Thursday, October 03, 2013

கோலாலம்பூர்!


 சென்னை விமான நிலையத்துக்கு மலேசியா வெளிநாடுங்கற நினைப்பெல்லாம் இல்லை போல. பழைய டொண்டனக்கா இண்டர்னேஷனல் ஏர்போர்ட்டை தான் பயன்படுத்துகிறார்கள். அழுது வடியுது.

மலேசியா வெயிலடிக்காமல் லேசான தூறலோடும் அங்கங்கே நல்ல மழையோடும் வரவேற்றது. பத்தடிக்கு கொட்டும் மழையும் காய்ந்த ரோடும் மாறி மாறி வந்தது.

முதல் நாள் காலையில் சாப்பிட்ட மெக் டி பர்கரில் லேசான மீன் வாடை அடித்தது. காலங்காத்தால பர்கர்... கொடுமை!

சைனா டவுன் ட்யூப்ளிகேட் சாமான்களால் நிறைந்து கிடக்கிறது. மற்றொரு பக்கம் ரோட்டோர உணவகங்கள். நிறைய வழவழ கொழ கொழா சமாச்சாரங்கள் கண்ணில் பட்டது.

நடுவிலே ஒரு மாரியம்மன் கோவில். நல்ல நாதஸ்வர சகிதம் மாலை பூஜை. புடவை கட்டின ஒரு மலேய பெண்மனி வீட்டிலிருந்து நெய் விளக்கு கொண்டு வந்து சிரத்தையாக ஏற்றிக் கொண்டிருந்தார். இந்தியாவில் பார்க்கும் பக்திக்கும் மலேசியாவில் பார்த்ததற்கும் ஏதோ வித்தியாசம் தெரிந்தது. சரியாகச் சொல்லுமளவுக்கு கவனிக்க நேரமிருக்கவில்லை.

எதிர்த்தார்ப்போல இருந்த உணவகத்தில் மாலை ஐந்து மணிக்கு நல்ல சோறும் மீனும் கிடைக்கிறது. சாப்பாட்டை சோறு என்று சொல்லி நிறைய இடத்தில் கேட்டேன். சின்ன வயசில் எங்க வீட்டிலும் சோறு என்றுதான் சொல்லிக் கொண்டிருந்த ஞாபகம் வந்தது!

கொஞ்ச நாள் முந்தின சென்னை ஆட்டோ ட்ரைவர்களை போல ரெட் டாக்ஸி கொள்ளை.

பெட்ரோனாஸ் ட்வின் டவர்ஸ் ராத்திரியிலும் அழகு. பகலிலும். எப்போ பார்த்தாலும் அம்மாடியோன்னு இருக்கு. மேல போக ஒரு ஆளுக்கு 80 ரிங்கெட் ஜாஸ்தி தான்னாலும் கட்டாயம் பார்க்க வேண்டியது.

இருபத்தி நாலு மணி நேரத்துக்கு செல்லுபடியாகும் hop on hop off city tour மொத்த கோலாலம்பூரையும் இரண்டரை மணியிலிருந்து மூன்று மணிநேரம் சுத்தி வருது. சென்னைல ஏன் இந்தியாவிலயே ஏன் எங்கயும் இந்த மாதிரி சர்வீஸ் இல்லை?!

ஆகப்பெரிய பெவிலியன் மால் ஃபுட் கோர்ட்டில் அத்தனை கடல் வாழ் ஜந்துவும் கிடைக்கிறது. மொத்த ஏரியாவுமே மீன் வாசனை. அத்தனையிலும் எதை சாப்பிடவுமே தைரியம் வரவில்லை. வெஜிடேரியன்கள் பாட்டை நினைத்தால் ஐயோ என்றிருந்தது.

Flat noodles with fish balls!மால்களுக்குள் நுழைந்து விட்டால் லண்டனும் ஸ்பெயினும் கேயெல்லும் ஒன்று போலவே இருக்கிறது. அதே ப்ராண்டட் கடைகள். அதே சாமான்கள். எல்லா பெரு நகரங்களும் ஒன்று போலவே.

அதே மாலில் ஒரு குங்குமப் போட்டுக்காரர் நின்ற வாக்கில் ஜோசியம் பார்க்கக் கூப்பிட்டார். பின்னாலிருந்து கேரளாக்காரன் என்ற தூண்டில் கூட விழுந்தது!

தமிழ்க்காரர்கள் தனியாக தெரிகிறார்கள். கொஞ்சம் raw வாக. A fine balance of adaptability and retaining identity is missing.

மத இன வேறுபாடுகளை பொருட்படுத்தாமல் கலந்த வாழ்க்கையாயிருக்கிறது.

தூன் சம்பந்தன் தெரியுமா என்று கேட்ட டாக்ஸிகாரர் பேச்சு 'கெடுத்திட்டியே ...' டோன்ல இருந்தது. விவரங்களுக்கு http://thulasidhalam.blogspot.in/2013/08/2.html

வெண்ணை கால்கள் தெரிய கையகல ட்ரவுஸரும் டீ ஷர்ட்டும் அணிந்த இளம்பெண்கள் தெருவில் மால்களில் பஸ்களில் ரேப் பயமின்றி இயல்பாக சுற்றுகிறார்கள். காய்ந்து கிடக்கறேன் காமிச்சுடாதேங்கற கோஷத்திற்கும் இந்த மனநிலைக்கும் நடுவிலே இருக்கும் இந்த பெரிய பள்ளத்தை இந்திய ஆண் எப்போ எப்படி தாண்டப்போறான்னு நினைச்சா கவலையாத்தான் இருக்கு.