Showing posts with label நிகழ்வுகள்/குறிப்புகள். Show all posts
Showing posts with label நிகழ்வுகள்/குறிப்புகள். Show all posts

Thursday, June 11, 2015

இடப்பெயர்ச்சி பலன்கள் - 12/ கடைசி.

கடந்த ஐந்து மாதங்களாக கொல்கத்தாவை என் ஊர் என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன். கொல்கத்தா... கோவில்தானா என்று திகைக்க வைக்கும் காளிகாட், கங்கைக்கரை தக்ஷினேஷ்வர், அந்த நாளைய கல்கத்தாவை ஓவியங்களாய் பதிந்து வைத்திருக்கும் விக்டோரியா மெமோரியல், எல்லோருக்குள்ளும் இழையோடும் ரபீந்திர சங்கீத், சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம் பெருமையோடு நினைவுகூறும் ரே, பாதாள ரயிலும், பேருந்துகளும், டாக்ஸிகளும், ஆட்டோ, சைக்கிள் ரிக்ஷாக்கள் போதாமல் இன்னும் ஆள் இழுக்கும் கை வண்டி,  நட்டநடு சாலையில் ஆமை வேகத்தில் நகரும் அரதப் பழசான ட்ராம், அது பாழாக்கிப் போட்டிருக்கும் பாதைகள்...

கணவர் உபயோகத்தில் இறகாட்டம் மிதந்த எங்கள் கார், இங்கே ஓட்டுனர் மற்றும் கொல்கத்தா சாலைகளின் உபயத்தில் கமர்கட்டாய் உருளுகிறது. மூன்று வருடங்களுக்கு முன்பு சும்மா எட்டிப் பார்க்க வந்திருந்த போது இருந்த அளவு இப்போது போக்குவரத்து நெரிசல் இல்லைதான். ஆனாலும் அதற்குப் பழகிய ஓட்டுனர்களின் பொறுமையின்மை நேரம் வாய்க்கும் போதெல்லாம் காதைப் பிளக்க வைக்கிறது. அடிக்கும் மஞ்சளில் குட்டி யானைகளாய் ஓடும் டாக்ஸிகள். அளவுக்கு அதிகமாக மாசுப்பட்டிருக்கும் காற்று மண்டலம்.

இன்னமும் கொல்கத்தா என்ன மாதிரி ஊர் என்று புரிந்து கொள்ள முடியவில்லை. ஆச்சர்யங்களாய் நிறைந்திருக்கிறது. அதீத பக்தியும் நவீனமும் கலந்து கட்டி ஒவ்வொரு நேரம் ஒவ்வொரு முகம் காட்டுகிறது. மெட்ரோவின் பளபளப்பின் அடிநாதமாய் கலாச்சார சாயம் குறைவில்லாமல். செழிப்பும் வறுமையும் அதிக இடைவெளியில்லாமல் ஒரே ஓவியத்தில் அதனதன் இருப்பை நிலைநாட்டிக் கொண்டு.

பள்ளிக்கூடம் போகும் குழந்தைகள் வீட்டு வாசலில் ஆட்டோ ஏறி டாட்டா சொல்லிப் போகும் பழக்கம் முழுதாக வரவில்லை. இன்னும் அம்மாவோ வீட்டு வேலைக்காரரோ போய் விட்டு, கூட்டி வருகிறார்கள். பத்திரக்குறைவு தான் காரணம் என்பது ஒரு அம்மாவிடமிருந்து கேள்விப்பட்டது. பள்ளிக்கூடம் விடும் நேரம் ஒருவர் மேல் ஒருவர் முட்டிக் கொண்டு நெருக்கியடித்து வாசலில் காத்திருக்கும் பெரும் கூட்டம் எனக்குப் புதிதாய் இருக்கிறது.

ஷ சப்தம் அதிகமாய் ஒலிக்கும் பெங்காலி பாஷை. திட்டினால் கூட இனிமையாய் இருக்கும் என்ற பெருமை பெங்காலியர்களுக்கு. ரொஷகொல்லாவும் சந்தேஷ¤ம் உருளைக்கிழங்கும் மீனும். உருளைக்கிழங்குக்கு பேர் கூட வைத்திருக்கிறார்கள்... 'சந்திரமுகி'! மீனைக் கொண்டாடுவதிலும் குறைவில்லை. வந்த புதிதில் கவனத்தை ஈர்த்த ஒரு நகைக்கடை விளம்பரம் 'இரண்டாயிரம் ரூபாய்க்கு நகை வாங்கினால் ஒரு ·ப்ரெஷ் ஹில்ஸா இலவசம்!' ஹில்ஸா வேறொன்றுமில்லை, மீன்தான்! நகைக்கடையில் இருந்து வெளியே வரும் போது ஒரு கையில் நகை, இன்னொன்றில் மீன்... கற்பனை செய்து பார்க்க கொஞ்சம் வினோதமாகத்தான் இருந்தது.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க... கொல்கத்தாவாசிகளின் அவசர உணவாகிவிட்ட 'ரோல்'. மைதா மாவினால் செய்த ஒரு பெரிய, சற்றே தடிமனான ரொட்டி. முட்டை போட்டோ, அல்லாமலோ, உள்ளே காய்கறியோ, கோழியோ, பனீரோ, இறைச்சியோ அடைத்து உருட்டி, கீழே ஒரு பேப்பர் நாப்கின் சுற்றி ரெடியாகி விடுகிறது. குறைந்த விலை. காத்திருக்கும் கூட்டத்தில் கூலிக்காரரும், டை கட்டின ஆசாமிகளும்.

தலைமுறை தலைமுறையாக இருக்கும் குஜராத்திகளும் மார்வாடிகளும் நேப்பாளிகளும். ப்யூட்டி பார்லர்களில் பெரும்பாலும் நேப்பாளிப் பெண்கள் ஆதிக்கம். எவ்வளவு பூஜா கொண்டாடுவீர்கள் என்ற என் கேள்விக்கு மாதம் ஒவ்வொரு பூஜாவின் பெயர் சொல்லிக் கொண்டு வந்த சிகை அலங்காரப் பெண்ணின் வரிசையில் சுபாஷ் ஜெயந்தியும் ஒரு பூஜா! என்னுடைய ஆச்சரியத்தைப் பார்த்து அதை இன்னும் உறுதிப்படுத்திச் சொல்கிறார்.

கொல்கத்தா பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. சிக்னலில் காத்திருந்த ஒரு நாள் சுவரொட்டியில் கண்ணில் பட்ட தெரசாவின் பெயர், மறந்தே போய் விட்ட எதையெதையோ நினைவு படுத்தியது. என்னுடைய ஐந்தாம் வகுப்பு அரைப்பரிட்சை ஜிகே பேப்பர் திருத்தின ஆசிரியர் தான் காரணமாயிருக்க வேண்டும். அந்தப் பரிட்சையில், கஷ்டப்படுபவர்களுக்கு எப்படி உதவுவாய் என்றோ என்னவோ ஒரு கேள்வி. கண் தெரியாதவங்களுக்கு உதவி செய்வேன். அவங்களுக்கு அப்படி, இவங்களுக்கு இப்படி என்று ஏதோ பதில் எழுதிய ஞாபகம்.

மூன்றாம் வகுப்பு வரை பக்கத்திலிருந்த நகராட்சிப் பள்ளியில் தான் படிப்பு. வீட்டுப் பாடமெல்லாம் எதுவும் கிடையாது. சாயந்திரம் பூராவும் விளையாடி விட்டு, ராத்திரி சாப்பாடு ஆனதும் வாசலில் பாய் போட்டு நானும் பாட்டியும் நிலாவையும் நட்சத்திரத்தையும் பார்த்துக் கொண்டே படுத்திருந்தது. திடீரென்று அடுத்த வருஷம் (தமிழ் மீடியம்னாலும்) கான்வென்ட்டில். முட்டி மோதி நாற்பதைத் தாண்டுவதே பெரிய விஷயம். அந்த அரைப் பரிட்சை ஜிகே பேப்பரில் 85 மார்க். அதுவும் வகுப்பில் முதல் மார்க். அப்போதிருந்து தான் சமூக சேவை என்று ஏதோ உள்ளுக்குள்ளே உதித்திருக்க வேண்டும். பெரியவளானதும் தெரஸா மாதிரி ஆகப்போகிறேன். அது செய்யப் போகிறேன், இது செய்யப் போகிறேன் என்று ஏதேதோ கனவுகள். ஆனால் யார்கிட்டயும் மூச்சு விட்டதில்லை. கேலி செய்வார்கள் என்ற பயம் தான்.

கல்யாணமே பண்ணிக்க போறதில்லை என்று நினைத்ததற்கு படிக்க படிக்கவே கல்யாணம். அதைத் தொடர்ந்த பொறுப்புகள், ஓட்டங்கள். என்னுடைய நேரங்கள் எல்லாருடையதாகிப் போக... என்னுடைய முடிவுகள் எல்லோரையும் அனுசரித்ததாக. இப்போது சட்டென்று பொறுப்புகள் எதுவும் இல்லாமல் போய்விட்டது போலிருக்கிறது. பதினெட்டு வருடங்களுக்கு முன் அப்பாவின் நிழலிலிருந்து கேள்வியே இல்லாமல் கணவருடைய நிழலுக்கு மாறிய நான்...
இப்போதைய நான்... ரொம்பத்தான் மாறிவிட்டிருக்கிறேன். வாழ்க்கையும். இப்போது எல்லா நேரமும் என்னுடையதாய். ஆனால் எதுவும் செய்ய இஷ்டமில்லாமல் விலகி நின்று கை கட்டி வேடிக்கை பார்க்கிறது மனம். ஏனோ இந்த முறை அதைத் தொந்தரவு செய்யத் தோணவில்லை.

ஆனாலும் எதையோ எதிர்பார்த்திருக்கிறது. இந்த முறை யாரால், எப்படி, என்ன என்று. சென்ற முறை லேடிஸ் க்ளப்பில் சந்தித்த மிஸஸ். மொஹந்தியோ, கணவருடைய அலுவலக விருந்தில் சந்திக்கும் யாராவதோ, வழக்கமாக போகும் சிட்டி சென்டரில் எதிர்படும் யாரோ, எதாவது செய்தித்தாள் விளம்பரமோ, என்னுடைய அஞ்சல் வழி கல்வியோ... எதாவது என் பாதையை மாற்றி எனக்கு எதையாவது அறிமுகப்படுத்தலாம். காத்திருக்கிறேன், அந்த முகம் தெரியாத மனிதருக்கு. அந்த மாற்றத்திற்கு.

Wednesday, June 10, 2015

இடப்பெயர்ச்சி பலன்கள் - 11

வழக்கமாக எல்லா ஊர்களையும் போலத்தான் பள்ளிக்கூடம் தேடும் படலம் தொடங்கியது. வழக்கம் போல பெயருக்கு ஒரு நுழைவுத் தேர்வு, டொனேஷன் பேரம், ஒரு நேர்முகத் தேர்வு. வழக்கமான கேள்விகள்... வழக்கமான பதில்கள். எல்லாம் முடிந்து, இனி கிளம்ப வேண்டியது தான் என்று எழுந்திருக்கும் போது தான் வழக்கமே இல்லாமல் அது நடந்தது.

"எங்கள் பள்ளிக் கூடத்தில் ஆசிரியராக பணியாற்ற விருப்பமா?"

அந்தக் கேள்வியை நம்ப முதலில் சிரமமாக இருந்தது. இதற்கு முன்னால் இப்படிஒரு கேள்வியை யாரும் கேட்டது இல்லை. கேட்டிருந்தாலும் கொஞ்சம் யோசிக்க வேண்டியிருந்திருக்கும். ஆனால் இப்போது அப்படி ஒரு அவசியமில்லாமல் இருந்தது. ஒரு நிமிட தயக்கத்திற்குப் பிறகு சட்டென்று சரி சொன்னது மட்டுமல்லாமல் கடைசியில் எவ்வளவு சம்பளம் கொடுப்பீர்கள் என்று கேட்டது நானா என்று இப்போதும் ஆச்சரியம்! என்னுடைய நேர்முகத் தேர்வு உடனே ஆரம்பித்தது. சின்னச் சின்ன ஒன்றிரண்டு கேள்விகளுக்கு ஏதோ நீள நீளமாய் பதில் சொல்ல, கொஞ்சம் குழப்பத்தோடு பார்த்துக் கொண்டிருந்த கணவரின் முகத்தைத் தவிர வேறெதும் சரியாக நினைவில்லை.

சீக்கிரம் தெரிவிக்கிறோம் என்று சொல்லி அனுப்பிய போது அந்த காத்திருத்தல் பழக்கமில்லாததாக இருந்தது. வீட்டில் தொலைபேசி இணைப்பு கிடைத்திருக்கவில்லையானதால் கணவரின் செல்பேசி எண்ணைத்தான் கொடுத்திருந்தோம். ஒரு வாரத்தில் நான் கோவை சென்றுவிட, அந்த நினைவு சற்றே விலகியிருந்தது. ஆனாலும் கணவரோடு பேசும் போதெல்லாம் கேட்க மறக்கவில்லை. திரும்பி வந்த ஒரு வாரத்தில் பள்ளிக்கூடம் தொடங்கி விட்டது. எந்த அழைப்பும் வரவில்லை! ஒன்றிரண்டு முறை நானாவது கூப்பிட்டு விசாரித்திருக்க வேண்டுமோ என்று அப்புறமாகத்தான் உதித்தது! ஆனாலும் நேரம் கடந்து விட்டது. வேலைக்குப் போகப் போகிறேன் என்ற நினைப்பு சுகம் மட்டுமே அனுபவிக்கக் கிடைத்தது.

எல்லாம் மறுபடியும் வழக்கம் போல. காலையில் எல்லோரும் கிளம்பிப் போய் விட டிவி, இணையம், அழைப்பு மணி அடித்து எட்டிப் பார்க்கும் பால்காரர், வேலைக்காரம்மா, பள்ளிக்கூடத்தில் இருந்து திரும்பி வரும் பிள்ளைகள், ஒவ்வொருவராக டியூஷன் வகுப்புகளுக்கு செல்வதும், திரும்பி வருவதுமாய்... நாள்பூராவும் இதுவே. இடையில் வந்த ஆசிரியர் வேலை ஆசை எல்லாவற்றையும் கலைத்து போட்டு விட்டது போலிருந்தது. இரண்டு மூன்று மாதம் அந்த பாதிப்பில் வேறு வேலைகள் கூடத் தேடி... பின் மெல்ல எல்லாம் இயல்பானது. மறுபடியும் பழைய வாழ்க்கை பழகிப் போனது.

டிசம்பர் மாதம் முதல் வாரம் ஆபிஸிலிருந்து வந்த கணவர் 'சொல்லவே மறந்துட்டேன்! ஸ்கூல்ல இருந்து உன்னைக் கேட்டு போன் வந்தது. வேலையில சேர விருப்பம்னா ஞாயிற்றுக் கிழமை காலைல வரச் சொன்னாங்க' என்ற போது சந்தோஷத்தை அடக்கி வைப்பது சுலபமாயிருக்கவில்லை. இந்த முறை என்னை ஏமாற்றாமல் வேலை கிடைத்து விட்டது. முப்பத்தி ஐந்து வயதில் முதல் முதலாக வேலைக்குப் போகும் அனுபவம்! இரண்டாம் வகுப்புக் குழந்தைகளுக்கு ஆசிரியராக. இந்த அனுபவங்களை ஏற்கனவே கொஞ்சம் எழுதியிருக்கிறேன் என்றாலும் எப்போது யோசித்தாலும் புதிது புதிதாய் எதாவது நினைவுக்கு வரத்தான் செய்கிறது!

முதல் நாள்... குழந்தைகளுக்கு அரைப் பரிட்சை தொடங்கும் நாள். ஐம்பது மிரண்ட முகங்களுக்கு முன்னால் ஐம்பத்தி ஒன்றாக நான். பேப்பரைக் கொடுத்து, கேள்விகளை எழுதிப் போட்டு, என் கையெழுத்து புரிகிறதா என்று திரும்பத் திரும்பக் கேட்டு, கடைசி நிமிஷம் வரை எழுத நேரம் கொடுத்து... மணி அடித்ததும் எல்லோரும் அவசர அவசரமாக பேப்பரை வீசிவிட்டு ஓடி விட எண்ணிப் பார்த்தால் நான்கு பேப்பர் குறைந்திருந்தது! வரிசைப் படி முதலிலேயே வாங்க ஆரம்பித்திருக்க வேண்டும் என்ற சாதாரண யோசனை கூட எனக்கு இல்லாதது உரைத்தது.

தொடர்ந்த நாட்களில் என்னுடைய தவறுகளில் இருந்து நிறைய கற்றுக் கொள்ள முடிந்தது. ஒரு ஆசிரியர் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று ஒரு அம்மாவாக எதிர்பார்த்தேனோ அதையெல்லாம் செய்வது எவ்வளவு சிரமம் என்று அப்போது தான் புரிந்தது. நான் செய்ய நினைத்ததையும் செய்ய முடியாமல் முடிக்க வேண்டிய பாடங்களும் மற்ற வேலைகளும் ஆக்ரமித்துக் கொண்டது.

அந்த நாட்களில் என் குழந்தைகள் என்னை எனக்கு அடையாளம் காட்டினர். எனக்கு என்ன தெரியும் என்ன தெரியாது என்பதை உணர வைத்தனர். அவர்களுடைய உலகத்தை எட்டிப் பார்க்க, உட்கார்ந்து ரசிக்க எனக்கு அனுமதி கிடைத்தது. சந்தோஷமான நாட்கள் சொந்தமானது. என்னுடைய ஆர்வமும் வேகமும் சிலரைத் தொற்றிக் கொண்டது என்றாலும் என்னால் எந்த மாற்றமும் செய்ய முடியாத குழந்தைகளும் இருந்தன.

பள்ளிக் கூடத்தில் வேண்டாமென்று விலக்கியது போக மீதமான பாடங்களே அந்த வயதுக் குழந்தைகளுக்கு அதிகம் என்று எனக்குப் பட்டது. ஒரு நாளின் ஒரு வகுப்பைக் கூட வேறெதற்கும் உபயோகப் படுத்த முடியாத வகையில் இழுத்துப் பிடித்த பாடத்திட்டங்கள். பாடங்களைத் தாண்டி அந்த குழந்தைகளைப் புரிந்து கொள்ள நேரமில்லாதது பெரிய குறையாக இருந்தது. குழந்தைகளை விட அவர்களின் பெற்றோர்கள். அவர்களுடைய அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்பு. அது திருட்டுத்தனம் செய்தாவது முதல் மதிப்பெண் வாங்கத் தூண்டியதும்... ஆறேழு வயதுக் குழந்தைகளுக்கு இத்தனை சிரமங்கள் தேவையேயில்லை.

நான்கு மாதங்கள் முடிந்தது. நிறுவனத்தின் சமூகத்தைச் சாராதவர்கள் பதினொரு மாத ஒப்பந்தத்தில் வேலைக்கு அமர்த்தப் பட்டிருந்தோம். மறுபடியும் புதிதாக விண்ணப்பித்து தேர்வு செய்வது நடைமுறை. ஏப்ரல் மாதம் கடைசி தேதி வெளியே வரும் போது அடுத்த வருஷம் இந்த வேலை எனக்கு எவ்வளவு அவசியம் என்று எப்படி, யாருக்குச் சொல்லிவிட்டு வர என்று தெரியவில்லை. வெளியே வந்த எல்லோருக்கும் ஒரு வகையில் வேலை அவசியமாயிருக்கையில் எனக்கு வேறு வகையில் அத்தியாவசியமாயிருந்தது.

ஜூன் முதல் வாரம் ஊரில் ஒரு திருமணத்தில் கலந்து கொண்டு தாமதமாக வந்த போது இந்த முறையும் எந்தத் தகவலும் இல்லை. ஆனால் இந்த முறை எந்தத் தயக்கத்திலும் இழக்க விரும்பாமல் போய் கேட்ட போது எனக்கு டபுள் ப்ரமோஷன் கிடைத்திருந்தது! நான்காம் வகுப்பு ஆசிரியராக. பாதிக் கண்களில் உனக்கு எப்படி அந்த வகுப்பு கிடைத்தது என்ற கேள்வி... சிலரின் ஐயோ பாவம் என்ற பார்வையும். பிறகுதான் தெரிந்தது என் வகுப்பில் பிரின்ஸிபலின் மகள் படிப்பது!

இரண்டே வயது பெரிய இந்தக் குழந்தைகள் என் எண்ணங்களை எல்லாம் தூள் தூளாக்கினர். சொல்லிக் கொடுக்க வேண்டிய வகையில் சொல்லிக் கொடுத்தால் எதையும் கற்றுக் கொள்வோம் என்று நிரூபித்தார்கள். எங்கேயோ எப்போதோ மேலோட்டமாக படித்திருந்த விபரங்களை அவர்களுக்காக என்னைத் தேடித் தெளிவாகத் தெரிந்து வரச் செய்தார்கள். கேள்விகள்... கேள்விகள்...! இப்போதும் அதே விரட்டும் பாடத்திட்டங்கள் இருந்த போதும் நாங்கள்(நானும் என் மாணவர்களும்) நேரம் ஒதுக்கப் பழகியிருந்தோம்.

ஒரு முழு வருடம். நிறைய சந்தோஷங்கள். கொஞ்சம் மன வருத்தங்கள். நிர்வாகத்தின் குளறுபடிகள். பணம் புகுந்து விளையாடி காண்பிக்கும் வேடிக்கைகள்... என்னால் எதுவும் செய்ய முடியாத போது அதில் ஒரு பங்காக இருக்க விரும்பவில்லை. அடுத்த வருடத்திற்கு உயர்நிலை வகுப்பிற்கு விண்ணப்பித்திருந்த போதும், அதற்கான முறையான கல்வித்தகுதி இல்லாத போதும் எனக்கு அந்த வேலையைக் கொடுக்க நிர்வாகம் சம்மதித்த போதும்
ஏற்கவில்லை. ஒருவேளை நிர்வாகத்தின் இடத்தில் இருந்து பார்த்தால் அவர்கள் நிலமை புரிந்திருக்குமோ என்னவோ?!

மொத்ததில் சூரத் வாழ்க்கையில் அளவில்லாமல் அடைந்தது மட்டுமே. இழந்தது... எதுவுமில்லை.

Tuesday, June 09, 2015

இடப்பெயர்ச்சி பலன்கள் - 10

ஒரிஸ்ஸாவில் இருந்த இரண்டு வருடங்களில் அது ஏனோ ஒரு துண்டிக்கப் பட்ட இடம் போலவே இருந்தது. ஒரு பத்து வருஷம் மெதுவாக நடந்து கொண்டிருப்பது போல. புவனேஷ்வர் கூட ஒரு மாநில தலைநகருக்கான லட்சணங்கள் எதுவும் இல்லாமல். சுத்தமான காற்று, விலைவாசி குறைவு, எளிமையாக மக்கள்... எல்லாம் நல்லதாகவே இருந்த போதும் எதுவோ ஒன்று ஒட்டாதது போன்ற உணர்வு. தனித்திருப்பது போன்ற தோணல். அது விரட்டின விரட்டல் முதல் முதலாக இணையத்திற்குள் நுழைய வைத்தது.

நல்ல நட்பு வேண்டும் என்ற தேடலோடு தொடங்கிய பயணத்தில் ஆரம்பத்தில் அதைத் தவிர எல்லாம் கிடைத்தது. அந்த நாட்களில் ஒரு நண்பர் முலம் 'தினம் ஒரு கவிதை' அறிமுகமானது. அவரே ஆர்கேகே யின் சுட்டியும் தந்தார். எனக்கு எவ்வளவு பெரிய வாசலைத் திறக்கிறார் என்று அப்போது நிச்சயம் நினைத்திருக்க மாட்டார்.

என்னுடைய முதல் கவிதை... அதைப் பிரித்துப் போட்டு சொல் சிக்கனம் சொல்லித்தந்தது... முதல் கதை... என்னவோ என்னுடைய எழுத்தில் 'நான்' தெரியாமல் மறைந்து சாமர்த்தியமாக எழுதிக் கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டிருந்த என் நினைப்பைப் போட்டு உடைத்து என்னை என் கூட்டிலிருந்து வெளியே இழுத்தது... இப்படி தெரிந்தோ தெரியாமலோ எனக்குள் நிறைய பாதிப்பை ஏற்படுத்தியவர்கள். இதுவெல்லாம் மட்டுமே ஒரிஸ்ஸா வாழ்க்கையின் கொஞ்சமே கொஞ்சம் நிறங்கள்.

பிள்ளைகள் பாடங்களோடு போராடிக் கொண்டிருக்க, ரொம்ப ஜோராக தொடங்கிய வேலை ஏதேதோ அனுமதி கிடைக்காததால் ஆறு மாதத்தில் நின்று போய் விட ஒரு வருஷம் வீட்டில் இருந்து போரடித்துப் போயிருந்த கணவர் சூரத்திற்கு மாற்றல் கிடைத்ததும் ஒரு ஜனவரியில் 'விட்டால் போதும்' என்று கிளம்பிப் போய்விட பரிட்சை முடியும் வரை நாங்கள் அங்கேயே இருக்க வேண்டி வர... அந்த நாட்களில் இணையக் குழுக்கள் தான் எல்லாமுமாயிருந்தது.
எங்கேயோ ஒரு ஓரத்தில் அமர்ந்து எல்லாவற்றையும் வெறும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.

மே மாதம் பரிட்சை முடித்து பாலேஷ்வரிலிருந்து கிளம்பும் போது வழக்கமாக வரும் யாரையாவது பிரிந்து போகும் வருத்தம் முதல் முறையாக இல்லாமல் போனது. மனிதர்களோடு நெருங்கியது காந்திதாமோடு முடிந்து விட்டது. எதிலும் ரொம்ப பிடிப்பில்லை. யார் மீதும் பெரிய ஒட்டுதல் இல்லை. அப்படி நான் ஆகிப் போய் விட்டது சரியோ, தவறோ... ஆனால் அப்படித்தான்!

பத்து வருடங்கள் கழித்து மறுபடியும் சூரத். முதல்முறையாக ஏற்கனவே இருந்த இடத்திற்கு மீண்டும். நாங்கள் போய்ச் சேர்ந்த போது வெறும் நூறு கிலோமீட்டர் தூரத்தில் பரோடாவும், கோத்ராவும் கொதித்துக் கொண்டிருந்தது. மறுபடியும் எத்தனை கலவரங்களோ...எத்தனை சாவுகளோ என்ற யோசனையோடு தான் தொடங்கியது. ஆச்சர்யமாக சூரத்தில் அதன் நிழல் கூட இல்லை.

பரட்டைத் தலையும் மூக்கு ஒழுக்கலுமாய் நாங்கள் விட்டுப் போன சூரத் இடையில் வந்து போன ப்ளேக்கில் முற்றிலும் மாறி விட்டிருந்தது. எங்கே பார்த்தாலும் பளிச்சென்று சுத்தமாய், சாலைகள் அகலமாய், புதிய பாலங்கள், கொழிக்கும் செல்வம். புதிது புதிதாய் விரிந்திருக்கும் குடியிருப்புகள்... ஷாப்பிங் சென்டர்கள்... திரும்பின பக்கமெல்லாம் விதவிதமாய் பாஸ்ட் புட் ஜங்சன்கள்... கூட்டம் கூட்டமாய் கவலையில்லாமல் சாப்பிடும் சுர்த்திகள்! வாழ்க்கையை அனுபவிக்கும் மனிதர்கள் என்று நிச்சயமாய் சொல்லலாம். ராத்திரி பத்து மணிக்கு மேல் நீண்ட சாலைகளின் இரண்டு பக்கமும் போட்டிருக்கும் பெஞ்சுகளெல்லாம் நிறம்பி வழியும். அந்த நேரத்திலும் எதையாவது சாப்பிட்டுக் கொண்டு குடும்பத்தோடு பொழுதைக் கழித்துக் கொண்டு.

ஞாயிற்றுக் கிழமை மாலை சூரத் விழாக் கோலம்தான். யாரும் வீட்டிலேயே இருக்க மாட்டார்களா என்று நினைக்க வைப்பது போல அத்தனை மக்களும் வீதியில் தான். டுமஸ் ரோடு பூராவும் கார்கள் அணிவகுப்புதான். பாய், மடக்கு நாற்காலி சகிதம் குடும்பங்கள் ஆஜராகிவிடும். எந்தக் கூச்சமும் இல்லாமல் கீழே உட்கார்ந்து கொண்டு போவோர் வருவோரை வேடிக்கை
பார்த்துக் கொண்டும் தெரிந்தவர்கள் எதிர்படும் போது அரட்டையிலும். வீட்டிலிருந்து கொண்டு வந்தது... அங்கேயே வாங்கியது என்று மறுபடியும் சாப்பாடு... சாப்பாடு! இத்தனை சாப்பிட்டும் இவர்கள் இளம் வயதில் எப்படி இப்படி வெடவெட வென்று இருக்கிறார்கள் என்பது இன்னும் தெளியாத ரகசியம். ஆனால் நடுத்தர வயதுக்கு மேற்பட்டோர் எல்லா இடங்களையும் போல டயபடீஸூம் உடல் பருமனுடனும்.

முதலிலே இருந்த இடமென்றாலும் முற்றிலும் புதிதாய் இருந்தது. ஒவ்வொன்றாகத் தேடித் தெரிந்து கொண்டிருந்த போது சூரத் வாழ்க்கை மறக்க முடியாத நினைவுகளுக்குச் சொந்தமாக்கப் போகிறது என்று அப்போது உணர்ந்திருக்கவில்லைதான்!


Monday, June 08, 2015

இடப்பெயர்ச்சி பலன்கள் - 9

'சாவு தூண்டும் முதல் உணர்வு செக்ஸ்' என்று உஷா சுப்ரமணியம் கதையில் (காக்கைச் சிறகினிலெ) படித்தது. அதற்கு ஒரு சின்ன விளக்கம் கூட கொடுத்திருந்தார். நம்ம ஊர்ப்பக்கம் நெருங்கின சொந்தம் யாராவது இறந்து போய் விட்டால் 'கவலைப்படாதே அவங்களே உனக்கு குழந்தையா பிறப்பார்கள்' என்று சொல்வதும், 'குழிப்பிள்ளை மடியிலே' என்பதுமாய். குஜராத் சாவுகள் தந்தது பத்திரமின்மையா? நிலையில்லாமையா? நாளையை எனக்குத்
தெரியாது... இன்றைக்கு ஒன்றாக இருப்போம், அது எங்கேயாக இருந்தாலும் சரி என்று தான் தோன்றியது. அதற்காகத்தான் செட்டில் ஆகிவிடும் எண்ணத்தோடு கோவை வந்த முடிவை மாற்றிக் கொண்டு ஒரிஸ்ஸா கிளம்பியது.

பரிட்சையெல்லாம் முடிந்து ஒரிஸ்ஸாவிற்கு குடித்தனம் போனதென்னவோ மே மாதம் தான். ஆனால் மார்ச் மாதமே 'ஊர் எப்படி இருக்குன்னு பார்த்துட்டு வரேன்' என்று கிளம்பிவிட்டேன். (இதற்கு முன்னால் எந்த ஊர் எப்படி இருக்கிறது என்று பார்த்துத் தான் போனது போல!) குழந்தைகளை நாங்க பார்த்துக்கறோம், நீ ஜோரா போயிட்டு வான்னு அப்பாவும் அனுப்பி
விட்டார்.

ஒரு மத்யானம் பாலேஷ்வர் போய் இறங்கிய போது சோனியா காந்தியின் தேர்தல் பிரச்சாரம் நடக்க ஏற்பாடு ஆகிக் கொண்டிருந்தது. ஐந்து வருஷத்திற்கு முன்பு அவர் இப்போது பேசும் அளவு கூட ஹிந்தி பேசுபவரில்லை. கூட்டத்திற்குப் போய்க் கொண்டிருந்தவர்களுக்கு ஒரியாவைத் தவிர வேறு எதுவும் புரியும் போலவும் தெரியவில்லை. ஆனாலும் போய் கொண்டிருந்தார்கள். அவர்களைப் பார்த்த போது கூட்டம் என்று ஏனோ தோண்றவில்லை. மந்தை சரியான வார்த்தையாயிருக்கும்.  நீண்ட ஒலிப்பான்களின் பாதிப்பே இல்லாமல் நகரும் ஜனங்கள். லேசாக யாராவது மேல் முட்டி விட்டால் முஷ்டியை உயர்த்தி விடுவார்கள் என்று எதுவோ உள்ளுக்குள் சொன்னது. அதிகம் விபரமில்லாமல், அதனாலேயே ஒரு முரட்டு வேகத்துடன்.

கணவருடைய பணியிடம் பாலேஷ்வரிலிருந்து நூறு கிலோ மீட்டர் தூரத்தில்  தாம்ராவில் (Dhamra). வழியெல்லாம் ஒரே பச்சை. சட்டென்று கேரளாவை நினைவு படுத்தியது. நகரத்தில் இருந்து விலக விலக வீடுகள் தனித்தனியாய். வீட்டைச் சுற்றி ஒரே செடி கொடிகள், எந்தப் பராமரிப்பும் இன்றி. தனித்தனியாக குளம் கூட. அந்த அழுக்குக் குளத்திலேயே குளியல்,
துவையல் எல்லாம். கொஞ்ச தூரத்திற்கொன்றாய் அடி பம்புகள், குடிதண்ணீருக்காக. மேல் சட்டை இல்லாமல் வெறும் துண்டோ வேஷ்டியோ மட்டும் அணிந்த ஆண்கள். பெரும்பாலான பெண்கள் இன்னும் ஜாக்கெட்டுக்கு மாறவில்லை. பாதிக் குடித்தனம் தெருவில். ரோட்டில் நெல் காய்கிறது. சௌகரியமாக உட்கார்ந்து அரட்டை. வண்டி எதாவது வரும் போது மெதுவாக யோசித்து நகர்ந்து வழி விட்டு மறுபடியும் தொடர்கிறது.

தாம்ரா ஒரு நதிக்கரை கிராமம். தங்குவதற்கு... முன்பிருந்த கம்பெனி விட்டுப் போன போர்டா கேபின், எல்லா வசதிகளுடன். பெரிய வெட்ட வெளியில் நிலத்தை மெஷின்கள் சமன்படுத்திக் கொண்டிருக்க குழந்தை குட்டிகளோடு அக்கம் பக்க குடித்தனம் அத்தனையும் அங்கேதான். வேடிக்கை பார்க்க. சங்கு வளையலோ வகிட்டில் குங்குமமோ இல்லாத எனக்கும் என் கணவருக்கும் என்ன உறவு என்று அங்கிருந்த பெண்களுக்கு பெரிய சந்தேகம். கடைசியில் ஹிந்தியைக் கடித்துக் குதறி கேட்டே விட்டார்கள். பதில் என்னவோ அவர்களுக்கு ஜீரணிக்க முடியவில்லைதான்! சங்கு வளையலில்லாமல் எப்படி நீ பெண்டாட்டி என்று!

பள்ளிக்கூடத்திற்காக மறுபடியும் நாங்கள் பாலேஷ்வரிலும் கணவர் தாம்ராவிலும் தங்க வேண்டியிருந்தது. பாலேஷ்வர் பெரிய ஊரில்லை என்றாலும் மோசமில்லை. குஜராத்தில் எந்த மூலையில் இருந்தாலும் ரயில் நிலையத்திலாவது தமிழ் புத்தகங்கள் கிடைத்துக் கொண்டிருந்தது. பாலேஷ்வரில் எவ்வளவு முட்டியும் எதுவும் நடக்கவில்லை. நீண்ட நாட்களுக்குப் பிறகு மறுபடியும் தமிழ் புத்தகங்கள் இல்லாமல்.

ஒரிஸ்ஸாவில் மனதைக் கவர்ந்த ஒரே விஷயம் கோனார்க். வழக்கமாக எந்த ஊரில் இருந்தாலும் சுற்றிலும் உள்ள முக்கியமான இடங்களைப் பார்க்கக் கிளம்புவது போலத்தான் பூரி, கோனார்க் பயணமும் போனது. தங்கியது பூரியில். அது தான் குறிப்பிடத்தக்க இடம்...கோனார்க் ஏதோ பக்கத்தில் இருக்கும் சின்ன இடம் என்று தான் நினைத்திருந்தேன். பார்த்த பின்பு... அது பிரமிக்க வைத்தது.

கலிங்கத்துப் போரில் பெருமளவில் உயிர்ச்சேதம் அடைந்ததில் மக்கள் இல்வாழ்க்கையை மறந்து போனதில் (இங்கே சாவு எண்ணிக்கை ரொம்ப அதிகமல்ல... அதான் அந்த முதல் வரி தியரி உல்டாவாயிடுச்சு போலயிருக்கு!) மீண்டும் அவர்களுடைய மனநிலையை மீட்டுக் கொண்டு வர கட்டப்பட்டதாக வரலாறு சொல்கிறது. கோனார்க்கில் இப்போது மிச்சம் இருப்பது பாதி கூட இல்லை. ஆனாலும் ஒவ்வொரு சின்ன சின்ன செதுக்கலும் ஏதோ ஒரு விஷயம் பொதிந்து வைத்திருக்கிறது. அந்த கால வாழ்க்கை முறை, அது என்ன அவசியத்திற்காக கட்டப் பட்டதோ அந்த செய்தி எல்லா இடங்களிலும் விரிந்து பரந்து கிடக்கிறது. அங்கே இருக்கும் வழிகாட்டிகள் பலருக்கு அதிகம் விஷயம் தெரியவில்லை. தெரிந்தவர்களும் விளக்கமாக சொல்ல விரும்புவதில்லை.

மனிதர்களின் வியாபார வேகத்தில் அதிகம் சிதைக்கப் படாமல், அதனாலேயே அது தன்னை நோக்கி இழுக்கும் ஈர்ப்பை இழக்காமல் இருப்பது போல இருக்கிறது. நாலு வருடத்திற்கு முன்பு பார்த்தது. அதை முதல் முதலாக பார்த்த போது உணர்ந்ததை இப்போதும் உணர முடிகிறது. அந்தி நேரச் சூரியன், சந்திரனின் முதல் கிரணம், நல்ல பௌர்ணமி நிலவு, அதிகாலைச் சூரியன்... ஓவ்வொரு ஒளியில் அது என்ன நிறம் கொள்ளும் என்று பார்க்கும் ஆவலை அந்த சிதைந்த கோபுரம் தூண்டுகிறது.

யாருடைய குறுக்கீடும் இல்லாமல் தனியே ஒரு தரம் போக வேண்டும். அது பொதிந்து வைத்திருப்பதை அதுவே திறந்து காட்டும் வரை பொறுமையாக காத்திருந்து பார்க்க ஆசை. அது எனக்கு ஒரு காதலனைப் போல!

Sunday, June 07, 2015

இடப்பெயர்ச்சி பலன்கள் - 8

பள்ளிக்கூடத்திலிருந்து வரும்போதே விளையாடப் போக வேண்டிய முஸ்தீபுகளெல்லாம் முடித்து விட்டுத்தான் வருவான் மகன். வந்து பால் குடித்து, சட்டை மாற்றுவதற்கு முன்னால் நண்பர்கள் பட்டாளம் வாசலில் நின்று குரல் கொடுக்க ஆரம்பித்துவிடும். அன்றைக்கு வந்தவன் ஏனோ அமைதியாக ஸோபாவில். கால் இரண்டையும் கட்டிக் கொண்டு தனக்குத்தானே பேசிக்
கொண்டு. நான் கடந்து போகும் போது கொஞ்சம் சத்தமாக.

என்னதான் சொல்கிறான் என்று கொஞ்சம் கவனிக்க முயன்ற போது, எனக்குக் கேட்கட்டும் என்று அவன் முனங்கியது, "எப்பதான் இங்கயிருந்து ட்ரான்ஸ்வர் ஆகுமோ?"

ஆச்சரியம்தான். எப்போதும் மாற்றல் ஆகும் போது "இப்பத்தான் எங்க க்ரூப் சேர்ந்திருக்கு, அதுக்குள்ள போகனும்னு சொல்றியேன்னு" சலிப்பதுதான் வழக்கம்.

"என்னடா ஆச்சு?" என்று கேட்கத்தான் காத்திருந்தான்.

"என் ப்ரெண்டு ஒரு விஷயம் சொன்னான். அது நிஜமாகறதுக்குள்ள நம்மெல்லாம் இங்கிருந்து போயிடனும்"

"என்ன சொன்னான்?"

நீட்டி முழக்கி உடைந்த தமிழிலும், ஹிந்தியிலும் அவன் சொன்னது, "ஜெசல், தோரல் ரெண்டு பேரும் லவ்வர்ஸாம். அவங்க ரெண்டு பேரும் ஒன்னு சேராம செத்துப் போயிட்டாங்களாம். அவங்களைப் பொதைச்ச எடத்தில ரெண்டு கல்லு இருக்காம். அது ரெண்டும் கொஞ்சம் கொஞ்சமா பக்கத்தில வந்துட்டிருக்கு. எப்ப அது ரெண்டும் முட்டுதோ அப்ப பூமி வெடிச்சிடுமாம். இன்னும் கொஞ்ச நாள்ல அது முட்டப் போகுது. நாம அதுக்குள்ள இங்கயிருந்து போயிடனும்"

"இதெல்லாம் சும்மா சொல்ற கதைடா கண்ணு. அப்படியெல்லாம் ஒன்னும் நடக்காது. நீ போய் விளையாடு" என்று நான் சொன்னதில் அவனுக்கு திருப்தியேயில்லை. என்னை விட்டு விட்டு அவனுடைய அக்காவைப் பிடித்துக் கொண்டான். இரண்டு பேரும் அந்த வயதுக்கே உள்ள ஆர்வத்தோடும் பயத்தோடும் அதன் பின்விளைவுகளைப் பற்றிப் பேசுவதுமாய். இரண்டு மூன்று நாள் அதே நினைவாயிருந்தான். கொஞ்ச நாளில் அது மறந்தே போய்விட்டது.

பள்ளிப் படிப்பு, கம்ப்யூட்டர் வகுப்பு எல்லாம் பாதியில் இருக்க, 99 செப்டம்பர் அடுத்த மாற்றல். இரண்டு கைகளிலும் அள்ளிச் சுமந்ததும், உதற முடியாமல் முதுகில் சுமத்தப்பட்டதுமாய் நினைவுகள்.

அடுத்ததாக போக கணவருக்குத் தோதான வேலை எதுவும் இல்லாததால், கம்பெனி சென்னையில் வந்து தலைமை அலுவலகத்தில் கொஞ்ச நாள் இருக்கச் சொன்னது. அதுவும் சில மாதங்களுக்கு மட்டுமேயானதால் எங்களுக்கு (நானும் குழந்தைகளும்) கோவைக்குப் போவதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை. சொந்த ஊர், சொந்த வீடு... போதும் சுற்றியது, கம்பெனி வழக்கப்படி குழந்தைகளோடு ஊரிலேயே இருந்துவிடும் யோசனையில் தான் தொடங்கியது கோவை வாழ்க்கை, ரொம்ப எதிர்பார்ப்போடு.

காந்திதாமில் கூட இருந்து சொல்லிக் கொடுத்த அப்பா, கோவையில் ஸ்கூட்டியைத் தொடவிடவில்லை. எங்கே போனாலும் தொடர்ந்து கொள்ளலாம் என்று சொன்ன கம்ப்யூட்டர் வகுப்பு ஏ சென்டர், சி சென்டர் என்று ஏதேதோ காரணம் சொல்லி கைவிரித்து விட்டது. கல்யாணம், காதுகுத்து, கருமாதி, டிவி, வம்பு.... மூச்சடைக்க ஆரம்பித்து விட்டது.

நான்கு மாதம் கழித்து, ஜனவரி 26 ம் தேதி காலை என்டிடிவி வெறும் தகவலாக சொல்ல ஆரம்பித்து தொடர்ந்த செய்தி... பத்து நாட்கள் நேரம் காலம் இல்லாமல் டிவியே பழியாகக் கிடந்தது... பார்க்கவும் முடியாமல், பார்க்காமல் இருக்கவும் முடியாமல்... அந்த இருநூற்றைம்பது குழந்தைகளை முழுசாக விழுங்கிய அஞ்சார் தெருக்களில் எத்தனை முறை நடந்திருக்கிறேன். பத்தடி அகலம் கூட இல்லாத தெருக்கள். காரெல்லாம் அதிகம் ஊருக்கு உள்ளே போக முடியாது. ஒரு ஆட்டோ போகும் போது எதிரில் இன்னொன்று வந்தால்
பக்கத்தில் இருக்கும் வீட்டு படியில் சரிந்து ஏறித்தான் வழிவிட வேண்டும். அடுக்கடுக்காக உயர்ந்த கருங்கல் கட்டிடங்கள், அவ்வளவு மலிவாக கிடைக்கும் துணிகளை வாங்க எங்கிருந்தெல்லாமோ வரும் ஜனக்கூட்டம், அத்தனை வருமானம் இருந்த போதும் மாறாத, மாற்ற முடியாத ஊரின் அமைப்பு...

அந்த செப்டம்பர் மாத மாற்றலே கேட்டு வாங்கியது. நவம்பருக்கு மேல் கணவருடைய வேலை முடிந்தால் கட்டாயம் நானும் குழந்தைகளும் அந்த வருஷம் படிப்பு முடியும் வரை தனியாக அங்கே இருந்திருக்க வேண்டும். அதை தவிர்க்க எதிர்பாராமல் கேட்ட நேரம் மாற்றம் கிடைத்து நாங்கள் இங்கே வந்துவிட... யாரோ காய்களை நகர்த்தி நீ இங்கேயிருந்து போய் விடு, நீ இங்கேயே இரு என்று செய்தது போல. ராஜுலாவில் கூட இருந்த ஒரு குடும்பம், மோசமாக பாதிக்கப்பட்ட இன்னொரு இடமான பச்சாவ்(Bachchau) என்ற ஊரில். இரண்டாவது மாடி கட்டிடம் சரியத் தொடங்க மனைவியையும் மூத்த மகளையும் மற்றவர்களோடு கயிற்றைப் பிடித்து இறங்கச் சொல்லி விட்டு கணவர் உள்ளே உறங்கும் இரண்டாவது மகளை தூக்கப் போகும் போது அவள் கண் முன்னால் புதைந்து போனது....

கேட்டது, பார்த்தது எதுவும் 'நல்லவேளை நாம தப்பிச்சுட்டோம்' என்று நினைக்க வைக்கவில்லை. இதில் எந்த இடத்திலும் நாங்கள் யாராவது இருந்திருக்க எல்லா சாத்தியங்களும் இருந்திருந்தது. புதைந்து போயோ, புதைய விட்டுத் தவித்தோ. தொடர்ந்த நாட்களில் உள்ளுக்குள் கேள்விகள்... கேள்விகள். நான், என்னுடையது... எல்லாவற்றையும் அசைத்துப் போனது. எல்லாம் அடங்கிய போது... கொஞ்சம் அடைந்திருந்தேன், கொஞ்சம்
இழந்திருந்தேன்.

மார்ச் மாதம் கணவரை ஒரிஸ்ஸாவிற்கு மாற்றிய போது இரண்டாவது யோசனையில்லாமல் கிளம்பிவிட்டோம், எட்டு மாத கோவை வாழ்க்கை முடித்துக் கொண்டு.

Saturday, June 06, 2015

இடப்பெயர்ச்சி பலன்கள் - 7

சௌராஷ்ட்ராவையா வரட்சின்னு சொல்ற, இங்க வந்து
பாருன்னு அடுத்து கூப்பிட்டது... காந்திதாம், கட்ச். குஜராத்தின் மேற்குக்
கோடி. கண்ட்லா துறைமுகமும், Free Trade Zone ம் உப்பங்களங்களுமாய்
செல்வம் கொழித்தாலும்...எல்லாம் வெளிப்பூச்சாக மட்டுமே.

ராஜுலாவிலிருந்து போகிற வழியெல்லாம் எங்கே பார்த்தாலும் முள்காடு.
நிறைய சுருக்கங்களோடு கறுப்புப் பாவாடை, முன்புறம் மலிவான வேலைப்பாடும்
இழுத்துக் கட்ட பின்புறம் கயிறு மட்டுமேயான ரவிக்கை, அடிக்கொரு தரம்
பறந்து முதுகைக் காட்டிப் போக இழுத்து இழுத்து மூடும் சிவப்பு மேலாக்கு,
உடம்பெல்லாம் பச்சை குத்தல்களோடு பால்காரப் பெண்கள். பழுப்பேறிய வெள்ளை
உடுப்பு, பெரிய முண்டாசும் நீண்ட கோலோடும் ஆண்கள். கூட்டம் கூட்டமாய்
எருமைகள். இடையிடையே சிறு நகரங்கள், அங்கே இளிக்கும் பளபளப்பு,
தொடரும் வரட்சி. நாங்களும் இங்கே இருக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு
வழியில் ஒரு கான்வென்டும் சர்ச்சும்.

காந்திதாம்... நுழையும் வழியில் வரவேற்பது லாரிகளும் டாங்கர்களும் தான்.
வியாபாரம் என்பது எல்லோருக்குள்ளும் கொஞ்சம் தீவிரமாகவே இருக்கிறது.
கொழிக்கும் பணத்தை செலவழிக்க வாய்ப்புகள் இல்லாத தவிப்பு. சிந்தி
(sindhi) எண்ணிக்கை கொஞ்சம் கூட. முறமெல்லாம் வேண்டாம் முழியே
போதும் புலியை விரட்ட என்னும் சிந்தி பெண்கள். நல்ல உயரமும் பருமனும்
பெரிய குரலுமாய். எல்லோருக்கும் சிறியதாகவாவது ஒரு வருமானம் அவசியம்
என்ற மனப்பான்மை. பத்து வயசிலிருந்தே குழந்தைகள் பள்ளிக்கூடம் முடிந்ததும்
தினமும் சில மணி நேரம் அவர்களுடைய கடையில், வியாபாரம் கற்க. இது
குஜராத்தில் எல்லா இடங்களிலும் பார்க்கலாம். எதை கற்றுக் கொள்வதானாலும்
அதில் என்ன உபயோகம் என்ற கணக்கு. ஸ்கூட்டி, சன்னியெல்லாம்
சிறியவர்களுக்கு. லைசென்ஸ் எல்லாம் யாரும் கேட்க மாட்டார்கள். கியர் வண்டி
ஓட்டும் பெண்களை சாதாரணமாக பார்க்கலாம்.

தம்தரிக்கு அடுத்து காந்திதாமில் நிறைய 'முதல்'கள். இரண்டு பேரும்
தனித்தனி குடித்தனம் அரம்பித்தது இங்கேதான். கணவர் வேலைக்காக
முந்த்ரா(Mundra) வில் தங்க நாங்கள் பள்ளிக்கூடத்திற்காக காந்திதாமில்.
ஊருக்கு வெளியே வீடு. ஒரு ஆட்டோவுக்குக் கூட அரை கிலோமீட்டர் நடை.
ஊரில் பத்து வயசு பொடிசுகளெல்லாம் வண்டி ஓட்டுவதைப் பார்த்த தைரியத்தில்
எங்கள் வீட்டிற்கும் ஸ்கூட்டி வந்தது. வாரத்திற்கு ஒரு தரம் வீட்டுக்கு வரும்
கணவரின் அன்பான(!) வழிகாட்டுதலில் வண்டி ஓட்டத்தான் வேண்டுமா என்று
ஒவ்வொரு முறையும் நினைத்தது நிஜம். அந்த சமயத்தில் ஊருக்கு வந்த
அப்பாவின் கொஞ்சம் குறைவான அன்பில் ஒரு மாதிரி தேறியது.

கணவரும் வாரம் பூராவும் ஊரில் இல்லை. குழந்தைகளும் படிப்பு, விளையாட்டு
என்றிருந்ததில் ஏகப்பட்ட நேரம். என்ன செய்யலாம் என்று யோசித்ததில்
கம்ப்யூட்டர் தான் கவர்ச்சியாக இருந்தது. ஸ்கூட்டியும் கம்ப்யூட்டரும் ஜோடி
சேர்ந்து கொண்டது. முதல் ஒரு மாதம் இதுக்கு மேல முடியாது என்கிற அளவு
ரோட்டோரமாகத் தட்டுத்தடுமாறி, ஸ்கூட்டியும் நானும். பழகிய பிறகு ஒரு
நாள், காந்திதாம்-பூஜ் நெடுஞ்சாலையில் ஈ, காக்கா இல்லாத ஒரு மத்யான
வேளையில், காலியாய் கிடந்த சாலை தந்த தைரியத்தில் ஸ்கூட்டி மெல்ல
மெல்ல வேகம் பிடிக்க, துப்பட்டா பறக்க விரைகையில் திடீரென்று தாண்டிச்
சென்ற லாரி க்ளீனர் பையன் சைகையில் சொல்லிப் போன சபாஷ்...
இத்தனை வருடங்கள் கழித்து இப்போது நினைக்கும் போதும் சின்னதாக ஒரு
சிரிப்பு, மெல்ல தளர்த்தும் நினைவு.

கம்ப்யூட்டர் வகுப்பிலும் ஆரம்பம் சரியான சொதப்பல். புது வகுப்பு தொடங்க
முடியாமல் நாங்கள் இரண்டே பேர். தபோஜோதியும்(பெங்காலி பையன்!)
நானும். படிப்பை விட்டு பதினொரு வருடமாயிருந்தது. முதல் நாள் சொல்லிக்
கொடுத்தது அடுத்த நாள் நினைவிருக்காது. இரண்டு நாள் சொல்லிக் கொடுத்து
விட்டு ஆசிரியர் விலகி விட பொறுமையாக விளக்கியது தபோஜோதி
தான். அடுத்த ஒரு மாதத்தில் முறையாக வகுப்பு தொடங்கிய போதும் ஒன்றாகத்
தொடர்ந்தோம். அவனோடு இருந்த ஒரு வருடத்தில், தேடித்தேடி தட்ட நேரம்
எடுக்கிறேன் என்று என்னை ஒரு நாளும் கம்ப்யூட்டரை தொட விட்டதில்லை.
யோசிக்கும் வேலை மட்டும் எனக்கு. மற்றதெல்லாம் அவன் தான். சின்னச்
சின்னதாக நாங்கள் எழுதிய ப்ரோக்ராம்கள், அதை தட்டி ஒட்டி சரி செய்தது,
வீட்டில் எல்லோரும் ஓ..நோ என்று சலிக்க தொடர்ந்த தொலைபேசி
பாடங்கள்... மெல்ல கம்ப்யூட்டர் உள்ளே இழுத்துக் கொள்ள சென்டரிலே முதலாக
வந்ததெல்லாம் தனிக்கதை.

கடற்கரையெல்லாம் சிவலிங்கங்களாய் கிடக்கும் கோட்டேஷ்வர், பாகிஸ்தானை
பக்கத்தில் இருந்து பார்க்கும் நாராயண் சரோவர், முதியோர் இல்லம் போல
வயதான மாடுகளை பராமரிக்கும் கௌஷாலா, ப்ளாக் பிரிண்ட்டும்,
பாந்தினிக்கும் பெயர் பெற்ற அஞ்சார், அரைக் கரண்டி சுண்டல் ஒரு பிடி
புளியோதரையில் ஒரு கணம் ஊருக்கே கூட்டிப் போகும் கண்ட்லா பாலாஜி
கோவில், கார் ட்ரைவிங்.... வீட்டில் நடந்த திருட்டு, தொடர்ந்த
இரண்டாவது நாள்... 98 ஜீன் மாதம் கண்ட்லாவைத் தாக்கிய புயல், வெறும்
அரைமணி நேரம் உள்ளே நுழைந்த வெள்ளம், ஆயிரக்கணக்கான சாவுகள், அன்று
காலை கண்ட்லா போவதாக இருந்து தூங்கிப் போனதில் தப்பித்த கணவர்,
எப்போதும் வழியில் எதிர்படும் சர்க்கார் மருத்துவமணையில் மலை போல
குவிந்து கிடந்த பிரேதங்கள், மறுநாள் கண்ட்லாவில் எரிவாயு சேகரிக்கும்
இடத்தில் கசிவு என்ற வதந்தியில் ஊரே காலி பண்ணி ஓடியது, பதினைந்து
நாள் மின்சாரம் இல்லாமல், நல்ல தண்ணீர் இல்லாமல்...நிலையில்லாமை
முகத்தில் அறைந்தது. தெரிந்து கொள்வதற்கும் தெளிந்து கொள்வதற்கும் உள்ள
வித்தியாசம் புரிந்தது.

ஒரு மாதத்தில் எல்லாவற்றையும் சமாளித்து எழுந்தது காந்திதாம்.

இடப்பெயர்ச்சி பலன்கள் - 6

" ஆன்ட்டி, உங்க வீட்டுக்கு யார் வந்திருக்கான்னு பாருங்க", மகனுடைய நண்பன்.
யாரோ குழந்தை ஹிந்தியில் சொன்னதை தமிழில் மொழிபெயர்த்திருப்பதாக
நினைக்க வேண்டாம். அழகாக தமிழில் சொன்னதுதான்.

ராஜுலாவில் நாங்கள் வந்து இறங்கிய போது வெளியூர் ஆட்கள் மொத்தமே
பத்து பதினைந்து குடும்பங்கள் தான். தெருவில் நடந்து போனால் கண்
பார்வையில் இருந்து மறையும் வரை பார்வைகள் துளைக்கும். கோபம் வருவதற்குப்
பதில் அந்த பார்வைகள் கூச்சம் தான் தரும். சூதில்லாத மனிதர்கள்.
அவர்களுக்கு எல்லாமே வெறும் வேடிக்கை. கடைகளில் சாமானங்கள் எதுவும்
கிடைக்காது. சமையல் எண்ணை கேட்டால் நமக்காக பெருமையுடன் நீட்டும் நீண்ட
நாள் தூசி படிந்த டெட்ராபேக் தாரா கடலெண்ணை தான். மற்றபடி எல்லாம்
அளந்து ஊற்றும் எண்ணைகள் தான். சோப்பு... ரெக்ஸோனாவும் மேலும்
ஒன்றிரண்டு. ப்ரௌன் நிறத்தில் வாடையடிக்கும் ஒரு வஸ்து தான் ப்ரெட்.
பிஸ்கட் ஒரே பார்லே-ஜி.

ஆனால் அவர்களுடைய கடலைமாவு பதார்த்தங்கள் ரொம்ப விசேஷம். பெரும்பாலும்
காலை பதினொரு மணிக்கு ஒரு சாப்பாடு, ராத்திரி எட்டு மணிக்கு
இரண்டாவது சாப்பாடு. மற்ற நேரங்களில் இந்த கடலைமாவு நொறுவல்கள்
முக்கியமாய். மாஜி வீட்டு மொட்டை மாடி முற்றத்திலிருந்து பார்த்தால்
தெரியும் அந்த சின்ன கடையிலேயே ஒரு நாளைக்கு சுமார் பத்து கிலோ
கடலைமாவு செலவாகும். காலையில் ஏழுமணிக்கே எண்ணை முழுக்காடி ஒரு ராட்சச
கடலைமாவு உருண்டை தயாராக இருக்கும். எண்ணை பூசி
மொழுமொழுவென்றிருக்கும் ஒரு பலகையை சாய்வாகப் பிடித்துக் கொண்டு ஒரு
பூரிக்குத் தேவையான அளவு மாவெடுத்து மணிக்கட்டும் உள்ளங்கையும்
சேருமிடத்தால் ஒரே சீராக அழுத்தி இழுத்தால் ஒரு கடலைமாவு பட்டை
தயார். கத்தியால் கீழிருந்து வேகமான ஒரு இழுப்பில் அது பலகையை விட்டுப்
பிரிந்து, எந்த நேரமும் காய்ந்து கொண்டிருக்கும் எண்ணைச் சட்டியில் விழுந்து
பொரிந்து எழுந்து தயாராகி விடும். எண்ணையில் பொரித்த பச்சை மிளகாய்
அதற்கு ஜோடி. இடையிடையே ஜாரிணிக்கரண்டியை வைத்து நேரடியாக
எண்ணையில் 'சேவ்'. மேலேயிருந்து பார்க்கும் போது நமக்கு கையில்
ஆவியடிக்கிற மாதிரி இருக்கும். இன்னொரு பக்கம் ஒரு பெரிய வாணலியில்
பால் காய்ந்து காய்ந்து சுண்டி பால்கோவாவாகும். எல்லாம் வாடிக்கையாளர் கண்
முன்னாலே சமைத்து, தெருப்புழுதியுடன், உடனுக்குடனே வியாபாரம்.
ஓரளவிற்கு வசதியானவர்களுக்கு, முன்னால் சொந்த வியாபாரம் நடக்கும் கடை,
பின்னால் வீடு. கடைக்குப் பக்கத்தில் போகும் சந்து, வீட்டுக்கு போக வழி.
சந்து முடியும் இடத்தில் எதிர்பார்க்க முடியாமல் ஹாவென்று விரியும் வாசல்.
வெளியிலிருந்து பார்க்கும் போது உள்ளே இவ்வளவு பெரிய வீட்டை யூகிக்க
முடியாது. எளிமை என்றும் சொல்ல முடியாத ஒரு தினுசான வாழ்கை.
மாஜியோடு போன ஒரு வீட்டில் வயசுப் பெண்கள் மட்டும் இல்லாமல் அம்மாவும்
ஒரு அசாதாரண மினுமினுப்பில். பட்டுப் போன்ற அவர்கள் கூந்தலின் ரகசியம்
அன்றைக்கு தெரிந்தது. ஒரு பெரிய உருளிமாதிரி வாயகன்ற ஒரு
பாத்திரத்தில் மெல்லிய தீயில் எண்ணைக் காய்ச்சல். ரோஜா இதழ்களும்
விதவிதமான மூலிகைகளும் சேர்த்து. ஆள் மாற்றி ஆள் அதை கிளறி விட்டுக்
கொண்டிருந்தார்கள். விதவிதமான சமையல், சலிக்காமல் வேலை, மிஞ்சின
நேரங்களில் இது போல அலங்கார ஏற்பாடுகளும் கைவேலைகளும். ஆண்கள்
வியாபாரத்தில் கவனமாய். பெண்கள் வீடே உலகமாய்.

இந்த ஊருக்கு ஒரு ஆறு மாதத்தில் இருநூறு முன்னூறு குடும்பங்கள் வந்து இறங்கியதில்
திக்குமுக்காடியது. ராஜுலாவிலிருந்து பதினைந்து கிலோமீட்டர் தொலைவில்
சிமென்ட் தொழிற்சாலை அலுவர்களுக்கான குடியிருப்பு தயாரானதும் நாங்கள்
அங்கே குடிபெயர்ந்தோம்.

முதல் முறையாக காலனி வாழ்கை. அலுவலக ஆட்களெல்லாம்
ஒரே இடத்தில். நிறைய சௌகரியங்களும் ஏகப்பட்ட பிரச்னைகளும்.
எல்லாருடைய வீட்டு விஷயமும் எல்லாருக்கும் தெரிந்தது. கூடவே இருந்ததில்
சிலரோடு நல்ல நெருக்கமும்.

ஆனால் ராஜுலா சீக்கிரம் சுதாரிக்கத் தொடங்கி விட்டது. திடீரென்று
அடுக்குமாடிக் கட்டிடங்கள் உயர்ந்தது. கடைகளில் என்ன கேட்டாலும் கிடைத்தது.
கிடைக்காத பொருள் இரண்டே நாட்களில் அஹமதாபாத்தில் இருந்து வந்து
சேர்ந்தது. தெருவில் நடந்து போகும் போது தமிழ் பேசுபவர்களை
சாதாரணமாக பார்க்க முடிந்தது.

முதல் வரி கேள்விக்கு வருகிறேன். ஒரு களுக் சிரிப்போடு அவன் கூவிக்
கொண்டே வர "யாருடா" என்று கேட்டுக் கொண்டே வெளியில் வந்தேன்.
ஐந்தரை அடிக்கும் கூடுதல் உயரம். அநியாயத்துக்கு குண்டு. இன்னும் கொஞ்சம்
மிச்சமிருந்த கிராமக்களை.

நாந்தாங்க பாமினி என்று அறிமுகம் செய்து கொண்டு பேச ஆரம்பித்த போது
அவருடைய உருவம் தந்த அதிர்ச்சியிருந்து இன்னும் விடுபட்டிருக்கவில்லை.
ஒருத்தரோட சிநேகமாக இருப்பதற்கு எதாவது ஒருவிதத்தில் ஒத்த ரசனை
அவசியம் என்ற என்னோட நம்பிக்கையை முற்றிலுமாக தகர்த்தது பாமினி. அது
ஒன்னும் கட்டாயமில்லை, சில நேரம் இது எதுவும் தேவையில்லை என்று
சொல்லியது அந்த நட்பு. இவ்வளவு நல்லவங்களா ஒருத்தர் இருக்க முடியுமா என்று
அடிக்கடி தோன்ற வைத்தார். பாமினிக்கு இருந்தது தன்னம்பிக்கையா
வெகுளித்தனமா தெரியாது. பணியிட விருந்துகளில் மெல்லிய குரலில்
நாசுக்கான ஆங்கிலத்தில் தொடரும் உரையாடலில், அது யாராக இருந்தாலும்
சரி, உறுத்தாமல் குறுக்கிட்டு, " நான் அதிகம் படிக்கலை, எனக்கு ஆங்கிலம்
புரியாது, ஹிந்தில பேசுங்களேன் " என்று அவர் சொன்னதும் மந்திரத்திற்கு
கட்டுப் பட்டது போல எல்லோரும் சட்டென்று ஹிந்திக்கு மாறுவது...ஆச்சரியம்.

எதாவது செய்ய வேண்டும் என்று இத்தனை வருடங்களாக சொல்லிக்
கொண்டிருந்தாலும், ஊருக்கு போகும் போது சௌகரியமாக ஒவ்வொரு முறையும்
எதாவது பண உதவி செய்வதோடு என் சமூக சேவை(!) முடிந்து விடுகிறது.
குழந்தையில்லாத அந்த தம்பதி அதற்குப் பிறகு ஒரு பெண் குழந்தையை
சொந்தமாக்கிக் கொண்டதில் இன்று அந்த முன்று பேருடைய வாழ்கையும்
சந்தோஷமாய்.

Thursday, June 04, 2015

இடப்பெயர்ச்சி பலன்கள் - 5

பாலகுமாரன் கதை படிக்கும் போது கற்பனை செய்து வைத்திருந்தது. காற்றில்
குழலாட, காது ஜிமிக்கி லேசாக அசைய, ஆர்ப்பாட்டமில்லாமல் அமைதியாய்
பாடும் பெண்ணைப் பற்றி. ஒரு பார்ட்டியில் அந்த கற்பனைக்கு உருவம் தந்தது
பூர்வர்ஷா. பெங்கால் தங்கம்?!! நிஜமாகவே எலுமிச்சை நிறம், அளவான
உயரம், அதற்கேற்ற உடம்பு...இதெல்லாம் கண்களைத் திறந்தால் தெரிவது.
மூடிக் கொண்டால் அந்தக் குரல் ஒரு நதி. துள்ளலும் துடிப்புமாய்.

ஏற்கனவே லதாவின் பழைய பாடல்களில் கிறங்கிய அனுபவம் இருந்தாலும் கண்
முன்னே நின்று ஒருவர் பாட அதில் நான் உருகி வழிந்த மாதிரி உணர்ந்தது
அப்போது தான். அன்று அவர் பாடியது எனக்கு ரொம்ம்ம்ப பிடித்த லதாவின்
மீரா பஜன். அதை பூர்வர்ஷா குரலில் கேட்டது நிச்சயம் வேற அனுபவமா
இருந்தது. தனிமையாக உணரும் சில நேரங்களில் எதிலாவது என்னை மறக்க
செய்ய வைக்கும் வழி என்ன என்ற ஒரு தேடல் இருந்தது. அந்தக் குரலும் அதன்
குழைவும்.....இதுதானா அது என்றிருந்தது. பாடி முடித்த அவரிடம் இருந்து
கவனத்தை மாற்ற சிரமமாக இருந்தது. இனி எப்போது மறுபடியும் என்ற
கேள்வியும்.

சந்தர்பங்கள் அடிக்கடி வந்தது. காலனியில் எதாவது விசேஷங்கள் இருந்து
கொண்டே இருந்தது. எல்லாவற்றிலும் பூர்வர்ஷாவின் பாட்டும் தவறாமல். அவர்
பாட ஆரம்பித்தால் போதும். சுற்றி இருக்கும் எல்லாரையும் மறந்து, எல்லா
சப்தமும் மறைந்து அந்தக் குரலை மட்டும் உணர முடிந்தது. ஆனால் 
எத்தனை கேட்டாலும் ஆசை தீராமல் இருந்தது.

குழந்தைகளுக்காக பாட்டு வகுப்பு தொடங்கிய போது எனக்கும் சொல்லிக்
கொடுக்க முடியுமான்னு கேட்க அவர் கண்ணில் தெரிந்ததற்க்கு அர்த்தம்
என்னவாயிருக்கும்? ஆனால் சரின்னு தான் சொன்னார். அதற்கு முன்னால் பாடினது
என்று சொன்னால் அது 'மிலே சுர் மேரா துமாரா' தான். மகளுக்கு இரண்டு
வயதாக இருக்கும் போது வெளிவந்திருந்தது. அந்தப் பாட்டு போட்டாதான்
சாப்பிடுவேன்னு அடம் பிடிப்பாள். டிவியில் அது எப்போது வரும் என்றே
தெரியாது. எப்போதாவது வரும் போது என்ன குடுத்தாலும் மடமடன்னு இறங்கும்.
பிடிக்காததா இருந்தா முதல் வாய் சாப்பிடும் போது இதான்னு ஒரு கேள்வி
கண்ணிலே வரும். அப்புறம், சரி சரி என்னை தொந்தரவு செய்யாதேன்னு ஒரு
பார்வை அறிவிப்பு. சத்தமில்லாமல் சாப்பிட்டாகிவிடும். அவளுக்காக அந்த
பாட்டு மனப்பாடம் ஆகியது. ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று தரம், சுமார் ஆறு
மாதம், அவளுக்காக மட்டும்.... முகத்திலிருந்து கண்ணெடுக்காமல் கேட்பாள்.
எதாவது ஒரு வரி விட்டு விட்டால் இல்லை தப்புன்னு தலை ஆடும்(வாயில் தான்
சாப்பாடு இருக்குமே!)... அவ்வளவு தான் வாய்விட்டு பாடிய அனுபவம்.

பாட்டு வகுப்பில் முதல் நாள் குரலே வரவில்லை. அப்புறம் கூட்டத்தோட
பாடினாலும் தனியா பாடுன்னு சொல்லும் போது படபடன்னு...வேர்த்துப் போய்!
முடியாதோ என்று தயங்கின போதெல்லாம் பூர்வர்ஷாவின் குரல் மறுபடியும்
மறுபடியும் இழுத்தது. ஸரிகம வில் லேசான அறிமுகத்தோடு மூன்றாவது மாதம்
ஒரு பஜன் சொல்லிக் கொடுத்தார்.
'துமக சலத ராம சந்த்ர'. பாடப் பாட கொஞ்சம் கொஞ்சமாக தயக்கம்
விலகி, கண்ணை மூடி அனுபவிக்க முடிந்தது. (இதை எழுதும் போது அந்த
டைரியை தேடி எடுத்து பார்த்த போது அந்தப் பக்கம் மட்டும் மஞ்சளடித்து
இருந்தது. சமைக்கும் போது கூட அந்த புத்தகத்தை வைத்து பாடிக்கொண்டே
சமைத்ததின் மிச்சங்கள்). பேஹாக் ராகத்தில் சின்னதாக ஒரு அறிமுகத்தோடு
தொடங்கிய அடுத்த பாடம் அந்த புத்தகத்தில் பாதியில் நிற்கிறது.

எங்களுக்கு மாற்றல் வந்து விட்டது!

மூன்று மாத அந்த அனுபவம், ரசனையை நிச்சயம் மாற்றியது. குஜராத்தில்
பெரியவர்கள் சொல்வது..."ஷ்ருத் கி(Ghee) ஹஸம் ந கர் சக்தே யே
பீடி(peedi)' (சுத்தமான நெய்யை ஜீரணிக்க முடியாத தலைமுறை)...அது
மாதிரி சுத்தமான சங்கீதம்... குறிப்பா கர்நாடக சங்கீதம் புரிவதும்
இல்லை, ஜீரணமாவதும் இல்லை.

ஆனாலும் குறையொன்றும் இல்லை.

Wednesday, June 03, 2015

இடப்பெயர்ச்சி பலன்கள் - 4

வாஷி - யில் இருந்து கிளம்பி சூரத், அங்க்லேஷ்வர், ரத்தினகிரி....நாலு
வருஷத்தில் மூன்று ஊர் சுற்றி, ராஜுலா (Rajula, Sourashtra,
Gujrat) வந்து சேர்ந்தோம். நடுவில் மகன் வரவு.

ராஜுலா...அடுத்த பட்டிக்காடு. அதுவும் வரண்ட பட்டிக்காடு. ரயில்
வசதியெல்லாம் கிடையாது. அஹமதாபாத்தில் இருந்து பஸ். எட்டு மணி நேரம்.
வழியெல்லாம் ஒரே வரட்சி. அங்கங்கே வரும் ஒரு சில ஊர்கள்...அதுவும்
கொஞ்சம் கூட பசுமை இல்லாமல், ப்ரௌன் கலர் தூக்கலா இருக்கின்ற ஓவியம்
மாதிரி. ஆண்கள் கட்டியிருக்கும் வேட்டி கூட காவியேறின நிறத்தில்.
வாங்கும் போதே இந்த நிறத்தில் தான் இருந்திருக்குமோ என்று தோன்றும்.
பேருக்குக் கூட ஒரு வெள்ளை வேட்டி பார்க்கக் கிடைக்காது. முக்காடு போட்ட
பெண்கள்...புழுதி ஏறிய குழந்தைகள்...வழியெல்லாம் இதையே பார்த்துக்
கொண்டு போகும் போது பயமாக இருந்தது.

ராஜுலாவும் வழியில் பார்த்த ஊர்களைப் போலத்தான். அவசரமாக துடைத்து
வைத்தது போல கொஞ்சம் பளிச்சென்று இருந்தது. சந்துகளில் இரண்டு பக்கமும்
சாக்கடை ஓட, எங்கும் பன்றிகள் சாம்ராஜ்யம். ஏதோ நினைத்துக் கொண்டு
ஒன்று சத்தம் போட்டுக் கொண்டு ஓட, மற்றதெல்லாம் பின்னால் துரத்த...நடு
ரோட்டில் அருவருப்பில் நடுங்கிக் கொண்டு நான் நிற்க...எல்லோரும் அவரவர்
வேலையைப் பார்த்துக் கொண்டு. கொஞ்ச நாளில் எனக்கும் பழகி விட்டது!

ஊரும் ஜனங்களும் தான் அவ்வளவு அழுக்கு. வங்கியில் ஒரு நாள் முண்டாசும்
வெற்றிலை வாயுமாய் கூட்டம் நெரிக்க, நான் ஹேண்ட் பேகைத் திறந்து சில
நூறுகளை எண்ணிக் கொண்டிருக்க, பக்கத்திலிருந்தவர் அழுக்குப் பைக்குள்ளிருந்து
நூறு ரூபாய் கட்டுகளை எடுத்துக் கொடுத்து கொண்டிருந்தார்! நிச்சயம் அது நான்
எதிர்பார்க்காதது. நான்கு எருமைகளை நாற்பது எருமைகளாக மாற்ற மட்டுமே
தெரிந்த ஜனங்கள். அவர்களைப் பார்க்கும் போது எனக்கு வந்த பரிதாப
உணர்ச்சி, என்னைப் பார்க்கும் போது அவருக்கும் வந்திருக்கலாம்!

ராஜுலா வீடு இரண்டாம் மாடியில். முதல் மாடியில் வைர கற்கள் பாலிஷ்
செய்யும் தொழிற்சாலை. வழியெல்லாம் வெற்றிலை துப்பி, ஒரே நாற்றமாய்.
அதற்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாமல் இரண்டாம் மாடி வீடு நல்ல வசதியாய்,
காற்றோட்டமாய். வரவேற்பறை ஜன்னலில் இருந்து பார்த்தால் வீட்டுக்காரர்
போர்ஷனுக்கு முன்னால் இருக்கும் பெரிய மொட்டை மாடி முற்றம். நிலா காயும்
நேரம் அந்த முற்றம் ரொம்ப அழகு. இது தான் வீட்டுக்கார அம்மா என்று கணவர்
அறிமுகப்படுத்தியவருக்கு வயது அறுபதுக்கு மேல் இருக்கும். சிரிக்க சிரிக்க
வாங்கன்னு சொன்னவரின் கண்கள் சிரித்த மாதிரி தோன்றவில்லை.
வயதானவராக இருந்ததால் மாஜி என்று கூப்பிட ஆரம்பித்தோம்.

எங்கள் வீடுகளுக்கு நடுவில் ஒரு இரும்பு கேட். அதைத் தாண்டினால் தான் அந்த
முற்றத்திற்கு போகலாம். முதல் இரண்டு நாட்களுக்கு அதை திறக்காமல் அந்தப்
பக்கம் இருந்து ஒன்றிரண்டு வார்த்தை பேசினார். அப்புறம் என் மகன்
விளையாடட்டும் என்று அந்த கேட்டைத் திறந்தார். கொஞ்சம் மிடுக்காகவே
எப்போதும் இருப்பதாக தோன்றியதால் பேச முதலில் தயக்கமாக இருந்தது.
இரண்டு மாதம் பழக்கத்தில், பம்பாயில் மகன், மருமகள், பேரக் குழந்தைகள்
இருக்க, கணவர் வியாபரத்தை பார்த்துக் கொண்டிருக்க அவர் இங்கே தனியாக
இருப்பதாக தெரிந்தது. மருமகளோடான மனக்கசப்பில் உடல் நலமில்லாமல்
போய் கொஞ்ச நாளாகத்தான் இங்கே இருப்பதும். இது துண்டு துண்டாக அவர்
பேசியதிலிருந்து யூகித்தது. ஆனால், 'எனக்கு யாருடைய பரிதாபமும்
வேண்டாம்' என்ற உறுதியோடு இருப்பதை உணர்த்தவும் தவறியதில்லை.

அப்படி இருந்ததாலோ என்னவோ அவரோடு நெருங்க வேண்டும் போல இருந்தது.
அவராக இளகட்டும் என்று காத்திருந்ததில் இன்னும் இரண்டு மாதம் போனது.
அவருடைய கணவரும் பம்பாயில் இருந்து வந்து விட கொஞ்சம் கலகலப்பாகி
விட்டார். ஒரு தரம் ஏதோ பேசும் போது அவருடைய கணவரை 'துமாரி
பிதாஜி' (உன்னுடைய அப்பா) என்று சொல்லி அவ்வளவு நாள் போட்டு
வைத்திருந்த கோட்டையை அவரே உடைத்தார். நம்ப முடியாத ஆச்சர்யத்தில்
நிமிர்ந்து பார்த்த என் கண்களை அவர் பார்க்கவில்லை. மாஜியின் மானசீக
மகள்!

அதற்குப் பிறகு எல்லாம் அவருடைய விருப்பம் தான். அவருடைய வீட்டுக்கு யார்
வந்தாலும் கூடவே கூட்டி வைத்துப் பேசுவது, எங்கே போனாலும் என்னையும் கூட்டிக்
கொண்டு போவது...சில நேரம் விருப்பம் இல்லாத போதும் ஏனோ மறுக்க
மனம் வந்ததில்லை.

மாஜிக்கு உடல்நலம் சரியில்லாமல் நடக்கவே முடியாமல், மனதளவிலும்
பாதிக்கப் பட்டிருந்தபோது (நாங்கள் அங்கே வருவதற்கு முன்) சரி செய்தது
அங்கே இருந்த ஒரு நாட்டு வைத்தியர். காவி தரிக்காத சந்நியாசி.
அவர்களுடைய குடும்ப நண்பர். தினமும் வருவார். சில நேரங்களில் என்னோடும்
பேசிக் கொண்டிருப்பார். அவர் சந்தித்த பெரிய பெரிய சந்நியாசிகளைப்
பற்றி, அவருடைய தீர்த்த யாத்திரைகளைப் பற்றி. இயல்பானவர்.
எளிமையானவர்.

ஒரு நாள் மாஜி 'கிளம்பு, வெளியிலே போயிட்டு வரலாம்' என்றார்.
வழக்கமாக அந்த நேரத்தில் அவர் கோவிலுக்குப் போவது வழக்கம். அதனால்
அங்கே தானென்று நானும் மகனும் கிளம்பினோம். வழக்கமான பாதையை விட்டு
போகும் போது கேட்டதற்கு வைத்தியருக்கு உடம்பு சரியில்லை என்று அவருடைய
வீட்டுக்கு போவதாக சொன்னார்.

வைத்தியர் வீடு...எங்கேயோ மேட்டில் ஏறி இறங்கி கொஞ்சம் தூரத்தில்.
அங்கங்கே இடிந்து போய் ரொம்ப பழைய வீடு. ஆனால் சுத்தமாயிருந்தது.
வாசலில் கயிற்றுக் கட்டிலில் வைத்தியர். எங்களைப் பார்த்ததில் அவருடைய
சந்தோஷம் தெரிந்தது. என்னோடு வைத்தியர் பேசிக் கொண்டிருக்க, மாஜி
சமையலறையில் ஏதோ செய்து கொண்டிருந்தார். இடையில் எட்டிப் பார்த்த
போது ஒரு ஸ்டவ், நாலே பாத்திரம் இருந்த அந்த அசௌகரியத்திலும் ஒரு
சந்தோஷத்தோடு வைத்தியருக்காக உப்புமா செய்து கொண்டிருந்தார்.
சாமானெல்லாம் நாங்கள் வழியில் வாங்கிக் கொண்டு போயிருந்தோமா,
ஏற்கனவே அங்கே இருந்ததா...நினைவில்லை. இடையிடையே  ஏதாவது
வேண்டுமா என்று வைத்தியர் வாசலில் இருந்து குரல் கொடுத்துக் கொண்டிருந்தார்.

அரைமணி நேரத்தில் சக்கரையும் போட்ட இனிப்பு உப்புமா தயார். வாசல்
மணலில் என் மகன் விளையாடி கொண்டிருக்க, படிக்கட்டில் உட்கார்ந்து கொண்டு
நான் வைத்தியரோடு பேசிக் கொண்டிருக்க, ஒரு நிறைவான உணர்வோடு மாஜி
தட்டை நீட்டியது அழகான ஒரு நேச வெளிப்பாடு. ஒரு கவிதை போல. நான்
மட்டுமே ரசிக்க யாரோ தீட்டிய சித்திரம்.


Tuesday, June 02, 2015

இடப்பெயர்ச்சி பலன்கள் - 3

உரண் - க்கு பஸ் ஏற தாதரில் காத்துக் கிடக்கும் போது அரைமணிக்கொருதரம்
வாஷிக்கு பஸ் வரும். அப்போதெல்லாம் நம்ம வீடு அங்கே இருக்கக் கூடாதா
என்று இருக்கும். எங்கள் அடுத்த மாற்றல் அதே வாஷிக்கு. 88, 89 ல் அது
இத்தனை ஜிலுஜிலுன்னு இருக்காது. ரொம்ப அமைதியாய், வசதியாய்.

திருமணத்திற்குப் பின் தமிழோடு தொடர்பே இல்லாமல் இருந்து முதல் முதலாக
வாரம் தவறாமல் தமிழ் புத்தகம் கிடைத்தது. வெளியே போகும் போது தமிழ்
பேசிக் கொண்டே போகும் மனிதர்களைப் பார்க்க முடிந்தது. சில நேரம்
நடுவழியில் திரும்பி பார்த்துக் கொண்டு அப்படியே நின்று கணவரிடம்
வாங்கிக் கட்டிக் கொண்டதும் உண்டு. போய் சேர்ந்த கொஞ்ச நாளில் ஒரு
தமிழ் சங்கம் கூட கிடைத்தது. வீட்டிலிருந்து பத்து நிமிஷ நடையில் தமிழ்
சங்கக் கட்டிடம்(ஒற்றை அறை!). ஒரு அலமாரி நிறைய புத்தகங்கள்.
பெரும்பாலும் வாஸந்தி, இந்துமதியா படித்த நினைவு. இரண்டு நாட்களுக்கு ஒரு
புத்தகம் வீதம். அப்போதிருந்த புத்தகங்களில் நான் படிக்க கூடியதெல்லாம்
ஓரளவுக்கு படித்து முடித்து விட்டிருந்தேன்.

ஹிந்தி இப்போது ஓரளவுக்கு பேச முடிந்தாலும் யார் வீட்டிலும் போய் அரட்டை
அடிக்கப் பிடிக்காமல் இருந்தது. அப்போது தான் நேஹாவோடு  பழக்கம்.
நேஹா.... அப்பா மஸ்கட்டில் இருக்க, அம்மா, அக்கா, தம்பியோடு எங்கள்
பக்கத்து வீட்டில். பனிரெண்டு பதிமூன்று வயதுக்கு நல்ல உயரம். முகம் மட்டும்
குழந்தை மாதிரி கொழுகொழுன்னு. தினம் சாயந்திரம் குறைந்தது ஒரு மணி
நேரம் எங்கள் வீட்டில். எங்கேயோ ஆரம்பித்து எங்கெங்கேயோ போகும்
பேச்சு. அவள் உரையாடல் எப்போதும் இயல்பாக ஆங்கிலத்தில் மட்டும்.
பத்தாவது வரை தமிழில் படித்து ஆங்கிலத்திற்கு தாவியதில் படிப்பதும்
எழுதுவது மோசமில்லை என்றாலும் எனக்கு பேசும் சந்தர்ப்பம் இருந்ததில்லை
(அந்த ஆங்கில அறிவுக்கு பயந்து தான் தம்தரியில் ஒரு காலனியே என்னை
ஒதுக்கி வைத்திருந்தது!). வற்புறுத்துவதே தெரியாமல் மெல்ல மெல்ல அந்தப்
பெண் என்னை ஆங்கிலத்தில் பேச வைத்தது.

என்னால் முடியாதோ என்று தயங்கிய என்னை வற்புறுத்தி அவளுக்கும் அவளுடைய
தம்பிக்கும் டியூஷன் டீச்சர் ஆக்கியதும் நேஹா. இன்னும் இரண்டு குழந்தைகள்
சேர்ந்து கொள்ள, என் ஆங்கிலம் தெளிவாக ஆரம்பித்தது. முதல் முதலாக
சம்பாதிக்கிறேன் என்ற சந்தோஷம். தமிழ் சங்கமும் புதிய புத்தகங்கள்
வாங்கி வந்து இறக்கியது. ஆஹா...வாழ்கை சொர்க்கம் என்று நினைத்த
போது, மறுபடியும் மாற்றல். இந்த முறை ஊர் மட்டுமல்ல, கம்பெனியும் கூட!

புறப்படும் நாள் வீட்டிலிருந்து கிளம்பும் நேரம். கடைசி நிமிஷம் வரை
வேலை. நேஹாவிடம் சொல்லிக் கொள்ள போன போது, குளிக்கப்
போயிருந்தாள். கணவர் நேரமாகிறது என்று அவசரப் படுத்த, எப்படியோ பத்து
நிமிஷம் ஓட்டியும் அவள் வெளியே வரவேயில்லை. மனமே இல்லாமல் கீழே
வந்து ஆட்டோ ஏறி, கிளம்பும் நேரம் நேஹா ஓடி வந்தாள். அவளுடைய
வழக்கமான நீல நிற சட்டையில், கண்கள் சிவந்து, ஆட்டோ கம்பியை
பிடித்துக் கொண்டு, ஓடி வந்ததில் மூச்சு வாங்கிக் கொண்டு வழியனுப்பின
நேஹா...

இடப்பெயர்ச்சி பலன்கள் - 2

உரண் (Uran) - எங்களுடைய இரண்டாவது ஊர். இதோ இதோ என்று இழுத்தடித்து
ஏறக்குறைய பத்து மாதம் கழித்து வந்த மாற்றலில் வந்து சேர்ந்த பம்பாயின்
புறநகர் பகுதி. தாதரில் இருந்து பஸ் ஏறிப் போய்க் கொண்டேஏஏஏ இருந்தால்
மூன்று மணி நேரத்தில் உரண். ஆனால் ஏனோ அது எப்போதும் ஒரு முடிவில்லாத
நீண்ட பயணமாகவே  தோன்றும். வி.டிக்குப் பக்கத்தில் இருந்து ஃபெரியில்
நாற்பதே நிமிடம். இவ்வளவு பக்கத்தில் இருந்தும் பாம்பேயின்
ஆர்ப்பாட்டங்களோ அமர்க்களமோ தீண்டாமல் அமைதியாய் இருக்கும். ஒரு
ஒற்றைத்தெரு கடைவீதி தவிர வேற எதுவும் குறிப்பிட்டு சொல்ல இருந்தது
போல் நினைவில்லை.

பாபு சேட் வாடி(wadi) பங்களா - எங்களுடைய வீடு. வாடி என்ற பேருக்கு
ஏற்ற மாதிரி எப்போதோ இருந்த தோட்டத்தின் மிச்சமாக ஒன்றிரண்டு
மரங்கள். மற்ற இடமெல்லாம் சருகுகாய் நிறைந்திருக்கும். வாசல் கேட்டிலிருந்து
பார்க்கும் போது ஒரு காலத்தில் அழகாக இருந்திருக்கக் கூடிய ஒரு பங்களாவின்
சிதைந்த தோற்றம். முதல் முதலாக பார்த்த போது இங்கேயா இருக்கப்
போறோம் என்று யோசனையாக இருந்தது. ஏற்கனவே ரொம்ப நாள்
பிரிந்திருந்ததில் எங்கே இருக்கச் சொன்னாலும் தயார் என்ற மனநிலையில்
இருந்ததால் வாயையே திறக்கவில்லை.

அந்த பங்களாவில்(!) எங்களையும் சேர்த்து ஐந்து குடித்தனம். எங்களுடைய வீடு
முன்னாலிருந்தது. எங்களுக்கும் பக்கத்துப் போர்ஷனுக்கும் சேர்த்து ஒரு பொது
வராண்டா. நடுவில் கம்பெனியிலிருந்து வந்த ஒரு தகர தடுப்பு. அடுத்து ஒரு
பெரிய அறை...வரவேற்பு அறையாகவும் படுக்கையறையாகவும் ஒரு
தார்பாலினால் பிரிந்திருந்தது. அடுத்து நீண்ட ஒரு அறை...இதுவும் ஒரு
தார்பாலின் உபயத்தில் சமையலறையாகவும் குளிக்கும் அறையாகவும். எல்லாம்
கணவர் ஏற்பாடு. சமையலறையில் ஒரு வட்ட மேசை...ஒரு கால் ஆடிக்கொண்டு.
அது தான் சமையல் மேடை. கோணலாய் L க்ளாம்ப் அடித்து ஒரு
பலகை...சாமானெல்லாம் வைக்க. பின்புறம் ஒரு பொது கழிப்பிடம். அதைப்
பற்றிப் பேசாமல் இருப்பது உத்தமம்.

சாமானெல்லாம் கல்கத்தாவுக்கு மாற்றலை எதிர்பார்த்து அங்கே போய்
விட்டிருக்க நாங்கள் பம்பாயில். ஒரு பம்ப் ஸ்டவ், ஐந்தாறு அலுமினியப்
பாத்திரம், ரெண்டு தட்டு, ரெண்டு டம்ளர், ஒரு சப்பாத்திக் கட்டை,
கோல்... "இதில் கொஞ்ச நாள் ஒட்டு. சாமான் சீக்கிரம் வந்துடும்"
என்றார். ஆறுமாதக் குழந்தையோடு அப்படியே எப்படி ஓடியது.... இப்போது
நினைத்தால் ஆச்சரியம்!

அந்த வீட்டில் பின்பகுதியில் இரண்டு குடும்பம். அண்ணன் தம்பிகள். இரண்டு
வீட்டிலும் இரண்டிரண்டு பெண்கள். சாய்மா, ஸக்கியா, ஷபானா, ஷகுப்தா.
இதில் ஸக்கியாவுக்கு பேசவும் கேட்கவும் முடியாது. நாலு பேரில் எதாவது
இரண்டு பேர் எப்பவும் எங்கள் வீட்டில் இருப்பார்கள். அதிகம் படிக்காத, வெளி
உலகத் தொடர்பு இல்லாத பெண்கள். கொஞ்சம் அளவுக்கு அதிகமான வெட்கம்,
சொல்ல முடியாத வெகுளித்தனம். எப்போதாவது அந்த ஒற்றைத் தெரு
கடைவீதிக்கு போக காலையிலிருந்தே பரபரப்பாக இருக்கும் பெண்கள். உருது
வாசம் வீசும் அவர்கள் ஹிந்தி. வெறும் புரிந்து கொள்ளும் அளவில் இருந்த
என்னை ஹிந்தி பேச வைத்த புண்ணியம் அவர்களுக்குத்தான். மூன்று மாதம் கழித்து
சாமானெல்லாம் வந்து சேர்ந்தது. புதிதாக கட்டிய ·ப்ளாட் இருக்கு
போயிடலாம் என்று கணவர் சொன்ன போது, ஏனோ போகத் தோணவில்லை.

பாஷை கொஞ்சம் கொஞ்சமாக பிடிபட ஆரம்பித்தது. அந்த சமயத்தில் ராஜ்
கபூர் இறந்து போய் விட அவர் நினைவாக தூர்தர்ஷன் போட்ட எல்லாப் படமும்
அர்த்தம் புரிந்து பார்க்க முடிந்தது. அதற்கப்புறம் தேடித் தேடி அவருடைய மற்ற
படங்களையும் பார்க்க வைத்தது. யார் என்ன என்று தெரியாமலே குருதத்தின் Mr
& Mrs 55 பார்த்து ஆச்சரியப்பட்டதும் அப்போதுதான். சமீபத்தில் The
Telegraph ல் ஒரு முழுபக்கம் வந்த அவருடைய நினைவுநாளை ஒட்டிய
கட்டுரையை படித்த போது இந்த மனிதர் ஏன் இப்படி அநியாயமாக செத்து
போனார் என்று இருந்தது. படத்தில் மதுபாலாவோடு ஒரு பாடல் காட்சி மட்டும்
மங்கலாக நினைவில்.

பதினொராவது மாதம் மாற்றல்! மறுபடியும் மூட்டை கட்டல்!

மூன்று நான்கு வருடம் கழித்து "humrahi" என்ற தொலைக்காட்சித் தொடரில்
எங்கள் பாபு சேட் வாடி பங்களா! குளித்து, மேக்கப் பண்ணிக் கொண்ட
பெண்ணாட்டம் பளபளவென்று பார்த்த போது ஏனோ நாங்கள் இருந்த போது இருந்த
புராதன அழகு இல்லாதது போல் இருந்தது.

Monday, June 01, 2015

இடப்பெயர்ச்சி பலன்கள் - 1

2004 ல் மரத்தடிக்காக மரத்தடி சின்னக் கண்ணன் எழுதச் சொல்லி எழுதியது. என்னுடைய பதினெட்டு வருஷங்களை கேப்ஸ்யூலில் அடைத்து வழக்கம் போல சுருக்கமாக எழுதிய சில குறிப்புகள். எதோ தேட கிடைத்ததை இங்கே சேமிக்கிறேன். முன்பு மரத்தடியில் எழுதியதெல்லாம் ஒரு இடத்தில் எழுதியவர் பேர் போட்டு தொகுத்து வைத்திருந்ததை வெகு சுலபமாக ப்ளாகில் லிங்க் கொடுத்திருந்ததை இப்போது இப்படி எடுத்துப் போட்டு சேகரிக்க வேண்டியிருக்கிறது. பதினோரு வருஷத்துக்கு முந்திய... அது ஒரு கனாக்கால நினைவுகள்!

 இடப்பெயர்ச்சி பலன்கள் - 1


தெரியலைன்னா கேட்டுட்டாவது வாங்கி இருக்கலாமல்ல?"

எட்டாவதோ ஒன்பதாவதாவோ கேட்கிற ஒரே கேள்விக்கு அடுத்து என்ன பதில்
சொல்ல என்று தெரியவில்லை. அழுதுடுவேனோன்னு பயந்து "சரி...சரி
எப்படியாவது போயிடலாம்" என்று கணவர் பதில் சொல்ல 86 மே மாதம்
தொடங்கிய பயணம்.

விஷயம் வேற ஒன்றும் இல்லை. துர்க்-க்கு(Durg) டிக்கெட் வாங்கி வைக்கச்
சொல்ல, அப்பா எந்த ட்ரெயின் போகும் என்று புக்கிங் க்ளார்க்கைக் கேட்டு
பொக்கேரோ ஸ்டீல் சிட்டி எக்ஸ்பிரஸ்ஸில் டிக்கெட் வாங்கியிருந்தார். அந்த
ட்ரெயின் துர்க்குக்கே போகாதாம். டிக்கெட் வாங்க சொன்னவர் ட்ரெயின்
விவரமும் சொல்லியிருக்கலாம்! புதுப்பொண்ணுக்கு அதெல்லாம் கேட்கத்
தெரியாது. பயம் வேற. விசாகப்பட்டிணத்தில் இறங்கி வேற ட்ரெயின்
மாற்றி ஒரு முன்பதிவில்லாத பெட்டியில் பயணத்தைத் தொடர்ந்து, ரெண்டு நாள்
கழித்து ராய்ப்பூர் போய் சேர்ந்தோம்.

ராய்ப்பூரிலிருந்து இரண்டரை மணி நேர கார் பயணம் தம்தரிக்கு(Dhamtari,
MP). தம்தரி....ரொம்ப சின்னதா, கிராமம் மாதிரி அழகாயும்
இல்லாமல் நகரம் மாதிரி வசதிகளோடும் இல்லாமல். ஊருக்கு வெளியே
குஜராத்திகள் சேர்ந்து கட்டியிருந்த ஒரு காலனியில் வீடு. அந்த ஊருக்கு அது
ரொம்ப ரொம்ப வசதியான வீடு. எல்லா வீட்டின் வராந்தாவிலும் தவறாமல்
ஒரு ஊஞ்சல். சதா அசைந்து கொண்டிருக்கும் அந்த ஊஞ்சல்களில் ஓவ்வொரு நேரம்
ஒவ்வொரு வயதுக் கூட்டம். பள்ளிக்கூடம் போகும் வரை குழந்தைகள், பிறகு
வீட்டுப் பெரியவர், பதினோரு மணிக்கு மேல் வீட்டுப் பெரியம்மா,
மத்யானம் அதற்கும் கொஞ்சம் ஓய்வு. மாலையில் வீட்டு மருமகள்கள், ராத்திரி
நேரம் வியாபாரம் முடித்து வந்த ஆண்கள் கூட்டம்.

மாலை ஐந்து மணிக்கே ராத்திரி சமையலை முடித்து விட்டு பெண்கள் எல்லாரும்
வாசலுக்கு வந்தாகிவிடும். கூட்டம் கூட்டமாய் அரட்டை, வம்பு..எல்லாம்.
தூர்தர்ஷன் புண்ணியத்தில் பானி, ஆவ்....இப்படி ஏதோ நாலு வார்த்தை
மட்டுமே தெரியும். அதனால் யாரைப் பார்த்தாலும் (வாய் வலிக்க!) ஒரு
புன்னகை மட்டும்.

என் மனைவிக்கு ஹிந்தி தெரியாது. எதாவது பேசனும்னா இங்கிலீஷ்ல
கேட்டாத்தான் புரியும் என்று பக்கத்து வீட்டு அம்மாவிடம் கணவர் சொல்லி
வைத்திருந்திருக்கிறார். அதனாலேயோ என்னவோ யாரும் என்னோட பேசவே
வரமாட்டார்கள்(இதெல்லாம் அப்புறம் தான் தெரிந்தது). எப்போதும் தனியாக
உட்கார்ந்திருக்கும் என்னிடம் ஒரு வயதான மாஜி மட்டும் நேரம் கிடைக்கும்
போது வந்து உட்கார்ந்திருப்பார்கள். எதோ நினைத்துக் கொண்டு மெல்லிய
குரலில் பேசிக் கொண்டிருப்பார். எதுவும் புரியாமல் அவரையே பார்த்துக்
கொண்டு நான்.

அங்கே போகும் வரை ஒரு தனியார் கம்பெனி சிவில் எஞ்சினியரின் வாழ்கை
எப்படி, வேலை நேரம் எவ்வளவு, எத்தனை நாளுக்கு ஒரு தரம் மூட்டை கட்ட
வேண்டும்...எதுவும் தெரியாது. ஏன் யோசிக்கவும் இல்லை??! கணவர் வேலைக்கு
எப்போ போவார் என்று மட்டும் தான் தெரியும். திரும்பி வருவதைப் பற்றி
எந்தத் தகவலும் இருக்காது. இலட்சக்கணக்கான தகவல்களோடு ஒரு ரீடர்ஸ்
டைஜெஸ்ட் "book of facts", ஒரு ரெபிடெக்ஸ் ஹிந்தி புக்...
இவற்றோடு ஓடிய நாட்கள். ஊரின் ஒரே பொழுது போக்கு ஒற்றை சினிமா
தியேட்டர், புரியாத ஹிந்திப் படங்கள். நீண்ட தனிமையான நாட்களின்
வெறுமையையெல்லாம் சைக்கிள் ரிக்ஷா குலுங்கலில் இடித்துக் கொண்டே போய்
சினிமா பார்த்த சந்தோஷங்கள் இட்டு நிரப்பியது.

பாவ் பாஜி என்ற பெயரை(யே) முதல் முதலாகக் கேட்டதும் அங்கே தான்.
மார்க்கெட் போகும் போதெல்லாம் மூக்கைத் துளைக்கும் வாசனை. ஒரு நாள்
தயங்கித் தயங்கி கேட்க...அதிசயமாய் ரோட்டோரக் கடைக்கு கணவர் ஓக்கே
சொல்ல...சுடச்சுட பாஜி தட்டில் வந்தது. பாவ் தவாவில் வறுபடறதுக்குள்
நாங்கள் வெறும் பாஜியை சாப்பிட ஆரம்பித்து விட்டோம். கடைக்காரர்
அவசர அவசரமாக சுட்டு நீட்டினதும் தான் தெரிந்தது, அது கூட சேர்த்து
சாப்பிடணும் என்று!

ஆறு மாதங்கள் ஓடி விட்டது. ஐந்து மாத கர்ப்பம். டாக்டர் வசதிகள்
சரியில்லை என்று கூட்டிட்டுப் போக அம்மா வந்தாயிற்று. கணவருக்கும் வேலை
முடியும் கட்டத்தில். ஊருக்குக் கிளம்புகிற நாள் காலை. அம்மா வழியில்
சாப்பிட சாப்பாடு கட்டிக் கொண்டிருந்தார். நான் மற்றதெல்லாம் எடுத்து
வைத்துக் கொண்டிருக்க, கணவர் இது நாள் வரை உபயோகித்துக் கொண்டிருந்த
கட்டில்களைப் பிரித்து ஒன்றை வேறு அறையில் போட்டுக் கொண்டிருந்தார்.
(நான் வருவதற்கு முன்பு அது கம்பெனியின் விருந்தினர் தங்கும் இடமாயிருந்தது.
அந்த அறையில் அவர் தனியாக தங்கியிருந்தார்).

"உன் வீட்டுக்காரர் இதெல்லாம் நாம போனப்பறம் செஞ்சுக்கக் கூடாதா? இன்னும்
நீ கிளம்பவே இல்லை, அதுக்குள்ள ஏன் உன் கட்டிலை வெளியில போடறார்?"
இது அம்மா.

நான் எதுவும் பேசவில்லை. சோகம் சொல்ல ஒவ்வொருத்தருக்கு ஒரு வழி
இருப்பது போல சோகத்தை மறைக்கவும் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு வழின்னு
அம்மாவிடம் சொல்லவா முடியும்?

ஸ்டேஷனில் எங்கள் பெட்டி எங்கேயோ தூரத்தில் இருக்க, தேடிக் கண்டுபிடித்து
நான் ஏறவும் ட்ரெயின் கிளம்பவும் சரியாக இருந்தது. கடைசியாக எதுவும்
பேசிக் கொள்ள நேரம் இருக்கவில்லை. புறப்பட்டு விட்ட ட்ரெயினிலிருந்து
எட்டிப் பார்க்கும் போது தெரிந்த கண் கலங்கிய கணவர் முகத்தை மறந்துவிடக்
கூடாது என்று இப்போதும் அடிக்கடி நினைவுபடுத்தி வைத்துக் கொண்டிருக்கிறேன்.
அதற்குப் பிறகு அப்படியொரு கணம் இன்று வரை பார்க்கக் கிடைக்கவில்லை.
ஜனகராஜ் பாணி வழியனுப்பு வைபோகம் தான் நடக்கிறது.


நிர்மலா.

பி.கு: இதோ இன்னொரு நினைவலைகள்! 18 வருஷமாக தொடரும் ஒரு
பயணத்தின் சில நியாபகங்கள். வசித்த இடங்கள், சந்தித்த மனிதர்கள்,
அவர்கள் தந்த பாதிப்புகள். தொடர் எழுத நினைவு படுத்தியதில் என்
பதினெட்டு வருடங்களையும் மறுபடியும் ஒருதரம் வாழ்ந்து பார்த்த மாதிரி
இருந்தது. கூட்டிக் கழித்துப் பார்க்கும் போது நிறைவாகத்தான் இருக்கிறது.
ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு நிறம் நிறைத்திருக்கிறார்கள், இனிமேலும்.

யே ராஸ்தா ஹை கெஹரஹா அப் முஜ்ஸே
மில்னேகோ ஹை கோய் கஹி அப் துஜ்ஸே

(இந்தப் பயணம் என்னிடம் சொல்கிறது - இன்னும்
நீ சந்திக்க வேண்டியவர்(கள்) எங்கோ இருப்பதாக)

Thursday, December 25, 2008

சுருக்குப்பை - 2008

அதிகம் கேட்டது - disturbia - Rihanna, வீணையடி நீயெனக்கு - எதையோ தேட இணையத்தில் கிடைத்த பாரதியார் பாடல் - எஸ்பிபி குரலில், pappu cant dance saala, ishq ada hai, போன மாதம் முழுக்க - நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை.

அதிகம் பார்த்த வீடியோ - gimme more - Britney Spears - (sexy figure n innocent face - deadly combo), mayya mayya - mallika sheravat பாட்டின் ஓபனிங் சீனுக்காக.

ரசித்த படங்கள் - Rock on, jhodha akbar, பொய் சொல்ல போறோம், the bridges of madison county, into the wild...

பெரிய ஐயோ - saawariya. jab se tere naina தவிர்த்து!

ஜொள்ளு லிஸ்டில் புது வரவு - ஃபர்ஹான் அக்தர்.

ஆஹா - தீபிகா படுகோன்.

தினமும் காலையில் வாசிக்க விரும்புவது - ஜெயமோகன் வலைப்பதிவு.

சந்தோஷம் - 'மகளிர் மட்டும்' - எட்டு பேர் பெண்கள் குழு கனஜோராக போய்க் கொண்டிருப்பது.

ரெசல்யூஷன் - நோ வாழைப்பழம். :-(

வருத்தம் - ப்பூ இவ்ளோதானான்னு ரொம்ப பெருமையடிச்சிட்டு இருந்த ஷேர் டிரேடிங் ஊத்திக் கொண்டது.

வாசித்ததில் பிடித்தது - காட்டில் ஒரு மான் - அம்பை.

பாதியில் விட்டது - a fine balance - Rohinton mistry, Shantaram - gregory david roberts. முன்னது பிழியும் சோகம், ரெண்டாவது நீளம்.

கச்சேரி - பாம்பே ஜெயஸ்ரீ, டி.எம்.கிருஷ்ணா. ஹிந்து ம்யூஸிக் ஃபெஸ்டில் ரொம்ப ரசிப்பேன்னு நினைத்த நிகழ்ச்சிகளை எல்லாம் தாண்டி உலுக்கிப் போட்ட கச்சேரி. கர்னாடக சங்கீதம் கேட்கும் போது வழக்கமாக நிகழும் அலைபாய்தல்களை ஆரம்பம் முதலே கட்டுக்குள் கொண்டு வந்து 'சர்வம் ப்ரம்ம மயம்' தர்பாரி கானடாவில் கேட்கும் போது எத்தனையோ நாட்களாக சேர்த்து வைத்திருந்த சோகத்தையெல்லாம் தட்டி எழுப்பி இப்ப அழுன்னு அழ அடித்த கச்சேரி. உனக்கு அந்தப் பாட்டா ரொம்ப பிடித்திருந்தது என்று ஆல்டைம் ம்யூஸிக் பார்ட்னர் சக்ரபாணி அய்யா ஏன் திரும்பத் திரும்பக் கேட்டார் என்பது இன்னும் புரியாத ஆச்சர்யம். (அந்த ராகம் பற்றிச் சொன்னதும் அவரே) அன்று இரவு வெகு நேரம் வரை தூங்கமுடியவில்லை. இன்னொரு வருஷத்துக்கு இது எதேஷ்டம்.

லைட் ம்யூஸிக் - அதே ஹிந்து ம்யூஸிக் ஃபெஸ்டில் ஸ்ரீநிவாஸ், சின்மயி, நரேஷ் அய்யர் & அனுராதா ஸ்ரீராம் வழங்கிய பழைய ஹிந்தி சினிமா பாடல்கள். ம்யூஸிக் அகடமி இதுக்கு ஓகே சொன்னது பெரிய ஆச்சர்யம்! சிரத்தையாக தேர்ந்தெடுத்த பாடல்கள். sincere effort. டிட்பிட்ஸ் - ஸ்ரீநிவாஸுக்கு வெள்ளைக் குர்த்தா பொருந்தின அளவு கலர் எடுபடவில்லை. நரேஷ் அய்யரின் சுருள் தலைமுடி ஆஹா. சின்மயி ஸ்வீட். உடைகள்தான் கொஞ்சம் gaudy. அனுராதா ஸ்ரீராம் இரண்டரை மணி நிகழ்ச்சிக்கு நான்கு முறை உடை மாற்றியது ஓவர்.

பிடித்த இடங்கள் - மணாலிக்கு பக்கத்தில் செய்ஞ் என்ற சின்ன ஊர். தங்கியிருந்த கெஸ்ட் ஹவுஸுக்கு முன்னால் சம்மணமிட்டு உட்கார்ந்திருந்த பிரம்மாண்ட மலையும் மூடியிருந்த கதவு ஜன்னல்களைத் தாண்டி கேட்ட செய்ஞ் நதியின் கூச்சலும் . குளிர்காலத்தில் முழு மலையும் பனியால் மூடியிருக்குமாம். அங்கே வசிப்பவர்கள் அந்த ஆறு மாதத்திற்கு மலைமேலேயே வாசம். எத்தனை யோசித்தும் அந்த வாழ்க்கையை முழுதாக கற்பனை செய்ய முடியவில்லை. முயற்சித்துப் பார்க்கும் ஆர்வம் இருக்கிறது.

மணாலியில் ரோர்க் நினைவிடத்தில் ஒரு தாழ்ந்த தளிர் பச்சை மரத்தின் கீழே போட்டிருந்த கருங்கல் உட்காருமிடம். குளிர்ச்சியும் ஏகாந்தமுமாய். அங்கே உட்கார்ந்திருக்கும் போது அந்த முழு பயணமும் அந்த இடத்தில் உட்கார்ந்து அப்படி உணர்வதர்காக மட்டும் என்றிருந்தது. அங்கே வாழ்ந்த அந்த தம்பதிகளை நினைத்து கொஞ்சம் பொறாமை வந்தது.

சொல்ல முடியாமல் போனது - டிக்கெட்டுடன் ஒரு durex condom இலவச இணைப்பாக வைத்து மிரட்டிய ராக் ஷோ. ஐந்தரை மணிக்கு என்று அறிவித்திருந்த மைதானத்தை தேடிப் போக ஆறானது. சொல்லி வைத்தது போல அத்தனை பேரும் ஏறக்குறைய முழு கறுப்பில் தான் உடை. அந்த நுழைவாயிலில் நின்றிருந்தவர்களில் முப்பது வயதுக்கு மேலிருந்தவர்களை எண்ணிவிடலாம். ஏழு மணிக்கு தகரத் தடுப்பை தட்டி உள்ளே விடச் சொல்லி ரகளை மெல்ல ஆரம்பித்தது. உள்ளே விட ஆரம்பித்தவுடன் முண்டியடித்த கூட்டம் நடுவில் மாட்டிக் கொண்ட ஒற்றை 'நானை' அலுங்காமல் பத்திரமாக உள்ளே கொண்டு போய் சேர்த்த அத்தனை இளைஞர்களுக்கும் நன்றி.

திருப்தி - உயிர்த்திருப்பது.

சோகம் - சாப்பிடப் போன இடத்திலோ சினிமா அரங்கிலோ குண்டுகளெதும் வெடிக்காமல் இன்னும் உயிரோடிருப்பதற்காக சந்தோஷப் படுவது.

Tuesday, December 09, 2008

ஒரு முத்தம்

சென்னை மழையும், வீட்டு விசேஷமுமாய் சேர்ந்து ஒரு பத்து நாட்கள் நிறைய பேரோடு இருக்க நேர்ந்தது. பொதுவாகவே தனிமை விரும்பி, ஒரு நாளின் சில மணிநேரங்களாவது தனியாக இருக்காது போகும் போது தோன்றும் அசௌகரியமும் மெல்ல பரவும் சிடுசிடுப்பையும் எப்போதும் உணர்ந்திருக்கிறேன். அதனாலேயே இது போன்ற நாள் பூராவும், தொடர்ந்தும் உறவினர்களோடு கழிக்க நேரிடும் சமயங்களுக்காக முன் கூட்டியே என்னை தயார் செய்து கொள்ள வேண்டியிருந்திருக்கிறது.

இந்த சில நாட்களில் கவனித்தது...

ஐந்து வயதுக்குக் கீழான ஒரு குழந்தை கூட இருக்கவில்லை. குழந்தையின் சிரிப்பிலும் மழலைப் பேச்சிலும் பரவியிருக்கக் கூடிய மென்மை அறவே இல்லை. எல்லாரும் எல்லா நேரமும் பெரியவர்களாகவே இருந்தோம்.

அறுபது ப்ளஸ் ஆண்கள் கூடுதல் சிடுசிடுப்பாக இருந்தார்கள். அவர்களில் ஒருவருக்கும் ஒருவரோடும் ஒத்துப் போகவேயில்லை. மாமனார் - மருமகன், அண்ணன் - தம்பி... எந்த உறவும் விதிவிலக்கில்லை.

ஆண்கள் கையில் டீவி ரிமோட் கிடைத்தால் தவறியும் கீழே வைக்காமல் இருந்தார்கள். பத்து பதினைந்து பேர் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருக்கும் போதும் கூச்சமில்லாமல் சேனல் மாற்றிக் கொண்டே இருந்தார்கள். பெண்கள் சீரியல் பார்க்கத் தொடங்கும் போது பகல் சீரியலுக்கு அலுத்துக் கொண்டவர்கள், ப்ரைம் டைம் சீரியல்களுக்கு சத்தமில்லாமல் ஜோடி சேர்ந்து கொண்டார்கள்.

தான் வாங்கி வந்திருந்த ஒரு விசிடி ரொம்ப பிடித்திருந்ததால் வந்திருந்த எல்லாரோடும் மூன்று நாட்களில் நான்காவது முறையாக ஒரே படத்தை ஓடவிட்ட அப்பாவைப் பார்க்க பயமாகவும் கவலையாகவும் இருந்தது.

பெண்கள் சிக்கனத்திற்கும் கஞ்சத்தனத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் அதை சாமர்த்தியமாக நினைத்து தங்களை இன்னும் சாமர்த்தியசாலிகளாக்கும் முயற்சிகளில் இருந்தார்கள். அதில் ஒருவருக்கொருவர் போட்டி வேறு.

கணவரை ஊரில் விட்டுவிட்டு தனியாக வந்த பெண்கள் சுதந்திரமாக இருந்தார்கள். நாளுக்கு ஒரு முறை செல்போனில் பேசும் போது வழக்கமில்லாத பிரியமாய் பேசினார்கள். வறட்சியான குடும்ப வாழ்க்கைக்காக சலித்துக் கொண்டவர்கள் மக்கள் கல்யாணத்தைப் பற்றி கவலைப் பட்டார்கள்.

அரட்டை, விளையாட்டுகள், கேலிகளுக்கு குறைவில்லை.

கடைசி நாள் கிளம்புவதற்கு முன் சாப்பாட்டு மேசையில் யாரோடோ பேசிக் கொண்டிருக்கும் போது 'கிளம்பறோம்மா' என்று சொல்லி வலது நெற்றியில் அப்பா கொடுத்த அவசர முத்தத்தில் அதுவரை தளும்பிக் கொண்டிருந்ததெல்லாம் நிலை கொண்டது.

Sunday, December 31, 2006

தலைப்பு? நோ தலைப்பு

போன மாதம் ஒரு கொல்கத்தா பயணம் இருந்தது. போகும் போதே சரியில்லாத உடம்பு அங்கே போய் அதிகமாகப் படுத்தியதும், கொல்கத்தா கொஞ்சம் என்னை மறந்து போனதாய் உணர்ந்ததும் பெரிய விஷயமில்லை. வழக்கம் போல காளிகாட் போனதும் வழக்கமில்லாமல் ஒன்றைப் பார்த்ததும் தான் விஷயம்.

பத்து நிமிடத்தில் காளியைப் பார்த்து முடிந்தாலும் அங்கேயிருந்து கிளம்ப முடியாமல் வெறுமனே சுற்றிக் கொண்டிருந்ததும், என்ன தான் தேடுகிறேன் என்று தெரியாமல் அலைமோதியதும்... வழக்கம் போல அந்த பலிபீடத்தைப் பார்த்துக் கொண்டே நின்றதும்... ஒன்றிரண்டு வெற்றுச் சுற்று முடித்து கிளம்பப் போகும் போது... இழுத்துக் கொண்டு வந்த கறுப்பு ஆடுகள்... யோசனையே இல்லாமல் பின்னால் போனது... மறுபடியும் அந்த பலிபீடத்திற்கே வந்து சேர்ந்தது... ஏதோ கேள்விகள்... எவ்வளவு என்ன என்று விசாரணைகள்... முடித்து அங்கே ஒரு மேசை போட்டு உட்கார்ந்திருந்தவரிடம் போய் தகவல் சொல்கிறார்கள்... கீழே ஒரு குழாயைத் திறந்து அவசரமாக தலையை மட்டும் பேருக்கு நனைத்தார்கள்... இழுத்துக் கொண்டு வர கழுத்தில் போட்டு வந்த கயறு கழட்டப்பட்டது... அதுவரை பேசாமல் தான் இருந்தது... முன்னங்கால்களை பின்பக்கமாக வளைத்துப் பிடித்த போது தான் அந்த சத்தம் கேட்கத் தொடங்கியது... அதற்குப் பின் அதிக நேரம் எடுக்கவில்லை... அதுவரை போவோரும் வருவோரும் தொட்டுக் கும்பிட்டுப் போன அந்த மரச் சட்டத்தில் தலை வைக்கப் பட்டது... அசையாமல் இருக்க ஒரு இரும்புக் கழியால் நிறுத்தப் பட்டது... உயர்ந்த அந்த அரிவாள் எந்த நொடியில் கழுத்தைக் கடந்தது என்று கவனிக்க முடியவில்லை... துடித்துக் கொண்டிருந்த உடம்பை ஒரு புறமாகத் தள்ளி விட்டு தலையைத் தூக்கிக் கொண்டு வருகிறார்... வழியும் ரத்தத்தில் அவர்கள் குடும்பத்தவருக்கு பொட்டு வைத்து விடுகிறார்... முடிய முடிய அடுத்தது தயாராகிறது... பக்தியும் இல்லாமல் பதைப்பும் இல்லாமல் வெறுமனே தான் பார்த்துக் கொண்டிருந்தேன். முன்று நான்கு வயது சின்னப் பையன் எதற்கு என்று தெரியாமல் கையில் சுமந்து கொண்டு, வரும் போது பேசிக் கொண்டே, அந்த குட்டி ஆட்டைப் பார்த்ததும் அங்கே நிற்க முடியவில்லை. வெளியே வரும் போது கொஞ்சம் வெறுமையாக இருந்தது. யார்கிட்டயாவது சொல்லியே ஆகணும் என்று மண்டை வெடிக்க, கூப்பிட்ட இரண்டு பேரும், 'உன்னை யார் அதையெல்லாம் பார்க்கச் சொன்னது?' என்றும் 'கொஞ்சம் கூட இரக்கமே இல்லையா?' என்று கோவித்ததும்... அதைப் பற்றிப் பேசவே தோணவில்லை.

நேற்று தொலைக்காட்சியில் கை பின்னால் கட்டி கழுத்தில் கருப்பு துணி சுற்றி...

Saturday, April 15, 2006

சென்னையில் Blank Noise

இணையம் இல்லாத ஒரு மாத காலத்தில் மதியிடமிருந்து வந்திருந்த மயில் சொன்னது eve teasing எண்ணங்களை பகிர்ந்து கொள்ளும் blogathon என்ற தொடர் பதிவுகளைப் பற்றி. யாரும் எழுதினார்களா தெரியவில்லை. நான் எழுத யோசித்த போது அங்கங்கே பேருந்திலும் நடைபாதைகளிலும் சந்தித்த நொடி நேர சுகம் தேடும் இடிமன்னர்கள், தொண்ணூறுகளில் ஏதோ ரயில் நிலையத்தில் இருந்து வெளியில் வர முயற்சிக்கையில் அதீத நெரிசலில் பின்னால் உரசிக் கொண்டிருந்த ஒரு ஆண் உறுப்பையும் தவிர பெரிதாய் எதுவும் நினைவுக்கு வரவில்லை. திரும்பிப் பார்த்ததில் விலகிப் போன அந்த முகமில்லாத மனிதரை முற்றிலும் மறந்து போகவில்லை என்று இப்போது தெரிகிறது.

மறுபடியும் கில்லி சொல்லித் தெரிந்தது சென்னையில் இவர்கள் கூடப் போவது. 14 ம் தேதி மாலை நாரத கான சபாவைத் தேட நேரமாகுமோ என்று முன்னாலேயே புறப்பட்டு போனதில், ஆறேகால் மணிக்கு சபாவிற்குள் நுழைவதற்கு முன்னால் வுட்லேண்ட் கபேயில் ஒரு வெட்டுவெட்டிக் கொண்டிருக்கும் கச்சேரி ரசிகர்களில்
வலைபதியும் மக்கள் இலட்சணம் எதும் தெரியாததால் இன்னும் முக்கால் மணி நேரத்தை என்ன செய்வது என்று தெரியவில்லை. சாரதியார் பக்கத்திலிருக்கும் ஹனுமார் கோவிலுக்கு போங்களேன் என்று கூட்டிப் போனதில் ஒரு ஐந்து நிமிடம் ஓட்ட முடிந்தது. ஒரு சலாமுக்கும் குங்குமத்தீற்றலுக்கும் அதுக்கு மேல் எத்தனை நேரமாகப் போகிறது?! இத்தனை சீக்கிரம் முடிஞ்சுதா என்ற சாரதியின் ஆச்சர்யத்தை ஒதுக்கிவிட்டு வேற என்ன? என்று அந்த பிராந்தியத்தை சலித்ததில் ஒரு செருப்புக்கடை, ஒரு மினி கண்காட்சி... எதிலும் எதுவும் வேலையிருக்கவில்லை. சத்தம் அதிகமாய் ஒர் உள்ளடங்கிய கடை கூப்பிட்டதில் எட்டிப் பார்க்க AVM Music Store கண்ணில் பட நேரம் போனதே தெரியவில்லை.

ஏழு பத்துக்கு அவசரமாய் போய் சேர கபேயில் Blank Noise கூட்டம் ஆரம்பமாகி விட்டிருந்தது. மூன்று மேசைகளை வளைத்துப் போட்டு உட்கார்ந்திருந்த கூட்டத்தில் ஆணும் பெண்ணுமாய் எல்லாவயதுகாரர்களையும் பார்க்க முடிந்தது. மேலோட்டமாக சில விவாதங்கள், கருத்து பகிர்தல்கள், என்ன செய்யலாம், ஏன் இப்படி என்ற பேச்சுகள். ஏழு மணிக்கு, அடுத்ததாய் இந்த மாதம் 29ம் தேடி மறுபடியும் கூடுவதாயும் இடம் பின்னர் அறிவிக்கப் படும் என்று முடிவானது. நேரமிருக்கிறது என்னை உபயோகப் படுத்திக் கொள்ளலாம் என்று சொல்லி வந்திருக்கிறேன்.

முடிந்தபின் கொஞ்ச நேரம் அரட்டையில் சில அறிமுகங்கள், அவரவர் கேள்விப்பட்டதும், என்ன செய்யலாம்ங்களும். கொஞ்சம் இணையம்... சந்தர்பம் கிடைத்ததில் தமிழ்மணமும் ஆயிரத்தை எட்டும்(எட்டியாச்சா?) தமிழ் வலைப்பதிவுகளையும் பேசி விடை பெற்றேன். அந்த சிறு கூட்டம் இன்னும் தொடர்ந்து கொண்டிருந்தது. இந்த Blank Noise எங்கே எவ்வளவு தூரம் போகும் என்று தெரியவில்லை. எதாவது முயற்சி செய்ய வேண்டும் என்று நினைப்பதே முதல் படியாய் இருக்கட்டும்.

Friday, March 24, 2006

மிஸ் யூ கொல்கத்தா

ஒன்றரை வருட கொல்கத்தா வாழ்கை ஒரு செவ்வாய்கிழமையோடு முடிந்து போனது. கிளம்ப வேண்டும் என்றான போது நூறு கை கொண்டு கொல்கத்தாவை துழாவ வேண்டும் போலிருந்தது. தேடிப் பார்த்த சிலதும் பார்க்க முடியாமல் போனதும், பெங்காலி சினிமாவுமாய் கழிந்த கடைசி நாட்கள். கொஞ்ச வருஷமாய்
கொண்டிருக்கும் வைராக்கியம் விலகி நின்று கைகட்டி வேடிக்கை பார்த்ததும், 'மனுஷங்களோட ஒட்ட மாட்டேன்னு தானே சொன்னே... இப்போ ஊரோட ஒட்டிப் போனியே... பாத்தியா உன்னால இப்பவும் முடியலை'ன்னு சிரித்துக் கொண்டே சொன்னதும் கேட்டது.

ரோட்டிற்கு அந்தப் பக்கம் இருந்து, பார்க்கும் போதெல்லாம் வெறும் புன்னகை மட்டும் பரிமாறிக் கொண்டிருந்த மிஸஸ். எதிர்வீடு (இப்பவும் பெயர் தெரியாது)... திடீரென்று வந்த ஞானோதயத்தில் முந்தின இரவு போயிட்டு வரேன் என்று சொல்லி வரப் போனதும், எங்கெல்லாமோ அலைபாய்ந்த பேச்சு வலைப்பதிவிலும், கொல்கத்தா தேடலிலும் வந்து நின்றதில், 'நாம் முன்னரே சந்தித்திருக்க வேண்டும்' என்று இருவருக்குமே தோன்றியது. இன்னும் பத்து வருஷம் போனால் கையில் எடுத்தாலே உதிர்ந்து விடும் போலிருக்கும் ஒரு இரட்டை தலையணை சைஸ் புத்தகத்தைக் காட்டி, 'பெங்கால் வரலாறு பற்றிய புத்தகம்... என் அத்தை கிட்ட இருந்து எடுத்து வந்தேன். அவங்க கிட்ட இதுமாதிரி நிறைய இருக்கு' என்றுசொன்ன போது புத்தகத்திற்காக இல்லாவிட்டாலும் அந்த பாதையில் நிறைய தூரம் பயணித்திருந்திருக்கலாம் என்றிருந்தது.

மாலை வேளைகளில் மொட்டை மாடியில் நடக்கையில் தெரியும் மேகம், சிகப்பு விளக்கெரியும் தூரத்து டவர், சுற்றியும் முளைத்துக் கிடக்கும் மரம் செடியெல்லாம் பார்க்கும் போது கொல்கத்தாவைப் போலத்தான் இருக்கிறது. முச்சு விடும் சத்தம் கூடக் கேட்கும்... அந்த அமைதிக்காகவே சர்வசுதந்திரமாய் வீடெல்லாம் நடமாடும் குருவிகள் போய் மாறி மாறி நடமாடிக் கொண்டிருக்கும் மகளோ மகனோ இது சென்னை என்று நினைவு படுத்துகிறார்கள். ராத்திரிகளில் திடீரென்று கலையும் தூக்கத்தில் உணரும் வெறுமையை அசை போடும் அனுபவமும் புதிதாய் இருக்கிறது. தடுமாற்றத்தோடு அலைபாயும் பந்து போல உணர்கிறேன். நிதானத்திற்கு வரும் போது அல்லது நிதானத்திற்கு வருவதற்காகவேயாவது மறுபடியும் எழுத ஆரம்பிக்க வேண்டும். சொல்ல கொஞ்சம் கொல்கத்தா கதை இருக்கிறது.

Thursday, November 24, 2005

காஷ் மே...

'சமுதாயம் வரிக்கும் திருமணம், குடும்பம், பொறுப்பு, அதன் தொடர்பான கடமைகள் என்ற கோடுகளுக்குள் அதிகம் கேள்விகள் இல்லாமல், இருந்தாலும் பெரிய போராட்டங்களில்லாமல், சின்ன முணுமுணுப்பு, கொஞ்சம் சலசப்பு காட்டி வாழும் பெரும்பான்மை. மீறினாலும் மதிப்பாக ஆன்மிகம், துறவு, (போலிச் சாமியார்களும்
சேர்த்தே) ஒரு சிறுபான்மை. அதிலும் சேராமல் இதிலும் சேர்த்தியில்லாமல் இன்னொரு சிறுபான்மை. இவர்களை குறுகுறுப்பான ஓரக்கண் பார்வையில் பார்த்துக் கொண்டு அவசரமாக விலகிக் போன காலங்கள் போய், பொருட்படுத்தாமல் இருக்கப் பழகி, பரிதாபப் பட்டு... எல்லாம் தாண்டி அவர்களை அவர்களாகப் புரிந்து கொள்ள முடியும் என்ற நிலைப்பாடு வந்திருக்கிறது.'

இப்படி ஒரு முன்னுரை மனதில் எழுதி வைத்து அந்த சந்திப்புக்கான முனைப்பு தொடங்கியது நட்சத்திர வாரத்திற்கான அழைப்பு வந்த போது. எப்படியாவது அதற்கு முன் சந்தித்து விடவும் அந்த சமயத்தில் கட்டாயம் அவர்களைப் பற்றி ஒரு பதிவு இடவும் ஒரு வேகம் இருந்தது. பழக்கமில்லாத ஊர், அதிகம் நண்பர்களும் இல்லை. யார் இதற்கு உதவி செய்வார் என்ற யோசனையில், எண்ணத்தில் தட்டுப் பட்டது ரேணுபாலா மொஹந்தி. மாதாந்திர லேடீஸ் க்ளப் கூட்டத்தில் வெட்டி அரட்டை நேரத்திலும் எதாவது செய்ய வேண்டும் என்ற முனைப்புடன் இருப்பது அவர் மட்டுமே. அவரிடம் அந்த சந்திப்பு நோக்கத்தைச் சொல்லி யாரையாவது தெரியுமா என்று கேட்டதற்கு விசாரித்துச் சொல்வதாகச் சொன்னார். சரியாக இரண்டாம் நாள் ஒன்றிரண்டு NGO க்களைப் பற்றிச் சொல்லி தொலைபேசி எண்ணும் தந்தார்.

முதலாவதாகக் கொடுத்திருந்த எண் தான் எனக்குத் தேவையானதாய் இருந்தது. தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது யார், என்ன, எதற்காக என்ற விபரம் கேட்டுக் கொண்டு யாரிடமிருந்தாவது அறிமுகக் கடிதம் தேவையிருக்கும், ஆனாலும் நீங்கள் விரும்பும்வது போல இந்த வாரத்தில் முடியாது, அடுத்த வாரம் பார்க்கலாம் என்று சொல்லி விட்டார். என்னுடைய நட்சத்திர வார அவசரமோ, ஆர்வமோ அவருக்கு அவசியமில்லாமல் இருந்தது.

அடுத்த படையெடுப்பு கணவரிடம். வேறென்ன அந்த அறிமுக கடிதத்திற்காகத்தான். ஏற்கனவே இதைப் பற்றிப் பேசியிருந்தாலும் 'அவசியம் போகணுமா' என்ற கேள்வியோடு வாங்கித் தந்தார். நாலுவரி அறிமுகக் கடிதத்தில் குட்டியாய் ஒரு கையெழுத்தும் மங்கலாய் ஒரு ரப்பர் ஸ்டாம்புமாய். வேறு வழியிருக்கவில்லை. அதைக் கொண்டு வர அந்த NGO அமைப்பிடம் அனுமதி கேட்டு, வரச் சொன்ன நாள் போன போது அமைப்பின் தலைவி அலுவலகத்தில் இல்லை. காத்திருந்த நேரத்தில் அவர்களுடைய சேவைகள் பற்றிய பட்டியலும் புகைப்படங்களும் சுவரெல்லாம் தொங்க, பார்க்கக் கிடைத்தது. அவருடைய காரியதரிசியிடம் விபரம் சொல்லி கொடுத்து விட்டு வந்தாலும் அவர் அதைக் காண்பிப்பாரா என்ற சந்தேகம் இருந்தது. இப்போதும் வேறு வழியிருக்கவில்லை.

அதற்குப் பின் தொடர்ந்த தொலைபேசி விசாரிப்புகளில் எப்போதும் இல்லாதிருந்தது தலைவியும், குறைவில்லாமல் இருந்தது சலிப்பும். ஒரு கட்டத்தில் 'எங்களுக்கு உங்களைப் போன்ற ஆட்களுக்கு செலவிட நேரமில்லை. நீ யாரென்று தெரியாது. எதிலோ எழுதுகிறாய் என்கிறாய்... என்ன எழுதப் போகிறாயோ, அதனால் எங்களுக்கு தொல்லை வரலாம், நீ புகைப்படம் எடுக்க வேண்டும் என்பாய், அந்த இடத்தைப் பற்றித் தெரியுமா உனக்கு? உன்னை அங்கே அழைத்துப் போகும் அவசியம் எங்களுக்கு என்ன? ' என்று சொல்லி என் தொடர் தொலைபேசி கோரிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப் பட்டது.

NGO க்களின் துணை என்ற பாதுகாப்போடு போக நினைத்தது முடியாமல் போய்விட்டது. அப்போது எழுத நினைத்த பதிவும் எழுத முடியவில்லை. இனியும் போக முடியும் என்று தோன்றவில்லை. சோனார்காச்சியும் அவர்கள் வாழ்க்கையும் இனிமேலும் அவ்வப்போது கண்ணில் படும் ஊடகங்கள் வாயிலாகத்தான்.

காஷ் மே...

Friday, September 09, 2005

',' வர வேண்டிய இடத்தில் '.'

'ஆமா உனக்கு '... சிங்' ஞாபகம் இருக்கா?

'யாரு?'

'சூரத்ல இருந்தார்'

'ராஜுலால குள்ளமா குண்டா ஒரு சர்தார்ஜி வைப் இருந்தாங்களே அவங்களா?'

'இல்ல, அவங்க இல்ல'

'அந்த நெட்டையா ஒரு அம்மா, எல்லா பார்ட்டிலயும் சண்டை போடுவாங்களே அவங்களா?'

'சேச்சே, அவங்களும் இல்ல. சூரத்ல அவங்க பொண்ணு கூட யாரையோ கல்யாணம் பண்ணிட்டு போயிடுச்சே?'

'ம்ம்ம்... விபரம் ஞாபகம் இருக்கு. ஆள் யாருன்னு தெரியலை. என்ன அவருக்கு?'

'அவர் இறந்துட்டாரு'

'ஐயோ! என்னாச்சு?'

'ஆக்ஸிடெண்ட்'

'எங்கே? எப்பிடி?'

'சைட்ல. இன்னைக்கு சாயந்தரம். ஒரு டவர் விழுந்துடுச்சாம்'

கட்டுமானப் பணி இடத்தில் உயிர்சேதம் தவிர்க்க எல்லா முயற்சிகளும் செய்கிறார்கள் தான், ஆனாலும். முதல் சாவு எப்போது கேள்விப்பட்டேன்? நைட் ஷிப்டில் குளிருக்கு போர்த்தியிருந்த ஷால் நுனி ஏதோ மிஷினின் ·பேனில் மாட்டி தூக்கி அடிக்கபட்டு உயிர் இழந்த ஒருவருடையது தான். கால் தவறி விழுந்தது, தலைக்கவசம் அணியாதது, கொஞ்சமே கொஞ்சம் போதை, கவனக்குறைவு... அகால நேரத்தில் மணி அடித்து தகவல் சொன்ன சாவுகள்.

ஆரம்பத்தில் கேட்கும் போதே பயமாயிருக்கும். சில நேரங்களில் கிடைக்கும் தகவல்கள், இவ்வளவுதானா என்றிருக்கும். கடைநிலைப் பணியாளரான கணவர் இறந்ததில் கிடைத்த பணத்தை வாங்கிய கையோடு வேறொருவரோடு வாழத் தொடங்கி விட்ட மனைவி... அவ்வளவு பணத்தை மொத்தமாகப் பார்த்ததில் புத்திர சோகம் மங்கிப் போன பெற்றோர்கள்... விமரிசிக்க என்ன இருக்கிறது? அவரவர் வாழ்கை... அவரவர் நியாயங்கள்.

கடைநிலை தவிர்த்த மற்ற கட்டுமானப் பணியாளர்கள் வாழ்க்கையிருக்கிறதே, அதில் இரண்டே இரண்டு ஜாதி. ஒன்று 'என்னால இப்படி ஊர் ஊரா பொட்டி தூக்க முடியாது' என்று ஆரம்பத்திலேயே ஊர்பக்கம் மனைவிமார்கள் செட்டிலாகிவிடுவது. இன்னொன்று நேரம் காலமில்லாமல் வரும் மாற்றல்களில் இழுத்தடித்துக் கொண்டு ஊர் ஊராக சுற்றுவது.

முன்னதில்... பிள்ளைகள் படிப்பு, வீட்டு நிர்வாகம், வரவு செலவு எல்லாம் வீட்டம்மா தலையில். படிக்காத, சொல் பேச்சு கேட்காத குழந்தைகள் படுத்தும் போது சலித்துச் சாய தோள் இல்லாத ஏக்கத்தோடே கழிக்க வேண்டியிருக்கும். வருஷத்திற்கு ஒரு தரமோ இரண்டு தரமோ வாரம் பத்து நாள் விடுமுறையில் மொத்த வருட வாழ்க்கையையும் வாழ்ந்து விட வேண்டும். ஊடல், கூடல் எல்லாமும் தான். குழந்தைகள் வளர்வதை கற்பனையில் மட்டும் பார்க்க முடிந்த அப்பாக்கள். தனியாக இருப்பதால் குடி, சிகரெட் இன்னபிற பழக்கங்களில் தனிமையைத் தொலைக்கும் முயற்சிகள். அதே தனிமை விரட்டலும் உடல் தேவையும் சில நேரங்களில் திருமணம் தாண்டிய உறவுகளைத் தேட வைப்பது... இரண்டு பக்கங்களிலும் இருக்கலாம். தனித்தனியே வாழ்வதால் காலப் போக்கில் அவரவருக்கான வட்டம், வாழ்க்கை என்றாகி, சேர்ந்து வாழ சந்தர்ப்பம் கிடைத்த போது மூச்சுத் திணறும் ஜோடிகளும் கண்ணில் படாமலில்லை.

இரண்டாமதில்... ஒன்றாக இருந்தாலும் நேரம் காலமில்லாத வேலை, வீட்டுக்குள் நுழையும் போதே தினமுமா லேட்டா வருவீங்க என்று சண்டை தொடங்கும் மனைவியும், ஆபிஸ் கடுப்பில் பெண்டாட்டியை வையும் கணவரும் சர்வ சாதாரணம். வீட்டுக்கு வந்த பிறகும் தொலைபேசியிலோ செல்பேசியிலோ, அதைத் தூக்கிட்டியா? இதை இறக்கிட்டியா? அந்த கான்கிரீட் ஏன் இன்னும் ஆகலை? என்று ஆபிஸ் நிர்வாகம் தூள் பறக்கும். பண்டி இந்த தரம் மேக்ஸில் பத்து மார்க்கு, பூஜா வரவர சொன்ன பேச்சே கேட்பதில்லை என்று தொடங்கும் தினசரி புலம்பல்கள் காதில் விழ ஆரம்பிப்பதற்கு முன்பே கணவர் தூங்கிப் போய் விட்டது தெரியாமல் பேசிக் கொண்டிருக்கும் மனைவிகள், இதையெல்லாம் தன்னைப் போன்ற இன்னொரு ஜீவனுடன் மாலை நேர தொலைபேசி அரட்டையில் போலிச் சிரிப்பில் தொலைத்துக் கொள்ள வேண்டியது தான். அது பெரும்பாலும் பரஸ்பர பரிமாற்றமாகத்தான் இருக்கும். முன்னெல்லாம் நிறைய பாட்டு கேட்பேன், நிறைய சினிமா பார்ப்பேன்... இப்பல்லாம் வீட்டுக்கு வந்தால் நேரமேயில்லை என்று சலிக்கும் ஆண்கள் பாடும் கொஞ்சமில்லை.

இதோ இதை எழுத வைத்தவர்... அவரை முகம் நினைவில்லாத போதும், பேராகவாவது தெரியும். பத்தாவது படித்துக் கொண்டிருந்த மகள் காதல் திருமணம் செய்து கொண்டதில் கொஞ்சம் பித்தாகிப் போன அவர் மனைவியைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அங்கே இருக்கவே பிடிக்காமல் மாற்றல் கேட்டு எங்கேயோ உ.பி பக்கம் போனது தெரியும்.

அந்த சர்தார்ஜியும் நினைத்திருக்கலாம்... இன்னும் நாலு வருஷம். சர்வீஸ் முடிந்ததும் ஊரைப் பார்க்கப் போய் விட வேண்டும். சர்சோங் கா சாக் - ம் மக்காய் கி ரொட்டியும் சொந்த வயலில் உட்கார்ந்து சாப்பிட... பழைய தோஸ்துகளோட கும்மாளம் போட... பிள்ளைகளோடு கொஞ்சம் நேரம் செலவிட... ம்ம்ம் பொண்டாட்டி கூடவும் தான்... இப்படி நிறைய இருந்திருக்கலாம். அன்றைக்கு காலையில் கிளம்பிப் போகும் போது 'இந்த நாலு ரொட்டியைக் கட்டிக் கொடுக்க தினமும் லேட் பண்ணறே' என்று சலித்துக் கொண்டு கிளம்பினாரா? இல்லை... 'உன்னை ரொம்ப விரட்டரேனோடி?' என்று கேட்க நினைத்து... சரி சரி அப்புறமா, ராத்திரிக்குப் பார்த்துக்கலாம் என்று அவசரமாய் கிளம்பிப் போனாரா?

சில நேரங்களில் அந்த அப்புறம் எல்லாருக்கும் வாய்ப்பதில்லை தான்.

Sunday, May 29, 2005

இது சரியா ஜக்ஜித்ஜி?

ஜக்ஜித் சிங்கை கவனித்துக் கேட்க ஆரம்பித்தது கடந்த பத்து வருடங்களாகத்தான். அவரும் சித்ரா சிங்கும் இணைந்து வழங்கிய ஒரு சிடி மூலமாகத்தான் அறிமுகமானார். இதமான குரலோடு அவருக்கான சில நேரங்களை எனக்குக் கொடுத்துப் போயிருக்கிறார்.

சனிக்கிழமை மாலை Science City அரங்கத்தில் அவருடைய இசை நிகழ்ச்சி. ஆறு மணிக்கு மேல் என்று அழைப்பிதழ் சொன்னது. சக வாத்தியகாரர்கள் எல்லோரும் வெள்ளையில் இருக்க, நடுவில் முழு கறுப்பில் ஹார்மோனியத்துடன் ஜக்ஜித் சிங் அமர்ந்திருக்க, திரை விலகும் போது மணி ஆறேமுக்கால். ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்தும் போது அவர்கள் அவரவர் வாத்தியத்தை வாசிக்க கூடவே ஒலிபெருக்கி அளவைக் கூட்டவும் குறைக்கவும் சொல்லிக் கொண்டிருந்தார். அவ்வளவு சீக்கிரத்தில் திருப்தி வரவில்லை. இதை இன்னும் கூடச் சேர்த்து, அதைக் கொஞ்சம் குறை... ஒரு வழியாக ஏழுமணிக்கு முதல் கஸல்.

ஆலாபனையோடு தொடங்கிய குரல் பக்கத்தில் வந்து ஹலோ சொல்லிப் போனது. முதல் கஸல் முடிந்து இரண்டாவது தொடங்கும் போது வசியம் பண்ண ஆரம்பித்திருந்தது. மெல்ல அந்தக் குரல் தன்பக்கம் இழுப்பது போலவும், அதை நோக்கிப் போவதைப் போலவுமிருந்தது. அரங்கத்திலிருந்தவர்கள், வாத்தியக்காரர்கள் விலகிப் போக அந்தக் குரலும் நானும் மட்டும் ஒரு வட்டத்திற்குள் என்று உணரத் தொடங்கும் போது வயலினின் ஒலிப்பெருக்கியை சரி செய்யச் சொல்லி வட்டத்தைச் சிதைத்தார். மறுபடியும் குரல் வசீகரிக்க ஆரம்பிப்பதும், எதாவது பேசி வட்டத்தைக் கலைப்பதுமாயிருந்தார்.

தண்ணீர் குடிக்க டம்ளர் வேண்டும் என்பதை ஒலிப்பெருக்கியில் பாட்டுக்கு இடையில் சொன்ன போது 'இது சரியா ஜக்ஜித்ஜி?' என்றிருந்தது. ஆரம்பித்த ஒரு மணி நேரத்தில் 'ஐந்து நிமிட இடைவேளை... பத்து பதினைந்து நிமிடத்திற்குப் பிறகு சந்திக்கலாம்' என்று ஜோக்கடித்த போது சிரிப்பு வரவில்லை.

நாற்பது நிமிடத்திற்குப் பிறகு மறுபடியும் பாட ஆரம்பித்த போது 'நான் ஒன்னும் அதிக நேரம் கேட்கப் போவதில்லை. ஒன்றிரண்டு கேட்டு விட்டு போய் விடப் போறேன்' என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டு தான் கேட்க ஆரம்பித்தேன். முதல் பாதியில் ஏமாற்றியதை இரண்டாம் பாதியில் ஈடுகட்டினார் என்று தான் சொல்ல வேண்டும். தேர்ந்தெடுத்த பாடல்கள், கொஞ்சலும் குழைவுமாய்... குரல் அவர் சொன்ன படி கேட்டது. சிரமமே இல்லாமல், சுவாசிப்பது போலத்தான் பாடவும் செய்கிறார் என்று நினைக்க வைத்தார். 'உன் வசியத்திற்கெல்லாம் மயங்க மாட்டேன்' என்று பிடிவாதமாய் அமர்ந்திருந்தவளை தாளம் போட வைத்ததில் அந்தக் குரலுக்கு ஒரு சந்தோஷம்.

பாதிப் பாட்டில் எழுந்து போக வேண்டாம் என்று முடியக் காத்திருக்க, போக விடாமல் நாற்பது நிமிடம் தொடர் சங்கீதம். ஒரு பாட்டு முடிய முடிய அடுத்தது தொடங்க... எழுந்திருக்க மனமில்லைதான். ஒன்பரை மணிக்கு கச்சேரி முடிந்தது. இசையென்னும் இன்ப வெள்ளத்தில் மூழ்க ஓடோடி வந்த என்னை கொஞ்சம் ஏமாற்றித்தான் விட்டார். வெறும் கால் மட்டும் தான் நனைந்தது போலிருந்தது.

ஆனாலும் தான் என்ன... ஆற்றங்கரையில் குட்டைப்பாறை மேல் உட்கார்ந்து காலாட்டிக் கொண்டு நனையும் சுகத்தைக் குறை சொல்ல முடியுமா?!