Saturday, March 23, 2019

ஆக்ரா & ஜெய்ப்பூர்

ரொம்ப வருஷமாக தாஜ்மஹாலை முழு நிலவொளியில் பார்க்க வேண்டும் என்றொரு ஆசை. அதைப் பற்றிய ஒரு சித்திரம் மனதில் வரித்துக் கொண்டு அந்த ஆசையை உயிரோடு வைத்திருந்தேன். அதற்காக ஆக்ராவின் தங்குமிடங்களையெல்லாம் அலசி, எங்கேயிருந்து பார்த்தால் நன்றாக தெரியக்கூடும் என்று பெரிய ஒரு ஆராய்ச்சியும் செய்திருந்தேன். வீட்டில் ஒன்றிரண்டு முறை சொன்ன போது ஒரு ஐடியா என்ற வகையில் எல்லாருக்கும் பிடித்திருந்தாலும் யாருக்கும் ஆர்வமில்லாதிருந்தது. எல்லா தேனிலவு லொக்கேஷன்களுக்கும் நாங்கள் குடும்பத்தோடு போகிறோம் என்ற சலிப்பு பிள்ளைகளுக்கு இருந்தது. அதனாலேயேயும் கூட இந்த ஐடியா விலை போகவில்லை. வழக்கம் போல நான் மட்டும் தனியாகப் போகிறேன் என்றும் சொல்லிப் பார்த்தேன். அதை நான் முடிவாகச் சொல்லவில்லை போலும். அதற்கான முயற்சியை நானும் எடுக்கவில்லை. போய்க் கொள் என்றும் சொல்லவில்லை.

இப்படியாக போன நவம்பரில் ஒரு முறை மறுபடியும் அந்த முழுநிலவு நாட்களைத் தேடும் போது எதேச்சையாக அது இந்த வருட திருமண நாள் அன்றே வருவது தெரிந்தது. இப்போது சும்மாவாலும் அதில் ஒரு ரொமாண்டிக் மசாலா வேறு சேர்ந்து கொள்ள சரி போகலாமென்று முடிவு செய்தோம். முதல் மூன்று நாள் ஜெய்ப்பூரிலும், இரண்டாவது மூன்று நாள் ஆக்ராவிலும் என்று முடிவானது.

நாங்கள் வந்து இறங்கிய போது ஜெய்ப்பூரில் மாலை நான்கு மணிக்கே குளிரிருந்தது. ஜெய்ப்பூரில் தங்குமிடம் தேடும் போது மகள், அங்கயும் போய் ஏன் ஹோட்டல்? எதாவது ஹெரிட்டேஜ் ஹோம் பார்க்கலாமல்ல? என்று சொன்னதால் ஒரு குட்டி அரண்மனையை தேர்ந்தெடுத்தேன். எல்லா அறைகளுக்கும் யானை வாடகை, ஒட்டக வாடகையிருக்க எனக்குக் கொடுத்த அறை மட்டும் என் பட்ஜெட்டிலேயே இருந்தது. எதாவது மூலையில் சாமான் போடும் அறையாயிருக்குமோ என்று வேறு யோசனையாயிருந்தது. அடுத்த நாளே அரண்மணையில் இருந்து மெயில் வந்தது. உங்கள் அறை தவறுதலாக புக் ஆகியிருக்கிறது. அன்றைய தினத்தில் ஒரு கல்யாணத்திற்காக முழு அரண்மைனையும் வாடகைக்கு எடுத்திருப்பதாக. மறுபடியும் முதலில் இருந்து தேடி கிடைத்ததில் புக் செய்திருந்தேன். இறங்கியதும் கூகிள் மேப் 'புரானி பஸ்தி' என்று காண்பித்த போது கொஞ்சம் கலக்கமாக இருந்தது. எதிர்பார்த்தது போலவே நல்ல நெரிசல் மார்க்கெட் வழியாகப் போய் சாக்கடை சந்துகளைக் கடந்து ஒரு ஹவேலி வாசலில் விட்டது.

ரிசப்ஷனைத் தேடவே இரண்டு கட்டிடங்களைத் தாண்ட வேண்டியிருந்தது. தடுமாறிக் கொண்டே ஒரு வயதானவர் பெல் அடித்து யாரையோ கூப்பிட்டுக் காத்திருந்தார். அவருடைய காலடியில் பூனைக்குட்டி போல ஒரு சின்ன ஹீட்டர் உறுமிக் கொண்டிருந்தது. நெஞ்சில் இடிக்கும் ஒன்றரை அடி உயரப்படிகளை ஒன்றொன்றாக ஏறி அறையை அடைந்தால் அந்த 'மஹாராஜா ஸ்வீட்' ஏமாற்றவில்லை. அறைக்குள்ளே இன்னும் படிகள், வேறு வேறு தளங்கள். ராஜாவிற்கு தனி, ராணிக்கு தனியாக இரண்டு குளியலறைகள். பெரும்பாலும் வெளிநாட்டு பயணிகளால் நிறைந்திருப்பதால் எல்லாம் படுசுத்தம். மாலை நேரத் தேநீருக்கு மொட்டை மாடியில் காத்திருக்கச் சொன்னார்கள். இன்னும் கொஞ்சம் நெஞ்சை இடிக்கும்  ஒன்றரை அடி படிகளை ஏறினால் பக்கத்திலெல்லாம் வீடுகள், மொட்டை மாடிகள், குப்பை கூளம். தூரத்தில் பெரியதோர் மலை மேல் ஒரு பெரிய கோட்டை. கலவையான உணர்வு.

மாலை ஊரைக் கொஞ்சம் சுற்றும் போது ஆல்பர்ட் ஹால் என்னும் அருங்காட்சியகத்தை வெளியில் இருந்தே பார்த்தோம். அருங்காட்சியக கட்டிடமே ஒரு மாஸ்டர் பீஸ்தான். நூற்றுச் சொச்ச வருஷம் பழையது. ஆனாலும் நல்ல பராமரிப்பில் இருந்தது. மாலை வேளையில் அலங்கார விளக்கொளியில் பார்க்கத்தான் போயிருந்தோம். மாலை இயற்கை வெளிச்சத்தில் அழகாயிருந்ததா இல்லை வண்ண விளக்கிலே அழகாயிருந்ததா என்பதை என்னால் சொல்ல முடியவில்லை. சாப்பாட்டிற்கு எல்லோரும் பரிந்துரைத்த ஸ்பைஸ் கோர்ட். Dal bhati churma ராஜஸ்தானுடைய பிரதான உணவு. இது அசைவ உணவகமானதால இங்கே kheema bhati விசேஷமாம். வழக்கமாக கோலி உருண்டை சைஸ்ஸில் இருக்கும் என்பதால் அதையும் இன்னும் வேறயும் ஆர்டர் செய்து காத்திருந்தால் இரணடு கிரிக்கெட் பந்தை சேர்த்த அளவில் ஒரு bhati வீதமாக இரண்டு. உள்ளே பூராவும் கீமா நிறைத்து. அதைச் சாப்பிட்டு முடிக்கவே பெரும்பாடானது. Foodgasmic! இராஜஸ்தான் போனால் இதைத் தவற விட வேண்டாம். சைவர்களுக்கு Dal bhati. அதை LMBல் இன்னொரு நாள் சாப்பிட்டு பாஸ் மார்க் போட்டோம்.

அடுத்த நாள் காலையில் ஹவா மெஹலை வெளியில் இருந்தே பார்த்துவிட்டு ஜெய்கர் கோட்டைக்குப் போகிற வழியில் ஜல் மெஹலையும் வெளியில் இருந்தே பார்த்துவிட்டு, அதை நினைச்சாலும் உள்ளே போய் பார்க்க முடியாது, அனுமதியில்லை, போய்ச் சேர்ந்தோம். ராஜாவின் மாளிகையாம். கீழே ஒரு பழைய மாளிகையில் இருந்து இங்கே குடிபெயர்ந்தார்களாம். பழைய மாளிகை கொஞ்சம் பெரிய வீடாட்டம் இருந்தது. அதிலிருந்து இவ்வளவு பெரிய மாளிகைக்கு குடிபெயர்ந்த காரணம் தெரியவில்லை. இயற்கை வண்ணங்களில் வேலைபாடுகள், ஷீஷ் மஹல் என்னும் கண்ணாடி மாளிகை என்று ஒரு மாளைகைக்கான எல்லா விஷயங்களோடு இருந்தது. ஒரு காளி கோவிலும் இருக்கிறது. ராஜா எப்போதும் வெற்றி பெற காளி கனவில் வந்து சொன்னதால்  தினம் ஒரு நரபலி கொடுத்துக் கொண்டிருந்ததாகவும் ஒரு கட்டத்திற்கு மேல் மக்கள் எதிர்க்க விலங்கு பலியானதாகவும், அதுவும் இப்போது மறைவாக என்றும் சொன்னார்.

அதற்குப் பிறகு இன்னொரு கோட்டை, பெரியதோர் பீரங்கி, ஒரு சிறிய அருங்காட்சியகம்... நேரப் பற்றாக்குறையால் எல்லாம் ஒரு அவசரகதியில் பார்த்துவிட்டு கிளம்பினோம். அடுத்த நாள் ஒரு சிறிய ஷாப்பிங்கை முடித்து புஷ்கர் பயணம். நாங்கள் போய்ச் சேர்ந்த அந்த மாலை நேரத்தில் புஷ்கர் ஏரியின் அழகும் அமைதியும் வார்த்தைகளில் சொல்ல இயலாதது. என்னை விட்டிருந்தால் அங்கேயே இருந்திருப்பேன். கடிகாரத்தோடு ஓடும் துணைவரோடான வாழ்க்கையில் இவ்வளவுதான் முடிகிறது. ஒரே பிரம்மாவின் கோவிலைப் பார்த்துவிட்டுக் கிளம்பினோம். புஷ்கர் வெளிநாட்டவர்களால் நிரம்பி வழிகிறது. அவர்களால் அந்த இடமே வேறு நிறத்தில் வேறு அதிர்வலைகளில் இருப்பதை உணர முடிந்தது.

அடுத்த நாள் மதியம் அஜ்மேர் திடீரென்று பயணத்திட்டத்தில் நுழைந்தது. ஓட்டுனர் ஊருக்கு வெளியே ஒரு இடத்தில் எங்களை ஒரு ஆட்டோகாரரிடம் ஒப்படைத்து விட்டார். கூட்ட நெரிசலாயிருக்கும், ஆட்டோதான் போகும் என்று. காசி சந்துகளை நினைவுறுத்தும் குறுகிய பாதைகளில் போய் ஒரு இடத்தில் இறக்கி விட்டார். அங்கிருந்து வழி காண்பித்து விட்டு அவரும் நின்று விட்டார். இறக்கி விடும் போது துப்பட்டா வாங்கி தலையை மூடிக் கொள்ளச் சொன்னார்கள். நாலு நாளாக துப்பட்டா இல்லாமல் தான் எல்லா இடங்களுக்கும் போயிருந்தேன். அதைச் சொன்ன விதமோ என்னவோ உடனே வாங்கி தலையோடு மூடிக் கொள்ளத் தோன்றியது. தர்க்காவிற்குள் நுழையும் போதே எங்கிருந்தோ வந்த ஷெர்வானி அணிந்த பெரியவர் ஒருவர் வழி காட்டிக் கூட்டிப் போனார். அவசரமாக நுழைந்து வாங்கிப் போயிருந்த சாத்தரை (chaddar) கொடுக்கச் சொன்னார். ரெண்டு பேரையும் தனித்தனியாக காணிக்கைக் கொடுக்கச் சொன்னார். அதே வேகத்தில் வெளியே கூட்டி வந்து விட்டு விட்டார். என்ன பார்த்தோமென்று ரெண்டு பேருக்கும் எதுவும் புரியவில்லை. என்னை கொஞ்ச நேரம் நிற்கச் சொல்லிவிட்டு கணவர் மட்டும் மறுபடியும் போய்ப் பார்த்து விட்டு வந்தார். இரண்டு நிமிடம் வெளியே நின்றிருந்திருப்பேன். கூட்டத்தில் தனித்து தெரிவது போலிருந்தது. ஒரு சூபியின் தர்க்காவிற்குள் என்னால் அந்த கொஞ்ச நேரம் இயல்பாக நிற்க முடியவில்லை. எதாவது கோவிலைப் பார்க்க விரும்பி அவர்கள் வந்தாலும் இப்படித்தான் இருக்கும். இது தந்த தாக்கம் வலுவானதாயிருந்தது. வழிபாட்டுத்தலங்களின் எளிமையை எல்லாம் தொலைத்துவிட்டோம்.

அடுத்த நாள் தான் திருமண நாள். காலையில் கிளம்பி நாள் பூராவும் பயணித்து ஆக்ரா போய் சேர்ந்தோம். ராஜஸ்தான் எல்லை கடந்து உத்திர பிரதேசத்துக்குள் நுழையும் போதே வித்தியாசம் தெரிந்தது. RTO வரி கட்ட நின்ற நேரத்தில் டீ குடிக்கப் போன இடத்தில் ஒரு கயிற்றுக் கட்டிலில் படுத்து உருண்டு கொண்டிருந்த ஆண் காண்பித்தார் உத்திர பிரதேச ஆண்களின் சுபாவத்தை. பொது இடத்தில் அவருடைய அதீத அலட்சிய மனப்பாங்கு ஒரு சோற்றுப் பதம். அங்கிருந்து நிறைய இடங்களில் பார்க்க முடிந்தது.

மாலை ஆக்ரா போய் சேர்ந்தோம். தாஜ்மஹாலை எல்லா நிறத்திலும் எல்லா நேரத்திலும் எல்லா கோணத்திலும் பார்க்க வேண்டுமென்றிருந்தேன். ரிசப்ஷனிலேயே இந்த நேரம் போக முடியாதென்றார்கள். அவர்களுடைய மொட்டை மாடியிலிருந்து தான் பார்க்க வசதி செய்திருக்கிறார்கள். அங்கே போன போது ஏற்கனவே பனி படரத் தொடங்கியிருந்தது. இரவு உணவும் நிலாவும் தாஜ்மஹாலும் என்ற கற்பனையை அங்கே குலைத்தார்கள். தாஜ்மஹாலைச் சுற்றி குறிப்பிட்ட தூரம் வரை எங்கும் இரவில் விளக்கு கிடையாது. அதனால் தெரியாது. பெரும்பாலான நாட்களில் பனி மூட்டத்தில் பகலிலேயே தெரிவதில்லை என்றார்கள். ஆகவே இரவுணவு, நிலவு மட்டுமிருந்தது, மாலையில் கண்ட இடத்தில் தாஜ்மஹாலின் சுவடு கூட இல்லை.

காலை பத்து மணிக்கு மென் குளிர் நிறைத்திருந்த வேளையில் பார்த்தோம். பெரிய உணர்வெழுச்சியெல்லாம் வராமல் அங்கிருந்த கூட்டம் பார்த்துக் கொண்டது. மனிதர்கள் குறைவாயிருக்கும் நேரம் எப்போதாயிருக்கும்? அப்போது தனியாக வந்து பார்க்க வேண்டும். என்னுடைய எல்லா நேரங்களிலும் பார்க்கும் கணக்குகளையெல்லாம் ஓட்டுனர், ரெண்டு மணி நேரத்துக்கு மேல அங்க என்ன பாக்க இருக்கு மேடம்? மதுரா பக்கத்துல இருக்கு போகலாமேன்னு புது ப்ரோக்ராம் சேர்த்து விட்டார். மதுரா என்ன்னுடைய 'ஏழு நாள் எனக்கே எனக்காய்' லிஸ்ட்டில் வேறு இருந்ததால் சரி என்பதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை.

நான் அறிந்த மதுரா, ஒன்று கிருஷ்ணர் பிறந்த ஊர், இரண்டாவது விதவைகளையெல்லாம் அங்கே கொண்டு வந்து விட்டு விடுவார்கள் என்பது. இரண்டாவது விஷயம் இந்தக் காலத்தில் யார் இதெல்லாம் செய்கிறார்கள் என்பதால் மங்கிப் போயிருந்தது. கிருஷ்ணருக்காக மட்டும் போய் வர ஆசையிருந்தது. ஊருக்குள் நுழையும் போதே டூரிஸ்ட் வண்டிகளைக் கண்டதும் கைடு கூட்டம் தயாராகக் காத்திருந்து பாய்கிறார்கள். இங்கே ஒரு படி மேலே. காரோடு கூடவே ஓடி வருகிறார்கள். லேசாக தலையசைப்பது போல் தோன்றினால் போதும் ஏறி உள்ளே உட்கார்ந்துமாயிற்று.

அக்கம் பக்கத்தில் கோவிலின் சுவடே தெரியாத ஓர் இடத்தில் வண்டியை நிறுத்தச் சொல்லி ஒரு நீண்ட சந்தில் கூட்டிக் கொண்டு போனார். ஜெயில் அறைக்குள் பிறந்த கிருஷ்ணர் கோவில் நாலா பக்கமும் விரிந்து பளப்பளா கோவிலாகியிருக்கிறது. அந்த அறையை மட்டும் அப்படியே வைத்திருக்கிறார்கள். நிஜமோ, இல்லையோ அங்கிருக்கும் போது நிஜமாகவே கிருஷ்ணர் பிறந்த இடத்தில் இருக்கிறோம் என்ற உணர்வு வந்தது. 
 
பக்கத்திலேயே ஒரு மசூதி. ஆனால் அங்கே தினப்படி தொழுகையேதும் இல்லையாம். ஆனாலும் ஏகப்பட்ட போலீஸ் கெடுபிடி. அத்தோடு கிளம்பியிருக்கணும். கைடு கிருஷ்ணர் வளர்ந்த கோகுலத்தைப் பார்க்க வேண்டாமா? இங்கேயிருந்து பனிரெண்டு கிலோ மீட்டர்தான் என்று காட்டிய ஆசையில் மயங்கினது நான்தான். வழியிலே நமக்குத் தெரிந்த கதையையே அவர் அவர் வர்ஷனாக கொஞ்சம் சொன்னார். கோகுலத்தில் இறங்கினதும் இதோட என் ஏரியா முடிந்தது என்று நம்மை வேறொருவரிடம் ஒப்படைத்து விட்டார். அவர் கோகுலத்தின் பெருமையை, இங்கேதான் இது அங்கே அது என்று சின்னச் சின்ன விஷயங்களையும் விலாவரியாகச் சொல்லத் தொடங்கினார். இங்கே வருபவர்கள் சந்தோஷமாக வர வேண்டும் சந்தோஷமாகத் திரும்பிப் போக வேண்டும் என்று ஒவ்வொரு இடத்திலும் சந்தோஷமாக சிரிக்கச் சொன்னார். திடீரென்று சந்தோஷமாகச் சிரிப்பது எப்படி என்று எங்கள் இருவருக்கும் தெரியவில்லை. அங்கங்கே சின்னச் சின்னதாக எதையாவது சொல்லி திரும்பச் சொல்லச் சொன்னார். நாங்கள் இரண்டு பேரும் சிரத்தையோடு சொல்லி, சிரத்தையோடு சந்தோஷமாக சிரிக்கவும் செய்தோம். அங்கே இங்கே என்று சுற்றி கடைசிலில் கிருஷ்ணர் வளர்ந்த வீட்டுக்குக் கூட்டி வந்தார். அங்கேயும் அதே கிளிப்பிள்ளைகளாகி அவர் சொன்னதைச் சொன்னோம். மெதுவாக எங்களை அங்கிருந்த பூசாரிக்கு கை மாற்றி விட்டார். அவரும் திரையிட்டு மறைத்து வைத்திருந்த அறை வாசலில் உட்கார வைத்து நந்தகோபரிடமிருந்து நேற்று வரையான சம்பவ விவரிப்புகளுக்குப் பிறகு அங்கே நடக்கும் நிர்வாகம் பூராவும் ட்ரஸ்ட் கவனித்துக் கொள்கிறது. நந்தகோபர் மாதிரி இப்போது நீங்கள் வந்திருக்கிறீர்கள், மிக எளிய இந்த தானம், மீடியமாக இந்த தானம், உன்னதமான அந்த இதில் நீங்கள் இதைத் தேர்ந்தெடுக்கலாம்... இப்படியாக கோகுலத்திற்குள் நுழைந்ததிலிருந்து பேசிப்பேசியே அந்த இடத்துற்கு நம்மைக் கூட்டி வருகிறார்கள். வரிசையாக நம்மைத் திரும்பத் திரும்பச் சொல்லச் சொல்லும் விஷயத்திற்க்குள் நான் இந்த தானம் செய்கிறேன் என்று நம்மை நம்மை அறியாமலே சொல்ல வைக்கிறார்கள். அந்த இடத்தில் தான் மொத்தப் பிரியமும் வடிந்து ஏமாற்றமாயிருந்தது. அவர்கள் சொன்ன கோஷாலாவில் பத்து மாடுகளுக்கு மேலில்லை. பராமரிப்பதாகச் சொல்லும் விதவைகளும் யாருமில்லை. காலை ஆறு மணிக்கு வந்தால் பத்து நாற்பது பேரைப் பார்க்கலாமென்றார். திரும்பிக் காருக்கு வந்த பின் ஓட்டுனர் அதிகம் காசெதும் பிடுங்கலையே என்று கேட்டார். உண்மையாகவே தானம் செய்யும் மனதையும் கலைத்துப் போடுகிறோம் என்று தெரியாமலிருக்கிறார்கள். அதைப் பற்றியெல்லாம் யாருக்கென்ன கவலை? அன்றைக்கு அவர் அவருடைய காரியத்தைச் சரியாச் செய்தார். நமக்குத்தான்...

அடுத்த நாள் திரும்ப ஜெய்ப்பூர், சென்னை, வீடு.

என்னிக்காவது பொழுது போகாத போது நினைத்துக் கொள்ள அனுபவங்களை சேர்த்திக் கொள்ள வேண்டுமென்பது என் எண்ணம். இப்படி எழுதிச் சேமிக்காதது பெரிதும் ஞாபகத்திலிருப்பதில்லை. அதனாலேயே இடையில் விட்டுப் போய் மறுபடியும் இந்த வேலை.





Thursday, March 14, 2019

நிகழ்கிறோம்

எங்கிருந்தும் வருகிறாய்
புரட்டும் என் பக்கங்களிலிருந்து
சிறகடித்துக் கிளம்புகிறாய்
உன் கற்பனைக்கப்பால்
நிகழுமென் நாட்களில்
காரிய நேர்த்திகளாய்
துலங்குகிறாய்
நல்லதோர் குழம்பின் ருசியில்
குமிட்டி அடுப்பும்
பின் கொசுவமுமாய்
என்னுள் நிகழ்த்திச் செல்கிறாய்
ஓவ்வொரு சிறகாய்
சூடிக்கொள்ளுமென்
தொப்பியின் இழைகளாயிருக்கிறாய்
தலைமுறைகள் தாண்டித் தொடர்கிறாய்
நைராவின் புத்தகங்களிலிருந்து
நீலப் பட்டாம் பூச்சியாய்
நானும் சிறகடிப்பேன். 
 


Tuesday, February 05, 2019

கொல்கத்தா 2019


கொல்கத்தாவை விட்டு வந்து பனிரெண்டு வருடமாகிறது. இடையில் ஒரு முறை போயிருந்திருக்கலாம். நினைவிலில்லை. ஏர்ப்போர்ட் முதற்க்கொண்டு மாறியிருக்கிறது. ராஜார்காட் என்னும் ஒரு பொட்டல்வெளியில் பயணித்து சால்ட்லேக் போய்ச் சேர்வோம். இப்போது அந்த பொட்டல் வெளியையே காணவில்லை. டாக்ஸி பார்க் ஸ்ட்ரீட் கொண்டு சேர்த்த வழியை எனக்கு அடையாளமே தெரியவில்லை. ஆனால் கொல்கத்தாவிற்கே உரித்தான சந்து பொந்துகளில் மாற்றமில்லை. அதிலிருந்து புறப்படும் மனிதர்களிலும். அந்த தெருவோரக் கடைகளில் பத்து ரூபாய்க்கு காலைச் சிற்றுண்டியை இப்போதும் முடித்துவிட முடியும் போலத்தான் இருக்கிறது. புதிதாக ஏகப்பட்ட ப்ளைஓவர்கள். உயரமான தளத்தில் பயணிப்பதால் எங்கிருந்து எங்கே செல்கிறோம் என்பது பிடிபடவேயில்லை. ஒரு கட்டத்திற்கு மேல் தெரிந்து கொள்வதை விட்டு விட்டேன்.

Oxford Bookstore
பார்க் ஸ்ட்ரீட் அப்படியே இருக்கிறது. Flury'sம் மற்ற பெரும்பாலான கடைகளும். ஆக்ஸ்போர்ட் புத்தகக் கடையும். தெருவோர புத்தகக் கடைகளில் அதே புத்தகம் பத்து சதவிகித தள்ளுபடியில். அதே இடம், அதே வரிசை, அதே கடைக்காரருமாய் இருக்கலாம். சென்னையில் மூடிப் போன புத்தகக் கடையெல்லாம் ஞாபகம் வந்தது. வாங்குகிறோமோ இல்லையோ, ஞாயிற்றுக்கிழமைகளில் நுங்கம்பாக்கம் லேண்ட்மார்க்கிற்கு தவறாமல் போய்க் கொண்டிருந்தோம். 
 
எங்களுடைய வழக்கமான Bar - B - Que வின் மேஜை நாற்காலிகள் கூட இடம் மாறவில்லை. காலம் அப்படியே நின்று போனது போலிருக்கிறது. 
 
 
காளிகாட்டில் நட்ட நடுவில் புதிதாக கட்டிடம் ஏதோ எழும்புகிறது. மற்றபடி அதே துரத்தல், நெரிசல். முதல்முதலாக ஒரு மழை நாளின் சகதியில் காளிகாட்டிற்கு வந்திருந்ததும் இதுவா காளி கோவில் என்று சலித்துக் கொண்டதும் நினைவுக்கு வருகிறது. காசியைப் போலவே முதலில் சேராமல் பின்னாடி அது ஒரேயடியாக சேர்ந்து போனதில் காளிகாட் இரண்டாவது. அதே விரட்டல், நகையெல்லாம் பத்திரம் பத்திரம்ன்னு சொல்லிச் சொல்லி இழுக்காத குறையாக கூட்டிப் போய் யாரிடமோ ஒப்படைத்து அவர் நாலு பேரைக் கேட்டு ரெண்டு மந்திரம் சொல்லி, இரண்டாயிரம் உண்டியலில் போடு என்று மிரட்டி இருபது ரூபாய்க்கு திட்டி விரட்டி விட்டதில் காளியைப் பார்த்தேனா என்று நினைவில்லை. பலி களம் ரத்தச் சகதியாயிருந்தது. ஒரு இளம் ஆட்டின் கூக்குரல் மட்டும் காதில் கேட்டது. பார்க்கத் தோணவில்லை.
 
காளிகாட்டில்
முன்னெப்போதோ இப்படி சுற்றி வந்த போது நிர்மல் ஹ்ருதய் கண்ணில் பட்டு உள்ளேயும் போயிருந்தேன். அந்த ஆழத்திற்குள் இருந்து என்னை மீட்டெடுக்க திராணியில்லை. நிறைய விஷயங்களுக்கு கண்களை மூடி, காதுகளை அடைத்துக் கொள்கிறேன், இப்போதெல்லாம்.

இந்தப் புறம் ஒரு குஜராத்திக்காரர் மேற்பார்வையில் ஒரு பெரிய பாத்திரம் நிறைய சாப்பாடும் ஒரு வாளி காய்கறிக் குழம்பும் விநியோகமாகிக் கொண்டிருந்தது. பத்து வருடமாக ஒவ்வொரு வாரமும் செய்கிறாராம். எல்லா நேரமும் யாராவது எதாவது கொடுத்துக் கொண்டிருப்பார்கள் என்றார். பத்தடி தள்ளி ஒரு பெண் அட்டைப் பெட்டியில் பிஸ்கெட் பாக்கெட்களை விநியோகித்துக் கொண்டிருந்தார். சென்னையில் இதைச் செய்யும் ஆர்வம் வந்திருக்கிறது.



Bar-B-Q
கொல்கத்தா கிளம்புவதற்கு முன் பார்க்க ஆரம்பித்திருந்த Four more shots pleaseக்கான ப்ளெக்ஸ் ஊரெல்லாம். ப்ளைஓவரின் ஒவ்வோரு தூணுக்கும் ஒவ்வொரு கேரக்டரின் பிரம்மாண்டமான போஸ்டர்கள், ஒரு டெலிவிஷன் சீரீஸ்க்காக! சென்னையில் அதைப் பற்றி மூச்சு கூட விட்ட மாதிரி தெரியவில்லை. ஒரு கொல்கத்தாவாசிக்கு ஜீரணமாவது சென்னைக்காகாது என்பது தெரிந்தது. எதுக்கு வம்பென்று விட்டிருக்கலாம்!

பின்னே எதற்காக கொல்கத்தா போயிருந்தேனோ அந்த வெட்டிவேலைகளையெல்லாம் முடித்து மறுநாள் சால்ட் லேக்கிற்க்கு. இரண்டு வருஷம் எங்கள் வீடாயிருந்த வீட்டு பால்கனியை கீழேயிருந்தே பார்த்துவிட்டு கிளம்பியாயிற்று.


Friday, December 29, 2017

வெறுமை

அலையடிக்கும் வெறுமையை
இருகைகளில் சுமந்தலைகிறேன்
வாசலில் குதித்தாடும் முயலின்
கால்களில் சிக்கிக் கொள்கிறது
ஓடை மீன்களுக்கு உணவாயளித்து
விரைவிழப்பதை காணாது செல்கிறேன்
எரவாணப் பட்டத்தில்
கொஞ்சம் தீற்றிப் போகிறேன்
மொத்தமும் உரைந்திருக்கிறது
கண்களை மூடி
காதடைத்துக் கொள்கிறேன்
கையிருப்பு குறையும் தோறும்
முற்றிலும் வெறுக்கும்
முது கிழவனைக் கண்டு
வெறுமை கொள்கிறேன்

Friday, October 27, 2017

மரணம்

படிப்பித்ததெல்லாம் நிஜமென்றால்
இந்நேரம் அறிந்திருப்பாள்
அகால மரணமடைந்த மகன்
கடைசி கணம் நினைத்ததென்னவென்று
காணாமலே போன இன்னொருவனை
பார்த்திருக்கலாம்
அல்லாத போது
தகவலறிந்திருப்பாள்
முன்னால் சென்ற கணவன்
அவளின் தன்னிச்சையான முடிவுகளில்
சலித்திருப்பான்
பின் வரும் வரிசை
தெரிந்திருப்பாள்
தன் நிறங்களை
அதில் தன் பங்களிப்பை
புரிந்திருப்பாள்
படிப்பித்ததெல்லாம் நிஜமில்லையென்று
சிரித்துமிருப்பாள்.

Saturday, October 07, 2017

இன்னொரு பயணம்

கண் முன்னே விரிந்து பரவுகிறது
கடலை நினைவுறுத்தும்
அலையடிக்கும் பெரும் பொருக்கு
துணையாய் உணர்த்தியதெல்லாம்
நழுவி விலகிட
முழுத்தனியாய்

முன்னகர்வதைத் தவிர
வழியேதுமில்லை

தாண்டிக் கடந்தபின்
நீட்டப்படும் பட்டியலில்
நிறைய இழந்திருப்பேன்
சிலவற்றைப் பெற்றிருப்பேன்

வழக்கம் போல
பெற்றது உறுதியாயும்
இழந்தது காதலுமாயிருக்கும்.

Sunday, July 02, 2017

கதவு


அந்தக் கதவைத் திறந்து
வெளி வரும் போது
கண்ணில் படும் முதல் மனிதரைக் கண்டு
மலர்ந்து சிரிப்போம்
அவரும் இது போன்ற தேடலில் இருக்கக் கூடும்
சிறு பேச்சுகளும் பரஸ்பர அறிமுகங்களும் நிகழ்ந்தேறட்டும்
இசைவுப் புள்ளிகளைத் தெரிவு செய்து கொள்வோம்
ஆச்சரியங்கள் நிகழ்ந்தேறட்டும்
தேடல்கள் தொடரட்டும்
விலகும் புள்ளியை அடையாளம் காண்போம்
மெல்லணைப்பில் விலகி நடக்கத் தொடங்குவோம்
ஞாபகங்களாய் எஞ்சுவோம்
நமக்கேயான சிறு புன்னகையாய்
ஒளிரும் கண்களாய்
முத்தமாக
தீரா மோகமாய்
நிறைத்து விலகுவோம்
தோளில் சுமந்தலைவோம்
தோள் பை நிறைந்து வழியட்டும்
யாராவது வழிப்போக்கரிடம்
திறந்து கடைப்பரத்துவோம்
வேண்டுவோர் பொறுக்கிச் செல்லட்டும்
நதியாய் பெருகி வழிவோம்

Friday, May 12, 2017

மலர்மஞ்சம்

காட்டூர் வீட்டில் ஒரு அட்டாலி இருந்தது. மாமாங்கத்திற்கு ஒரு முறை யாராவது ஏறி எதையாவது தேடுவார்கள். பெரும்பாலும் என் அக்காக்கள் அல்லது எங்கள் தாத்தா. எனக்கு ஏணி என்றால் பயம். ஏறும் போது படிகளுக்கு நடுவில் கால் விட்டு கீழே விழுந்து விடுவேன் என்று சர்வ நிச்சயமாக நம்பினேன். அதனால் யாராவது ஏறும் போது கீழே காத்திருக்கும் கூட்டத்தில் தான் எப்போதும் இருப்பேன். எதைத் தேடச் சொல்லி அனுப்பினார்களோ, அது பெரும்பாலும் பாட்டியாகத்தான் இருக்கும், இன்ன இடத்தில் இதுக்குள்ளே இருக்கும் என்று உரக்கச் சொல்ல மேலே இருப்பவர்கள் அதை தேடு தேடென்று தேடுவது எப்போதும் நடக்கும். ஏறியதே இல்லையாததால் அட்டாலி எப்போதும் எனக்கு ஒரு மனச் சித்திரம் தான்.

அந்த அட்டாலி ஒரு முறை மொத்தமாக காலியாகி ஒரு ஆறு மாத இடைவெளியில் மறுபடியும் நிறப்பப் பட்டது. வீட்டை காலி செய்து விட்டு குடியிருந்த வீட்டையே சொந்தமாக்கிக் கொண்டு திரும்பியிருந்தோம். அன்றைக்கு அம்மாவுக்காகவா அல்லது சும்மாவாச்சும் பார்க்கலாமென்றோ கௌரி அட்டாலியில் ஏற முடிவு செய்தாள்.

கௌரி என் பதின்ம வயது தோழி. வீட்டின் பின் போர்ஷனில் குடியிருந்தார்கள். ஒரே வயது. எதிர் எதிர் ரசனைகள், சுபாவக்காரர்கள். கமலஹாசனும் பாலகுமாரனும் இல்லையென்றால் விரோதிகளாயிருப்போம். ஆனாலும் ஒரு கட்டத்திற்கு மேல் எண்ணங்களாலும் செயல்களாலும் ஒன்றாகிவிட்டிருந்தோம். எனக்கு எஸ்பிபி, அவளுக்கு ஜேசுதாஸ். நான் சகலத்திற்கும் பயப்படுவேன். அவளுக்கு பயமே கிடையாது. கடைக்கோ கல்யாணத்துக்கோ போக வேண்டி வந்தால் அப்பா அம்மா பக்கத்து வீட்டில் சொல்லி விட்டுப் போவார்கள், பொண்ணு வீட்ல தனியா இருக்கா, கொஞ்சம் பாத்துக்கோங்க, என்று. அவள் அம்மாவும் அண்ணனும் இலங்கைக்கு இரண்டு மாதம் போயிருந்த போது தானே சமைத்து சாப்பிட்டுக் கொண்டு அவர்களுடைய போர்ஷனில் தனியாக இருந்தாள். இதுவெல்லாம் 82- 83ல் என் யோசனையிலேயே உதித்திருக்காது. எல்லா விஷயத்திலும் தெளிவாக உறுதியா இருப்பாள். எதையாவது செய்ய வேண்டும் என்று நினைத்தால் எப்படியும் நடத்தி விடுவாள். அன்றைக்கு அவளுக்கு அட்டாலியைப் பார்க்க வேண்டும் என்று இருந்தது. அதுவும் தான் மட்டுமல்ல, நானும் வர வேண்டும் என்று. என்னுடைய எந்த சமாதானங்களும் செல்லவில்லை. நான் பார்த்துக் கொள்கிறேன், நீ ஏறித்தான் ஆக வேண்டுமென்று பிடிவாதம் பிடித்தாள். எப்போதும் போல அப்போதும் அவள் சொன்னதுதான் நடந்தது. ஒவ்வொரு படிக்கும் வீல் வீலென்று அலறி ஒரு வழியாக மேலே ஏறிவிட்டோம். படபடப்பு அடங்கவே எனக்கு கொஞ்ச நேரமானது.

அதற்குப் பிறகு ஆரம்பித்தோம் எங்கள் தேடல் வேட்டையை. எங்கள் தாத்தா காலகாலமாக சேர்த்தி வைத்திருந்த பைப்புகள், சைக்கிள் டயர்கள், அடைசல்கள், பாட்டியின் அண்டா குண்டாவெல்லாம் விலக்கிய போது அது கிடைத்தது. மரத்தில் செய்து கறுப்பு வண்ணம் பூசி நான்கு பக்கமும் குமிழ் வைத்த ஒரு அடி நீளமும் அதற்கும் குறைவான அகலமும் உள்ள ஒரு தொட்டில். கோவில்களில் ஊஞ்சல் சேவைக்கு உபயோகப் படுத்துவது. அது எப்படி அங்கே என்று யாருக்கும் தெரியவில்லை. அதற்குள் ஒரு புத்தகம். மலர்மஞ்சம் என்றிருந்தது. பழுத்து மஞ்சள் நிறமாகி லேசாக மொடமொடக்கத் தொடங்கியிருந்தது. முதல் பக்கத்தில் தாத்தாவின் பெயரும் ஏதோ தேதியும் இருந்ததாக ஞாபகம்.

அப்போதெல்லாம் ரெண்டு பேருக்கும் பாலகுமாரன் பித்து பிடித்திருந்தது என்றாலும் புத்தகமென்று எது கிடைத்தாலும் வாசித்திருந்தோம். ஆசிரியர் யாரென்றெல்லாம் பார்க்கவில்லை. வாசிப்போமென்று கொண்டு வந்தோம். நாலைந்து நாட்களுக்குள் ரெண்டு பேரும் வாசித்து விட்டோம். கௌரிக்கு எப்படி இருந்தது என்று நினைவில்லை. நான் பாலியாகி மஞ்சக் கொல்லையில் குடித்தனம் நடத்த ஆரம்பித்து விட்டிருந்தேன். ராமையா அப்பா கையை பிடித்துக் கொண்டு ஊர் சுற்றினேன். தஞ்சாவூருக்கு ரயில் ஏறினோம். தூக்கனாங்குருவி கூட்டை ரசித்ததும், டாக்டர் மாமா, அவர் பேரன், நாட்டியமாடியதுமாய் கதையோடு வாழத் தொடங்கியிருந்தேன். கதையில் அவள் சென்னைக்குப் போன பிறகு பாலியும் நானும் வேறாகியிருந்தோம். ஆனாலும் அவளுடைய ஆசைகளும் அலைக்கழிப்புகளும் எனதாயிருந்தது. அவளுடைய காதலையும் தடுமாற்றங்களையும் நானும் சுமந்திருந்தேன். டாக்டர் மாமா பேரன் ரோஜா மாலையைப் போட்ட போது என் கழுத்தில் குறுகுறுத்தது.

முப்பத்திச் சொச்சம் வருடங்கள் கழித்து இப்போது நினைக்கும் போதும் அதை லேசாக உணர முடிகிறது. கொண்டாடித் தீர்த்திருந்தேன். பின்னாளில் அது திஜாவின் புத்தகம் என்றும் மோகமுள்ளென்று அவருடைய மாஸ்டர் பீஸொன்று இருப்பதைக் கேள்விப் பட்டதும் அதிலும் தலைகுப்புற வீழ்ந்து மூழ்கினேன்றாலும் மலர்மஞ்சம் முதல் காதல் போல மறக்க முடியாதது.

கௌரி சொல்லச் சொல்ல கேட்காமல் அதை யாருக்கோ வாசிக்கக் கொடுத்து அதை அவள் தாள் தாளாகப் பறக்க விட்டதற்கான முழு பொறுப்பும் என்னைச் சேர்ந்தது. என் தாத்தாவுடைய பெரிய பொக்கிஷத்தை தொலைத்திருக்கிறேன். பின்னாளில் என் சேகரிப்பிற்காக இன்னொரு புத்தகம் வாங்கிவிட்ட போதும் என் ஞாபகத்தில் மலர்மஞ்சமென்றால் அது மட்டும் தான் இருக்கிறது.

பி.கு: ராயர் காபி க்ளப்பில் மலர்மஞ்சம் பற்றி முதல் முதலாக எழுதியிருந்தேன். என்ன செய்தும் அதன் எழுத்துரு மாற்ற முடியவில்லை. இன்றைக்கு திஜாவும் கௌரியும் எதற்கோ காலையிலிருந்து தொந்தரவு செய்ததால் மனசிலிருந்து வந்த மீள் பதிவு. இப்போது அந்த மலர்மஞ்சத்தில் என்ன எழுதினேன் என்று வாசிக்க ஆவலாயிருக்கிறது.

Wednesday, May 03, 2017

இசை

அது ஒரு வினோத இசைக்கருவியாகிவிட்டது
ஸ வில் எப்போதும் ஸ வே ஒலிக்குமென்று
சொல்ல முடியாது
நேற்றைக்கு ஒலித்தது போல் இன்றிருக்காது
நான் தான் வாசித்திருப்பேன்
அதுவே இசைக்குமென்று இன்று தொட்டால்
வேறொன்றாய் இசைக்கும்
ஒரு முறை கேட்டதை வேண்டி விரும்பும் போது
முற்றிலும் பிடிவாதம் கொள்ளும்
அதுவல்லாது எதுவாயும் இசைக்கும்

எல்லாமே இசை என்கிறாய்
பொழியவும் செய்கிறது
எனக்காய் இல்லை
கேட்பது இல்லவே இல்லை
கையில் சிக்காது
வடித்தெடுக்க இயலாது
நெஞ்சிலும் நிற்காது
சதா இசைத்துக் கொண்டிருக்கும்

யாருமில்லா உள்ளறையில்
சுவரோரம் திரும்பி
காதுகளைத் துறக்கும் நேரம்
இரைச்சாலாக்கித் தணியும்

உலகம் இசையாலானது

Thursday, April 27, 2017

ஒரு முகமூடியின் ஒப்புதல் வாக்குமூலம் - யுகியோ மிஷிமா. தமிழில் கார்த்திகைப் பாண்டியன்

சமீபகாலத்தில் இரண்டே நாட்களில் வாசித்து முடித்தது இந்தப் புத்தகத்தைத்தான். புதினங்கள் மெல்ல அதன் சுவாரசியத்தை இழக்க நிஜங்களைச் சொல்லும் எழுத்துகள் அந்த இடத்தை நிரப்பிக் கொள்ளத் தொடங்கிவிட்டது. சுய சரிதை என்பதுதான் முதல் கொக்கி. பிறழ்ந்த காமம் இரண்டாவது. அதிர்ச்சியோ முன்முடிவுகளோ இல்லாமல் வாசிக்க முடியும் என்பதில் சந்தேகமில்லாததால்தான் ஆரம்பித்திருந்தேன். தெரிந்த விஷயங்களும் என் எல்லைகளை மீறிச் சென்றவைகளையும் வாசிப்பதில் இருந்த ஆர்வம் உள்ளே இழுத்துக் கொண்டது.

1930களில் பிறழ்ந்த காமம் எந்த சமுதாயத்திற்குமே ஜீரணிக்க முடிந்திருக்காது. தானே அதை புரிந்து கொள்ள முயற்சித்ததும் உறுதி செய்து கொண்டதுமான போராட்டம்தான் இந்த புத்தகம். எல்லோருமே ஒன்றின் மேலொன்றாக முகமூடிகளோடிருக்க தான் மட்டும் ஒரு அசாதாரண, கூடுதல் முகமூடி அணிந்து கொள்ள வேண்டி வந்தது பெரிய உறுத்தலாகிறது. சுற்றியுள்ள மொத்த உலகமும் ஒரு ஒழுக்கில் ஓடிக் கொண்டிருக்க தான் மட்டும் வேறு. அதை யாரிடமும் சொல்ல முடியாத போது இப்படியாகத்தான் பதிந்து வைக்க வேண்டியிருந்திருக்கும். அதை ஒரு வெறித்தனத்தோடு கொஞ்சமும் பாசாங்கில்லாமல் மேசையிலிட்டு கிழித்து பரப்பி வைப்பதில் ஒரு சுயவதை, ஒரு திருப்தி. அத்தனை கால தனிமையையும் துயரத்தையும் இப்படி அல்லாமல் வேறெப்படியும் வெல்ல இயலாதுதான்.

ஆரோக்கியம் குன்றிய உடல், தனிமைப் படுத்தப்பட்ட நாட்கள், வாசிப்பு, தன்னை அறிதல் என்று நீளும் புத்தகத்திற்கு இரண்டு மொழிகள். எளிமையாக சொல்லிக் கொண்டே போகும் மொழி அங்கங்கே மடங்கி மடங்கி முடிவில்லாமல் நீள்கிறது. முடியாத வரிகளில் தொலைந்து போகும் போது வருவது நிச்சயமாக ஆர்வம் அல்ல, பெரும் சலிப்பு. அது மூல நூலின் மொழியா, மொழிபெயர்ப்பாளருடையதா தெரியவில்லை. மூல நூலுடையதாக இருக்கும் பட்சத்திலும் வாக்கியங்களை சுருக்கும் சலுகை மொழிபெயர்ப்பாளருக்கு இருக்கும் என்றே நினைக்கிறேன். ஏழெட்டு வரிகளுக்கு நீளூம் வாக்கியங்களும் வார்த்தைகளின் நேரடி மொழிபெயர்ப்புகளும் பெரிய குறை.


 //ஒருவிசயத்தை அதன் மொத்தமும் தவறானது என்று தீர்மாணிப்பது அதன் எந்தப் பகுதி உண்மையானது அல்லது எது பொய்யானது போன்ற சந்தேகங்களால் என்னைச் சித்திரவதை செய்வதை விடச் சற்றே வலி குறைந்தது என்பதைக் கண்டறிந்து விட்டதால், நிதானமாக முகமூடிகளைக் களைவதன் மூலம் என் பொய்மையை எனக்குணர்ந்திய இந்த வழிமுறைக்கு ஏற்கனவே நான் மெல்ல மெல்ல பழகியிருந்தேன்//

//தொண தொணக்கும் பெட்டி//

// மேலும் ஒழுங்கீனம்தான் என்னுடைய இயல்பின் அடிப்படையாகவும் முழுமுதற் கொள்கையாகவும் இருந்ததால், ஒரு பெண்ணுடனான குற்றம் சொல்லவியலாத உறவில், எனது நன்மதிப்புக்குரிய நடத்தையில், மேலும் உயரிய கொள்கைகளையுடைய மனிதனாக நம்பப்படுவதில், நல்லொழுக்கம் நிரம்பிய தீவிர உணர்வை நான் கண்டுபிடித்தேன்.//


ஆனாலும் இரண்டே நாட்களில் வாசித்து முடித்தேன்.

Thursday, December 22, 2016

வீர நாராயணர், பேலூர் மற்றும் ஹலபேடு



எண்பதுகளில் ஒரு ஜூனியர் சிவில் இஞ்சினியரின் ஆபிஸ் வாழ்க்கை என்பது ஒரு நாளைக்கு பனிரெண்டு மணி நேரம் நீள்வது. மொத்த உலகமும் காலை ஒன்பது மணிக்கு வேலைக்குப் போய் மாலை ஐந்து மணிக்கு திரும்பின நாட்களிலேயே எங்களுக்கு இதுதான் வாய்த்தது. வாரத்தில் ஒரு நாள் விடுமுறை. முக்கியமான கான்கிரீட் இருந்தால் அதுவும் இல்லை. ஆகவே கிடைக்கும் ஒரு நாளை தூங்கிக் கழிப்பார்கள். நமக்கோ பால்காரர், வேலைக்காரம்மா, அக்கம் பக்கம் என்று மிஞ்சிப் போனால் ஒரு பத்து பேரோடுதான் மொத்த வாழ்க்கை. அதுவும் ஏதாவது பெயரே கேட்டிராத ஒரு பொட்டல் காட்டில். அதனாலேயே எங்கேயாவது கூட்டிக் கொண்டு போக மாட்டாரா என்று காத்திருப்பதே வாழ்க்கையாயிருந்தது. அப்படி அந்த ஒரு நாளில் ஏதாவது அக்கம் பக்க ஊருக்கு பஸ்ஸிலோ, ரயிலிலோ பிள்ளைகளையும் சுமந்து போய் வந்தால் அந்த சலிப்பு தீரவே காலமாகும். அடுத்த பயணம் அவ்வளவு சீக்கிரத்தில் யோசனையிலும் வராது.

95 ல் அப்பா வாங்கிக் கொடுத்த முதல் மாருதி காரில்தான் எங்கள் ரோட் ட்ரிப்கள் தொடங்கின. அந்த மாருதி 800ஐ இழுத்துக் கொண்டு சுத்தாத இடமில்லை. கோட்டேஸ்வர், நாரயண் சரோவர் பயணத்தில் ஒரு ப்யூஸ் இல்லாமல் நடுக்காட்டில் மணிக்கணக்கில் காத்திருந்தோம். ஒருமுறை மூச்சு தள்ளி பச்சை கூலண்ட் கண்ணாடியில் பீச்சியடிக்க நடு ரோட்டில் நின்று போனது. இன்னொரு முறை ஏன் தான் நின்னியோ என்று தடவிக் கொண்டிருக்க 'அப்பா இங்க ஒரு ஒயர் தொங்குதே'ன்னு மகள் சொன்னதை சரி செய்து பயணத்தைத் தொடர்ந்தோம். அதற்குப் பிறகு கார்கள் மாறின. நீண்ட பயணங்கள் வாய்த்தன.

இன்றைக்கும் எங்களுடைய ரோட் ட்ரிப் ஞாபகங்கள் ஒரு பெரிய சுரங்கம். நினைத்து, பேசித் தீராது. கூகிள் மேப் வசதிகள் இல்லாத காலங்களில் எந்த ஊர்களின் வழியாக என்று விசாரித்தே எல்லா ஊர்களுக்கும் போய் வந்தோம். பைபாஸ் இல்லாமல் ஊருக்குள் நுழையும் போது மட்டும் தடுமாறுவோம். ரைட்டுல என்று சொல்லி இடது கையைக் காண்பித்து வழி சொல்வார்கள். அவர் வார்த்தையை ரெண்டு பேர் பிடித்துக் கொள்ள கையை மீதி ரெண்டு பேர் பிடித்துக் கொள்ள எங்கள் நாலு பேருக்கு இரண்டு வழி சரியென்று தோன்றும். சரியான வழியை தவற விட்ட நேரங்களில் திரும்பியெல்லாம் வந்து விட மாட்டோம். உலகம் சுத்தி வேறு வழியைக் கண்டு பிடிப்போம். எல்லா நேரமும் வழி சொல்பவர்கள் மைண்ட் மேப் போட்டு மூணாவது சிக்னல்ல ரைட் எடுத்து இரண்டாவது லெப்ட்ல போய் மெயின் ரோட்டப் பிடிச்சான்னு சொல்றதுல மூணாவது சிக்னல்ல ரைட் மட்டும் தான் எங்க எல்லோருக்கும் மனதில் பதியும். அங்கே போய் மறுபடியும் வழி கேட்போம். ஊரைவிட்டு வெளியே வரும் போது ஒருவரை ஒருவர் குதறும் மனநிலையில் இருப்போம். கொஞ்சம் நேரத்தில் எல்லாம் சரியாகும்.

சொன்ன நேரத்தில் கிளம்பாததால் பெரும்பாலும் எல்லாப் பயணங்களும் சண்டையில்தான் தொடங்கும். அதுவும் நூறாவது கிலோமீட்டருக்குள் சரி செய்யப்படும். வாய்க்கும் அல்லது ஏய்க்கும் சாப்பாட்டுக் கடைகள், சகிக்க முடியாத கழிப்பறைகள் எல்லாம் பழைய கதையாகிவிட்டது. எல்லா பெட்ரோல் பங்க்களிலும் மோசமில்லாத கழிப்பறைகள் இருக்கிறது. ட்ரிப் அட்வைசர் சகலத்துக்கும் லிஸ்ட் கொடுக்கிறது. இண்டு இடுக்கில் இருக்கும் உணவகங்களை மேப்பில் தேடிப் போக முடிகிறது. முன்பெல்லாம் பயணங்கள் பூராவும் கண்களை பாதையிலே நட்டு வைத்திருப்பதால் சின்னச் சின்ன சுவாரசியங்களாய் நிறைந்திருக்கும். ஏதாவது ஒரு வளைவு முன்னெப்போதோ எங்கேயோ போன பாதையை நினைவு படுத்தும். நடுவில் வரும் ஊர்களால் நேரம் விரயமானாலும் ஒவ்வோரு ஊருக்குமான காட்சிகளால் நிறைந்திருக்கும். இப்போது ராஜப்பாட்டைகளெல்லாம் நீண்ட நெடும் சாலைகள். சிறிய ஊர்களை தொடுவதேயில்லை. ஊருக்குள் நுழைந்தால் மேப்பில்லாமல் வேலையாவதில்லை. ஓட்டுபவருக்கு வழி சொல்வதில் ஊரை ரசிக்க முடிவதில்லை. சௌகரியங்கள் எப்பவும் சுவாரசியங்களைத் தான் விலையாக்குகிறது.
 
ஒரு கட்டத்திற்கு மேல் இப்படி ஏற்பாடுகளோடு செல்லும் பயணங்களில் பெரிய எதிர்பார்ப்பில்லாமல் போனது. மனம் போன போக்கில் போவதும், கிடைக்கும் இடத்தில் தங்குவதும் சுவாரசியமாய் இருக்கும் என்று தோன்றத் தொடங்கியது. ஆனாலும் இவையெல்லாம் என் மண்டையில் மட்டுமே உதிக்கும் விஷயங்களாய் இருந்ததால் மொத்த குடும்பமும் அய்யோ அதெல்லாம் சரிப்படாது என்று கூச்சலிட்டு மறுத்ததாலும் முயற்சித்ததில்லை.

இந்த முறை எதிர்ப்பு தெரிவிக்கும் இரண்டு டிக்கெட்டுகளும் இல்லாததும் முந்தின இரவுதான் முடிவு செய்ததாலும் எந்த ஏற்பாடும் செய்திருக்கவில்லை. பேலூர் ஹளபேடு போகலாம், பெங்களூரில் தங்கலாமென்று யோசித்தது அங்கிக்கே சுத்தி சிக்மங்களூர் போகலாமென்று முடிவு செய்து படுக்கும் போது இரவு மணி பத்தரை. ஆடி அசைந்து  சென்னையிலிருந்து கிளம்பும் போது காலை மணி பத்து. சென்னையை விட்டு வெளியே வரவே பதினொன்றானது. பெங்களூரில் உள்ள நண்பர் ஒருவரிடம் தங்குமிடத்தை விசாரித்து வைக்கச் சொல்லியிருந்தோம். மாலை நாலரை மணிக்கு அவரைப் பார்த்த போது, அங்க நல்ல இடமெல்லாம் இருக்குமே என்று சாதாரணமாகச் சொன்னார். அப்போது ஆரம்பித்தது தேடும் வேலை.

நாடோடிப் பயணமெல்லாம் ஆசைப் பட்டாலும் சுத்தமான படுக்கையும் மற்ற வசதிகளும் இல்லாத இடமெல்லாம் ரெண்டு பேருக்குமே வேலைக்காகாது. ட்ரிப் அட்வைசர் சொன்ன இடமெல்லாம் வார இறுதி, காலியில்லை. ஹோட்டல் விட்டு ஹோம் ஸ்டே தேடலும் அதே நிலமை. நண்பர்களை விசாரித்து பதில் வருவதற்குள் நல்லவேளையாக Coffee Tranquil ல் இடம் கிடைத்தது. எப்படி இருக்கும் என்னென்ன வசதிகள் எதுவும் தெரியாது. வேறொரு ஹோம் ஸ்டேயில் இடமில்லாததால் பரிந்துரைத்தது. நேரமாகிவிட்டது. வேறு வழியில்லை என்று ஒருநாளுக்கு மட்டும் புக் செய்து போய் சேர்ந்தோம். இரண்டு நாளும் அங்கேயே இருந்தோம்.

ஊருக்கு வெளியே காப்பித் தோட்டத்துக்கு நடுவே ஏர்டெல் போன் சிக்னல் மட்டுமே கிடைத்த, முறையாக பராமரிக்கப் பட்ட அமைதியான பங்களா.  இந்த மாதிரி இடங்களில் எல்லாம் ஹோட்டல்களை இனிமேல் முற்றாக தவிர்த்து விட வேண்டும். காலையில் பறவை சத்தம் கேட்டு விழிக்கலாம். எழுந்ததும் மொபைல் போனில் மோனத்திலிருக்க வேண்டாம். காலாற நடக்கலாம். வாசமான காபி. நல்ல மலைநாட்டு (malnad cuisine) வீட்டுச் சாப்பாடு.



இருந்த ரெண்டு நாளில் ஒரு நாள் சிருங்கேரி. புகைப்படத்தில் பார்த்து ரசித்த காலை நேர சிருங்கேரி வாய்க்கவில்லை. டூரிஸ்ட், பக்தர்கள் நெரிசலிடும் மாலை நேரம்தான். நடுவில் இருக்கும் புராதன கோவிலை காணாமலடிக்கும் முயற்சிகள் நாலாப் பக்கமும் நடந்து கொண்டிருக்கிறது. பெரிய பீடத்தின் மேல் நீள் வட்டக் கோவில். வேலைப்பாடுகள் எதையும் ரசிக்க விடாத கூட்டம். சுற்றிலும் புதிது புதிதாக எழும்பிக் கொண்டிருக்கும் பளபளக்கும் சன்னதிகள், கட்டிடங்கள். ஒரு கோவில் தரிசனம் ஆனது. மனதில் இருந்து, தேடி வந்தது என்னவோ இதுவல்ல.


எங்களுடைய பேலூர் ஹலபேடு பயணம் பற்றிக் கேள்விப்பட்ட Coffee Tranquil பெண்மணி சொல்லிப் போன வீர நாராயணன் கோவில், தேடாமல் கிடைத்தது. பனிரெண்டு மணிக்கு சென்னை வார்தாவின் மிச்சங்கள் தூரலாய் மென்குளிராய் நிறைந்திருக்க நாங்கள் கோவிலுக்குப் போய்ச் சேர்ந்த போது இருந்த ஒரு குடும்பமும் கிளம்பிக் கொண்டிருந்தது. கோவிலில் கரெண்ட் இல்லை. ஜெனரேட்டரில் தேவைக்கு மட்டும் ஒளிரும் விளக்குகள் . தொள்ளாயிரம் வருட பழைய கோவில். ரெண்டு ஆள் சேர்ந்தால்தான் கட்டிப் பிடிக்க முடியும் மாக்கல் தூண்கள், ஒன்று போல் ஒன்றில்லை. எதிர் எதிர் தூண்கள் கூட ஒன்று போல் ஒன்றில்லை. லேத்தில் கடைந்த மரம் போல ஆழ்ந்த கூர்மையான பள்ள வரிகள். சிலதில் நுணுக்கமான வேலைப்பாடுகள். நாலாபுறமும் இருள் சூழ்ந்திருக்க லேசான மழைச் சத்தப் பிண்ணனியில் கர்ப்பகிருஹம் மட்டும் ஒளிர்ந்திருக்க வீர நாராயணரையும், ஒரு குழலூதும் கண்ணனையும், உட்கார்ந்த நிலையில் ஒரு உக்கிர/யோக நரசிம்மரையும் பார்க்கத்தான் இந்த மொத்தப் பயணமும் வந்தேன் என்றிருந்தது. இன்னொரு முறை இந்த மழையும், இந்த இருளும் ஆளில்லா அமைதியும் ஒன்று கூடப் போவதில்லை. அதுவரை ஹொய்சாள சிற்ப வேலைப்பாடுகளை கண்ணால் பார்க்கத் தொடங்கியிருக்கவில்லை. அந்த மஞ்சள் வெளிச்சத்தில் சாளக்கிராமக் கல்லில் நுணுக்கி நுணுக்கி இழைத்த  ஆள் உயர வீர நாராயணரும், கிருஷ்ணரும், நரசிம்மரும் நிறைந்த அளவு அதன்பின் அன்றைய தினம் பார்த்த அதி உன்னதங்கள் நிறைக்கவில்லை. 
ஹலபேடு பேலூரெல்லாம் வார்த்தைகளில் சொல்லிவிட நினைப்பதே வீண்வேலை. ஹலபேடுவில் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட சிற்பங்களில் முக்கால் மணி நேரத்தில் இவ்வளவுதான் சொல்ல முடிந்தது என்று சொல்லும் கைடின் தன்னடக்கம் நமக்கு நுழைவாசல் மேல் சிற்பத்தைப் பார்க்கும் போதே வந்து விடுகிறது. குருடனைப் போல் யானையைக் கொஞ்சமே கொஞ்சம் தடவி விட்டு வந்தோம். மாக்கல் என்பதால் அதீத நுணுக்கம் சாத்தியமாகியிருக்கிறது. அதனாலேயே நிறைய சிதலமாயிருக்கிறது. இயற்கையும் போர்களும் சிதைத்த மிச்சங்கள். இப்போது சரியான பராமரிப்பில் இருக்கிறது.

பேலூரையும் அன்றே பார்க்காமல் இருந்திருக்கலாம். ஒரு நாளுக்கு இத்தனை அற்புதங்கள் ரொம்ப அதிகமாகி விடுகிறது. அஜந்தா எல்லோராவிலும் இதுவே நிகழ்ந்தது. இதெல்லாம் இனியொரு முறை இப்படியல்லாமல் என்றெல்லாம் இப்போது தோன்றுவதில்லை. விரிந்து கிடக்கும் உலகத்தில் இங்கே இத்தனைதான் கிடைத்தது என்ற திருப்தி மட்டும் கொள்ள வேண்டியிருக்கிறது. 


Wednesday, August 17, 2016

காசி - 2016



முதல்முறையாக காசி வந்த போது அழுக்கும் கசகசக்கும் கூட்டத்தையும் தாண்டி ஒரு படகுப் பயணத்தில் தான் அதன் புராதனம் தீண்டியது. ஒரு போதியைப் போல நின்று, நானா அழுக்கு! உன்னை மாதிரி எத்தனை பேரைப் பார்த்திருப்பேன் என்று கேட்ட போது அந்த எத்தனையில் இருந்த பிரமிப்புதான் முதல் கண்ணி. அதற்குப் பிறகு என்ன தேடுகிறேன் என்றே தெரியாமல் ஒவ்வொரு தடவையும் வந்ததும் ஒவ்வொரு தடவையும் எதையாவது புதிதாகப் பார்த்து அதையே இன்னும் விஸ்தாரணமாக பார்க்க இன்னொரு முறையென்று... என்னையும் என் காசி பயணங்களையும் தெரிந்தவர்களுக்கு ஒரு மெல்லிய சலிப்பு தொனிப்பது நன்றாகவே தெரிந்த போதும் நான் வந்து கொண்டுதான் இருக்கிறேன்.

சென்ற முறை வந்து சென்ற போது அடுத்த காசி பயணம் என்பது படித்துறையில் நேரம் காலமில்லாமல் உட்கார்ந்திருப்பதும் சலிக்காமல் கங்கையைப் பார்த்திருப்பதுமாய் இருந்தது. ஒன்றரை வருடங்களுக்கு முன்பே கங்கைக் கரையில் ஒரு இடம் பார்த்து வைத்து கிளம்பத் தோதுவான சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தேன். ரெண்டு ஜன்னல் வைத்து படுக்கையிருந்து பார்த்தாலே கங்கை தெரிவது போல. ஒரு மாலையில் வந்து சேர்ந்த போது அந்த இடம் நான் யோசித்த மாதிரியே இருந்தது. கங்கை மட்டும் தான் நான் இதுவரை பார்த்ததெல்லாம் எதுவுமே இல்லை என்பது போல இந்தக் கரை அறை சுவர் வரைக்கும், ஆழத்தில். எதிர்க்கரை எங்கேயோ தொலைதூரத்தில். பெருக்கெடுத்து ஓடும் நதியைக் கேள்விப்பட்டிருக்கிறேன். கங்கையை கடலாகப் பார்ப்பேன் என்று கொஞ்சமும் நினைக்கவில்லை. 
 
 
விடுதிக்காரர் சொன்னது, நீங்க கேட்டது முன்னூறு வருடப் பழமையான அறையென்று. இருக்கும் தான். எண் கோணத்தில் கருங்கல்லால் கட்டப் பட்டு மேலே ஒரு டோம் வைத்து, ரெண்டு ஜன்னல்களும் திறக்காமல் இறுகிப் போயிருந்தது. பால்கனி கதவைத் திறந்தால் ஒற்றைப் படிக்கட்டும் ஒன்றரை அடி வராந்தாவும் அதே ஒன்றரை அடி உயரத்தில் ஒரு சுற்றுச் சுவரும். அறையின் தரையிலிருந்து சற்றே நீட்டினால் காலை அந்தச் சுற்றுச் சுவரில் வைத்து விடலாம். வைத்து ஒரே தாண்டாகத் தாண்டி குதிக்க வேண்டுமென்ற ஆவலும் வராமலிருக்கவில்லை. கண்ணுக்கெட்டின தூரம் வரையில் தண்ணீராய், சிறு வேகத்தில் நகர்ந்து கொண்டேயிருக்கும் நதியைப் பார்க்கும் போது ஒவ்வொரு சமயமும் ஒவ்வொன்றாய் தோண்றியது. ஒருவகையில் இது சுய தரிசனம். சில நேரங்களில் அதில் மூழ்கிப் போவோமென்று. சில நேரங்களில் அதன் ஒழுக்கிலே மிதந்து போகலாமென்று. நீச்சல் தெரியாத போதும்! சில நேரம் பரவசமாய். இருள் பிரியாத ஒரு காலை நேரத்தில் மழையும் சேர்ந்து கொள்ள பயமூட்டுவதாய். 

அறையிலேயே பெரும்பாலான நேரத்தை கழித்திருந்தேன். எதை செய்து கொண்டிருந்தாலும் கொஞ்ச நேரத்திற்கொரு முறை எழுந்து கதவைத் திறந்து நின்று கொண்டிருக்கச் சொன்னது. முதல் நாள் மதியம் அந்த கதவைப் பார்த்து படுத்துக் கொண்டே புத்தகம் வாசித்துக் கொண்டிருக்க இடைக்கொரு முறை வெளிச்சம் மாறும் போது புத்தகத்திலிருந்து கண்ணெடுத்து வெளியே பார்க்கப் பார்க்க தீராதிருந்தது. அடுத்த நாள் குரங்கு மிரட்டினதில் கதவைச் சாத்தி வைக்க வேண்டியதாகப் போயிற்று. 

நாய் வளர்க்கிறவர்களிடம் அதைப் பற்றிப் பேசும் போது அவர்கள் அவன்/ள் என்று பெயர் சொல்லிப் பேசிப் போக நாம் நாய் என்று சொல்லி அதிலிருந்து சுதாரிக்க முயன்று, முடியாமல் தோற்று... அதே போல நான் நதிக்கரையில், ரிவர் ஃபேசிங் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்க இங்கிருப்பவர்களுக்கெல்லாம் அவள் கங்கா மய்யா அல்லது கங்காஜி. வியாபாரமாகவே இருந்த போதும் பக்தி போலியில்லாமல் இருக்கிறது.

சென்ற முறை வந்திருந்த போது ஊருக்குள்ளே அறை எடுத்து தங்கியிருந்தேன். ஒருநாள் காலை அஸ்ஸி காட்- டில் வந்திறங்கி படித்துறையிலேயே நடக்க ஆரம்பித்து மணிகர்னிகா வரை வந்திருந்தேன். அதற்குப் பிறகு கல்பாளச் சந்துகளில் நடக்க ஆரம்பித்த போதுதான் பெட்டி படுக்கைகளோடு அந்த சந்துகளில் இருந்த விடுதிகளைத் தேடி வெளிநாட்டவர்கள் தங்கப் போய்க் கொண்டிருந்ததை பார்த்திருந்தேன். பாஷை தெரியாத ஊர் தெரியாத இவர்களெல்லாம் தங்கும் போது நமக்கென்ன பயமென்று தான் இப்படி ஒரு இடத்தைத் தேர்வு செய்திருந்தேன். காலையில் எழுந்து கண் விழித்து ஜன்னல் கதவைத் திறந்தால் கங்கை தெரிய வேண்டும் என்று. இந்த முறை தெரிந்ததெல்லாம் கங்கை, கங்கையைத் தவிர வேறில்லை. எந்த காட்-டும் ஒற்றைப் படி மிச்சமில்லாமல் நீராழத்தில் மூழ்கி. 
 
இரண்டாம் நாள் மணிகர்ணிகா போக காட்-டில் வழி இல்லாததால் ரோட்டிலே போக வழி கேட்ட போது ஒரு குறுகலான சந்தைக் காட்டி, துணைக்கு வரணுமா என்று கேட்டவரை தவிர்த்து நடக்க ஆரம்பித்தது நல்லதாயிற்று. போக வேண்டிய இடத்தை மனதில் கொண்டு பாதையை தேர்வு செய்வது அவ்வளவு சிரமமில்லை. தட்டுத் தடுமாறியாவது போய்விட முடிந்தது. GPS ம் கூகிள் மேப்பும் இல்லாத காலங்களில் எத்தனை பயணங்கள் காரிலே போயிருந்தோம். இப்போது ஒவ்வொரு சந்து திரும்பும் போதும் மேப்பை வழி கேட்கிறோம்! வழியிலே எதேச்சையாக கேட் எண் -2 வந்ததும் கோவிலுக்குள் நுழைந்து விட்டேன். கோவில் பூராவும் வெள்ளை பளிங்கு கற்கள் பதித்த புண்ணியவான் யாரோ! அநியாயத்திற்கு வழுக்குகிறது. முதல் முதலாக பார்த்த காசி கோவில் இது மாதிரி இருந்ததாக நினைவில்லை. திரும்பின பக்கமெல்லாம் சிவலிங்கங்கள். கங்கையிலிருந்து நீர் கொண்டு வந்து நாமே லிங்கங்களில் ஊற்றும் வசதியிருக்கிறது என்பதால் எல்லா இடங்களும் தண்ணீர் கொட்டி, அதனாலே எல்லா இடமும் வழுக்குகிறது.
 
நகரத்தாரின் விசாலாட்சியைப் பார்க்கச் சொல்லி துளசி சொல்ல, வராஹியை பார்க்கச் சொல்லி ராஜி சொல்ல, கேட் நம்பர் ரெண்டுக்குப் பக்கத்தில் எங்கேயோ என்று மேப் சொல்ல அதைத் தேடி மூன்றாவது நாள். விசாலாட்சி கோவில் வாசலில் செருப்புகளை கழட்டி மாட்ட வசதியாக போட்டிருந்த ஸ்டீல் பெஞ்சில் வெள்ளைச் சட்டை வேட்டி கட்டி விபூதி பூசி பழுத்த பழம் போல் இருந்த பெரியவர், உக்காந்துக்கோ என்ற உடல் மொழியோடிருந்தார். திரும்பி வந்த போதும் அதே இணக்கம். எண்பது வயசுக்கு மேல் எண்ண மறந்து விட்டாராயிருக்கும். அவர் சொன்ன எண்பது வயதையெல்லாம் எப்போதோ கடந்திருப்பார். மனைவி இல்லை. வீட்டிலே மருமகள் இருக்கிறாள் என்றார். அவரோடு ஒரு செல்ஃபி எடுக்க நினைத்து வேண்டாமென்று விட்டு விட்டேன். காண்பதெல்லாம் போட்டோவாகக் கூடாது. சில விஷயங்கள் வெறும் ஞாபகங்களாய் மட்டுமிருக்க வேண்டுமென்பதில் அவரை வைத்திருக்கிறேன்.  

 வராஹி வேறொரு சந்தில் இருந்தாள். காலை மட்டும் தான் தரிசனமாம். கோவில் மூடியிருக்கும் என்று வழி கேட்டவரெல்லாம் சொன்ன போதும் வாசல் வரை போய் வந்தேன். இடையில் இருப்பது ஒரு கதவுதானே!

மூன்று ஆள் அகலம்தான் இருக்கிறது ஒவ்வொரு சந்தும். அதிலே தவறாமல் ஒரு மாடு நிற்கிறது. பயந்து ஒதுங்கி செல்லும் உள்ளூர்வாசிகள் எல்லா நேரமும் இவை இத்தனை சாதுவாயிருக்காது என்று உணர்த்திப் போகிறார்கள். சாணமும் வீட்டுக் குப்பைகளும் வழியெல்லாம் இறைந்து கிடக்கிறது. அதில் விசேஷம் என்னவென்றால் எல்லாம் அன்றைய வெங்காயத் தோலும் வேண்டாமென்று வீசின சாப்பாட்டு பொருட்களும் தான். ஒவ்வொரு நாளும் புதிதாக குப்பை சேர்க்கிறார்கள். குப்பை ப்ரெஷ்ஷாக இருக்கிறது. ஊரையும் நிர்வாகத்தையும் குறை சொல்லிப் பிரயோஜமில்லை. வேறெங்காவதென்றால் இதையெல்லாம் சகித்திருப்பேனா என்றால் சந்தேகம் தான். இங்கே சலிக்காமல் சுத்த முடிந்தது. நாலு வயதுப் பெண் குழந்தைக்கு வேண்டிய காலுறை போட்டு ஒரு வெளிநாட்டு தம்பதி அந்த அழுக்குத் தெருவுக்குள் இயல்பாக நடத்திக் கூட்டிக் கொண்டு போனதை ஆச்சர்யத்தோடு பார்த்திருந்தேன். இந்த ஊரில் என்ன இருக்கிறதென்று இத்தனை நாள் இருக்க வந்திருக்கிறாய்/இத்தனை தடவை வருகிறாய் என்று கேட்ட சொந்தக்காரரிடம் பெரிதாக விளக்கம் அளிக்கவில்லை.

தங்கியிருந்த அறையிலிருந்து நூறு மீட்டர் தூரத்தில் இதே போல் நதிக்கு கொஞ்சம் மூக்கைத் துருத்திக் கொண்டிருக்கும் அறையில் ஒரு வயதான தம்பதிகளின் குடித்தனம். தினமும் காலை எட்டரை ஒன்பது மணிக்கு இரண்டாக மடங்கிய ஒரு அம்மணி குளித்து துவைத்த துணிகளோடு என் அறை போலவே இருக்கும் பால்கனியில் வரிசையாக காயப் போடுகிறார். மற்ற நேரங்களில் நிழல் நடமாட்டம் கூட இல்லை. இவர்களுக்கெல்லாம் கங்கை சலித்திருக்குமென்று நினைத்த என்னை ஏமாற்றி ஒரு மதிய நேரம் வெறுமனே கங்கையை பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறார்.

ஊர் இந்த மழை நாட்களில் பசுமை சாம்ராஜ்யம். புழங்காத கட்டிடங்களின் புழங்காத தன்மைக்கேற்ப பச்சை பூத்திருக்கிறது. சுவர் இடுக்கு, சந்து பொந்தெல்லாம் செடிகளும் கொடிகளும். காட்டுக் கொடிகளின் வளமையைப் பார்க்கும் போது டார்த்தீனிய காடுகளாய் கட்டிடங்களை மூடிவிடும் போலிருக்கிறது. இண்டு இடுக்கிலெல்லாம் மரம் தளைத்து நிற்கிறது. நான் தங்கியிருந்த அறையின் வெளிச்சுவரில் பதினைந்து இலைகளோடு ஒரு அரச விழுது.

அடுத்த கட்டிடத்தில் என்னவோ இருக்கிறது. தினமும் காலையில் ஐந்து சிவப்பு மூக்கு கிளிகள் ஆஜராகிவிடும். நாள் பூராவும் பறப்பதும் அந்த ஜன்னலைப் பார்த்து உட்கார்ந்திருப்பதும் சாயந்தரமானால் கிளம்பிப் போவதும். நாலு நாளும் காலை கண் விழிப்பதே கிளிப்பாட்டு கேட்டுத்தான். அதைத் தவிர நாளெல்லாம் பெரிய வேறு சத்தமேதுமில்லாமல் நிசப்தமாய்.

பிரம்ம முஹூர்த்த சாதுக்கள் நடமாட்டம்... வாய்க்கவில்லை. காட்- டில் உட்கார்ந்து மனிதர்களை வேடிக்கை பார்க்க நினைத்தது நடக்கவில்லை. ஏழு நாள் தனியாக, வேண்டிய மட்டும் பார்த்துத் தீர்க்கப் போகிறேன், என்று நினைத்ததற்காகவே எந்த காட்-டையும் கண்ணில் கூடக் காட்டவில்லை. ஆனால் காசியில் இறங்கி அறைக்கு வந்த நிமிஷத்திலிருந்து நான், இங்கே இந்த கணம் என்பது மட்டுமே நினைவிலிருந்தது. அலைக்கழிக்கும் யோசனைகளோ இலக்கில்லாத சிந்தனைகளோ அறவேயில்லை. உடலளவில் மனதளவில் நேற்று வரையிலான உலகத்திலிருந்து வலியில்லாத துண்டிப்பாயிருந்தது. பனிரெண்டு வருஷம் முன்னால் எழுதின கவிதை முதல்முறையாக முழுக்க நிஜமானது. நாலுநாளும் அதை துளி சிந்தாமல் அனுபவித்தேன். ஐந்தாம் நாள் கொட்டித் தீர்த்த மழையும் உயர்ந்து கொண்டே இருந்த நீர் மட்டமும் பயமுறுத்த வேறு இடத்திற்குக் கிளம்பிப் போய்விட்டேன். இனிமேலும் இது போன்ற பயணங்களுக்காக இதை பத்திரமாக முடிக்க வேண்டிய கட்டாயம்.

இன்னமும் தெரியாத இடங்களுக்குப் போகும் துணிச்சல் வரவில்லை. அதிக தொலைவிலில்லாத, எதாவது மனதிற்குப் பிடித்த இடத்திற்கு ரெண்டு நாளாவது யாருமில்லாத தனிமைப் பயணத்தை சர்வ நிச்சயமாக பரிந்துரைக்கிறேன். நீங்கள் தனிமை விரும்பியாக இருந்தால் யோசிக்கவே வேண்டாம்.

எட்டாவது நாள் நான், மீண்டும் வட்டத்தில். அடுத்த ஏழுநாள் எனக்கே எனக்காய்.. எங்கே எப்போது...

ஏழு நாள் எனக்கே எனக்காய்

ரெண்டு மாற்றுத்துணி

செலவுக்கு உரைக்க

சின்னதாய் ஒரு அட்டை

ஒரு புத்தகம் ஒரு வாக்மேன்

கஸலாய் ஹரிஹரன்
துள்ளூம் ரஹ்மான்

முதுகில் தொங்கும் சிறு பையில்
 
வீசி நடக்க வேண்டும் எனக்கு.


வெயில் உரைக்காத
துளிர் மழை நாளில்
ஆளில்லாத ரயிலில்
இரண்டாம் வகுப்பில்


ஆச்சா ஆச்சாவெனும்
கணவன்
அலுத்துக் கொள்ளும்
குழந்தைகளின்றி

தனியாய் நான்
அடையாளங்கள்
அத்தனையும் துறந்து


ராத்திரி கறிக்கு
உருளையா அவரையா
பால்காரன் வேலைக்காரி
எல்லாம் மறந்து


வருஷத்திற்கொன்றாய்


லடாக் தஞ்சாவூர்
ஹரித்வார் கோனார்க்
மதுரா காசி மானசரோவர்
நீளும் என் பட்டியல்


எட்டாம் நாள் மறுபடியும்
வட்டத்தில் இருப்பேன்.

Monday, February 01, 2016

how-we-used-to-die-how-we-die-now

எனக்குத் தெரிந்து எங்கள் வீட்டில் நடந்த முதல் சாவு தாத்தா நடராஜ குருக்களுடையது. வருஷ வருஷம் அவர் அவருடைய அப்பாவுக்கு திதி கொடுப்பது என்கிற மோட்சதீப நிகழ்ச்சி உறவினர்கள் சூழ ஒரு சிறிய திருமணம் போல நடக்கும். பேரூரில் பெரிய தாத்தா சமாதியில் ஒரு பூஜையும் பின்னர் எங்கள் ஆஸ்தான திருமண மண்டபத்தில் ஒரு 200-300 பேர்களுக்கு சாப்பாடுமாக விமரிசையாக நடக்கும். அந்த வருஷமும் அதற்கு சாமான்கள் வாங்க, குறிப்பாக அரசாணிக்காய்/மஞ்சள் பூசணிக்காய் வாங்க வடவள்ளி சந்தைக்கு போயிருந்தார். வடவள்ளியில் எங்கள் அகிலாண்டப் பாட்டியின் தங்கை வீட்டில் தங்கி வாங்கி வருவதாக ஏற்பாடு. ஆறேழு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் வடவள்ளிப் பயணமே அப்போதெல்லாம் காலையில் போய் சாயந்திரம் வர அவசரப் படும் வழக்கமிலாத நிதான நாட்கள். போனவர் கழிப்பறையில் மயங்கி விழுந்து விட்டதாக தகவல் வந்து கூட்டிக் கொண்டு வந்ததும் அப்பாவின் நெருங்கிய டாக்டர்  நண்பரின் மருத்துவமணையில் வைத்தியம் பார்த்ததும், ஸ்ட்ரோக் வந்து விட்டது, பிழைக்க வைக்க முடியாது என்று வீட்டுக்கு கொண்டு போகச் சொன்னதும், ஒரு குதிரை வண்டியில் வைத்து ஒரு ராத்திரி தாத்தாவை வீட்டுக்கு கூட்டி வந்ததும் துல்லியமாக நினைவிருக்கிறது. எனக்கு அப்போது பத்து, பதினோரு வயதிருக்கும்.

தாத்தாவை முதல் அறையில் படுக்க வைத்திருந்தார்கள். சுற்றிலும் யாராவது உட்கார்ந்திருப்பார்கள். மங்கை அக்காவுக்கும் மலரக்காவுக்கும் பல்ஸ் பார்க்க சொல்லிக் கொடுத்திருந்தார்கள். அவர்கள் ரெண்டு பேரில் யாராவது ஒருத்தர் மாறி மாறி பார்த்து நல்லாயிருக்கு, சுமாராயிருக்கு என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். நீராகாரம் ஏதோ கொடுத்துக் கொண்டிருந்தார்கள். வடவள்ளிக்காரர்கள் யாரும் வந்தால் அறையின் ஓரத்தில் அமர்ந்து தேவாரம் பாடிப் போனார்கள். என் வயதுப் பேத்திகள் நான்கு பேருக்கு எந்த ஜோலியுமில்லை. யார் யார் வருகிறார்கள் என்று வேடிக்கை பார்ப்பதைத் தவிர. மூன்று நான்கு நாட்கள் கழிந்த பின் ஒரு மாலை நான்கு மணி சுமாருக்கு நாங்கள் எல்லோரும் சுற்றி நின்று பார்த்துக் கொண்டிருக்க அமைதியாக இறந்து போனார்.

நேற்று பேஸ்புக்கில் இந்த லிங்கில் வாசிக்கும் போது எங்கள் தாத்தாவைத்தான் நினைத்துக் கொண்டேன். http://exopermaculture.com/2016/01/19/how-we-used-to-die-how-we-die-now/

Tuesday, December 22, 2015

கோனார்க் - பயணக்கட்டுரை.

Prelude: இன்றைக்கு கோனார்க் கோவில் பற்றி ஏதோ பேச்சு வந்த போதுதான் நான் எப்போதோ கோனார்க் பற்றி மரத்தடியில் எழுதியிருந்தது நினைவுக்கு வந்தது. எப்படியும் ப்ளாக்கில் இருக்கும் என்று தேடும் போதுதான் தெரிந்தது அது இங்கே வந்து சேர்ந்திருக்கவில்லை என்று. ஸோ... இந்த மீள்பதிவு! 2001ல் எழுதியதாயிருக்கும்.

முதலில் கொஞ்சம் ஒரிஸ்ஸாவைப் பற்றி. அங்கே இருந்த இரண்டு வருடத்தில் எப்போது வெளியில் கிளம்பினாலும், ஊரும் மனிதர்களும் ஆச்சர்யம் தான். கேரளாவை நினைவு படுத்தும் பசுமை. எந்த நகரத்தை விட்டு ஒரு 50 கி.மி வெளியே போனாலும் ஒரு பக்கா கிராமம் பார்க்கலாம். பழுப்பேறிய வேட்டி, மேல் சட்டையில்லாத ஆண்கள். இன்னும் ஜாக்கெட்டுக்குப் பழகாத வயதான பெண்கள். அதிகம் போக்குவரத்தில்லாத ரோடுகளில் எல்லாமே தெருவிலேதான். நெல்லு காய வைப்பது, வட்டமாக உக்கார்ந்து ஊர்க்கதை பேசுவது... எல்லாமே. சரியான மண்ணின் மைந்தர்கள். வெளிப்பார்வைக்கு அமைதியா இருந்தாலும் சீண்டினால் முரட்டுக் கூட்டம் தான்.
 
புவனேஷ்வர், மாநில தலைநகருக்கான பளபளப்பெதுவும் இல்லாமல் இருக்கிறது. சிகப்போடிய கற்களில் நிறைய சிற்ப வேலை நடக்கிறது. நுணுக்கமான வேலை பாடில்லாமல் பெரிய பெரிய சிற்பங்களாய். புவனேஷ்வரிலிருந்து 60 கி.மி தொலைவில் பூரி. ஜகந்நாதர் கோவில் புராதனமாய், பெரிய கோவில்களுக்குரிய எல்லா லட்சணங்களுடன். ரொம்ப எதிர்பார்ப்போடு போனால் பிரதான சந்நிதியில் ஆச்சர்யம் தான் காத்திருந்தது. பலராமர், சுபத்திரா, ஜகந்நாதர்.. ரெண்டு அண்ணன்களும் தங்கையும். அதுவும் பிரம்மாண்டமான அளவில், மரத்தாலான, வித்தியாசமான அமைப்பில். கண்கள் ரெண்டும் பெரிய வட்டங்களாய், கைகள் இருக்க வேண்டிய இடத்தில் முன்புறம் நீட்டிய உருண்டையான வடிவத்தில். நடுவில் நின்றால் மூன்று பேரையும் ஒன்றாக முழுமையாகப் பார்க்க முடியாது. கொஞ்சம் வலது புறம் நகர்ந்தும், இடது புறம் நகர்ந்தும் தான் பலராமரையும் ஜகந்நாதரையும் பார்க்க முடியும்.
 
ஆச்சர்யம் தாங்காமல் வழிகாட்டியிடம் கேட்ட போது, அவருக்கு ரொம்ப சந்தோஷம். கதை சொல்லத்தான்! அப்போதைய ராஜாவுக்கு (பெயர் நினைவில்லை) கனவு... ஆற்றில் கட்டை வரும், அதை எடுத்து கடவுள் உருவம் செய்யவும், செய்பவர்கள் கடைசில் இறந்து விடுவார்கள் என்று. ஊரெல்லாம் அறிவித்தும் யாரும் வரவில்லை. கடைசியில் ஒரு வயதானவர் முன் வந்தார். அவருடைய நிபந்தனை... 28 நாள் பூட்டிய கதவிற்குப் பின்னால் வேலை செய்வேன். என்னவானாலும் கதவைத் திறக்கக் கூடாது என்று. ராஜாவும் சம்மதிக்க, வேலை தொடங்கியது. தினமும் வெளியிலிருந்து வேலை நடக்கும் சத்தம் கேட்டுக் கொண்டு காத்திருந்தார். 21 ம் நாள் சத்தம் எதுவும் வரவில்லை. ராஜாவுக்கு என்ன செய்யவென்று தெரியவில்லை. 24 ம் நாள் வரைக் காத்திருந்து பின்னர் கதவைத் திறக்க மயங்கிய நினையில் இருந்த முதியவர் ஏன் திறந்தாய் என்று ராஜாவைத் திட்டி விட்டு மாயமாய் மறந்து விட்டார். வேறு வழியில்லாமல் முற்றுப் பெறாத உருவங்களையே பிரதிஷ்டை செய்ததாக வரலாறு. சுவாரசியமாகத்தான் இருந்தது.
     
வெளிப்பிரகாரத்தில் இருக்கும் பால்கோபால் (குழந்தை கிருஷ்ணன்) கொள்ளை அழகு. இவ்வளவு பெரிய கோவிலில் பராமரிப்பு, இல்லை என்றே சொல்லலாம். எல்லா சன்னிதிகளிலும் கடவுள் சிலை மேலேயே கரப்பான் பூச்சி ஓடுகிறது. இந்தக் கோவிலில் என்றைக்கு கூட்டமே இல்லாமல் இருக்கும்? அன்றைக்குப் போய் அமைதியாய் ஒவ்வொன்றையும் பார்க்க வேண்டும். அப்படி ஒரு நாளே இருக்காது என்றுதான் தோண்றுகிறது.
 
பூரி கடற்கரை அதிகம் அசுத்தப் படாமல், ஆக்ரோஷமாய் இருக்கிறது. மழை இல்லாத நாட்களில் மணற்சிற்பங்களைப் பார்க்கலாம். சில மணி நேரங்களில் பிரம்மாண்டமாய் எழுந்து, காணாமலும் போய் விடுகிறது, கடலலையில்.
 
கோனார்க் தான் உண்மையான மாஸ்டர் பீஸ். ரெண்டு நாளாவது செலவு பண்ணி நிதானமாய் பார்த்தாலும் தீராது. அதுவும் இப்போது இருப்பது சிதிலமடைந்த கோவில் மட்டுமே. ஸ்தல புராணமாக சொல்வது... கிருஷ்ணருடைய மகன் சம்பா தீராத தோல் வியாதியால பாதிக்கப்பட்ட போது, இங்கு வந்திருந்து சூரிய ஒளியும், கடல் நீர் குளியலும் குணப்படுத்தியதால் சூரிய பகவானுக்காக இந்தக் கோவில் கட்டப் பட்டதாம்.
 
சரித்திரம் சொல்வது, முதலாம் நரசிம்ஹ தேவனால் கட்டப்பட்டதாக. கலிங்கத்துப் போருக்குப் (கலிங்கத்துப் போருக்கும் இந்த அரசருக்கும் என்ன சம்பந்தம்?) பிறகு மக்கள் இல்லற வாழ்வில் ஈடுபாடில்லாமல் போனதால் இப்படி(!!!) ஒரு கோவில் கட்டியதாக சொல்லப் படுகிறது. ரொம்ப நுணுக்கமான வேலைப் பாடுகளுடன், பாதிக்கு மேல் சிதைந்த போதும், கம்பீரமாய் நிற்கிறது.
 
தூண்கள் எதுவும் இல்லாமல், கற்களுக்கு நடுவில் இரும்புத் துண்டங்களை இணைத்து, முழு அமைப்பும் உச்சியில் இருந்த ஒரு சக்தி வாய்ந்த காந்தத்தால் இணைக்கப் பட்டிருந்தது. போர்ச்சுக்கீசியர்களின் கடல் பயணங்களின் போது காந்தத்தின் சக்தி அவர்களை வழி தவறச் செய்ததால் காந்தத்தை விலக்க முழு கோபுரமும் கொஞ்சம் கொஞ்சமாக சரியத் தொடங்கியது. சூரிய பகவான் சிலை தற்போது பூரியில் இருப்பதாக சொல்கிறார்கள். பிரதான மண்டபம், தொடர்ந்த நாட்டிய மண்டபம் எல்லாம் மண் மூடி, வெளிப்புறம் மட்டும் மீதியாய் நிற்கிறது.
   
ஏழு குதிரைகளும் (ஏழு நாட்கள்)  24 சக்கரங்களும் (24 மணி நேரம்) கொண்ட பிரம்மாண்டமான தேராக கோவில் அமைக்கப்பட்டிருந்தது. கோவில் மூன்று நிலைகளாக உள்ளது... குழந்தைப் பருவம், வாலிபப் பருவம், வயதான பருவம். குழந்தைகளின் கண் பார்வை படும் உயரத்தில் விலங்குகளின் சிற்பங்கள், அவர்கள் வயதிற்கேற்ப. வாலிப பருவத்தில்...கணக்கில்லாத சிற்பங்கள். ரெண்டு மணி நேரத்தில் பார்த்தது ரொம்ப சொற்பம். அலங்காரம் செய்து கொள்ளும் பெண், அவளுடைய அலங்கார சாதனங்களுடன். தோழிகளோடு குளிக்கும் பெண், கூடலுக்குத் தயாராகும் பெண். கூடலின் அத்தனை சாத்தியங்களும், சின்ன உருவங்களில், ஆளுயரத்தில், பிரம்மாண்டத்தில். வாத்ஸ்யாயனரின் அத்தனை முத்திரைகளும் இருப்பதாக சொல்கிறார்கள்.
 
வெள்ளைத்தோலோடு போனால் விவரமாக சொல்வார்கள் போல! வழிகாட்டிக்கு அதற்கு மேல் சொல்ல தயக்கம். அதனால் பார்க்காது விட்டது ரொம்ப அதிகம். முன் மண்டபத்தில் மூன்று பாகங்களாய் அமைத்து ஒவ்வொரு நான்கு மாதங்களிலும் சூரிய ஒளி ஒவ்வொரு பாகம் வழியாக உள்ளே இருந்த சூரிய பகவான் மேல் விழுமாறு அமைந்திருக்கிறது. இப்பொது அதெல்லாம் கேட்பதற்கு மட்டுமே, பார்க்க எதுவும் இல்லை. இன்னும் நாழிகை கணக்கில் எதேதோ விவரங்கள், நட்சத்திரக் கணக்கில் நிறைய அமைப்புகள். நல்ல விவரம் தெரிந்த ஒரு வழிகாட்டியும், ரெண்டு மூன்று நாளும் இருந்தால் ஒரு நிறைவான பயணம் நிச்சயம். பாதிக்கு மேல் விடலைகள் கூட்டம் தான், கிளுகிளு சிரிப்போடு வேடிக்கை பார்க்க. மிஞ்சியிருப்பதாவது பத்திரமாய் இருக்க வேண்டும்.

PS: 2001ல் நாங்கள் போயிருந்த போது அது ஒரு ஆள் நடமாட்டம் குறைந்த பகுதி. மாலை சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு டூரிஸ்ட் அலுவகத்தின் ஒரு சிப்பந்தி மட்டுமே இருப்பார் என்று சொல்லி அங்கே தங்க விடவில்லை. //அந்திநேரச் சூரியன், சந்திரனின் முதல் கிரணம், நல்ல பௌர்ணமி நிலவு, அதிகாலைச் சூரியன்... ஓவ்வொரு ஒளியில் அது என்ன நிறம் கொள்ளும் என்று பார்க்கும் ஆவலை அந்த சிதைந்த கோபுரம் தூண்டுகிறது.//  இப்படி எப்போதோ எழுதி வைத்திருந்திருக்கிறேன். பதினைந்து வருடங்களாகியும் அது நடக்கவில்லை!

கோனார்க் - பயணக்கட்டுரை.

Prelude: இன்றைக்கு கோனார்க் கோவில் பற்றி ஏதோ பேச்சு வந்த போதுதான் நான் எப்போதோ கோனார்க் பற்றி மரத்தடியில் எழுதியிருந்தது நினைவுக்கு வந்தது. எப்படியும் ப்ளாக்கில் இருக்கும் என்று தேடும் போதுதான் தெரிந்தது அது இங்கே வந்து சேர்ந்திருக்கவில்லை என்று. ஸோ... இந்த மீள்பதிவு! 2001ல் எழுதியது.

முதலில் கொஞ்சம் ஒரிஸ்ஸாவைப் பற்றி. அங்கே இருந்த இரண்டு வருடத்தில் எப்போது வெளியில் கிளம்பினாலும், ஊரும் மனிதர்களும் ஆச்சர்யம் தான். கேரளாவை நினைவு படுத்தும் பசுமை. எந்த நகரத்தை விட்டு ஒரு 50 கி.மி வெளியே போனாலும் ஒரு பக்கா கிராமம் பார்க்கலாம். பழுப்பேறிய வேட்டி, மேல் சட்டையில்லாத ஆண்கள். இன்னும் ஜாக்கெட்டுக்குப் பழகாத வயதான பெண்கள். அதிகம் போக்குவரத்தில்லாத ரோடுகளில் எல்லாமே தெருவிலேதான். நெல்லு காய வைப்பது, வட்டமாக உக்கார்ந்து ஊர்க்கதை பேசுவது... எல்லாமே. சரியான மண்ணின் மைந்தர்கள். வெளிப்பார்வைக்கு அமைதியா இருந்தாலும் சீண்டினால் முரட்டுக் கூட்டம் தான்.

புவனேஷ்வர், மாநில தலைநகருக்கான பளபளப்பெதுவும் இல்லாமல் இருக்கிறது. சிகப்போடிய கற்களில் நிறைய சிற்ப வேலை நடக்கிறது. நுணுக்கமான வேலை பாடில்லாமல் பெரிய பெரிய சிற்பங்களாய். புவனேஷ்வரிலிருந்து 60 கி.மி தொலைவில் பூரி. ஜகந்நாதர் கோவில் புராதனமாய், பெரிய கோவில்களுக்குரிய எல்லா லட்சணங்களுடன். ரொம்ப எதிர்பார்ப்போடு போனால் பிரதான சந்நிதியில் ஆச்சர்யம் தான் காத்திருந்தது. பலராமர், சுபத்திரா, ஜகந்நாதர்.. ரெண்டு அண்ணன்களும் தங்கையும். அதுவும் பிரம்மாண்டமான அளவில், மரத்தாலான, வித்தியாசமான அமைப்பில். கண்கள் ரெண்டும் பெரிய வட்டங்களாய், கைகள் இருக்க வேண்டிய இடத்தில் முன்புறம் நீட்டிய உருண்டையான வடிவத்தில். நடுவில் நின்றால் மூன்று பேரையும் ஒன்றாக முழுமையாகப் பார்க்க முடியாது. கொஞ்சம் வலது புறம் நகர்ந்தும், இடது புறம் நகர்ந்தும் தான் பலராமரையும் ஜகந்நாதரையும் பார்க்க முடியும்.
ஆச்சர்யம் தாங்காமல் வழிகாட்டியிடம் கேட்ட போது, அவருக்கு ரொம்ப சந்தோஷம். கதை சொல்லத்தான்! அப்போதைய ராஜாவுக்கு (பெயர் நினைவில்லை) கனவு... ஆற்றில் கட்டை வரும், அதை எடுத்து கடவுள் உருவம் செய்யவும், செய்பவர்கள் கடைசில் இறந்து விடுவார்கள் என்று. ஊரெல்லாம்
அறிவித்தும் யாரும் வரவில்லை. கடைசியில் ஒரு வயதானவர் முன் வந்தார். அவருடைய நிபந்தனை... 28 நாள் பூட்டிய கதவிற்குப் பின்னால் வேலை செய்வேன். என்னவானாலும் கதவைத் திறக்கக் கூடாது என்று. ராஜாவும் சம்மதிக்க, வேலை தொடங்கியது. தினமும் வெளியிலிருந்து வேலை நடக்கும் சத்தம் கேட்டுக் கொண்டு காத்திருந்தார். 21 ம் நாள் சத்தம் எதுவும் வரவில்லை. ராஜாவுக்கு என்ன செய்யவென்று தெரியவில்லை. 24 ம் நாள் வரைக் காத்திருந்து பின்னர் கதவைத் திறக்க மயங்கிய நினையில் இருந்த முதியவர் ஏன் திறந்தாய் என்று ராஜாவைத் திட்டி விட்டு மாயமாய் மறந்து விட்டார். வேறு வழியில்லாமல் முற்றுப் பெறாத உருவங்களையே பிரதிஷ்டை செய்ததாக வரலாறு. சுவாரசியமாகத்தான் இருந்தது.
     
வெளிப்பிரகாரத்தில் இருக்கும் பால்கோபால் (குழந்தை கிருஷ்ணன்) கொள்ளை அழகு. இவ்வளவு பெரிய கோவிலில் பராமரிப்பே இல்லை என்று சொல்லலாம். எல்லா சன்னிதிகளிலும் கடவுள் சிலை மேலேயே கரப்பான் பூச்சி ஓடுகிறது. இந்தக் கோவிலில் என்றைக்கு கூட்டமே இல்லாமல் இருக்கும்? அன்றைக்குப் போய் அமைதியாய் ஒவ்வொன்றையும் பார்க்க வேண்டும். அப்படி ஒரு நாளே இருக்காது என்றுதான் தோண்றுகிறது.
பூரி கடற்கரை அதிகம் அசுத்தப் படாமல், ஆக்ரோஷமாய் இருக்கிறது. மழை இல்லாத நாட்களில் மணற்சிற்பங்களைப் பார்க்கலாம். சில மணி நேரங்களில் பிரம்மாண்டமாய் எழுந்து, காணாமலும் போய் விடுகிறது, கடலலையில்.
கோனார்க் தான் உண்மையான மாஸ்டர் பீஸ். ரெண்டு நாளாவது செலவு பண்ணி நிதானமாய் பார்த்தாலும் தீராது. அதுவும் இப்போது இருப்பது சிதிலமடைந்த கோவில் மட்டுமே. ஸ்தல புராணமாக சொல்வது... கிருஷ்ணருடைய மகன் சம்பா தீராத தோல் வியாதியால பாதிக்கப்பட்ட போது, இங்கு வந்திருந்து சூரிய ஒளியும், கடல் நீர் குளியலும் குணப்படுத்தியதால் சூரிய பகவானுக்காக இந்தக் கோவில் கட்டப் பட்டதாம்.
சரித்திரம் சொல்வது, முதலாம் நரசிம்ஹ தேவனால் கட்டப்பட்டதாக. கலிங்கத்துப் போருக்குப் (கலிங்கத்துப் போருக்கும் இந்த அரசருக்கும் என்ன சம்பந்தம்?) பிறகு மக்கள் இல்லற வாழ்வில் ஈடுபாடில்லாமல் போனதால் இப்படி(!!!) ஒரு கோவில் கட்டியதாக சொல்லப் படுகிறது. ரொம்ப
நுணுக்கமான வேலைப் பாடுகளுடன், பாதிக்கு மேல் சிதைந்த போதும், கம்பீரமாய் நிற்கிறது.
தூண்கள் எதுவும் இல்லாமல், கற்களுக்கு நடுவில் இரும்புத் துண்டங்களை இணைத்து, முழு அமைப்பும் உச்சியில் இருந்த ஒரு சக்தி வாய்ந்த காந்தத்தால் இணைக்கப் பட்டிருந்தது. போர்ச்சுக்கீசியர்களின் கடல் பயணங்களின் போது காந்தத்தின் சக்தி அவர்களை வழி தவறச் செய்ததால் காந்தத்தை விலக்க முழு கோபுரமும் கொஞ்சம் கொஞ்சமாக சரியத் தொடங்கியது. சூரிய பகவான் சிலை தற்போது பூரியில் இருப்பதாக சொல்கிறார்கள். பிரதான மண்டபம், தொடர்ந்த நாட்டிய மண்டபம் எல்லாம் மண்
மூடி, வெளிப்புறம் மட்டும் மீதியாய் நிற்கிறது.
   
ஏழு குதிரைகளும் (ஏழு நாட்கள்)  24 சக்கரங்களும் (24 மணி நேரம்) கொண்ட பிரம்மாண்டமான தேராக கோவில் அமைக்கப்பட்டிருந்தது. கோவில் மூன்று நிலைகளாக உள்ளது... குழந்தைப் பருவம், வாலிபப் பருவம், வயதான பருவம். குழந்தைகளின் கண் பார்வை படும் உயரத்தில் விலங்குகளின் சிற்பங்கள், அவர்கள் வயதிற்கேற்ப. வாலிப பருவத்தில்...கணக்கில்லாத சிற்பங்கள். ரெண்டு மணி நேரத்தில் பார்த்தது ரொம்ப சொற்பம். அலங்காரம் செய்து கொள்ளும் பெண், அவளுடைய அலங்கார சாதனங்களுடன். தோழிகளோடு குளிக்கும் பெண், கூடலுக்குத் தயாராகும் பெண். கூடலின் அத்தனை
சாத்தியங்களும், சின்ன உருவங்களில், ஆளுயரத்தில், பிரம்மாண்டத்தில். வாத்ஸ்யாயனரின் அத்தனை முத்திரைகளும் இருப்பதாக சொல்கிறார்கள்.
வெள்ளைத்தோலோடு போனால் விவரமாக சொல்வார்கள் போல! வழிகாட்டிக்கு அதற்கு மேல் சொல்ல தயக்கம். அதனால் பார்க்காது விட்டது ரொம்ப அதிகம். முன் மண்டபத்தில் மூன்று பாகங்களாய் அமைத்து ஒவ்வொரு நான்கு மாதங்களிலும் சூரிய ஒளி ஒவ்வொரு பாகம் வழியாக உள்ளே இருந்த சூரிய பகவான் மேல் விழுமாறு அமைந்திருக்கிறது. இப்பொது அதெல்லாம் கேட்பதற்கு மட்டுமே, பார்க்க எதுவும் இல்லை. இன்னும் நாழிகை கணக்கில் எதேதோ விவரங்கள், நட்சத்திரக் கணக்கில் நிறைய அமைப்புகள். நல்ல விவரம் தெரிந்த ஒரு வழிகாட்டியும், ரெண்டு மூன்று நாளும் இருந்தால் ஒரு
நிறைவான பயணம். பாதிக்கு மேல் விடலைகள் கூட்டம் தான், கிளுகிளு சிரிப்போடு
வேடிக்கை பார்க்க. மிஞ்சியிருப்பதாவது பத்திரமாய் இருக்க வேண்டும்.

PS: 2001ல் நாங்கள் போயிருந்த போது அது ஒரு ஆள் நடமாட்டம் குறைந்த பகுதி. மாலை சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு டூரிஸ்ட் அலுவகத்தின் ஒரு சிப்பந்தி மட்டுமே இருப்பார் என்று சொல்லி அங்கே தங்க விடவில்லை. //அந்திநேரச் சூரியன், சந்திரனின் முதல் கிரணம், நல்ல பௌர்ணமி நிலவு, அதிகாலைச் சூரியன்... ஓவ்வொரு ஒளியில் அது என்ன நிறம் கொள்ளும் என்று பார்க்கும் ஆவலை அந்த சிதைந்த கோபுரம் தூண்டுகிறது.//  இப்படி எப்போதோ எழுதி வைத்திருந்திருக்கிறேன். பதினைந்து வருடங்களாகியும் இப்போதும் அது நடக்கவில்லை!

Friday, December 11, 2015

வீணையின் குரல் எஸ். பாலசந்தர்: ஓர் வாழ்க்கை சரிதம்


முதல் முதலாக வீணை பாலசந்தர் பெயரை அப்பா சொல்லித்தான் கேட்டிருக்கிறேன். ஏழெட்டு வயதிருக்கும் அப்போது. யாரிடமிருந்தோ கொண்டு வந்து வீட்டில் சில நாட்கள் இருந்த எல்பி ரெக்கார்ட் ப்ளேயரும் அதை அப்பா மட்டுமே கையாண்டதும் தெளிவில்லாமல் நினைவில் வந்து போகிறது. அதில் தான் கேட்டிருக்கக் கூடும். வாத்திய கருவி இசையைக் கேட்கும் பரிச்சயம் இல்லாததால் அதில் லயிக்க முடியாததுமாக ஞாபகம்.

ஒரு முறை பார்க் வீதியில் நவராத்திரி கொலு பார்க்கப் போன வீட்டில் பார்த்திருந்த வீணையும் ரொம்ப நாள் நினைவில் ஒரு ஆசையாய் தங்கியிருந்தது. லாவகமாக அதை வாசிப்பது போல ஒரு கற்பனை செய்து பார்த்திருக்கிறேன். அதை கற்றுக் கொள்ள ஆசைப் படுகிறேன் என்று சொல்லக் கூட முடியாது என்று மட்டும் அப்போதே தெரிந்திருந்தது. யாரிடமும் சொல்லாமலே மறைந்து போன ஆசை அது.

புத்தகம் வாங்குகிறோமோ இல்லையோ சும்மாவாகவாவது கொஞ்ச நாட்களுக்கு ஒரு முறை ஒரு வட்டம் அடித்துக் கொண்டிருந்த லேண்ட்மார்க்கை மூடியதை ஜீரணிக்கவே முடியாதிருந்தது. எக்ஸ்பிரஸ் அவென்யூவின் சிறிய புத்தகக் கடை அந்த லேண்ட்மார்க் நாட்களுக்கு உறை போடக் காணாது என்றாலும் அங்கே தான் இந்த வீணையின் குரல் கண்ணில் பட்டது. 

 வழக்கம் போல ஓய்ந்து ஒழிந்து வாசித்த போதும் புத்தகம் தந்த ஆச்சர்யம் அளவில்லாதது. விக்ரம் சம்பத் ஆங்கிலத்தில் எழுதி வியெஸ்வியால் தமிழில் மொழிபெயர்க்கப் பட்ட வீணை எஸ். பாலசந்தரின் வாழ்க்கை சரிதம். Genius, extra ordinarily confident, multi talented personality. இசை, ரேடியோ, வாசிப்பு, சினிமா என்று மனிதர் கை வைக்காத துறையேயில்லை. அதிலும் எல்லாவற்றிலுமே தி பெஸ்ட். வீணைதான் தன்னுடைய வாத்தியம் என்று முடிவெடுத்ததாகட்டும், சொந்த முயற்சியில் தானே கற்றுக் கொண்டதாகட்டும், வாத்தியத்தில் ஒவ்வொரு பாகத்திலும் தொடர்ந்து செய்து கொண்டிருந்த மாற்றங்கள்/ முன்னேற்றங்களாகட்டும்... எல்லாமே அசாதாரணமானது.

கர்நாடக இசையை வெளிநாடுகளுக்கு கொண்டு செல்ல, அதை சரியான முறையில் பிரபலப் படுத்த... என்ற எல்லா முயற்சிகளிலும் அவரது திட்டமிடல்களும் நிகழ்த்திக் காட்டியதும்... perfect! மொத்த வாழ்க்கை நிகழ்ச்சிகளை தன்னுடைய குறிப்புகளோடு ஆல்பங்களாக தொகுத்து வைக்க எத்தனை தன்னம்பிக்கை வேண்டியிருக்கும். என் வாழ்க்கை, அதை நான் நிலைத்திருக்க விட்டுச் செல்கிறேன் என்றதோர் தன்னம்பிக்கை.


அதி தீவிர கொள்கைப் பிடிப்பும் அதற்காக அதன் உச்சம் வரை போராடுவதுமான ஹீரோயிஸம் எல்லாரும் செய்ய விரும்பும் ஒன்றாயிருந்தாலும் செய்யக் கூடிய சாத்தியங்கள் குறைவு. எஸ். பாலசந்தர் அதற்காக பெரும் அமைப்புகளோடு, பெரிய இசைக்கலைஞர்களோடு தன்னந்தனியே நிகழ்த்திய போராட்டங்களும் அதற்காக சந்தித்த எதிர்ப்புகளும் மலைக்க வைக்கிறது. அதற்காக முரடரென்று ஒதுக்க முடியாத மென்மையான பக்கங்களுக்கும் சொந்தக்காரர். ஆதர்ச மனிதராயிருந்திருக்கிறார். அவருடைய இயக்கத்தில் வந்த காலங்கள் கடந்தும் பெயர் சொல்லும் படங்களைத் தேடிப் பார்க்க வேண்டும்.

A man with larger than life image... அது போல ஒரு வாழ்க்கை வாழ்ந்திருக்க யாரும் ஆசைப் படக் கூடும், ஆனால் அவரோடு வாழ்ந்திருந்திருப்பது என்பது நிச்சயம் சுலபமல்ல.

Saturday, June 13, 2015

Epilogue of இடப்பெயர்ச்சி பலன்கள்.

மரத்தடியில் ஒரு காலத்தில் எழுதியதெல்லாம் அவரவர் பேர் போட்டு ஒரு ஃபோல்டரில் வைத்திருந்தார்கள். எனக்கு தெரிந்து அது முழுக்க முழுக்க ஜெயஸ்ரீயின் உழைப்பு. ப்ளாக்  ஆரம்பித்தபோது ரொம்ப சுலபமாக அதற்கு ஒரு லிங்க் கொடுத்து மொத்தமாக மறந்தே போனதை மரத்தடி.காம் இல்லாமல் போன போது அவசரமாக ஒரு வோர்ட்ப்ரெஸ் பளாக்ல் சேமித்து வைத்தும், இது தவறிப் போயிருக்கிறது. அதனால் தான் இங்கே.

தினம் ஒன்றாக இந்த பனிரெண்டு நாட்களாக‌ இடப்பெயர்ச்சி பலன்களை ரீ-போஸ்ட் செய்யும் போது மறுபடியும் அந்த நாட்களுக்கு போய் விட்டு வந்தேன். நிறைய விஷயம் காலப் போக்கிலே நீர்த்துப் போயிருக்கிறது. குறிப்பாக‌, கோனார்க். அதோட தொடர்பு படுத்தி நான் வைத்திருந்த கனவுகளை மறந்தே போயிருக்கிறேன். இனிமேல் அது வெறும் கனவாய் மட்டும் இருக்கப் போகிறது. சும்மாவாவது ஒரு தரம் போய் பார்த்து விட்டு வர வேண்டும்.

இடையில் ஆறாவது பாகம் காணாமல் பழைய மெயில் குப்பைகளையெல்லாம் கிளறும் போது தான் தெரிந்தது இதை எழுத நான் எவ்வளவு தயங்கினேன் என்றும் சின்னக் கண்ணன் என்னை எழுத வச்சதும். ஒரு மாதிரி சொந்தக் கதையெல்லாம் கடை வைக்கற மாதிரி ஆயிடுமோன்னு நான் பயந்ததும் ஞாபகம் வருகிறது. ஆனால் இதெல்லாம் வெறும் புக் மார்க் தான். இதை நான் வாசிக்கும் போது விரியும் பெரிய படம் எனக்கே எனக்கு மட்டும் சொந்தமானது. (நானெல்லாம் எப்படி சுயசரிதை எழுதப் போறேனோ! அப்படி ரொம்ப நாளாக‌ சொல்லிக் கொண்டிருக்கிறேன்!)

அந்த தேடலில் கிடைத்த காபி க்ளப்பில் எழுதிய 'மலர்மஞ்சம்' போஸ்ட் ஏதோ தெரியாத ஃபாண்டில் இருக்கிறது. என்ன எழுதியிருப்பேன் என்பது ஞாபகம் இருந்தாலும் முழுதாக வாசிக்க ஆசையாக இருக்கிறது. இதுவரையான முட்டல்களில் எதுவும் ப்ரயோஜனமில்லை. ஆனால் மலர்மஞ்சம் மறுபடியும் வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன்.  கூடவே ஆதிகாலத்து அமெச்சூர் கவிதை முயற்சிகள். யம்மா... எல்லாருக்கும் அப்போது நிறைய பொறுமை இருந்திருக்கிறது. தட்டிக் கொட்டி சரி செய்திருக்கிறார்கள். பாராவின் புத்தகப்புழு குழுமத்திற்காக எழுதிய இரண்டு காதல் கவிதைகளுக்கும் அதே கதி. எங்கிருந்து பிடித்திருப்பேன் அந்த ஃபாண்ட்களை!

இத்தனை ஊர் சுத்தல்களுக்கெல்லாம் சேர்த்தி வைத்து கடந்த ஒன்பது வருடங்களாக சென்னை வாசம். ஒரு ஊரில் ரெண்டு வருஷத்துக்கு மேல் தங்காத நான் எப்படி இத்தனை நாள் ஓட்டினேன் என்பது ஆச்சரியம். ஆனால் சென்னை அலுத்துப் போய்விட்டது. இடப்பெயர்ச்சி பலன்கள் இரண்டாவது சீரீஸ் எழுதவாவது இங்கேயிருந்து மாற்றம் வர வேண்டும். வெளியூர்களில் இருக்கும் ஒரு ஆனானிமிட்டி இங்கேயில்லை. அந்த தைரியத்தில் தான் கொல்கத்தாவில் இருந்த போது சோனார்காச்சிக்கெல்லாம் போக யோசித்திருக்கிறேன். சென்னையில் வாலை சுருட்டிக் கொண்டிருக்கிறேன்.

Looking back... today I am more stable, calm and accepting.  ஆனாலும் மனசுக்குள் உணரும் தனிமை மட்டும் ஆழமாக, நீண்டதாக.

Thursday, June 11, 2015

இடப்பெயர்ச்சி பலன்கள் - 12/ கடைசி.

கடந்த ஐந்து மாதங்களாக கொல்கத்தாவை என் ஊர் என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன். கொல்கத்தா... கோவில்தானா என்று திகைக்க வைக்கும் காளிகாட், கங்கைக்கரை தக்ஷினேஷ்வர், அந்த நாளைய கல்கத்தாவை ஓவியங்களாய் பதிந்து வைத்திருக்கும் விக்டோரியா மெமோரியல், எல்லோருக்குள்ளும் இழையோடும் ரபீந்திர சங்கீத், சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம் பெருமையோடு நினைவுகூறும் ரே, பாதாள ரயிலும், பேருந்துகளும், டாக்ஸிகளும், ஆட்டோ, சைக்கிள் ரிக்ஷாக்கள் போதாமல் இன்னும் ஆள் இழுக்கும் கை வண்டி,  நட்டநடு சாலையில் ஆமை வேகத்தில் நகரும் அரதப் பழசான ட்ராம், அது பாழாக்கிப் போட்டிருக்கும் பாதைகள்...

கணவர் உபயோகத்தில் இறகாட்டம் மிதந்த எங்கள் கார், இங்கே ஓட்டுனர் மற்றும் கொல்கத்தா சாலைகளின் உபயத்தில் கமர்கட்டாய் உருளுகிறது. மூன்று வருடங்களுக்கு முன்பு சும்மா எட்டிப் பார்க்க வந்திருந்த போது இருந்த அளவு இப்போது போக்குவரத்து நெரிசல் இல்லைதான். ஆனாலும் அதற்குப் பழகிய ஓட்டுனர்களின் பொறுமையின்மை நேரம் வாய்க்கும் போதெல்லாம் காதைப் பிளக்க வைக்கிறது. அடிக்கும் மஞ்சளில் குட்டி யானைகளாய் ஓடும் டாக்ஸிகள். அளவுக்கு அதிகமாக மாசுப்பட்டிருக்கும் காற்று மண்டலம்.

இன்னமும் கொல்கத்தா என்ன மாதிரி ஊர் என்று புரிந்து கொள்ள முடியவில்லை. ஆச்சர்யங்களாய் நிறைந்திருக்கிறது. அதீத பக்தியும் நவீனமும் கலந்து கட்டி ஒவ்வொரு நேரம் ஒவ்வொரு முகம் காட்டுகிறது. மெட்ரோவின் பளபளப்பின் அடிநாதமாய் கலாச்சார சாயம் குறைவில்லாமல். செழிப்பும் வறுமையும் அதிக இடைவெளியில்லாமல் ஒரே ஓவியத்தில் அதனதன் இருப்பை நிலைநாட்டிக் கொண்டு.

பள்ளிக்கூடம் போகும் குழந்தைகள் வீட்டு வாசலில் ஆட்டோ ஏறி டாட்டா சொல்லிப் போகும் பழக்கம் முழுதாக வரவில்லை. இன்னும் அம்மாவோ வீட்டு வேலைக்காரரோ போய் விட்டு, கூட்டி வருகிறார்கள். பத்திரக்குறைவு தான் காரணம் என்பது ஒரு அம்மாவிடமிருந்து கேள்விப்பட்டது. பள்ளிக்கூடம் விடும் நேரம் ஒருவர் மேல் ஒருவர் முட்டிக் கொண்டு நெருக்கியடித்து வாசலில் காத்திருக்கும் பெரும் கூட்டம் எனக்குப் புதிதாய் இருக்கிறது.

ஷ சப்தம் அதிகமாய் ஒலிக்கும் பெங்காலி பாஷை. திட்டினால் கூட இனிமையாய் இருக்கும் என்ற பெருமை பெங்காலியர்களுக்கு. ரொஷகொல்லாவும் சந்தேஷ¤ம் உருளைக்கிழங்கும் மீனும். உருளைக்கிழங்குக்கு பேர் கூட வைத்திருக்கிறார்கள்... 'சந்திரமுகி'! மீனைக் கொண்டாடுவதிலும் குறைவில்லை. வந்த புதிதில் கவனத்தை ஈர்த்த ஒரு நகைக்கடை விளம்பரம் 'இரண்டாயிரம் ரூபாய்க்கு நகை வாங்கினால் ஒரு ·ப்ரெஷ் ஹில்ஸா இலவசம்!' ஹில்ஸா வேறொன்றுமில்லை, மீன்தான்! நகைக்கடையில் இருந்து வெளியே வரும் போது ஒரு கையில் நகை, இன்னொன்றில் மீன்... கற்பனை செய்து பார்க்க கொஞ்சம் வினோதமாகத்தான் இருந்தது.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க... கொல்கத்தாவாசிகளின் அவசர உணவாகிவிட்ட 'ரோல்'. மைதா மாவினால் செய்த ஒரு பெரிய, சற்றே தடிமனான ரொட்டி. முட்டை போட்டோ, அல்லாமலோ, உள்ளே காய்கறியோ, கோழியோ, பனீரோ, இறைச்சியோ அடைத்து உருட்டி, கீழே ஒரு பேப்பர் நாப்கின் சுற்றி ரெடியாகி விடுகிறது. குறைந்த விலை. காத்திருக்கும் கூட்டத்தில் கூலிக்காரரும், டை கட்டின ஆசாமிகளும்.

தலைமுறை தலைமுறையாக இருக்கும் குஜராத்திகளும் மார்வாடிகளும் நேப்பாளிகளும். ப்யூட்டி பார்லர்களில் பெரும்பாலும் நேப்பாளிப் பெண்கள் ஆதிக்கம். எவ்வளவு பூஜா கொண்டாடுவீர்கள் என்ற என் கேள்விக்கு மாதம் ஒவ்வொரு பூஜாவின் பெயர் சொல்லிக் கொண்டு வந்த சிகை அலங்காரப் பெண்ணின் வரிசையில் சுபாஷ் ஜெயந்தியும் ஒரு பூஜா! என்னுடைய ஆச்சரியத்தைப் பார்த்து அதை இன்னும் உறுதிப்படுத்திச் சொல்கிறார்.

கொல்கத்தா பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. சிக்னலில் காத்திருந்த ஒரு நாள் சுவரொட்டியில் கண்ணில் பட்ட தெரசாவின் பெயர், மறந்தே போய் விட்ட எதையெதையோ நினைவு படுத்தியது. என்னுடைய ஐந்தாம் வகுப்பு அரைப்பரிட்சை ஜிகே பேப்பர் திருத்தின ஆசிரியர் தான் காரணமாயிருக்க வேண்டும். அந்தப் பரிட்சையில், கஷ்டப்படுபவர்களுக்கு எப்படி உதவுவாய் என்றோ என்னவோ ஒரு கேள்வி. கண் தெரியாதவங்களுக்கு உதவி செய்வேன். அவங்களுக்கு அப்படி, இவங்களுக்கு இப்படி என்று ஏதோ பதில் எழுதிய ஞாபகம்.

மூன்றாம் வகுப்பு வரை பக்கத்திலிருந்த நகராட்சிப் பள்ளியில் தான் படிப்பு. வீட்டுப் பாடமெல்லாம் எதுவும் கிடையாது. சாயந்திரம் பூராவும் விளையாடி விட்டு, ராத்திரி சாப்பாடு ஆனதும் வாசலில் பாய் போட்டு நானும் பாட்டியும் நிலாவையும் நட்சத்திரத்தையும் பார்த்துக் கொண்டே படுத்திருந்தது. திடீரென்று அடுத்த வருஷம் (தமிழ் மீடியம்னாலும்) கான்வென்ட்டில். முட்டி மோதி நாற்பதைத் தாண்டுவதே பெரிய விஷயம். அந்த அரைப் பரிட்சை ஜிகே பேப்பரில் 85 மார்க். அதுவும் வகுப்பில் முதல் மார்க். அப்போதிருந்து தான் சமூக சேவை என்று ஏதோ உள்ளுக்குள்ளே உதித்திருக்க வேண்டும். பெரியவளானதும் தெரஸா மாதிரி ஆகப்போகிறேன். அது செய்யப் போகிறேன், இது செய்யப் போகிறேன் என்று ஏதேதோ கனவுகள். ஆனால் யார்கிட்டயும் மூச்சு விட்டதில்லை. கேலி செய்வார்கள் என்ற பயம் தான்.

கல்யாணமே பண்ணிக்க போறதில்லை என்று நினைத்ததற்கு படிக்க படிக்கவே கல்யாணம். அதைத் தொடர்ந்த பொறுப்புகள், ஓட்டங்கள். என்னுடைய நேரங்கள் எல்லாருடையதாகிப் போக... என்னுடைய முடிவுகள் எல்லோரையும் அனுசரித்ததாக. இப்போது சட்டென்று பொறுப்புகள் எதுவும் இல்லாமல் போய்விட்டது போலிருக்கிறது. பதினெட்டு வருடங்களுக்கு முன் அப்பாவின் நிழலிலிருந்து கேள்வியே இல்லாமல் கணவருடைய நிழலுக்கு மாறிய நான்...
இப்போதைய நான்... ரொம்பத்தான் மாறிவிட்டிருக்கிறேன். வாழ்க்கையும். இப்போது எல்லா நேரமும் என்னுடையதாய். ஆனால் எதுவும் செய்ய இஷ்டமில்லாமல் விலகி நின்று கை கட்டி வேடிக்கை பார்க்கிறது மனம். ஏனோ இந்த முறை அதைத் தொந்தரவு செய்யத் தோணவில்லை.

ஆனாலும் எதையோ எதிர்பார்த்திருக்கிறது. இந்த முறை யாரால், எப்படி, என்ன என்று. சென்ற முறை லேடிஸ் க்ளப்பில் சந்தித்த மிஸஸ். மொஹந்தியோ, கணவருடைய அலுவலக விருந்தில் சந்திக்கும் யாராவதோ, வழக்கமாக போகும் சிட்டி சென்டரில் எதிர்படும் யாரோ, எதாவது செய்தித்தாள் விளம்பரமோ, என்னுடைய அஞ்சல் வழி கல்வியோ... எதாவது என் பாதையை மாற்றி எனக்கு எதையாவது அறிமுகப்படுத்தலாம். காத்திருக்கிறேன், அந்த முகம் தெரியாத மனிதருக்கு. அந்த மாற்றத்திற்கு.

Wednesday, June 10, 2015

இடப்பெயர்ச்சி பலன்கள் - 11

வழக்கமாக எல்லா ஊர்களையும் போலத்தான் பள்ளிக்கூடம் தேடும் படலம் தொடங்கியது. வழக்கம் போல பெயருக்கு ஒரு நுழைவுத் தேர்வு, டொனேஷன் பேரம், ஒரு நேர்முகத் தேர்வு. வழக்கமான கேள்விகள்... வழக்கமான பதில்கள். எல்லாம் முடிந்து, இனி கிளம்ப வேண்டியது தான் என்று எழுந்திருக்கும் போது தான் வழக்கமே இல்லாமல் அது நடந்தது.

"எங்கள் பள்ளிக் கூடத்தில் ஆசிரியராக பணியாற்ற விருப்பமா?"

அந்தக் கேள்வியை நம்ப முதலில் சிரமமாக இருந்தது. இதற்கு முன்னால் இப்படிஒரு கேள்வியை யாரும் கேட்டது இல்லை. கேட்டிருந்தாலும் கொஞ்சம் யோசிக்க வேண்டியிருந்திருக்கும். ஆனால் இப்போது அப்படி ஒரு அவசியமில்லாமல் இருந்தது. ஒரு நிமிட தயக்கத்திற்குப் பிறகு சட்டென்று சரி சொன்னது மட்டுமல்லாமல் கடைசியில் எவ்வளவு சம்பளம் கொடுப்பீர்கள் என்று கேட்டது நானா என்று இப்போதும் ஆச்சரியம்! என்னுடைய நேர்முகத் தேர்வு உடனே ஆரம்பித்தது. சின்னச் சின்ன ஒன்றிரண்டு கேள்விகளுக்கு ஏதோ நீள நீளமாய் பதில் சொல்ல, கொஞ்சம் குழப்பத்தோடு பார்த்துக் கொண்டிருந்த கணவரின் முகத்தைத் தவிர வேறெதும் சரியாக நினைவில்லை.

சீக்கிரம் தெரிவிக்கிறோம் என்று சொல்லி அனுப்பிய போது அந்த காத்திருத்தல் பழக்கமில்லாததாக இருந்தது. வீட்டில் தொலைபேசி இணைப்பு கிடைத்திருக்கவில்லையானதால் கணவரின் செல்பேசி எண்ணைத்தான் கொடுத்திருந்தோம். ஒரு வாரத்தில் நான் கோவை சென்றுவிட, அந்த நினைவு சற்றே விலகியிருந்தது. ஆனாலும் கணவரோடு பேசும் போதெல்லாம் கேட்க மறக்கவில்லை. திரும்பி வந்த ஒரு வாரத்தில் பள்ளிக்கூடம் தொடங்கி விட்டது. எந்த அழைப்பும் வரவில்லை! ஒன்றிரண்டு முறை நானாவது கூப்பிட்டு விசாரித்திருக்க வேண்டுமோ என்று அப்புறமாகத்தான் உதித்தது! ஆனாலும் நேரம் கடந்து விட்டது. வேலைக்குப் போகப் போகிறேன் என்ற நினைப்பு சுகம் மட்டுமே அனுபவிக்கக் கிடைத்தது.

எல்லாம் மறுபடியும் வழக்கம் போல. காலையில் எல்லோரும் கிளம்பிப் போய் விட டிவி, இணையம், அழைப்பு மணி அடித்து எட்டிப் பார்க்கும் பால்காரர், வேலைக்காரம்மா, பள்ளிக்கூடத்தில் இருந்து திரும்பி வரும் பிள்ளைகள், ஒவ்வொருவராக டியூஷன் வகுப்புகளுக்கு செல்வதும், திரும்பி வருவதுமாய்... நாள்பூராவும் இதுவே. இடையில் வந்த ஆசிரியர் வேலை ஆசை எல்லாவற்றையும் கலைத்து போட்டு விட்டது போலிருந்தது. இரண்டு மூன்று மாதம் அந்த பாதிப்பில் வேறு வேலைகள் கூடத் தேடி... பின் மெல்ல எல்லாம் இயல்பானது. மறுபடியும் பழைய வாழ்க்கை பழகிப் போனது.

டிசம்பர் மாதம் முதல் வாரம் ஆபிஸிலிருந்து வந்த கணவர் 'சொல்லவே மறந்துட்டேன்! ஸ்கூல்ல இருந்து உன்னைக் கேட்டு போன் வந்தது. வேலையில சேர விருப்பம்னா ஞாயிற்றுக் கிழமை காலைல வரச் சொன்னாங்க' என்ற போது சந்தோஷத்தை அடக்கி வைப்பது சுலபமாயிருக்கவில்லை. இந்த முறை என்னை ஏமாற்றாமல் வேலை கிடைத்து விட்டது. முப்பத்தி ஐந்து வயதில் முதல் முதலாக வேலைக்குப் போகும் அனுபவம்! இரண்டாம் வகுப்புக் குழந்தைகளுக்கு ஆசிரியராக. இந்த அனுபவங்களை ஏற்கனவே கொஞ்சம் எழுதியிருக்கிறேன் என்றாலும் எப்போது யோசித்தாலும் புதிது புதிதாய் எதாவது நினைவுக்கு வரத்தான் செய்கிறது!

முதல் நாள்... குழந்தைகளுக்கு அரைப் பரிட்சை தொடங்கும் நாள். ஐம்பது மிரண்ட முகங்களுக்கு முன்னால் ஐம்பத்தி ஒன்றாக நான். பேப்பரைக் கொடுத்து, கேள்விகளை எழுதிப் போட்டு, என் கையெழுத்து புரிகிறதா என்று திரும்பத் திரும்பக் கேட்டு, கடைசி நிமிஷம் வரை எழுத நேரம் கொடுத்து... மணி அடித்ததும் எல்லோரும் அவசர அவசரமாக பேப்பரை வீசிவிட்டு ஓடி விட எண்ணிப் பார்த்தால் நான்கு பேப்பர் குறைந்திருந்தது! வரிசைப் படி முதலிலேயே வாங்க ஆரம்பித்திருக்க வேண்டும் என்ற சாதாரண யோசனை கூட எனக்கு இல்லாதது உரைத்தது.

தொடர்ந்த நாட்களில் என்னுடைய தவறுகளில் இருந்து நிறைய கற்றுக் கொள்ள முடிந்தது. ஒரு ஆசிரியர் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று ஒரு அம்மாவாக எதிர்பார்த்தேனோ அதையெல்லாம் செய்வது எவ்வளவு சிரமம் என்று அப்போது தான் புரிந்தது. நான் செய்ய நினைத்ததையும் செய்ய முடியாமல் முடிக்க வேண்டிய பாடங்களும் மற்ற வேலைகளும் ஆக்ரமித்துக் கொண்டது.

அந்த நாட்களில் என் குழந்தைகள் என்னை எனக்கு அடையாளம் காட்டினர். எனக்கு என்ன தெரியும் என்ன தெரியாது என்பதை உணர வைத்தனர். அவர்களுடைய உலகத்தை எட்டிப் பார்க்க, உட்கார்ந்து ரசிக்க எனக்கு அனுமதி கிடைத்தது. சந்தோஷமான நாட்கள் சொந்தமானது. என்னுடைய ஆர்வமும் வேகமும் சிலரைத் தொற்றிக் கொண்டது என்றாலும் என்னால் எந்த மாற்றமும் செய்ய முடியாத குழந்தைகளும் இருந்தன.

பள்ளிக் கூடத்தில் வேண்டாமென்று விலக்கியது போக மீதமான பாடங்களே அந்த வயதுக் குழந்தைகளுக்கு அதிகம் என்று எனக்குப் பட்டது. ஒரு நாளின் ஒரு வகுப்பைக் கூட வேறெதற்கும் உபயோகப் படுத்த முடியாத வகையில் இழுத்துப் பிடித்த பாடத்திட்டங்கள். பாடங்களைத் தாண்டி அந்த குழந்தைகளைப் புரிந்து கொள்ள நேரமில்லாதது பெரிய குறையாக இருந்தது. குழந்தைகளை விட அவர்களின் பெற்றோர்கள். அவர்களுடைய அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்பு. அது திருட்டுத்தனம் செய்தாவது முதல் மதிப்பெண் வாங்கத் தூண்டியதும்... ஆறேழு வயதுக் குழந்தைகளுக்கு இத்தனை சிரமங்கள் தேவையேயில்லை.

நான்கு மாதங்கள் முடிந்தது. நிறுவனத்தின் சமூகத்தைச் சாராதவர்கள் பதினொரு மாத ஒப்பந்தத்தில் வேலைக்கு அமர்த்தப் பட்டிருந்தோம். மறுபடியும் புதிதாக விண்ணப்பித்து தேர்வு செய்வது நடைமுறை. ஏப்ரல் மாதம் கடைசி தேதி வெளியே வரும் போது அடுத்த வருஷம் இந்த வேலை எனக்கு எவ்வளவு அவசியம் என்று எப்படி, யாருக்குச் சொல்லிவிட்டு வர என்று தெரியவில்லை. வெளியே வந்த எல்லோருக்கும் ஒரு வகையில் வேலை அவசியமாயிருக்கையில் எனக்கு வேறு வகையில் அத்தியாவசியமாயிருந்தது.

ஜூன் முதல் வாரம் ஊரில் ஒரு திருமணத்தில் கலந்து கொண்டு தாமதமாக வந்த போது இந்த முறையும் எந்தத் தகவலும் இல்லை. ஆனால் இந்த முறை எந்தத் தயக்கத்திலும் இழக்க விரும்பாமல் போய் கேட்ட போது எனக்கு டபுள் ப்ரமோஷன் கிடைத்திருந்தது! நான்காம் வகுப்பு ஆசிரியராக. பாதிக் கண்களில் உனக்கு எப்படி அந்த வகுப்பு கிடைத்தது என்ற கேள்வி... சிலரின் ஐயோ பாவம் என்ற பார்வையும். பிறகுதான் தெரிந்தது என் வகுப்பில் பிரின்ஸிபலின் மகள் படிப்பது!

இரண்டே வயது பெரிய இந்தக் குழந்தைகள் என் எண்ணங்களை எல்லாம் தூள் தூளாக்கினர். சொல்லிக் கொடுக்க வேண்டிய வகையில் சொல்லிக் கொடுத்தால் எதையும் கற்றுக் கொள்வோம் என்று நிரூபித்தார்கள். எங்கேயோ எப்போதோ மேலோட்டமாக படித்திருந்த விபரங்களை அவர்களுக்காக என்னைத் தேடித் தெளிவாகத் தெரிந்து வரச் செய்தார்கள். கேள்விகள்... கேள்விகள்...! இப்போதும் அதே விரட்டும் பாடத்திட்டங்கள் இருந்த போதும் நாங்கள்(நானும் என் மாணவர்களும்) நேரம் ஒதுக்கப் பழகியிருந்தோம்.

ஒரு முழு வருடம். நிறைய சந்தோஷங்கள். கொஞ்சம் மன வருத்தங்கள். நிர்வாகத்தின் குளறுபடிகள். பணம் புகுந்து விளையாடி காண்பிக்கும் வேடிக்கைகள்... என்னால் எதுவும் செய்ய முடியாத போது அதில் ஒரு பங்காக இருக்க விரும்பவில்லை. அடுத்த வருடத்திற்கு உயர்நிலை வகுப்பிற்கு விண்ணப்பித்திருந்த போதும், அதற்கான முறையான கல்வித்தகுதி இல்லாத போதும் எனக்கு அந்த வேலையைக் கொடுக்க நிர்வாகம் சம்மதித்த போதும்
ஏற்கவில்லை. ஒருவேளை நிர்வாகத்தின் இடத்தில் இருந்து பார்த்தால் அவர்கள் நிலமை புரிந்திருக்குமோ என்னவோ?!

மொத்ததில் சூரத் வாழ்க்கையில் அளவில்லாமல் அடைந்தது மட்டுமே. இழந்தது... எதுவுமில்லை.

Tuesday, June 09, 2015

இடப்பெயர்ச்சி பலன்கள் - 10

ஒரிஸ்ஸாவில் இருந்த இரண்டு வருடங்களில் அது ஏனோ ஒரு துண்டிக்கப் பட்ட இடம் போலவே இருந்தது. ஒரு பத்து வருஷம் மெதுவாக நடந்து கொண்டிருப்பது போல. புவனேஷ்வர் கூட ஒரு மாநில தலைநகருக்கான லட்சணங்கள் எதுவும் இல்லாமல். சுத்தமான காற்று, விலைவாசி குறைவு, எளிமையாக மக்கள்... எல்லாம் நல்லதாகவே இருந்த போதும் எதுவோ ஒன்று ஒட்டாதது போன்ற உணர்வு. தனித்திருப்பது போன்ற தோணல். அது விரட்டின விரட்டல் முதல் முதலாக இணையத்திற்குள் நுழைய வைத்தது.

நல்ல நட்பு வேண்டும் என்ற தேடலோடு தொடங்கிய பயணத்தில் ஆரம்பத்தில் அதைத் தவிர எல்லாம் கிடைத்தது. அந்த நாட்களில் ஒரு நண்பர் முலம் 'தினம் ஒரு கவிதை' அறிமுகமானது. அவரே ஆர்கேகே யின் சுட்டியும் தந்தார். எனக்கு எவ்வளவு பெரிய வாசலைத் திறக்கிறார் என்று அப்போது நிச்சயம் நினைத்திருக்க மாட்டார்.

என்னுடைய முதல் கவிதை... அதைப் பிரித்துப் போட்டு சொல் சிக்கனம் சொல்லித்தந்தது... முதல் கதை... என்னவோ என்னுடைய எழுத்தில் 'நான்' தெரியாமல் மறைந்து சாமர்த்தியமாக எழுதிக் கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டிருந்த என் நினைப்பைப் போட்டு உடைத்து என்னை என் கூட்டிலிருந்து வெளியே இழுத்தது... இப்படி தெரிந்தோ தெரியாமலோ எனக்குள் நிறைய பாதிப்பை ஏற்படுத்தியவர்கள். இதுவெல்லாம் மட்டுமே ஒரிஸ்ஸா வாழ்க்கையின் கொஞ்சமே கொஞ்சம் நிறங்கள்.

பிள்ளைகள் பாடங்களோடு போராடிக் கொண்டிருக்க, ரொம்ப ஜோராக தொடங்கிய வேலை ஏதேதோ அனுமதி கிடைக்காததால் ஆறு மாதத்தில் நின்று போய் விட ஒரு வருஷம் வீட்டில் இருந்து போரடித்துப் போயிருந்த கணவர் சூரத்திற்கு மாற்றல் கிடைத்ததும் ஒரு ஜனவரியில் 'விட்டால் போதும்' என்று கிளம்பிப் போய்விட பரிட்சை முடியும் வரை நாங்கள் அங்கேயே இருக்க வேண்டி வர... அந்த நாட்களில் இணையக் குழுக்கள் தான் எல்லாமுமாயிருந்தது.
எங்கேயோ ஒரு ஓரத்தில் அமர்ந்து எல்லாவற்றையும் வெறும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.

மே மாதம் பரிட்சை முடித்து பாலேஷ்வரிலிருந்து கிளம்பும் போது வழக்கமாக வரும் யாரையாவது பிரிந்து போகும் வருத்தம் முதல் முறையாக இல்லாமல் போனது. மனிதர்களோடு நெருங்கியது காந்திதாமோடு முடிந்து விட்டது. எதிலும் ரொம்ப பிடிப்பில்லை. யார் மீதும் பெரிய ஒட்டுதல் இல்லை. அப்படி நான் ஆகிப் போய் விட்டது சரியோ, தவறோ... ஆனால் அப்படித்தான்!

பத்து வருடங்கள் கழித்து மறுபடியும் சூரத். முதல்முறையாக ஏற்கனவே இருந்த இடத்திற்கு மீண்டும். நாங்கள் போய்ச் சேர்ந்த போது வெறும் நூறு கிலோமீட்டர் தூரத்தில் பரோடாவும், கோத்ராவும் கொதித்துக் கொண்டிருந்தது. மறுபடியும் எத்தனை கலவரங்களோ...எத்தனை சாவுகளோ என்ற யோசனையோடு தான் தொடங்கியது. ஆச்சர்யமாக சூரத்தில் அதன் நிழல் கூட இல்லை.

பரட்டைத் தலையும் மூக்கு ஒழுக்கலுமாய் நாங்கள் விட்டுப் போன சூரத் இடையில் வந்து போன ப்ளேக்கில் முற்றிலும் மாறி விட்டிருந்தது. எங்கே பார்த்தாலும் பளிச்சென்று சுத்தமாய், சாலைகள் அகலமாய், புதிய பாலங்கள், கொழிக்கும் செல்வம். புதிது புதிதாய் விரிந்திருக்கும் குடியிருப்புகள்... ஷாப்பிங் சென்டர்கள்... திரும்பின பக்கமெல்லாம் விதவிதமாய் பாஸ்ட் புட் ஜங்சன்கள்... கூட்டம் கூட்டமாய் கவலையில்லாமல் சாப்பிடும் சுர்த்திகள்! வாழ்க்கையை அனுபவிக்கும் மனிதர்கள் என்று நிச்சயமாய் சொல்லலாம். ராத்திரி பத்து மணிக்கு மேல் நீண்ட சாலைகளின் இரண்டு பக்கமும் போட்டிருக்கும் பெஞ்சுகளெல்லாம் நிறம்பி வழியும். அந்த நேரத்திலும் எதையாவது சாப்பிட்டுக் கொண்டு குடும்பத்தோடு பொழுதைக் கழித்துக் கொண்டு.

ஞாயிற்றுக் கிழமை மாலை சூரத் விழாக் கோலம்தான். யாரும் வீட்டிலேயே இருக்க மாட்டார்களா என்று நினைக்க வைப்பது போல அத்தனை மக்களும் வீதியில் தான். டுமஸ் ரோடு பூராவும் கார்கள் அணிவகுப்புதான். பாய், மடக்கு நாற்காலி சகிதம் குடும்பங்கள் ஆஜராகிவிடும். எந்தக் கூச்சமும் இல்லாமல் கீழே உட்கார்ந்து கொண்டு போவோர் வருவோரை வேடிக்கை
பார்த்துக் கொண்டும் தெரிந்தவர்கள் எதிர்படும் போது அரட்டையிலும். வீட்டிலிருந்து கொண்டு வந்தது... அங்கேயே வாங்கியது என்று மறுபடியும் சாப்பாடு... சாப்பாடு! இத்தனை சாப்பிட்டும் இவர்கள் இளம் வயதில் எப்படி இப்படி வெடவெட வென்று இருக்கிறார்கள் என்பது இன்னும் தெளியாத ரகசியம். ஆனால் நடுத்தர வயதுக்கு மேற்பட்டோர் எல்லா இடங்களையும் போல டயபடீஸூம் உடல் பருமனுடனும்.

முதலிலே இருந்த இடமென்றாலும் முற்றிலும் புதிதாய் இருந்தது. ஒவ்வொன்றாகத் தேடித் தெரிந்து கொண்டிருந்த போது சூரத் வாழ்க்கை மறக்க முடியாத நினைவுகளுக்குச் சொந்தமாக்கப் போகிறது என்று அப்போது உணர்ந்திருக்கவில்லைதான்!