Monday, April 24, 2006

கொல்கத்தா சங்கதிகள் - 2

கொல்கத்தாவிலிருந்த போது பெங்காலி படங்களோடு தொடர்பு கொள்ள ஒரு சந்தர்ப்பம் ரே திரைப்பட விழா என்று அறிவித்த INOX கொடுத்தது. சத்யஜித் ரேயா? ஆளைவிடு என்று எல்லோரும் விலகிக் கொள்ள, அப்போது விடுவதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை. அது தனியாக சினிமா பார்க்கத் தொடங்கியிருக்காத நாட்கள். அதனாலென்ன, சொந்த கலெக்ஷனுக்காகட்டும் என்று வாங்கி வந்த பதேர் பாஞ்சாலியும் அதன் தொடர் பட வரிசையும் ஜீரணிக்க முரண்டு பிடித்ததில் பெங்காலி சினிமாவிலிருந்து தற்காலிகமாக விலகியிருந்தாலும் 'இது பிடிச்சிருக்க பாரேன்' என்று இழுத்து வந்தது ரிதுபர்ணோ கோஷ்.

சோக்கேர் பாலியில் தொடங்கியது... அவருடைய படங்கள், அது சொல்ல வருவதும் எதுவோ எங்கேயோ சகட்டுமேனிக்கு இழுக்க எந்த புள்ளியில் சந்திக்கப் போகிறோம் என்ற ஆவலும் அதைத் தேடும் முயற்சியுமாய் பார்த்த ரிதுபர்ணோவின் ஆரம்ப காலப் படங்கள்... கொஞ்சம் கமர்ஷியல், கொஞ்சம் துப்பறியும் கதை சொல்லும் முயற்சி... subhomuhurat... படத்தில் நந்திதா தாஸ் சொன்ன ஒரு வரி வசனத்தில் அந்தப் புள்ளியைக் கண்டு பிடித்த போது ஒரு உற்சாக ஹே!

தொடர்ந்து முயற்சித்த அபர்ணா சென் இயக்கிய படங்கள்... முழுக்க முழுக்க பெங்காலி, சப் டைட்டில் இல்லாத கண்ணாமூச்சியோடு பார்த்தவைகள் சொல்ல வந்தது என்னவோ ரொம்ப ஆழமானது, ஆனால் எனக்கு சரியாகப் புரியவில்லை என்ற சமரசத்தோடு மறுபடியும் பெங்காலிப் படங்களுக்கு தற்காலிக விடைபெறுதல்.

'அந்தர்மஹால்' குறுக்கீடும், மூட்டை கட்டும் நேரமாச்சு என்ற அறிவிப்புமாய் மறுபடியும் ஒரு பெங்காலி அலை. அடையாளம் காட்டும் வேலை செய்தது PlanetM. படங்களை பொதிந்து வைத்திருக்கும் அட்டைப் படமே சொல்லும் இது தான் நீ பார்க்க வேண்டியது என்று. முதுகில் எழுதியிருக்கும் ஆங்கிலப் பெயரைக் குறித்துக் கொள்வதும், கொச்சையான பெங்காலி உச்சரிப்பில் அதை வீடியோ கடைக்காரரிடம் ஒப்பிப்பதுமாய் பார்த்த பெங்காலிப் படங்கள் 'ஒரு வருஷத்தை வீணடிச்சுட்டே. பேசாம பெங்காலி கத்திருக்கலாம்' என்று லேட்டாக ஒரு ஞானோதயம் கொடுத்தது, ஒரு பத்து முப்பது படம் பார்த்ததில் பாஷை புரிய
ஆரம்பித்ததுதானென்றாலும்.

வழக்கமான பெங்காலி சினிமாவில் பாலிவுட் பாதிப்பில் கமர்ஷியல் கூத்துகளுக்கு குறைவில்லை என்றாலும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் இந்த வேறு நிறப் படங்களும். நாவல்களை மூலமாகக் கொண்டு என்று எடுக்கும் படங்கள் என்று பார்த்த மாத்திரத்திலேயே தெரிகிறது. சாதாரணமாக பார்க்கக் கிடைக்காத, குறைந்தபட்சம் நான் பார்த்திருக்காத கதைக்கரு... அதைச் சொல்லியிருக்கும் நேர்த்தி... உள்ளுக்குள்ளே இழுத்துக் கொள்ளக் கூடியதாய். சொல்லாமல் போக முடியாது என்ற ஒன்றிரண்டைப் பற்றி எழுதவில்லை என்றால் உறுத்தல் தாங்க முடியாது
என்பதால் கொஞ்சம்...

Nishi Japon ( after the night... dawn)... மலையும் காடுமாய்... அதில் ஒரு வீடு, வயதான அப்பா, விடுமுறைக்கு வந்திருக்கும் மகன்கள், மருமகள், அவளுடைய தங்கை, அப்பாவின் நண்பர்... தொலைக்காட்சி இல்லாத, செல்பேசி தொடர்பில்லாத ஏகாந்தத்தில்... சந்தோஷமான குடும்பம்... ஒரு ராத்திரி அடர்மழையும் நிலச்சரிவும்... தொடர்புக்கு இருந்த ஒரே தொங்குபாலமும் பிய்த்துக் கொண்டு போய் விட, சாப்பாடு தண்ணீர் இல்லாத மூன்று நாட்கள்... பசி மாற்றிப் போன குடும்பத்து ஆட்கள்... வெளியேறும் முயற்சிகளும் தொடரும் போராட்டங்களுமாய்... அந்த வீடும் லொக்கேஷனும்... அங்கேயே இழுத்துப் போன ஒளிப்பதிவும்... சந்திப் ரேயின் க்ளீன் மூவி.

Dahan... ஒரு ராத்திரி கடைத்தெருவிலிருந்து திரும்பி வரும் இளம் தம்பதியை வம்பிழுக்கும் ரவுடிக் கும்பல்... மொத்த ஜனமும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க நடுரோட்டில் நடக்கும் இந்த ரகளையை சிக்னலுக்காக காத்திருக்கும் நேரத்தில் கண்ணில் பட இறங்கிவந்து உதவி செய்யும் இன்னொரு பெண்... போலிஸ் கேஸ்,
வசதியான வீட்டுப் பிள்ளைகள், புகாரைத் திரும்ப பெற வைக்கும் முயற்சிகள் எல்லாம் வழக்கமானவைகள் என்றாலும்... பாதிக்கப்பட்ட பெண்ணின் மனநிலை... உதவி செய்த பெண்ணின் மனநிலை... இருவரையும் சந்திக்க அனுமதிக்காத வீட்டு மனிதர்கள்... இந்த திடீர் புகழை உபயோகப் படுத்திக் கொள்ள முயலும் காதலன்...
இதெல்லாம் நிச்சயம் புதுசு.

shunyo e'bukey (empty canvas)... ஓவியமும் சிற்பமும் நாட்டுப்புறபாடலுமாய் நிறைந்திருக்கும் நான்கு நண்பர்களின் கஜுராஹோ விஜயம்... அங்கே சந்திக்கும் ஒரு பெண், உணர்வுப் பூர்வமாய் நேசம் நிறைந்தவன் அவளைக் காதலிக்க, பக்கா ப்ராக்டிகல் கொஞ்சம் வெடுக்கென்ற பேச்சு நண்பன் இது சரிவராது என்று மறுக்க... கொல்கத்தாவில் தொடரும் அந்த காதல் கதை திருமணத்தில் முடிகிறது. முதல் இரவில், சரியான வளர்ச்சியடையாத அவள் மார்பகங்களைப் பார்த்து அதிர்ச்சியில் விலகும் கணவன்... ஏன் முதல்லயே சொல்லலை என்ற கேள்வியும்... என்னன்னு சொல்லியிருக்கணும் என்ற தயக்கம் நிறைந்த பதிலும்... நிறைய யோசிக்க வைத்த படம்.

Antarjali yatra... தொண்ணூறு பளஸ் வயதுகாரர்... கடைசி சுவாசத்தைத் தேடி நதிக்கரை கம் மயானத்திற்கே வந்து விட்டவருக்கு ஜோசியரின் அறிவுரைப்படி சிட்டுப் போல ஒரு பெண்ணோடு திருமணம்... திருமணம் முடிந்த பிறகும் அங்கேயே தொடரும் குடித்தனம்... நாலு மூங்கில் கம்பும் அதில் வெயில் மறைக்கக் கட்டிய ஒரு துணி கொஞ்சம் சமையல் பாத்திரங்களோடு யாருமில்லாத வெட்டவெளியில் குடுகுடு கிழவரோடு... தூரத்தில் ஒரு முரட்டு வெட்டியான்... கல்யாணம் கட்டிக் கொண்ட ஜோரில் உடல்நிலை தேறி, நடுங்கும் கைகளால் கன்னத்தை தடவத் தேடும் அந்த ப்ரேம் 'கொடுமைடா சாமி'! அந்த மூன்று பேருக்குள் ஓடும் உணர்வுகள்... படம் முழுதாகப் புரிந்ததா என்று தெரியவில்லை... ஆனால் பாதித்தது.

ரித்விக் காடக்கின் Meghey dhaka tara, 'அரங்கேற்றம்' 'அவள் ஒரு தொடர்கதை' பாலச்சந்தருக்கு முந்தியதா பிந்தியதா தெரியவில்லை. நான் முதலில் பார்த்தது பாலச்சந்தரைத்தான். மின்னலடித்துக் கொண்டே படம் காட்டிய அந்த மோட்டார் கார் படம் (பெயர் நினைவில்லை)... அதில் யாரும் நடித்த மாதிரி தெரியவில்லை... ஒரு காட்சியில் மாடிப்படியிலிருந்து இறங்கி வரும் சிறுவனின் எந்த அசைவும் அவனை எங்கிருந்தோ ஒரு காமிரா படம் பிடித்துக் கொண்டிருக்கிறது என்ற உணர்வு கொண்டிருக்கவில்லை... சிறுவனுக்கே இது என்றால் மற்றவர்களை யூகித்துக் கொள்ளலாம். யாராவது ஒரு பழைய சினிமா ரசிகரோடு இன்னொரு முறை பார்க்க வேண்டும் என்று யோசிக்க வைத்த படம்... மத்தியான நேரத்தில் தனியே பார்க்கும் போது நழுவிப் போவதை தவிர்க்க முடிவதில்லை.

கடைசியில் மறுபடியும் ரே... அபராஜிதா... சமீபத்திய காசி விஜயத்திற்குப் பிறகு கூடுதல் சுவாரசியத்தோடு ரசிக்க வைத்தது. அந்த நாள் காசிக்கும் இன்றைய காசிக்கும் இன்னும் மிச்சம் இருக்கும் தொடர்பு... ஆனாலும் ரே உங்களை முழுதாக ரசிக்க இன்னும் சில படிகள் ஏற வேண்டும். ஒருவேளை இன்னும் கொஞ்சம் வருஷம் கழிச்சு.

Saturday, April 15, 2006

சென்னையில் Blank Noise

இணையம் இல்லாத ஒரு மாத காலத்தில் மதியிடமிருந்து வந்திருந்த மயில் சொன்னது eve teasing எண்ணங்களை பகிர்ந்து கொள்ளும் blogathon என்ற தொடர் பதிவுகளைப் பற்றி. யாரும் எழுதினார்களா தெரியவில்லை. நான் எழுத யோசித்த போது அங்கங்கே பேருந்திலும் நடைபாதைகளிலும் சந்தித்த நொடி நேர சுகம் தேடும் இடிமன்னர்கள், தொண்ணூறுகளில் ஏதோ ரயில் நிலையத்தில் இருந்து வெளியில் வர முயற்சிக்கையில் அதீத நெரிசலில் பின்னால் உரசிக் கொண்டிருந்த ஒரு ஆண் உறுப்பையும் தவிர பெரிதாய் எதுவும் நினைவுக்கு வரவில்லை. திரும்பிப் பார்த்ததில் விலகிப் போன அந்த முகமில்லாத மனிதரை முற்றிலும் மறந்து போகவில்லை என்று இப்போது தெரிகிறது.

மறுபடியும் கில்லி சொல்லித் தெரிந்தது சென்னையில் இவர்கள் கூடப் போவது. 14 ம் தேதி மாலை நாரத கான சபாவைத் தேட நேரமாகுமோ என்று முன்னாலேயே புறப்பட்டு போனதில், ஆறேகால் மணிக்கு சபாவிற்குள் நுழைவதற்கு முன்னால் வுட்லேண்ட் கபேயில் ஒரு வெட்டுவெட்டிக் கொண்டிருக்கும் கச்சேரி ரசிகர்களில்
வலைபதியும் மக்கள் இலட்சணம் எதும் தெரியாததால் இன்னும் முக்கால் மணி நேரத்தை என்ன செய்வது என்று தெரியவில்லை. சாரதியார் பக்கத்திலிருக்கும் ஹனுமார் கோவிலுக்கு போங்களேன் என்று கூட்டிப் போனதில் ஒரு ஐந்து நிமிடம் ஓட்ட முடிந்தது. ஒரு சலாமுக்கும் குங்குமத்தீற்றலுக்கும் அதுக்கு மேல் எத்தனை நேரமாகப் போகிறது?! இத்தனை சீக்கிரம் முடிஞ்சுதா என்ற சாரதியின் ஆச்சர்யத்தை ஒதுக்கிவிட்டு வேற என்ன? என்று அந்த பிராந்தியத்தை சலித்ததில் ஒரு செருப்புக்கடை, ஒரு மினி கண்காட்சி... எதிலும் எதுவும் வேலையிருக்கவில்லை. சத்தம் அதிகமாய் ஒர் உள்ளடங்கிய கடை கூப்பிட்டதில் எட்டிப் பார்க்க AVM Music Store கண்ணில் பட நேரம் போனதே தெரியவில்லை.

ஏழு பத்துக்கு அவசரமாய் போய் சேர கபேயில் Blank Noise கூட்டம் ஆரம்பமாகி விட்டிருந்தது. மூன்று மேசைகளை வளைத்துப் போட்டு உட்கார்ந்திருந்த கூட்டத்தில் ஆணும் பெண்ணுமாய் எல்லாவயதுகாரர்களையும் பார்க்க முடிந்தது. மேலோட்டமாக சில விவாதங்கள், கருத்து பகிர்தல்கள், என்ன செய்யலாம், ஏன் இப்படி என்ற பேச்சுகள். ஏழு மணிக்கு, அடுத்ததாய் இந்த மாதம் 29ம் தேடி மறுபடியும் கூடுவதாயும் இடம் பின்னர் அறிவிக்கப் படும் என்று முடிவானது. நேரமிருக்கிறது என்னை உபயோகப் படுத்திக் கொள்ளலாம் என்று சொல்லி வந்திருக்கிறேன்.

முடிந்தபின் கொஞ்ச நேரம் அரட்டையில் சில அறிமுகங்கள், அவரவர் கேள்விப்பட்டதும், என்ன செய்யலாம்ங்களும். கொஞ்சம் இணையம்... சந்தர்பம் கிடைத்ததில் தமிழ்மணமும் ஆயிரத்தை எட்டும்(எட்டியாச்சா?) தமிழ் வலைப்பதிவுகளையும் பேசி விடை பெற்றேன். அந்த சிறு கூட்டம் இன்னும் தொடர்ந்து கொண்டிருந்தது. இந்த Blank Noise எங்கே எவ்வளவு தூரம் போகும் என்று தெரியவில்லை. எதாவது முயற்சி செய்ய வேண்டும் என்று நினைப்பதே முதல் படியாய் இருக்கட்டும்.