Friday, September 09, 2005

',' வர வேண்டிய இடத்தில் '.'

'ஆமா உனக்கு '... சிங்' ஞாபகம் இருக்கா?

'யாரு?'

'சூரத்ல இருந்தார்'

'ராஜுலால குள்ளமா குண்டா ஒரு சர்தார்ஜி வைப் இருந்தாங்களே அவங்களா?'

'இல்ல, அவங்க இல்ல'

'அந்த நெட்டையா ஒரு அம்மா, எல்லா பார்ட்டிலயும் சண்டை போடுவாங்களே அவங்களா?'

'சேச்சே, அவங்களும் இல்ல. சூரத்ல அவங்க பொண்ணு கூட யாரையோ கல்யாணம் பண்ணிட்டு போயிடுச்சே?'

'ம்ம்ம்... விபரம் ஞாபகம் இருக்கு. ஆள் யாருன்னு தெரியலை. என்ன அவருக்கு?'

'அவர் இறந்துட்டாரு'

'ஐயோ! என்னாச்சு?'

'ஆக்ஸிடெண்ட்'

'எங்கே? எப்பிடி?'

'சைட்ல. இன்னைக்கு சாயந்தரம். ஒரு டவர் விழுந்துடுச்சாம்'

கட்டுமானப் பணி இடத்தில் உயிர்சேதம் தவிர்க்க எல்லா முயற்சிகளும் செய்கிறார்கள் தான், ஆனாலும். முதல் சாவு எப்போது கேள்விப்பட்டேன்? நைட் ஷிப்டில் குளிருக்கு போர்த்தியிருந்த ஷால் நுனி ஏதோ மிஷினின் ·பேனில் மாட்டி தூக்கி அடிக்கபட்டு உயிர் இழந்த ஒருவருடையது தான். கால் தவறி விழுந்தது, தலைக்கவசம் அணியாதது, கொஞ்சமே கொஞ்சம் போதை, கவனக்குறைவு... அகால நேரத்தில் மணி அடித்து தகவல் சொன்ன சாவுகள்.

ஆரம்பத்தில் கேட்கும் போதே பயமாயிருக்கும். சில நேரங்களில் கிடைக்கும் தகவல்கள், இவ்வளவுதானா என்றிருக்கும். கடைநிலைப் பணியாளரான கணவர் இறந்ததில் கிடைத்த பணத்தை வாங்கிய கையோடு வேறொருவரோடு வாழத் தொடங்கி விட்ட மனைவி... அவ்வளவு பணத்தை மொத்தமாகப் பார்த்ததில் புத்திர சோகம் மங்கிப் போன பெற்றோர்கள்... விமரிசிக்க என்ன இருக்கிறது? அவரவர் வாழ்கை... அவரவர் நியாயங்கள்.

கடைநிலை தவிர்த்த மற்ற கட்டுமானப் பணியாளர்கள் வாழ்க்கையிருக்கிறதே, அதில் இரண்டே இரண்டு ஜாதி. ஒன்று 'என்னால இப்படி ஊர் ஊரா பொட்டி தூக்க முடியாது' என்று ஆரம்பத்திலேயே ஊர்பக்கம் மனைவிமார்கள் செட்டிலாகிவிடுவது. இன்னொன்று நேரம் காலமில்லாமல் வரும் மாற்றல்களில் இழுத்தடித்துக் கொண்டு ஊர் ஊராக சுற்றுவது.

முன்னதில்... பிள்ளைகள் படிப்பு, வீட்டு நிர்வாகம், வரவு செலவு எல்லாம் வீட்டம்மா தலையில். படிக்காத, சொல் பேச்சு கேட்காத குழந்தைகள் படுத்தும் போது சலித்துச் சாய தோள் இல்லாத ஏக்கத்தோடே கழிக்க வேண்டியிருக்கும். வருஷத்திற்கு ஒரு தரமோ இரண்டு தரமோ வாரம் பத்து நாள் விடுமுறையில் மொத்த வருட வாழ்க்கையையும் வாழ்ந்து விட வேண்டும். ஊடல், கூடல் எல்லாமும் தான். குழந்தைகள் வளர்வதை கற்பனையில் மட்டும் பார்க்க முடிந்த அப்பாக்கள். தனியாக இருப்பதால் குடி, சிகரெட் இன்னபிற பழக்கங்களில் தனிமையைத் தொலைக்கும் முயற்சிகள். அதே தனிமை விரட்டலும் உடல் தேவையும் சில நேரங்களில் திருமணம் தாண்டிய உறவுகளைத் தேட வைப்பது... இரண்டு பக்கங்களிலும் இருக்கலாம். தனித்தனியே வாழ்வதால் காலப் போக்கில் அவரவருக்கான வட்டம், வாழ்க்கை என்றாகி, சேர்ந்து வாழ சந்தர்ப்பம் கிடைத்த போது மூச்சுத் திணறும் ஜோடிகளும் கண்ணில் படாமலில்லை.

இரண்டாமதில்... ஒன்றாக இருந்தாலும் நேரம் காலமில்லாத வேலை, வீட்டுக்குள் நுழையும் போதே தினமுமா லேட்டா வருவீங்க என்று சண்டை தொடங்கும் மனைவியும், ஆபிஸ் கடுப்பில் பெண்டாட்டியை வையும் கணவரும் சர்வ சாதாரணம். வீட்டுக்கு வந்த பிறகும் தொலைபேசியிலோ செல்பேசியிலோ, அதைத் தூக்கிட்டியா? இதை இறக்கிட்டியா? அந்த கான்கிரீட் ஏன் இன்னும் ஆகலை? என்று ஆபிஸ் நிர்வாகம் தூள் பறக்கும். பண்டி இந்த தரம் மேக்ஸில் பத்து மார்க்கு, பூஜா வரவர சொன்ன பேச்சே கேட்பதில்லை என்று தொடங்கும் தினசரி புலம்பல்கள் காதில் விழ ஆரம்பிப்பதற்கு முன்பே கணவர் தூங்கிப் போய் விட்டது தெரியாமல் பேசிக் கொண்டிருக்கும் மனைவிகள், இதையெல்லாம் தன்னைப் போன்ற இன்னொரு ஜீவனுடன் மாலை நேர தொலைபேசி அரட்டையில் போலிச் சிரிப்பில் தொலைத்துக் கொள்ள வேண்டியது தான். அது பெரும்பாலும் பரஸ்பர பரிமாற்றமாகத்தான் இருக்கும். முன்னெல்லாம் நிறைய பாட்டு கேட்பேன், நிறைய சினிமா பார்ப்பேன்... இப்பல்லாம் வீட்டுக்கு வந்தால் நேரமேயில்லை என்று சலிக்கும் ஆண்கள் பாடும் கொஞ்சமில்லை.

இதோ இதை எழுத வைத்தவர்... அவரை முகம் நினைவில்லாத போதும், பேராகவாவது தெரியும். பத்தாவது படித்துக் கொண்டிருந்த மகள் காதல் திருமணம் செய்து கொண்டதில் கொஞ்சம் பித்தாகிப் போன அவர் மனைவியைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அங்கே இருக்கவே பிடிக்காமல் மாற்றல் கேட்டு எங்கேயோ உ.பி பக்கம் போனது தெரியும்.

அந்த சர்தார்ஜியும் நினைத்திருக்கலாம்... இன்னும் நாலு வருஷம். சர்வீஸ் முடிந்ததும் ஊரைப் பார்க்கப் போய் விட வேண்டும். சர்சோங் கா சாக் - ம் மக்காய் கி ரொட்டியும் சொந்த வயலில் உட்கார்ந்து சாப்பிட... பழைய தோஸ்துகளோட கும்மாளம் போட... பிள்ளைகளோடு கொஞ்சம் நேரம் செலவிட... ம்ம்ம் பொண்டாட்டி கூடவும் தான்... இப்படி நிறைய இருந்திருக்கலாம். அன்றைக்கு காலையில் கிளம்பிப் போகும் போது 'இந்த நாலு ரொட்டியைக் கட்டிக் கொடுக்க தினமும் லேட் பண்ணறே' என்று சலித்துக் கொண்டு கிளம்பினாரா? இல்லை... 'உன்னை ரொம்ப விரட்டரேனோடி?' என்று கேட்க நினைத்து... சரி சரி அப்புறமா, ராத்திரிக்குப் பார்த்துக்கலாம் என்று அவசரமாய் கிளம்பிப் போனாரா?

சில நேரங்களில் அந்த அப்புறம் எல்லாருக்கும் வாய்ப்பதில்லை தான்.

4 comments:

ஜென்ராம் said...

//சில நேரங்களில் அந்த அப்புறம் எல்லாருக்கும் வாய்ப்பதில்லை தான்.//

உண்மை..உண்மையைத் தவிர வேறில்லை.

Anonymous said...

,,,,

posted by: ராசா

Anonymous said...

அடடா!! உங கவிதையை விட ரொம்ப நல்லா இருக்குங்க :-)

சாத்தான்குளத்தான்

Nirmala. said...

பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கு நன்றி.

ராசா, அது ,,,,... இப்படியிருந்திருக்க வேண்டாமோ?

ஆசிப், அப்படீங்கறீங்க? 'கவிப்பகைவன்' சொன்னா சரியாத்தான் இருக்கும்!

posted by: nirmala