Monday, February 13, 2006

சுருக்குப்பை(யிலிருந்து) - 4(கடைசி)

மறுநாள் காலையில் திரும்ப அஸ்ஸாம். 'காஸிரங்கா போக நாலைந்து மணி நேரம் ஆகும். மெதுவாகப் போனாலும் சாயந்தரம் போய் சேர்ந்திடலாம்' என்று ஓட்டுனர் சொன்னதால் வழியில் அந்த உமியம் ஏரியில் கொஞ்சம் இறக்கிப் போக முடிவானது. எந்த அசைவோ ஓசையோ இல்லாமல், ஒரு மெகா சைஸ் சித்திரம் மாதிரி இருந்தது ஏரி. அங்கங்கே ஒன்றிரண்டு மனித முகங்கள்... அதுகூட சித்திரத்தின் ஒரு பகுதி போலத்தான். சிதைந்து போன ஒரு தார்ச்சாலை இறங்கி ஏரியின் ஒரு மூலையில் அமிழ்ந்து போயிருந்தது. அந்த சாலையிலே நடந்து போய் ஏரித் தண்ணீரில் கால் வைத்ததும் அதன் ஜில்ல்லிர்ப்பு உடம்பெல்லாம் ஓடியது. இறங்கி விடலாமா என்ற வந்த ஆசையோடு எங்கே உடுப்பு மாற்ற என்ற கேள்வியும் வந்ததில் வெறும் கால் அளைதலோடு முடிந்தது.

அங்கே தொடங்கிய பயணம் இருட்டுவதற்கு முன்னால் காஸிரங்காவில் முடிந்தது. '·பாரஸ்ட் கேம்பில் தங்க ஏற்பாடாகியிருக்கிறது. ஒரு யானை சவாரி, ஒரு ஜீப் சவாரி, ராத்திரியும் காலையும் சாப்பாடு, தலைக்கு ஆயிரத்து இருநூறு ரூபாய். எல்லாம் அவங்க பாத்துக்குவாங்க' என்று கொல்கத்தாவிலிருந்து தொலைபேசி சொன்னதில் சுவாரசியமான எதிர்பார்ப்பு இருந்தது.

பிரதான சாலையிலிருந்து உள்ளடங்கியிருந்த கேம்பிற்குள் நுழைந்ததுமே பிடித்துப் போனது. சின்னச் சின்ன குடிசைகளாக ஏழெட்டு, நடுவில் ஒரு சாப்பிடும் இடம், வேலிக்கு வெளியே ஒரு தேயிலைத் தோட்டம், அதற்கு பின்னால் நீளும் காடும் மலையுமாய். வணக்கமும் விசாரிப்புகளும் முடிந்தவுடன் குடிசைகள் திறந்து விடப்பட்டது. சுமாரான சுத்தமாய் படுக்கை, போர்த்திக்கொள்ள ஒரு அழுக்கு ரஜாய்.... 'இதை நான் தொடப் போவதில்லை' என்று மனசுக்குள் சொல்லிக் கொண்டது அதற்குக் கேட்டிருக்கும்... 'ம் ம்... பார்க்கலாம்' என்று அது சிரித்தது எனக்குக் கேட்கவில்லை.

எரியத் தொடங்கிய கேம்ப் ·பயர், சுடச்சுட தேநீர், ராத்திரி சாப்பிட என்ன வேண்டும் என்ற விசாரிப்பு எல்லாம் முடிந்து, 'கஸ்டமர் குஷ்' ஆன நேரத்தில் 'அந்த யானை சவாரி ஆகாது போலிருக்கிறது. அதுக்குப் பதிலா இங்க பக்கத்துல ஒரு நைட் ச·பாரி போயிட்டு வந்துடுங்களேன்' என்று அந்த மேனேஜர் சின்னப் பையன் நைச்சியமாகப் பேசி சம்மதிக்க வைத்து விட்டார். இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் கும்மிருட்டில் ஒரு ஓடைக்குப் பக்கத்தில் ஜீப்பை நிறுத்தி, 'சத்தம் போடாம இருங்க... எதாச்சும் வந்தாலும் வரும்' என்று சொல்ல, வந்தாலும் தெரியாத அந்த கும்மிருட்டில் காத்திருந்த அரை மணிநேரத்தில் கொஞ்சம் மின்மினியும், இன்னொரு நைட் ச·பாரி ஜீப்பும் தான் வந்தது.

திரும்ப கேம்பிற்கு வந்த போது நாலைந்து ஜீப்புகளும் கொஞ்சம் கூட்டமுமாயிருந்தது. விசாரித்ததில், பத்து நாளாக தங்கியிருக்கும் அஸ்ஸாமி பட ஷ¥ட்டிங் கோஷ்டி என்று தெரிந்தது. அங்கேயே படப்பிடிப்பிற்கு தயாராகிக் கொண்டிருந்தார்கள். குளிர் ஏறத் தொடங்கியிருந்தது. சாப்பாட்டுக்குப் பிறகு ஒரு மணி நேரமாகியும் இன்னும் ஏற்பாடுகளே தொடர்ந்து கொண்டிருந்தது. டைரக்டரையோ, நடிகர்களையோ யாரையும் காணவில்லை. மூட்டி வைத்திருந்த நெருப்பை விட்டு விலகும் வரை குளிர் தெரியவில்லை. குடிசைக்குள் நுழைந்ததும் தான் தட்டியில் மண் பூசிய அந்த சுவரெல்லாம் வேலைக்காகாது என்று தெரிந்தது. கைவசமிருந்த ஸ்வெட்டர், ஷால் எல்லாம் போதாமல் வேறு வழியில்லாமல் அந்த ராஜாயை எடுத்து போர்த்தியும் எங்கெல்லாம் எத்தனை எலும்பு ஓடுகிறது என்று எண்ணிக் கொண்டு இரவு ஓடியது.

குளிரில் தூக்கம் வராமல் நடு ராத்திரியில் ஒரு தரம் லேசாக கதவை திறக்க, வெளியே பாட்டிலும் கையுமாய் உட்கார்ந்திருந்த போலீஸையும் கூட்டாளிகளையும் பார்த்ததில் ஹிந்தி சினிமா சீன்கள் நினைவுக்கு வந்ததில் வெளியே போகும் உத்தேசத்தை விட்டு மறுபடியும் ரஜாயைத் தஞ்சமடைய வேண்டியதாயிற்று.

அரைத்தூக்கத்தில் கழிந்த அந்த ராத்திரி, பறவைகள் சத்தத்தில் விடிந்தது. வீட்டில் இருக்கும் போது பார்த்தே இருக்காத ஐந்தரை மணி காலையை அந்த கேம்ப்பில் பார்க்கக் கிடைத்தது. யாரும் விழித்திருக்காத அந்த நேரத்தில் கொஞ்சம் கொஞ்சமாய் பரவும் வெளிச்சத்தைப் பார்த்துக் கொண்டு தன்னந்தனியாய் உட்கார்ந்திருந்தது மறக்க முடியாது.

அதற்குப் பிறகு போயிருந்த ஜீப் ச·பாரி, பச்சை பூத்திருந்த காட்டு வழி, தூரப்பார்வைக்கு காட்டெருமையாகத் தெரிந்து காண்டாமிருகம் தான் என்று ஊர்ஜிதமான அந்த ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு காண்டா, இரண்டு மான்கள், ஒரு ஆமை(!), நான்கைந்து காட்டெருமை... இதெல்லாம் அந்த காலை விருந்துக்குப் பின்னால் சாப்பிட்ட கொறிப்புகள். கிளம்பும் போது தான் தெரிந்தது ராத்திரி பார்த்து மிரண்டடித்து போனது சினிமா போலீஸ் என்று! தைரியமாய் வெளியே வந்து டைரக்டர் கண்ணில் பட்டு அஸ்ஸாமி படத்தில் அண்ணியாகவோ அக்காவாகவோ நடித்திருக்கக் கூடிய சந்தர்ப்பம் பாழாய் போன நடுஜாம பயத்தில் பறி போனது! ம்ம்ம்...

Tuesday, February 07, 2006

சுருக்குப்பை(யிலிருந்து) - 3

வாசித்துக் கொண்டே போகையில் எங்கேயாவது ஒரு இடத்திலாவது 'படவா! சரியான குசும்பன்டா நீ'... இப்படியாக மனசில் ஓடி ஒரு புன்னகை வர வைக்கும் எழுத்தாக எனக்கு குஷ்வந்த் சிங்கின் எழுத்து இருந்திருக்கிறது. அவர் இந்த தலைப்பிலா?... இது தான் முதலில் தோன்றியது Obituaries - death at my doorstep புத்தகத்தை கடையில் பார்த்த போது. மேலும், 'தவிர்க்க முடியாததுதானென்றாலும் பேசாமலும் வாசிக்காமலுமாவது இருக்கலாம். அதை நான் வாங்கப் போவதில்லை' என்று தான் முதலில் முடிவானது. ஆனாலும் சில விரட்டல்களைத் தவிர்ப்பது சிரமம். இதுவும் அப்படியே.

வெவ்வேறு சமயங்களில் குஷ்வந்த் சிங் எழுதிய மரணச்செய்தி குறிப்புகளின் தொகுப்பு. குஷ்வந்த் சிங் அவருடைய இருபதுகளில் அவருடைய obituary அவரே எழுதியிருப்பதாக எங்கேயே வாசித்திருக்கிறேன். புத்தகம் அதனோடு தான் தொடங்குகிறது. அது எனக்குத் தெரிந்த குஷ் எழுத்தின் சாயலில் கொஞ்சமும் இல்லை. சாவைப் பற்றி அவர் கேட்டறிந்தவைகள்... கேட்டவர்கள் வரிசையில் தலாய் லாமா, ரஜனீஷ், வி.பி.சிங்... தெளிவில்லாத விளக்கங்கள்.

புத்தகம் உள்ளே இழுத்துக் கொள்வது புட்டோவின் இறுதி நாட்களை விவரித்துக் கொண்டு போகும் போது தான். பனிரெண்டு பக்கங்களுக்கு நீளும் அந்தக் குறிப்புகள்... சாப்பிட்டுக் கொண்டே வாசித்துச் செல்ல, ஒரு கட்டத்தில் அது சொல்லத் தெரியாத அவஸ்தையாகி, புத்தகத்தை மூடி வைக்க வைத்தது. அரசியல் நண்பர்கள், எழுத்தாள நண்பர்கள், அவருடைய வீட்டு காவல்காரர்... தொடரும் மரணச் செய்திகள். வெறும் வார்த்தைகளாயில்லாமல் உணர்வுகளாய். தெரிந்த முகங்களும் தெரியாத தகவல்களும். ஒரே சோக கீதம் பாடாமல், இயல்பாய் சொல்லிப் போகிறது. இந்த புத்தகத்தில் கூட மனுஷன் குறும்புத்தனத்தைக் காட்டாமல் போகவில்லை. இத்தனை சாவு சமாச்சாரங்களையும் படிக்க தயார் செய்யவென்றேயாயிருக்கும்.

'கொஞ்சம் சினிமா' வில் அந்தர்மகாலில் தொடங்கி பார்த்த பெங்காலிப் படங்களையும், கொஞ்சம் ஹிந்தி படங்களையும் சொல்ல நினைத்தது... பெங்காலிப் படங்கள் எண்ணிக்கை நீண்டு போனதில் அதைத் தனியாகத் தான் எழுத வேண்டும். அந்த வரிசைப் படங்களில் கனத்து போன தலையை லேசாக்க இடையில் பார்த்த
'Bluffmaster' ம் , Neal n Nikki' ம் முழு மசாலா. சும்மா அபிஷேக்பச்சனை பார்க்க்க்கவும், ம்யூஸிக்கிற்காகவும் Bluffmaster நல்ல சாய்ஸ். கூல் n லைட் மூவி. Neal n Nikki... ஒரு பைசாவுக்கு தேறாது. இந்த உதய் சோப்ராக்கு என்ன ஆச்சு? நல்லாத்தானே இருந்தார்? அந்த ஓவர் சைஸ் புஜங்களும் அதற்கு கொஞ்சமும் பொருந்தாத முகமும்... கொடுமை! அநியாய மினி சைஸ் ஆடைகளில் தனிஷா... இவ்வளவும் குறைச்சிருக்க வேண்டாம் தான். வேஸ்ட்.

அதையெல்லாம் ஒதுக்கி விட்டு அதிகம் கவனம் பெறாத இந்த படம் பற்றி சொல்லியே ஆக வேண்டும். Hazaar Chaurasi ki maa.

இந்த படத்தை வாங்கும் போது இது என்ன படம், எதைப் பற்றியது என்ற எந்த அனுமானமும் இல்லை. இறுக்கமான ஜெயாபச்சன் முகமும், கோவிந்த் நிஹலானி என்ற பெயரும் தான் அதை வாங்கச் சொல்லியிருக்க வேண்டும். படம் தொடங்கி இரண்டு நிமிடம் வரை தலைப்புக்கு அர்த்தம் கூட தெரிந்திருக்கவில்லை. அப்புறம்
தான் தெரிந்தது hazaar chaurasi... 1084 என்று. 1084 எண் உடலைக் காட்டி அடையாளம் காணச் சொல்வதுடன் படம் தொடங்குகிறது. அதற்குப் பிறகே தன் மகன் நக்ஸலைட் என்று தெரிந்து கொள்ளும் ஒரு அம்மாவின் தேடல்கள்.

மஹாஸ்வேதா தேவியின் Hazaar chaurasir maa என்ற நாவலின் திரைப்பட வடிவம். நக்ஸலைட் என்று கொல்லப் பட்ட மகனின் சுவடே இல்லாமல் செய்ய முயற்சிக்கும் குடும்பம், அதிலிருந்து விலகி மகனின் வேர்களைத் தேடிச் போவதும் தெரிந்து கொள்வதுமாய். கொலை செய்யப் பட்ட இரவு அவன் தங்கியிருந்த நண்பன் வீடு... அவனின் அம்மாவிடமிருந்து மகனுடைய இன்னொரு முகத்தைத் தெரிந்து கொள்வதும், எப்படி இதெல்லாம் எனக்குத் தெரியாமல் போனது என்ற குற்ற உணர்ச்சியும், அதிலிருந்து மீண்டு வருவதுமாய் போகும் கதை.

அம்மாவாக ஜெயாபச்சன். அந்த நிதானம், இறுக்கமான அமைதி... நிறைவாக செய்திருக்கிறார். நண்பனின் அம்மாவாக சீமா பிஸ்வாஸ். உடைந்து அழும் அந்தக் காட்சி ஒன்று போதும். மகன் பாத்திரத்தில் ஜாய் சென்குப்தா. காதலியாக நந்திதா தாஸ். பேரலல் சினிமாவின் வழக்கமான முகங்கள். எந்த அலங்காரமும் இல்லாத க்ளீன் மூவி.

எழுபதுகளின் கல்கத்தா, சொல்லப் போனால் பளபளக்கும் பெரிய சாலைகளுக்கு பின்னால் இன்னமும் அப்படி ஒரு கல்கத்தா இருக்கத்தான் செய்கிறது. பெரிய மாற்றங்களில்லாமல். நக்ஸல் இயக்கம் விட்டுப் போன வலி இன்னமும் எத்தனையோ குடும்பங்களில் மிச்சம் இருக்கலாம். அதனாலேயே அந்த நாட்களின் வேகம் இல்லாமல் போயிருக்கலாம். கோட்டைத் தாண்டி அந்தப் பக்கம் போய் நின்று பார்த்தால் அதனுடைய நியாயங்கள் புரிந்து கொள்ள முடிகிறது.

இதே விஷயத்தைத் தொட்ட Hazaaron khwaishien aisi... ஒரு பீரியட் படம் என்ற பார்வையில் இன்னும் அதிகம் கவனம் எடுத்திருக்க வேண்டுமோ?

இதோ இங்கே சால்ட் லேக்கில் எழும்பும் அடுக்குமாடிக் கட்டிடங்களுக்கு தோண்டிய பள்ளங்களில் கிடைத்த எலும்புகள், ஏரியில் இப்படித் தூக்கி போட்ட கணக்கில்லாத சடலங்களின் மிச்சங்கள் என்று கேள்விப்பட்ட செய்தி நினைவுக்கு வந்து போகிறது. கொல்கத்தாவும் அதன் வரலாறும், ஆழமும் அகலமுமாய்... ரொம்பப் பெரிசு.

கொல்கத்தா புத்தக கண்காட்சி

31 வது கொல்கத்தா புத்தக கண்காட்சி ஞாயிற்றுக் கிழமை முடிந்தது. இந்த வருட தீம் ஸ்பெய்ன். 578 ஸ்டால்களில், ஒரு நாள் மூன்று மணி நேரத்தில் கால் பங்கு கூட பார்த்து முடிக்க முடியவில்லை. இன்னொரு தரம் பார்த்து விட்டு சேர்த்து எழுதலாம் என்ற இருக்க, முடிந்தே போய் விட்டது.

'மைதான்' நாசம் ஆகிவிட்டது, சுத்தம் செய்து முடிக்க ஒரு மாதமாவது ஆகும் என்ற புலம்பல்களும், புத்தக கண்காட்சியில் உணவகங்களையும் மற்ற விற்பனைகளையும் அனுமதிக்கலாமா கூடாதா என்ற விவாதங்களுமாய் இருக்கிறது. 'ஆடியோ விஷ¤வல் சரக்குகள் கூட வாசிக்கும் பழக்கத்தைக் குறைத்து விடும். தள்ளிப் போய் வித்துக்கோ' ன்னு ஒரு கூக்குரல்.

புத்தகம், ம்யூஸிக், சாப்பாடு... இதில் கொல்கத்தாவாசிகளை அடிச்சுக்க முடியாது தான். விடவும் மாட்டார்கள். ஜிப்பா ஜோல்னா பை சகிதமாயும், கோட்டு சூட்டுமாயும் பங்காலிபாபுகள், வயதானவர்கள், குழந்தைகள், இளைஞர்கள், காட்டன் சேலைப் பெண்கள்... கலந்தடித்த கூட்டம்.

'குல்லம் குல்லா லிக்கா ஹை கியா(வெட்ட வெளிச்சமா எழுதியிருக்கா)'?... ஜீன்ஸ் சுந்தரிகளும் சுந்தரன்களுமாய் இருந்த கூட்டத்தில் இருந்து வந்த குரல். அவர்கள் தேடிக் கொண்டிருந்தது essays & letter writing section ல்! இராமகிருஷ்ணரும், விவேகானந்தரும், குருதேவும் நிறைந்திருக்கிறார்கள். 'கோட்டோவியங்களில் கல்கத்தா' இதற்கென்றே ஒரு ஸ்டால். sculptor workshop... ஒரு ஸ்டாலில்.

சாகித்ய அகாடமி ஸ்டாலின் ஒரு சின்ன அலமாரியில் பத்து பதினைந்து தமிழ் புத்தகம் கண்ணில் பட்டது. தமிழ் சங்கம் இருக்கிறது. தியாகராஜர் ஹாலில் கச்சேரி செய்ய சுதாவும், சௌம்யாவும் வந்து போகிறார்கள். கவி பாரதி பெயரில் ஒரு தெரு இருக்கிறது. சாயந்திர நேரத்தில் அந்த தெருவில் கொஞ்சம் நடந்துட்டு வந்தால் ஊருக்கே போயிட்டு வந்த மாதிரி இருக்கிறது. தமிழ் புத்தகத்துக்கு மட்டும் ஏன் தேவை இல்லை?!

நான் வாங்கியது:

செம்மீன் - தகழி சிவசங்கரப் பிள்ளை - தமிழாக்கம்: சுந்தர ராமசாமி.

Binodini - Rabindranath Tagore

The Sandal Trees - Kamala Das

May you be the mother of a hundred sons - Elisabeth Bumiller.

Thursday, February 02, 2006

சுருக்குப்பை(யிலிருந்து) - 2

'இவ்வளவு பக்கத்தில நான் இருக்கேன். பெருசா டெல்லி கிளம்பிட்டீங்க. சரி சரி கட்டின பொட்டிய பிரிப்பானேன். இங்க வந்துட்டு போங்க'... ஒற்றைக் கொம்பால் காதில் கிச்சுகிச்சு மூட்டிக் கொண்டே முனங்கிய காஸிரங்கா காண்டாமிருகத்தின் குரல் கேட்டு... 'நாம அஸ்ஸாம் போறோம்' என்று முடிவானது.

கௌஹாத்தி, மாநிலத் தலைநகருக்கான லட்சணங்களைப் பற்றியெல்லாம் அதிகம் கவலைப்படாமல் தன் போக்கில் இருந்தது. புதிதாக முளைத்திருந்த மால்கள் சூழலோடு ஒட்டாமல் தனியாகத் தெரிந்தது. விமான நிலையத்திலிருந்து தங்கும் இடத்திற்குப் போகும் வழியில் குறுக்கிட்ட இரண்டு கிலோமீட்டர் மார்க்கெட்டைக் கடக்க இரண்டு மணிநேரம் ஆனது. எல்லாம் அந்த மஞ்சள் கோடு மீறல் தான். காத்திருந்த இரண்டு மணி நேரத்தில் ஒரு ட்ராபிக் போலிஸ்காரர் கண்ணில் படவில்லை.

கௌஹாத்தியில் 'கட்டாயம் பார்க்க' என்று பயணப் புத்தகம் சொன்னதில் மூன்று கோவில்களை மட்டும் பார்த்த எங்கள் மக்கள்ஸ்க்கு சரியான சலிப்பு. தீர்த்த யாத்திரையா வந்திருக்கோம் என்று குதிக்க ஆரம்பித்தவர்களை சமாதானப் படுத்தி, முதலில் போனது காமாக்யா மந்திர். அமிதாப்பச்சனுக்காக ரெண்டு எருமைகளை பலி கொடுத்த கதையெல்லாம் திரும்ப வந்து ஆ.வி படித்துத் தான் தெரிந்தது. கோவிலுக்கு உள்ளே நுழையும் போது சிலிர்த்துக் கொண்டு வந்த கடாக்குட்டிகளெல்லாம் அதுக்குத்தானா?!

நீளமான க்யூ இருக்கும், குறைந்தது ரெண்டு மணிநேரமாவது ஆகும் என்று பயமுறுத்திய கதையையெல்லாம் பின்னால் ஒரு ஐம்பது பேராவது நின்று, திரும்பிப் போக வழியில்லாமல் போன சமயத்தில் கணவர் மெதுவாக எடுத்து விட்ட தகவல். வளைந்து வளைந்து செல்லும் க்யூவில் ஆறேமுக்காலாவது திருப்பத்தில் கண்ணில் பட்ட ஸ்வாமிதான் நாங்கள் பார்க்க வந்த காமாக்யாவோ என்று நினைத்தால், 'இதைக் கும்பிட்டுக்கோங்க இன்னும் உள்ள போகணும்' என்று சொன்ன 'உள்ளே' ரொம்ப இருட்டாய் இருந்தது.

அதிகம் வெளிச்சமில்லாத ஒரு திருப்பத்தில் ஒழுங்கில்லாத நான்கைந்து படிகள். இறங்கினால், வரிசையாய் உட்கார்ந்திருந்த பூசாரிகளைத் தவிர வேறேதும் தெரியவில்லை. வட்டமாய் ஒரு தாழ்வான மேடை, அந்த வட்டத்திலேயே பிரம்மாண்டமான ஒரு இருட்டு கோபுரம். உள்ளே போன வழியிலேயே திரும்பி வர வேண்டும். மண்டியிட்டு கீழே சுரக்கும் சுனை நீரைத் தொட்டுப் பார்க்கச் சொன்னபடி செய்து விட்டு வெளியே வர, அது 'ஜஹான் ஸே ஹம் ஆயே, வோ ஸ்தான் ஹை' ( நாம் எங்கிருந்து வந்தோமோ அந்த இடம்) என்று சொன்னதை 'கருப்பை' என்று சொன்னதாக நான் புரிந்து கொண்டேன். சரியா தவறா தெரியவில்லை. அதைச் சொல்லவே அவருக்கு ஏனோ அவ்வளவு தர்மசங்கடம். மேலும் கேள்வி கேட்டு குடையும் ஆர்வம் வரவில்லை.

சாதாரண நாட்களிலேயே இவ்வளவு அசௌகரியமான வழியாயிருக்கும் அந்த இடம் விசேஷங்களில் எப்படி இருக்கும்? எப்படி கூட்டத்தை சமாளிப்பார்கள் என்று கவலையாயிருந்தது. ஒரு ஆள் சறுக்கினாலும் பதட்டமும் கலவரமும் தவிர்ப்பது சிரமமாயிருக்கும். எங்கே போனாலும் இது மாதிரி யோசனை தான் வருகிறது. பக்தி?!

அதை முடித்து அடுத்ததாய் போன பாலாஜி கோவில் அச்சு அசலான தமிழ்நாட்டுக் கோவில். புளியோதரையும் சுண்டலும் தான் மிஸ்ஸிங். சர்ச்சைக்குள்ளான காஞ்சி பெரியவர்கள் சுவர்களில் சிரித்துக் கொண்டிருந்தார்கள். மூன்றாவது கோவிலை தவிர்த்து அன்றைய சுற்றலை முடித்துக் கொண்டோம். தூரத்தில் ஓடிக் கொண்டிருந்த பிரம்மபுத்திராவை காரிலிருந்து பார்த்துக் கொண்டதோடு சரி.

மறுநாள் காலை ஷில்லாங் போக கார் வந்திருந்தது. முதலில் சிரபுஞ்சி பார்த்து விடலாம் என்பது ஓட்டுனர் ஆலோசனை. 'அதிக மழை' பட்டத்தை பக்கத்து ஊருக்கு தாரை வார்த்துக் கொடுத்து விட்டதாய் மகன் தகவல் சொல்ல, 'அச்சச்சோ அப்படியா?!' என்றோம். சொன்ன மாதிரியே நாங்கள் போயிருந்த போது மழையொன்றும் காணோம். திடீரென்று மேகம் திரண்டு சடசட வென்று பெய்யும் என்று சொல்லியிருந்தது நாங்கள் இருந்த மூன்று நான்கு மணி நேரம் வரை நடக்கவில்லை.

தூரப் பார்வைக்குத் தெரியும் ஒன்றிரண்டு அருவிகள், அழகாய் ஒரு குகை... இது சிரபுஞ்சி. அருவியைப் பார்த்தோம் என்று போனில் சொன்னதும் அம்மா கேட்டது, 'குளிச்சீங்களா?' என்பது தான். குளிக்க முடியாத அருவியெல்லாம் வேஸ்ட் என்பது அவருடைய அபிப்ராயம். தண்ணீர், அது ஆறோ குளமோ... இறங்கி அளைய முடியணுமாம். சரிதான்.

'ஐநூறு மீட்டர் நீள குகைக்குள்ளே நுழைந்து வருவது சிரமம். ஆம்பிள்ளைகள் நீங்க ரெண்டு பேர் வேணா போகலாம், பொம்பளைங்களுக்கு கஷ்டம்' என்று அந்த ஓட்டுனர் சொல்லாமல் இருந்தால் அதில் நுழைந்தே தீரும் பிடிவாதம் வந்திருக்காது தான்! தண்ணீராலா, இல்லை நடந்து நடந்தே அப்படி ஆனதா என்று தெரியவில்லை, துடைத்து வைத்தது போல மொழுமொழு பாறைகள். இருட்டுக் குகைகளும் இணைக்கும் சிறு துவாரங்களுமாய்... எப்போ வழுக்கி விழப்போறேனோ, விழுந்தால் எப்படி இங்கிருந்து வெளியே போவது, உனக்கெதுக்கு இந்த வேலையெல்லாம்னு இவர் ஆரம்பிச்சுடுவாரே... இதெல்லாம் தான் உள்ளே ஓடிக் கொண்டிருந்தது. இன்னும் கொஞ்சம் நிதானமாய் பார்த்திருக்கலாமோ என்று இப்போது தோன்றுகிறது. அப்போதென்னவோ அதை கடந்து முடிக்கும் வேகம் தான் இருந்தது.

வழியில் உமியம்(Umiam) ஏரியை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே ஷில்லாங் போய் சேர்ந்தோம். இரவு தங்கல் அங்கேதான் ஏற்பாடாகியிருந்தது. சாப்பிடப் போகும் போது குளிர் அதிகமாயிருந்ததில் என்னதான் அப்போது டெம்பரேச்சர் இருக்கும் என்ற ஆர்வத்தை மார்க்கெட் பகுதி மணிக்கூண்டு தீர்த்து வைத்தது. எட்டு டிகிரி என்று சொன்னதை நம்ப சிரமமாயிருந்ததது. சாப்பாடெல்லாம் முடித்து ஏழுமணி சுமாருக்குத் (ஏழு மணிக்கெல்லாம் ஊர் அடங்க ஆரம்பித்துவிடும் என்று ஓட்டுனர் முன்னாலேயே சொல்லியிருந்தார்) திரும்பி வரும் போது மணிக்கூண்டு வெப்பம் காட்டி மூன்று என்றது. வெப்பம் காட்டி தவறாக வேலை செய்கிறது என்றுதான் தோன்றியது. அறைக்குள் ஹீட்டரைப் போட்டு கம்பளியையும் போர்த்தி படுத்ததில் எதுவும் தெரியவில்லை.

தொடர்கிறது...

Tuesday, January 31, 2006

சுருக்குப்பை(யிலிருந்து) - 1

அகிலாண்டம்மாள் சுருக்குப்பையில் காசு தேடும் போது... கொஞ்சம் சில்லரை, ஆறாய் மடித்த ஒன்று, இரண்டு ரூபாய் நோட்டுகள், வெட்டுப் பாக்கு, சட்டை பட்டன், இரும்பு வளையம்(?!)... என்னவெல்லாமோ கண்ணில் படும். இரண்டு புத்தகங்கள், ஒரு பயணம், கொஞ்சம் சினிமா... என்று தலைப்பு வைத்து எழுதத் தொடங்கிய இந்தப் பதிவை (ஏறக்குறைய)முடிக்கும் போது ஏனோ பாட்டியின் சுருக்குப்பை ஞாபகம் வந்ததில் தலைப்பு மாறி விட்டது.

முதலில் பயணத்தோடு தொடங்குகிறேன், மற்றவை அங்கங்கே சேர்ந்து கொள்ளும்!

மாலை ஆறு மணிக்குக் கிளம்பியிருக்க வேண்டும். ஆனால் கிளம்பப் போகும் அறிகுறி ஒன்றும் எட்டு மணி வரை காணவில்லைதான். இதோ இதோ என்று சொல்லி இரவு ஒன்பதரைக்கு கிளம்பியது. காத்திருந்த நேரத்தில் எட்டிப் பார்க்கத் தொடங்கிய அலுப்பை விரட்டியடிக்க சொல்லிக் கொண்டது, 'சேரும் இடத்தை விட சேர்ந்து செல்லும் இந்தப் பயணத்தை அனுபவியேன்' என்பது தான்.

ஆனால் Spicejet முதலாளிக்கு என்னோடு சேர்த்து அந்த இருநூற்றுச் சொச்சம் பயணிகளை சும்மாவாச்சும் கொல்கத்தாவிலிருந்து லக்னோ வரைக்கும் கூட்டிப் போய் திரும்பக் கூட்டி வர ஏதோ நேர்த்திக் கடன் போலிருக்கிறது. அதை அந்த டிசம்பர் மாத குளிர் ராத்திரியில் வெற்றிகரமாக நிறைவேற்றி விட்டார்.

விமானத்தின் உள்ளே நுழைந்ததும் ஒரு டம்ளர் தண்ணீர். அடுத்து நிறைய காற்றும் கொஞ்சம் வேர்க்கடலையும் அடைத்த ஒரு பொட்டலம். லக்னோ வரைக்கும் போனதும் கேப்டன் அழைத்து 'தில்லி நேற்றெல்லாம் காலை நாலு மணி வரை கூட நல்லாத்தான் இருந்தது, இன்னைக்கு இதோ பதினோரு மணிக்கே மசமசத்து விட்டது. எனக்கு வேற எங்கேயும் இறக்க அனுமதியில்லை, அதனால் திரும்ப கொல்கத்தாவிற்கே போகிறோம்' என்று அறிவித்த போது... தாஜ்மகால், நைனிதால், முசோரி, குளிர், அதில் சூடாக இறங்கும் தேநீர், வாயைத் திறந்தால் வரும் புகை, அதற்காகவே சும்மா சும்மா திறந்து பார்க்கும் கிறுக்குத்தனம், Radisson கபாப் (இதைப் பற்றி பேசிப் பேசி வெறியேற்றி வைத்திருந்த கணவர், எப்படியாச்சும் நேரம் ஒதுக்கி அங்கே போயே ஆகணும்னு போட்டிருந்த ப்ளான்) எல்லாம் லக்னோ வானில் பொசுக்கென்று கரைந்து போனது!

இறங்கினதும் அந்த அர்த்த ராத்திரியில் அது ஒரு பட்ஜெட் சர்வீஸ் என்பதையும் மறந்து, சாப்பாடு குடுக்க மாட்டியா? தங்க ஏற்பாடு பண்ண மாட்டியா? என்று ஒரு கும்பல் கிளம்ப, வீட்டுக்குப் போய்விடலாம் என்று யோசிக்காமல் முடிவு செய்தோம். இதே விமானம் காலை பதினொரு மணிக்கு கண்டிப்பாகக் கிளம்பிவிடும் என்று உறுதி(?!)யாகச் சொல்லிக் கொண்டிருந்த ஒரு Spicejet சிப்பந்தியிடம், 'நாங்க இங்கேயே உட்கார்ந்திருக்கோம். காலையில மறந்துடாம சொல்லுங்க' என்று சொல்லிக் கொண்டிருந்த ஒரு பெரியவருடைய பொறுமையைப் பார்த்து பொறாமையாயிருந்தது.

இந்தப் பயணத்தில் தான் அந்த இரண்டு புத்தகங்களில் ஒன்றான கரிச்சான் குஞ்சு எழுதிய 'பசித்த மானுடம்' வாசிக்க ஆரம்பித்தது. ரொம்ப சுவாரசியம் என்று சொல்ல முடியாவிட்டாலும் நேரம் கிடைத்த போதெல்லாம் வாசிக்கத் தூண்டியது. ஏகப்பட்ட பாத்திரங்கள், ஆனாலும் அதிகம் குழப்பாமல் போனது. பட்டும் படாமலும் சொன்னாதென்றாலும் அந்தக் காலத்திலேயே ஓரினச்சேர்க்கை பற்றி எழுதியிருக்கும் ஆச்சர்யம் இன்னும் மிச்சம் இருக்கிறது. கணேசன் பாத்திரம் சுவாதீனமாக அங்கங்கே சேர்த்துக் கொள்ளும் உறவுகள் அந்த நாட்களில் சாத்தியமா?!

எந்தப் படைப்புமே கற்பனைச் சேர்க்கையின்றி வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் என்பதற்கு உத்திரவாதம் இல்லை என்பதால் அந்தக் கோணத்தில் அதிகம் யோசிக்க வேண்டியதில்லைதான்.

தொடர்கிறது...

Tuesday, January 17, 2006

15 Park Avenue

Image hosted by Photobucket.com

ஏறக்குறைய ஒரு வருடமாகவே செய்தியில் இருந்த படம். பூடானில் படப்பிடிப்பு, ஸ்வபூமி(கொல்கத்தாவில் உள்ள ஒரு கலாச்சார மையம்) யில் இன்று கொன்கனா ஷபனா ஆஸ்மி, சௌமித்ர சட்டர்ஜி, வஹிதா ரெஹ்மான், தீர்த்திமான் சட்டர்ஜி, ஷெ·பாலி ஷா என்று குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவர்கள் பங்கு பெற்ற... அபர்னா சென்னின் இந்தப் படத்திற்கு நிறைய எதிர்பார்ப்பு இருந்தது.

ஒரு Schizophrenic மீட்டி(மிதாலி)யாக கொன்கனா. ஐந்து குழந்தைகளுக்கு தாயாக Mrs.Roy என்று தன்னைக் கற்பனை செய்து கொள்ளும் பாத்திரம். அவருடைய half sis, பிஸிக்ஸ் ப்ரொபஸர் அஞ்சலி மாதூர் (ஷபானா)... தங்கைக்காக சொந்த வாழ்க்கையில் நிறைய சமரசங்கள் செய்து கொள்ளும், கன்வல்ஜித்-ன் காதலி. அதிகம் பட்டுக் கொள்ளாத சகோதரன். வயதான அம்மாவாக வஹிதா ரெஹ்மான்.

இல்லாத 15, Park Avenue விலாசத்தைத் தேடியும், தன் குழந்தைகள் பேரை சொல்லி, அவன் கூப்பிடறான், இவள் அழறாள்... செய்தியில் பார்த்த சதாம் ஹ¤சேன் கற்பனை கணவருக்கு முதலாளியாக, இதோ இப்போ வந்துடுவான் நான் என் வீட்டுக்கு போகணும், பேங்கில் இருந்து என் பணத்தை எடுத்துக் கொடு... இப்படி அதிகம் முரணில்லாத ஒரு கற்பனை உலகம், அதே சமயம் நிஜ உலகை தனக்கு எதிராக நினைத்துக் கொண்டு... எல்லாமே அக்காவாக, சில நேரம் அக்காவையும் சந்தேகப்பட்டுக் கொண்டு...

மீட்டியின் ஒரு தற்கொலை முயற்சியில் மனநல மருத்துவராக கதையில் நுழையும் குணால் (தீர்த்திமான் சட்டர்ஜி). பதினோரு வருடத்திற்கு முன்னால் மீட்டிக்கு நடந்த அசம்பாவிதம், அதற்கு தானும் ஒரு வகையில் பொறுப்பு என்ற குற்ற உணர்வோடு அஞ்சலி, அவரை அதிலிருந்து வெளியே கொண்டு வரும் குணாலின் முயற்சிகள், கொஞ்சம் கவிதையாக அவர்களுக்கு இடையில் ஓடும் நெருக்கம்...

பூடானில் விடுமுறைக்கு போயிருக்கும் சமயம் எதேச்சையா சந்திக்கும் மீட்டியின் முன்னாள் காதலன் ஜோஜோ(ராஹ¤ல் போஸ்), மனைவியாக ஷெ·பாலி ஷா. மீட்டிக்கு தன்னை அடையாளம் தெரியவில்லை, ஆனால் தன்னை கணவனாக நினைத்துக் கொண்டு இவ்வளவு நாளாக ஒரு கற்பனை வாழ்க்கை வாழ்கிறாள் என்று தெரிந்த குற்ற உணர்வு. சின்னதாக சந்தேகப்படும் மனைவிக்கும், தன் உறுத்தலுக்கும் நடுவில் ஜோஜோ...

நிறைய விஷயங்களை அந்த இரண்டரை மணிக்குள் அடைக்க முயற்சி செய்ததில்... இன்னும் கொஞ்சம் ஜோஜோ, மீட்டி, அஞ்சலி, குணால் இருந்திருக்கலாம் என்று தோண வைக்கிறது. அங்கங்கே கொஞ்சம் ஹிந்தி, கொஞ்சம் பெங்காலி, கொஞ்சமே கொஞ்சம் தமிழ் எட்டிப் பார்க்க முழு நீள ஆங்கிலப் படம், இயல்பாக இருக்கிறது. ப்ளாஷ்பேக்கில் இளமையாக காட்ட முயன்ற ராஹ¤லும் ஷபானாவும் தேறவில்லை. வஹிதா ரெஹ்மான், சௌமித்ர சட்டர்ஜி... அதிகம் உபயோகப் படுத்தப்படாமல் போயிருக்கிறார்கள். இன்னும் கொஞ்சம் பூடான் கூட இருந்திருக்கலாம்!

மல்ட்டிப்ளெக்ஸ் தியேட்டரில் வழக்கம் போல பெண்கள் கூட்டம்... ரிதுபர்னோ கோஷின் படங்களிலும் இப்படி ஒரு பெண்கள் கூட்டம் கண்ணில் பட்டது. கொஞ்சம் இலக்கிய ஒளிவட்டத்தோடு இங்கே பார்க்கும் கொல்கத்தா ஒரு முழு கொல்கத்தா அல்லாத போதும் இந்த முகம் எப்போதும் போல ஆச்சர்யத்தை விட்டுப் போனது.

Thursday, November 24, 2005

காஷ் மே...

'சமுதாயம் வரிக்கும் திருமணம், குடும்பம், பொறுப்பு, அதன் தொடர்பான கடமைகள் என்ற கோடுகளுக்குள் அதிகம் கேள்விகள் இல்லாமல், இருந்தாலும் பெரிய போராட்டங்களில்லாமல், சின்ன முணுமுணுப்பு, கொஞ்சம் சலசப்பு காட்டி வாழும் பெரும்பான்மை. மீறினாலும் மதிப்பாக ஆன்மிகம், துறவு, (போலிச் சாமியார்களும்
சேர்த்தே) ஒரு சிறுபான்மை. அதிலும் சேராமல் இதிலும் சேர்த்தியில்லாமல் இன்னொரு சிறுபான்மை. இவர்களை குறுகுறுப்பான ஓரக்கண் பார்வையில் பார்த்துக் கொண்டு அவசரமாக விலகிக் போன காலங்கள் போய், பொருட்படுத்தாமல் இருக்கப் பழகி, பரிதாபப் பட்டு... எல்லாம் தாண்டி அவர்களை அவர்களாகப் புரிந்து கொள்ள முடியும் என்ற நிலைப்பாடு வந்திருக்கிறது.'

இப்படி ஒரு முன்னுரை மனதில் எழுதி வைத்து அந்த சந்திப்புக்கான முனைப்பு தொடங்கியது நட்சத்திர வாரத்திற்கான அழைப்பு வந்த போது. எப்படியாவது அதற்கு முன் சந்தித்து விடவும் அந்த சமயத்தில் கட்டாயம் அவர்களைப் பற்றி ஒரு பதிவு இடவும் ஒரு வேகம் இருந்தது. பழக்கமில்லாத ஊர், அதிகம் நண்பர்களும் இல்லை. யார் இதற்கு உதவி செய்வார் என்ற யோசனையில், எண்ணத்தில் தட்டுப் பட்டது ரேணுபாலா மொஹந்தி. மாதாந்திர லேடீஸ் க்ளப் கூட்டத்தில் வெட்டி அரட்டை நேரத்திலும் எதாவது செய்ய வேண்டும் என்ற முனைப்புடன் இருப்பது அவர் மட்டுமே. அவரிடம் அந்த சந்திப்பு நோக்கத்தைச் சொல்லி யாரையாவது தெரியுமா என்று கேட்டதற்கு விசாரித்துச் சொல்வதாகச் சொன்னார். சரியாக இரண்டாம் நாள் ஒன்றிரண்டு NGO க்களைப் பற்றிச் சொல்லி தொலைபேசி எண்ணும் தந்தார்.

முதலாவதாகக் கொடுத்திருந்த எண் தான் எனக்குத் தேவையானதாய் இருந்தது. தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது யார், என்ன, எதற்காக என்ற விபரம் கேட்டுக் கொண்டு யாரிடமிருந்தாவது அறிமுகக் கடிதம் தேவையிருக்கும், ஆனாலும் நீங்கள் விரும்பும்வது போல இந்த வாரத்தில் முடியாது, அடுத்த வாரம் பார்க்கலாம் என்று சொல்லி விட்டார். என்னுடைய நட்சத்திர வார அவசரமோ, ஆர்வமோ அவருக்கு அவசியமில்லாமல் இருந்தது.

அடுத்த படையெடுப்பு கணவரிடம். வேறென்ன அந்த அறிமுக கடிதத்திற்காகத்தான். ஏற்கனவே இதைப் பற்றிப் பேசியிருந்தாலும் 'அவசியம் போகணுமா' என்ற கேள்வியோடு வாங்கித் தந்தார். நாலுவரி அறிமுகக் கடிதத்தில் குட்டியாய் ஒரு கையெழுத்தும் மங்கலாய் ஒரு ரப்பர் ஸ்டாம்புமாய். வேறு வழியிருக்கவில்லை. அதைக் கொண்டு வர அந்த NGO அமைப்பிடம் அனுமதி கேட்டு, வரச் சொன்ன நாள் போன போது அமைப்பின் தலைவி அலுவலகத்தில் இல்லை. காத்திருந்த நேரத்தில் அவர்களுடைய சேவைகள் பற்றிய பட்டியலும் புகைப்படங்களும் சுவரெல்லாம் தொங்க, பார்க்கக் கிடைத்தது. அவருடைய காரியதரிசியிடம் விபரம் சொல்லி கொடுத்து விட்டு வந்தாலும் அவர் அதைக் காண்பிப்பாரா என்ற சந்தேகம் இருந்தது. இப்போதும் வேறு வழியிருக்கவில்லை.

அதற்குப் பின் தொடர்ந்த தொலைபேசி விசாரிப்புகளில் எப்போதும் இல்லாதிருந்தது தலைவியும், குறைவில்லாமல் இருந்தது சலிப்பும். ஒரு கட்டத்தில் 'எங்களுக்கு உங்களைப் போன்ற ஆட்களுக்கு செலவிட நேரமில்லை. நீ யாரென்று தெரியாது. எதிலோ எழுதுகிறாய் என்கிறாய்... என்ன எழுதப் போகிறாயோ, அதனால் எங்களுக்கு தொல்லை வரலாம், நீ புகைப்படம் எடுக்க வேண்டும் என்பாய், அந்த இடத்தைப் பற்றித் தெரியுமா உனக்கு? உன்னை அங்கே அழைத்துப் போகும் அவசியம் எங்களுக்கு என்ன? ' என்று சொல்லி என் தொடர் தொலைபேசி கோரிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப் பட்டது.

NGO க்களின் துணை என்ற பாதுகாப்போடு போக நினைத்தது முடியாமல் போய்விட்டது. அப்போது எழுத நினைத்த பதிவும் எழுத முடியவில்லை. இனியும் போக முடியும் என்று தோன்றவில்லை. சோனார்காச்சியும் அவர்கள் வாழ்க்கையும் இனிமேலும் அவ்வப்போது கண்ணில் படும் ஊடகங்கள் வாயிலாகத்தான்.

காஷ் மே...

Saturday, November 19, 2005

குஷ்வந்த் சிங் என்றொரு குழந்தை

வழக்கமாக பத்து பதினைந்து நிமிடங்களில் முடிந்து விடும் செய்தித்தாள் வாசிப்பு சனிக்கிழமைகளில் மட்டும் கொஞ்சம் எதிர்பார்ப்போடு இன்னும் சில நிமிடங்கள் நீடிக்க குஷ்வந்த் சிங் தான் காரணமாயிருப்பார். பெரும்பாலும் சவசவன்னு போகும் அவருடைய அந்த வாராந்திர பத்தியை ஏனோ விட மனசு வந்ததில்லை. எப்போதாவது ஒரு சின்ன சிரிப்பு... சில தகவல்கள், கொஞ்சம் அரசியல், பழைய நண்பர்கள்... எல்லாமுமாயிருக்கும்.

இன்றைக்கு மார்க்வெஸ்ஸின் My Melancholy Whores பற்றி கொஞ்சம் விலாவரியாக கதை சொல்லி கடைசியில் இப்படி முடிக்கிறார்...

I am unable to fathom reasons which induced Marquez to write this novella almost entirely confined to prostitutes. The urge to write about my own fantasies came to me when i was in my 80s. I churned out 'The Company of Women'. I wrote a short prefatory note admitting that when a man ages, his sexual desires travel from his middle to his head. And all that I have written were imaginary sex-escapades of an octogenarian. Needless to say it was panned by most critics, and predictably also went into several editions. Marquez's latest will make it to the top world's best-seller list and earn him another fortune. It does not shake me. My consolation is that I did a better job than he even if the world does not agree with me.

இந்த 'The Company of Women' புத்தகம் கைக்கு கிடைத்தது ரொம்ப எதேச்சையாக. எதையோ தேடி விசாரிக்க, அது சேரன் டவர்ஸ்ல தான் கிடைக்கும் என்று யாரோ வழிகாட்ட, அந்த சேரன் டவர்ஸையே தேட வேண்டியிருந்தது. கடைசியில் தேடிப் போன சாமான் கிடைக்கவில்லை, ஓடாத புத்தகக் கடையை முடிவிடும் முடிவிலிருந்த ஒரு புத்தகக் கடைக்காரர் கிடைத்தார். மனசில் தோன்றிய விலைக்கு புத்தகங்களை தள்ளி விடும் உத்தேசத்திலிருந்தார். அப்போது வாங்கிய மற்ற புத்தகங்கள் நினைவில்லை. ஆனால் இந்த புத்தகம் வெறும் எழுபத்தி ஐந்து ரூபாய்க்குக் கொடுத்தார். அது தான் முதல் குஷ்வந்த் சிங் எழுத்து அறிமுகம். அந்த புத்தகம் வாசித்த அந்த ஆறேழு நாட்களும் இருந்த உணர்வை எப்படிச் சொல்ல என்று தெரியவில்லை. ஆனால் சில விஷயங்களை சொல்லி விட்டுப் போயிருக்கிறது. அந்த வாசிப்பு மயக்கம் தான் இன்னும் குஷ்வந்த் சிங் எழுத்துகளை எங்கே பார்த்தாலும் விட முடியாமல் விரட்டுகிறது.

ஆனாலும் இன்றைக்கு ஏனோ அவரைப் பார்க்கும் போது தொண்ணூறு வயதுக் குழந்தை (ஆச்சுதானே குஷ்வந்த் சிங்ஜி?) போலிருக்கிறார். என் பொம்மை தான் உசத்தி என்று சொல்லும் குழந்தை!

Wednesday, November 09, 2005

ANTARMAHAL: Views of the Inner Chamber

Image hosted by Photobucket.com

படம் விரட்டின விரட்டில் தேடிப் போய் பாஷை புரிய வைக்கும் இடத்தில் பார்த்துவிட்டு வந்தாயிற்று. 'அப்படியாயிருக்குமோ? சேச்சே அதுவாயிருக்காது' என்று நினைத்ததெல்லாம் அப்படியேதான் அதேதான் என்று சொல்லிவிட்டது. பாஷை சரியாகப் புரியாமல் அரைகுறையாய் புரிந்து எதையாச்சும் சொல்லிவிட வேண்டாம் என்று தான் அப்படி ஒரு மொட்டை பதிவு. என்ன செய்ய? படம் பார்த்து விட்டு வந்ததும் அதைப் பற்றி எழுதாமல் இருக்க முடியவில்லை.

ரிதுபர்னோ கோஷின் இன்னொரு பீரியட் படம். ஜமீந்தாரை படம் வரைய வந்த வெள்ளைக்காரர் தான் கதை சொல்லி. 1858 நடக்கும் கதை. சல்லாபி ஜமீந்தாருக்கு(ஜாக்கி ஷெராப்) ராணி விக்டோரியாவிடமிருந்து ராய் பகதூர் பட்டம் வேண்டும். ஆண் வாரிசு ஒன்று கட்டாயம் வேண்டும். இது இரண்டும் தான் பெரிய தலைவலி. முதல் மனைவியாக ரூபா கங்கூலி. புதிதாக வந்த இளம் மனைவியாக சோஹா அலி கான். தலைவலியைத் தீர்க்க எதையும் செய்ய தயாராகிறார் ஜமீந்தார். அந்த 'எதையும்'ல், வரபோகும் துர்கா பூஜைக்கு துர்காவின் உடலில் ராணியின் முகத்தை வைத்து சிலை செய்ய உத்தரவிடுவதும், புரோகிதர் வேதம் வாசிக்க, கேட்டுக் கொண்டே புணர்வதும் அடங்கும். ராணி முகச்சாயலில் சிலை செய்ய வருபவராக அபிஷேக்பச்சன். இந்த பாத்திரங்கள், அதன் இயலாமைகள், தவிப்பு, உணர்வு உரசல்கள்... இதில் ஓடும் கதை.

புரோகிதரை வைத்துக் கொண்டு புணர மறுக்கும் இளம் மனைவிக்காக முதல் மனைவி கட்டிலுக்கும் வாசிப்பவருக்கும் நடுவில் திரை போடச் சொல்கிறார். திரைக்கு அந்தப் பக்கம் ஜமீந்தாரும் இளம் மனைவியும். இந்தப் பக்கம் வாசிப்பவரைச் சீண்ட அவர் முன்னே அமர்ந்து கொஞ்சமாய்(?!) துகிலுரிகிறார். 'பிள்ளை பெற்றுக் கொள்ள நீ செய்வது தவறில்லை என்றால், நான் செய்வதும் தவறில்லை'.

மோப்பம் கண்ட புரோகிதர் கடைசியில் ஜமீந்தாரை வைத்தே பரிகாரம் என்ற பேரில் முதல் மனைவியோடு தன்னையும் சேர்த்து ஐந்து புரோகிதர்கள் புணர அனுமதி வாங்கிக் கொள்கிறார்! ராணியின் முகச்சாயல் துர்கா, பெரிய குற்றம், பரிகாரம், அஸ்வமேத யாகம், குதிரை, அது ஊரெல்லாம் சுற்றி வந்ததில் தீட்டு, அதைப் போக்க வீட்டு பெரிய மருமகள் குதிரையோடு புணர்ந்து சுத்தம் செய்ய வேண்டும், ஆனால் இப்போது அப்படியெல்லாம் செய்ய வேண்டாம் அதற்குப் பதில் இந்த ஐந்து புரோகிதர் சமாச்சாரம்! ஆக்ரோஷமாய் மறுக்கும் முதல் மனைவி பிறகு 'இதையே சாதகமாக்கிக் கொண்டு ஒரு பிள்ளையைப் பெற்றுக் கொண்டு உன் இடத்தைக் காப்பாற்றிக் கொள்' என்ற சேடி பெண்ணின் ஆலோசனையையும் ஏற்றுக் கெள்கிறார். அவசியம் வந்தால் எதுவும் மாறும்... எப்படியும் மாறும்!

கடைசியில் துர்காவை இளம் மனைவியின் முகச்சாயலில் செய்து விட்டு சிலை செய்தவர் தலைமறைவாகிறார். அதை அவமானமாக நினைத்து இளம் மனைவி தற்கொலை செய்து கொள்கிறார். புரோகிதர்களோடு புணரக் குறித்த நாளில் முதல் மனைவி விலக்காகிக் போகிறார்!

விலக்கானது தெரிந்தும் 'அமி ஜாபோ(நான் போவேன்/கிறேன்?!)... அமி ஜாபோ' என்று திரும்பத் திரும்பச் சொல்லி உடைந்து அழும் போது... அந்த பாத்திரத்தை அதன் அவஸ்தையை இதைவிட வேறெப்படியும் சொல்ல முடியாது. விரிந்த அந்தக் கண்களில் மாறி மாறி வெளிப்படும் கோபமும் இயலாமையும்... ரூபா கங்கூலியின்
பாதிப்பு இன்னும் கொஞ்ச நாளுக்கு இருக்கும். இப்படி ஒரு பாத்திரம் செய்த பிறகு என்ன மாதிரி உணர்வார் என்று ஒரு கேள்வி வருகிறது. ஆனால் அம்மையாருக்கு இதொன்றும் புதிதல்ல என்றே தோன்றுகிறது.

சோஹா அலி கான் சின்ன பூனைக்குட்டி போலிருக்கிறார். மெல்லிய குரலும், உயராத விழிகளும்... அந்தக் காலத்துப் பெண்கள் இப்படித்தான் இருந்திருப்பார்களானால் ரொம்ப பரிதாபம் தான். அபிஷேக் பெங்காலி பேசினால் எப்படி இருக்கும் என்ற கற்பனை பலூனுக்கு பரிதாபமாய் காற்று போய் விட்டது. ஹிந்தி பேசும் பிஹாரியாக தப்பித்துக் கொண்டார். முரட்டு ஜமீந்தாருக்கு ஜாக்கி(அய்யோ இப்படி எழுதவே பிடிக்கலை!) அழகாய் பொருந்துகிறார். மனுஷன் பாதிப் படம் புணரும் போஸிலேயே முடித்து விட்டார்! இத்தனை விலாவரியாக இவ்வளவு முறை அதைக் காண்பித்திருக்க வேண்டாம் தான். படம் ஆரம்பிப்பதே அந்த போஸில் தான். மழை இல்லாததால் புழுக்கமாயிருப்பதையும், வியாபாரிகள் நல்ல பணம் சம்பாரித்துக் கொண்டதையும் பற்றி சலித்துக் கொண்டு, கூட ஒரு ஏப்பமும் விட்டு... கோழிக்குஞ்சு போல் ஒடுங்கிக் கொண்டிருக்கும் இளம் மனைவியோடு தொடங்கும் முதல் காட்சி!

ஆள் உயரத்துக்கு வெள்ளையாய் புல் பூத்திருக்கும் நதிக்கரையை எங்கே பிடித்தார்களோ! அழகான ஒளிப்பதிவு. இழைத்து இழைத்து படம் எடுத்தது தெரிகிறது. மை தீட்டிய கண்களும், ரவிக்கையில்லாத தோள்களில் நிறைந்து கிடக்கும் நகைகளும்... அரங்கத்திற்குள் இருந்த நேரத்தை magical moments ஆக்கும் வித்தை பிடித்திருந்தது. படம் முடியும் போது ஒரு சின்ன அதிர்வை எல்லோருக்குள்ளும் தந்ததை இரண்டு நாளும் உணர முடிந்தது. ஒரு ஆழ்ந்த நிசப்தத்திற்கு பின் கலைந்து செல்லும் திரையரங்கம்... என்னவோ செய்தது.

Tuesday, November 08, 2005

புத்தகமும் கையுமாக...

கடந்த ஒரு மாதமாக புத்தகமும் கையுமாக கழிந்தது. நான்கு புத்தகங்கள். அதுவும் ஆறாம் வகுப்பு வாண்டு வாசிக்கும் பாட புத்தகம் அளவில். அதைப் படித்து ஒரு பரிட்சை. ஊதித் தள்ளி விடலாம் என்ற நினைப்பெல்லாம் படிக்க ஆரம்பித்த முதல் வாரத்திலேயே காணாமல் போய் விட்டது. படிக்கும் போது புரிகிறது. சுவாரசியமாகத்தான் இருக்கிறது. அதைப் பற்றி ஆயிரத்து இருநூறு வார்த்தைகளில் எழுது என்றால் என்ன எழுதுவது என்ற கலக்கம் வந்ததென்னவோ நிஜம். ஆனால் எழுதப் போனபோது அத்தனை சிரமமாயிருக்கவில்லை. ஏதோ ஒரு நுனியை
பிடித்துக் கொண்டு இழுக்க சில நேரம் மலையே வந்தது. சிலநேரம் கண்ணாமூச்சி காட்டிப் போனது. மொத்தத்தில் சுவாரசியமாயிருந்தது.

வாசித்த விஷயங்களோடு நிறைய விஷயங்களை தொடர்பு படுத்திக் கொள்ள முடிந்தது. ப்ராய்டுடனான காதல் கொஞ்சம் தீவிரமாகியிருக்கிறது. புத்தகஅலமாரியில் கவனிக்காமல் கிடக்கும் அவருடைய புத்தகங்களை படிக்கும் ஆர்வம் தலை தூக்கியிருக்கிறது. சாய்வு நாற்காலியில் சாய்ந்து மேலோட்டமாய் படிக்காமல் கவனமாக படிக்க வேண்டியதன் அவசியம் புரிந்திருக்கிறது. இன்னும் கொஞ்சம் ஆழமாகப் போகும் ஆர்வம் வந்திருக்கிறது. பரிட்சை முடிந்த கடைசி நாள் அப்பாவுடனான தொலைபேசி உரையாடல் ஒரு மறக்க முடியாத, சொல்ல முடியாத ஒரு உணர்வை தந்திருக்கிறது...

'அப்பா, நரேன் சென்னைக்கு பத்ரமா போய் சேந்துட்டான்'

'அப்டியா... வழியில எதாச்சும் சாப்டானா?'

'தெரியலையே... நான் பேசலை. அவர்தான் பேசியிருக்கார்'

'ஏன்? நீ எங்க போன?'

'எனக்கு மத்யானம் பரிட்சை இருந்துதுப்பா'

'அப்டியா... நல்லா எழுதுனியா?'

'மொதல் மூனும் நல்லா எழுதினேன். இன்னைக்கு அவ்வளவு சரியா எழுதல'

'ஒழுங்கா படிச்சாதான ஆகும். எப்பப்பாரு டீவியும் கம்ப்யூட்டருமா இருந்தா...'

பள்ளிக்கூடம் போற மகளை கண்டிக்கிற தொனியில் அப்பா செல்லமாக திட்டிக் கொண்டே போக, ஒரு கணத்தில் இரண்டு பேரும் சிரிக்க தொடங்க...

ANTARMAHAL - ஒரு பாஷை தெரியாத பார்வையில்.

நான் பார்த்த ரிதுபர்னோ கோஷின் இரண்டாவது படம். சோக்கர் பாலியின் சாயலோடு கொஞ்சம் எதிர்பார்ப்பை தூண்டியதாயிருந்தது.

பாஷை தெரியாமல் படம் பார்க்கும் desperation என்னவென்று இன்றைக்கு புரிந்தது. ஹாஸ்ய படமாயிருக்கும் பட்சத்தில் பேசுவது புரியாவிட்டாலும் செய்கைகள் சில நேரம் சிரிப்பை வர வைக்கும். இவ்வளவு உணர்ச்சி கொப்பளிக்க என்னதான் சொல்றாங்க என்று தவிப்போட பார்க்க வைத்த படம். தியேட்டர் வாசலில்
வைத்திருந்த விளம்பர அட்டையில் with english sub-titles என்று போட்டிருந்ததை பற்றி அதிகம் அக்கறையில்லாமல் தான் பார்க்கப் போயிருந்தேன். படிப்பதில் கவனம் போனால் படத்தை ரசிக்க முடியாது என்று தான். sub-titles என்னவோ வரவில்லை. ஆனால் ஏன் போடலைன்னு திரும்பி வர்றப்ப டிக்கெட் கொடுத்த மகராசனை கேள்வி கேட்டுட்டு தான் வந்தேன்.

வீட்டுக்கு வந்து போன வார பேப்பரில் அதோட விமர்சனம் வந்திருந்ததே அதையாவது பார்த்து படத்தைப் பற்றி இன்னும் கொஞ்சம் தெரிஞ்சுக்கலாம் என்ற முயற்சியும் வீணானது. விமர்சனம் எழுதிய புண்ணியவானும் கதையைச் சொல்லாமல் விட்டிருக்கிறார். என்னைப் போல!

ஆனால் வேறொரு தியேட்டரில் sub-titles உடன் வருவதாக சொல்லியிருக்கிறார். இன்னொரு தரம் பார்த்தே ஆக வேண்டும். அதுவரை அந்த கேரக்டர்கள் எல்லாம் என்னதான் பேசியிருக்கும் என்ற க்யூரியாசிட்டியோடு நான் இருக்கப் போகிறேன். பார்த்து விட்டு வந்து கொஞ்சம் போல சொல்கிறேன்.

Wednesday, October 05, 2005

Maine Gandhi Ko Nahin Maara

Image hosted by Photobucket.com

ஹிம்மத் கர்னே வாலோங்கி ஹார் நஹி ஹோத்தி (தைரியத்தோடு செயல் படுபவர்களுக்கு தோல்வி வருவதில்லை)- இந்த கவிதை வரிகளோடு தொடங்குகிறது படம்.

ஒரு பழைய காலத்து மும்பய் நகர வீடு, வீட்டு மேசை நாற்காலியெல்லாமும் அதே பழைய நாட்களை சொல்லிக் கொண்டு. மேசையில் ஒரு மார்க்வெஸ் புத்தகம் கூட கண்ணில் பட்டது. ஹிந்தி புரோபஸர் உத்தம் சௌத்ரியாக அனுபம் கேர், மகள் ட்ரிஷாவாக ஊர்மிளா, இன்னும் தேடித் தேடி தேர்ந்தெடுத்த கலைஞர்கள். வயது காரணமாக வேகமாக நினைவாற்றலை இழந்து கொண்டிருக்கும் தகப்பனை கரிசனத்தோடு கவனித்துக் கொள்ளும் மகள். கேருக்கும் ஊர்மிளாவுக்கும் பாத்திரமாகவே மாற இன்னொரு சந்தர்ப்பம். மறதியோடு போராடும் அப்பாவுக்காக
வாழ்க்கையோடு சமரசங்களும், அந்த சமரசங்களின் அழுத்தம் தாங்காமல் வெடிப்பதுமாய்... அம்மணிக்கு கண், உதடு, கழுத்து நரம்பு எல்லாம் பேசுகிறது. ஊர்மிளாவின் பாத்திரத்தோடு சட்டென்று நெருங்கிக் கொள்ள முடிந்தது.

இடைவேளைக்கு சில நிமிடங்களுக்கு முன்னால் கேர், 'நான் காந்தியை வேணும்னு கொல்லவில்லை' என்று முதல் முறையாக சொல்லும் வரை இந்தப் படத்தில் காந்தி எங்கே வருகிறார் என்ற யோசனை வந்தது நிஜம். மனநல மருத்துவர், அவருடைய சோதனைகள், அவர் முயற்சிக்கும் தீர்வு... எல்லா இடங்களிலும் கேரின் ஆக்ரமிப்பு. விரல் நடுக்கங்களும், காதோர சிலும்பல்களை தடவி தடவி பதட்டத்தை மறைப்பதும்... முதலில் வீட்டிலிருக்கும் வயதானவர்களையும், நாளைக்கு நமக்கும் தான் என்றும் நினைக்க வைப்பதே அந்த நடிப்புக்கு வெற்றி.

பொம்மன் இரானி, கேஸட்டில் நான்கு கலந்தடித்தவைகளுக்கு நடுவில் ஒரே ஒரு பாட்டு பாடினாலும் உருக்கிப் போகும் ஹரிஹரன் மாதிரி, கொஞ்சமே வந்து காட்டுக் கத்து கத்திட்டு போகிறார். உயிரோட்டமுள்ள கத்தல்! கொஞ்சம் வஹிதா ரெஹ்மானும். தலைப்பில் காந்தியைப் போட்டதில் ரெண்டு வகை ரியாக்ஷனும் இருக்க வாய்ப்பிருக்கிறது. முழுக்க முழுக்க காந்தியோடு தொடர்பு படுத்த முடியாமலும், இல்லவே இல்லை என்று விலக்க முடியாமலும் போகலாம். தலைப்பைப் பார்த்து, 'நான் வரலையே'ன்னு சொன்ன மகனும் ஒரு பதம்.

ஆனால், முதுமையையும் மன நோய்களையும் பற்றி இவ்வளவு ஆழமாக இதுவரை இந்தியப் படங்களில் பார்த்ததில்லை. சுஜாதா சொன்னது போல இனிமேல் இந்த மனநோய்கள் அதிகம் அலைக்கழிக்கும். நீண்ட ஆயுளும் தீராத மன அழுத்தங்களுமாய்.

Friday, September 09, 2005

',' வர வேண்டிய இடத்தில் '.'

'ஆமா உனக்கு '... சிங்' ஞாபகம் இருக்கா?

'யாரு?'

'சூரத்ல இருந்தார்'

'ராஜுலால குள்ளமா குண்டா ஒரு சர்தார்ஜி வைப் இருந்தாங்களே அவங்களா?'

'இல்ல, அவங்க இல்ல'

'அந்த நெட்டையா ஒரு அம்மா, எல்லா பார்ட்டிலயும் சண்டை போடுவாங்களே அவங்களா?'

'சேச்சே, அவங்களும் இல்ல. சூரத்ல அவங்க பொண்ணு கூட யாரையோ கல்யாணம் பண்ணிட்டு போயிடுச்சே?'

'ம்ம்ம்... விபரம் ஞாபகம் இருக்கு. ஆள் யாருன்னு தெரியலை. என்ன அவருக்கு?'

'அவர் இறந்துட்டாரு'

'ஐயோ! என்னாச்சு?'

'ஆக்ஸிடெண்ட்'

'எங்கே? எப்பிடி?'

'சைட்ல. இன்னைக்கு சாயந்தரம். ஒரு டவர் விழுந்துடுச்சாம்'

கட்டுமானப் பணி இடத்தில் உயிர்சேதம் தவிர்க்க எல்லா முயற்சிகளும் செய்கிறார்கள் தான், ஆனாலும். முதல் சாவு எப்போது கேள்விப்பட்டேன்? நைட் ஷிப்டில் குளிருக்கு போர்த்தியிருந்த ஷால் நுனி ஏதோ மிஷினின் ·பேனில் மாட்டி தூக்கி அடிக்கபட்டு உயிர் இழந்த ஒருவருடையது தான். கால் தவறி விழுந்தது, தலைக்கவசம் அணியாதது, கொஞ்சமே கொஞ்சம் போதை, கவனக்குறைவு... அகால நேரத்தில் மணி அடித்து தகவல் சொன்ன சாவுகள்.

ஆரம்பத்தில் கேட்கும் போதே பயமாயிருக்கும். சில நேரங்களில் கிடைக்கும் தகவல்கள், இவ்வளவுதானா என்றிருக்கும். கடைநிலைப் பணியாளரான கணவர் இறந்ததில் கிடைத்த பணத்தை வாங்கிய கையோடு வேறொருவரோடு வாழத் தொடங்கி விட்ட மனைவி... அவ்வளவு பணத்தை மொத்தமாகப் பார்த்ததில் புத்திர சோகம் மங்கிப் போன பெற்றோர்கள்... விமரிசிக்க என்ன இருக்கிறது? அவரவர் வாழ்கை... அவரவர் நியாயங்கள்.

கடைநிலை தவிர்த்த மற்ற கட்டுமானப் பணியாளர்கள் வாழ்க்கையிருக்கிறதே, அதில் இரண்டே இரண்டு ஜாதி. ஒன்று 'என்னால இப்படி ஊர் ஊரா பொட்டி தூக்க முடியாது' என்று ஆரம்பத்திலேயே ஊர்பக்கம் மனைவிமார்கள் செட்டிலாகிவிடுவது. இன்னொன்று நேரம் காலமில்லாமல் வரும் மாற்றல்களில் இழுத்தடித்துக் கொண்டு ஊர் ஊராக சுற்றுவது.

முன்னதில்... பிள்ளைகள் படிப்பு, வீட்டு நிர்வாகம், வரவு செலவு எல்லாம் வீட்டம்மா தலையில். படிக்காத, சொல் பேச்சு கேட்காத குழந்தைகள் படுத்தும் போது சலித்துச் சாய தோள் இல்லாத ஏக்கத்தோடே கழிக்க வேண்டியிருக்கும். வருஷத்திற்கு ஒரு தரமோ இரண்டு தரமோ வாரம் பத்து நாள் விடுமுறையில் மொத்த வருட வாழ்க்கையையும் வாழ்ந்து விட வேண்டும். ஊடல், கூடல் எல்லாமும் தான். குழந்தைகள் வளர்வதை கற்பனையில் மட்டும் பார்க்க முடிந்த அப்பாக்கள். தனியாக இருப்பதால் குடி, சிகரெட் இன்னபிற பழக்கங்களில் தனிமையைத் தொலைக்கும் முயற்சிகள். அதே தனிமை விரட்டலும் உடல் தேவையும் சில நேரங்களில் திருமணம் தாண்டிய உறவுகளைத் தேட வைப்பது... இரண்டு பக்கங்களிலும் இருக்கலாம். தனித்தனியே வாழ்வதால் காலப் போக்கில் அவரவருக்கான வட்டம், வாழ்க்கை என்றாகி, சேர்ந்து வாழ சந்தர்ப்பம் கிடைத்த போது மூச்சுத் திணறும் ஜோடிகளும் கண்ணில் படாமலில்லை.

இரண்டாமதில்... ஒன்றாக இருந்தாலும் நேரம் காலமில்லாத வேலை, வீட்டுக்குள் நுழையும் போதே தினமுமா லேட்டா வருவீங்க என்று சண்டை தொடங்கும் மனைவியும், ஆபிஸ் கடுப்பில் பெண்டாட்டியை வையும் கணவரும் சர்வ சாதாரணம். வீட்டுக்கு வந்த பிறகும் தொலைபேசியிலோ செல்பேசியிலோ, அதைத் தூக்கிட்டியா? இதை இறக்கிட்டியா? அந்த கான்கிரீட் ஏன் இன்னும் ஆகலை? என்று ஆபிஸ் நிர்வாகம் தூள் பறக்கும். பண்டி இந்த தரம் மேக்ஸில் பத்து மார்க்கு, பூஜா வரவர சொன்ன பேச்சே கேட்பதில்லை என்று தொடங்கும் தினசரி புலம்பல்கள் காதில் விழ ஆரம்பிப்பதற்கு முன்பே கணவர் தூங்கிப் போய் விட்டது தெரியாமல் பேசிக் கொண்டிருக்கும் மனைவிகள், இதையெல்லாம் தன்னைப் போன்ற இன்னொரு ஜீவனுடன் மாலை நேர தொலைபேசி அரட்டையில் போலிச் சிரிப்பில் தொலைத்துக் கொள்ள வேண்டியது தான். அது பெரும்பாலும் பரஸ்பர பரிமாற்றமாகத்தான் இருக்கும். முன்னெல்லாம் நிறைய பாட்டு கேட்பேன், நிறைய சினிமா பார்ப்பேன்... இப்பல்லாம் வீட்டுக்கு வந்தால் நேரமேயில்லை என்று சலிக்கும் ஆண்கள் பாடும் கொஞ்சமில்லை.

இதோ இதை எழுத வைத்தவர்... அவரை முகம் நினைவில்லாத போதும், பேராகவாவது தெரியும். பத்தாவது படித்துக் கொண்டிருந்த மகள் காதல் திருமணம் செய்து கொண்டதில் கொஞ்சம் பித்தாகிப் போன அவர் மனைவியைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அங்கே இருக்கவே பிடிக்காமல் மாற்றல் கேட்டு எங்கேயோ உ.பி பக்கம் போனது தெரியும்.

அந்த சர்தார்ஜியும் நினைத்திருக்கலாம்... இன்னும் நாலு வருஷம். சர்வீஸ் முடிந்ததும் ஊரைப் பார்க்கப் போய் விட வேண்டும். சர்சோங் கா சாக் - ம் மக்காய் கி ரொட்டியும் சொந்த வயலில் உட்கார்ந்து சாப்பிட... பழைய தோஸ்துகளோட கும்மாளம் போட... பிள்ளைகளோடு கொஞ்சம் நேரம் செலவிட... ம்ம்ம் பொண்டாட்டி கூடவும் தான்... இப்படி நிறைய இருந்திருக்கலாம். அன்றைக்கு காலையில் கிளம்பிப் போகும் போது 'இந்த நாலு ரொட்டியைக் கட்டிக் கொடுக்க தினமும் லேட் பண்ணறே' என்று சலித்துக் கொண்டு கிளம்பினாரா? இல்லை... 'உன்னை ரொம்ப விரட்டரேனோடி?' என்று கேட்க நினைத்து... சரி சரி அப்புறமா, ராத்திரிக்குப் பார்த்துக்கலாம் என்று அவசரமாய் கிளம்பிப் போனாரா?

சில நேரங்களில் அந்த அப்புறம் எல்லாருக்கும் வாய்ப்பதில்லை தான்.

Saturday, August 20, 2005

அவ்வளவே.

ஸோ... வணக்கம் சொல்ற நேரம் வந்து விட்டது. ஒரு வார ஒளிவட்டம் தந்ததற்கு தமிழ்மணத்திற்கு என் நன்றி.

மினி மாரத்தான் ஓடியது போலிருக்கிறது. முடித்ததில் நிறைவாகவும் இருக்கிறது. வாசித்த, கருத்து சொன்ன நண்பர்களுக்கு நன்றி.

ஐயோ... சுத்தமா என்னால இதுக்கு மேல எதுவும் எழுத முடியலை. அதனால் இத்தோட முடிச்சுக்கறேன். அடுத்த வார இறுதியில் 27-30 வரை சென்னையில் இருக்கிறேன். தயிர்வடையோடு உட்லாண்ஸோ, சிக்கன் டிக்காவோடு பியர் பாரோ( நீங்க அடிங்கப்பா!) எதுவானாலும் சரி... ஒரு குரல் கொடுங்க. நம்ம பசங்க கிட்ட ஒரு மாலை லீவு சொல்லிட்டு வரேன். ரோமிங்கில் இருக்கும் போது கால் போட்டு தாளிச்சாலும் சரின்னு நம்பர் குடுக்கறேன். நண்பர்களுக்கு இல்லாததா?! ஒன்பது எட்டு மூன்று ஒன்று ஏழு எட்டு பூஜ்யம் மூன்று ஒன்று ஆறு (ப்ரகாஷ் குசும்பு!) பளிச்சுன்னு நம்பர் போடறதுக்கு இது தேவலை!

மெயில் அனுப்பினாலும் சரியே. nivedha_1 at yahoo dot com.

அவ்வளவே. நன்றி. வணக்கம்.

Friday, August 19, 2005

அது வேற உலகம்.

ஒரு கறுப்பு நிற Shopper's Stop கவரில் பொதிந்து வைக்கப் பட்டிருக்கும். புத்தக அலமாரியில் சட்டென்று கண்ணில் படாத இடத்தில், அதே சமயம் வேண்டுமென்றால் அதிகம் தேட வைக்காமல் கையில் கிடைப்பதாய். சில நேரம் சந்தோஷத்தைக் கொடுக்கக் கூடியது. சில நேரம் நான் எவ்வளவு மிஸ் பண்ணறேன் என்பதை உணர வைப்பது. அதைப் பிரித்ததில்....

ஒரு பெரிய வெள்ளை நிற சார்ட் பேப்பரை மடித்து செய்தது. முன் பக்கம் ஒரு விளக்கு வரைந்து கலர் செய்யப் பட்டிருக்கிறது. அவள் வயது குழந்தை வரைந்தது என்று நம்ப சிரமமான நேர்த்தியோடு. உள்ளே Happy Diwali & Prosperous New Year என்று எழுதி to Nirmala teacher, From Khyati.

ஒரு வாழ்த்து அட்டை. கடையில் வாங்கியது. மேலே Dear Nirmala teacher. கீழே Siddhanjay Godre, roll no 14!

வளைத்து வளைத்து ஒரு கையெழுத்து. ஸ்டைலாம். You are my best teacher and my best friend. you are good teacher. you teach that song running over, do you love my jesus, and if i, if i that song is very good. you are so good. i cant believe it. please take it. பக்கத்தில் கப்பல் மாதிரி ஒரு கேக் படம் வரைந்திருக்கிறது. பின் பக்கம் From Kanak S. agarwal, vibhusha (பெயர் எழுதி அடிக்கப் பட்டிருக்கிறது. card செய்து கொடுப்பதற்குள் சண்டையாயிடுச்சோ?!) and Avdhi Kabra.

நோட்டு புத்தகத்தின் ஒரு பக்கத்தைக் கிழித்து அவசரமாகச் செய்தது. ஒரு பக்கம் நீல க்ரேயான் பூசி, இன்னொரு பக்கம் பச்சை க்ரேயான். நீல க்ரேயான் மீது ஊதா நிறத்தில் when i close my eyes, i hear the cries, they echo in my mind. he must die to cricify from people so unkind and in my life in every strife, to u i will now .....??? கடைசி வார்த்தை படிக்க முடியவில்லை. கீழே teacher wish you happy diwali.

ட்ராயிங் நோட்டு பக்கம். இரண்டாக மடித்து முன் பக்கம் சிவப்புக் கலர் ஸ்ப்ரே செய்திருக்கிறது. அதில் எட்டு இதயங்கள்! love, joiness, enjoyness, happiness, gifts, sometimes sadness, sometimes full of ஒரு சிரிக்கும் வாய், sometimes of இரண்டு இதயங்கள். உள்ளே... this card brings exclusive wisches to an expecdational fiend like teacher. from Shubham.

எங்கிருந்தோ வெட்டி எடுத்த ஒரு பூ, ஒரு பழக்கூடை, ஒரு ஜன்னல், ஒரு நுரை ததும்பும் கோப்பை, ஒரு நாய்க்குட்டி, ஒரு சிரிக்கும் பெண் குழந்தை கார்ட்டூன், இரண்டு நீள பட்டியில் நட்சத்திரங்கள்... எல்லாவற்றையும் ஒரு பேப்பரில் ஒட்டி, மடித்து, பசை காய்வதற்குள் மடித்ததில் பேப்பரும் ஒட்டிப் போய், அதை
கவனமாக பிய்த்து எடுத்து... கிறுக்கலான கையெழுத்தில் தீபாவளி வாழ்த்து Apoorva Mehtaவிடமிருந்து.

தொடரும் வாழ்த்து அட்டைகள். பெரும்பாலும் அவர்களே செய்தது. முறுவலிக்க வைக்கும் எழுத்துப் பிழைகளோடு. தப்பே இல்லாத அட்டைகளை விட, வெகுளித்தனமான இவை அதிகம் சந்தோஷம் தருகிறது. ஒரு அட்டையில் பெரிய அழகான பார்பி ஸ்டிக்கர். நிச்சயம் அது அவளுக்கு ரொம்ப பிடித்ததாய் இருந்திருக்க வேண்டும். ஆனாலும் அது அவளுடைய டீச்சருக்கு. ஒரே வாசகம் இரண்டு அட்டையில். அதை கொடுக்கும் போது அவர்களுக்குள் சண்டை வந்ததும், ஒருத்தி 'என்னைப் பார்த்து அவள் காப்பி அடித்தாள்' என்று சொன்னதும் தெளிவில்லாமல் நினைவில். முழு சூரியன், இரண்டு மரம், இரண்டு மேகம், பறந்து
கொண்டிருக்கும் நாயின் வாயில் ஒரு இதயம், அதில் happy diwali! தெளிவில்லாமல் ஒரு படம் வரைந்து(மாடர்ன் ஆர்ட்?!), கலர் பூசி கொடுக்கப்பட்ட ஒன்று பெயரில்லாமல். ப்ரோபஷனல் டச்சோடு யாரிடமோ கொடுத்து வரைந்து கீழே கிறுக்கல் கையெழுத்தோடு ஒன்று.

அடிக்கும் நிறத்தில் பாசி மணிகளைக் கோர்த்து ஒரு வளையல், ஒரு மோதிரம், ஒரு கழுத்துச் செய்ன்...பிக்னிக் போயிருந்த போது எல்லாம் என் அளவெடுத்து செய்தது, பையின் அடியில். அடுத்த நாள் 'நீங்க அதை இன்னைக்கு ஸ்கூலுக்கு போட்டுட்டு வருவீங்கன்னு நினைச்சோம்' என்று இடைவேளையில் ஏமாற்றத்தோடு சொன்ன போது சமாதானப் படுத்தியது நன்றாக நினைவிருக்கிறது. தேவைப்படும் என்று எழுதி வைத்திருந்த நான்காம் வகுப்பின் ஐம்பத்தியோரு பேரின் பெயர், தொலைபேசி எண்ணுடன் ஒரு காகிதம். வரிசையாகப் படித்துக் கொண்டே வரும் போது வகுப்பில் அட்டெண்டென்ஸ் எடுத்த நினைவு. ஒன்றிரண்டு பெயருக்கான முகங்கள் நினைவுக்கு வராத போது... இவ்வளவு சீக்கிரம் மறந்துட்டயா? என்ற குற்ற உணர்வு.

சின்ன சின்னதாய் சில வருத்தங்கள், கோபங்கள், இயலாமைகள் இருந்தாலும் தினம் தினமும் என்னை புதிதாய் பிறக்க வைத்த நாட்கள். தரையிலிருந்து இரண்டு இன்ச் உயரத்தில் நடந்து கொண்டிருந்த நாட்கள். எல்லாம் ஒரு கணத்தில் காற்றாய் கறைந்து விட்டது. வேண்டி விரும்பிக் கேட்டாலும் இனி வராது. இவ்வளவு தானா... இன்னும் எதாவது நடந்திருக்குமே... யோசிச்சு பாரு... என்று தேடிப் பார்க்கிறேன். எதாவது செய்து கொண்டிருக்கும் போது சட்டென்று சிலது நினைவுக்கு வருகிறது. இதோ இந்த சந்தனா(chandana) மாதிரி.

ஒரு மாலை பள்ளிக்கூடம் முடிந்து ஹிந்தி ஆசிரியரோடு பேசிக் கொண்டே நடந்து கொண்டிருக்கிறேன். காலியான வராந்தாவின் எதிர்ப்புறத்தில் இருந்து வேகமாக வந்து கொண்டிருக்கிறாள். என்னுடைய முந்தைய வருடத்து மாணவி. எங்களுக்கு நாலடிக்கு முன்னாலிருக்கும் போது ரொம்ப இயல்பாக 'கேஸே ஹோ?' (எப்படியிருக்கே?). அவ்வளவே. பதிலைக்கூட எதிர்பார்க்காமல் கடந்து போய் விட்டாள். கூட வந்து கொண்டிருந்த ஆசிரியருக்கு ஆச்சர்யம் தாங்க முடியவில்லை. கொஞ்சம் எனக்கும். இந்தப் பிள்ளைகள் எப்படி இருக்கிறார்கள் என்று தொடங்கிய அவர் குரல் புலம்பலாகத் தொடர, யோசிக்கும் போது... வரவழைத்துக் கொண்ட மரியாதை, உதட்டிலிருந்து வரும் மாலை வணக்கம்... இதெல்லாம் ஒரு ஆசிரியருக்குச் செய்வது. இது வேற மாதிரி வெளிப்பாடு. இயல்பாக. நட்பாக. அந்தக் குட்டி, அந்த மாலை, அந்த வராந்தா, அந்த கேஸே ஹோ? ... ஒரு நிரந்தர பிம்பமாக்கிக் கொடுத்துப் போயிருக்கிறாள்.

எல்லாருக்குமே நல்லதே என்றும் சொல்ல முடியாது. எப்போதும் கோபமாக, என்ன சொன்னாலும் கேட்க மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கும் பரேஷ் மனதில் என் பிம்பம் என்னவாயிருக்கும் என்று யூகிக்க முடிகிறது. சிரிப்பே இல்லாமல் ஆராயும் கண்களோடு இருக்கும் பள்ளி முதல்வரின் மகள் அவளுடைய எந்த வட்டத்திற்குள்ளும் என்னை அனுமதித்ததில்லை. பாதி கேள்விகளுக்காவது விடை தெரிந்தும் எந்தப் பரிட்சையிலும் நாலு வரிக்கு மேல் எழுத மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்த அபூர்வாவை கடைசி வரை என்னால் எழுத வைக்க முடியவில்லை. வகுப்பில் பரிட்சை எழுதிக் கொண்டிருக்கும் போது, அவசரமோ, பயமோ... உள்ளாடையில் மலம் கழித்ததும், அதைச் சொல்ல இன்னும் அதிகமாக பயந்த நவாஸ¤க்கு நான் சிம்ம
சொப்பனமா தெரியாது. அன்றைக்கு என்னை 'நீ ஒன்னும் எல்லாருக்கும் Pet டீச்சர் இல்லை' என்று சொல்லாமல் சொல்லிப் போனான். வீட்டுக்கு போன் போட்டு, அவன் அம்மா மாற்று ஆடையோடு வந்த போது எனக்கு என்னை பிடிக்கவில்லை.

அவ்வளவுதான். மறுபடியும் எல்லாவற்றையும் கவரிலேயே போட்டு அதே இடத்தில் வைத்தாகிவிட்டது.

'சந்தோஷமா?'

'ரொம்ப'

'சங்கடமொன்னும் இல்லியே?'

'அதும் தான்'

Thursday, August 18, 2005

இறுக்கமாகவேதான் இருக்கப் போகிறோமா?

அவர் எனக்கு அதிகம் பழக்கம் இல்லாத, நெருங்கின உறவினர். அந்த முறை ஊருக்குப் போயிருந்த போது உடல்நலம் சரியில்லாத அவரைப் பார்க்கப் போயிருந்தோம். ஆஸ்பத்திரி அறையைத் தேடிப் போன போது கட்டிலில் உட்கார்ந்திருந்தார். அசப்பில் 'மணல்கயிறு' கிட்டுமணியின் மாமனாரைப் போல இருப்பார். நல்ல உயரம். வயசு காலத்தில் நல்ல சிவப்பாயிருந்திருக்க வேண்டும். அப்போது கொஞ்சம் சோகையாயிருந்தார். அவரை இதற்கு முன் பார்த்த சந்தர்ப்பங்களில் 'வணக்கம், சௌக்கியமா இருக்கீங்களா?' விற்கு மேல் போனதில்லை. அப்போதும் அதையே அசட்டுத்தனமாகக் கேட்டு, அதற்கு அவர் உடம்பிற்கு என்ன என்று விபரமாகச் சொல்லிக் கொண்டிருந்தார். மெல்லிய குரலில் சினேகமாக சொல்லிக் கொண்டு போக, கேட்க ஆசையாயிருந்தது.

அப்போது உள்ளே நுழைந்த அவர் மகள் 'இவளுக்கு புஸ்தகம் வாசிக்கறதுல ரொம்ப ஆர்வம்' என்று அவரிடம் சொல்லி விட்டு, என் பக்கம் திரும்பி 'அய்யா கூட நிறைய வாசிச்சிருக்கார்' என்று சொன்ன பிறகு பேச்சில் ஸ்ருதி சேர ஆரம்பித்தது.

நான், கணவர், அவர், அம்மா (அவர் மனைவி), அவர் மகள் எல்லோரும் சேர, பொன்னியின் செல்வனில் ஆரம்பித்தது. பொன்னியின் செல்வனில் இருந்து அலையோசைக்குப் போன போது கணவரும், அம்மாவும் கழண்டிருந்தனர். அலையோசை நாயகி கடைசியில் ஏரியில் படகு சவாரி போகும் போது அவளுக்குக் கேட்பதாக வரும் அலை சத்தத்தைக் குறிப்பிட்டு 'வாசிக்கும் போது காதுல அலை சத்தம் கேட்டுதுப்பா' என்று அவர் சொன்ன போது 'அட! இப்படி வாசிப்பவரா நீங்க!' என்றிருந்தது.

கல்கியிலிருந்து கொஞ்சம் அங்கே இங்கே என்று அலைந்து பாலகுமாரனுக்கு வரும் போது அவர் மகளும் ஜகா வாங்கி விட்டார். மகளுக்கு அந்தக் கால பாலகுமாரன் பிடிக்காது. சமீபத்திய பாலகுமாரன் எழுத்துகளோடு எனக்கு நெருக்கமில்லை. பெரியவருக்கும் பழைய பாலகுமாரன் எழுத்துகள் மேல் ஒரு மோகம் இருந்தது. நான் நினைவு கூர்ந்ததும் அவர் நினைவு கூர்ந்ததுமாய்... ஒரு நீண்ட சுற்றுக்குப் பிறகு தி.ஜா. முதல் முதலாய் எனக்கு தி.ஜா அறிமுகமானதை நான் சொல்ல, மலர்மஞ்சம், மோக முள், அம்மா வந்தாள்... போதும் என்று நர்ஸ் விரட்டாமல் இருந்திருந்தால் இன்னும் ஓடியிருக்கும்.

இரண்டு மணி நேரத்துக்கு மேல் பேசியிருக்கிறோம். இன்னும் பேச வேண்டியது பாக்கியிருப்பது போல இருந்தது. பேசிய வரையில் திருப்தியாகவும் இருந்தது. விடை பெறும் நேரம், அவரைச் சந்தித்ததில் எவ்வளவு சந்தோஷம் என்பதை உணர்த்த ஸ்வாதீனமாகத் தோண்றியது அழுத்தமான ஒரு கை குலுக்கல் தான். நான் கை நீட்ட, அவர் கண்களில் ஒரு தயக்கம் காட்டி, வணக்கம் சொல்லி அனுப்பிய போது... ஆச்சர்யமாயிருந்தது.

அவரை விட்டு விடலாம். வயதானவர். அந்தக் கால மனிதர். ஆனால் அந்த சந்திப்பு சில கேள்விகளைத் தந்தது. ஒரு ஆண் இன்னொரு ஆணை சந்திக்கும் முதல் சந்திப்பே பெரும்பாலும் கை குலுக்கலில் தான் தொடங்குகிறது. ஆனால் ஒரு பெண் இன்னொரு பெண்ணைச் சந்திக்கும் போது கூட ஒரு தலையசைப்பு... ஒரு ஹலோ அல்லது வணக்கம் மட்டும் ஏன்? முதல் சந்திப்பிலேயே இயல்பாக பெண்களோடு கை குலுக்கும் ஆண்கள் இல்லையென்றும் சொல்ல முடியாது. ஒருவரைப் பார்க்கும் போது இயல்பாக அப்படி எக்ஸ்பிரஸ் செய்யச் செய்வது எது? அவர்கள் உருவமா? உடை தரும் அனுமானமா? இல்லை வைப்ரேஷன்ஸா? சில நேரங்களில் எவ்வளவு பழகினாலும் விலகியே நிற்கச் செய்வது எது? மரியாதை? கலாச்சாரம்? என்னன்னாலும் நீ பெண்(ஆண்), நான் ஆண்(பெண்)?

ஒருவேளை இப்படி மறுக்கப் படலாம் என்பது தான் முக்கியமான காரணமாயிருக்க வேண்டும். ஆனால் இதெல்லாம் அதிகம் 30+ களுக்குத்தான். 30+ களோடுதான். அதற்குக் குறைந்த வயதுக்காரர்கள் இவ்வளவு இறுக்கமில்லை என்று தோண்றுகிறது.

இறுக்கமாகவேதான் இருக்கப் போகிறோமா?

Wednesday, August 17, 2005

விஷ¤ கூப்பிடறார் - 2

ஒரு மணிக்கெல்லாம் வந்து விடுங்கள். ஒன்றரைக்குக் கிளம்பினால் எட்டு மணிக்குள் சிட்டி டூரை முடித்து விடலாம் என்று மேனேஜர் சொல்லியிருந்தார். நாங்கள் திரும்பி வரும் போதே இரண்டாகியிருந்தது. அவசர அவசரமாக சாப்பிட்டு விட்டு கிளம்பினோம். நமக்கு இந்த சிட்டி டூரெல்லாம் சரிப்படாது. ஆனால் முன்னே பின்னே தெரியாத ஊரில் அதுதான் தேவலை. ரொம்ப விலாவரியாக இல்லாமல் சுவாரசியமாக இருந்த இரண்டை மட்டும் சொல்கிறேன்.

முதலாவது காலபைரவர் கோவில். நீண்ட சந்துக்குள் சின்னதாய் ஒரு கோவில். உருட்டின கண்களும் முறுக்கின மீசையுமாய் பைரவர். ஆனாலும் உதட்டில் சிரிப்பிருந்ததாக எனக்கு ஒரு தோணல். சன்னிதியைச் சுற்றி நாலடிக்கு ஒரு நடை. அதில் நல்ல கருப்பில் ஒரு பயமூட்டும் மாடு. உருவத்திற்கு கொஞ்சமும்
பொருத்தமில்லாமல் சாதுவாய் சுற்றிச் சுற்றி வருகிறது. ஜனங்களும் தங்கள் பாட்டுக்கு. நடையை ஒட்டி உயரமாய் ஒரு திண்ணை. திண்ணையில் வரிசையாய் கையில் மயிலிறகும், வாயில் மந்திரமுமாய்... திருஷ்டி கழிக்கிறார்கள் போலிருந்தது. இளைஞர்கள், ஒரு இளம் பெண், ஒரு குடுகுடுக்கிழவர் என்ற அந்த வரிசையின் சுவாரசியம், ஒரு ஏழெட்டு வயது சிறுவன். குழந்தைத்தனமே இன்னும் மாறவில்லை... அது திருஷ்டி கழிக்கப் போகிறதாம்! அந்த வாண்டு கன்னத்தைக் கிள்ள வேண்டும் போலிருந்தது. அவரோ 'நான் ஆன் ட்யூட்டி' ன்னு ரொம்ப சீரியஸாய் இருந்ததில் அந்த முயற்சியைக் கைவிட வேண்டியதாயிற்று.

அடுத்தது சாரநாத். காசியிலிருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தூரமிருக்கும். வண்டியை விட்டு இறங்கினதுமே வந்து சேர்ந்த கைடைப் பார்த்ததுமே எனக்கு சந்தோஷம். சொந்த சரக்கை அள்ளித் தெளிப்பார்கள் என்றாலும் கைடு இல்லாமல் பார்க்கும் எந்த இடமும் திருப்தியே தருவதில்லை. சாரநாத், காசிக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாமல் படு சுத்தமாக இருக்கிறது. கோவிலுக்கு அருகில் சாரநாத் ஸ்தூபி பிரம்மாண்டமாய் நிற்கிறது. இரண்டாயிரத்து இருநூற்றி எழுபது ஆண்டு பழமையானது. புத்தர் தனது முதல் உரையை இங்கே நிகழ்த்தியதற்கு அடையாளமாக நிர்மாணிக்கப் பட்டிருக்கிறது.

கோவிலுக்கு மற்றொரு பக்கம் அழகான வேலைப்பாடுகளோடு ஒரு மணி. மணியில் ஏதோ ஸ்கிரிப்டில் எழுதியிருக்கிறது. அதிகம் எடையில்லை... வெறும் மூவாயிரம் கிலோதான். ஜெர்மனியிலிருந்து செய்து வரப்பட்டதாம். ஒரிஜினல் போதி மரத்துக் கிளை இலங்கையில் நடப்பட்டு அங்கிருந்து கொண்டு வந்த கிளையில் முளைத்த போதி மரமொன்று இங்கே பரவி நிற்கிறது. அதற்கடியில் புத்தரையும், அவருடைய ஐந்து சீடர்களையும் இரண்டாள் உயர சிலைகளாக செய்து வைத்திருக்கிறார்கள். சிலைகளில் வேலைப்பாடு எதுவும் இல்லாமல் சிமெண்ட் சிலைகள் போலிருந்தது உறுத்தியது. கோவிலின் உள்ளே தங்க முலாம் பூசின புத்தர். சுவரெல்லாம் அழகான ஓவியங்கள். புகைப்படம் எடுக்கக் கூடாது என்ற கெடிபிடியெல்லாம் கிடையாது. உண்டியலில் ஐந்து ரூபாய் போட்டு ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம்.

மற்றபடி, பரந்து கிடக்கும் பனாரஸ் ஹிந்து யுனிவர்சிடி, அதற்குள்ளே ஒரு பிர்லா மந்திர், மந்திர் வாசலில் திருத்தமாக அமைந்த மதன் மோஹன் மாளவியா சிலை, அழகான, விலை மலிவான டெரகோட்டா சிற்பங்கள், மரங்கள் அணைகட்டிய அகலமான ரோடுகள்... வெளியே வந்து ஊருக்குள் நுழைந்தால் அதே சேறும் சகதியும். பராமரிப்பில்லாத குறுகலான சாலைகள். ஒழுங்கில்லாத போக்குவரத்து.

இது தவிரவும் இன்னும் சில கோவில்கள், நேரமாகிப் போனதால் கதவடைந்து போன அருங்காட்சியகம்... ஒரு நாளுக்கு இத்தனை எனக்கு ஓவர் டோஸ். அதனால் பெரிதாக கவனத்தைக் கவரவில்லை.

அன்றைக்கு ராத்திரியே விஸ்வநாதரை(நம்ம விஷ¤) தரிசிக்க சத்திர மேனேஜர் விரட்டினதில் ஒன்பதரை மணிக்கு கோவிலுக்குப் போய்ச் சேர்ந்தோம். அயோத்தியா குண்டு வெடிப்பு தந்த சூட்டில் கோவிலுக்குள் பக்தர்களை விட காக்கிச் சட்டைகள் அதிகம். செல்பேசி உள்ளே அனுமதிக்க மறுத்ததால் நான் மட்டும் வெளியே. கணவர் சமத்தாய் அறையிலேயே வைத்து வந்திருக்கிறார்.

காத்திருந்த நேரத்தில் கவனித்தது... சுமாரான ரேங்கில் இருக்கும் ஒரு அதிகாரி சில பெண் காக்கிச் சட்டைகளை சொந்த பிரதாபங்களைச் சொல்லி கடுப்படித்துக் கொண்டிருந்தார். அவர்களும் ஓரக்கண்ணில் கிண்டலோடு, ரசிப்பது போல பாவ்லா காட்டிக் கொண்டிருந்தார்கள். கொஞ்சம் தள்ளி தனியாக உட்கார்ந்திருந்த ஒரு காக்கிச் சட்டை 'இதுக்காக இப்படி தனியா கொட்டுக் கொட்டுன்னு உட்காந்திருக்கியா? என்கிட்ட கொடுத்துட்டு போயேன்'னு ஜாடை மாடையாக சொல்லிப் பார்த்தார். எனக்கொன்னும் பிரச்னையில்லை என்ற என் பதிலை
கொஞ்சமும் ரசிக்கவில்லை. எல்லோரும் கோவிலைப் பூட்டும் பதினொரு மணிக்காக சலிப்போடு காத்திருந்தார்கள்.

கணவர் வந்ததும் செல்பேசியை அவரிடம் ஒப்படைத்து விட்டு ஒரு வழியாக உள்ளே போக முடிந்தது. இருட்டில் கோவிலின் பிரம்மாண்டம் பயம் தந்தது. எந்த பராமரிப்பும் எங்கேயும் நடப்பது போல தெரியவில்லை. கோவிலுக்கு உள்ளேயும் நிறைய காக்கிச் சட்டைகள். சிலர் படுத்துக் கொண்டு. சிலர் உலாவிக் கொண்டு. யூனிபார்மில் பத்மாசனம் போட்டு மந்திரம் சொல்லிக் கொண்டிருந்த பெண் போலீஸ் திரும்பிப் பார்க்க வைத்தார்.

பத்து மணி வாக்கிலும் கூட்டத்திற்குக் குறைவில்லை. விஸ்வநாதருக்கு அபிஷேகம் முடிந்து அலங்காரம் நடந்து கொண்டிருந்தது. கூடை கூடையாய் பூக்கள் வந்து குவிந்து கொண்டிருக்க, நேர்த்தியான அலங்காரம். நான்கு பக்கமும் வாசல். நான்கிலும் சரியான நெரிசல். வியர்வையும், தலை எண்ணைச் சிக்கும் போட்டி போட்டுத் தாக்கியதில் சீக்கிரமே விலக வேண்டியதாயிற்று. ஒருபக்கச் சுவரில் வெள்ளைப் பளிங்கில் மீசை முறுக்கி இருந்த சிற்பமும், சுற்றிலும் இருந்த மற்றவைகளையும் சரியாக கவனிக்க முடியாமல் போன குறையிருக்கிறது.

வெளியே ஒரு பார்வதி சன்னதி. பக்கத்தில் போய் நின்றதுமே கர்ம சிரத்தையாய் மந்திரம் ஓதி பத்து ரூபாய் வசூல். என்ன ஓதினார், யாருக்கு... எதுவும் தெரியாது. அன்னபூரணி எங்கே என்றதற்கு இதோ என்று கைகாட்டிய இடத்தில் பார்த்த அன்னபூரணி சுவற்றோடு சேர்ந்த விக்ரஹம். கையில் இருக்கும் அன்ன கிண்ணம்
எங்கே என்ற கேள்விக்கு 'அதெல்லாம் புடவைக்கு உள்ளே இருக்கிறது' என்ற கறாரான பதில். ஐந்து ரூபாய் தட்டில் போட்டதும் புடவையை விலகி கிண்ணம் காட்டினார். கரண்டியைக் காட்ட இன்னொரு ஐந்து ரூபாய். நமட்டுச் சிரிப்போடு நானும், இதெல்லாம் சகஜம்ப்பா சிரிப்போடு அவரும் விடை பெற்றோம்!

மழை, கூட்டம், காக்கிச் சட்டை கெடுபிடி, அர்ச்சகர் இடையூறு... இதெல்லாம் இல்லாத இன்னொரு நாளில்(அப்படி ஒரு நாள் இருக்கிறதா என்ன?) சந்திப்போம் என்று விஸ்வநாதரிடம் சொல்லி விட்டு வந்திருக்கிறேன். கங்கைக் கரையில் எதிர்பார்த்திருந்த சாதுக்களையும் சந்யாசிகளையும் நாங்கள் போன மொட்டை
வெயிலில் பார்க்க முடியவில்லை. மாலை ஏழு மணிக்கு நடக்கும் கங்கை பூஜை போட்டில் இருந்து பார்க்க ரொம்ப அழகாயிருக்கும் என்று போட்காரர் வேறு தூபம் போட்டிருந்தார். வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் காசியிலிருந்து போட்டிலேயே கொல்கத்தா வரை செல்கிறார்களாம். ஒரு வாரம் பிடிக்கும் அந்தப் பயணங்களை
நாம் தான் அனுபவிப்பதில்லை.

மந்திரமும் முழுக்குமாய் சாதுக்கள் நிறைந்த 'காட்'களின் சித்திரம் ஒன்று எண்ணத்தில் ஓடுகிறது. ஹரித்துவார் கங்கா பூஜாவை அனுபவித்து எழுதியிருந்த ஒரு நாவல் தந்த சித்திரமும் கூட. தனியாக ஒருதரம் காசிக்கு போகப் போறேன் என்று இப்போதே கணவரை அரிக்க ஆரம்பித்திருக்கிறேன். தாங்க முடியாமல் தலையாட்டி விடுவார் என்று நினைக்கிறேன். பார்க்கலாம்.

Tuesday, August 16, 2005

வாங்க, விஷ¤ கூப்பிடறார்!

ஐந்து வருடங்களுக்கு முன்னால் ஒரிஸ்ஸாவில் இருந்த போது 'அங்கயிருந்து பக்கமாமே? போயிட்டு வரலாமா?' என்று ஒரு கேள்வி வந்தது. அப்போது 'எங்களுக்கு இப்போ வேண்டாமே' என்று சுலபமாக ஒதுக்க முடிந்தது. நாட்களின் வேகத்தை விட வீட்டுப் பெரியவர்களின் தளர்ச்சியின் வேகம் அதிகமாகப் போவது உணர்ந்ததில் இப்போது மறுக்க முடியவில்லை தான். ஐந்து வருடத்தில் நானும் தான் வளர்ந்திருக்கிறேனே! இடையில் படித்த பாலகுமாரனின் 'புருஷவதம்' கூட மறுக்காததற்கு ஒரு காரணம். இரவல் வாங்கி இரண்டு நாளில் கிடைத்த நேரத்தில் படித்த அந்த புத்தகம் சொன்னதே... அது காசி யாத்திரை. இன்றைக்கு ரயில் பெட்டியின் ஏஸி இதத்தில் செல்லும் இதெல்லாம் வெறும் இன்னொரு பயணம் மட்டுமே.

இப்போது புரிந்திருக்கும். யார் விஷ¤... எங்கே கூப்பிடறார் என்று. காசி யாத்திரைன்னு தலைப்பு போட்டு ஆரம்பித்திருந்தால், அம்மா தாயே... ஆளை விடு! ன்னு தலைப்போடவே ஓடிப் போயிருப்பீங்களே? இனி, தொடருவதும் இங்கேயே பை பை சொல்லிட்டு போவதும் உங்கள் விருப்பம்.

கொல்கத்தாவிற்கு வந்து சிரம பரிகாரம் செய்து கொண்ட வீட்டுப் பெரியவர்களோடு ஒரு சனிக்கிழமை இரவு தொடங்கிய பயணம். நேர் வண்டியில் இடம் கிடைக்காததால் முகல்சராய் - ல் இறங்கிப் போனோம். ரயில் நிலையத்தில் புதிதாக வந்து இறங்குபவர்களை சூழ்ந்து வதம் செய்யும் கும்பல் இங்கேயும் தன் கைவரிசையைக் காட்டியது. ஒரு வழியாக ஒரு சுமோவைப் பேசி முடித்த பின்னும் விடாது விரட்டிய கும்பலின் கடைசிக் குரல் 'வேலையில்லாத் திண்டாட்டம் தான் வேறென்ன?'.

மழை சகதி, அழுக்கு ஆடைகள், பக்கா கிராமத்தனம்... இதை ரசிக்கப் போறேனா, விலகி ஒதுங்கப் போறேனா என்று நானே கேட்டுக் கொண்டேன். முகல்சராயிலிருந்து பதினெட்டு கிலோமீட்டர் பயணத்தில் காசி எப்படி இருக்கப் போகிறது என்று ஒரு கணிப்பு வந்திருந்தது. வழியெல்லாம் தேங்கிக் கிடக்கும் குப்பைக் குவியல், மழை புண்ணியத்தில் மணம் பரப்பிக் கொண்டிருந்தது. கதவும் ஜன்னலும் பிடுங்கி எடுக்கப் பட்டிருந்த ஒரு அறை குப்பையால் நிரம்பி உச்சக்கட்ட நாற்றமெடுத்துக் கொண்டிருக்க, அதற்குள்ளே உட்கார்ந்து எதையோ தேடிக் கொண்டிருந்த இரண்டு உருவங்களை சுமோ இன்னும் கொஞ்சம் வேகமாகப் போயிருந்தால் நான் பார்க்காமலே கடந்திருக்கலாம்.

அரைமணி நேரத்தில் ஊருக்குள் நுழைந்து விட்டிருந்தோம். கோயம்பத்தூரிலிருந்து கொண்டு வந்திருந்த சிபாரிசு கடிதம் சொன்ன சத்திரத்தில் தான் நம்ம ஊர் சாப்பாடு கிடைக்கும் என்று ஆரம்பத்திலிருந்து வற்புறுத்தியதால் அதைத் தேட இன்னொரு அரைமணி நேரம் போனது. சத்திரத்திற்குள் நுழைந்ததுமே தமிழ்நாட்டுக்கு வந்து விட்ட உணர்வு. நானும் கணவரும் சூழ்நிலைக்குப் பழக முயற்சிக்க, வீட்டுப் பெரியவர்களுக்கு ஆஹா! என்ற ஆசுவாசம். குறைந்த வாடகை, குறைந்த பராமரிப்பு... மோசமில்லை.

வேண்டுமா வேண்டாமா என்று யோசிப்பதற்குள் சத்திர மேனேஜரே நம்முடைய ப்ரோக்ராம்களை முடிவு செய்து விடுகிறார். 'நாளைக்கு காலையில கிளம்பிடுவீங்களா? இப்ப போட்டில் போய் கங்கையில் குளித்துவிட்டு வந்து விடுங்கள், மத்யானம் சாப்பிட்டு விட்டு சிட்டி டூரில் இந்த லிஸ்டில் இருக்கும் இடங்களைப் பார்த்து விடுங்கள். திரும்பி வந்ததும் ஸ்வாமி தரிசனம். காலையில் நீங்கள் கிளம்பிடலாம்'. இப்படி ஒரு பக்கா ப்ளான், அதுவும் ஜெட் வேகத்தில் கவர் செய்வதாகச் சொல்லும் போது, அத்தனை தலைகளும் ஆடியது, என்னுடயதைத் தவிர. இங்கேயுமா இந்த சிட்டி டூர் என்ற அலுப்பு. வேறு வழியிருக்கவில்லை.

சுவற்றோரமா ஒரு அடி அகலத்தில் நீளமாக ஒரு பந்தி ஜமக்காளம். அதில் காலை மடக்கி உட்கார்ந்து, இலையில் இட்லியோடு கோவித்துக் கொண்டு ஓடும் சாம்பாரைக் காப்பாற்றிச் சாப்பிட கொஞ்சம் சிரமமாக இருந்தது. உடம்பைக் குறைன்னு உள்ளேயிருந்து ஒரு குரல். கீழே உட்கார்றது பிரச்னையில்லை... வீட்ல தட்டை கையிலே ஏந்தியே சாப்பிட்டுப் பழகிப் போனதில்...! என்று இழுத்ததையும், தெரியும் தெரியும் என்று குரல் தலையாட்டியதையும் நீங்கள் கவனிக்கவில்லைதானே?

டிபன் முடிச்சு வெளியே வந்ததும், குளியலெல்லாம் கங்கையில் பார்த்துக்கோங்கன்னு மேனேஜர் ஆலோசனை சொல்லி ஒரு போன் போட, போட் ஓட்டுபவர் பத்து நிமிடத்தில் சத்திரத்தில் ஆஜர். நெட்வொர்க் எல்லாம் ஜோர்தான். மாற்றுத் துணியோடு('எங்கே மாற்ற?... அதுக்கெல்லாம் அங்கே இடம் இருக்கு மேடம்...' கடைசி வரை அப்படி ஒரு இடம் கண்ணில் படவே இல்லை!) கிளம்பினோம். இதோ இங்கேதான் என்று நடந்து கொண்டேஏஏஏ இருந்தார். ராத்திரி மழையின் சேறு வழியெல்லாம். கணவர் முன்னால், நம்ம மக்கள் நடுவில், கடைசியில் நான் என்று ஊர்வலம் ஒரு வழியாக கங்கைக் கரையை அடைந்தது. கசமுசாவென்று நிற்கும் படகுகளையெல்லாம் ஏறிக் கடந்து முன்னால் நிற்கும் படகுக்கு போய்ச் சேரும் வரை கொஞ்சம் டென்ஷன். ஆறு பேரையும் பேலன்ஸ் செய்து உட்கார வைத்து விட்டு, படகை எடுக்கும் முன்னால் நாங்கள் நான்கு பேர் இருக்கிறோம், பயப்படாதீர்கள் என்று சொல்லி, ஓ! பயப்பட வேண்டுமோ என்று யோசிக்க வைத்தார்.

ஒரு மாதிரி நிதானப் படுத்திக் கொண்டு கங்கையைப் பார்த்த போது, செக்கச் செவேலென்று மழை புண்ணியத்தில் குழம்பாட்டம் ஓடிக் கொண்டிருந்தது. நல்ல அகலம்... தெரிந்தது. ஆழம் யூகிக்க முடிந்தது. சுழித்துக் கொண்டு ஓடுவது என்றால் என்ன என்று இப்போது தான் பார்க்கக் கிடைத்தது. கிளம்பும் போது தண்ணீர் ஓட்டத்திற்கு எதிர் பயணம். நான்கு பேர் எதற்கு என்று அப்போது புரிந்தது. படகு பாட்டுக்கு தன் இஷ்டத்திற்கு திரும்ப எத்தனிக்கிறது. ஒவ்வொரு முறையும் அதன் பாதைக்குத் திருப்ப அவர்கள் பாடு, பார்க்க கஷ்டம். கூடவே பயம்.

வழியெல்லாம் படித்துறைகள். ghat என்று சொல்கிறார்கள். ஒவ்வொன்றிற்கும் ஒரு பெயர். கரையை ஒட்டி வரிசையாக ஒவ்வொரு மாநில ராஜாக்கள் கட்டிய மெஹல்களின் மிச்சங்கள். அவர்கள் காலத்தில் அங்கே தங்கி கங்கா ஸ்நானம் செய்திருக்க வேண்டும். இப்போது பெரும்பாலும் பராமரிப்பில்லாமல் கிடக்கிறது. சிலது சாதுக்களால் உபயோகப் படுத்தப் படுகிறது. ஏதோ ஒரு ராஜாவின் மெஹலில், இரண்டாவது மாடியிலிருந்து கீழே வந்து குளித்து விட்டுப் போக ஆட்களால் இழுக்கப் பட்ட 'லிப்ட்' இருந்ததற்கான தடயம் மட்டும் மிஞ்சியிருக்கிறது.

ஒவ்வொரு காட்(ghat)டிலும் சிறப்பம்சம் சொல்லி, தண்ணீரை தலையில் தெளித்துக் கொள்ளச் சொல்கிறார். ஒரு மாதிரி இழுத்துக் கொண்டு போகும் யுபி ஹிந்தியில் பாதி புரிகிறது, பாதி நாமே யூகித்துக் கொள்ள வேண்டியது தான். எல்லா 'காட்'டிலும் குளியல் ஆனந்தமாக நடக்கிறது. லோக்கல் மன்மத ராஜாக்கள் தைத்த கோவணம் உடுத்தி, பெண்கள் கடந்து போகும் போது மேலே வந்து கட்டுடலைக் காட்டிப் போனார்கள். அந்தக் கோவணம், உடுத்தினால் இப்படித்தான் இருக்குமா என்று தெரிந்து கொண்டேன்!!!

கொஞ்ச தூரம் போனதும் ஒரு படகிற்குப் பக்கத்தில் ஒரு துணி மூட்டை மிதந்து கொண்டிருந்தது. அது என்ன என்று கேட்டதற்கு, 'யாராவது சாதுவின் பிணமாயிருக்கும். இங்கே சாதுக்கள் இறந்தால் புதைப்பதோ எரிப்பதோ இல்லை. ஒரு கல்லோடு கட்டி கங்கையில் போட்டு விடுவார்கள். கட்டின கயறு மீன் அரித்து கழண்டு போனால் இப்படித்தான் மிதக்கும்' என்றார். அதற்குப் பிறகு அந்தப் பக்கம் திரும்பவேயில்லை.

ஹரிச்சந்திர காட் - டில் வரிசையாக பிணங்கள் எரிந்து கொண்டிருந்தது. அதற்கு முந்தைய காட்- டில் குளிக்க இறங்கிக் கொள்ளச் சொன்னார். இந்தத் தண்ணீரிலா? இதுவா கங்கா ஸ்நானம்! என்ற கேள்வியெல்லாம் தண்ணீருக்குள் இறங்கும் வரைக்கும் தான். உள்ளே இறங்கினதும் ஆற்றுக்கே உள்ள குதூகலம் தொற்றிக் கொள்கிறது. சில்லென்று நூறு கைகளால் அணைத்துக் கொள்ளும் தண்ணீரை விட்டு விலகவே மனசில்லை, போட்காரர் அடுத்த சவாரி பார்க்கணும் என்று விரட்ட ஆரம்பிக்கும் வரை. தர்ப்பனம் என்ற பெயரில் புரியாமல் திரும்பத் திரும்பச் சொன்ன நான்கு மந்திரங்களோடு கங்கா ஸ்நானம் முடிந்தது.

ஆனால் பயணம் தொடர்கிறது. விஷ¤வைப் பார்க்க வேண்டாமா?

பி.கு: ஆமா இப்படியா கவுப்பாங்க?! போன பதிவு கேள்விக்கு ஒரே ஒரு முயற்சி! தேவையா உனக்குன்னு என்னையே கேட்டுட்டு பதில் சொல்லறேன். அதைச் சொன்னது பாலகுமாரனின் 'மெர்க்குரிப் பூக்கள்' சியாமளி.

எத்தனை முறை காதல் கொண்டேன்?

கவிதை வரிகளால்
காதல் விதைத்தவனிடம்

இறகாய் குரலால்
தீண்டிச் சென்றவனிடம்

தனித்த வேளையில்
துணையாய் நின்றவனிடம்

தவித்த பொழுதில்
தூணாய் சுமந்தவனிடம்

சிறகை விரித்துப்
பறக்கச் செய்தவனிடம்

சிந்தனைச் சிதறலில்
சிலிர்க்க வைத்தவனிடம்

அழுத கணங்களில்
அமைதி காத்தவனிடம்

அத்தனையும் மெல்ல
மறந்திட செய்தவனிடம்....

துளிகளாய் நனைத்ததெல்லாம்
தேடலைத்தான் தூண்டியது!

மொத்தமாய் நனைய வேண்டும்
அருவியாய் ஒருவன் வேண்டும்.

இந்தக் கவிதை 'புத்தகப் புழு'வில் பாரா வைத்த காதல் கவிதைப் போட்டியில் எழுதியது. செல்வராகவன் 'காதல் கொண்டேன்' படத் தலைப்பை இந்த கவிதையில் இன்ஸ்பயர் ஆகித்தான் வைத்திருப்பாரோ என்று எனக்கு ஒரு சந்தேகம்! (நெனைப்புத்தான்).

ஆனா இந்தக் கவிதைக்கு இன்ஸ்பிரேஷன் யார் தெரியுமா?

'... ஓட்டைச் செம்புல குளிக்கிற மாதிரி இவரோட குடித்தனம் பண்றேன். தடேர்னு விழற அருவி மாதிரி நீ கிடைச்சப்போ அருவியை விட்டுட்டு வெளியே வர முடியலை....'

யார் சொன்னது? கண்டு புடிங்க பாக்கலாம். க்ளு தேவையிருக்குமா என்ன?

Monday, August 15, 2005

நீ என்ன கலர்?

அவன்... வயது பத்தொன்பது. அந்த வயதிற்கே உரிய பெண்கள், காதல், சினிமா, ம்யூஸிக்... இவற்றிலிருந்து விலகி இருப்பவன். ப்ராணிக் ஹீலிங் கற்றுக் கொள்கிறேன். மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். ஆர்ட் ஆப் லிவிங் சேர்ந்திருக்கேன். நான் டான்ஸ் ஆடினேன் என்றால் நம்புவீர்களா? இன்றைக்கு ஆடினேன். சந்தோஷமாக இருக்கிறேன். நான் எல்லோரையும் போல குடும்பம், மனைவி என்று வாழப் படைக்கப் பட்டவன் இல்லை என்பவன்.

எனக்கு பிராண்டட் சட்டைகள் தான் பிடித்திருக்கிறது. எம்டிவி, விடிவி ஸோ குட், என்ன சொல்றீங்க? என்று கேட்பவன். இந்திய கிரிக்கெட் டீம் பிடிக்காது. இந்தியாவில் நிறைய மாற்றம் வர வேண்டும் என்பவன். ஆனால் அதில் நம்பிக்கை அதிகம் இல்லாதவன். பகத் சிங் பட கடைசிக் காட்சியில் கண்ணீரை அடக்க முடியாமல் தவித்தவன். காந்தி அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தால் பகத் சிங்கை தூக்கில் போட்டிருக்க மாட்டார்களா? என்று வேதனைப் பட்டவன். ஸ்வதேஷ் ஒரு நல்ல படம். பார்த்ததில் எனக்குள் பாதிப்பு இருக்கிறது என்பவன். வயது பதினாறு.

வயது இருபத்தி ஐந்து. பிஸியோ தெரபிஸ்ட். அதுவும் இன்னும் ஆறு மாதங்களுக்குத்தான். அதற்குப் பிறகு முழுநேர மக்கள் சேவை என்று நண்பர்கள் தினத்தன்று தொலைபேசியில் அறிமுகமானவன் சொல்லிப் போகிறான்.

பொய் சொல்லப் போவதில்லை, ஏமாற்றப் போவதில்லை. நான் சொல்வதை கவனமாக யோசித்துப் பார். வேண்டாம் என்றால் என்னை கன்வின்ஸ் செய். கேட்டுக் கொள்கிறேன் என்கிறாள். கலாச்சார கோடுகள்... தாண்டுவதில் தப்பில்லை என்கிறாள். எல்லாம் மாறும், மாறத்தான் போகிறது என்கிறாள்.

என் வாழ்க்கை. நான் வாழ்கிறேன். எனக்கு என் தொப்புளில் வளையம் போடப் பிடித்திருக்கிறது. அதற்கு யாரிடம் அனுமதி கேட்க வேண்டும் என்கிறாள். கல்லூரி விடுதி வாழ்க்கை என் வாழ்க்கை. நான் விரும்பிய வண்ணம் வாழ்கிறேன். ஊருக்குப் போகும் போது அவர்கள் விரும்பும் மகளாக இருக்கிறேன். ஆமாம் எனக்கு இரண்டு முகம் தான். என்ன தப்பு? என்று கேட்கிறாள்.

ஒரிஸ்ஸாவிலிருந்து பெங்களூருக்குப் படிக்க வந்தவன். கால் சென்டரில் பகுதி நேர வேலை. என்னுடைய செலவை நான் பார்த்துக் கொள்கிறேன். வயது பதினெட்டாகிவிட்டது, இன்னுமா அப்பாவை எதிர்பார்த்திருப்பது என்கிறான்.

படிய வாரிய தலைமுடி. கொஞ்சமாய் பூ. பாந்தமாக உடுத்திய சல்வாரோடு தான் வீட்டிலிருந்து கிளம்புகிறாள். half sex தப்பில்லை என்கிறாள். அதென்ன half sex என்பதை உங்கள் யூகத்திற்கு விட்டு விடுகிறேன்.

வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டை. பத்து பேர். ஒரு கார், நான்கு பைக்கில் அணிவகுத்துப் போகிறார்கள், நண்பர்கள் தினத்தன்று 'காப்பி டே'க்கு.

கல்லூரிக்குள் நுழைகிறார்கள். ஏழெட்டு பேர்களாக. நடுவிலிருப்பவன் தாதா போல நினைத்துக் கொள்கிறான். அங்கே இருக்கும் ஒரு பெண்ணை முத்தமிட்டு களேபரத்தில் நழுவி விடுகிறான். கொல்கத்தா செய்தித்தாள் மூல அறிமுகம் ஆனவன்.

நான்கு கல்லூரி மாணவர்கள். ஷாப்பிங் மாலில் கண்ணில் பட்ட பெங்காலி நடிகையை கேலி செய்து, காரில் துரத்தி, வழிமறித்து மிரட்டி விட்டுப் போகிறார்கள். எல்லோரும் பனிரெண்டாவது வகுப்பு மாணவர்கள்.

என் பிள்ளைகள் மற்றும் செய்தித்தாள் மூலம் அறிமுகமாகும் அடுத்த தலைமுறை சாம்பிள்கள். சிவப்பு, பச்சை, மஞ்சள், நீலம், கறுப்பு, வெள்ளை என்ற ஆறே வண்ண கலர் பென்சில்கள். நான் படிக்க ஆரம்பித்த போது பனிரெண்டு கலர் பாக்ஸ். இப்போது விரிந்து கிடக்கும் கலர் பேலட்... பார்க்க ஆச்சர்யம், கொஞ்சம் பெருமை, அதிர்ச்சி, பயம், சந்தோஷம்... எல்லாமும் தான்.