Tuesday, June 02, 2015

இடப்பெயர்ச்சி பலன்கள் - 3

உரண் - க்கு பஸ் ஏற தாதரில் காத்துக் கிடக்கும் போது அரைமணிக்கொருதரம்
வாஷிக்கு பஸ் வரும். அப்போதெல்லாம் நம்ம வீடு அங்கே இருக்கக் கூடாதா
என்று இருக்கும். எங்கள் அடுத்த மாற்றல் அதே வாஷிக்கு. 88, 89 ல் அது
இத்தனை ஜிலுஜிலுன்னு இருக்காது. ரொம்ப அமைதியாய், வசதியாய்.

திருமணத்திற்குப் பின் தமிழோடு தொடர்பே இல்லாமல் இருந்து முதல் முதலாக
வாரம் தவறாமல் தமிழ் புத்தகம் கிடைத்தது. வெளியே போகும் போது தமிழ்
பேசிக் கொண்டே போகும் மனிதர்களைப் பார்க்க முடிந்தது. சில நேரம்
நடுவழியில் திரும்பி பார்த்துக் கொண்டு அப்படியே நின்று கணவரிடம்
வாங்கிக் கட்டிக் கொண்டதும் உண்டு. போய் சேர்ந்த கொஞ்ச நாளில் ஒரு
தமிழ் சங்கம் கூட கிடைத்தது. வீட்டிலிருந்து பத்து நிமிஷ நடையில் தமிழ்
சங்கக் கட்டிடம்(ஒற்றை அறை!). ஒரு அலமாரி நிறைய புத்தகங்கள்.
பெரும்பாலும் வாஸந்தி, இந்துமதியா படித்த நினைவு. இரண்டு நாட்களுக்கு ஒரு
புத்தகம் வீதம். அப்போதிருந்த புத்தகங்களில் நான் படிக்க கூடியதெல்லாம்
ஓரளவுக்கு படித்து முடித்து விட்டிருந்தேன்.

ஹிந்தி இப்போது ஓரளவுக்கு பேச முடிந்தாலும் யார் வீட்டிலும் போய் அரட்டை
அடிக்கப் பிடிக்காமல் இருந்தது. அப்போது தான் நேஹாவோடு  பழக்கம்.
நேஹா.... அப்பா மஸ்கட்டில் இருக்க, அம்மா, அக்கா, தம்பியோடு எங்கள்
பக்கத்து வீட்டில். பனிரெண்டு பதிமூன்று வயதுக்கு நல்ல உயரம். முகம் மட்டும்
குழந்தை மாதிரி கொழுகொழுன்னு. தினம் சாயந்திரம் குறைந்தது ஒரு மணி
நேரம் எங்கள் வீட்டில். எங்கேயோ ஆரம்பித்து எங்கெங்கேயோ போகும்
பேச்சு. அவள் உரையாடல் எப்போதும் இயல்பாக ஆங்கிலத்தில் மட்டும்.
பத்தாவது வரை தமிழில் படித்து ஆங்கிலத்திற்கு தாவியதில் படிப்பதும்
எழுதுவது மோசமில்லை என்றாலும் எனக்கு பேசும் சந்தர்ப்பம் இருந்ததில்லை
(அந்த ஆங்கில அறிவுக்கு பயந்து தான் தம்தரியில் ஒரு காலனியே என்னை
ஒதுக்கி வைத்திருந்தது!). வற்புறுத்துவதே தெரியாமல் மெல்ல மெல்ல அந்தப்
பெண் என்னை ஆங்கிலத்தில் பேச வைத்தது.

என்னால் முடியாதோ என்று தயங்கிய என்னை வற்புறுத்தி அவளுக்கும் அவளுடைய
தம்பிக்கும் டியூஷன் டீச்சர் ஆக்கியதும் நேஹா. இன்னும் இரண்டு குழந்தைகள்
சேர்ந்து கொள்ள, என் ஆங்கிலம் தெளிவாக ஆரம்பித்தது. முதல் முதலாக
சம்பாதிக்கிறேன் என்ற சந்தோஷம். தமிழ் சங்கமும் புதிய புத்தகங்கள்
வாங்கி வந்து இறக்கியது. ஆஹா...வாழ்கை சொர்க்கம் என்று நினைத்த
போது, மறுபடியும் மாற்றல். இந்த முறை ஊர் மட்டுமல்ல, கம்பெனியும் கூட!

புறப்படும் நாள் வீட்டிலிருந்து கிளம்பும் நேரம். கடைசி நிமிஷம் வரை
வேலை. நேஹாவிடம் சொல்லிக் கொள்ள போன போது, குளிக்கப்
போயிருந்தாள். கணவர் நேரமாகிறது என்று அவசரப் படுத்த, எப்படியோ பத்து
நிமிஷம் ஓட்டியும் அவள் வெளியே வரவேயில்லை. மனமே இல்லாமல் கீழே
வந்து ஆட்டோ ஏறி, கிளம்பும் நேரம் நேஹா ஓடி வந்தாள். அவளுடைய
வழக்கமான நீல நிற சட்டையில், கண்கள் சிவந்து, ஆட்டோ கம்பியை
பிடித்துக் கொண்டு, ஓடி வந்ததில் மூச்சு வாங்கிக் கொண்டு வழியனுப்பின
நேஹா...

No comments: