Sunday, March 06, 2005

Fat Mama வைப் பார்த்தது.

நேற்று காலை செய்தித்தாள் சொல்லி விட்டது மாலை நான்கு மணிக்கு Fat Mama வரப் போவதை. ஞாயிற்றுக் கிழமை மத்தியானத்திற்கே சொந்தமான குட்டித்தூக்கம் போட்டு மூன்றறை மணிக்கு தொலைக்காட்சிப் பெட்டியில் தேடினால்... எல்லா சேனலும் ஒழுங்கா ஒளிபரப்பாகிக் கொண்டிருக்க பிபிசி மட்டும் கரகரவென்று. சத்தமும் தெரியவில்லை... படமும் தெளிவில்லாமல். இன்றைக்கும் இல்லைதான் என்று சலித்துக் கொண்டிருக்கும் போது சட்டென்று சரியாகி செய்திப் படம் தொடங்கியது.

இருநூறு வருடங்களுக்கு முன்னால் காலனி ஆதிக்கம் சென்ற இடங்களில் அவர்களோடு பயணித்து இந்தியா வந்திருக்கிறார்கள். சீன செய்தித் தாள் வெளிவந்திருக்கிறது. வியாபாரமும், கலாச்சார பங்களிப்புமாய் நன்றாகத்தான் இருந்திருக்கிறார்கள். 62 க்குப் பிறகு எல்லாம் மாறி விட்டிருக்கிறது. கூட்டமாக ஏழுநாள் பயணமாக இராஜஸ்தானுக்கு வலுக்கட்டாயமாக கொண்டு போகப் பட்டது... 66 ல் திருப்பி அனுப்பிய போது வெறும் முப்பது ரூபாய் வழிச் செலவுக்கு கொடுத்ததும், இரண்டு மூன்று நாள் பட்டினியாக திரும்பி வந்ததும்... இதையெல்லாம் நம்மால் முழுதாகப் புரிந்து கொள்ள முடியுமா என்றிருக்கிறது.

ஐம்பதாயிரத்துக்கும் அதிகமாயிருந்தவர்கள் கணிசமாகக் குறைந்து தற்போது வெறும் ஐந்தாயிரத்தில் நிற்கும் வருத்தம் அவர்கள் பேச்சில். அடுத்த தலைமுறையில் பெரும்பாலோர் கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் குடிபெயர்த்த பிறகு மிஞ்சியது இவர்கள் மட்டும். சீன செய்தித்தாள் படிக்க ஆளில்லாமல் நின்று போய் விட்டது. ஆனாலும் தினமும்(!) கையால் எழுதி காப்பி எடுத்து வாசிக்கப் படும் சீன மொழி செய்தித்தாள் இன்றும் இருக்கிறது. நாலணாவிற்கு ஒரு பெரிய கிண்ணம் நிறைய நூடுல்ஸ¤ம் காய்கறிகளும் கலந்த சூப் செய்து விற்று வந்த Fat Mama வை டொரண்டோ வாழ் இந்திய சீனர்களும் நினைவு வைத்திருக்கிறார்கள். சூப் சுவையை விட Fat Mama வின் அன்பு அவர்கள் பேச்சில் அதிகம் தெரிகிறது.

Women Dragon Dance Group ம், புதுவருடக் கொண்டாட்டங்களுமாய் இன்னும் இதுவே அவர்கள் இடமென்று இருக்கிறார்கள், கொஞ்சம் ஒட்டாமல் பேசினாலும். அரைமணி நேர படத்தில் சொல்ல முடிந்தது ரொம்பக் குறைவே. எல்லாக் குரல்களும் எதிர்மறையாய் இருந்தாலும் ஒருவர், "இன்னும் அதையே நினைத்துக் கொண்டிருக்க முடியாது" என்று சொன்ன போது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.

முழு செய்திப் படத்திலும் பேசினவர்கள் எல்லாம் ஐம்பதைக் கடந்தவர்களே. இளைய தலைமுறை சீன இந்தியர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாயிருந்தது.

No comments: