Wednesday, December 22, 2004

விமானப் பயணங்களும் பார்வை சந்திப்புகளும்

இலக்கில்லாமல் அலைந்த கண்களை
பத்தடி தூரத்திலிருந்து
இழுத்து நிறுத்தியதுன் முதல் பார்வை

யாரோடோ பேசிக் கொண்டே
சரிதானா என்று கேட்டது
இரண்டாம் பார்வை
என்னவென்றே தெரியவில்லை ஆனாலும்
மறுக்க முடியாமல் தலை ஆடியது

சோதனை முடிந்து விலகுகயில்
மெல்ல வருடிச் சென்றது
மூன்றாம் பார்வை

தேடித் தேடிச் சலித்து
மறுபடியும் எதிர்பட்ட போது
கன்னத்தில் இழைந்து முத்தமிட்டது
நான்காம் பார்வை

சற்றே இடைவெளி விட்டு
வலிய உண்டாக்கிய சந்தர்ப்பத்தில்
இடுப்பில் கைகொடுத்து
இழுத்தனைத்து விலகியது
ஐந்தாம் பார்வை

இன்னும் சில சந்திப்புகள் நிகழுமுன்
உன் வீரியப் பார்வை ஆழம் உணருமுன்
சட்டென்று முடிந்து விட்டது நம் பயணம்

விமானப் பயணங்கள் வேகமாய் முடிந்து விடுகின்றன
நீண்ட ரயில் பயணத்தில் உன்னைச் சந்தித்திருக்கலாம்!

Monday, December 20, 2004

ஹா... பெண்கள் சேர்க்கும் நிறங்கள்!

ஞாயிற்றுக் கிழமை சாயந்திரம்... எவ்வளவு நேரம் டிவி பார்க்க என்று வெளியில் கிளம்பும் போது எங்கே போகலாம் என்று எந்த உத்தேசமும் இருக்கவில்லை. பக்கத்தில் இருக்கும் ஸ்வபூமி - the heritage plaza போகலாம் என்பது கணவருடைய விருப்பம். முன்னமே ஒரு நாள் நேரம்போகாத ஒரு மத்யானம் நான் போயிருந்த போது ஈ ஓட்டிக் கொண்டிருந்த கைவினைப் பொருட்களின் கடைகளும், மூடிக் கிடந்த உணவு விடுதிகளும் கல்லூரிக் காதலர்களையும் தவிர வேறு எதுவும் இருக்கவில்லை. ஞாயிற்றுக்கிழமை மாலை நேரம் அவ்வளவு மோசமாக இருக்காது என்று தான் போனோம்.

ஸ்வபூமி, NIPS School of Hotel Management உடன் சேர்ந்து துள்ளிக்கொண்டிருந்தது. NIPS முதலாண்டு புட் & ம்யூசிக் பெஸ்டிவல். மூன்று நாள் விழாவின் கடைசி நாளான இன்றைய தீம் அரேபியன் இரவு. நடுவில் இருந்த திறந்த வெளியில் உயரம் குறைந்த இரண்டு ஒட்டக உருவங்கள் பாவமாய். கல்லூரி மாணவர்கள், பெற்றோர்கள், எங்களை மாதிரி வேடிக்கை பார்க்க வந்தவர்கள் என்று கலவையான கூட்டம்.

மேடையில் ஐம்பது வயதுக்கு மேற்பட்ட ஒருவர், இரண்டு பெண் பாடகர்களுடன் குறைவில்லாத உற்சாகத்துடன் இசை நிகழ்ச்சி கொடுத்துக் கொண்டிருந்தார். பெரும்பாலான பாடல்கள் அரேபிய இசை கலந்த கிராமியபாடல்கள். புரியாத போதும் தாளம் போட வைத்தது. சுற்றிலும் ஸ்டால்கள் அமைத்து கல்லூரி மாணவர்களின் அரேபியன் டச் கலந்த பெங்காலி உணவு தயாரிப்பு. சுடச்சுட விற்பனை. ஒரு ஓரத்தில் உட்கார்ந்திருந்த டாரோட் கார்ட் ரீடரும், டாட்டூ மேசையும் சீந்துவாரில்லாமல் இருந்தது. அத்தனை சத்தத்தில் அவரிடம் என்ன கேட்பது என்று யாரும் போகவில்லையோ? அந்தக் கூட்டத்தில் உற்சாகமில்லாத ஆட்கள் அவர்கள் இரண்டு பேராகத்தான் இருக்க முடியும்.

அங்கே ஆச்சரியப் படுத்திய ஒரே விஷயம் பெண்கள்... பெண்கள்... பெண்கள். கூட வந்த ஆண்கள் வழக்கமான பேண்ட் சட்டையிலும், சிலர் குர்த்தாவிலும், வயதான சிலர் கோட்டிலும் இருக்க (வயது வித்தியாசம் இல்லாமல்) எல்லாப் பெண்களையும் பார்க்கும் போது தோன்றியது ' வாவ் BOLD'! வெடவெட என்று ஒல்லிப் பெண்கள் எப்போதாவது கண்ணில் பட மற்றவர்கள் பூசின உடம்பாக, மினுக்கும் சருமமும், அடிக்கும் பெரிய பொட்டும், கண்ணைப் பறிக்கும் உதட்டுச் சாயமும், மொடமொடக்கும் காட்டன் புடவையுமாய்! இத்தனை அலங்காரம் செய்யும் வரை பொறுமையாக இருந்து கூட்டிக் கொண்டு வந்த கணவர்களைப் பாராட்ட வேண்டும் (எத்தனை வீட்டில் கிளம்பும் போதே சண்டையோடே கிளம்பினார்களோ?!).

ஆனால் பெண்கள் இத்தனை மெனக்கெட்டு அலங்காரம் செய்து கொள்ளாமல் போய்விட்டால் உலகம் எத்தனை நிறமில்லாமல் இருக்கும்!!!

Saturday, December 18, 2004

உனக்குத் தெரியுமா பெண்ணே?

திருமணம் ஆன பின்பும் சிலருக்கு மேட்ரிமோனியல் மேயும் சுவாரசியம் எப்படியோ அப்படித்தான் எனக்கு இந்த அஞ்சல் வழி கல்வி விளம்பரங்கள். அது ஒரு பத்து வருடங்களாக இருக்கிறது. ஒவ்வொரு வருஷமும் B.Ed படிக்க முயற்சி பண்ணி... contact classes, பரிட்சை தேதி எல்லாம் ஒத்து வராமல் ஒவ்வொரு தரமும் அடுத்த வருஷம் அடுத்த வருஷம் என்று தள்ளிப் போட்டு அது அஞ்சல் வழி படிப்பாகவே இல்லாமல் போய் விட்டது.

சரி, B.Ed போகட்டும் வேற எதாவது தேடலாம் என்று தேடியதில் எப்போதும் இந்த சைக்காலஜி மேல் ஒரு கண். காலேஜ் சேரும் போதே அதில் சேர்றேனேன்னு சொன்ன போது அப்பா விடவில்லை. 'அதைப் படிச்சு என்ன பண்ணப் போறே?' (இதைப் படிச்சு மட்டும் என்ன பண்ணினேன்னு அவரைக் கேட்க முடியாது...பாவம் அவரை விட்டுடறேன்).

இதோ இரண்டு மாசம் முன்னால் வந்த சென்னை பல்கலைக்கழகத்தின் அறிவிப்பு கடைசியில் வேலை செய்து விட்டது. அவர்களுடைய M.Sc சைக்காலஜி ஒத்து வரும் போல தோணியதில் கொல்கத்தா study centre தேடிக் கண்டு பிடித்து ஒரு காலை நேரம் போய் சேர்ந்தேன்.

வரவேற்பில் ஒரு சின்ன பெண். விபரம் கேட்டு விட்டு என்னென்ன கொண்டு வர வேண்டும் என்று ஒரு லிஸ்ட் கொடுத்தார்.

'இதெல்லாம் எடுத்துட்டு சீக்கிரம் வரச் சொல்லுங்க' என்றார்.

'யாரை?' என்று கேட்டேன்.

'யார் சேரப் போறாங்களோ அவங்களை' என்றார்.

'நான் தான் சேர போறேன்' என்ற பதிலை எதிர்பார்க்காததால் அந்த பெண் முகத்தில் முதலில் சின்ன அதிர்ச்சி, தொடர்ந்து (அடக்க முயற்சி செய்வதற்குள்) ஒரு பெரிய சிரிப்பு. முதலில் கொஞ்சம் அசௌகரியமா உணர்ந்தாலும் 'ஆமாம் அதுக்கென்ன?' என்ற தொனியில் காத்திருந்தேன். சட்டென்று அந்த பெண் சிரிப்பை அடக்கி விட்டு என்னை வேகவேகமாக அனுப்பி விட்டார்.

இதோ ஒரு வாரத்தில் புத்தகங்களும் வந்து விடும். வரப்போகும் இரண்டு வருடத்தில் எப்போதாவது சலித்துப் போய் இந்த படிப்பை பாதியிலே விட்டு விட நினைத்தால் அந்த பெண்ணின் சிரிப்பு நினைவுக்கு வர வேண்டும்!

உனக்குத் தெரியாது பொண்ணே நீ எனக்கு எவ்வளவு பெரிய உந்து சக்தி என்று!

Wednesday, December 15, 2004

'கிஸ்னா' கேட்டீங்களா?

'தால்' க்குப் பிறகு சுபாஷ் கை(Ghai), ரஹ்மான் கூட்டணி. கூடவே இஸ்மாயில் தர்பார், (முதல்முறையாக?) ஜாவேத் அக்தர். நேரமில்லாததால் இரண்டு பாட்டும் தீம் ம்யூசிக் மட்டும் ரஹ்மான் போட மீதியை இஸ்மாயில் தர்பார் பார்த்துக் கொண்டதாக சுபாஷ் கை உள் அட்டையில் நுணுக்கி நுணுக்கி எழுதியிருக்கிறார். ஆனா எந்த ரெண்டு பாட்டுன்னு எங்கயும் குறிப்பிடவில்லை. முதல் தடவை கேட்கும் போது இதுவா இதுவான்னு குழம்பி... அப்புறம் சே எதுக்கு இந்த ஆராய்ச்சியெல்லாம்... அனுபவிக்கலாம்னு விட்டுட்டேன்.

சுரேஷ் ஓபராய், கூட இரண்டு புதுமுக நடிகைகள். சுதந்திரத்திற்கு முன் இமயமலைச் சாரலில் நடக்கும் கதை என்று குறிப்பு சொல்கிறது. ஒவ்வொரு சுற்றுக்கும் சரிந்து சரிந்து கோணம் இறக்கும் அந்த பெண் கால்....ப டத்தில் ஒரு நல்ல டான்ஸ் கட்டாயம் இருக்கு. 'ஹம்ஹே இஸ் பல் யஹான்', 'து இத்னி பக்லி க்யூன் ஹை', 'சில்மன் உடேகி நஹி' இது மூன்றும் ரொம்ப ஸ்வீட்.

உச்சஸ்தாயில் உயரும் சங்கீதம் மெல்ல மெல்ல சத்தமாகுதோன்னு ரிமோட்டைத் தேட வைக்கும் இடங்களை தவிர்த்திருக்க வேண்டுமோ? எனக்கென்னவோ அதெல்லாம் தான் இஸ்மாயில் தர்பார் பாட்டுகள்னு தோணுது!

வர வர என்னமோ வாரத்துக்கு தக்காளி வாங்கற மாதிரி கேசட் வாங்க ஆரம்பிச்சிருக்கேன்!

Tuesday, December 14, 2004

மே ஹி ஸ்வாமி... மே ஹி பீவி!

கொஞ்ச நாள் முன்னால் ஒரு ஞாயிற்றுக் கிழமை... 'அவசர வேலையில்லைன்னா இங்க வா'ன்னு அழைப்பு. கணவர்தான். என்டிடிவி யின் ஒரு நிகழ்ச்சியைப் பார்க்க. கல்கத்தா சோனாகாச்சி பாலியல் தொழிலாளர்களைப் பற்றியது. எயிட்ஸ் விழிப்புணர்வுக்காக ஒரு குவிஸ் நடந்து கொண்டிருந்தது. வட்டமாக எல்லாரும் உட்கார்ந்திருக்க ஒருத்தர் கேள்வி கேட்க யாராவது பதில் சொல்ல...தெரியாத போது கேட்டவரே பதில் சொல்ல...

காமிரா அவர்களிடமிருந்து விலகி ஒரு பெண்ணிடம். எந்த தயக்கமும் இல்லாமல் தன்னைப் பற்றிச் சொல்லுக் கொண்டிருந்தார்.

'ஒரு குழந்தை இருக்கு, அதற்காக சம்பாதிக்கிறேன்...'

சில கேள்விகள்... யோசிக்க அவசியமில்லாமல் நேரமும் எடுத்துக் கொள்ளாமல் வேகவேகமாக பதில்கள்.

கேள்வி கேட்டவர் கடைசியாக... "உங்களுக்கு கல்யாணம் ஆகிவிட்டதா?"

"ஆயிருச்சு"

"உங்கள் கணவர்?"

"அவர் என்னை விட்டு விட்டுப் போய் விட்டார்" இவ்வளவு நேரம் தெளிவாக தயக்கமில்லாமல் பேசிய அந்த பெண்ணின் குரல் இதைச் சொல்வதற்கு முன் ஒரு நொடி கலங்கி, சுதாரித்தது துல்லியமாக தெரிந்தது.

காமிரா அவரிலிருந்து நகர்ந்து மறுபடியும் அந்த வட்டத்திற்கு. இப்போது ஆண்களையும் பெண்களையும் பற்றி விவாதம்.

"புருஷன் வெட்டியே போட்டலும் அவன் தான் ஸ்வாமி இந்த பெண்களுக்கு"

"நாங்க கூட வெளியில போகும் போது வகிட்டில குங்குமம் வச்சிட்டு தான் போறோம்"

"ஆமாம், அது ஒரு அங்கீகாரம் மாதிரி"

"ம்ம்ம்...ரெட் சிக்னல்"

ஒரு வெடிச்சிரிப்பு.

இப்போது காமிரா அந்த வட்டத்தில் இருக்கும் ஒரு பெண்ணை நோக்கி.

" எனக்கு கல்யாணம் ஆகலை. எனக்கு எப்பவும் நல்லா அலங்கரிச்சுக்கப் பிடிக்கும். கை நிறைய வளையல் போட்டுக்குவேன். நல்ல புடைவை கட்டிக்குவேன். வகிட்டில் தவறாம குங்குமம் வச்சுக்குவேன். இதுவரை மூன்று ஆண்களோட இருந்திருக்கேன். எல்லாரும் விட்டுட்டு போயிட்டாங்க. தனியா இருக்கேன். இப்ப எனக்கு நான் தான் ஸ்வாமி...நான் தான் பீவி(மனைவி)"

சொல்லி விட்டு உறுதியாக ஒரு புன்னகை செய்ய...வாவ்...என்று சொல்லிக் கொண்டே என்னை அறியாமல் கை தட்ட...எப்போதோ எழுந்து போய் விட்ட கணவர் குரல்... "என்ன யாராவது ஆம்பளைகளை திட்டறாங்களா?"

Sunday, December 12, 2004

ரஹ்மானின் ஸ்வதேஷ்

கட்டம் போட்ட சட்டையும் ஜீன்ஸ் பேண்டுமாய் ஹே...ஹே... ன்னு கை நீட்டிப் பாடும் ஷாருக்கை ஒரு மாதம் முன்னால் டிவியில் பார்த்த போது பளிச்சென்று வித்தியாசம் தெரிந்தது. இது வழக்கமான ஷாருக்கில்லை. கொஞ்சம் சீரியஸாய்...வித்தியாசமான ஏதோ ரோல் பண்ணரார் போலிருக்குன்னு தோணியது. பஸ்ஸில், தோணியில், ஒரு கூட்டமாய் எல்லாரும் உட்கார்ந்திருக்க 'யே தாரா வோ தாரா...' அதிகம் நீடிக்காமல் சட்டென்று முடிந்து விட, பெரிய தலைகள் பெயர்கள் வரிசையாக பின்னால். இசை ரஹ்மான், டைரக்ஷன் லகான் புகழ் ஆஷ¤தோஷ், பாடல்கள் ஜாவேத் அக்தர்...

ஸ்வதேஷ், ரஹ்மானின் ஒன்னொரு பூங்கொத்து. ஹரிஹரன் கொஞ்சமாய் தலைகாட்டிப் போக, உதித் நாராயணன் கிளை விரித்திருக்கிறார். எனக்குப் பிடித்த எல்லா ஆண் பாடகர்களும் ஒவ்வொரு அலை அடித்து போவார்களென்றால் (சோனு குரல் கேட்டாலே பத்து வயசு குறைஞ்சுட்ட மாதிரி இருக்கும்) அதில் எப்போதும் இந்த உதித் நாராயண் மட்டும் ஒரு அலர்ஜி. இந்த முழு ஒலிநாடாவிலும் முதல் முறையா உதித் நாராயண் அவருக்கென்று ஒரு அதிர்வுகள் கொடுத்துப் போனதற்கு காரணம் என்ன?

'யூ ஹி சலா' துள்ளிக் கொண்டு போகிறது, கூடவே கேட்பவரையும். ஜாவேதின் வரிகளும் இசையும்... சரியான கலவை. அம்மாவின் வாழ்த்து விழாவில் இதை ஹரிஹரனும் வேறொருவரும் தமிழில் பாடியது சுத்தமாக ஒட்டவில்லை. 'யே சாலையே யே சாலையே எங்க போகிற' ன்னு ஜுனூன் மொழிபெயர்ப்பு மாதிரி.

ஆஹிஸ்தா ஆஹிஸ்தா... ஒரு மயக்கும் தாலாட்டு. ரஹ்மானின் 'யே ஜொ தேஷ் ஹை மேரா' வும் அல்காவின் 'சாவரியா' வும் ... ஒவ்வொன்றாய் என்ன அறிக்கையா இது? ராத்திரி பத்து மணிக்கு மேல விளக்கெல்லாம் அணைச்சுட்டு உறுத்தாத சத்தத்தில் போட்டு விட்டால் போதும், கூடவே கரைந்து போகலாம். சங்கீதத்துக்கு என்ன பாஷை? வரிகளுக்கு அர்த்தம் புரிந்து கேட்டால் நல்லது, இல்லன்னாலும் அது சொல்ல நினைத்ததை உணர்த்தாமல் போகாது. ஷகீராவையெல்லாம் புரிந்து கொண்டா கேட்டோம்(பார்த்தோம்!)? ஹி..ஹி... நேத்து அவங்க பாட்டு எதோ சேனல்ல ஓடினதுல பழய ஞாபகம்!

Saturday, December 11, 2004

சல்மான் ருஷ்டி

சல்மான் ருஷ்டியுடன் டிசம்பர் 9, ஒரு டாக் ஷோ. நான்கு புக் ஸ்டோர்களின் பெயர் போட்டு, இந்த நேரத்திலிருந்து இந்த நேரத்துக்குள் இலவச நுழைவுச் சீட்டு வாங்கிக்கோன்னு The Telegraph கூப்பிட்டு நான் போவதற்குள் காலியாகிவிட்டிருந்தது. 'ஒரு மணி நேரத்திலயே முடிஞ்சுடுச்சு. நீங்க இப்ப வரீங்களே?'ன்னு கடைக்காரர் கேட்ட போது வழிந்தது.

எல்லா பெரிய புக் ஸ்டோரிலும் எப்பவும் எதாவது புக் ரீடிங் நடக்கிறது. எழுத்தாளர், கூட பதிப்பாளர்(ராத்தான் இருக்கனும்), இருபது முப்பது வாசகர்கள், நீளும் உரை, எப்போதாவது எழும் ஒன்றிரண்டு கேள்விகள்.

ருஷ்டியைப் பற்றி எதுவும் தெரியாது, அவருடைய பெயரைத்தவிர, மனைவி பத்மாலக்ஷ்மியைத் தவிர. இன்ன காரணம்ன்னு சொல்ல முடியாமல் குறுகுறுன்னு க்யூரியாசிட்டி தரும் விஷயங்கள்ல இந்த ருஷ்டியும் ஒருவர் (அந்த லிஸ்ட்ல ஒசாமாவின் கண்கள் கூட இருக்கு). அந்த குறுகுறுப்பில் லைப்ரரியில் இருந்து எடுத்துட்டு வந்த அவருடைய புத்தகங்கள் தலைக்கு மேல பூச்சி பறக்க விட்டதில் அப்போதைக்கு அவரை விட்டு விட்டேன். இப்போ மறுபடியும் இவ்வளவு பக்கத்தில வந்திருக்கார்!

மூன்று நாள் விஜயமாக ஏறக்குறைய இருபது ஆண்டுகள் கழித்து கொல்கத்தாவிற்கு. அவருடைய செப்டம்பர் வெளியீடான Shalimar The Clown நாவல் பற்றி பேசிப் போக. 'கதை ஒரு கொலையில் தொடங்குகிறது. ஆனால் அது, அதை செய்தது யார் என்பது பற்றியல்ல!' என்கிறார் ருஷ்டி. கதையின் கையெழுத்து பிரதியை படித்து விட்ட பத்மா, 'ஆனாலும் அளவுக்கு அதிகமான சஸ்பென்ஸோடு இருக்கிறது. முதல் ஆளாக கதையைப் படிப்பதில் ரொம்ப சிரமம். பின்னாலேயே நின்னு படிப்பதையே கவனிச்சுட்டு இருக்கிறார்!'

'நான் எதாவது ஒரு வரியைக் குறிப்பிட்டு, இதைப் படிக்கும் போது ஏன் சிரிக்கலை? சிரிப்பு வந்திருக்கனுமே?' ந்னு கேட்பேன்,' என்கிறார் ருஷ்டி.

கொஞ்சம் கலைகள் பற்றி, நீண்ட கால நண்பர் ரே பற்றி, தவிர்க்க முடியாமல் கொஞ்சம் அரசியல்... கொல்கத்தா காபி ஹவுஸ் காபி, பழைய நண்பர்கள் சந்திப்பு...

பை பை ருஷ்டி. அடுத்த முறை பார்க்கலாம்!

Friday, December 10, 2004

மீனாக்ஷி

M.F. ஹ¤சைனின் 'கஜகாமினி' யோடு ஏற்கனவே இரண்டு முறை முட்டிப் பார்த்த அனுபவம் இருந்தது. முதல் முறை இழுத்துக் கொண்டு போன தூக்கத்திற்கு ஞாயிற்றுகிழமையின் ஹாலிடே மூடும், சிக்கன் பிரியாணியும் தான் காரணமென்று நினைத்தேன். இரண்டாவது முறை சொதப்பலுக்கு, கூட இருந்து கேலியில் தொலைத்த மகள் தான் காரணம்.

'மீனாக்ஷி' ஒலிநாடா வந்த போது ரஹ்மானுக்காக வாங்கியதும், போதும் விட்டுடுன்னு அது சொல்லும் வரை ஓட்டித் தேய்ததும் வேறு விஷயம். படம் சிடி கடையில் பார்த்த போதெல்லாம் கஜகாமினியைச் சொல்லியே மகள் வாங்க விடவில்லை. இந்த முறை தடுக்க ஆளில்லாமல் ஒரு வழியாக மீனாக்ஷி வந்தே விட்டாள்.

முதல் சிடி பார்த்ததும் 'இதைப் பற்றி எழுதனுமே'ன்னு தூண்டியது. தூண்டலோட வேகம் கொஞ்சம் கூட தான். சும்மா இல்ல... ப்ளாக் தொடங்கி எழுத வைத்த வேகம். கதை என்ன? இந்த முறையும் நிச்சயமாக சொல்ல முடியவில்லை. முங்கேரிலாலுக்கு நவாப் வேஷம்... திருப்தியில்லை! தபுவின் பளிங்கு முகம் பொருந்தின அளவு உருவம் பொருந்தவில்லை. வெள்ளை உடை ஹைதராபாத் தபுவையும் ஜெய்சல்மீர் தபுவையும் விட ப்ராக் (Prague) தபு தேவலை(அந்த மைக்கல் ஏஞ்சலோ ஓவிய சீன் தவிர). செதுக்கினது போல இருக்கும் ஹீரோ குனால் கபூர் நடிக்க அதிகம் முயற்சி செய்யவில்லை. ஆனாலும் ஆள் ஸ்மார்ட்.

எல்லாம் இப்படி இருந்தும் அது ஒரு கலர்புல் கனவு. தொடர்பில்லாத நிகழ்வுகளோடு கனவு வருவதில்லையா? அது போலத்தான். இடையிடையே வந்து போகும் ஒற்றை ப்ரேமில் எத்தனை கவிதைகள். கதை ஓவ்வொரு ஊரில் நடக்கும் போது அங்கேயே இருக்கும் உணர்வு தருவது எது?

மொத்தத்தில் அதிகம் யோசிக்காமல் எதிலாவது கிறங்கிப் போகும் அனுபவம் வேண்டுமென்றால் தாராளமாக பார்க்கலாம்.

நிர்மலா.

வணக்கம்

வணக்கம் நண்பர்களே. இணையக்குழுக்களில் எழுதப் பழகிய எனக்கு குழுக்கள் கூட்டுக் குடும்பம் போல இருந்தது. அதுவே எதற்கு இத்தனை கூட்டுக் குடும்பங்கள் என்று யோசித்த காலமும் உண்டு.

நேற்று பார்த்த M.F. ஹ¤சைனின் 'மீனாக்ஷி' தான் இந்த ப்ளாக் தொடங்கத் தூண்டியது! என்னவெல்லாம் எழுதுவேன்னு தெரியலை... பார்க்கலாம்.

நிர்மலா.