Wednesday, May 24, 2023

அகம் - இதுவரை

 மதுமிதா எழுதச் சொன்ன போது சரி என்று சொல்லிவிட்டேனே ஒழிய நீண்ட இடைவேளைக்குப் பிறகு எழுத ஆரம்பித்த போது என்ன எழுதப் போகிறேன் என்று தான் இருந்தது. மனதிற்குள்ளே ஓடிக் கொண்டிருந்ததை வார்த்தைகளில் இறக்குவது அவ்வளவு சுலபமாயிருக்கவில்லை. சைக்கிள் ஓட்டிப் பழகினவர்களுக்கு எப்படி அது மறக்காதோ அது போல சின்னச் சின்ன சுவர் முட்டல்களுக்கு பின்னர் எழுத முடிந்தது. விடாமல் நினைவுறுத்தி எழுத வைத்த மதுமிதாவிற்கு நன்றி. 

 



My portion from the book - அகிலாண்டம்மாள் சுமார் நாலடி உயரம் இருப்பார். தலையில் இருக்கும் கொஞ்சம் முடியை நெல்லிக்காயளவு கொண்டையாகப் போட்டிருப்பார். எட்டு கஜம் புடவையை பின் கொசுவம் வைத்து உடுத்தி, சிறுத்த உடலும் கடுகடுப்பான தோற்றமும் ஆக இருப்பார். ஒரு ரெட்டை வட சங்கிலியும் கைகளில் இரண்டு வளையல்களும் தினப்படிக்கு. எங்கேயாவது விசேஷங்களுக்கு போகும் போது ஒரு பதக்கம் வைத்த அட்டிகை கூடுதலாக. இடுப்பில் ஒரு சுருக்குப் பை. அதிசயமாக ஒன்றோ இரண்டோ பைசாவை எடுத்துக் கொடுத்து மிட்டாய் வாங்கிக் கொள்ளச் சொல்வார். அந்தக் காலத்து பெண்மணி. படிப்பெல்லாம் எதுவும் கிடையாது. ஆனால் உலக ஞானம் தேவைக்கு இருந்தது.

நினைவு தெரிந்த நாளிலிருந்து அந்த வீட்டில் நாங்கள் பத்து பேர் இருந்தோம். எல்லோருக்கும் அவரவர்களுக்கான வேலை, இந்த சாமான் இந்த இடத்தில், இந்த நேரத்தில் இந்தக் காரியம் என்று ஒரு ராணுவ கட்டுப்பாட்டில் இயங்கிக் கொண்டிருந்தது. எனக்கு இன்றைக்கு சலிப்பாக இருக்கிறது நான் செய்ய மாட்டேன் என்று யாரும் எப்போதும் அவரவருக்கான வேலைகளை மறுத்துப் பார்த்ததில்லை. முடியவும் முடியாது. இன்றைக்கு என்ன சமையல், வீட்டின் முதல் பந்தியில் யார் உட்கார வேண்டும், யாருக்கு எவ்வளவு பரிமாற வேண்டும், வீட்டில் கடைசியாக சாப்பிடுபவருக்கும் எல்லா நேரமும் எல்லாமும் சாப்பிடக் கிடைக்க வேண்டும் என்று இப்படி எழுதாத சட்டங்கள் இருந்தது. அது வழமை மாறாமல் நடக்கவும் செய்தது. எதை மாற்றினாலும் பாட்டிக்குப் பிடிக்காது சத்தம் போடுவார் என்ற பயமும் எல்லோருக்கும் இருந்தது. ஆறடி உயரத்தில் ஆஜானுபாகுவான தாத்தாவில் தொடங்கி எல்லோரும் அவர் சொல்லுக்கு கட்டுப் பட்டிருந்தோம். இதையெல்லாம் அந்த சிறிய உருவம் எப்படி நிகழ்த்தியது என்பது பெரிய புதிர். 

பாட்டி அதிகம் பேச மாட்டார். எப்போதாவது சிரித்து பார்த்திருக்கிறேன். சில நேரங்களில் மிகச் சிலரிடம் மட்டும் இளகிப் பேசுவதை கவனித்திருக்கிறேன். என்னுடைய இளம் வயதில் உள் வாசலில் படுத்துக் கொண்டு நிலவைப் பார்த்துக் கொண்டே பாட்டியுடன் கதை பேசியது நினைவிருக்கிறது. சின்னச் சின்னதாக எங்களுக்கு நிறைய சொல்லிக் கொடுத்திருக்கிறார். என்னுடைய காரிய ஒழுங்கும் செய்நேர்த்தியும் பாட்டி கொடுத்தது. ஒரு விஷயத்தை ஏனோ தானோவென்று இன்றைக்கும் என்னால் செய்ய முடியாது. அங்கிருந்து தொடங்குகிறது.

ராஜம்மாள் சிவந்த நிறம். உயரமும் உறுதியுமான தேகம். அலையலையாய் வழியும் கறுத்த கேசம். ஒரு டஜன் பிள்ளைகள் பெற்றும் சளைக்காத உரம். எதிலும் பட்டுக் கொள்ளாத அதே சமயம் எல்லாம் என்னுடையது என்ற உணர்வும். இது என் பொறுப்பு இதை எப்படியாவது செய்வது என் கடமை என்ற உறுதி. அந்தக் கைகளில் ஒரு மாயம் இருந்தது. தொட்டதெல்லாம் ருசித்தது. நிரம்பி வழிந்ததில் திளைத்ததும் வறண்டு தேய்ந்ததில் போராடியதுமாக எல்லா எல்லைகளையும் தொட்டு நீண்டிருக்கிறார். எப்போதும் கலங்கிப் பார்த்ததில்லை. வீட்டின் மொத்த நிர்வாகமும் தாத்தாவுடையது. அவர் ஒரு நாள் காணாமல் போன போது திடமாக நின்றார். அந்த அதிர்ச்சியில் இருந்து அந்தக் குடும்பம் சுதாரித்து வெளியே வந்தது. அந்த சமயத்தில் ஒரு மகளின் திருமணத்தை நடத்த வேண்டி வந்த போது நிதானமாக நின்று நடத்தினார். பாட்டிக்கு முடியாது என்று சொல்லத் தெரிந்திருந்தது. தயவு தாட்சண்யம் இல்லாமல். அறிவார்ந்த பார்வை இருந்தது. அறியாத தேசங்களை தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருந்தது. அந்த வாழ்க்கையையும் உணவுகளையும் அறிந்து கொள்ள விரும்பினார். தன்னைப் புதுப்பித்துக் கொண்டே இருந்தார்.

முதல் முதலாய் தொலைதூர தேசத்திற்கு ரயில் ஏறிய போது எனக்கு இருந்த ஆர்வத்தில் ராஜம்மாள் பாட்டி நிறைந்து இருந்தார். குஜராத்தின் மூலை முடுக்குகளில் வசிக்க நேர்ந்த நாட்களில் எப்போது ஊருக்கு வந்த போதும் பாட்டிக்கு கேட்க அத்தனை கேள்விகள் இருந்தது. அந்த ஊரில் என்ன விசேஷம் என்ன பார்த்தாய் என்ன செய்வாய் என்ற கேள்விகளைக் கேட்கும் கண்கள் அகல விரிந்து அத்தனையையும் என் விழிகளிலிருந்து பெற முயற்சிப்பது போல. சரியாக காய் நறுக்கக் கூடத் தெரியாத என்னிடம் சமையல் குறிப்புகள் கேட்ட போது சமாளிக்க நினைத்து விழித்தது இன்றும் நினைவில் இருக்கிறது. ஒரு லண்டன் பயணத்தில் புகைவண்டியில் இரண்டு பேரிளம் பெண்கள் தனியே பயணம் செய்து கொண்டு வழியெல்லாம் பேச்சும் சிரிப்புமாய் இருந்ததை கவனித்த போது என்னுடைய ராஜம்மாள் பாட்டி இதையெல்லாம் அனுபவித்திருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு இருந்தேன்.

என்னுடைய உருவாக்கத்தில் இவர்கள் இரண்டு பேருடைய பங்கு மிக ஆழமானது. கூடவே சூழலும். பத்தொன்பது வயதில் வட இந்தியாவின் பெயர் கேட்டிராத பாஷை தெரியாத சிறு ஊர்களில் தொடங்கியது என் வாழ்க்கை. எல்லா இடங்களிலும் பாட்டி வயதில் யாராவது கூடவே இருந்திருக்கிறார்கள். மத்திய பிரதேசத்தின் தம்தரியில் பக்கத்து வீட்டுப் பாட்டி தினமும் மாலை வேளைகளில் எனக்குத் துணையாக வந்து அரை மணி நேரம் உட்கார்ந்து விட்டுப் போவார். அப்போது அவோ, ஜாவோ தவிர்த்து ஒரு வார்த்தை ஹிந்தி தெரியாது. அவருக்கு குஜராத்தியைத் தவிர வேறெதுவும் தெரியாது. இரண்டு பேரும் எதுவும் பேசாமல் அமர்ந்திருப்போம். நிழலாக நினைவில் இருக்கிறார்.

ராஜூலாவின் மாஜிக்கு வேறு முகம். சொந்த வாழ்க்கையின் ஏமாற்றங்களும் இயலாமையும் அவருக்கு யாரையும் பிடிக்காமல் இருந்தது. நாங்களும் விதிவிலக்கில்லாமல். காலமும் பழக்கமும் நெகிழ்த்தியதில் அவரது பூட்டியிருந்த கதவுகளை மெல்ல மெல்ல திறந்தார். ஒரு நாள் ஏதோ பேசும் போது தும்ஹாரி பாபுஜி (உன்னுடைய அப்பா) என்று தன் கணவரைச் சொன்ன நிமிஷம் மறக்க முடியாதது.

பழகின மனிதர்கள் தான் பாதிக்க முடியுமா என்ன? ஒரு குலு மணாலி பயணத்தின் போது பச்சை பூத்திருந்த காட்டிற்குள் ஒரு காதல் மாளிகை. ஒரு ரஷ்ய ஓவியரும் இந்திய நடிகையும் சேர்ந்து வாழ்ந்திருந்த அந்த வீட்டில் ஏதோ ஒரு அதிர்வு இருந்தது. எதையோ சொல்ல வருவதைப் போல. எல்லாவற்றையும் பார்த்து விட்டு ஏகாந்தமாய் இருந்த ஒரு கல் பெஞ்சில் உட்கார்ந்த போது அது என் வீடு போலிருந்தது. துளிர் பச்சை இலைகளில் ஊடுருவி விழுந்த வெளிச்சம் சொன்னது என்னைத் தெரியுமென்று.

முதல் முதலாக கொல்கத்தா தெருக்களில் தன்னந்தனியாக சுற்றப் பழகிய போது தான் தனிமை ருசிக்கத் தொடங்கியது. பனிரெண்டு பதிமூன்று வயதில் அம்மாவிடம் தனியே இருக்கப் பிடிக்கும் என்று சொல்லியிருக்கிறேன். என்ன முட்டாள்தனமான பேச்சு என்று அம்மா புறந்தள்ளியதும் நினைவிருக்கிறது. அத்தனை வருடங்கள் கழித்து நான் கேட்ட அந்த தனிமை கிடைத்தது. அங்கே அறிமுகமான அபர்ணா சென் கதை நாயகி 'பரோமா'வை எனக்கு நன்றாகத் தெரியும். பெரிய சிகப்புப் பொட்டும் பருத்திப் புடவையுமாக ஆளுமையோடு வலம் வந்த அத்தனை பெண்களோடும் என்னால் தொடர்பு படுத்திக் கொள்ள முடிகிறது. போகப் போகப் பிடிக்கத் தொடங்கியதில் அந்த காளியும் வருவாள். நீண்ட நாக்கோடு அமர்ந்திருக்கும் அவளைத் தெரியும்.

காசியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய ஒரு மத்தியான வேளையில் மடங்கிப் போய் அமர்ந்திருந்த அந்த அம்மாவை எனக்கு நன்றாகத் தெரியும். இந்த ஜன்னலில் இருந்து நான் பார்க்க வந்த கங்கையை அவள் காலம் காலமாக தன் வீட்டு ஜன்னலில் இருந்து பார்த்து கொண்டு இருக்கிறாள். அப்படித்தான் அவளை எனக்குத் தெரிந்திருக்கும்.

எல்லா இடங்களிலும் எல்லா விதமான மனிதர்களோடு வசித்த போதும் நான் ஒரு தனிமை விரும்பி. பயணம் செய்த நாடுகளின் ஏகாந்த வீடுகள் எல்லாவற்றோடும் தொடர்பு படுத்திக் கொள்ள முடிந்தது. ஸ்காட்லாண்டின் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மனிதர்களே இல்லாத பேரமைதியில் இருந்த அந்த ஒற்றை வீடு என்னுடையதாக இருந்தது. மணாலியின் மலை நடுவே தன்னந்தனியாக நின்றிருந்த அந்த வீட்டைப் பார்த்த போதெல்லாம் அந்த வாழ்க்கையை எண்ணி எண்ணி மாய்ந்து போக முடிந்தது. குளிர் காலத்தில் மலை பூராவும் பனி மூடியிருக்கும். யாரும் மலை ஏறவோ இறங்கவோ முடியாது என்ற போது அலை மோதிய எண்ணங்கள் மனிதர்களுக்கானவை. அது என்னில் அலை மோதி அடங்கியது எனக்குத் தெரியும். ஜப்பானின் கால்வாய் நகரம் குராஷிகியின் அமைதியை எந்த இரைச்சலிலும் உணர முடிகிறது.

அப்பா அம்மாவின் குவித்த கைகளுக்குள் வளர்ந்திருந்தேன். சிறகுகள் வளர்ந்தது தெரியாமல் ரொம்ப காலம் கழித்திருந்தேன். பறக்க வேண்டாமென்றும் இருந்திருக்கிறேன். ஆனாலும் எல்லாமும் நடந்தேறின. புதிதாக ஒன்றைக் கற்றுக் கொள்ளும் ஆர்வத்திற்காக சேர்ந்த ஒரு படிப்பு இன்றைக்கு ஒரு ஆளுமை வடிவமைப்பாளராக (இமேஜ் கன்சல்டென்ட்) வளர்த்தி இருக்கிறது. அந்தப் பயிற்சிக்காக சந்தித்த மனிதர்களை அறிந்து கொண்டது வேறெப்படியும் நிகழ்ந்திருக்க முடியாதது. படிப்பு, பரிட்சை என்று பள்ளிக்கூட நாட்களின் சுவாரசியத்திற்கு கொஞ்சமும் குறைவில்லாதது. முடித்து சான்றிதழ் வாங்கிய கணம் தந்த சந்தோஷத்திற்காக இப்படி இன்னும் எத்தனை பரிட்சைகளை வேண்டுமானாலும் எழுதலாம் என்று சொன்னது. நமக்கு முன்னால் இருக்கும் சவாலை ஜெயிக்கும் ஒவ்வொரு முறையும் அது தரும் தன்னம்பிக்கை என்னை அடுத்த தளத்திற்கு கொண்டு சென்றது. வீடும் ஓய்வும் தரும் சௌகரியத்தை விட்டு வெளியே வந்த போதெல்லாம் சந்தித்த மனிதர்கள் விரித்த தளம் நான் எப்போதும் தேடியது.

அதைத் தொடர்ந்து அதிலிருந்து வந்தது ஒரு கூட்டத்திற்கு முன்னால் நின்று நான் சொல்ல வருவதை சுவாரசியமாக சொல்ல வர வேண்டும் என்று கற்றுக் கொண்ட பயிற்சி. தெரியாத மனிதர்களோடு பேசவே தயங்கி இருந்த எனக்கு ஒரு நிறுவனத்தின் ஆண்களுக்கு பயிற்சிப் பட்டறை நடத்த முடிந்தது. உள்ளுக்குள்ளே பறக்கும் பட்டாம்பூச்சிகளை ரசித்துக் கொண்டே செய்த நிகழ்வு அது.

என்னுடைய கன்சல்டன்ஸிகாக அடுத்து தொடங்கியது ஒரு யூட்யூப் சேனல். அதன் மூலமாக ஒரு ஆளுமையாக ஓவ்வொருவரும் தன்னை உருவாக்கிக் கொள்ளும் ஆலோசனைகளை தர முடிகிறது. ஒன்றிலிருந்து மற்றொன்று என்று புதிய பாதைகள் பிறக்கின்றது. தேடத் தேட திறக்கும் புது கதவுகள் கொடுக்கும் சுவாரசியம் குறைவில்லாதது.

ஒவ்வொரு முறையும் தன்னார்வ பணி புரியும் அழைப்பு வந்த போது அது என்னுடைய நேரத்தைக் குடிக்கும் என்ற போதும் சரி என்று சொல்லியிருக்கிறேன். பெண்கள் சேர்ந்து ஒரு மருத்துவமனையை நிர்வகிக்க வாய்ப்பு வந்த போது அந்த துறை பற்றிய பெரிய விழிப்புணர்வு கிடைத்தது. சில முடிவுகளை அந்த நொடியில் எடுக்க வேண்டி வந்த போது அதன் முழு பொறுப்பையும் சுமக்கும் தைரியம் கிடைத்தது. அதற்காக செலவழித்த கணக்கில்லாத நேரங்கள் தன் பங்கிற்க்கு என்னை இன்னும் கொஞ்சம் செதுக்கிச் சென்றது. எதுவுமே வீணில்லை என்று இன்றைக்கு என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.

கொரோனா நோய் தொற்றுக் கால சேவையாக வந்து சேர்ந்த அனுபவம் மூலமாக முகம் தெரியாத எத்தனை பேர்களுக்கு ஆசுவாசம் கொடுக்க முடிந்தது. வெறும் வார்த்தைகளால் மட்டுமே உதவ முடிந்த மனிதர்கள் அந்த நாட்களுக்கு ஒரு நம்பிக்கை கொடுத்தார்கள். அந்த சேவைக்கான தேவை வந்த குழுமத்தில் நான் வருகிறேன் என்று சொல்லி தொடங்கிய நிமிஷத்திற்கு நன்றி சொல்ல வேண்டும். இப்போது எங்கள் அடுக்கக காரியதரிசியாக இருக்கிறேன். இதுவும் ஒரு இக்கட்டான கட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு. எப்படி முடியாது என்று சொல்லிப் பழகுவது அவசியமோ அப்படியே முடியும் என்று சொல்லி செய்த எல்லா வேலைகளும் என்னை வளர்த்தெடுத்தது.

அவளை நாங்கள் எங்கே வளர்த்தோம் அவள் தானாகவே வளர்ந்து கொண்டாள் என்று அம்மா ஒரு முறை யாரிடமோ சொன்னார். நான் எங்கே தானாக வளர்ந்தேன்! எல்லாராலும் வளர்த்தெடுக்கப் பட்டிருக்கிறேன். இங்கிருந்தும் தொடர்கிறது.