Wednesday, May 24, 2023

அகம் - இதுவரை

 மதுமிதா எழுதச் சொன்ன போது சரி என்று சொல்லிவிட்டேனே ஒழிய நீண்ட இடைவேளைக்குப் பிறகு எழுத ஆரம்பித்த போது என்ன எழுதப் போகிறேன் என்று தான் இருந்தது. மனதிற்குள்ளே ஓடிக் கொண்டிருந்ததை வார்த்தைகளில் இறக்குவது அவ்வளவு சுலபமாயிருக்கவில்லை. சைக்கிள் ஓட்டிப் பழகினவர்களுக்கு எப்படி அது மறக்காதோ அது போல சின்னச் சின்ன சுவர் முட்டல்களுக்கு பின்னர் எழுத முடிந்தது. விடாமல் நினைவுறுத்தி எழுத வைத்த மதுமிதாவிற்கு நன்றி. 

 



My portion from the book - அகிலாண்டம்மாள் சுமார் நாலடி உயரம் இருப்பார். தலையில் இருக்கும் கொஞ்சம் முடியை நெல்லிக்காயளவு கொண்டையாகப் போட்டிருப்பார். எட்டு கஜம் புடவையை பின் கொசுவம் வைத்து உடுத்தி, சிறுத்த உடலும் கடுகடுப்பான தோற்றமும் ஆக இருப்பார். ஒரு ரெட்டை வட சங்கிலியும் கைகளில் இரண்டு வளையல்களும் தினப்படிக்கு. எங்கேயாவது விசேஷங்களுக்கு போகும் போது ஒரு பதக்கம் வைத்த அட்டிகை கூடுதலாக. இடுப்பில் ஒரு சுருக்குப் பை. அதிசயமாக ஒன்றோ இரண்டோ பைசாவை எடுத்துக் கொடுத்து மிட்டாய் வாங்கிக் கொள்ளச் சொல்வார். அந்தக் காலத்து பெண்மணி. படிப்பெல்லாம் எதுவும் கிடையாது. ஆனால் உலக ஞானம் தேவைக்கு இருந்தது.

நினைவு தெரிந்த நாளிலிருந்து அந்த வீட்டில் நாங்கள் பத்து பேர் இருந்தோம். எல்லோருக்கும் அவரவர்களுக்கான வேலை, இந்த சாமான் இந்த இடத்தில், இந்த நேரத்தில் இந்தக் காரியம் என்று ஒரு ராணுவ கட்டுப்பாட்டில் இயங்கிக் கொண்டிருந்தது. எனக்கு இன்றைக்கு சலிப்பாக இருக்கிறது நான் செய்ய மாட்டேன் என்று யாரும் எப்போதும் அவரவருக்கான வேலைகளை மறுத்துப் பார்த்ததில்லை. முடியவும் முடியாது. இன்றைக்கு என்ன சமையல், வீட்டின் முதல் பந்தியில் யார் உட்கார வேண்டும், யாருக்கு எவ்வளவு பரிமாற வேண்டும், வீட்டில் கடைசியாக சாப்பிடுபவருக்கும் எல்லா நேரமும் எல்லாமும் சாப்பிடக் கிடைக்க வேண்டும் என்று இப்படி எழுதாத சட்டங்கள் இருந்தது. அது வழமை மாறாமல் நடக்கவும் செய்தது. எதை மாற்றினாலும் பாட்டிக்குப் பிடிக்காது சத்தம் போடுவார் என்ற பயமும் எல்லோருக்கும் இருந்தது. ஆறடி உயரத்தில் ஆஜானுபாகுவான தாத்தாவில் தொடங்கி எல்லோரும் அவர் சொல்லுக்கு கட்டுப் பட்டிருந்தோம். இதையெல்லாம் அந்த சிறிய உருவம் எப்படி நிகழ்த்தியது என்பது பெரிய புதிர். 

பாட்டி அதிகம் பேச மாட்டார். எப்போதாவது சிரித்து பார்த்திருக்கிறேன். சில நேரங்களில் மிகச் சிலரிடம் மட்டும் இளகிப் பேசுவதை கவனித்திருக்கிறேன். என்னுடைய இளம் வயதில் உள் வாசலில் படுத்துக் கொண்டு நிலவைப் பார்த்துக் கொண்டே பாட்டியுடன் கதை பேசியது நினைவிருக்கிறது. சின்னச் சின்னதாக எங்களுக்கு நிறைய சொல்லிக் கொடுத்திருக்கிறார். என்னுடைய காரிய ஒழுங்கும் செய்நேர்த்தியும் பாட்டி கொடுத்தது. ஒரு விஷயத்தை ஏனோ தானோவென்று இன்றைக்கும் என்னால் செய்ய முடியாது. அங்கிருந்து தொடங்குகிறது.

ராஜம்மாள் சிவந்த நிறம். உயரமும் உறுதியுமான தேகம். அலையலையாய் வழியும் கறுத்த கேசம். ஒரு டஜன் பிள்ளைகள் பெற்றும் சளைக்காத உரம். எதிலும் பட்டுக் கொள்ளாத அதே சமயம் எல்லாம் என்னுடையது என்ற உணர்வும். இது என் பொறுப்பு இதை எப்படியாவது செய்வது என் கடமை என்ற உறுதி. அந்தக் கைகளில் ஒரு மாயம் இருந்தது. தொட்டதெல்லாம் ருசித்தது. நிரம்பி வழிந்ததில் திளைத்ததும் வறண்டு தேய்ந்ததில் போராடியதுமாக எல்லா எல்லைகளையும் தொட்டு நீண்டிருக்கிறார். எப்போதும் கலங்கிப் பார்த்ததில்லை. வீட்டின் மொத்த நிர்வாகமும் தாத்தாவுடையது. அவர் ஒரு நாள் காணாமல் போன போது திடமாக நின்றார். அந்த அதிர்ச்சியில் இருந்து அந்தக் குடும்பம் சுதாரித்து வெளியே வந்தது. அந்த சமயத்தில் ஒரு மகளின் திருமணத்தை நடத்த வேண்டி வந்த போது நிதானமாக நின்று நடத்தினார். பாட்டிக்கு முடியாது என்று சொல்லத் தெரிந்திருந்தது. தயவு தாட்சண்யம் இல்லாமல். அறிவார்ந்த பார்வை இருந்தது. அறியாத தேசங்களை தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருந்தது. அந்த வாழ்க்கையையும் உணவுகளையும் அறிந்து கொள்ள விரும்பினார். தன்னைப் புதுப்பித்துக் கொண்டே இருந்தார்.

முதல் முதலாய் தொலைதூர தேசத்திற்கு ரயில் ஏறிய போது எனக்கு இருந்த ஆர்வத்தில் ராஜம்மாள் பாட்டி நிறைந்து இருந்தார். குஜராத்தின் மூலை முடுக்குகளில் வசிக்க நேர்ந்த நாட்களில் எப்போது ஊருக்கு வந்த போதும் பாட்டிக்கு கேட்க அத்தனை கேள்விகள் இருந்தது. அந்த ஊரில் என்ன விசேஷம் என்ன பார்த்தாய் என்ன செய்வாய் என்ற கேள்விகளைக் கேட்கும் கண்கள் அகல விரிந்து அத்தனையையும் என் விழிகளிலிருந்து பெற முயற்சிப்பது போல. சரியாக காய் நறுக்கக் கூடத் தெரியாத என்னிடம் சமையல் குறிப்புகள் கேட்ட போது சமாளிக்க நினைத்து விழித்தது இன்றும் நினைவில் இருக்கிறது. ஒரு லண்டன் பயணத்தில் புகைவண்டியில் இரண்டு பேரிளம் பெண்கள் தனியே பயணம் செய்து கொண்டு வழியெல்லாம் பேச்சும் சிரிப்புமாய் இருந்ததை கவனித்த போது என்னுடைய ராஜம்மாள் பாட்டி இதையெல்லாம் அனுபவித்திருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு இருந்தேன்.

என்னுடைய உருவாக்கத்தில் இவர்கள் இரண்டு பேருடைய பங்கு மிக ஆழமானது. கூடவே சூழலும். பத்தொன்பது வயதில் வட இந்தியாவின் பெயர் கேட்டிராத பாஷை தெரியாத சிறு ஊர்களில் தொடங்கியது என் வாழ்க்கை. எல்லா இடங்களிலும் பாட்டி வயதில் யாராவது கூடவே இருந்திருக்கிறார்கள். மத்திய பிரதேசத்தின் தம்தரியில் பக்கத்து வீட்டுப் பாட்டி தினமும் மாலை வேளைகளில் எனக்குத் துணையாக வந்து அரை மணி நேரம் உட்கார்ந்து விட்டுப் போவார். அப்போது அவோ, ஜாவோ தவிர்த்து ஒரு வார்த்தை ஹிந்தி தெரியாது. அவருக்கு குஜராத்தியைத் தவிர வேறெதுவும் தெரியாது. இரண்டு பேரும் எதுவும் பேசாமல் அமர்ந்திருப்போம். நிழலாக நினைவில் இருக்கிறார்.

ராஜூலாவின் மாஜிக்கு வேறு முகம். சொந்த வாழ்க்கையின் ஏமாற்றங்களும் இயலாமையும் அவருக்கு யாரையும் பிடிக்காமல் இருந்தது. நாங்களும் விதிவிலக்கில்லாமல். காலமும் பழக்கமும் நெகிழ்த்தியதில் அவரது பூட்டியிருந்த கதவுகளை மெல்ல மெல்ல திறந்தார். ஒரு நாள் ஏதோ பேசும் போது தும்ஹாரி பாபுஜி (உன்னுடைய அப்பா) என்று தன் கணவரைச் சொன்ன நிமிஷம் மறக்க முடியாதது.

பழகின மனிதர்கள் தான் பாதிக்க முடியுமா என்ன? ஒரு குலு மணாலி பயணத்தின் போது பச்சை பூத்திருந்த காட்டிற்குள் ஒரு காதல் மாளிகை. ஒரு ரஷ்ய ஓவியரும் இந்திய நடிகையும் சேர்ந்து வாழ்ந்திருந்த அந்த வீட்டில் ஏதோ ஒரு அதிர்வு இருந்தது. எதையோ சொல்ல வருவதைப் போல. எல்லாவற்றையும் பார்த்து விட்டு ஏகாந்தமாய் இருந்த ஒரு கல் பெஞ்சில் உட்கார்ந்த போது அது என் வீடு போலிருந்தது. துளிர் பச்சை இலைகளில் ஊடுருவி விழுந்த வெளிச்சம் சொன்னது என்னைத் தெரியுமென்று.

முதல் முதலாக கொல்கத்தா தெருக்களில் தன்னந்தனியாக சுற்றப் பழகிய போது தான் தனிமை ருசிக்கத் தொடங்கியது. பனிரெண்டு பதிமூன்று வயதில் அம்மாவிடம் தனியே இருக்கப் பிடிக்கும் என்று சொல்லியிருக்கிறேன். என்ன முட்டாள்தனமான பேச்சு என்று அம்மா புறந்தள்ளியதும் நினைவிருக்கிறது. அத்தனை வருடங்கள் கழித்து நான் கேட்ட அந்த தனிமை கிடைத்தது. அங்கே அறிமுகமான அபர்ணா சென் கதை நாயகி 'பரோமா'வை எனக்கு நன்றாகத் தெரியும். பெரிய சிகப்புப் பொட்டும் பருத்திப் புடவையுமாக ஆளுமையோடு வலம் வந்த அத்தனை பெண்களோடும் என்னால் தொடர்பு படுத்திக் கொள்ள முடிகிறது. போகப் போகப் பிடிக்கத் தொடங்கியதில் அந்த காளியும் வருவாள். நீண்ட நாக்கோடு அமர்ந்திருக்கும் அவளைத் தெரியும்.

காசியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய ஒரு மத்தியான வேளையில் மடங்கிப் போய் அமர்ந்திருந்த அந்த அம்மாவை எனக்கு நன்றாகத் தெரியும். இந்த ஜன்னலில் இருந்து நான் பார்க்க வந்த கங்கையை அவள் காலம் காலமாக தன் வீட்டு ஜன்னலில் இருந்து பார்த்து கொண்டு இருக்கிறாள். அப்படித்தான் அவளை எனக்குத் தெரிந்திருக்கும்.

எல்லா இடங்களிலும் எல்லா விதமான மனிதர்களோடு வசித்த போதும் நான் ஒரு தனிமை விரும்பி. பயணம் செய்த நாடுகளின் ஏகாந்த வீடுகள் எல்லாவற்றோடும் தொடர்பு படுத்திக் கொள்ள முடிந்தது. ஸ்காட்லாண்டின் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மனிதர்களே இல்லாத பேரமைதியில் இருந்த அந்த ஒற்றை வீடு என்னுடையதாக இருந்தது. மணாலியின் மலை நடுவே தன்னந்தனியாக நின்றிருந்த அந்த வீட்டைப் பார்த்த போதெல்லாம் அந்த வாழ்க்கையை எண்ணி எண்ணி மாய்ந்து போக முடிந்தது. குளிர் காலத்தில் மலை பூராவும் பனி மூடியிருக்கும். யாரும் மலை ஏறவோ இறங்கவோ முடியாது என்ற போது அலை மோதிய எண்ணங்கள் மனிதர்களுக்கானவை. அது என்னில் அலை மோதி அடங்கியது எனக்குத் தெரியும். ஜப்பானின் கால்வாய் நகரம் குராஷிகியின் அமைதியை எந்த இரைச்சலிலும் உணர முடிகிறது.

அப்பா அம்மாவின் குவித்த கைகளுக்குள் வளர்ந்திருந்தேன். சிறகுகள் வளர்ந்தது தெரியாமல் ரொம்ப காலம் கழித்திருந்தேன். பறக்க வேண்டாமென்றும் இருந்திருக்கிறேன். ஆனாலும் எல்லாமும் நடந்தேறின. புதிதாக ஒன்றைக் கற்றுக் கொள்ளும் ஆர்வத்திற்காக சேர்ந்த ஒரு படிப்பு இன்றைக்கு ஒரு ஆளுமை வடிவமைப்பாளராக (இமேஜ் கன்சல்டென்ட்) வளர்த்தி இருக்கிறது. அந்தப் பயிற்சிக்காக சந்தித்த மனிதர்களை அறிந்து கொண்டது வேறெப்படியும் நிகழ்ந்திருக்க முடியாதது. படிப்பு, பரிட்சை என்று பள்ளிக்கூட நாட்களின் சுவாரசியத்திற்கு கொஞ்சமும் குறைவில்லாதது. முடித்து சான்றிதழ் வாங்கிய கணம் தந்த சந்தோஷத்திற்காக இப்படி இன்னும் எத்தனை பரிட்சைகளை வேண்டுமானாலும் எழுதலாம் என்று சொன்னது. நமக்கு முன்னால் இருக்கும் சவாலை ஜெயிக்கும் ஒவ்வொரு முறையும் அது தரும் தன்னம்பிக்கை என்னை அடுத்த தளத்திற்கு கொண்டு சென்றது. வீடும் ஓய்வும் தரும் சௌகரியத்தை விட்டு வெளியே வந்த போதெல்லாம் சந்தித்த மனிதர்கள் விரித்த தளம் நான் எப்போதும் தேடியது.

அதைத் தொடர்ந்து அதிலிருந்து வந்தது ஒரு கூட்டத்திற்கு முன்னால் நின்று நான் சொல்ல வருவதை சுவாரசியமாக சொல்ல வர வேண்டும் என்று கற்றுக் கொண்ட பயிற்சி. தெரியாத மனிதர்களோடு பேசவே தயங்கி இருந்த எனக்கு ஒரு நிறுவனத்தின் ஆண்களுக்கு பயிற்சிப் பட்டறை நடத்த முடிந்தது. உள்ளுக்குள்ளே பறக்கும் பட்டாம்பூச்சிகளை ரசித்துக் கொண்டே செய்த நிகழ்வு அது.

என்னுடைய கன்சல்டன்ஸிகாக அடுத்து தொடங்கியது ஒரு யூட்யூப் சேனல். அதன் மூலமாக ஒரு ஆளுமையாக ஓவ்வொருவரும் தன்னை உருவாக்கிக் கொள்ளும் ஆலோசனைகளை தர முடிகிறது. ஒன்றிலிருந்து மற்றொன்று என்று புதிய பாதைகள் பிறக்கின்றது. தேடத் தேட திறக்கும் புது கதவுகள் கொடுக்கும் சுவாரசியம் குறைவில்லாதது.

ஒவ்வொரு முறையும் தன்னார்வ பணி புரியும் அழைப்பு வந்த போது அது என்னுடைய நேரத்தைக் குடிக்கும் என்ற போதும் சரி என்று சொல்லியிருக்கிறேன். பெண்கள் சேர்ந்து ஒரு மருத்துவமனையை நிர்வகிக்க வாய்ப்பு வந்த போது அந்த துறை பற்றிய பெரிய விழிப்புணர்வு கிடைத்தது. சில முடிவுகளை அந்த நொடியில் எடுக்க வேண்டி வந்த போது அதன் முழு பொறுப்பையும் சுமக்கும் தைரியம் கிடைத்தது. அதற்காக செலவழித்த கணக்கில்லாத நேரங்கள் தன் பங்கிற்க்கு என்னை இன்னும் கொஞ்சம் செதுக்கிச் சென்றது. எதுவுமே வீணில்லை என்று இன்றைக்கு என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.

கொரோனா நோய் தொற்றுக் கால சேவையாக வந்து சேர்ந்த அனுபவம் மூலமாக முகம் தெரியாத எத்தனை பேர்களுக்கு ஆசுவாசம் கொடுக்க முடிந்தது. வெறும் வார்த்தைகளால் மட்டுமே உதவ முடிந்த மனிதர்கள் அந்த நாட்களுக்கு ஒரு நம்பிக்கை கொடுத்தார்கள். அந்த சேவைக்கான தேவை வந்த குழுமத்தில் நான் வருகிறேன் என்று சொல்லி தொடங்கிய நிமிஷத்திற்கு நன்றி சொல்ல வேண்டும். இப்போது எங்கள் அடுக்கக காரியதரிசியாக இருக்கிறேன். இதுவும் ஒரு இக்கட்டான கட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு. எப்படி முடியாது என்று சொல்லிப் பழகுவது அவசியமோ அப்படியே முடியும் என்று சொல்லி செய்த எல்லா வேலைகளும் என்னை வளர்த்தெடுத்தது.

அவளை நாங்கள் எங்கே வளர்த்தோம் அவள் தானாகவே வளர்ந்து கொண்டாள் என்று அம்மா ஒரு முறை யாரிடமோ சொன்னார். நான் எங்கே தானாக வளர்ந்தேன்! எல்லாராலும் வளர்த்தெடுக்கப் பட்டிருக்கிறேன். இங்கிருந்தும் தொடர்கிறது.









Saturday, September 12, 2020

நிர்மலா

 

    உரக்கப் பேசுவதில்லை
    மெல்லிய குரலில்
    ஓரிரு வார்த்தைகள் மட்டும்
    அவை நேரடியாகப் போய்ச் சேர்வதில்லை
    பெரும்பள்ளத்தில் இறங்கி ஏறி
    அர்த்தம் இழந்து
    வீரியமிழந்து
    அங்கிருந்து பார்க்கும் போது
    நரியாக பரியாக தெரிந்தாலும்
    இங்கே நிர்மலாவாகவே நிற்கிறேன்
    விலகி நகர்கிறேன்
    மேலும் தனிமை கொள்கிறேன்
    ஆள்க்கூட்டத்தில் தனியாகவா
    முழுத்தனிமையா
    இக்கேள்வியை எதிர்கொள்ளும் தோறும்
    தனிமைக்கு வாக்களிக்கிறேன்
    தக்க வைத்துக் கொள்ளும் வேட்கையில்
    ஆனாலும் திரும்பி வருகிறேன்
    ஒவ்வொரு முறையும்
    நிறம் மாறி
    அறிவார் யாருமின்றி.


Saturday, March 23, 2019

ஆக்ரா & ஜெய்ப்பூர்

ரொம்ப வருஷமாக தாஜ்மஹாலை முழு நிலவொளியில் பார்க்க வேண்டும் என்றொரு ஆசை. அதைப் பற்றிய ஒரு சித்திரம் மனதில் வரித்துக் கொண்டு அந்த ஆசையை உயிரோடு வைத்திருந்தேன். அதற்காக ஆக்ராவின் தங்குமிடங்களையெல்லாம் அலசி, எங்கேயிருந்து பார்த்தால் நன்றாக தெரியக்கூடும் என்று பெரிய ஒரு ஆராய்ச்சியும் செய்திருந்தேன். வீட்டில் ஒன்றிரண்டு முறை சொன்ன போது ஒரு ஐடியா என்ற வகையில் எல்லாருக்கும் பிடித்திருந்தாலும் யாருக்கும் ஆர்வமில்லாதிருந்தது. எல்லா தேனிலவு லொக்கேஷன்களுக்கும் நாங்கள் குடும்பத்தோடு போகிறோம் என்ற சலிப்பு பிள்ளைகளுக்கு இருந்தது. அதனாலேயேயும் கூட இந்த ஐடியா விலை போகவில்லை. வழக்கம் போல நான் மட்டும் தனியாகப் போகிறேன் என்றும் சொல்லிப் பார்த்தேன். அதை நான் முடிவாகச் சொல்லவில்லை போலும். அதற்கான முயற்சியை நானும் எடுக்கவில்லை. போய்க் கொள் என்றும் சொல்லவில்லை.

இப்படியாக போன நவம்பரில் ஒரு முறை மறுபடியும் அந்த முழுநிலவு நாட்களைத் தேடும் போது எதேச்சையாக அது இந்த வருட திருமண நாள் அன்றே வருவது தெரிந்தது. இப்போது சும்மாவாலும் அதில் ஒரு ரொமாண்டிக் மசாலா வேறு சேர்ந்து கொள்ள சரி போகலாமென்று முடிவு செய்தோம். முதல் மூன்று நாள் ஜெய்ப்பூரிலும், இரண்டாவது மூன்று நாள் ஆக்ராவிலும் என்று முடிவானது.

நாங்கள் வந்து இறங்கிய போது ஜெய்ப்பூரில் மாலை நான்கு மணிக்கே குளிரிருந்தது. ஜெய்ப்பூரில் தங்குமிடம் தேடும் போது மகள், அங்கயும் போய் ஏன் ஹோட்டல்? எதாவது ஹெரிட்டேஜ் ஹோம் பார்க்கலாமல்ல? என்று சொன்னதால் ஒரு குட்டி அரண்மனையை தேர்ந்தெடுத்தேன். எல்லா அறைகளுக்கும் யானை வாடகை, ஒட்டக வாடகையிருக்க எனக்குக் கொடுத்த அறை மட்டும் என் பட்ஜெட்டிலேயே இருந்தது. எதாவது மூலையில் சாமான் போடும் அறையாயிருக்குமோ என்று வேறு யோசனையாயிருந்தது. அடுத்த நாளே அரண்மணையில் இருந்து மெயில் வந்தது. உங்கள் அறை தவறுதலாக புக் ஆகியிருக்கிறது. அன்றைய தினத்தில் ஒரு கல்யாணத்திற்காக முழு அரண்மைனையும் வாடகைக்கு எடுத்திருப்பதாக. மறுபடியும் முதலில் இருந்து தேடி கிடைத்ததில் புக் செய்திருந்தேன். இறங்கியதும் கூகிள் மேப் 'புரானி பஸ்தி' என்று காண்பித்த போது கொஞ்சம் கலக்கமாக இருந்தது. எதிர்பார்த்தது போலவே நல்ல நெரிசல் மார்க்கெட் வழியாகப் போய் சாக்கடை சந்துகளைக் கடந்து ஒரு ஹவேலி வாசலில் விட்டது.

ரிசப்ஷனைத் தேடவே இரண்டு கட்டிடங்களைத் தாண்ட வேண்டியிருந்தது. தடுமாறிக் கொண்டே ஒரு வயதானவர் பெல் அடித்து யாரையோ கூப்பிட்டுக் காத்திருந்தார். அவருடைய காலடியில் பூனைக்குட்டி போல ஒரு சின்ன ஹீட்டர் உறுமிக் கொண்டிருந்தது. நெஞ்சில் இடிக்கும் ஒன்றரை அடி உயரப்படிகளை ஒன்றொன்றாக ஏறி அறையை அடைந்தால் அந்த 'மஹாராஜா ஸ்வீட்' ஏமாற்றவில்லை. அறைக்குள்ளே இன்னும் படிகள், வேறு வேறு தளங்கள். ராஜாவிற்கு தனி, ராணிக்கு தனியாக இரண்டு குளியலறைகள். பெரும்பாலும் வெளிநாட்டு பயணிகளால் நிறைந்திருப்பதால் எல்லாம் படுசுத்தம். மாலை நேரத் தேநீருக்கு மொட்டை மாடியில் காத்திருக்கச் சொன்னார்கள். இன்னும் கொஞ்சம் நெஞ்சை இடிக்கும்  ஒன்றரை அடி படிகளை ஏறினால் பக்கத்திலெல்லாம் வீடுகள், மொட்டை மாடிகள், குப்பை கூளம். தூரத்தில் பெரியதோர் மலை மேல் ஒரு பெரிய கோட்டை. கலவையான உணர்வு.

மாலை ஊரைக் கொஞ்சம் சுற்றும் போது ஆல்பர்ட் ஹால் என்னும் அருங்காட்சியகத்தை வெளியில் இருந்தே பார்த்தோம். அருங்காட்சியக கட்டிடமே ஒரு மாஸ்டர் பீஸ்தான். நூற்றுச் சொச்ச வருஷம் பழையது. ஆனாலும் நல்ல பராமரிப்பில் இருந்தது. மாலை வேளையில் அலங்கார விளக்கொளியில் பார்க்கத்தான் போயிருந்தோம். மாலை இயற்கை வெளிச்சத்தில் அழகாயிருந்ததா இல்லை வண்ண விளக்கிலே அழகாயிருந்ததா என்பதை என்னால் சொல்ல முடியவில்லை. சாப்பாட்டிற்கு எல்லோரும் பரிந்துரைத்த ஸ்பைஸ் கோர்ட். Dal bhati churma ராஜஸ்தானுடைய பிரதான உணவு. இது அசைவ உணவகமானதால இங்கே kheema bhati விசேஷமாம். வழக்கமாக கோலி உருண்டை சைஸ்ஸில் இருக்கும் என்பதால் அதையும் இன்னும் வேறயும் ஆர்டர் செய்து காத்திருந்தால் இரணடு கிரிக்கெட் பந்தை சேர்த்த அளவில் ஒரு bhati வீதமாக இரண்டு. உள்ளே பூராவும் கீமா நிறைத்து. அதைச் சாப்பிட்டு முடிக்கவே பெரும்பாடானது. Foodgasmic! இராஜஸ்தான் போனால் இதைத் தவற விட வேண்டாம். சைவர்களுக்கு Dal bhati. அதை LMBல் இன்னொரு நாள் சாப்பிட்டு பாஸ் மார்க் போட்டோம்.

அடுத்த நாள் காலையில் ஹவா மெஹலை வெளியில் இருந்தே பார்த்துவிட்டு ஜெய்கர் கோட்டைக்குப் போகிற வழியில் ஜல் மெஹலையும் வெளியில் இருந்தே பார்த்துவிட்டு, அதை நினைச்சாலும் உள்ளே போய் பார்க்க முடியாது, அனுமதியில்லை, போய்ச் சேர்ந்தோம். ராஜாவின் மாளிகையாம். கீழே ஒரு பழைய மாளிகையில் இருந்து இங்கே குடிபெயர்ந்தார்களாம். பழைய மாளிகை கொஞ்சம் பெரிய வீடாட்டம் இருந்தது. அதிலிருந்து இவ்வளவு பெரிய மாளிகைக்கு குடிபெயர்ந்த காரணம் தெரியவில்லை. இயற்கை வண்ணங்களில் வேலைபாடுகள், ஷீஷ் மஹல் என்னும் கண்ணாடி மாளிகை என்று ஒரு மாளைகைக்கான எல்லா விஷயங்களோடு இருந்தது. ஒரு காளி கோவிலும் இருக்கிறது. ராஜா எப்போதும் வெற்றி பெற காளி கனவில் வந்து சொன்னதால்  தினம் ஒரு நரபலி கொடுத்துக் கொண்டிருந்ததாகவும் ஒரு கட்டத்திற்கு மேல் மக்கள் எதிர்க்க விலங்கு பலியானதாகவும், அதுவும் இப்போது மறைவாக என்றும் சொன்னார்.

அதற்குப் பிறகு இன்னொரு கோட்டை, பெரியதோர் பீரங்கி, ஒரு சிறிய அருங்காட்சியகம்... நேரப் பற்றாக்குறையால் எல்லாம் ஒரு அவசரகதியில் பார்த்துவிட்டு கிளம்பினோம். அடுத்த நாள் ஒரு சிறிய ஷாப்பிங்கை முடித்து புஷ்கர் பயணம். நாங்கள் போய்ச் சேர்ந்த அந்த மாலை நேரத்தில் புஷ்கர் ஏரியின் அழகும் அமைதியும் வார்த்தைகளில் சொல்ல இயலாதது. என்னை விட்டிருந்தால் அங்கேயே இருந்திருப்பேன். கடிகாரத்தோடு ஓடும் துணைவரோடான வாழ்க்கையில் இவ்வளவுதான் முடிகிறது. ஒரே பிரம்மாவின் கோவிலைப் பார்த்துவிட்டுக் கிளம்பினோம். புஷ்கர் வெளிநாட்டவர்களால் நிரம்பி வழிகிறது. அவர்களால் அந்த இடமே வேறு நிறத்தில் வேறு அதிர்வலைகளில் இருப்பதை உணர முடிந்தது.

அடுத்த நாள் மதியம் அஜ்மேர் திடீரென்று பயணத்திட்டத்தில் நுழைந்தது. ஓட்டுனர் ஊருக்கு வெளியே ஒரு இடத்தில் எங்களை ஒரு ஆட்டோகாரரிடம் ஒப்படைத்து விட்டார். கூட்ட நெரிசலாயிருக்கும், ஆட்டோதான் போகும் என்று. காசி சந்துகளை நினைவுறுத்தும் குறுகிய பாதைகளில் போய் ஒரு இடத்தில் இறக்கி விட்டார். அங்கிருந்து வழி காண்பித்து விட்டு அவரும் நின்று விட்டார். இறக்கி விடும் போது துப்பட்டா வாங்கி தலையை மூடிக் கொள்ளச் சொன்னார்கள். நாலு நாளாக துப்பட்டா இல்லாமல் தான் எல்லா இடங்களுக்கும் போயிருந்தேன். அதைச் சொன்ன விதமோ என்னவோ உடனே வாங்கி தலையோடு மூடிக் கொள்ளத் தோன்றியது. தர்க்காவிற்குள் நுழையும் போதே எங்கிருந்தோ வந்த ஷெர்வானி அணிந்த பெரியவர் ஒருவர் வழி காட்டிக் கூட்டிப் போனார். அவசரமாக நுழைந்து வாங்கிப் போயிருந்த சாத்தரை (chaddar) கொடுக்கச் சொன்னார். ரெண்டு பேரையும் தனித்தனியாக காணிக்கைக் கொடுக்கச் சொன்னார். அதே வேகத்தில் வெளியே கூட்டி வந்து விட்டு விட்டார். என்ன பார்த்தோமென்று ரெண்டு பேருக்கும் எதுவும் புரியவில்லை. என்னை கொஞ்ச நேரம் நிற்கச் சொல்லிவிட்டு கணவர் மட்டும் மறுபடியும் போய்ப் பார்த்து விட்டு வந்தார். இரண்டு நிமிடம் வெளியே நின்றிருந்திருப்பேன். கூட்டத்தில் தனித்து தெரிவது போலிருந்தது. ஒரு சூபியின் தர்க்காவிற்குள் என்னால் அந்த கொஞ்ச நேரம் இயல்பாக நிற்க முடியவில்லை. எதாவது கோவிலைப் பார்க்க விரும்பி அவர்கள் வந்தாலும் இப்படித்தான் இருக்கும். இது தந்த தாக்கம் வலுவானதாயிருந்தது. வழிபாட்டுத்தலங்களின் எளிமையை எல்லாம் தொலைத்துவிட்டோம்.

அடுத்த நாள் தான் திருமண நாள். காலையில் கிளம்பி நாள் பூராவும் பயணித்து ஆக்ரா போய் சேர்ந்தோம். ராஜஸ்தான் எல்லை கடந்து உத்திர பிரதேசத்துக்குள் நுழையும் போதே வித்தியாசம் தெரிந்தது. RTO வரி கட்ட நின்ற நேரத்தில் டீ குடிக்கப் போன இடத்தில் ஒரு கயிற்றுக் கட்டிலில் படுத்து உருண்டு கொண்டிருந்த ஆண் காண்பித்தார் உத்திர பிரதேச ஆண்களின் சுபாவத்தை. பொது இடத்தில் அவருடைய அதீத அலட்சிய மனப்பாங்கு ஒரு சோற்றுப் பதம். அங்கிருந்து நிறைய இடங்களில் பார்க்க முடிந்தது.

மாலை ஆக்ரா போய் சேர்ந்தோம். தாஜ்மஹாலை எல்லா நிறத்திலும் எல்லா நேரத்திலும் எல்லா கோணத்திலும் பார்க்க வேண்டுமென்றிருந்தேன். ரிசப்ஷனிலேயே இந்த நேரம் போக முடியாதென்றார்கள். அவர்களுடைய மொட்டை மாடியிலிருந்து தான் பார்க்க வசதி செய்திருக்கிறார்கள். அங்கே போன போது ஏற்கனவே பனி படரத் தொடங்கியிருந்தது. இரவு உணவும் நிலாவும் தாஜ்மஹாலும் என்ற கற்பனையை அங்கே குலைத்தார்கள். தாஜ்மஹாலைச் சுற்றி குறிப்பிட்ட தூரம் வரை எங்கும் இரவில் விளக்கு கிடையாது. அதனால் தெரியாது. பெரும்பாலான நாட்களில் பனி மூட்டத்தில் பகலிலேயே தெரிவதில்லை என்றார்கள். ஆகவே இரவுணவு, நிலவு மட்டுமிருந்தது, மாலையில் கண்ட இடத்தில் தாஜ்மஹாலின் சுவடு கூட இல்லை.

காலை பத்து மணிக்கு மென் குளிர் நிறைத்திருந்த வேளையில் பார்த்தோம். பெரிய உணர்வெழுச்சியெல்லாம் வராமல் அங்கிருந்த கூட்டம் பார்த்துக் கொண்டது. மனிதர்கள் குறைவாயிருக்கும் நேரம் எப்போதாயிருக்கும்? அப்போது தனியாக வந்து பார்க்க வேண்டும். என்னுடைய எல்லா நேரங்களிலும் பார்க்கும் கணக்குகளையெல்லாம் ஓட்டுனர், ரெண்டு மணி நேரத்துக்கு மேல அங்க என்ன பாக்க இருக்கு மேடம்? மதுரா பக்கத்துல இருக்கு போகலாமேன்னு புது ப்ரோக்ராம் சேர்த்து விட்டார். மதுரா என்ன்னுடைய 'ஏழு நாள் எனக்கே எனக்காய்' லிஸ்ட்டில் வேறு இருந்ததால் சரி என்பதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை.

நான் அறிந்த மதுரா, ஒன்று கிருஷ்ணர் பிறந்த ஊர், இரண்டாவது விதவைகளையெல்லாம் அங்கே கொண்டு வந்து விட்டு விடுவார்கள் என்பது. இரண்டாவது விஷயம் இந்தக் காலத்தில் யார் இதெல்லாம் செய்கிறார்கள் என்பதால் மங்கிப் போயிருந்தது. கிருஷ்ணருக்காக மட்டும் போய் வர ஆசையிருந்தது. ஊருக்குள் நுழையும் போதே டூரிஸ்ட் வண்டிகளைக் கண்டதும் கைடு கூட்டம் தயாராகக் காத்திருந்து பாய்கிறார்கள். இங்கே ஒரு படி மேலே. காரோடு கூடவே ஓடி வருகிறார்கள். லேசாக தலையசைப்பது போல் தோன்றினால் போதும் ஏறி உள்ளே உட்கார்ந்துமாயிற்று.

அக்கம் பக்கத்தில் கோவிலின் சுவடே தெரியாத ஓர் இடத்தில் வண்டியை நிறுத்தச் சொல்லி ஒரு நீண்ட சந்தில் கூட்டிக் கொண்டு போனார். ஜெயில் அறைக்குள் பிறந்த கிருஷ்ணர் கோவில் நாலா பக்கமும் விரிந்து பளப்பளா கோவிலாகியிருக்கிறது. அந்த அறையை மட்டும் அப்படியே வைத்திருக்கிறார்கள். நிஜமோ, இல்லையோ அங்கிருக்கும் போது நிஜமாகவே கிருஷ்ணர் பிறந்த இடத்தில் இருக்கிறோம் என்ற உணர்வு வந்தது. 
 
பக்கத்திலேயே ஒரு மசூதி. ஆனால் அங்கே தினப்படி தொழுகையேதும் இல்லையாம். ஆனாலும் ஏகப்பட்ட போலீஸ் கெடுபிடி. அத்தோடு கிளம்பியிருக்கணும். கைடு கிருஷ்ணர் வளர்ந்த கோகுலத்தைப் பார்க்க வேண்டாமா? இங்கேயிருந்து பனிரெண்டு கிலோ மீட்டர்தான் என்று காட்டிய ஆசையில் மயங்கினது நான்தான். வழியிலே நமக்குத் தெரிந்த கதையையே அவர் அவர் வர்ஷனாக கொஞ்சம் சொன்னார். கோகுலத்தில் இறங்கினதும் இதோட என் ஏரியா முடிந்தது என்று நம்மை வேறொருவரிடம் ஒப்படைத்து விட்டார். அவர் கோகுலத்தின் பெருமையை, இங்கேதான் இது அங்கே அது என்று சின்னச் சின்ன விஷயங்களையும் விலாவரியாகச் சொல்லத் தொடங்கினார். இங்கே வருபவர்கள் சந்தோஷமாக வர வேண்டும் சந்தோஷமாகத் திரும்பிப் போக வேண்டும் என்று ஒவ்வொரு இடத்திலும் சந்தோஷமாக சிரிக்கச் சொன்னார். திடீரென்று சந்தோஷமாகச் சிரிப்பது எப்படி என்று எங்கள் இருவருக்கும் தெரியவில்லை. அங்கங்கே சின்னச் சின்னதாக எதையாவது சொல்லி திரும்பச் சொல்லச் சொன்னார். நாங்கள் இரண்டு பேரும் சிரத்தையோடு சொல்லி, சிரத்தையோடு சந்தோஷமாக சிரிக்கவும் செய்தோம். அங்கே இங்கே என்று சுற்றி கடைசிலில் கிருஷ்ணர் வளர்ந்த வீட்டுக்குக் கூட்டி வந்தார். அங்கேயும் அதே கிளிப்பிள்ளைகளாகி அவர் சொன்னதைச் சொன்னோம். மெதுவாக எங்களை அங்கிருந்த பூசாரிக்கு கை மாற்றி விட்டார். அவரும் திரையிட்டு மறைத்து வைத்திருந்த அறை வாசலில் உட்கார வைத்து நந்தகோபரிடமிருந்து நேற்று வரையான சம்பவ விவரிப்புகளுக்குப் பிறகு அங்கே நடக்கும் நிர்வாகம் பூராவும் ட்ரஸ்ட் கவனித்துக் கொள்கிறது. நந்தகோபர் மாதிரி இப்போது நீங்கள் வந்திருக்கிறீர்கள், மிக எளிய இந்த தானம், மீடியமாக இந்த தானம், உன்னதமான அந்த இதில் நீங்கள் இதைத் தேர்ந்தெடுக்கலாம்... இப்படியாக கோகுலத்திற்குள் நுழைந்ததிலிருந்து பேசிப்பேசியே அந்த இடத்துற்கு நம்மைக் கூட்டி வருகிறார்கள். வரிசையாக நம்மைத் திரும்பத் திரும்பச் சொல்லச் சொல்லும் விஷயத்திற்க்குள் நான் இந்த தானம் செய்கிறேன் என்று நம்மை நம்மை அறியாமலே சொல்ல வைக்கிறார்கள். அந்த இடத்தில் தான் மொத்தப் பிரியமும் வடிந்து ஏமாற்றமாயிருந்தது. அவர்கள் சொன்ன கோஷாலாவில் பத்து மாடுகளுக்கு மேலில்லை. பராமரிப்பதாகச் சொல்லும் விதவைகளும் யாருமில்லை. காலை ஆறு மணிக்கு வந்தால் பத்து நாற்பது பேரைப் பார்க்கலாமென்றார். திரும்பிக் காருக்கு வந்த பின் ஓட்டுனர் அதிகம் காசெதும் பிடுங்கலையே என்று கேட்டார். உண்மையாகவே தானம் செய்யும் மனதையும் கலைத்துப் போடுகிறோம் என்று தெரியாமலிருக்கிறார்கள். அதைப் பற்றியெல்லாம் யாருக்கென்ன கவலை? அன்றைக்கு அவர் அவருடைய காரியத்தைச் சரியாச் செய்தார். நமக்குத்தான்...

அடுத்த நாள் திரும்ப ஜெய்ப்பூர், சென்னை, வீடு.

என்னிக்காவது பொழுது போகாத போது நினைத்துக் கொள்ள அனுபவங்களை சேர்த்திக் கொள்ள வேண்டுமென்பது என் எண்ணம். இப்படி எழுதிச் சேமிக்காதது பெரிதும் ஞாபகத்திலிருப்பதில்லை. அதனாலேயே இடையில் விட்டுப் போய் மறுபடியும் இந்த வேலை.





Thursday, March 14, 2019

நிகழ்கிறோம்

எங்கிருந்தும் வருகிறாய்
புரட்டும் என் பக்கங்களிலிருந்து
சிறகடித்துக் கிளம்புகிறாய்
உன் கற்பனைக்கப்பால்
நிகழுமென் நாட்களில்
காரிய நேர்த்திகளாய்
துலங்குகிறாய்
நல்லதோர் குழம்பின் ருசியில்
குமிட்டி அடுப்பும்
பின் கொசுவமுமாய்
என்னுள் நிகழ்த்திச் செல்கிறாய்
ஓவ்வொரு சிறகாய்
சூடிக்கொள்ளுமென்
தொப்பியின் இழைகளாயிருக்கிறாய்
தலைமுறைகள் தாண்டித் தொடர்கிறாய்
நைராவின் புத்தகங்களிலிருந்து
நீலப் பட்டாம் பூச்சியாய்
நானும் சிறகடிப்பேன். 
 


Tuesday, February 05, 2019

கொல்கத்தா 2019


கொல்கத்தாவை விட்டு வந்து பனிரெண்டு வருடமாகிறது. இடையில் ஒரு முறை போயிருந்திருக்கலாம். நினைவிலில்லை. ஏர்ப்போர்ட் முதற்க்கொண்டு மாறியிருக்கிறது. ராஜார்காட் என்னும் ஒரு பொட்டல்வெளியில் பயணித்து சால்ட்லேக் போய்ச் சேர்வோம். இப்போது அந்த பொட்டல் வெளியையே காணவில்லை. டாக்ஸி பார்க் ஸ்ட்ரீட் கொண்டு சேர்த்த வழியை எனக்கு அடையாளமே தெரியவில்லை. ஆனால் கொல்கத்தாவிற்கே உரித்தான சந்து பொந்துகளில் மாற்றமில்லை. அதிலிருந்து புறப்படும் மனிதர்களிலும். அந்த தெருவோரக் கடைகளில் பத்து ரூபாய்க்கு காலைச் சிற்றுண்டியை இப்போதும் முடித்துவிட முடியும் போலத்தான் இருக்கிறது. புதிதாக ஏகப்பட்ட ப்ளைஓவர்கள். உயரமான தளத்தில் பயணிப்பதால் எங்கிருந்து எங்கே செல்கிறோம் என்பது பிடிபடவேயில்லை. ஒரு கட்டத்திற்கு மேல் தெரிந்து கொள்வதை விட்டு விட்டேன்.

Oxford Bookstore
பார்க் ஸ்ட்ரீட் அப்படியே இருக்கிறது. Flury'sம் மற்ற பெரும்பாலான கடைகளும். ஆக்ஸ்போர்ட் புத்தகக் கடையும். தெருவோர புத்தகக் கடைகளில் அதே புத்தகம் பத்து சதவிகித தள்ளுபடியில். அதே இடம், அதே வரிசை, அதே கடைக்காரருமாய் இருக்கலாம். சென்னையில் மூடிப் போன புத்தகக் கடையெல்லாம் ஞாபகம் வந்தது. வாங்குகிறோமோ இல்லையோ, ஞாயிற்றுக்கிழமைகளில் நுங்கம்பாக்கம் லேண்ட்மார்க்கிற்கு தவறாமல் போய்க் கொண்டிருந்தோம். 
 
எங்களுடைய வழக்கமான Bar - B - Que வின் மேஜை நாற்காலிகள் கூட இடம் மாறவில்லை. காலம் அப்படியே நின்று போனது போலிருக்கிறது. 
 
 
காளிகாட்டில் நட்ட நடுவில் புதிதாக கட்டிடம் ஏதோ எழும்புகிறது. மற்றபடி அதே துரத்தல், நெரிசல். முதல்முதலாக ஒரு மழை நாளின் சகதியில் காளிகாட்டிற்கு வந்திருந்ததும் இதுவா காளி கோவில் என்று சலித்துக் கொண்டதும் நினைவுக்கு வருகிறது. காசியைப் போலவே முதலில் சேராமல் பின்னாடி அது ஒரேயடியாக சேர்ந்து போனதில் காளிகாட் இரண்டாவது. அதே விரட்டல், நகையெல்லாம் பத்திரம் பத்திரம்ன்னு சொல்லிச் சொல்லி இழுக்காத குறையாக கூட்டிப் போய் யாரிடமோ ஒப்படைத்து அவர் நாலு பேரைக் கேட்டு ரெண்டு மந்திரம் சொல்லி, இரண்டாயிரம் உண்டியலில் போடு என்று மிரட்டி இருபது ரூபாய்க்கு திட்டி விரட்டி விட்டதில் காளியைப் பார்த்தேனா என்று நினைவில்லை. பலி களம் ரத்தச் சகதியாயிருந்தது. ஒரு இளம் ஆட்டின் கூக்குரல் மட்டும் காதில் கேட்டது. பார்க்கத் தோணவில்லை.
 
காளிகாட்டில்
முன்னெப்போதோ இப்படி சுற்றி வந்த போது நிர்மல் ஹ்ருதய் கண்ணில் பட்டு உள்ளேயும் போயிருந்தேன். அந்த ஆழத்திற்குள் இருந்து என்னை மீட்டெடுக்க திராணியில்லை. நிறைய விஷயங்களுக்கு கண்களை மூடி, காதுகளை அடைத்துக் கொள்கிறேன், இப்போதெல்லாம்.

இந்தப் புறம் ஒரு குஜராத்திக்காரர் மேற்பார்வையில் ஒரு பெரிய பாத்திரம் நிறைய சாப்பாடும் ஒரு வாளி காய்கறிக் குழம்பும் விநியோகமாகிக் கொண்டிருந்தது. பத்து வருடமாக ஒவ்வொரு வாரமும் செய்கிறாராம். எல்லா நேரமும் யாராவது எதாவது கொடுத்துக் கொண்டிருப்பார்கள் என்றார். பத்தடி தள்ளி ஒரு பெண் அட்டைப் பெட்டியில் பிஸ்கெட் பாக்கெட்களை விநியோகித்துக் கொண்டிருந்தார். சென்னையில் இதைச் செய்யும் ஆர்வம் வந்திருக்கிறது.



Bar-B-Q
கொல்கத்தா கிளம்புவதற்கு முன் பார்க்க ஆரம்பித்திருந்த Four more shots pleaseக்கான ப்ளெக்ஸ் ஊரெல்லாம். ப்ளைஓவரின் ஒவ்வோரு தூணுக்கும் ஒவ்வொரு கேரக்டரின் பிரம்மாண்டமான போஸ்டர்கள், ஒரு டெலிவிஷன் சீரீஸ்க்காக! சென்னையில் அதைப் பற்றி மூச்சு கூட விட்ட மாதிரி தெரியவில்லை. ஒரு கொல்கத்தாவாசிக்கு ஜீரணமாவது சென்னைக்காகாது என்பது தெரிந்தது. எதுக்கு வம்பென்று விட்டிருக்கலாம்!

பின்னே எதற்காக கொல்கத்தா போயிருந்தேனோ அந்த வெட்டிவேலைகளையெல்லாம் முடித்து மறுநாள் சால்ட் லேக்கிற்க்கு. இரண்டு வருஷம் எங்கள் வீடாயிருந்த வீட்டு பால்கனியை கீழேயிருந்தே பார்த்துவிட்டு கிளம்பியாயிற்று.


Friday, December 29, 2017

வெறுமை

அலையடிக்கும் வெறுமையை
இருகைகளில் சுமந்தலைகிறேன்
வாசலில் குதித்தாடும் முயலின்
கால்களில் சிக்கிக் கொள்கிறது
ஓடை மீன்களுக்கு உணவாயளித்து
விரைவிழப்பதை காணாது செல்கிறேன்
எரவாணப் பட்டத்தில்
கொஞ்சம் தீற்றிப் போகிறேன்
மொத்தமும் உரைந்திருக்கிறது
கண்களை மூடி
காதடைத்துக் கொள்கிறேன்
கையிருப்பு குறையும் தோறும்
முற்றிலும் வெறுக்கும்
முது கிழவனைக் கண்டு
வெறுமை கொள்கிறேன்

Friday, October 27, 2017

மரணம்

படிப்பித்ததெல்லாம் நிஜமென்றால்
இந்நேரம் அறிந்திருப்பாள்
அகால மரணமடைந்த மகன்
கடைசி கணம் நினைத்ததென்னவென்று
காணாமலே போன இன்னொருவனை
பார்த்திருக்கலாம்
அல்லாத போது
தகவலறிந்திருப்பாள்
முன்னால் சென்ற கணவன்
அவளின் தன்னிச்சையான முடிவுகளில்
சலித்திருப்பான்
பின் வரும் வரிசை
தெரிந்திருப்பாள்
தன் நிறங்களை
அதில் தன் பங்களிப்பை
புரிந்திருப்பாள்
படிப்பித்ததெல்லாம் நிஜமில்லையென்று
சிரித்துமிருப்பாள்.