Thursday, January 27, 2005

குந்தர் கிராஸ்குந்தர் கிராஸ் - ஆர்கேகேயில் மதியும் முருகனும் இவரைப் பற்றிச் சொல்ல, பேர்(!) கேட்டது. மற்றபடி இவரைப் பற்றி அதிகம் எதுவும் ¦தரியாது. இரண்டு நாட்களாக இங்கே செய்தித்தாளில் இவரைப் பார்க்கிறேன். நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர், கவிஞர், ஓவியர், சிற்பி என்றெல்லாம் பத்திரிகை அறிமுகப்படுத்துகிறது. பதினெட்டு வருடங்கள் கழித்து இந்தியா வந்திருக்கிறார். 86-87 ல் ஆறுமாதம் இந்தியாவில் இருந்திருக்கிறார். மேக்ஸ் முல்லர் பவன் ஏற்பாடு செய்திருக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

'ஆரம்பத்தில் கொஞ்சம் தடுமாறிய போதும், அரைமணி நேரத்தில் பழைய கொல்கத்தாவை உணரத் தொடங்கிவிட்டேன்' என்று சொல்கிறார். எதையோ காணவில்லை, இழந்த மாதிரி இருக்கிறது என்று குழம்பி... காணாமல் போனதாக, கொல்கத்தா தெருக்களில் அலைந்த மாடுகளை நினைவு படுத்திக் கொண்டார்!

காந்திஜியின் கல்கத்தா வாசம், நேதாஜி - காந்திஜி முரண்பாடுகள், பிரிவினை .. எல்லாவற்றையும் நினைவுகூர்கிறார். இரண்டு நாள் கெ¡ல்கத்தாவில் கழித்து விட்டு பாருய்பூர்(Baruipur) செல்ல இருக்கிறார். சென்ற முறை தங்கியிருந்த தோட்ட வீட்டிற்கு செல்லும் ஆவலோடு. 'அந்த வீடு, தோட்டக்காரர், அவருடைய மனைவி, மகனைப் பார்க்கப் போகிறேன். என் மனைவி அவர்களுக்கு பரிசுகள் கூட அனுப்பியிருக்கிற¡ர்' என்று சொல்லும் கிராஸ் ஆச்சர்யப்படுத்துகிறார். அவருடைய இத்தனை முகங்களுக்கும் ஆதாரம் புரிகிறது.

சென்றமாதம் ருஷ்டி, இப்போது கிராஸ்... கொல்கத்தாவோடு இவர்களுடைய பிணைப்பு... கொல்கத்தாவை இந்தியாவுக்கு அதிகம் தெரியாதோ என்று தோண்றுகிறது. எனக்கு இத்தனை நாள் தெரியலைதான்.

இன்று மாலை கலாமந்திரில் அமிதவ் கோஷ், டி.என்.மதன், நஜாம் சேதியுடன் உரை நிகழ்த்த இருக்கிறார். கிரிஷ் கர்னாட் நிகழ்ச்சிக்கு மாடரேட்டர். The Segregation of Cultures in the Contemporary World: Clash, Convergence or Cooperation? - தலைப்பு கொஞ்சம் மிரட்டியதில் போய் பார்க்கலாமா என்று நேற்று தோண்றிய எண்ணத்தை மூட்டை கட்டி வைத்து விட்டேன். சாயந்திரம் நேரமும் இல்லை. நாளைக்கு ஊருக்குக் கிளம்பணும், கேவியார் கல்யாண வரவேற்புக்கு.

Friday, January 07, 2005

no lipstick please, you're teachers

கொல்கத்தாவின் ஒரு பெண்கள் உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியரின் உத்தரவு இது. ஜனவரி 1 முதல் வகுப்பறைக்கு வரும் போது கண்மை, உதட்டுச் சாயம், நெற்றிப் பொட்டு, தொங்கும் காதணிகள், கண்ணைப் பறிக்கும் ஆடைகள் மற்றும் செல்பேசிகள் தவிர்க்க வேண்டும் என்று. நான்கு ஆசிரியர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். உதட்டுச் சாயத்தோடு வந்த அவர்களை இரண்டு நாட்களாக வகுப்பறைக்குள் அனுமதிக்கவில்லை.

நேற்று திரினாமுல் காங்கிரஸின் பெண்கள் பிரிவு பள்ளிக்கூடத்தின் முன்னால் கோஷம் எழுப்பியிருக்கின்றனர். தலைமை ஆசிரியரிடம் தடையை வாபஸ் வாங்கச் சொல்லிப் போராட்டம். இரண்டு நாட்களாக பத்திரிகையில் முதல் பக்கத்தில் அடிபட்ட செய்தி இன்றைக்கு என்னவாயிற்று என்று தெரியவில்லை. சத்தத்தையே காணம்?!

செய்தியைப் படிக்கும் போது எங்கள் பள்ளிக்கூடம் தான் நினைவு வந்தது. அங்கேயும் இதே கதைதான். நிர்வாகம் சார்ந்த பிரிவினர் எந்த ஆபரணமும் அணிவதில்லை. ஆகவே மற்றவர்களும் அதையே பின்பற்ற வேண்டும் என்ற கட்டாயம் இருந்து, பின் மிகுந்த வேண்டுகோளுக்குப் பின் மெல்லியதாக ஒரு கழுத்துச் சங்கிலியும் ஒரு சின்னப் பொட்டும் காதில் சின்னதாக ஒரு கம்மலும் அனுமதிக்கப் பட்டிருந்தது.

ஆண் ஆசிரியர்களுக்கு பள்ளிக்கூடமே blazer க்கு துணியும் கொடுத்து தையல் கூலியும் கொடுத்து... ம்ம்ம்... எல்லாரும் ஜோர் தான். அதைக் கழட்டிட்டு வெளியே காஷ¤வலாக நிற்கும் போது தான் blazer செய்யும் மாயம் தெரியும்!

சேர்ந்த புதிதில் இது எதுவும் தெரியாததால் வழக்கமாக ஏதோ தொங்கட்டான் போட்டுக் கொண்டு ஒரு நாள் பள்ளிக்குச் செல்ல ஒரு ஆசிரியை, "உங்களுக்கு இந்த கம்மல் ரொம்ப அழகாயிருக்கு" என்று சொல்ல நானும் சந்தோஷமாக நன்றி சொல்ல, "இதெல்லாம் ஸ்கூல்ல போடக்கூடாது தெரியுமா? நாங்களே ரொம்ப கஷ்டப்பட்டு சின்ன கம்மலுக்கு அனுமதி வாங்கியிருக்கிறோம். நீங்க இப்படிப் போட்டா இதையும் கூடாதுன்னு சொல்லிடுவாங்க" என்று சொல்லி என்னை 'ஙே' ன்னு முழிக்க வைத்தார்.

அவர் சொன்னதற்காக அப்போது அதை தவிர்த்து விட்டாலும் அந்தக் கோலத்தில் பள்ளிக்கூடம் போவது என்னவோ அழுது வடிவது போலத்தான் இருந்தது. போகப் போக எல்லாம் கொஞ்சம் மாறிப் போனது. புடவைதான் கட்ட வேண்டும்... ஓக்கே. செல்பேசி வகுப்பறையில் கூடவே கூடாதுதான். ஆனால் கொஞ்சம் மேக்கப்... என்னைக் கேட்டால் தப்பில்லை!

பளிச்சென்று உடுத்திக் கொண்டு லேசா மேக்கப் போட்டு ப்ரெஷ்ஷா வகுப்பறைக்குள் நுழையும் போது குழந்தைகள் கண்களில் தெரியும் உற்சாகத்திற்காக இந்த விதிகளையெல்லாம் தாராளமாக மீறலாம்!

Thursday, January 06, 2005

சோக்கர் பாலி - A Passion Play

சோக்கர் பாலி என்ற பெயர், ரபீந்திரநாத் டாகூர், ரிதுபர்னோ கோஷ், விதவைக் கோல ஐஸ்வர்யா... இதில் எதாவது அல்லது எல்லாமோ தான் காரணமாயிருக்க வேண்டும்... சேர்ந்தார் போல நான்கு வார்த்தை பெங்காலி புரியாத போதும் அந்த சிடியை வாங்கியதற்கு.

டாகூர் எழுதிய நூறு வருஷத்திற்கு முந்தின காலக்கட்ட கதை. பினோதினி (ஐஸ்வர்யா), இளம் விதவை. விதவையாவதற்கு முன்னால் திருமணம் செய்ய வாய்ப்பு வந்த போது மறுத்துவிட்டு வெகுளிப் பெண் ஆஷாலதாவைத் (ரெய்மா சென்) திருமணம் செய்து கொள்ளும் மஹேந்திர (ப்ரொசென்ஜித்), அவருடைய நண்பர் பிஹாரி... இவர்கள் நால்வருக்கும் இடையில் நடக்கும் கதை.

முதல் சீனிலேயே படம் சட்டென்று மனதில் ஒட்டிக் கொள்கிறது. படம் சுமந்து வரும் நிறம் ஒரு காரணம். ஒரு சினிமா பார்க்கும் உணர்வே இல்லாமல்... கிராமமும் பழைய காலத்து கல்கத்தாவும்... அதில் நானும் இருப்பது போல உணர்வு. படம் 2003 - ன் சிறந்த வங்காளப் படமாக நேஷனல் அவார்ட் வாங்கியிருக்கிறது. ஆர்ட் டைரக்ஷனுக்கும் காஸ்ட்யூமுக்கும் கூட. பீரியட் பிலிம் என்பதால் ஐஸ்வர்யாவும் ரெய்மா சென்னும் (மூன்மூன் சென்னின் இரண்டாவது மகள்), பாதிப் படத்திற்கு மேல் ஜாக்கெட் இல்லாமல். ஆனால் ஒரு காட்சியில் கூட கொஞ்சமும் விரசமில்லாமல். கடைசியில் ஜாக்கெட்டுக்கு மாறிவிட்ட காரணம் புரியவில்லை!

புத்திசாலிப் பெண்ணாக, விதவைத்தனத்தை ஏற்றுக் கொள்ள மறுக்கும் கேரக்டரில் ஐஸ்வர்யா வெளுத்து வாங்குகிறார். திருமணத்தின் போது கண்களில் ஒரு நொடி தெரிந்து மறையும் மிரட்சிக்கான கிரெடிட் டைரக்டருக்குப் போகணுமோ?! அந்தக் காலத்திலேயே இப்படி ஒரு கேரக்டரை படைத்த டாகூர் ஆச்சர்யப் படுத்துகிறார். முடிவில் அவரும் பெரிய புரட்சி செய்யவில்லைதான். கிராமமும், பணக்கார கல்கத்தா வீடும், காசியும்... பார்த்துப் பார்த்து செதுக்கிய டைரக்டரின் உழைப்பு தெரிகிறது. நீள நீளமாய் வசனம் அதிகம் இல்லாததால் பெரும்பாலும் ஒன்றிப் போக முடிகிறது.

இங்கிருந்து போவதற்குள் பேச முடியாவிட்டால் கூடப் பரவாயில்லை, இந்தப் படத்தை முழுதாகப் புரிந்து கொள்ளும் அளவுக்காவது பெங்காலி கற்றுக் கொள்ள வேண்டும்.