Thursday, February 22, 2007

சீஸன் குறிப்புகள் - கடைசி.

ஒரு பட்டியல்:

சின்ன பரபரப்போடு கடைக்குப் போய் புத்தகம் வாங்கி அங்கேயே நின்று அச்சில் வந்திருக்கும் எழுத்தை முதல் முதலாக வாசிக்கும் சந்தோஷம்... அது சொல்லியும் கேட்டுமே ரொம்ப பெரிய விஷயம் போல ஆகிப் போனதால் அதை கர்ம சிரத்தையாக செய்தேன்... அந்த ப்ளுஸ்டார் பஸ் ஸ்டாப் கடை... அதை எப்போது கடந்தாலும் அந்த ஞாபகம் வருகிறது. சீக்கிரம் மறக்க வேண்டும்!

ரசனை தொழிலாகக் கூடாது! இது கற்றுக் கொண்ட பாடம். விட்டேத்தியா ரசிக்க விடாம... இதைக் குறிச்சுக்கணுமோ அதைக் கவனிக்கணுமோ... சதா ஒரு குடைச்சல்.

அடங்கு அடங்குன்னு அடக்கி வைத்திருந்த கொம்பை செல்லமாக வளர விட ஒரு சந்தர்ப்பம். ரிப்போர்ட்டருக்கான முதல் குணாதிசயம் எங்கேயும் யார்கிட்டயும் எதுக்கும் தயங்காம தடாலடியா இருக்கச் சொன்ன குங்குமம் சப் எடிட்டர் ஜி.கௌதம்.

எந்த கச்சேரியை கவர் பண்ண வேண்டும் என்ற சுதந்திரத்தை எனக்கே தந்து விட்ட கௌதம், மற்றும் அவருக்கு பின் பொறுப்பேற்ற திரு. வள்ளிதாசன். யார் யாரையெல்லாம் கேட்க வேண்டும் பார்க்க வேண்டும் என்று நினைத்தேனோ அவர்களை ரிப்போர்ட்டர் என்ற ஹோதாவோடு சந்திக்க முடிந்தது. ரிப்போர்ட்டர்... அந்த வார்த்தைக்கு இருக்கும் வெயிட்டேஜ்... அதை முழுக்க அனுபவித்தேன்.

கர்நாடக சங்கீதம்... மிரட்டியது. தியானம் பழகுகிறவர்கள் அதிலிருந்து நழுவிப்போவது போல எப்போது கவனம் மாறுகிறது என்பது தெரியாமல் ஏதோ யோசனைக்குப் போய் திரும்பி வந்ததை நிறைய தடவை வேடிக்கை பார்த்தேன்.

வயலின் மேல் தீராத காதல் வந்தது. கலா ராம்நாத் தொடங்கி யார் வாசித்தாலும் பிடித்திருந்தது.

கவர் பண்ணாத ஒரு சஞ்சய் சுப்ரமணியம் கச்சேரியில் அந்த குரல் இழுப்பதை உணர முடிந்தது. அந்த அளவுக்கு எண்ணம் குவிவதை தாங்க முடியாமல் பாதி கச்சேரிக்கு மேல் முகத்தைத் வேறு பக்கம் திருப்பிக் கொண்டு உட்கார்ந்தது கிறுக்குத்தனம்!

ராகங்கள் அதன் ஆழம், அளவு இதெல்லாம் தெரிந்து கொண்டு ரசிக்கும் உங்கள் ரசனைக்கு என் ரசனை சளைத்ததில்லை என்று நண்பர் சக்கரபாணியோடான விவாதம்... என் முன்னால நீ பூஜ்யம்மா... வேறு சமயமாயிருந்தால் இதை வேற யாராவது சொல்லியிருந்தால் என்ன கோபம் வந்திருக்குமோ... இப்பவும் சொல்கிறேன் என் ரசனை சளைத்ததில்லை! எதுவுமே புரியாமல் கேட்கும் போதும் நான் விரும்பும் சந்தோஷம் எனக்கு வாய்க்கிறது... அது போதும்!

மூன்று மணி நேர கச்சேரி... முடிந்ததும் வீடு, சமையல்... அத்தனை சீக்கிரம் ஒரு மனநிலையிலிருந்து இன்னொன்றுக்கு மாறும் போது வெறுப்பாக இருந்தது. கச்சேரி முடிந்து கொஞ்சம் நேரம் தனிமை வாய்த்திருக்கக் கூடாதா?

பார்த்தவரை கேட்டவரை போதும் என்றிருந்தது. அதற்கு மேல் திகட்டியிருக்கும்.

ஏறக்குறைய சீஸன் முடிந்த போது ம்யூஸிக் அகடமியின் ஒரு வார நாட்டிய விழா... மறுபடியும் அதே சீஸன் டிக்கெட்... முன் வரிசை பந்தா... ஆடுபவர்களின் பெயர்கள் தந்த டெம்ப்டேஷன் எல்லாம் நேரப் பற்றாக்குறையால் தவிர்க்க வேண்டியதாயிற்று. அடுத்த வருஷம் 'கண்டிப்பாக' லிஸ்டில் அடிக்கோடிட்டு சிவப்பு மையில் எழுதி வைத்தாகிவிட்டது.

கேட்க முடியாமல் தவற விட்டவர்கள்... சிக்கில் குருசரண், ரஞ்சனி - காயத்ரி.

சந்தர்ப்பம் கிடைத்தும் கேட்காமல் விட்ட சில பெரிய தலைகளை ஏன் தவிர்த்தேன் என்ற கேள்விக்கு பதில் தேடிக் கொண்டிருக்கிறேன்!

Monday, February 19, 2007

சீஸன் குறிப்புகள் - 3

நந்தனார் சரித்திரம் - விஷாகா ஹரி - கார்த்திக் பைன் ஆர்ட்ஸ் வழங்கியது. ஆத்துக்காரருக்கு காபி கலந்து கொடுத்த கையோடு காலட்சேப நோட்டுப் புத்தகத்தைத் தூக்கிக் கொண்டு வந்து விட்டாரோ என்று ஆச்சர்யப்பட வைக்கும் எளிமை... அது விஷாகா ஹரி. எளிமை வெறும் தோற்றத்தில் மட்டுமே. அம்மணி உருவாக்கி வைத்திருக்கும் இமேஜ் காலட்சேபம் தொடங்குவதற்கு முன்பே காதில் விழுந்தது. சின்ன குழந்தைக்கும் புரிவது போல சொல்லும் திறமை பரவலாகப் பேசப்பட்டது. கோபால கிருஷ்ண பாரதியால் தமிழில் சுமார் இருநூறு வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட நந்தனார் சரித்திரத்தைச் சொன்ன காலட்சேபத்தில் கச்சேரி விகிதாச்சாரம் அதிகம். சொன்ன குரல் தேன்... கொஞ்சம் காத்திரமான தேன்.

நந்தனார் சரித்திரத்தை கண் முன்னே ஓட விட்டது குரலா, மொழி எளிமையா அல்லது அவரால் நிறைக்கப்பட்ட உணர்வா என்றால்... எல்லாம் தான். பாடுவதிலிருந்து கதை சொல்லத் தொடங்குவதும், கதையிலிருந்து பாடத் தொடங்குவதுமாய் இயல்பான ஃப்ளோ. ஆரம்பத்தில் கொஞ்சம் மெதுவாகப் போகிறதோ என்று தோன்றி பின்பாதியில் வேகமெடுத்தது. வழக்கமான தெலுங்கு கீர்த்தனைகள் கேட்கும் காதுகளுக்கு தமிழ் கீர்த்தனைகள் கேட்பதன் இதம் புரிந்தது. சுத்தமான உச்சரிப்பு. ஒன்றிரண்டு முறை ஒரே விஷயத்தை ஒரே வார்த்தைகளில் குறைந்த இடைவெளியில் இரண்டாவது முறை கேட்டது கொஞ்சம் நிரடியது. நர்த்தனமாடும் நடராஜர் என்று அரங்கில் மாட்டியிருக்கும் படத்தைக் கண்ணால் காட்டிப் பேச அத்தனை கூட்டமும் திரும்பி அந்த நடராஜரைப் பார்த்தது ரசிகர்கள் குறையா, காலட்சேபம் செய்பவர் குறையா? வர்ணிப்பில் அவரவர் மனதில் நடராஜரின் பிம்பத்தை உருவாக்க வேண்டாமா?

நிகழ்ச்சி முடிந்து மனநிறைவோடு செல்பவர்களைத்தான் வழக்கமாக பார்க்க முடியும்... இங்கே உரிமையோடு முத்தமிட்டு வாழ்த்தும் திருஷ்டி கழிக்கும் ரசிகர்களைப் பார்க்க முடிந்தது. வழக்கமான கச்சேரிகளுக்கு நடுவில் காலட்சேபம் என்று 'மாத்தி யோசி'த்த விஷாகா ஹரிக்கு வாழ்த்துகள்.

வெள்ளிக் கிழமை மாலை ஏழரை மணிக்கு பாரத் கலாச்சாரில் ஷோபனா குழுவினரின் நாட்டியம். ஷோபனா குழுவை ஒரு வார்த்தையில் வர்ணிப்பது என்றால்... 'நளினம்'. நடனமாடுபவர்களை ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால்... 'மயில்கள்'. உறுத்தாத அலங்காரம். தீர்க்கமான முத்திரைகள். ஷோபனாவின் ஸோலோவில் அவருடைய பாணியும் அது எப்படி அவரது மாணவிகளில் பிரதிபலிக்கிறது என்பதும் துல்லியமாகத் தெரிகிறது. கலைடாஸ்கோப் போல் மாறும் முகபாவங்கள். நாக்கை ஒருபக்கம் அதக்கி குறும்புத்தனம் காட்டுவதில் மயங்காதவர்கள் இருந்திருக்க முடியாது. 'அடங்கா கங்கையும் அடங்கும் உன் சடையில்' பதத்திற்கான அபிநயம் க்ளாஸ். ஒரு கண்ணை மூடி லேசாகப் பற்களைக் கடித்துக் காட்டும் குரோதத்திலும் நளினம் காட்டியது கற்பனைக்கு அப்பாற்பட்டது. வள்ளிக் குறத்தியும், கண்ணப்பனார் குறிப்பும்... எதைச் சொல்ல எதைவிட?!

குழுவினரோடு இணைந்து வழங்கிய கிருஷ்ண கோபியர் கொண்டாட்டம் அருமையான முத்தாய்ப்பு. கிருஷ்ணராக நடனமாடிய சிறுமிக்கு தனிப்பட்ட பாராட்டுகள். செல்லக் குறும்பும் சேட்டைகளுமாய்...! ஒரு குழுவாக இணைந்து நிகழ்த்தும் ஒரு நிகழ்ச்சிக்கு எவ்வளவு ஒருங்கிசைவு தேவை என்பது அழகாகத் தெரிந்தது. சுருக்கமாக, ஒரு விஷுவல் ட்ரீட்.... ஒரு மாலையை நிறைவு செய்ய... ஒரு நாளைப் பூர்த்தியாக்க... ஏகாந்தத்தில் நினைத்து அசைபோட.

Wednesday, February 07, 2007

சீஸன் குறிப்புகள் - 2

செவ்வாய் கிழமை மாலை பாரத் கலாச்சார்- ல் ஓ.எஸ். அருண் கச்சேரி. முல்லைவாசல் ஜி . சந்திரமௌளலி வயலின். ஜே. வைத்தியநாதன் மிருதங்கம். ஸ்ரீரங்கம் கண்ணன் மோர்சிங்.

நல்ல உயரம். ஏதோ ஸ்டூல் போட்டு உட்கார்ந்திருக்கிறாரோ என்று தோன்ற வைக்கும் அளவுக்கு. அனுபவித்துப் பாடிய 'இந்த்த தாமஸமா?' வும் 'அகிலாண்டேஸ்வரி'யை துணைக்கழைத்தும் ரசிகர்களைக் கட்டிப் போட செய்த முயற்சிகள். நான்கு மணி கச்சேரிக்கு பெரிய கூட்டம் எதிர்பார்க்க முடியாதென்றாலும் இருந்தவர்களாவது நல்ல ரசிகர்களாக இருந்திருக்கலாம்! ஐந்தாவது வரிசையில் ஆழ்ந்த தூக்கத்தில் ஒரு ரசிகை(?!), வாசலில் விநியோகிக்கப்பட்ட செய்திக்குறிப்புக்காக ஓவ்வொருவராய் எழுந்து போவதும், வந்து வாசிப்பதுமாயிருக்க... ஸ்வர சஞ்சாரத்தில் ம நி தா... ம த ம நி தா... நி தா நி... ச தா நி... ( மனிதா... மதமனிதா... நிதானி... சதா நீ) என்றென்னால்லாம் ஜாடையாகச் சொன்னதெல்லாம் கேட்காத ரசிகர்களுக்கு கச்சேரிக்கு நடுவில் வேண்டுகோள் வைக்க வேண்டியதாயிற்று. திருமதி ஒய்.ஜி.பி மன்னிப்பு கேட்டு பஜன் பாடச் சொல்லிக் கேட்டுக் கொண்டதும் ஆசிரியர் வந்து ஒரு சத்தம் போட்டதும் சொன்ன பேச்சு கேட்கும் பிள்ளைகள் போல ரசிகர்களில் கொஞ்சம் மாற்றம். 'யமுனை நதியே கண்ணனைக் கண்டாயோ?', 'ஆஜ் ஆயோ ஷ்யாம் மோஹனா'... இரண்டும் மெய்மறக்க வைத்தது.

நிகழ்ச்சி முடிந்து ரிலாக்ஸாக வெளியே வந்த அருணுக்கான கேள்வி... 'பாடுவது கச்சேரிக்காவா? ரசிகர்களுக்காகவா?' பதில் சொல்வதை சாமர்த்தியமாக தவிர்த்து ' நீங்களே சொல்லுங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று?' என்று எதிர்கேள்வி கேட்பதாக நினைத்துக் கொண்டாலும் ஆழ்ந்து ரசிக்காத ரசிகர்களுக்கு பாட நேரும் அவஸ்தை அவரது வார்த்தைகளில் புரிந்தது.

ஏழரை மணிக்கு அதே அரங்கில் மதுவந்தி அருண் வழங்கிய நாட்டியம். மறைந்த சாவித்திரி கணேசனுக்கான நினைவஞ்சலி. மெல்ல நிறமும் களையும் மாறும் அரங்கத்தை காண சுவையாயிருந்தது. மத்யான கச்சேரிக்கான எளிமையான அரங்கம் மாறி பட்டும் பளபளப்புமாக மாறிக் கொண்டிருந்தது. பத்மா சுப்ரமணியம், வைஜெயந்திமாலா பாலி, சௌகார் ஜானகி, கமலா செல்வராஜ்... நிகழ்ச்சிக்கு வந்திருந்த பிரபலங்களில் சிலர். 'கர்த்தவ்யம்' என்ற கருப்பொருள் கொண்ட நாட்டியத்தில் சீதையாகவும், ஊர்மிளையாகவும், ராமனாகவும், கிருஷ்ணனாகவும் மதுவந்தி. எளிய உடைமாற்றத்தில் வித்தியாசம் காட்டியது சிறப்பு. வாலியாகவும் சுக்ரீவனாகவும் வந்த இளைஞர்களின் வேகமும் ஈடுபாடும் குறிப்பிடாமல் போக முடியாது.

மதுவந்தியின் சற்றே பருமனான உடம்பு கொஞ்சம் உறுத்தல். இத்தனை கேரக்டகளாக மாறும் போது அடிப்படையாக எல்லா பாத்திரங்களுக்கு இருப்பதாக நாம் உணர்ந்திருக்கும் சாத்வீக பாவம் மிஸ்ஸிங்.

சத்தமில்லாமல் வந்தமர்ந்த பானுப்ரியாவைப் பார்த்த போது ஒரு கலைஞராக இவர் எப்படி ரசிப்பார் என்ற கேள்வி வந்தது. 'உங்களை அந்த முக்கிய பாத்திரத்தில் வைக்காமல் வெறும் ரசிகராக உங்களால் ரசிக்க முடியுமா?' என்ற கேள்விக்கு ஒரு சின்ன யோசனைக்குப் பிறகு, 'இப்போ அப்படித்தான் ரசிக்கிறேன். வீட்டுக்குப் போய் நிதானமாக யோசிக்கும்போது அப்படித் தோணலாம்.' என்றார்.

பத்து நிமிடத்திற்கொருமுறை செல்பேசியையை ஒளிர்வித்து அதிலிருந்த மகளின் புகைப்படத்தை பார்த்துப் பார்த்து மூடும் பானுப்ரியாவிற்கு வீட்டுக்கு போன பிறகு இதையெல்லாம் யோசிக்க நேரம் இருக்குமா?!

27 ம் தேதி மாலை ம்யூஸிக் அகடமியின் நான்கு மணி பாம்பே ஜெயஸ்ரீக்காக. மைசூர் ஸ்ரீகாந்த் வயலின். பூங்குளம் சுப்ரமணியம் மிருதங்கம். திருவனந்தபுரம் ராஜகோபால் கஞ்சிரா. நான்கு மணிவாக்கில் சாதாரணமாக இருந்த கூட்டம் அரைமணியில் திருவிழா கூட்டமானது. திரை உயரும் போது மேடையிலோ அரங்கிலோ எங்கும் இடமில்லை.

சிகப்புப் புடவை, மஞ்சள் ஜாக்கெட்டில் எளிய அலங்காரத்துடன் ஜெயஸ்ரீ. ஆற்றோட்டம் போன்ற குரல். அதிகம் வேகம் கொள்ளாமல் அமைதியாக ஓடுகிறது. இதமாக கால்களை நனைத்துக் கொண்டு. வெளியே வர மனசே வருவதில்லை. ஆஹிரியையும் பைரவியையும் ரசித்துப் பாடினார். வயலின் அழகாக ஜோடி சேர்ந்து கொண்டது. ராகம் தானம் பல்லவிக்குப் பிறகு வெளியேறி விட்ட சுத்த சங்கீதக் காதுகள் 'வண்ணச்சிறு தொட்டில்' இட்டு கண்ணனுக்கு பாடிய தாலாட்டை தவறவிட்டார்கள். தாலாட்டுக் கேட்டு கண்ணன் தூங்கினானோ இல்லையோ கேட்டவர்கள் கரைந்து போனார்கள். நிகழ்ச்சி முடிந்த போது எழுந்து நின்று கைத்தட்டிய கூட்டத்தின் திருப்தியை உணர முடிந்தது.

Tuesday, February 06, 2007

சீஸன் குறிப்புகள் - 1

ம்யூஸிக் அகடமியில் என்ன கிடைக்கும்? நல்ல சங்கீதம்? செவியோடு சேர்ந்து நாவு கம் வயிற்றுக்கும் விருந்து? நண்பர் கூட கிடைப்பார் தெரியுமா? கொஞ்சம் கூடுதல் அதிர்ஷ்டம் இருந்தால், எழுபது சொச்சம் வயதின் பெரும்பகுதியை சங்கீதம் ரசிக்கவே கழித்த, வித்வான்களுக்கும் தனக்கும் உள்ள தூரத்தை விஷய ஞானத்தில் கடக்கக் கூடிய, சுவாரசியமான நினைவுகளுக்குச் சொந்தக்கார... எக்ஸட்ரா எக்ஸட்ராகளோடு கூடிய நண்பரும் கூடக் கிடைப்பார்!

ஆச்சாரமாக, பக்தியோடு தொடங்கும் டிசம்பர் கச்சேரிகளுக்கு முன்னால் கொஞ்சம் ஜனரஞ்சகமாகக் கலக்கிய ஹிந்து ம்யூஸிக் பெஸ்ட்-ல் ஸ்டார் ஹோட்டல் பு·பேக்கு நடுவில் நானும் இருக்கேன்னு உரத்துச் சொல்லும் எண்ணெய் கத்தரிக்காய் குழம்பும் தயிர்சாதமும் போல கஸல்களுக்கும் மோஸார்ட்க்கும் நடுவில் கர்நாடக சங்கீதம் கலக்கிவிட்டுப் போன நாட்களில் அறிமுகமானார். இலக்கணவிதிகளுக்கு கட்டுப்பட்ட மரபுக் கவிதை, எந்த விதிகளாலும் பிணைக்கப்படாத புதுக்கவிதை... இரண்டு துருவங்களையும் இணைக்கும் அடிநாதம் கவிதை. இப்படி இரண்டு பேர் கச்சேரி கேட்கப் போனால் எப்படி இருக்கும்?!

டிசம்பர் 12-ம் தேதி ராமகிருஷ்ணா மிஷன் பள்ளி அரங்கத்தில் முத்ராவின் 12-வது பைன் ஆர்ட்ஸ் பெஸ்டிவல் வழங்கிய சஞ்சய் சுப்ரமணியம் கச்சேரி. வயலின் எஸ்.வரதராஜன், மிருதங்கம் குருவாயூர் துரை, கடம் திருப்புணித்துர ராதாகிருஷ்ணன். வாசலில் டென்ஷனாக முத்ரா பாஸ்கர், அவரை காம்பன்ஸேட் செய்ய வாயெல்லாம் வெள்ளையாய் ராதா பாஸ்கர். ஓரளவு பெரிய ஹாலில் ஏறக்குறைய ஐநூறு ஜோடி காதுகள். ஆர்ப்பாட்டமில்லாத ரசிகர் கூட்டம். வேஷ்டியும் வெள்ளைச் சட்டையும் சாயமேற்றிய கேசமுமாய், கர்நாடக சங்கீத விதவானுக்கான பிரத்யேக அடையாளங்கள் எதுவும் இல்லாமல் கச்சேரி முடித்து வேஷ்டியைக் களைந்து ஜீன்ஸ¤க்கு மாறினால் சத்யம் தியேட்டர் வாசல் கும்பலில் வித்தியாசமில்லாமல் கலந்துவிடக் கூடியவராய்... சஞ்சய் சுப்ரமணியம்.

சரியாக ஆறேகாலுக்கு தொடங்கிய கச்சேரி ஆரம்பம் முதலே ஜில்லென்ற வேகம் தான். வயலினும் வாய்ப்பாட்டும் இரண்டு சின்ன பசங்களைப் போல கைகோர்த்து உல்லாச ஓட்டம். இணையாயும், கொஞ்சம் நீ முந்தியா நான் முந்தியா என்றும். குரல் சொன்னபடி கேட்கும் போது சந்தோஷம் முகத்தில் தெரிகிறது. அந்த சந்தோஷத்தில் இன்னும் துள்ளலாய். முகமோ, அதன் பாவனையோ பற்றிக் கொஞ்சமும் கவலையில்லாமல் தளையில்லாத வேகம்.

சஞ்சயிடம் கேட்க குறித்து வைத்திருந்த கேள்வி... சபாக்களில் வாசிக்கும் போது எக்ஸ்டஸிக்கல் பாயிண்ட் ( ஒரு கணத்தில் எல்லாம் மறந்து போகும் நிலை) தொடுவதுண்டா? என்று. அவர் தொட்டாரா இல்லையா என்பது தெரிவதற்கு முன்பே மத்யமாவதியில் என்னைத் தொட வைத்தார். அதற்குப் பிறகு கொஞ்ச நேரத்திற்கு சங்கீதமென்ன எதுவுமே நினைவிருக்கவில்லை. 'கந்தனடி...' பாடி மறுபடியும் இழுத்து வந்தார். பாரதியின் 'திக்குத் தெரியாத காட்டில்...' க்கு ஒரு சபாஷ்.

'நல்லா பாடறார். பெரிய மனசு. முடிச்சுக்கட்டுமா பாஸ்கர்-ன்னு கேட்டுட்டு முடிச்சார் பாத்தியா? மத்யமாவதிலதான் கொஞ்சம் சுருதி பேதம்' - இது மரபுக்கவிதையின் கமெண்ட்.கடைசியில் அந்தக் கேள்வியை கேட்டு வைக்க நேரம் வாய்த்து, கேட்டதில்... ' என்ன? இன்னொரு முறை கேளுங்கள் என்று கேட்டு விட்டு... ', 'இல்லை. அப்படி எந்த இடத்தையும் தொடுவதில்லை. தனிமையில் பாடும் போது கூட'... ஆச்சரியம் தான்! கேள்வி சரியாக புரிந்து கொள்ளப் படவில்லையோ என்ற சந்தேகம் மட்டும் இன்னும் மிச்சம் இருக்கிறது!

மறுநாள் அதே இடத்தில் சுதா ரகுநாதன் நிகழ்ச்சிக்கு முன்னால் ராம்ஜியின் இசை மழலைகள் சத்யநாராயணா - கீ போர்ட், விக்னேஷ் - வாய்ப்பாட்டு... நல்லி குப்புசாமி ஏ.நடராஜன் ஜோடி தலைமையில் சுதாவுடன் சேர்ந்து போகோ சேனல் பரிசு பெற்றதற்கு ஒரு சிறிய பாராட்டு விழா. பெரியவர்கள் ஒரு பக்கம் பாராட்டிக் கொண்டிருக்க வாண்டு வித்வான்கள் சிறுபிள்ளைச் சிரிப்புகளுடன்.

மாறி மாறிப் பொழிந்த பாராட்டு மழை ஓய்ந்ததும் கச்சேரி தொடங்கியது. எம். ஆர். கோபிநாத் வயலின். திருவாரூர் வைத்தியநாதன் மிருதங்கம். ராமன் மோர்சிங். நீலப்புடவையும் தோதான ஆபரணங்களுமாய் சுதா. பெண் கலைஞர்களுக்கு பாடவோ வாசிக்கவோ தயார் செய்வதோடு இந்த அலங்கார மெனக்கெடல்கள் சந்தோஷமா? சுமையா? எனக்கென்னவோ ஒரு கட்டத்திற்கு மேல் சுமையாகத்தான் போய்விடும் என்று தோன்றுகிறது.

பைரவியில் வர்ணம் பாடி தொடங்கிய கச்சேரியில், குரல் ராகங்களின் ஆழங்களை அநாயசமாகத் தொட்டு மேதாவிலாசம் சொன்னது. கோவில் மணி ஓசை எவ்வளவு நேரம் கேட்க முடியும்? சுதாவின் குரலில் மூன்று மணிநேரம் சலிக்காமல் கேட்கலாம். சுதாவின் லதாங்கியும் ஆபேரியும் மரபுக்கவிதையை முழுசாக உள்ளே இழுத்துக் கொண்டது. அங்கே இங்கே அசையாமல் கச்சேரியில் ஆழ்ந்து போனது.வெளியே வரும் போது, ' ஆழ்ந்த இசை ஞானமுள்ள என் போன்ற ரசிகர்களை சபாக்கள் சரியாகப் புரிந்து நடத்துவதில்லை' என்ற வருத்தத்தை சொல்லி விட்டுப் போனது.

மொத்தத்தில் கர்மசிரத்தையான கச்சேரி.

Saturday, February 03, 2007

Babel & Parzania


ரசனைகள், அவற்றின் முனைப்பு இதெல்லாமே சந்தர்ப்பம் சூழ்நிலைகளால் மழுங்கிப் போய் விடுவதை இவ்வளவு துல்லியமாக உணரப் போகிறேன் என்று ஒரு வருஷம் முன்னால் நி¨னத்தும் பார்க்கவில்லை. ஐந்து நிமிடப் பயணத்தில் INOX ம் அது தடம் காட்டியதில் தொடர்ந்த பெங்காலிப் படங்களும் தந்த நிறைவெல்லாம் சென்னை வந்த பிறகு சத்யம் ரொம்ப தூரம், வேலைக்காரம்மா வேலை முடிக்கும் நேரம், பசங்க வீட்டுக்கு வரும் நேரம் போன்ற சில்லரை காரணங்களால் இழப்பதே தெரியாமல் இழந்தது பெரிய பர்சனல் சோகம். ஆரம்ப கால சென்னை வாழ்க்கையில் தேடிப் போன சத்யம் Lights On நிகழ்ச்சிகளும் சனி, ஞாயிறு காலை ஒன்பது மணி படங்களும் மெல்ல மெல்ல இல்லாமலே போனது உரைத்த ஒரு மாலை Parzania என்று ரொம்ப வேகமாகப் புறப்பட வைத்து இரண்டாவது வரிசை ஓக்கேவா என்று கேட்க, மறுத்ததால் வாய்த்தது Babel. ஒரு விஷயம்... அதைத் தெ¡டர்ந்து நிகழும் வெவ்வேறு விஷயங்கள்... அதை கச்சிதமாக இணைத்திருப்பது... கொஞ்சம் கூட தொய்வில்லாமல்... செதுக்கி வைத்த பாத்திரங்கள், அது காட்டும் முதிர்ச்சி, இப்படித்த¡ன் இருக்கப் போகிறது என்று எதிர்பார்த்த இறுதிக் காட்சி, முகத்தில் அறையாவிட்டாலும் யோசிக்க வைத்ததுமாய்... திரும்பி வரும் வழியெல்லாம் தொடர்ந்த படம் பற்றிய விவாதம்... நிச்சயமில்லாதது தான் வாழ்க்கை என்றால் எப்படி என்ற கேள்வியும், அது தானே அதன் சுவாரசியம் என்ற பதிலுமாய்... மகளும் நானும் அன்றைக்கு படுக்கப் போகும் போது கனமாக உணர்ந்தோம்.

ஆனாலும் Parzania வை விட மனதில்லாமல் அடுத்த நாள் படையெடுப்பில் வழக்கம் போல சத்யம்தியேட்டரின் ட்வின் சீட் இந்த முறையும் மகளுக்கு எனக்கும் வாய்த்தது. போயும் போயும் நாம ரெண்டு பேருமா இப்படி ஒட்டிக்கிட்டு படம் பார்க்கணும்! என்ற வழக்கமான செல்லச் சலிப்பொடு பாப்கார்னையெல்லாம் படம் தொடங்குவதற்கு முன்னாலே முடித்து விட்டு பார்க்கத் தயாரானது ம்ம்ம்... வலிய வருத்திக் கொண்ட இறுக்கம் போல என்று கூடச் சொல்லலாம். படத்தின் இந்த நிகழ்வு நடந்து முடிந்த போது தான் சூரத்திற்கு குடிபெயர்ந்திருந்தோம். அவ்வளவு பக்கத்தில் இத்தனை நடந்திருந்தும், ஊடகச் செய்திகளைக் காட்டிலும் கண் பார்த்த செய்திகள் சட்டென்று பரவும் சாத்தியமிருந்த போதும் அமைதியாயிருந்த அந்த நகரம் பெரிய ஆச்சர்யம்.

அந்த கலவரங்களின் போது குழந்தையை தவறவிட்ட ஒரு குடும்பத்தின் உண்மைக் கதை. சின்னச் சின்ன மாற்றங்கள் செய்து ஒரு கதை போன்ற தோற்றத்தில் பதியப் பட்ட நிஜம். முழு தியேட்டரும் உறைந்து போய்க் கிடந்தது. கதை நாயகன் Parzan னின் கற்பனையில் உருவாக்கி வைத்திருந்த, அவனுக்கும் அவன் தங்கைக்குமான Parzania என்ற உலகம், அதன் சந்தே¡ஷங்கள்... சாக்லெட் வீடுகளும் ஐஸ்க்ரீம் மலைகளும்... ஒரே நாளில் கலைந்து போவதும்.... தேடல்களும் தோல்வியும்...

யார் யார் எப்படி எப்படி நடித்தார்கள் என்று எழுதும் போது அது வெறும் படமாக பதிந்துவிடக் கூடாது என்பதால் இது மட்டுமே போதுமென்று தோன்றுகிறது. வழக்கம் போல!

Friday, February 02, 2007

சொல்லாமல் விட்டவை

கொஞ்ச நாளாக செய்ய வேண்டும் என்று நினைப்பதை செய்ய உட்காரவே ரொம்ப சமயம் எடுப்பதற்கு காரணம் என்ன என்று யோசித்துக் கொண்டேயிருக்கிறேன்! சென்ற முறை ஹிந்து ம்யூஸிக் ·பெஸ்ட் எழுதவும் அப்படித்தான் அநியாயத்திற்கு காலம் தாழ்த்தியிருந்தேன். ஆனாலும் அதை செய்யாமல் போயிருந்தால் இப்போது இதையும் எழுத வேண்டி வந்திருக்காது. இந்த இரண்டு மாதத்தின் அதிசுவாரசிய நிகழ்வுகள் என்னுடைய வாழ்க்கையில் இல்லாமல் போயிருந்திருக்கும்! அந்தப் பதிவோ அல்லது வெறும் தகவலோ மதி மூலமாக பத்திரிகை அ(ந)ன்பர் ஒருவரின் பார்வைக்குப் போய், அவருடைய மெயில் முகவரியைக் கையில் வைத்துக் கொண்டு நாலு நாள் முழித்துக் கொண்டிருந்தேன். முழித்ததற்கு காரணம், அந்த ம்யூஸிக் ·பெஸ்ட் சமயம் ஒரு நாளைப் போல தினமும் மாலையானால் புறப்பட்டும் போவதும், ராத்திரி பத்தரைக்கு மேல் வீடு வருவதும், இன்னைக்கு இவரைப் பார்த்தேன் அவரைப் பார்த்தேன் என்று கதை சொல்வதும், அவசர சமையலில் நாளை ஓட்டிக் கொண்டிருந்ததும், இதோ இன்னைக்கு... இல்ல இல்ல நாளைக்கு என்று என் மக்களின் பொறுமை வெடித்து விடப் போகிறது என்று அஞ்சியதும், நல்லவேளை அப்படியெதுவும் நடந்து விடாமல் முடிந்ததே பெரிய விஷயமாய் ஆசுவாசப் பட்டதனால்.... மறுபடியும் இது அவசியமா என்று தான் அந்த முழி. ஒரு சுபமாலையில் பிற்பாடு நண்பராகிப் போன அந்த அன்பருக்கு ஒரு மெயில் தட்டிப் போட அடுத்த நிமிஷம்(சத்தியமாய்) செல்பேசி அடித்தது பெரிய ஆச்சர்யம்.

அடுத்த நாள் போனதும் பேசியதும் எல்லாம் முடிந்து அழைப்பிதழ்களை எடுத்துக் கொடுத்து அவருடைய விசிட்டிங் கார்ட் எல்லாம் கொடுத்து கடைசியில் கேட்டது, 'உங்களுக்கு சங்கீதம் தெரியுமா?' என்பது! அவர் என்னை வரச் சொல்லியிருந்தது இந்த வருட சங்கீத சீஸனை கவர் செய்வதற்காக. எனக்கென்னவோ என் ரசனை மேல் ரொம்ப நம்பிக்கை. அது மட்டும் பே¡துமானதாய் தான் தோன்றியிருந்தது. ஆனாலும் தயங்கிய நண்பருக்கு சமாதானம் செய்ய தைரியம் வந்ததே திரு. சக்கரபாணி ஜிந்தாபாத் என்ற நம்பிக்கைதான். அவரோடு சேர்ந்து செய்து விட முடியும் என்ற ஆணித்தரமான யோசனையோடு வெளியெ வந்து முதல் தொலைபேசி அடித்தது அவருக்குத்தான். கொஞ்சம் நக்கல் கேலியெல்லாம் செய்தாலும் வருகிறேன் என்று ஒத்துக் கொண்டார்.

இரண்டு நாள் அவகாசம் கொடுத்து மூன்றாவது நாள் முதல் ரிப்போர்ட் கொடுத்து விடச் சொல்லியிருந்தார்கள். இன்னாரைக் கவர் செய், இந்த கச்சேரி வேணும் என்றெல்லாம் பத்திரிகையிலிருந்து கட்டாயப் படுத்தவில்லையாதலால் இரண்டு பேரும் பேசி ஏகமனதாய் முடிவு செய்தோம். யார் தெரியுமா? சஞ்சய் சுப்ரமணியம். அப்போது தான் விகடனில் அவரைப் பற்றிப் படித்திருந்தேன். போகப் போகின்ற சபாவிற்கு முன்னாலயே தகவல் போய் விட்டதால் எனக்காக பாஸ் காத்துக் கொண்டிருந்தது. ரொம்ப இளமையா, ஸ்மார்ட்டா ஒரு வித்வான் தோரணையெதுவும் இல்லாத....

இதுவரை எழுதி கிடப்பில் போட்டும் ஒரு பதினைந்து நாளாகிவிட்டது. உள்ளேயிருந்து விரட்டும் சில கேள்விகர்த்தா*க்களும் உறுத்தல்களும் இல்லாமல் இருந்திருந்தால் காணாமல் போயிருக்க வேண்டிய இது மறுபடியும் உயிர்பெறுகிறது! ஆனாலும் அந்த அளவு விவரமாக எழுதும் பொறுமை இல்லாமல் போனதால் பத்திரிகைக்கு அனுப்பிய, கத்தரி வெட்டு வலியறியாத ஒரிஜினல் வர்ஷன்களை ஒவ்வொன்றாய் போட உத்தேசம்.

* ம்யூஸிக் பெஸ்ட் பதிவில் விஸ்தாரமாய் பின்னூட்டமிட்ட மதிக்கு ஒரு பாடாவதி ப்ரௌஸிங் சென்டரில் நீளமாய் அடித்த பதில் கடைசி நிமிஷத்தில் காணாமல் போய் விட, வெறுப்பில் இரண்டு வரி ஆங்கிலப் பின்னூட்டத்தில் முடித்துவிட்டாலும் உறுத்தல் உறுத்தல்தான். அங்கேயே டிசம்பர் சீஸனுக்கு போகும் உத்தேசம் உண்டா என்று கேட்ட பாலாஜிக்கு... ஆசையிருக்கு, முடியுமான்னு தெரியலைன்னு அனுப்பிய பதிலுக்கும் அதே தலைவிதியாகிப் போனதால்.... இந்த தொடர் பதிவுகள்.