Tuesday, December 22, 2015

கோனார்க் - பயணக்கட்டுரை.

Prelude: இன்றைக்கு கோனார்க் கோவில் பற்றி ஏதோ பேச்சு வந்த போதுதான் நான் எப்போதோ கோனார்க் பற்றி மரத்தடியில் எழுதியிருந்தது நினைவுக்கு வந்தது. எப்படியும் ப்ளாக்கில் இருக்கும் என்று தேடும் போதுதான் தெரிந்தது அது இங்கே வந்து சேர்ந்திருக்கவில்லை என்று. ஸோ... இந்த மீள்பதிவு! 2001ல் எழுதியது.

முதலில் கொஞ்சம் ஒரிஸ்ஸாவைப் பற்றி. அங்கே இருந்த இரண்டு வருடத்தில் எப்போது வெளியில் கிளம்பினாலும், ஊரும் மனிதர்களும் ஆச்சர்யம் தான். கேரளாவை நினைவு படுத்தும் பசுமை. எந்த நகரத்தை விட்டு ஒரு 50 கி.மி வெளியே போனாலும் ஒரு பக்கா கிராமம் பார்க்கலாம். பழுப்பேறிய வேட்டி, மேல் சட்டையில்லாத ஆண்கள். இன்னும் ஜாக்கெட்டுக்குப் பழகாத வயதான பெண்கள். அதிகம் போக்குவரத்தில்லாத ரோடுகளில் எல்லாமே தெருவிலேதான். நெல்லு காய வைப்பது, வட்டமாக உக்கார்ந்து ஊர்க்கதை பேசுவது... எல்லாமே. சரியான மண்ணின் மைந்தர்கள். வெளிப்பார்வைக்கு அமைதியா இருந்தாலும் சீண்டினால் முரட்டுக் கூட்டம் தான்.

புவனேஷ்வர், மாநில தலைநகருக்கான பளபளப்பெதுவும் இல்லாமல் இருக்கிறது. சிகப்போடிய கற்களில் நிறைய சிற்ப வேலை நடக்கிறது. நுணுக்கமான வேலை பாடில்லாமல் பெரிய பெரிய சிற்பங்களாய். புவனேஷ்வரிலிருந்து 60 கி.மி தொலைவில் பூரி. ஜகந்நாதர் கோவில் புராதனமாய், பெரிய கோவில்களுக்குரிய எல்லா லட்சணங்களுடன். ரொம்ப எதிர்பார்ப்போடு போனால் பிரதான சந்நிதியில் ஆச்சர்யம் தான் காத்திருந்தது. பலராமர், சுபத்திரா, ஜகந்நாதர்.. ரெண்டு அண்ணன்களும் தங்கையும். அதுவும் பிரம்மாண்டமான அளவில், மரத்தாலான, வித்தியாசமான அமைப்பில். கண்கள் ரெண்டும் பெரிய வட்டங்களாய், கைகள் இருக்க வேண்டிய இடத்தில் முன்புறம் நீட்டிய உருண்டையான வடிவத்தில். நடுவில் நின்றால் மூன்று பேரையும் ஒன்றாக முழுமையாகப் பார்க்க முடியாது. கொஞ்சம் வலது புறம் நகர்ந்தும், இடது புறம் நகர்ந்தும் தான் பலராமரையும் ஜகந்நாதரையும் பார்க்க முடியும்.
ஆச்சர்யம் தாங்காமல் வழிகாட்டியிடம் கேட்ட போது, அவருக்கு ரொம்ப சந்தோஷம். கதை சொல்லத்தான்! அப்போதைய ராஜாவுக்கு (பெயர் நினைவில்லை) கனவு... ஆற்றில் கட்டை வரும், அதை எடுத்து கடவுள் உருவம் செய்யவும், செய்பவர்கள் கடைசில் இறந்து விடுவார்கள் என்று. ஊரெல்லாம்
அறிவித்தும் யாரும் வரவில்லை. கடைசியில் ஒரு வயதானவர் முன் வந்தார். அவருடைய நிபந்தனை... 28 நாள் பூட்டிய கதவிற்குப் பின்னால் வேலை செய்வேன். என்னவானாலும் கதவைத் திறக்கக் கூடாது என்று. ராஜாவும் சம்மதிக்க, வேலை தொடங்கியது. தினமும் வெளியிலிருந்து வேலை நடக்கும் சத்தம் கேட்டுக் கொண்டு காத்திருந்தார். 21 ம் நாள் சத்தம் எதுவும் வரவில்லை. ராஜாவுக்கு என்ன செய்யவென்று தெரியவில்லை. 24 ம் நாள் வரைக் காத்திருந்து பின்னர் கதவைத் திறக்க மயங்கிய நினையில் இருந்த முதியவர் ஏன் திறந்தாய் என்று ராஜாவைத் திட்டி விட்டு மாயமாய் மறந்து விட்டார். வேறு வழியில்லாமல் முற்றுப் பெறாத உருவங்களையே பிரதிஷ்டை செய்ததாக வரலாறு. சுவாரசியமாகத்தான் இருந்தது.
     
வெளிப்பிரகாரத்தில் இருக்கும் பால்கோபால் (குழந்தை கிருஷ்ணன்) கொள்ளை அழகு. இவ்வளவு பெரிய கோவிலில் பராமரிப்பே இல்லை என்று சொல்லலாம். எல்லா சன்னிதிகளிலும் கடவுள் சிலை மேலேயே கரப்பான் பூச்சி ஓடுகிறது. இந்தக் கோவிலில் என்றைக்கு கூட்டமே இல்லாமல் இருக்கும்? அன்றைக்குப் போய் அமைதியாய் ஒவ்வொன்றையும் பார்க்க வேண்டும். அப்படி ஒரு நாளே இருக்காது என்றுதான் தோண்றுகிறது.
பூரி கடற்கரை அதிகம் அசுத்தப் படாமல், ஆக்ரோஷமாய் இருக்கிறது. மழை இல்லாத நாட்களில் மணற்சிற்பங்களைப் பார்க்கலாம். சில மணி நேரங்களில் பிரம்மாண்டமாய் எழுந்து, காணாமலும் போய் விடுகிறது, கடலலையில்.
கோனார்க் தான் உண்மையான மாஸ்டர் பீஸ். ரெண்டு நாளாவது செலவு பண்ணி நிதானமாய் பார்த்தாலும் தீராது. அதுவும் இப்போது இருப்பது சிதிலமடைந்த கோவில் மட்டுமே. ஸ்தல புராணமாக சொல்வது... கிருஷ்ணருடைய மகன் சம்பா தீராத தோல் வியாதியால பாதிக்கப்பட்ட போது, இங்கு வந்திருந்து சூரிய ஒளியும், கடல் நீர் குளியலும் குணப்படுத்தியதால் சூரிய பகவானுக்காக இந்தக் கோவில் கட்டப் பட்டதாம்.
சரித்திரம் சொல்வது, முதலாம் நரசிம்ஹ தேவனால் கட்டப்பட்டதாக. கலிங்கத்துப் போருக்குப் (கலிங்கத்துப் போருக்கும் இந்த அரசருக்கும் என்ன சம்பந்தம்?) பிறகு மக்கள் இல்லற வாழ்வில் ஈடுபாடில்லாமல் போனதால் இப்படி(!!!) ஒரு கோவில் கட்டியதாக சொல்லப் படுகிறது. ரொம்ப
நுணுக்கமான வேலைப் பாடுகளுடன், பாதிக்கு மேல் சிதைந்த போதும், கம்பீரமாய் நிற்கிறது.
தூண்கள் எதுவும் இல்லாமல், கற்களுக்கு நடுவில் இரும்புத் துண்டங்களை இணைத்து, முழு அமைப்பும் உச்சியில் இருந்த ஒரு சக்தி வாய்ந்த காந்தத்தால் இணைக்கப் பட்டிருந்தது. போர்ச்சுக்கீசியர்களின் கடல் பயணங்களின் போது காந்தத்தின் சக்தி அவர்களை வழி தவறச் செய்ததால் காந்தத்தை விலக்க முழு கோபுரமும் கொஞ்சம் கொஞ்சமாக சரியத் தொடங்கியது. சூரிய பகவான் சிலை தற்போது பூரியில் இருப்பதாக சொல்கிறார்கள். பிரதான மண்டபம், தொடர்ந்த நாட்டிய மண்டபம் எல்லாம் மண்
மூடி, வெளிப்புறம் மட்டும் மீதியாய் நிற்கிறது.
   
ஏழு குதிரைகளும் (ஏழு நாட்கள்)  24 சக்கரங்களும் (24 மணி நேரம்) கொண்ட பிரம்மாண்டமான தேராக கோவில் அமைக்கப்பட்டிருந்தது. கோவில் மூன்று நிலைகளாக உள்ளது... குழந்தைப் பருவம், வாலிபப் பருவம், வயதான பருவம். குழந்தைகளின் கண் பார்வை படும் உயரத்தில் விலங்குகளின் சிற்பங்கள், அவர்கள் வயதிற்கேற்ப. வாலிப பருவத்தில்...கணக்கில்லாத சிற்பங்கள். ரெண்டு மணி நேரத்தில் பார்த்தது ரொம்ப சொற்பம். அலங்காரம் செய்து கொள்ளும் பெண், அவளுடைய அலங்கார சாதனங்களுடன். தோழிகளோடு குளிக்கும் பெண், கூடலுக்குத் தயாராகும் பெண். கூடலின் அத்தனை
சாத்தியங்களும், சின்ன உருவங்களில், ஆளுயரத்தில், பிரம்மாண்டத்தில். வாத்ஸ்யாயனரின் அத்தனை முத்திரைகளும் இருப்பதாக சொல்கிறார்கள்.
வெள்ளைத்தோலோடு போனால் விவரமாக சொல்வார்கள் போல! வழிகாட்டிக்கு அதற்கு மேல் சொல்ல தயக்கம். அதனால் பார்க்காது விட்டது ரொம்ப அதிகம். முன் மண்டபத்தில் மூன்று பாகங்களாய் அமைத்து ஒவ்வொரு நான்கு மாதங்களிலும் சூரிய ஒளி ஒவ்வொரு பாகம் வழியாக உள்ளே இருந்த சூரிய பகவான் மேல் விழுமாறு அமைந்திருக்கிறது. இப்பொது அதெல்லாம் கேட்பதற்கு மட்டுமே, பார்க்க எதுவும் இல்லை. இன்னும் நாழிகை கணக்கில் எதேதோ விவரங்கள், நட்சத்திரக் கணக்கில் நிறைய அமைப்புகள். நல்ல விவரம் தெரிந்த ஒரு வழிகாட்டியும், ரெண்டு மூன்று நாளும் இருந்தால் ஒரு
நிறைவான பயணம். பாதிக்கு மேல் விடலைகள் கூட்டம் தான், கிளுகிளு சிரிப்போடு
வேடிக்கை பார்க்க. மிஞ்சியிருப்பதாவது பத்திரமாய் இருக்க வேண்டும்.

PS: 2001ல் நாங்கள் போயிருந்த போது அது ஒரு ஆள் நடமாட்டம் குறைந்த பகுதி. மாலை சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு டூரிஸ்ட் அலுவகத்தின் ஒரு சிப்பந்தி மட்டுமே இருப்பார் என்று சொல்லி அங்கே தங்க விடவில்லை. //அந்திநேரச் சூரியன், சந்திரனின் முதல் கிரணம், நல்ல பௌர்ணமி நிலவு, அதிகாலைச் சூரியன்... ஓவ்வொரு ஒளியில் அது என்ன நிறம் கொள்ளும் என்று பார்க்கும் ஆவலை அந்த சிதைந்த கோபுரம் தூண்டுகிறது.//  இப்படி எப்போதோ எழுதி வைத்திருந்திருக்கிறேன். பதினைந்து வருடங்களாகியும் இப்போதும் அது நடக்கவில்லை!

No comments: