Saturday, June 06, 2015

இடப்பெயர்ச்சி பலன்கள் - 6

" ஆன்ட்டி, உங்க வீட்டுக்கு யார் வந்திருக்கான்னு பாருங்க", மகனுடைய நண்பன்.
யாரோ குழந்தை ஹிந்தியில் சொன்னதை தமிழில் மொழிபெயர்த்திருப்பதாக
நினைக்க வேண்டாம். அழகாக தமிழில் சொன்னதுதான்.

ராஜுலாவில் நாங்கள் வந்து இறங்கிய போது வெளியூர் ஆட்கள் மொத்தமே
பத்து பதினைந்து குடும்பங்கள் தான். தெருவில் நடந்து போனால் கண்
பார்வையில் இருந்து மறையும் வரை பார்வைகள் துளைக்கும். கோபம் வருவதற்குப்
பதில் அந்த பார்வைகள் கூச்சம் தான் தரும். சூதில்லாத மனிதர்கள்.
அவர்களுக்கு எல்லாமே வெறும் வேடிக்கை. கடைகளில் சாமானங்கள் எதுவும்
கிடைக்காது. சமையல் எண்ணை கேட்டால் நமக்காக பெருமையுடன் நீட்டும் நீண்ட
நாள் தூசி படிந்த டெட்ராபேக் தாரா கடலெண்ணை தான். மற்றபடி எல்லாம்
அளந்து ஊற்றும் எண்ணைகள் தான். சோப்பு... ரெக்ஸோனாவும் மேலும்
ஒன்றிரண்டு. ப்ரௌன் நிறத்தில் வாடையடிக்கும் ஒரு வஸ்து தான் ப்ரெட்.
பிஸ்கட் ஒரே பார்லே-ஜி.

ஆனால் அவர்களுடைய கடலைமாவு பதார்த்தங்கள் ரொம்ப விசேஷம். பெரும்பாலும்
காலை பதினொரு மணிக்கு ஒரு சாப்பாடு, ராத்திரி எட்டு மணிக்கு
இரண்டாவது சாப்பாடு. மற்ற நேரங்களில் இந்த கடலைமாவு நொறுவல்கள்
முக்கியமாய். மாஜி வீட்டு மொட்டை மாடி முற்றத்திலிருந்து பார்த்தால்
தெரியும் அந்த சின்ன கடையிலேயே ஒரு நாளைக்கு சுமார் பத்து கிலோ
கடலைமாவு செலவாகும். காலையில் ஏழுமணிக்கே எண்ணை முழுக்காடி ஒரு ராட்சச
கடலைமாவு உருண்டை தயாராக இருக்கும். எண்ணை பூசி
மொழுமொழுவென்றிருக்கும் ஒரு பலகையை சாய்வாகப் பிடித்துக் கொண்டு ஒரு
பூரிக்குத் தேவையான அளவு மாவெடுத்து மணிக்கட்டும் உள்ளங்கையும்
சேருமிடத்தால் ஒரே சீராக அழுத்தி இழுத்தால் ஒரு கடலைமாவு பட்டை
தயார். கத்தியால் கீழிருந்து வேகமான ஒரு இழுப்பில் அது பலகையை விட்டுப்
பிரிந்து, எந்த நேரமும் காய்ந்து கொண்டிருக்கும் எண்ணைச் சட்டியில் விழுந்து
பொரிந்து எழுந்து தயாராகி விடும். எண்ணையில் பொரித்த பச்சை மிளகாய்
அதற்கு ஜோடி. இடையிடையே ஜாரிணிக்கரண்டியை வைத்து நேரடியாக
எண்ணையில் 'சேவ்'. மேலேயிருந்து பார்க்கும் போது நமக்கு கையில்
ஆவியடிக்கிற மாதிரி இருக்கும். இன்னொரு பக்கம் ஒரு பெரிய வாணலியில்
பால் காய்ந்து காய்ந்து சுண்டி பால்கோவாவாகும். எல்லாம் வாடிக்கையாளர் கண்
முன்னாலே சமைத்து, தெருப்புழுதியுடன், உடனுக்குடனே வியாபாரம்.
ஓரளவிற்கு வசதியானவர்களுக்கு, முன்னால் சொந்த வியாபாரம் நடக்கும் கடை,
பின்னால் வீடு. கடைக்குப் பக்கத்தில் போகும் சந்து, வீட்டுக்கு போக வழி.
சந்து முடியும் இடத்தில் எதிர்பார்க்க முடியாமல் ஹாவென்று விரியும் வாசல்.
வெளியிலிருந்து பார்க்கும் போது உள்ளே இவ்வளவு பெரிய வீட்டை யூகிக்க
முடியாது. எளிமை என்றும் சொல்ல முடியாத ஒரு தினுசான வாழ்கை.
மாஜியோடு போன ஒரு வீட்டில் வயசுப் பெண்கள் மட்டும் இல்லாமல் அம்மாவும்
ஒரு அசாதாரண மினுமினுப்பில். பட்டுப் போன்ற அவர்கள் கூந்தலின் ரகசியம்
அன்றைக்கு தெரிந்தது. ஒரு பெரிய உருளிமாதிரி வாயகன்ற ஒரு
பாத்திரத்தில் மெல்லிய தீயில் எண்ணைக் காய்ச்சல். ரோஜா இதழ்களும்
விதவிதமான மூலிகைகளும் சேர்த்து. ஆள் மாற்றி ஆள் அதை கிளறி விட்டுக்
கொண்டிருந்தார்கள். விதவிதமான சமையல், சலிக்காமல் வேலை, மிஞ்சின
நேரங்களில் இது போல அலங்கார ஏற்பாடுகளும் கைவேலைகளும். ஆண்கள்
வியாபாரத்தில் கவனமாய். பெண்கள் வீடே உலகமாய்.

இந்த ஊருக்கு ஒரு ஆறு மாதத்தில் இருநூறு முன்னூறு குடும்பங்கள் வந்து இறங்கியதில்
திக்குமுக்காடியது. ராஜுலாவிலிருந்து பதினைந்து கிலோமீட்டர் தொலைவில்
சிமென்ட் தொழிற்சாலை அலுவர்களுக்கான குடியிருப்பு தயாரானதும் நாங்கள்
அங்கே குடிபெயர்ந்தோம்.

முதல் முறையாக காலனி வாழ்கை. அலுவலக ஆட்களெல்லாம்
ஒரே இடத்தில். நிறைய சௌகரியங்களும் ஏகப்பட்ட பிரச்னைகளும்.
எல்லாருடைய வீட்டு விஷயமும் எல்லாருக்கும் தெரிந்தது. கூடவே இருந்ததில்
சிலரோடு நல்ல நெருக்கமும்.

ஆனால் ராஜுலா சீக்கிரம் சுதாரிக்கத் தொடங்கி விட்டது. திடீரென்று
அடுக்குமாடிக் கட்டிடங்கள் உயர்ந்தது. கடைகளில் என்ன கேட்டாலும் கிடைத்தது.
கிடைக்காத பொருள் இரண்டே நாட்களில் அஹமதாபாத்தில் இருந்து வந்து
சேர்ந்தது. தெருவில் நடந்து போகும் போது தமிழ் பேசுபவர்களை
சாதாரணமாக பார்க்க முடிந்தது.

முதல் வரி கேள்விக்கு வருகிறேன். ஒரு களுக் சிரிப்போடு அவன் கூவிக்
கொண்டே வர "யாருடா" என்று கேட்டுக் கொண்டே வெளியில் வந்தேன்.
ஐந்தரை அடிக்கும் கூடுதல் உயரம். அநியாயத்துக்கு குண்டு. இன்னும் கொஞ்சம்
மிச்சமிருந்த கிராமக்களை.

நாந்தாங்க பாமினி என்று அறிமுகம் செய்து கொண்டு பேச ஆரம்பித்த போது
அவருடைய உருவம் தந்த அதிர்ச்சியிருந்து இன்னும் விடுபட்டிருக்கவில்லை.
ஒருத்தரோட சிநேகமாக இருப்பதற்கு எதாவது ஒருவிதத்தில் ஒத்த ரசனை
அவசியம் என்ற என்னோட நம்பிக்கையை முற்றிலுமாக தகர்த்தது பாமினி. அது
ஒன்னும் கட்டாயமில்லை, சில நேரம் இது எதுவும் தேவையில்லை என்று
சொல்லியது அந்த நட்பு. இவ்வளவு நல்லவங்களா ஒருத்தர் இருக்க முடியுமா என்று
அடிக்கடி தோன்ற வைத்தார். பாமினிக்கு இருந்தது தன்னம்பிக்கையா
வெகுளித்தனமா தெரியாது. பணியிட விருந்துகளில் மெல்லிய குரலில்
நாசுக்கான ஆங்கிலத்தில் தொடரும் உரையாடலில், அது யாராக இருந்தாலும்
சரி, உறுத்தாமல் குறுக்கிட்டு, " நான் அதிகம் படிக்கலை, எனக்கு ஆங்கிலம்
புரியாது, ஹிந்தில பேசுங்களேன் " என்று அவர் சொன்னதும் மந்திரத்திற்கு
கட்டுப் பட்டது போல எல்லோரும் சட்டென்று ஹிந்திக்கு மாறுவது...ஆச்சரியம்.

எதாவது செய்ய வேண்டும் என்று இத்தனை வருடங்களாக சொல்லிக்
கொண்டிருந்தாலும், ஊருக்கு போகும் போது சௌகரியமாக ஒவ்வொரு முறையும்
எதாவது பண உதவி செய்வதோடு என் சமூக சேவை(!) முடிந்து விடுகிறது.
குழந்தையில்லாத அந்த தம்பதி அதற்குப் பிறகு ஒரு பெண் குழந்தையை
சொந்தமாக்கிக் கொண்டதில் இன்று அந்த முன்று பேருடைய வாழ்கையும்
சந்தோஷமாய்.

2 comments:

வல்லிசிம்ஹன் said...

Bamininnu oru kathaiye ezhuthalaame Nimma.

Nirmala. said...

How to hide Bamini in a story! she is so real Reva! :-)