Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Friday, December 29, 2017

வெறுமை

அலையடிக்கும் வெறுமையை
இருகைகளில் சுமந்தலைகிறேன்
வாசலில் குதித்தாடும் முயலின்
கால்களில் சிக்கிக் கொள்கிறது
ஓடை மீன்களுக்கு உணவாயளித்து
விரைவிழப்பதை காணாது செல்கிறேன்
எரவாணப் பட்டத்தில்
கொஞ்சம் தீற்றிப் போகிறேன்
மொத்தமும் உரைந்திருக்கிறது
கண்களை மூடி
காதடைத்துக் கொள்கிறேன்
கையிருப்பு குறையும் தோறும்
முற்றிலும் வெறுக்கும்
முது கிழவனைக் கண்டு
வெறுமை கொள்கிறேன்

Friday, October 27, 2017

மரணம்

படிப்பித்ததெல்லாம் நிஜமென்றால்
இந்நேரம் அறிந்திருப்பாள்
அகால மரணமடைந்த மகன்
கடைசி கணம் நினைத்ததென்னவென்று
காணாமலே போன இன்னொருவனை
பார்த்திருக்கலாம்
அல்லாத போது
தகவலறிந்திருப்பாள்
முன்னால் சென்ற கணவன்
அவளின் தன்னிச்சையான முடிவுகளில்
சலித்திருப்பான்
பின் வரும் வரிசை
தெரிந்திருப்பாள்
தன் நிறங்களை
அதில் தன் பங்களிப்பை
புரிந்திருப்பாள்
படிப்பித்ததெல்லாம் நிஜமில்லையென்று
சிரித்துமிருப்பாள்.

Saturday, October 07, 2017

இன்னொரு பயணம்

கண் முன்னே விரிந்து பரவுகிறது
கடலை நினைவுறுத்தும்
அலையடிக்கும் பெரும் பொருக்கு
துணையாய் உணர்த்தியதெல்லாம்
நழுவி விலகிட
முழுத்தனியாய்

முன்னகர்வதைத் தவிர
வழியேதுமில்லை

தாண்டிக் கடந்தபின்
நீட்டப்படும் பட்டியலில்
நிறைய இழந்திருப்பேன்
சிலவற்றைப் பெற்றிருப்பேன்

வழக்கம் போல
பெற்றது உறுதியாயும்
இழந்தது காதலுமாயிருக்கும்.

Sunday, July 02, 2017

கதவு


அந்தக் கதவைத் திறந்து
வெளி வரும் போது
கண்ணில் படும் முதல் மனிதரைக் கண்டு
மலர்ந்து சிரிப்போம்
அவரும் இது போன்ற தேடலில் இருக்கக் கூடும்
சிறு பேச்சுகளும் பரஸ்பர அறிமுகங்களும் நிகழ்ந்தேறட்டும்
இசைவுப் புள்ளிகளைத் தெரிவு செய்து கொள்வோம்
ஆச்சரியங்கள் நிகழ்ந்தேறட்டும்
தேடல்கள் தொடரட்டும்
விலகும் புள்ளியை அடையாளம் காண்போம்
மெல்லணைப்பில் விலகி நடக்கத் தொடங்குவோம்
ஞாபகங்களாய் எஞ்சுவோம்
நமக்கேயான சிறு புன்னகையாய்
ஒளிரும் கண்களாய்
முத்தமாக
தீரா மோகமாய்
நிறைத்து விலகுவோம்
தோளில் சுமந்தலைவோம்
தோள் பை நிறைந்து வழியட்டும்
யாராவது வழிப்போக்கரிடம்
திறந்து கடைப்பரத்துவோம்
வேண்டுவோர் பொறுக்கிச் செல்லட்டும்
நதியாய் பெருகி வழிவோம்

Wednesday, May 03, 2017

இசை

அது ஒரு வினோத இசைக்கருவியாகிவிட்டது
ஸ வில் எப்போதும் ஸ வே ஒலிக்குமென்று
சொல்ல முடியாது
நேற்றைக்கு ஒலித்தது போல் இன்றிருக்காது
நான் தான் வாசித்திருப்பேன்
அதுவே இசைக்குமென்று இன்று தொட்டால்
வேறொன்றாய் இசைக்கும்
ஒரு முறை கேட்டதை வேண்டி விரும்பும் போது
முற்றிலும் பிடிவாதம் கொள்ளும்
அதுவல்லாது எதுவாயும் இசைக்கும்

எல்லாமே இசை என்கிறாய்
பொழியவும் செய்கிறது
எனக்காய் இல்லை
கேட்பது இல்லவே இல்லை
கையில் சிக்காது
வடித்தெடுக்க இயலாது
நெஞ்சிலும் நிற்காது
சதா இசைத்துக் கொண்டிருக்கும்

யாருமில்லா உள்ளறையில்
சுவரோரம் திரும்பி
காதுகளைத் துறக்கும் நேரம்
இரைச்சாலாக்கித் தணியும்

உலகம் இசையாலானது

Sunday, January 02, 2011

இன்றும்...

சர்வ காலமும் சுமந்தலைகிறேன்
சலசலத்து நகர்ந்து கொண்டிருந்தது
கோபங்களால் துரோகங்களால்
குரோதத்தால் காதல்களால்
நிரப்பிச் சேர்த்ததில் ததும்பி நிற்கிறது

ஆவேசம் கொள்கிறது
ஆனந்தக் கூத்தாடுகிறது
மௌனத்தில் ஆழ்கிறது

குறிப்பறிந்து சிதறும் சாரல்களில்
கடும் புயல்களைக் கடக்கும்
உரம் கொள்கிறது

சீண்டல்களில் புரண்டெழும் ஞாபகங்களில்
தொலைந்து போகிறது
தேடிக் கண்டடைகிறது
தெளிவுறுகிறது

அகம் ஆர்ப்பரித்த போதும்
ஓர் அணக்கம் காட்டாதிருக்கிறது

ஆழ்கடலென்பதற்கு மேல் அதை
அறிந்தார் எவருமில்லை.

Monday, March 08, 2010

நொடியில் ஒரு பரிணாம மாற்றம்

அவளைப் பற்றிச்
சொல்ல வேண்டும்

இளமையிலும் இல்லறத்திலும்
தாய்மையிலும்
வேண்டிய மட்டும் பெண்மையை
கொண்டாடி விட்டதாய்
உணரத் தொடங்கியிருக்கிறாள்

சட்டென்று ஒரு மாற்றம் அவளில்
நடந்தே தீருமென்று நம்புகிறாள்

சின்னதாய் ஒரு கற்பனை
செய்து வைத்திருக்கிறாள்

நினைவு தெரிந்த நாளாய்
அவளுள்ளே
நிரப்பி வைத்த பெண்மை உணர்வுகள்

உறங்கியெழும் ஒரு காலை
உச்சந்தலை தொடங்கி
மொத்தமும் வடிந்து காலடியில்
குட்டையாய் தேங்க
எடுத்து வைக்கும் முதலடியில் 
ஒரு உயிராய் மட்டும்
தன்னை உணரப் போவதாக

உணரத் தொடங்குவது முதல்படியல்ல
அதுவே முழுப்பயணமும் என்பதில்
தெளிவாயிருக்கிறாள்

தீண்டும் விரல்களிலும்
எதிர்கொள்ளும் பார்வைகளிலும்
பேதமின்றி
மறுக்கப்பட்ட இடங்களும்
தவிர்க்க வேண்டிய நேரங்களுமில்லாமல்

நேசம் பொங்கும் நேரம்
விரித்த கைகளில் வழிந்தோடவிட்டும்
உள்ளே அமிழ்ந்து

தன்னைத் தேடும் தருணங்களில்
மொத்தமும் துறந்த தனிமையுமாய்...

உயிராய் உணர்வதும்
துறந்த தனிமையும்
முடியவே முடியாதென்று
புறந்தள்ளுகிறேன்

எத்தனை நாளென்னை
மறுக்கப் போகிறாயென்று
சத்தமில்லாமல் சிரிக்கிறாள்

எனக்குள்ளிருந்து.

Thursday, November 05, 2009

பெயரில்லாமல்...

இன்னதென்று சொல்லாமல் 
உருவமோ மணமோ ருசியென்றோ
அடையாளம் அறிவிக்காமல் 
தேடச் சொல்லி  பணிக்கப் பட்டிருக்கிறேன்
உள்ளுணர்வு சொல்லுமென்ற குறிப்போடு

சொற்களை அனுப்பி
உதடுகள் இணையும் முன்
காற்றில் கலைந்து செல்லும்
வார்த்தைகளின் தேடல் ஆரம்பம்

எழுதும் வரி முடித்து நீங்குமுன் 
அதிரும் சொற்கள் தம்
தேடல் தொடங்கிவிட்டிருக்கின்றன

நிலையில்லாமல் நானும் 
நகர்ந்து கொண்டிருக்கிறேன் 
விழித்த புலன்களுடன்
இடையறா தேடலோடு

தேடியதைக் கண்டடையும் போது
நானோ என் சொற்களோ 
எழுதிச் சென்ற வார்த்தைகளோ 
சந்தித்துக் கொள்ள 
உத்த‌ரவாதமில்லாத போதும்

நீள் வெளியில் 
நிறைந்திருக்கும் தேடல்களே 
மிச்சமாய் தொலைந்தே
போவேனென்ற போதும்.

*********************************************************



யாரோ கொண்டு வந்த 
ஓவியமது
எளிய ஒற்றை மரமும்
அதில் அடையாளமில்லாதொரு
சிறுபறவையும்
வெளிர் மஞ்சள் நிறத்திலாய்
தன்னிருப்பை தனித்துரைக்காது
எதிர் சுவரில் இத்தனை வருஷங்களாய்
எல்லாம் எனக்கான ஒரு நாளில்
நான் சேர்த்த நிறத்திலும் 
கூட்டிக் குறைத்த வடிவத்திலும்
ஆழ் நிறம் கொண்ட
ஓவியப்பறவை 
வளைந்த மூக்கு நுனியும்
கூர் நகமும் அடித்தொண்டை குரலும்
கொண்ட கழுகு போலானது
நான் கவனிக்காத நேரங்களில்
முழுச் சுவரிலும் வியாபித்து
சிறகசைக்கும் வேளைகளில் 
காணாமல் நடிக்கிறேன்


***********************************

நீ சொன்னதற்காக 
அந்த பெரிய கதவுகளை சார்த்தியாகிவிட்டது
இரண்டு ஜன்னல்களையும்

இருள் பரவி பழகியும் போனபின்
ஒளித்துவாரங்களைத் தேடித் தேடி 
அடைப்பதே பொழுது போக்காகிவிட்டது

பின் தொடர்ந்த நாட்களில்
இருட்டறைக்குள் தனியே
ஞாபகங்களை அழித்தொழிக்க துவங்கியிருந்தேன்

நாள் மறந்து நேரம் மறந்து
பழக்கமும் மறந்துபோய்
அலைபாய்தலாய் அறைக்குள் 
திரிந்திருந்த ஒரு மாலையில்
மழை கசிந்து கால் நனைந்த கணம்
நீல நிறத்தை விரல்
 நுனி
உணர்ந்து கொண்டது.

நன்றி : வார்த்தை.

Thursday, July 02, 2009

ஒரு முரண் & இன்று தொடங்கி...

ஒரு முரண்.

ஆழத்தில் ஒலிக்கும் குரல்
வலுப்பெறும்
மொத்தமும் துறக்கச் செய்யும்
அத்தனை வலிமையாய்

தொட்டுப் புழங்கி
பிணைத்திருந்த மொத்தமும்
ஒற்றை விலக்கலில்
ஒதுக்கச் செய்யும்

புதியதோர் சுவாசமும்
அறியாத அனுபவங்களுமாய்
வலிகள் தந்து
சுயம் மறக்கச் செய்யும்

பதியும் பாதச் சுவடுகளை
நினைவிலிந்து அழித்து
திரும்ப இயலாமலாக்கி
தொலைந்து போகக் கூடும்

குரல் உணர்த்துவதெல்லாம்
தொட்டுக் குழைத்து
ஞாபகங்கள் தூவி
நமதாக்கிக் கொள்ள

உனக்கு பிடித்த நிறத்தில்
எனக்கான மணத்தில்
உயிராழத்தில் அழுத்தமாய்

நிறமோ வாசனையொ
தட்டியெழுப்பும் ஓர் நொடி
மெல்லக் கண்மூடி
நீயோ நானோ நினைவில் கொள்ள.


இன்று தொடங்கி...

மலையின் இறுக்கம் கொண்டேன்
என்னில் சலனமில்லை என்றேன்
காற்று சுமந்து வரும்
காதல் வாசமென்னை
கரைத்துச் செல்கிறது

விருட்சமாய் ஆழ ஊன்றி
கிளை பரப்பி நின்றேன்
நீண்ட நெடுங்காலமாய்
கத்தும் குருவிகளின்
அலகிலென் பச்சையம்
கடந்து செல்கிறது
காடு மலைகள் தாண்டி

ஆழ்கடலின் அமைதி கொண்டு
புலனடக்கி மோனத்திலிருந்தேன்
நிசப்தம் கிழித்து நீந்தி வரும்
பசித்த குழந்தையின் கேவலில்
மார்புகள் நேசம் சுரக்கின்றன

இழுத்தடக்கி மூடிக்கொள்ளும்
ஒவ்வொரு முயற்சியிலும்
எங்கோ ஓர் இடைவெளி விட்டு
கவனம் குவித்து காத்திருந்தேன்
தேடியென்னை நீயடைய

என் நீண்ட காத்திருப்பு
நேற்றோடு முடிந்தது.

நன்றி : வார்த்தை.

Thursday, October 09, 2008

பெயர்தல் குறிப்புகள்


நான் உடல்பெயர்கிறேன்
இடமும் பெயர்கிறேன்
பறந்து

மார்புகளை துறக்கும் நேரம்
சிறகுகள் முளைத்துவிடுமென்று
எனக்கு நிச்சயமாகத் தெரியும்

மனுஷிக்காய் சுமந்ததை
துவாரங்களில் வடியவிட்டு
லேசாகியிருப்பேன்

ஞாபகங்களை செறிவூட்டி
நீல நிற தீற்றலாய் சேர்த்திருப்பேன்

உருமாறும் கடைசி கணம்
மிஞ்சியிருக்கும்
காதலோ குரோதமோ
கொண்டதோர் பறவையாகி...

கழியும் யுகங்களின் ஓர்
சாயும் வேளை
கூட்டத்தில் சேராத
நீல மூக்கு கழுகையோ
நீலம் பாரித்த குருவியையோ
என் பேர் சொல்லி கூப்பிடு
முழுதும் துறக்க முடியாதெனக்கு.


நன்றி : வார்த்தை.

Friday, May 30, 2008

இன்னொரு பயணம்...

இறங்க வேண்டிய நிறுத்தம்
நெருங்கிக் கொண்டிருக்கையில்
வழிமறித்து பக்கத்திருக்கையில் வந்தமர்ந்தாய்
தாண்டிச் செல்வது
கணநேரத்தில் சாத்தியமென்றாலும்
நகராமல் கட்டிக் கிடக்கிறேன்

நித்தமும் பழகிய பாதையில்
கண்ணிற்கு நழுவிய காட்சிகளை
பக்கத்திலிருந்து காட்டுகிறாய்

மறந்து விட்ட கனவுகளை
ஒவ்வொன்றாய்
விரல்களை ஊசியாக்கி
பொறுக்கியெடுத்து கோர்க்கிறாய்
வாசனை பரவுகிறது

உள்ளோடும் இசையை
உணர்ந்திருந்தேனென்றாலும்
நானேயொரு வாத்தியமென்று
தெரிந்திருக்கவில்லை
உன் விரல் தீண்டும் வரை

கட்டுகள் தளர்த்தி
களியாட்டமாகிறது
பின்பாயும் காலத்தின் வேகம்
பரவசம் நிறைக்கிறது
விலக்கிக் கொள்ளாமல் தடுமாறுகிறேன்

மோனத்திற்கும் நிஜத்திற்குமாய்
வீசியாடும் ஊஞ்சல்
மோனத்திலே நிலை கொள்ள துடிக்கயில்

தவிர்த்திருக்க முடியாத திருப்பத்தில்
சிறியதோர் குலுக்கலுடன்
முடிவுக்கு வரும் பயணம்
கனவுகளைக் கலைத்ததா
கலைந்ததற்கான ஆட்சேபனையா
யோசிப்பதில் ஆர்வமில்லாதிருக்கிறது

தேர்வு செய்யவோர் வாய்ப்பு
கொடுப்பது போல் கொடுத்து
தெரிவாக்க மறுக்கப் பட்ட
சந்தர்ப்பம் நீ

சந்தோஷித்தேனா துக்கம் கொண்டேனா
புரியாததோர் வெளியில்
மிதந்து செல்கிறேன்
கால் பாவும் போது
வெடித்து வடியப் போகும்
எரிமலையை சுமந்து கொண்டு.

நன்றி : வார்த்தை.

Friday, November 02, 2007

காது வேட்டை

முடிந்து போனதற்காய் தவித்த பொழுதில்
முதல் காதல் படபடப்பில்
தடம் மாறி யோசனைகள்
உதித்த கணத்தில்

இப்படியொன்றில் தான்
தொடங்கியிருக்க வேண்டுமென்
காது வேட்டை

சொல்வதெல்லாம் கேட்பதாய்
கிரகிக்கவோர் மூளை கொண்டதாய்
பாரமேற்ற பிரதி யோசனை சொல்ல
குரலென்றொன்று இல்லாததாய்
அழுகையில் கரையும் வார்த்தைகளின்
அர்த்தம் தேடாததாய்...

தேடலனுபவம் தெளிவித்ததில்

ஆன்மீகக் காதுகள் வேண்டாம்
உயர்ந்து நெறியுமதன்
புருவ முடிச்சிலென்
வார்த்தைகள் சுணங்கிப் போகும்

விடலைக் காதுகள் வேண்டாம்
விளையாட்டுப் பொழுதுகளில்
துணையாயிருக்கட்டும்
என் எண்ணங்களின் கனம் தாங்க மாட்டா

என் போல் சுகித்து என் போலே துக்கிக்கும்
என்னினக் காதுகளும் வேண்டாம்
விடைகாணுமென் சூத்திரங்கள்
எழுப்பப் போகும் கண்டனங்களில்
ஏற்கனவே சலித்திருக்கிறேன்

சகவயது காதுகளில்
முதிர்ச்சி தேடுகிறேன்
முதிர்ந்த காதுகளின்
பழமையில் மிரள்கிறேன்

கல்தெய்வத்திடம் சொல்லப்படும்
ஓசையில்லா வேதனை சுமப்பவர்கள்
தேடல் முடிவில் சரணாகதியடைந்த
யாரோவின் வழித்தோன்றல்களாயிருக்கலாம்
தொடருமென் தேடலின்
தோல்வி முடிவில்
நானே தீர்வாகலாம்

என் காதுகள்...

சொல்வதெல்லாம் கேட்பதாய்
கிரகிக்கவோர் மூளை கொண்டதாய்
பாரமேற்ற பிரதி யோசனை சொல்ல
குரலென்றொன்று இல்லாததாய்
அழுகையில் கரையும் வார்த்தைகளின்
அர்த்தம் தேடாதாய்....

நன்றி: யுகமாயினி.

Wednesday, March 07, 2007

கயிறு - மகளிர் தினத்திற்காக.

விபரம் தெரிந்த நாளாய்
உணர்ந்திருக்கும் கயிறு

கை கால் குரல் சிந்தனையென்று
நேரத்திற்கேற்ப நழுவி
இடம் மாறி இறுக்குமது

வெளிர் நிறத்தில் மெல்லியதொரு
நூலாய்க் கிடந்ததை
உரமேற்றி நிறமேற்றியதில்
அடர்ந்த சிகப்பில் இறுகி போனது
வாலிப நாட்களில்

தாயோடு படுக்கை பகிர்ந்தவன்
என்னோடு தாய்மடி பகிர்ந்தவன்
படுக்கை பகிர்பவன்
நண்பன் அவன் இவன்
எல்லோருக்குமுண்டு
ஒரு ஆண்கயிறு

அதிக தடிமனில்லாததாய்
அடர்ந்த நிறமேறாததாய்
இழுத்த இழுப்பிற்கெல்லாம்
இசைந்து கொடுப்பதாய்

உடலும் மனமும் தளர்ந்த
முதுகிழவியின் கயிற்றில்
உரமோ நிறமோ ஏற்றுவாரில்லை

பட்டத்தின் கயிறாய்
பாதுகாப்புக்கென்றாய்
நீளமாய் நூறு கதைகள்
திரும்பத் திரும்பச் சொன்னதில்
பறவைகள் பட்டங்களாகவே
வரித்துக் கொண்டன

நீள அகலமாய் பரந்த வானமும்
தேடி தெரிய சிறகுகளிருக்கும் பிரஞ்சையற்று
கயிறு கட்டிய கால்களோடு
பத்திரமான(!) வானத்தில்

கயிற்றில் நுனி யாரிடமென்றறியாமல்
எப்போது வேண்டுமானாலும்
முடக்க படலாமென்ற எச்சரிக்கையுடனும்...

அறுக்க முடியாத கயிறொன்றில்லை
பறக்க தொடங்கினால் எல்லையுமில்லை...

Tuesday, March 22, 2005

ஒற்றைச் செருப்பு

பிரதான நாற்சந்தி நடுவில் கிடக்கிறது
வெளிர்கருப்பில் குதியுயர்ந்ததொரு
பெண்கள் செருப்பு

காதலன் முதுகில் மார்பு உரைய
விரையும் வேகத்தில்
நழுவியது உணராத
காதலியுடையதாயிருக்கலாம்

வேகப் பேருந்து
செருப்புக்காக நிற்காதென்று
வழியின்றி தவறவிட்ட
பெண்ணுடையதாயிருக்கலாம்

நடுத்தெருவென்றும் பாராமல்
விழி உருட்டி
உரத்த குரலில் ஏசுபவனின்
மனைவியுடையதாயிருக்கலாம்

ஒற்றைச் செருப்போடா
சேரும் இடம்வரை போயிருப்பாள்?

முதலாமது நழுவியது உரைத்தபோதே
மற்றதையும் நழுவவிட்டிருந்தால்
வேறு கால்களிலாவது
ஜோடி சேர்ந்திருக்கலாமென்று
யோசித்திருக்க மாட்டாளா?

நடுத்தெருவில் மல்லாந்து கிடக்கிறது
பரிதாபமாய்

துணையைத் தவறவிட்ட
ஜீவனின் தவிப்பில்
சற்றும் குறைவில்லாமல்

போகிற போக்கில் நானும்
விரலசைக்காமல் கடந்த போதும்
நினைவுகளில் ஒற்றைச் செருப்பின்
விரட்டல்கள் தொடர்கிறது

என்னதான் செய்திருக்க வேண்டும் நான்?

எண்ணிக்கை மறந்து போன
பதில் தெரியாத
இன்னொரு கேள்வி!

Wednesday, December 22, 2004

விமானப் பயணங்களும் பார்வை சந்திப்புகளும்

இலக்கில்லாமல் அலைந்த கண்களை
பத்தடி தூரத்திலிருந்து
இழுத்து நிறுத்தியதுன் முதல் பார்வை

யாரோடோ பேசிக் கொண்டே
சரிதானா என்று கேட்டது
இரண்டாம் பார்வை
என்னவென்றே தெரியவில்லை ஆனாலும்
மறுக்க முடியாமல் தலை ஆடியது

சோதனை முடிந்து விலகுகயில்
மெல்ல வருடிச் சென்றது
மூன்றாம் பார்வை

தேடித் தேடிச் சலித்து
மறுபடியும் எதிர்பட்ட போது
கன்னத்தில் இழைந்து முத்தமிட்டது
நான்காம் பார்வை

சற்றே இடைவெளி விட்டு
வலிய உண்டாக்கிய சந்தர்ப்பத்தில்
இடுப்பில் கைகொடுத்து
இழுத்தனைத்து விலகியது
ஐந்தாம் பார்வை

இன்னும் சில சந்திப்புகள் நிகழுமுன்
உன் வீரியப் பார்வை ஆழம் உணருமுன்
சட்டென்று முடிந்து விட்டது நம் பயணம்

விமானப் பயணங்கள் வேகமாய் முடிந்து விடுகின்றன
நீண்ட ரயில் பயணத்தில் உன்னைச் சந்தித்திருக்கலாம்!