறுநாள் காலையில் போன ரூம்டெக் மொனஸ்ட்ரியில் சிலவருடங்கள் முன்பு இந்தியாவிற்கு தஞ்சமாக வந்த இளைஞர் தலாய்லாமா புகைப்படம் நடுவில். தவிர நிறைய பித்தளை விக்ரகங்கள், ஒரு சின்னக் குழந்தையின் புகைப்படம்... அங்கேயும் நாங்கள் போயிருந்த சமயம் பிரார்த்தனை நடந்து கொண்டிருந்தது. பிரார்த்தனைக் கூடத்தைச் சுற்றி பிக்குகள் தங்கும் அறைகள். பின்புறம் இருந்த பெரிய கட்டிடம் பாடசாலை போலிருந்தது. வெளியாட்களுக்கு உள்ளே போக அனுமதியில்லை.

அது தவிர ஒரு ஸ்தூபி, ஒரு சிறிய அருங்காட்சியகம், பூங்கா. எல்லா இடங்களிலும் சின்னக் குழந்தைகளை அந்த சிகப்பு ஆடையில் திரும்பத் திரும்ப பார்த்ததில் எதிலும் மனது ஒட்டவில்லை. மறுநாள் காலையில் தான் சங்கோ(Tsamngo) ஏரிக்கு போவதாக இருந்தது. காலையில் சீக்கிரமே வண்டி வரும் என்று சொல்லியிருந்ததால் அதிகம் அலையாமல் அன்றைய தினத்தை முடித்துக் கொண்டோம். ராத்திரி குளிரும் அதிகம் இல்லை. நவம்பர் மாத கொல்கத்தா போல இதமாக.

காலையில் எட்டரை மணிக்கு வண்டி வந்திருந்தது. முதல் நாளே யார் யார் போகிறோம், பெயர், வயது விபரங்கள் எல்லாம் கேட்டுக் கொண்டார்கள். ஏரி இந்தியா - சீன எல்லைக்கு மிக அருகில் இருப்பதால் இந்த விபரங்களெல்லாம். கரடுமுரடான மலைப்பாதைப் பயணம். இடையிடையே சின்னதாயும் பெரிதாயுமாய் நீர்வீழ்ச்சிகள். சிலவற்றில் தடுப்புக்கம்பிகளோடு. சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களைத் தவிர சுற்றுவட்டாரத்தில் வேறு நடமாட்டங்கள் இல்லை.

ஒன்றரை மணி பயணத்திற்கு பிறகு ஒரு இராணுவ கேம்ப், அதை ஒட்டி ஒரு சிறிய கிராமம். இந்த உயரத்திற்கு வரும் போது சுற்றிலும் பனி மூட்டம். பத்தடி தூரத்திற்கு அப்பால் எல்லாம் மங்கலாக. குளிர் நன்றாக உரைக்கத் தொடங்கி விட்டது. கேம்ப் வாசல்களில் அங்கங்கே கொஞ்சம் கொஞ்சமாய் பனி உறைந்து கிடக்கிறது. வீட்டுக் கதவைத் திறந்தால் அந்தப் பனியில் கால் வைக்காமல் போக முடியாது. வாசலில் பனி கொட்டிக் கிடக்கிறது. ஹவ் ஸ்வீட்!

என்னமாய் குளிர்கிறது என்று நினைத்துக் கொண்டே ஒரு வளைவைத் தாண்டியது தான். தூரத்தில் ஒரு மலை. முழுக்க முழுக்க பனியால் மூடி. உருகி வழிந்த நீர் மட்டும் இடையிடையே கோடிழுத்தது போலிருக்க... முதல் முதலாக அப்படி ஒன்றை நேரில் பார்க்கக் கிடைத்தது. இவ்வளவு அழகானதை இன்னும் பக்கத்தில் பார்க்க முடிந்தால் என்றும். நாங்கள் பக்கத்திற்குத்தான் போய்க் கொண்டிருந்தோம். அடுத்த ஒரு மணி நேரத்தில் இன்னும் இன்னும் கொஞ்சம் என்று போனதில் 12400 அடி உயரத்திற்கு வந்து விட்டிருந்தோம். திரும்பிய பக்கமெல்லாம் வெள்ளைப் பனி. வெடவெடக்க வைக்கும் குளிர்.

இறங்கி கொள்ளுங்கள் என்று சொன்ன இடத்தில் சுற்றிலும் மூன்று நான்கு மலைகள் சூழ்ந்திருக்க நடுவில் சாங்கோ ஏரி. சலனமில்லாமல் ஏரி விரிந்திருக்க பார்ப்பது நிஜமா என்றிருந்தது. இப்படி ஒன்றை நிச்சயமாய் எதிர்பார்த்திருக்கவில்லை. சென்ற முறை ஜூன் மாதத்தில் வந்திருந்த போது நிறைய குளிராயிருந்தது. லேசான பனிமூட்டம் இருந்தது. ஆனால் மருந்துக்குக் கூட எங்கேயும் பனியிருக்கவில்லை. அப்போது அங்கிருந்தவர்கள் சொல்லக் கேட்டு ஜனவரி மாதத்தில் ஏரியே உறைந்திருக்கும், அந்த நேரத்தில் வந்து பார்க்க வேண்டுமென்று நினைத்ததும், ஒவ்வொரு ஜனவரியிலும் வர முடியாமல் போனதுமாய்... மே மாதத்தில் இவ்வளவு பனியை எதிர்பார்க்கவில்லைதான். வேலை வேலை என்று வராத கணவரும், பரிட்சையிருப்பதால் வர முடியாமல் போன மகளும் இதையெல்லாம் பார்க்கவில்லையே என்றிருந்தது.

ஏரிக்கு ஒரு புறம் ஏழெட்டு கடைகள். சூடாக டீயும் மோமோவும் சௌமினும் கிடைக்கிறது. டீ குடிக்கும் போதே கடைக்காரப் பெண் Yak (பனி எருமையா?) ல் போகவில்லையா என்றார். இங்கேயும் அங்கேயும் அலைந்து கொண்டிருக்கும் ஏறக்குறைய ஐநூறு கிலோ எடையுள்ள அதன் பக்கத்தில் நின்று புகைப்படம் எடுக்க மட்டுமே தைரியம் இருந்தது. வேண்டாம் என்று போன எங்களை விடவில்லைதான். ஏரிக்கு இந்தப் பக்கம் என்ன இருக்கிறது, அந்தப் பக்கம் யாக்கில் ஏறிப் போய்ப் பாருங்கள், பனியைக் கையிலேயே தொடலாம் என்று ஆசை காட்டி கடைசியில் அதில் ஏற்றியே விட்டார்.

முழங்கால் வரையான காலணி, போட்டுக் கொள்ள ஜாக்கெட் எல்லாம் அங்கேயே வாடகைக்குக் கிடைக்கிறது. யாக்கில் ஏற ஒரு ஆளுக்கு நூற்றி அறுபது ரூபாய். அரசாங்கம் நிர்ணயித்த கட்டணமாம். ஏறி உட்கார்ந்தால் கல்லும் கரடுமாய் இருக்கும் ஒற்றையடிப் பாதையில் லாவகமாய் நடக்கிறது. ஆரம்ப பயம் தெளிந்ததும் யாக் ஓட்டுனரோடு பேச்சுக் கொடுத்ததில்... யாக்கின் பெயர் திங்கா, ஓட்டுபவர் தாவா, தூரமாய் கை காட்டி அந்த கிராமத்தில் தான் வசிக்கிறோம். புல்லும் கோதுமை மாவும்(?!) சாப்பிடும். மலைக்கு அந்தப் பக்கம் இருந்து வாங்கிக் கொண்டு வந்து பழக்கியது. குழந்தையாய் இருக்கும் போது ரொம்ப முரடாய் இருந்ததாகவும், இப்போது சமத்தாய் சொன்ன பேச்சு கேட்கிறது...

ஒன்றிரண்டு முறை கீழே தள்ளி விடுமோ என்று பயமுறுத்தினாலும் பத்திரமாய் அந்தப் பக்கம் கொண்டு போய் சேர்த்து விட்டது. தூரத்திலிருந்து பார்த்து மலைத்த பனி இப்போது காலடியில். கையில் எடுத்து உருண்டையாக்கும் போது எதிர்பாத்த அளவு உரைக்கவில்லை. அந்தக் குளிருக்கு கைகள் பழகிவிட்டிருந்தது. வாடகைக்கு எடுத்த ஜாக்கெட்டின் மேல் உட்கார்ந்து பனிச்சறுக்கிக் கொண்டிருந்தார்கள் ஒரு இளம் சர்தார்ஜி ஜோடி. சுற்றிலும் பனி, ஆடாமல் அசையாமல் ஒரு ஏரி, ஏறக்குறைய நிசப்தம், இடையிடையே சர்தார்ஜினியின் சிரிப்பு... எங்கேயோ காணாமல் போவது போலிருந்தது.

திங்காவிற்கு அடுத்த சவாரிக்கான நேரமாகிவிட்டதால் கிளம்ப வேண்டியதாயிற்று. திரும்ப வரும்போது தாவாவிடம் இப்பொது என்ன டெம்பரேச்சர் இருக்கும் என்று கேட்ட போது, 'அது இருக்கும் மேம்சாப், ஒரு மூணு டிகிரி'.

!!!!

Wednesday, May 18, 2005

ஒரு பயணம்... 36 லிருந்து 3க்கு. (2)

"நாளைக்கு காலையில் மூன்றரை மணிக்கு தயாராக இருங்கள், டைகர் ஹில்ஸ¤க்கு உங்களைக் கூட்டிக் கொண்டு போக வண்டி வரும்".

"என்னது மூன்றரை மணிக்கா??? அதுவும் இந்தக் குளிரிலா?"

அப்படிக் கேட்பேன் என்று எதிர்பார்த்தது அவர் முகத்தில் தெரிந்தது. டார்ஜிலிங் எனக்குப் புதிதில்லை. இதற்கு முன்னால் வந்திருக்கிறேன் என்று சொன்னதும், "ஓ, அப்படியா? அப்ப சரி. காலையில் மூன்று இடங்கள் பார்த்து விட்டு அறைக்கு வந்து ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். மதியம் மீதி பார்க்க ஏற்பாடு செய்கிறேன்" என்று சொல்லி விட்டுப் போனார். காலையில் சரியாக மூன்றே முக்காலுக்கு வண்டி வந்திருந்தது. ராத்திரி பூராவும் ஹீட்டர் சூட்டில் மரத்தளம் போட்ட அந்த அறை சொர்க்கமாக இருந்தது. வெளியில் வந்ததும் குளிர் இழுத்துக் கட்டிப் பிடித்துக் கொண்டது. ஸ்வெட்டர், ஷால் எல்லாம் தாண்டி 'நான் எப்படி?' என்று கேட்டது. 'ஆஹா... உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு!' என்று சொல்ல வாய் திறக்க, பற்கள் தாளம் போட, சந்தோஷத்தில் வயது மறந்து போனது.

வழி நெடுக பெரிய ப்ளாஸ்க்கும் கையுமாய் உள்ளூர் இளம்பெண்கள், லிப்ட் கேட்டுக் கொண்டு. டார்ஜிலிங் வந்திருந்த சுற்றுலாப் பயணிக் கூட்டம் டைகர் ஹில்ஸ¤க்குப் படையெடுத்ததில் அந்த நேரத்திலும் ட்ராபிக் ஜாம். இந்த டைகர் ஹில் பயணம் சூரிய உதயமும் கஞ்சன் ஜங்காவைப் பார்க்கவும் தான்.

முதல் முதலாக கஞ்சன் ஜங்காவைப் பார்க்க கிளம்பிய போது நினைவுக்கு வந்தது, பள்ளி நாட்களில் படித்த வாஸந்தி தொடர்கதை தான். வீட்டில் ஏதோ பிரச்னை என்று சொல்லிக் கொள்ளாமல் டார்ஜிலிங்கில் வேலை தேடிக் கொண்டு கிளம்பும் நாயகி, போய்ச் சேர்ந்த அன்று இரவு படுக்கப் போவதற்கு முன் நாயகன் காலையில் நான்கு மணிக்கு எழுந்து ஜன்னல் வழியாகப் பாருங்கள், கஞ்சன் ஜங்கா தங்கம் போல மின்னுவதைப் பார்க்கலாம் என்று சொல்ல, அவள் நாலு மணிக்கா என்று நொந்து கொண்டே எழுந்து ஜன்னல் திரை விலக்க... அவளோடு சேர்ந்து அன்று நானும் பார்த்திருந்தேன்.

அந்தக் கற்பனையை ஒப்பிட்டுப் பார்க்க நிஜம் இன்றாவது தெரியுமா என்று நினைத்துக் கொண்டே போகும் போது லேசாக மழை துளிர்க்க ஆரம்பித்திருந்தது. ஓட்டுனர், "மழை பெய்ய ஆரம்பித்தால் அவ்வளவு தான். எதற்கும் போய் பாருங்கள். மழை நின்றதும் தெரிந்தாலும் தெரியலாம்" என்று சொல்ல, இப்போதும் இல்லையா என்றிருந்தது. அரைமணி நேரக் காத்திருத்தலுக்குப் பின் சூரியன் மெல்ல எட்டிப் பார்க்க அதுவரை சூரியனையே பார்க்காதது போல ஒரு கூச்சல். மலையே அரண்டிருக்கும்! சூரியன் வந்தும் பனி விலகாததால் அப்போதும் கஞ்சன் ஜங்கா தெரியவில்லை!

அங்கிருந்து நேராக Ghoom Monastry. கூம் இடத்தின் பெயர். அங்கிருக்கும் ரயில் நிலையம் உலகின் இரண்டாவது உயரமான இடத்தில் இருக்கும் ரயில் நிலையம். ஏறக்குறைய எட்டாயிரம் அடி உயரத்தில் என்று பார்த்ததாக நினைவு. மேலே ஒன்றிரண்டு இடங்களுக்கு அழகான ஒரு ரயில் குறுக்கும் நெடுக்குமாய் ஓடுகிறது. மொனஸ்ட்ரிக்கு நாங்கள் போன போது வழிபாடு நடந்து கொண்டிருந்தது. ஆறேழு வயதிலிருந்து எல்லா வயதிலும் சிவப்பு நிற அங்கியும் மஞ்சள் நிற மேல்சட்டையுமாய் பிக்குகள். நடு வரிசை தவிர மற்ற வரிசைகளில் வாய் மட்டும் மந்திரம் உச்சரிக்க கவனமெல்லாம் அலைபாய்ந்து கொண்டு. மொனஸ்ட்ரி ஒரே வண்ணமயமாய். சிவப்பு நிறம் தூக்கலாக, மற்றும் மஞ்சள், நீலம், பச்சை, வெள்ளை நிறத்தில் நிறைய வேலைப்பாடுகளோடு. உருவ வழிபாடு. பளபளக்கும் சிவப்புப் பட்டில் நிறைய அலங்காரங்கள். புத்தர், மஞ்சுஸ்ரீ என்ற ஒரு பெண் தெய்வம்... இன்னும் பெயர் தெரியாத நிறைய விக்ரகங்கள், சிறிதும் பெரிதுமாய்.

அடுத்து இராணுவத்தில் உயிர்விட்ட கூர்கா பிரிவினருக்கான நினைவு சதுக்கம். சதுக்கத்தைச் சுற்றியும் கடைகள். ஸ்வெட்டர், ஷால், செருப்பு, லொட்டு லொசுக்கு. இந்த இடத்தையாவது விட்டு வைத்திருக்கலாம் என்றிருந்தது. ரயில் பாதை ஒன்று சுற்றிக் கொண்டு போகிறது. பாதையை மறித்து இந்தக் கடைகள். இதில் ரயில் போகாதா என்றதற்கு, "ஒன்பதரைக்குத்தான் ரயில் ஆரம்பிக்கும். அதுவரைக்கும்" என்றார்கள். அதற்கப்புறம் எங்கே போவார்கள்?!

இங்கே இன்னொன்றும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். அதை டெலஸ்கோப் என்று தான் சொல்கிறார்கள், பார்க்கவும் அப்படித்தான் தெரிகிறது, பத்து ரூபாய்க்கு அதில் டார்ஜிலிங்கின் முக்கிய இடங்களைக் காண்பிக்கிறார்கள். இடம் தெரிந்து, பெயர் மனதிற்குள் பதிவதற்குள் திருப்பி அடுத்த இடம், அதன் பெயர். இப்போது அதில் சேர்ந்திருக்கும் புது இடம், 'மே ஹ¥ நா' பள்ளிக்கூடம். இதோடு காலைசுற்றல் முடிந்தது.

மதியம் இரண்டு மணிக்கு அடுத்தது. வயதான ஒரு ஓட்டுனர், வழியெல்லாம் பேசிக் கொண்டே. அவர் வாயைக் கிண்டியதில்... பெரும்பாலும் இந்துக்கள், மற்றும் புத்த மதத்தினர் வசிக்கின்றனர். மற்றவர்கள் ரொம்பக் குறைவு. புத்த மதத்தவர்கள் வீட்டு முன்னால் நீண்ட ஒரு மூங்கில் நிறுத்தப்பட்டிருக்கும். உச்சியில் ஒரு கும்பம் போல வெள்ளை நிறத்தில். கீழே பச்சை, மஞ்சள், நீலம், சிகப்பு, வெள்ளை நிறத்தில் துணி சுற்றியிருக்கும். அதற்குக் கீழே நீளத்திற்கு இணைக்கப்பட்டிருக்கும் துணியில் அவர்கள் மொழியில் பிரார்த்தனை எழுதப் பட்டிருக்கும். அந்தத் துணி காற்றில் அசைந்தாடும் போது அவர்கள் பிராத்தனை அசைந்து மேலே செல்வதாக அவர்கள் நம்பிக்கை. இளைஞர்கள் சீக்கிரம் பணம் சம்பாதிக்கும் ஆர்வத்தில் பெரும்பாலும் டூரிஸ்ட் வண்டி ஓட்டுகிறார்கள். படிப்பில் அவ்வளவு நாட்டமில்லை. இருக்கும் கொஞ்சம் பட்டதாரி இளைஞர்களும் வங்கிக் கடனில் சொந்த வண்டி வாங்கி ஓட்டத்தான் விரும்புகிறார்கள். ராயல் ஹவுஸ் என்றழைக்கப் படும் ஒரு பழைய கட்டிடத்தைக் காட்டி, இங்கேதான் நிவேதிதா அன்னை வசித்திருந்தார். உயிர்விட்டதும் இங்கேதான். இதை ஒரு நினைவுச் சின்னமாக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். சின்ன சின்னதாக இப்படி நிறைய சொல்லிக் கொண்டே வந்தார்.

மதியம் முதலில் பார்த்தது Himalayan Mountaineering Institute(HMI) - ன் அருங்காட்சியகம். பெரும்பான்மையான இடத்தை டென்சிங் ஆக்ரமித்திருந்தார். ஏறும் போது அவர் உபயோகப் படுத்திய பொருட்கள், புகைப்படங்கள், குறிப்புகள். அவருக்குப் பின்னால் போனவர்கள், முன்னால் போக முயற்சித்தவர்கள், ஜப்பானின் முதல் முழுக்க பெண்களால் ஆன குழு, அங்கிருந்து கொண்டு வந்த கல்.... விபரங்கள், மேலும் விபரங்கள். ஒரளவுக்கு மேல் பார்க்க முடியவில்லை. வழக்கமாக அருங்காட்சியகங்களுக்குள் நுழைந்த கொஞ்ச நேரத்தில் வரும் மென்டல் ப்ளாக்.

HMI ஐ ஒட்டி ஒரு விலங்குகள் சரணாலயம். எல்லாம் போரடித்துக் கொண்டு படுத்துக் கிடந்திருந்தன. சென்ற முறை போன போது பெயர் சூட்டி ஷேமம் விசாரித்து வந்த சிங்கத்தைக் காணவில்லை. கூட வருபவர்கள் நடக்க சலித்துக் கொள்ளாதவர்களாய் இருந்தால் மூலைக் கொன்றாய் இருக்கும் சில அரிய விலங்குகளைப் பார்த்து வரலாம். அடுத்து போவதாக இருந்த Ropeway ஒன்றரை வருடத்திற்கு முன் நடந்த ஒரு விபத்திற்குப் பின்னால் நிறுத்தி வைத்திருப்பதாக சொன்னார்கள். அதைத் தாண்டி போகும் வழியில் HMI ன் பயிற்சி வகுப்பு நடக்கும் மலையும் பள்ளத்தாக்குகளும். அதற்குப் பக்கத்தில் ஆர்வத்தில் முயற்சி செய்ய விரும்பும் அமெச்சூர்களுக்காக கயறுகட்டி பாதுகாப்பான ஒரு சின்ன குன்று.

அடுத்து போனது Tibetian Refugee Camp. அங்கே தரைக்கம்பளம் பின்னும் நீண்ட அறையில் முதலில் உட்கார்ந்திருந்த முதாட்டிக்கு எத்தனை வயதிருக்கும் என்று ஆச்சரியமாயிருந்தது. முகமெல்லாம் ஆழமாக முதுமையின் ரேகைகள். யார் உள்ளே நுழைந்தாலும் பச்சைப் பிள்ளையாட்டம் ஒரு சிரிப்பு அவர் முகத்தில். கை பாட்டுக்கு வேலையாய். அந்த தளம் பூராவும் கம்பளம் நெய்ய நூல் இழை தயாரித்துக் கொண்டிருந்தார்கள். மேலே போய் பாருங்கள் என்று கை காட்டியதில் அடுத்த தளத்தில் ஆழ்ந்த நிறங்களில் விதவிதமான கம்பளங்கள் தயாராகிக் கொண்டிருந்தது.

நெய்து கொண்டிருந்த நடுத்தர வயதுப் பெண்மணி ஒருவர் பக்கத்தில் அழுதழுது ஓய்ந்த ஒரு குழந்தை நம்பிக்கை இல்லாமல் நின்று கொண்டிருந்தது. திரும்பிக் கூடப் பார்க்காமல் அவர் கவனம் பூராவும் கம்பளத்தில். கீழே இருந்த மைதானத்தில் இளைஞர்கள் கூடைப்பந்து விளையாடிக் கொண்டிருந்தனர். வாலிப வயதுப் பெண்கள் அவர்கள் விளையாடுவதைப் பார்த்துக் கொண்டு. அதற்குள்ளேயே ஒரு பள்ளிக்கூடம். கம்ப்யூட்டர் சென்டர் கூட.

அங்கிருந்த விற்பனையகத்தில் அங்கே தயாராகும் பொருட்கள் விற்பனைக்கு. கம்பளப்பிரிவு மே மாதம் 2006 வரை ஆர்டர் புக்காகியிருப்பதாக சொன்னது. உலோகத்திலும், மரத்திலுமாய் நிறைய கைவினைப் பொருட்கள். வெளியே ஒரு சுவற்றில் சீனர்களை திபெத்தை விட்டு வெளியேறச் சொல்லி ஒரு போஸ்டர்.

கிளம்பும் போது ஓட்டுனர் காட்டியதைப் பார்த்ததும் 'ஹா' என்றிருந்தது. அதுவரை காடுகள் சூழ்ந்த மலைகளின் மேலிருந்த மேகம் விலகியதில் அதற்குப் பின்னால் பிரம்மாண்டமாய் முழுக்க முழுக்க பனியால் மூடிய கஞ்சன் ஜங்கா. மாலை நேரத்து மஞ்சள் வெயிலில் தகதகவென்று மின்னிக் கொண்டு. ஆசை தீரப் பார்ப்பதற்குள் மறுபடியும் மேகம் மூடி விட்டது. அவ்வளவு பிரம்மாண்டமும், ஒரே நொடியில் பார்வையிலிருந்து மறைந்துவிட்டது. ஆனாலும் கற்பனைச் சித்திரத்தோடு ஒப்பிட்டுக் கொள்ள அதுவே போதுமாயிருந்தது. வாஸந்தியின் எழுத்துக்கு ஒரு சலாம் போட்டு விட்டு அறைக்குத் திரும்பினோம்.

Tuesday, May 17, 2005

ஒரு பயணம்... 36 லிருந்து 3க்கு. (1)

வெயில் கொளுத்தி ஓய்ந்த ஒரு கசகசப்பான மாலையில் தான் தொடங்கியது அந்தப் பயணம். அடுத்த வரியாக பயணமென்றால் எனக்கு ரொம்பப் பிடிக்கும் என்று எழுத நினைத்து, யாருக்குத்தான் பிடிக்காது என்று புத்தி பதில் கேள்வி கேட்க அங்கேயே நின்று விட்டது. பிடித்திருக்கத்தான் வேண்டும்... இல்லாவிட்டால் ஐம்பத்தி ஏழு வயது, பசி தாங்காது, தூக்கம் கெட முடியாது, அதிகம் நடக்க முடியாது என்று எத்தனையே உபாதைகள் இருந்த போதும் சந்தர்ப்பம் கிடைத்தால் உடனே கிளம்ப அம்மாவுக்கு ஒவ்வொரு முறையும் தோணாது. ஆனால் பயணம் பிடிக்காத மனிதர்களையும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன்!

இவ்வளவு பயணமெல்லாம் இப்போது தான். கல்யாணத்திற்கு முன்னால் குறிப்பிட்டுச் சொல்லும் படி எங்கேயும் போனதில்லை. ஐந்தாறு வயதில் மொட்டைத் தலையோடு சாமுண்டேஸ்வரி கோவிலிலும் பெங்களூரில் ஏதோ மண்யாணை மேல் உட்கார்ந்திருந்ததும் புகைப்படம் மூலம் மட்டுமே அறிந்த பயணங்கள். அதற்குப் பிறகு ஏன் நாங்கள் எங்கேயுமே போகவில்லை? குடும்பத்தோடு ஒன்றாக போகும் பயணங்கள் தரும் சந்தோஷங்களை விட வேறு விஷயங்கள் முக்கியமாகிப் போய் விட்டிருக்கலாம்!

மறுபடியும் முதல் வரிக்கே வருகிறேன். அந்தப் பயணம் கொல்கத்தாவிலிருந்து சிலிகுரிக்கு. ஒரு ராத்திரி நேரத்தில் முடிந்து போய்விடும் அந்தப் பயணத்தில், முதல் முதலாக ஸ்லீப்பர் கோச்சில் பயணித்தது என்பதைத்தவிர, குறிப்பிட்டுச் சொல்ல எதுவும் இல்லை. வழக்கமான ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்குப் போகும் பயணம் போல. அதுவும் ராத்திரி நேர பிரயாணத்தில், ஏறியதும் தூங்கிப் போய்விடும் சக பயணிகளின் முகம் கூட பதிவதில்லை.

சிலிகுரியில் காலையில் இறங்கியதும் பேருந்து நிலையத்தில் வந்து கூட்டிக் கொண்டு போவதாக சொன்ன பயண ஏற்பாட்டாளரின் தகவலே இல்லை. செல்பேசியில் விசாரிக்கும் போது நான் நின்று கொண்டிருக்கும் இடத்தை விசாரித்து விட்டு, அங்கேயே இருங்கள் இதோ வந்து விடுகிறேன் என்று சொல்லிய அடுத்த நிமிடம் முன்னாலிருந்தார். " நான் அந்தப்பக்கம் உங்களுக்காக காத்திட்டிருந்தேன் மேடம். வண்டியில் குடிக்கத் தண்ணீர் வைத்திருக்கிறேன், செய்தித்தாள் வைத்திருக்கிறேன். மேலே போய் சேர்ந்ததும் உங்களை தொலைபேசியில் தொடர்பு கொள்கிறேன். நீங்கள் திரும்பிப் போகும் வரை உங்கள் தேவைகளை கவனிக்க வேண்டியது என் பொறுப்பு ". I'm Lovin it ஐ மனதிற்குள் சொல்லிவிட்டு வெளியே மிக்க நன்றி என்று சொல்லித் தொடர்ந்தது
பயணம்.

சிலிகுரி... சட்டென்று அதன் பச்சையில் குளிர்வித்தது. போதாததற்கு காற்றில் ராத்திரி பெய்து விட்டுப் போயிருந்த மழையின் ஈரம். ஐந்து நிமிடப் பயணத்திலேயே மலைப் பாதை தொடங்கிவிட்டது. கூடவே குறுகலான ஒரு ரயில் பாதையும். வழியெல்லாம் குறுக்கே கடப்பேன், நின்று பார்த்து விட்டு உன் பயணத்தை தொடர்ந்துக்கோ என்று ஆரம்பத்திலேயே ஒரு அறிவிப்பு. சொல்றது யார் தெரியுமா? அந்த ஆராதனா ' மேரே சப்னோ கி ராணி' ரயில் பாதை தான். வழியெல்லாம் ரோட்டின் இந்த ஓரத்திலும் அந்த ஓரத்திலுமாய் மாறி மாறி கூடவே வருகிறது.

காதோரம் குளிர் உறைக்க ஆரம்பித்ததும் அதுவரை வெறுமனே பார்த்துக் கொண்டிருந்த மலையும் பள்ளத்தாக்குகளும் கூடுதல் அழகாகிவிட்டது போலிருந்தது. ஒவ்வொரு வளைவிலும் ஆழமாகிக் கொண்டே போகும் பள்ளத்தாக்குகளும் ஏறிக் கொண்டே போகும் குளிருமாய். குண்டும் குழியுமாய் இருந்த ரோடோ, காலையிலிருந்து ஒன்றும் சாப்பிடாததோ எதுவும் பெரிதாக உரைக்கவில்லை. மூன்றரை மணிநேரப் பயணத்தில் டார்ஜிலிங் போய்ச் சேர்ந்திருந்தோம்.

நூறு வருடப் புராதன ஒரு தங்கும் விடுதியில் அறை ஒதுக்கியிருந்தார்கள். அன்றைக்கு சுற்றிப் பார்க்கும் வேலை எதுவும் இல்லாததால் மாலையில் காலாற நடக்கப் போன போது நான்கு வருடத்தில் டார்ஜிலிங் அதிகம் நெரிசலாகி விட்டது போலிருந்தது. வழி நெடுக தெருவோரக்கடைகளும் கூடுதல் சுறுசுறுப்பாக வியாபாரமுமாய். தெருமுடிந்து சட்டென்று விரியும் மாலில் இன்னும் அதிகம் மனிதர்கள். நாலடி தூரத்தில் நடப்பவர் தலைக்கு சற்று மேலே மிதந்து கொண்டு போகும் வெள்ளைப் பனி மூட்டம். நேற்று இதே நேரம் வியர்வை கசகசப்போடு பேருந்து ஏறியது நினைவு வந்தது. வெட்பமானி பத்து டிகிரி என்று சொன்னது. நான்கு வருடத்தில் கொஞ்சமும் மாறாமல் இருந்த உணவகத்தில் இரவு சாப்பாட்டை முடித்து அறைக்கு வந்த போது அங்கிருக்கும் வரை ஏற்பாடுகளை கவனிக்கும் திரு. முகர்ஜி காத்திருந்தார்.

Saturday, April 23, 2005

படிக்க போன கதை (தொடர்ச்சி).

முதல் நாள் புகார் சொல்லி வந்ததில் அடுத்த நாள் ஆசிரியர் மாறியிருந்தார். Organisational Behaviour பற்றி புத்தகம் எழுதிக் கொண்டிருக்கும் முதல்வரே ஆசிரியராக. ஒரு நீண்ட questionnaire, ஒரு பெரிய முக்கோணத்தில் குறுக்கே ஓடும் கோடுகளினால் எத்தனை முக்கோணங்களுக்கு வாய்ப்புகள் உண்டு என்று கண்டுபிடிப்பதிலும் ஓடியது. வகுப்பு முடிந்து வெளியே வரும் போது உரைத்தது, Organisational Behaviour பற்றிய பேப்பர் அடுத்த வருட பாடத்திட்டத்தில் தானே இருக்கிறது? அதைப் பற்றி இவர் இப்போது எதற்குப் பாடம் எடுத்தார்? வேற ஒன்றும் இல்லை. முதல் நாள் புகாரில் அவசரமாக சமைத்த உப்புமா தான் இந்த வகுப்பு.

இந்த வகுப்பில் உரைத்த இன்னொரு விஷயம் - பத்ரி வலைப்பதிவில் படித்த பால் முன்அனுமானங்கள் அடிப்படையில் கேட்ட கேள்விக்கு இப்போதும் என்னால் பதில் சொல்ல முடியவில்லை என்று. அப்படி ஒரு கேள்வியை முன்னாலே கேட்டிருந்தும் அதற்கான பதில் தெரிந்திருந்தும்! வாசிப்பதை விட முன்அனுமானங்கள் ஆழமாக இருக்கிறது, அபத்தமானதாக இருந்த போதும்!

மூன்றாம் நாள் வகுப்பு ஒரு சைக்கியாட்ரிஸ்ட் வந்து எடுப்பார் என்று சொல்லியிருந்ததில் எதிர்பார்ப்பிருந்தது. கை நிறைய நாலைந்து பாலிதின் கவரில் ஏகப்பட்ட காகிதங்களோடும், போரோலின் வாசனையோடும் வந்தவரை சைக்கியாட்ரிஸ்ட் என்று நம்ப கஷ்டமாகத் தான் இருந்தது. வந்து உட்கார்ந்தவும் மடமடவென்று பெங்காலியில் ஏதோ சொல்லிக் கொண்டே முதல் வரிசையில் அவருக்கு வலதுபுறம் கண்ணில் படும் இடத்தில் உட்கார்ந்திருந்த என்னைப் பார்த்து தலையாட்ட நான் திருதிரு. எனக்கு பெங்காலி புரியதென்றபிறகு கேள்வி ஆங்கிலமாகி 'எதற்காக சைக்காலஜி?' என்ற போது, அச்சு பிச்சென்று ஆசைக்குச் சேர்ந்தேன்னு சொல்லாமல் ·ப்ராய்ட் தான் இழுத்துட்டு வந்தார் என்றதில் ரெண்டு பேருக்கும் சந்தோஷம். (மூன்று பேரோ? ·ப்ராய்டையும் சேர்த்தி?!)

என்னுடைய அறிமுகம் முடிந்ததும் மொத்தக் கூட்டமும் பெங்காலிக்குத் தாவி விட்டது, இந்துவைத்தவிர. அறிமுகங்களும் ஏன் சைக்காலஜி என்ற கேள்விக்கான விடையும் பெங்காலியிலேயே. ஒன்றிரண்டு முறை எனக்கு புரியவில்லை என்று சொன்ன போதும். ஆசிரியர் மட்டும் அவ்வப்போது என் வெற்றுப் பார்வையை உணரும் சமயங்களில் இரண்டாவது முறையாக ஆங்கிலத்தில். இன்னும் பத்து வகுப்புகள் இது போல கவனித்தால் பெங்காலி எனக்கும் புரிய ஆரம்பித்துவிடும்! சில கலந்துரையாடல்கள், நிறைய குறிப்புகள் அவர் சொல்லச் சொல்ல எழுதிக் கொண்டதுமாக முடிந்தது, ஐந்தரை மணி நேரம் இடத்தை விட்டு அசையாமல். நேரம் போனதே தெரியவில்லை.

'வெள்ளிக்கிழமை பரிட்சை, நான்கு கேள்விகள், நூறு மதிப்பெண்கள். மதிப்பெண் போட எதாவது கொஞ்சமாவது எழுதுங்கள்' என்று சொல்லி ஆசிரியர் விடை பெறும் போது இது எதற்கு ப்ராக்டிகல் பரிட்சைக்கு என்ற கேள்வி வந்தது. முதல் நாள் காச்மூச்சென்று கற்றுக் கொடுத்த ஆசிரியர், பரிட்சை அன்று யாரையாவது கூட்டி வர வேண்டும், அவரை வைத்து இப்போது சொல்லிக் கொடுக்கும் டெஸ்ட்களெல்லாம் செய்து எழுதி கொடுக்க வேண்டும் என்று சொன்னதெல்லாம்? தேவைகளுக்கும் படிப்பவர்கள் வசதிக்கேற்பவும் மாற்றி அமைக்கப் பட்ட பரிட்சை! வெள்ளிக்கிழமை, எழுதும் பழக்கம் மறந்த கையோடு மூன்று மணி நேரம் பரிட்சை எழுதிவிட்டு வந்தாயிற்று.

இப்போது தெரிகிறது இதெல்லாம் அஞ்சல் வழியில் படித்தால் போதாதென்று. சின்னதாய் நான்கு புத்தகங்களிலும் மூன்று நேர்முக வகுப்பிலும் படிக்கும் பாடமா இது?!

Thursday, April 21, 2005

படிக்கப் போன கதை.

கொஞ்ச நாள் முன்னால் எம்.எஸ்ஸி சைக்காலஜி அஞ்சல் வழியே படிக்க, சேரப் போனதையும் அங்கே இருந்த பெண் சிரித்ததையும் எழுதியிருந்தேன். இரண்டு மாதம் முன்பு அதே பெண் தொலைபேசியில் அழைத்து மே மாதம் பரிட்சை இருக்கும் என்றும், வந்து பணம் கட்டிப் போகச் சொல்லியும் தகவல் சொன்னார். போயிருந்த போது அடையாளம் கண்டு கொண்ட அவருடைய மெல்லிய சிரிப்பில் சூழ்நிலை கொஞ்சம் இளகியது போலிருந்தது (சென்ற முறை தேவையில்லாமல் அலைக்கழித்திருந்தார்). பணம் கட்டிவந்த வேகத்தில் புத்தகங்களை தூசி தட்டிப் படிக்கவும் ஆரம்பித்திருந்தேன்.

முதல் பேப்பர் எதிர்பார்த்தது போலில்லாமல் வரட் வரட்டென்றிருந்தது. வெறும் வாசிப்பெல்லாம் சரிப்படாது என்று குறிப்புகள் எடுத்துப் படிக்க ஆரம்பித்திருந்தேன். ஜோராக இல்லையென்றாலும் சுமாராக ஓடிக் கொண்டிருந்தது. தேதி விசாரிக்க தொலைபேசிய போது தான் தெரிந்தது பரிட்சை ஏறக்குறைய ஒரு மாதம் வரை நடக்கும் என்று. அதிலும் தொடங்கும் தேதியும் முடியும் தேதியும் மட்டும் தான் தெரியும், எந்தப் பரிட்சை எப்போதென்று அவர்களுக்கே தெரியாது என்றும். சரியாக அந்த நேரத்தில் நான் ஊரிலிருக்கப் போவதில்லை! இதுவா அதுவா என்றதில் அடிபட்டது பரிட்சைதான்.

அதைத் தெரிவிக்க அழைத்த போது மறுபடியும் அதே பெண். 'எனக்கு அப்ப்பவே தெரியும்' என்று அவர் நினைத்திருக்கலாம்! ' போகட்டும் அக்டோபரில் எழுதிக் கொள்ளுங்கள். ஆனால் ப்ராக்டிகல் வகுப்பெல்லாம் இன்னொரு முறை கிடையாது. 18ம் தேதி, திங்கள் கிழமையிலிருந்து மூன்று நாள் இரண்டு மணிநேரம் நேர்முக வகுப்பிருக்கும்... அடுத்த நாள் பரிட்சை, வந்துவிடுங்கள்' என்றார். ஞாயிற்றுக் கிழமை மத்யானம் வயிற்றுக்குள் சின்னதாக நாலே நாலு பட்டாம்பூச்சி பறந்தது விட்டுப் போனது. 'படிச்சதெல்லாம் போதும் போ' ன்னு விட்டு விடலாமா என்று ஒரே ஒருதரம் தோணவும் செய்தது.

வசூல்ராஜா கமல் மாதிரி, வகுப்பிற்குள் நுழையும் போது என்னை டீச்சர் என்று நினைத்துக் கொள்வார்களோ என்ற பயத்தில் அரைமணி நேரம் முன்னதாக போயிருந்தேன். என் வயதில் ஒரு பெண், கொஞ்சம் கூடக்குறைய வயதில் ஒரு ஆண்... ஏற்கனவே வந்திருந்தனர். அவர்கள் பேச்சிலிருந்து அவர்களும் வகுப்பிற்குத்தான் வந்திருக்கிறார்கள் என்று தெரிந்ததில் கொஞ்சம் சமாதானம்.

அந்தப் பெண் இந்து, கொல்கத்தா பள்ளி ஆசிரியர். ப்ளஸ் டூ மாணவர்களுக்கு கவுன்ஸலிங்கும் செய்வதால் அதற்கு உபயோகமாக இருக்கும் என்று சேர்ந்திருக்கிறார். அந்த ஆண் நந்தா, ஒரிஸ்ஸா, பாலேஷ்வரில் கால்நடை மருத்துவர். கால்நடைகளில் behavior pattern ல் ஆராய்ச்சி செய்யும் உத்தேசம் இருப்பதாகவும் அது தவிரவும் இது ரொம்ப நாள் படிக்க ஆசைப் பட்ட பாடம் என்றும் சொன்னார். 'ஐயோ நானும் அப்படித்தாங்க சேர்ந்தேன், நாங்க பாலேஷ்வரில் இருந்திருக்கிறோம்' என்று சொல்லி அவரை அங்கேயே விட்டு விட்டு, பழைய ஆசிரியர் புத்தியில் இந்துவுடன் கொல்கத்தா பள்ளிகள், அடிக்கடி செய்தித்தாளில் அடிபடும் மாணவர்கள் தற்கொலை, ஆசிரியர்களின் அதிகமான கோபம், பெற்றோர்கள் பற்றிப் பேசிக் கொண்டிருந்த கொஞ்ச நேரத்தில் அப்போதுதான் அறிமுகமானவர்கள் போல நிச்சயம் இல்லை.

கொஞ்ச நேரத்தில் பைஜாமா, ஜிப்பா, ஸ்போட்ஸ் ஷ¤ சகிதமாக ஐம்பது ப்ளஸ் P.S (ஐந்து முறை பாடிபில்டிங்கில் ஆணழகராம். இப்போது கிழ சிங்கம் போல இருந்தார்), அஸன்சாலில் இருந்து உயிரியலில் டாக்டர் பட்டம் பெற்ற, கவுன்ஸலிங்கில் ஆர்வம் உள்ள பியாலி... மொத்தம் ஐந்தே பேர்தான் எங்கள் வகுப்பில் என்று தெரிந்த போது... இது சுவாரசியமான க்ரூப்தான் என்றிருந்தது.

முக்கால் மணி நேரம் தாமதமாக வகுப்பிற்குள் நுழைந்த ஆசிரியர் சொன்ன முதல் வாக்கியம், ' நீங்களெல்லாம் எதற்காக சைக்காலஜியை அஞ்சல் வழியாக படிக்க நினைத்தீர்கள் என்று எனக்குத் தெரியாது, ஆனால் இந்த மூன்று நாட்களில் என்னால் உங்களுக்கு அதிகம் எதுவும் சொல்லிக் கொடுக்க முடியாது, உங்களாலும் பெரிதாக எதுவும் கற்றுக் கொள்ள முடியாது'.

அதைத் தொடர்ந்த அவருடைய எந்த செய்கையும் கற்றுக் கொடுக்கும் எண்ணத்தில் இல்லை. job satisfaction, interest schedule என்ற இரண்டு டெஸ்ட்களைக் கொடுத்து 'இதெல்லாம் நீங்களே செய்யலாம். தெரியாவிட்டால் கேளுங்கள்' என்று சொல்லிவிட்டு கூடவே மற்றொரு புறம் உட்கார்ந்திருந்த ரெகுலர் வகுப்பிற்கு வரும் இரண்டாம் ஆண்டு மாணவர்களை கவனிக்கப் போய்விட்டார். அவரைப் பார்த்து ஆச்சர்யமும் சிரிப்பும் தான் வந்தது. சொல்லிக் கொடுக்கும் பாடத்திற்கும் நடைமுறை வாழ்கைக்கும் தொடர்பிருக்க வேண்டும் என்பது கட்டாயமா என்ன?

ஆசிரியரின் இந்த செய்கைகள் எங்களை சட்டென்று ஒன்றாக்கியது. எல்லோரும் சேர்ந்து செய்து முடித்து பக்கத்து அறையிலிருந்த முதல்வர் காதில் விஷயத்தைப் போட்டு விட்டு கிளம்பினோம். வெளியே வரும் போது கல்லூரி நாட்களின் உற்சாகம் தொற்றிக் கொண்டது போலிருந்தது.

(திங்கள் கிழமையே எழுதியது கடைசி நிமிஷத்தில் காற்றில் கரைந்து போனதில் மறுபடியும் இன்றைக்கு. மீதி எப்போ?... ம்ம்ம்... தெரியலை!)

Tuesday, March 22, 2005

ஒற்றைச் செருப்பு

பிரதான நாற்சந்தி நடுவில் கிடக்கிறது
வெளிர்கருப்பில் குதியுயர்ந்ததொரு
பெண்கள் செருப்பு

காதலன் முதுகில் மார்பு உரைய
விரையும் வேகத்தில்
நழுவியது உணராத
காதலியுடையதாயிருக்கலாம்

வேகப் பேருந்து
செருப்புக்காக நிற்காதென்று
வழியின்றி தவறவிட்ட
பெண்ணுடையதாயிருக்கலாம்

நடுத்தெருவென்றும் பாராமல்
விழி உருட்டி
உரத்த குரலில் ஏசுபவனின்
மனைவியுடையதாயிருக்கலாம்

ஒற்றைச் செருப்போடா
சேரும் இடம்வரை போயிருப்பாள்?

முதலாமது நழுவியது உரைத்தபோதே
மற்றதையும் நழுவவிட்டிருந்தால்
வேறு கால்களிலாவது
ஜோடி சேர்ந்திருக்கலாமென்று
யோசித்திருக்க மாட்டாளா?

நடுத்தெருவில் மல்லாந்து கிடக்கிறது
பரிதாபமாய்

துணையைத் தவறவிட்ட
ஜீவனின் தவிப்பில்
சற்றும் குறைவில்லாமல்

போகிற போக்கில் நானும்
விரலசைக்காமல் கடந்த போதும்
நினைவுகளில் ஒற்றைச் செருப்பின்
விரட்டல்கள் தொடர்கிறது

என்னதான் செய்திருக்க வேண்டும் நான்?

எண்ணிக்கை மறந்து போன
பதில் தெரியாத
இன்னொரு கேள்வி!

ஆகாசத்தில் ஒரு பஸ் சவாரி

திடீர் பயணம். கணவருக்கு நேரமில்லை. கூட நான்(அதுதான் முக்கிய காரணம். அவருடைய பயணச்செலவை அலுவலகம் பார்த்துக் கொள்ளும். எனக்கு?!). அதனால் இந்த முறை பயணம் Air Deccan ல். மற்ற ஏர்லைன்ஸில் பத்தாயிரத்து சில்லரை பயணம் இதில் முவாயிரத்து ஐநூறு மட்டுமே. கட்டணம் குறைவு என்று சொன்னதுமே முதல் யோசனை பாதுகாப்பாக இருக்குமா? என்று தான். ஏற்கனவே பயணம் செய்தவர்கள் தந்த ஆசுவாசத்தில் கிளம்பியாயிற்று.

முதல் வித்தியாசமாய் உணர்ந்தது பயணச்சீட்டைப் பார்த்தது தான். ஒற்றைத்தாள் தான் பயணச்சீட்டு. உள்ளே நுழையும் போதே ஐடென்டிபிகேஷன் ப்ரூப் பார்த்து தான் அனுப்புகிறார்கள். செக் இன் செய்யும் வரை பெரிதாக எந்த மாற்றமும் இல்லை. போர்டிங் பாஸில் இல்லாத இருக்கை எண் எல்லா விஷமமும் செய்தது. விமானத்திற்குள் நுழைய அழைப்பு வந்ததும் தடாலென்று விரையும் கூட்டம்... வரிசையில் முன்னால் செல்ல காட்டும் அவசரம்... பஸ் ஸ்டேண்ட் ஞாபகம் வந்தது. உள்ளே நுழைந்த பிறகு இன்னும் கொஞ்சம் அலைமோதல். சீட் பிடிக்க. முன் வரிசையில் ஒரு கைக்குட்டை கூட போடப் பட்டிருந்தது. எல்லா களேபரங்களையும் விமானப் பணிப்பெண்கள் ஒரு நக்கலான சிரிப்போடு வேடிக்கை பார்த்துக் கொண்டு.

ஏறியதும் நடக்கும் உபசரணைகள் எதுவும் கிடையாது. உட்கார்ந்து கொண்டாயா? ரொம்ப சந்தோஷம். குறுக்க நெடுக்க நடக்காதே... உன் தலைகளை எண்ண வேண்டும். உன் இடத்தில் உட்கார். நேராக உட்கார். பெல்ட் போடு. தண்ணியா? அதெல்லாம் பறக்கத் தொடங்கினப்பறம் தான். வழக்கமான பெல்ட் போட, கழட்ட, பாதுகாப்பு எச்சரிக்கைகள்... எல்லாம் முடிந்து பறக்கத் தொடங்கியதும் லேசாக படபடக்க ஆரம்பித்து அடங்கியது.

பெல்டைக் கழட்டி விட்டுக்கோன்னு சொன்னது தான் மாயம். முன்னால் உட்கார்ந்து ஏற்கனவே அலம்பல் பண்ணிக் கொண்டிருந்த மார்வாடிக் குடும்பம் சாப்பாட்டு மூட்டையை பிரிக்க ஆரம்பித்து விட்டது. பூரி பாஜி வாசம் சுற்றியும் பரவ, கருமமே கண்ணாயினராய் தொடர்ந்தனர். கொஞ்ச நேரத்தில் பணிப்பெண்கள் வழக்கமான சாப்பாட்டு வாகனத்தோடு. என்ன... இங்கே கைல காசு... வாயில நீ கேட்டது. அதுவும் அவர்கள் வைத்திருக்கும் நாலைந்து சமாச்சாரங்களில் ஒன்று. விலையெல்லாம் தேவலாம். காப்பித்தூளும் சக்கரையும் பால் பவுடரும் கலந்து ரெடிமேடாக கிடைக்கும் ஒரு பொட்டலமும் சுடுநீருமாய் கொடுப்பதைக் கலந்து காப்பியாக்கிக் குடித்துக் கொள்ள பத்து ரூபாய். dry சமோஸா, cup o noodles என்று எல்லாம் பக்கா ரெடிமேட் சமாச்சாரங்கள்.

மணியடித்துக் கூப்பிட்டால்... யாரும் வர மாட்டார்கள். அவர்களாக கடக்கும் போது கூப்பிட்டு எதுவும் கேட்கலாம். அடுத்த அரைமணி நேரத்தில் பறந்து கொண்டே ஷாப்பிங் செய்ய ஒரு அழைப்பு. இன்னொரு ட்ராலியை இழுத்துக் கொண்டு எதாவது வேண்டுமா என்று கேட்டுக் கொண்டு. என்ன விற்கிறார்கள் என்றே தெரியவில்லை. கடனே என்று ஒரே தள்ளில் முடித்துக் கொண்டார்கள். ஆங்... சொல்ல மறந்து விட்டேன். எல்லாவற்றிற்கும் முதலில்... அங்கங்கே மேலிருந்து ஒரு சின்ன டெலிவிஷன் ஸ்கிரீன் இறங்கியது. முப்பது ரூபாய்க்கு ஹெட்போன் வாங்கிக் களிக்கலாம் என்று. யாரும் வாங்கியது போல தெரியவில்லை. அநியாயத்திற்கு போரடிக்கும் நிகழ்ச்சி சத்தமில்லாமல் ஓடிக் கொண்டிருந்தது.

வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததில் இரண்டு மணி நேரம் ஓடிப் போய்விட்டது. பூவாட்டம் தரையிரங்கிய விமானம் எல்லா பயத்தையும் விரட்டி விட்டிருந்தது. மிகக்குறைந்த கட்டணம்... இருபத்தி ஒன்பது மணி நேர ரயில் பயணத்தை இரண்டு மணி நேரத்தில் முடித்துக் கொடுத்தது... ம்ம்ம்... திருப்தி.

திரும்பி அதே Air Deccan ல் வரும் போது பழகிப் போயிருந்தது!

Friday, March 18, 2005

மறுபடியும் ஒரு சென்னைப் பயணம்.

ராஜா கல்யாணத்திற்குப் போய் விட்டு வந்த போது இன்னும் கொஞ்ச நாளைக்கு சென்னை போக வேண்டியிருக்காது என்று தான் நினைத்தேன். பத்தாவது வகுப்பு பொது தேர்வு எழுதப் போகும் மகனுக்கு அட்வைஸ், ஆசிர்வாதம் எல்லாம் அப்போதே முடித்துவிட்டுத் தான் வந்தேன் என்றும்.

பின்னொரு சமயம் மகளோடு தொலைபேசியில் பேசும் போது 'பாவம் அவன். அவனோட இந்த முக்கியமான சமயத்தில நாம யாரும் கூட இருக்கப் போறதில்லை'. ஒரு எமோஷனல் ப்ளாக் மெயில் செய்யறோம் என்று தெரியாமலே சொல்லி விட்டுப் போனதில் வழக்கம் போல கொஞ்சம் உறுத்தல். பரிட்சை சமயத்தில் கூடத்தான் இருக்க முடியாது... சரி இன்னொரு தரம் பார்த்து விட்டாவது வரலாம் என்று தான் இந்த பயணம். அதிசயமாக சைட்டை மறந்து (மறந்தெங்கே... அங்கேயும் செல்பேசி விரட்டாமல் இருக்கப் போவதில்லை) மூன்று நாள் சென்னையில் இருக்க கணவரும் முடிவு செய்ததில் இது.

போகிற போக்கில் மகள் சொல்லி விட்டுப் போனதில் நான் எழுதிய பொதுத் தேர்விலிருந்து ஒவ்வொன்றாக நினைவு வந்து விட்டுப் போனது. இதை எழுத வைத்தது மகளின் பொதுத் தேர்வு நினைவுகள்.

அவள் எழுதியது ஒரிஸ்ஸாவில். கணவர் அப்போது சூரத்திற்கு மாற்றல் ஆகிப் போய் விட்டிருந்ததால் வீடு பெரிய ஹல்லா குல்லா இல்லாமல் வழக்கம் போல தான் இருந்தது. அப்பப்ப கொஞ்சம் டீவி, கொஞ்சம் அரட்டை, ராத்திரி நேரங்களில் அவள் படித்துக் கொண்டிருக்க நான் இணைய அரட்டைகளும், புத்தக வாசிப்புமாய்.

பரிட்சை நாட்களில், தடுக்கி விழும் தூரத்தில் இருக்கும் பள்ளிக் கூடத்திற்கு ஒரு மணி நேரம் முன்னாலேயே போயிருப்பாள். நான் அரை மணி நேரம் முன்னால் பள்ளிக் கூடத்தில் இருக்க வேண்டும் என்பது அன்புக் கட்டளை. போட்டது மகளல்ல. அபிஷேக். அவளுடைய நண்பன். ராத்திரி நேரம் மூன்று மணிக்கும் நாலு மணிக்கும் அலாரம் வைத்து, அடிக்கும் போது ஒரே போடு போட்டு விட்டு தூங்கிப் போன நாட்களிலெல்லாம் போன் செய்து எழுப்பிப் படிக்க வைத்தவன். 'இப்படித் தூங்கறீங்களே?' என்று ரெண்டு பேருக்கும் டோஸ் விடுபவன்.

பரிட்சை தொடங்கிய பின் பள்ளிக் கூடத்திற்குள் நுழையும் போது பார்க்க வேண்டும். கடைசி நேர உருப்போடல்கள், குறுக்கும் நெடுக்குமாய் வேக வேகமாய் எதற்கோ நடந்து கொண்டு, யாராவது ஒரு கேள்வி கேட்க திடீடென்று அதற்கு பதில் தேடி எல்லாரும் அலைமோதுவது, கண்ணில் பட்ட அம்மா அப்பாக்கள் காலெல்லாம் தொட்டுக் கும்பிட்டு...

நான் உள்ளே நுழையும் போது அவன் எங்கேயிருந்து வருகிறான் என்று தெரியாது... சட்டென்று பக்கத்தில் வந்து கையைப் பிடித்துக் கொள்வான். கையில் எந்த புத்தகமும் இருக்காது. எதையும் அந்த நேரத்தில் படிக்க மாட்டான். அங்கே நடக்கும் ஆர்ப்பாட்டங்களை எல்லாம் ரெண்டு பேரும் அமைதியாக பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருப்போம். எங்கிருந்தாவது மகள் குரல் கேட்கும், 'வந்துட்டியா?' என்று. உள்ளே நுழைய பத்து நிமிஷம் இருக்கும் போது ஒரு தரம் பக்கத்தில் வந்து ஒன்றிரண்டு வார்த்தை பேசி விட்டுப் போய் விடுவாள்.

உள்ளே போக கடைசி மணி அடிக்கும் வரை அபிஷேக் கூடவே உட்கார்ந்திருப்பான். மணி அடித்ததும் அமைதியாக எழுந்து bye aunty என்று சொல்லிவிட்டுப் போவான். அவன் வகுப்புக்குள் நுழையும் வரைக்கும் நான் அங்கேயே நிற்க வேண்டும். உள்ளே போகும் போது ஒரு தரம் திரும்பிப் பார்க்கும் போது நான் அவனைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். இது எதுவும் முன் கூட்டியே பேசி முடிவு செய்ததல்ல... தானாகவே.

இப்போதும் ஒவ்வொரு பரிட்சைக்கும் முன்னால் புவனேஷ்வரிலிருந்து ஒரு மிஸ் கால் வரும். கைவேலையை முடித்துக் கூப்பிடலாம் என்று நினைப்பதற்குள் நாலைந்து முறை குரல் கொடுத்து விடும். சில நேரங்களில் கொஞ்சம் கோபத்தோடு கூப்பிட்டால்... sorry aunty என்று தொடங்கும் உடையாடலில் கோபப்படத் தோணாதுதான்.

இந்த முறை மகனைப் பார்க்கும் போது இதெல்லாம் நினைவு வரும். ஒருவேளை சொல்லக் கூட செய்யலாம். அவனும் பரிட்சை ஹாலுக்குள் போவதற்கு முன் திரும்பிப் பார்க்க நினைப்பானோ?

Wednesday, March 16, 2005

கோவிந்தா... கோவிந்தா!

ஒன்பது வருஷம் முன்பு சிமெண்ட் ப்ராஜக்ட் ஜெட்டிக்காக(jetty) குஜராத்தில் இருந்தோம். அப்போ அந்த ப்ராஜக்ட் காலனியில் அவர்களுக்காக ஒரு DAV பள்ளிக்கூடம் ஆரம்பித்தார்கள். பிரின்ஸிபல், இன்னும் சில பதவிகளுக்கு வெளியில் இருந்து ஆட்கள் வந்தார்கள். மற்ற தேவைகளுக்கு அந்த ப்ராஜக்ட் ஆபிஸர்களின் மனைவிகளில் B.Ed படித்தவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து, மற்றவர்களை அப்புறமாவது சேர்த்துக் கொண்டார்கள்.

பள்ளிக்கூடம் எட்டாவது வகுப்பு வரை மட்டும். ஏனென்றால் அதற்கு மேல்பட்ட வகுப்பு படிக்கும் குழந்தைகள் யாரும் அப்போது காலனியில் இல்லை. எட்டாவது வகுப்பு மாணவி, பெயர் நினைவில்லை, எப்பவும் முதல் ரேங்க் தான். ஏனென்றால் அந்த வகுப்பில் அவள் மட்டுமே. ஒரு ஸ்டூடண்ட்க்காக அந்த வகுப்பு நடந்தது! ஆபிஸர் பொண்ணில்லையா?!

அப்போது என் மகன் முதல் வகுப்பில். அவனுடைய ஆசிரியர் M.A(Eng), B.Ed. ஆந்திராக்காரர். தெலுங்கு பேசுவது போலவே ஆங்கிலமும் பேசுவார். அதே accent ல். கொஞ்ச நாள் என் மகனும் அவரைப் போலவே பேசுவதைப் பார்த்துக் கொண்டு வீட்டில் நாங்கள் முட்டிக் கொண்டதில் அவன் யாரைப் போல பேச முயற்சி செய்வது என்று குழம்பியது என்னவோ நிஜம்.

காலனி லேடீஸ் க்ளப்பில் அவர் ஆங்கிலத்தை கேலி செய்து பேசும் போது 'அவர் M.A(Eng)... தெலுங்குல' என்று. கேலி செய்து சிரித்ததாக நினைத்தது... இன்னைக்குக் காலையில் அந்த கோவிந்தாவைக் கூப்பிட வைத்து விட்டது!

University test of English, written in Telugu

Pratispardhito yela meeru vyavaharistharu?
Samajam lo prati paurudu cheyalsina kartavyamulu yevi?

That’s English for you if you are in Guntur.

And that’s only two of the questions in the Communicative English paper that Bachelor of Education students faced in some parts of the Andhra Pradesh town.
Over 75 of them responded in like manner, writing answers in Telugu to questions in that language, like those given above that should have read:

How will you approach your opponent and win him over?
What are the basic duties of a citizen towards society?

Acharya Nagarjuna University of Guntur handed out the Telugu translation by mistake during the B.Ed final examinations that got over on Saturday.

The varsity has the practice of providing question papers in Telugu for all subjects other than a student’s main subject and the sciences. It has even allowed answers in Telugu in the Sanskrit and Hindi papers.

“The Telugu translation is given only to help students understand the questions. It was not meant that they should answer in Telugu,” said Suresh Alapati, a lecturer who is involved in the examination process.

The students maintained they did nothing wrong because the paper was in Telugu. “There was no mention of restrictions in the question paper on answering it in Telugu,” said Gopinath Rao, one of those who answered in their mother tongue.

The practice, according to senior faculty member Rammohan Rao, was restricted to non-English subjects.

“The answers in Telugu have defeated the very purpose of their studying Communicative English,” rued a professor of the university.

The subject was started two academic sessions ago for non-English-medium students in all courses so they could write their bio-data and correspondence in English, a senior faculty member told The Telegraph over phone.

The varsity’s other students who received the English version and answered in that language are worried about the fallout of the fiasco.

“We might lose marks along with those who wrote in their mother tongue,” said Prabhakar, a 21-year-old student of the local A.C. College.

The practice, however, is nothing new, according to Vedamurthy Gopalan, a lecturer of the university.

MA English students in most of Andhra’s universities are allowed to write answers in Telugu, he said.

“The practice continues even today to help students from the Telugu medium,” he added.

The B.Ed students have found support in Lok Satta, an NGO that champions people’s issues. It has urged the university to correct the error by passing all students who answered in Telugu.

G.S. RADHAKRISHNA IN HYDERABAD

(நன்றி - The Telegraph)

அடப்போங்கப்பா!