Friday, May 15, 2015

ஜப்பான் பயணம் - 3

ட்ராவல் ஏஜெண்ட் கொடுத்திருந்த ப்ரோக்ராம் படி அன்றைய இரவு hot spring bath இருந்தது. சில பல நடைமுறைக்கு சாத்தியமில்லாத‌ காரணங்களால் அதற்கு போக முடியவில்லை. சியோமி சொல்லும் வரை தயாராக இருந்த நாங்கள் விவரம் தெரிந்து பின்வாங்கி விட்டோம். மறுநாள் காலையில் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக் கொள்ள  வேண்டுமே! அந்தக் குறையை ஈடு செய்ய அறையில் வைத்திருந்த  yukata bathrobe ஐ கிமோனோவாக பாவித்து போட்டோ செஷனை முடித்துக் கொண்டோம். நல்ல விலையுயர்ந்த பட்டில் இடுப்பில் கட்டும் பட்டியெல்லாம் வைத்து கூடவே தலையலங்காரங்களெல்லாமாக ஒரு கிமோனோவுக்கு $20000 ஆகுமாம். இது வெறும் பருத்தியாலான சின்ட்ரெல்லா சிஸ்டர்.

மறுநாள் காலை ஹிரோஷிமாவுக்கு புல்லட் ட்ரெயினில் பயணம். ரயில் நிலையம் போகும் வழியில் சியோமி சொன்னதில் புரிந்தது... ஜப்பானியர்கள் R&D க்கு அதிக நேரமெடுத்து சிறப்பான பொருட்களை அளிக்கிறார்கள். ஆகவே மார்க்கெட்டில் ஏற்கனவே இருக்கும் ஒரு சாமானுக்கு மாற்றாக வரும் இன்னொன்று தரத்தில் அதைவிட மேலானதாக இருக்க வேண்டிய கட்டாயமிருக்கிறது. மேலும் ஜப்பானிய பொருட்கள் விலை கூடுதலாக இருந்தாலும் தரத்தில் சிறந்ததாக இருக்குமென்பதில் சந்தேகமில்லை. சீனர்கள் இங்கே வந்து பொருட்களை வாங்கிச் செல்வது அதற்காகத்தான். ஐம்பது வருஷ புல்லட் ட்ரெய்ன் வரலாற்றில் ஒரு விபத்து கூட கிடையாது. அவர்களைப் பார்த்து சைனாக்காரர்கள் தயாரித்த புல்லட் ட்ரெயின் முதல் வருஷமே விப‌த்துக்குள்ளானதாம்.

புல்லட் ட்ரெயினில் ஜப்பானியர்கள் தங்களுக்குள்ளே மூழ்கி அமைதியாக இருப்பார்கள் அதனால் வழக்கமான இந்தியத்தனமான கூக்குரல்கள் வேண்டாமென்று இந்திய கைட் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார். எவ்வளவு தூரம் கடைபிடிக்க முடிந்தது என்பது பெரிய கேள்விக்குறி.




ரயில் நிலையத்தில் காத்துக் கொண்டிருந்த நேரத்தில் இரண்டு புல்லட் ட்ரெய்ன்கள் கடந்து போனது. உயரம் குறைவாக நீள் மூக்கோடு வெளுவெளு வெண்ணையாக முதலில் வந்தது, வந்ததும் தெரியாமல் போனதும் தெரியாமல் விஷ்க் என்று கடந்து போயிருந்தது. அதனாலேயே அடுத்தது வந்தால் வீடியோவாக எடுக்க தயாராக இருந்த போதும் காமிராவில் வீடியோ பட்டனை அழுத்தக் கூட அவகாசம் கொடுக்கவில்லை. ஏறி அமர்ந்த பிறகு மணிக்கு 200 மைல் வேகத்தில் சென்ற‌ புல்லட் ட்ரெய்ன் ஏனோ நினைத்த அளவு ஆச்சர்யம் தரவில்லை. வேறு நாடுகளில் இதைவிட வேகமான ரயில் பயணங்களை ஏறக்குறைய எல்லாரும் போயிருந்தோம்.

காலை பத்து மணிக்கு தொடங்கிய பயணம் இரண்டு ரயில்களில் மதியம் இரண்டு மணியளவில் ஹிரோஷிமாவில் முடிந்தது. மதிய உணவு உண்ட இந்திய உணவகத்தில் கிளம்பும் போது இரண்டு ஓரிகேமி பேப்பர் கொக்குகளை கொடுத்து அடுத்து வரப் போகும் கனமான நாளுக்கு தயார் செய்திருந்தார்கள்.  நடு வட்டக் கூரையும் மிச்சமிருக்கும் சிதலமான ஹிரோஷிமா நினைவுச் சின்னமும் ம்யூஸியமும் யாரையும் கலங்கச் செய்வது. ஏராளமான நினைவுச் சின்னங்களும் அதனோடு தொடர்புடைய செய்திகளும். எரிந்து போன சைக்கிளையும் உருகி வழிந்த பாதி ஹெல்மெட்டையும் மகனோடு சேர்த்து வீட்டுக் கொல்லையில் புதைத்திருந்த தகப்பன் பின்னெப்போதோ அதைத் தோண்டி எடுத்து ம்யூஸியத்திற்கு அனுப்பி வைத்திருந்தார். உருகி கருகிப் போன ஒவ்வொன்றும் சொல்லும் கதைகளுக்கு முடிவேயில்லை. யாரோ யாரோட போட்டுக் கொள்ளும் சண்டைக்கு நம்மைப் போல நூறாயிரம் பேர்கள் பலியான கதைகளில் நாமும் சாவைக் கண்டு மீள்கிறோம். செய்யக் கூடியது பெரிதாக எதுவுமில்லை.




அடுத்த நாள் காலை ஓசாகாவிற்கு பஸ்ஸில் கிளம்பினோம். ஒசாகா டோக்கியோவிற்கு அடுத்த ஜப்பானின் பெரிய நகரம். போகும் வழியில் குராஷிகி என்ற இடத்தில் ஒரு கால்வாய் கரையில் ஒரு ஸ்டாப் இருப்பதாக பயணக்குறிப்பில் இருந்தது. அதிகம் வெயில் உரைக்காத காலை நேரத்தில் அங்கே போய் சேர்ந்தோம். ஐந்து நிமிட நடையில் நீண்ட கால்வாய் கரைக்கு போய் சேர்ந்தோம் . அதன் இரண்டு புறங்களிலும் புராதனமான ஜப்பானிய பாணி கட்டிடங்கள். நிறைய சாவனியர் கடைகள், உணவகங்கள், கலைப் பொருள் சேகரிக்கும் இடங்கள், ம்யூஸியம்கள், கிமோனோ உடுத்திய பெண்கள், கால்வாயின் படகு சவாரி, கோச் வண்டிகள்... ஒரு ஓவியத்திற்க்குள் நுழைந்தது போலிருந்தது.  இந்த பயண‌த்தின் மறக்க முடியாதது எதுவென்று கேட்டால் சற்றும் யோசிக்காமல் இதைச் சொல்வேன். எங்கேயிருந்து ஒரு போட்டோ எடுத்தாலும் அது ஒரு போஸ்ட்கார்ட் அழகோடு இருந்தது. எத்தனை வளர்ச்சிகள் அடைந்தாலும் டெக்னாலஜி முன்னேறிச் சென்றாலும் ஆழ்மனதை தொடுவது இயற்கையும் பழமையும் அல்லாமல் வேறெதுவும் இல்லை. ஒரு நாள் பூராவும் விட்டிருந்தாலும் அங்கேயே இருந்திருப்பேன்.

 







மதிய உணவிற்குப் பின் Osaka castle. வெளியே இருந்தே பார்த்துவிட்டு மீதி நேரத்தை ஷாப்பிங்கில் கழித்தோம். மறுநாள் மூன்று கோவில் பார்ப்பதாக இருந்தது. அதில் ஒரு கோவிலை தவிர்த்து ஜப்பானிய கலாச்சார நிகழ்ச்சிக்கு போவதாக மாற்றிக் கொண்டோம்.

அடுத்த நாள் நாங்கள் அத்தனை பேரும் புடவையில் கிளம்பியிருந்தோம். காலையில் முதலில் பார்த்தது நாராவில் உள்ள Todai-ji temple. அகண்டு கிடந்த பழங்கால கோவில். அதோடு இணைந்து நாரா மான் பூங்கா. அதனாலே பள்ளிக் கூட குழந்தைகள் கூட்டம் கூட்டமாக வந்திருந்தார்கள். பணிவும் மரியாதையும் மாறாத கன்னம் சிவந்த ஜப்பானிய குழந்தைகளை ஆசை தீர பார்த்தோம்.






முதல்முதலாக இந்த பயணத்தில் பிரம்மாண்டமான கரிய புத்தரைப் பார்த்தோம். கோவிலை முடித்து வெளியே வந்ததும் மான் கூட்டம். மான்களுக்கு கொடுக்க வட்டமான பிஸ்கட்கள் விற்கிறது. வாங்கி நீட்டுவதற்கு முன்னால் போராடிப் பறித்துக் கொள்கிறது. அதைத் தவிர மற்ற நேரங்களில் சாதுவாக மனிதர்களோடு கலந்து சுற்றிக் கொண்டிருக்கிறது. வ‌ழுவழுவென்று சதையாலான கொம்புகளை முன்னெப்போதும் பார்த்ததில்லை. மான்களையே இவ்வளவு பக்கத்தில் பார்த்ததில்லை.

அதற்கடுத்தது  kinkaku-ji Golden temple. காலமே ஸ்தம்பித்தது போல அலைகளே இல்லாத குளத்தில் தங்கநிறத்தில் நிற்கிறது. சுற்றி வரும் பூங்கா பாதையின் எங்கிருந்து பார்த்தாலும் அதே அழகோடு.




மதிய உணவிற்குப் பின் ஜப்பானிய கலாச்சார நிகழ்ச்சிக்காக போய் சேர்ந்த போதும் அதற்கு முன்னாலும் சியோமி கெய்ஷாக்களைப் பற்றி கொஞ்சம் பேசியிருந்தார். Memoirs of Geisha வாசித்திருந்ததால் ஓரளவிற்கு அவர்களைப் பற்றி தெரிந்திருந்தது. பயிற்சியில் இருப்பவர்களுக்கு மைக்கோ என்று பெயர். குறைந்த பட்சம் இரண்டு வருடங்களாவது பயிற்சி எடுத்தால் தான் கெய்ஷாவாக முடியுமாம். நாங்கள் போயிருந்தது ஒரு  tea ceremony, flower arrangement, a musical, maiko dance, a comedy show n a puppet show என்று மொத்தமாக ஐம்பது நிமிட நிகழ்ச்சி.






முதல் மூன்று நிகழ்ச்சிகளையும் ஒரே நேரத்தில் அவசரமாக முடித்துக் கொண்டாலும் மைக்கோ நடனம் கற்பனையில் இருந்த கெய்ஷாவை கண் முன்னால் நிறுத்தியது. அவர்களுடைய மேக்கப், உடையலங்காரம், பின் கழுத்தில் வெண் பூச்சுக்கு நடுவில் மூன்று வரிகளில் தெரியும் உடல் நிறம், மென்மையான உடலசைவுகள்... அந்தத் தெருவே கெய்ஷாக்கள் வசிக்கும் தெருவாயிருந்திருக்கலாம். நாங்கள் போயிருந்த போது பளபளக்கும் கருப்பு லெக்ஸச் கார்களில் வந்திறங்கிய கனவான்கள் ஜப்பானின் இன்னொரு முகமாயிருந்திருக்கலாம். இந்தியாவின் இது போன்ற தெருக்களில் நான் இவ்வளவு ஸ்வாதீனமாக போயிருந்திருக்க முடியுமா தெரியவில்லை. ஆனால் அந்த இடம் அதுவாகத்தான் இருந்தது போலிருந்தது.

ஜப்பானின் கடைசி இரவு அது.

3 comments:

துளசி கோபால் said...

அருமை! ஹாட் ஸ்ப்ரிங்ஸ் போய் வந்த ஆள் நம்மூட்டுல இருக்கார்:-))))

Aruna Srinivasan said...

//////ஒரு ஓவியத்திற்க்குள் நுழைந்தது போலிருந்தது. //////

அழகான வர்ணனை......:-)

Nirmala. said...

துள்ஸ்... எப்பவாச்சும் ட்ரை பண்ணணும். ரெண்டு தடவை மிஸ் ஆயிடுச்சு! :-)

அருணா... அது நிஜமா ஃபீல் பண்ணினது! அந்த இடம் அவ்வளவு அருமை.